Advertisement

ஸ்மிரிதியின் மனு – 28_1
அன்றிரவு அவளுடைய வீட்டிற்கு திரும்பிய பின் கரனின் ஹோட்டலில் பீஜி, அவள், அவன் என்று அவர்கள் மூவரின் ஒற்றுமையைப் பற்றி மனு பேசியது ஸ்மிரிதியின் மனதை விட்டு அகல மறுத்தது.  அதன் விளைவாக நெடு நாட்கள் கழித்து விடியற்காலை வேளையில் பீஜியுடன் ஃபோனில் பேசினாள் ஸ்மிரிதி. 
ஸ்மிரிதியின் அழைப்பை அவர் உடனே ஏற்க,
“பீஜி,  எப்படி இருக்கீங்க?”
“குருவோட கிருபைலே நல்லா இருக்கேன்..உனக்கு இப்ப சரியாயிடுச்சா?”
“சரியாயிடுச்சு..நேத்து இராத்திரிதான் எங்க வீட்டுக்கு வந்தேன்..கபீர் வீட்லேதான் இவ்வளவு நாள் இருந்தேன்..மீரா ஆன்ட்டி உங்களைப் பற்றி விசாரிச்சாங்க.”
“மீராவை சந்திச்சு வருஷங்களாயிடுச்சு..பேரன், பேத்தியோட சந்தோஷமா இருக்காளா?
“சந்தோஷமா இருக்காங்க… கபீர் பற்றிய கவலை இருக்கு..அவன் இப்ப ஸ்ட் ராங்க மேன் பீஜி..என்னையவே மிரட்டறான்.”
“கேட்க சந்தோஷமா இருக்கு..ஒருமுறை எல்லாரும் இங்க வந்து போங்க.”
“சுசித்ரா உங்ககிட்ட பேசினாளா பீஜி?”
“அவ, மஞ்சு நாத் இரண்டு பேரும் பேசினாங்க…இனிமேலாவது அவளுக்கு எல்லா நல்லபடியா நடக்கட்டும்..வாஹே குரு..
நீயும் அவளோட கொஞ்ச நாள் இருந்தேன்னு சொன்னா.”
“ஒரு வாரம் இருந்தேன் பீஜி..அப்பறம் எனக்கு வேலையிருக்குண்ணு கிளம்பி வந்திட்டேன்.”
அவள் வேலையைப் பற்றிய பேச்சு ஆரம்பித்தவுடன் பீஜி மௌனமானார். அவர் மௌனத்தின் மூலம் அவர் கேட்க நினைப்பதைப் புரிந்து கொண்ட ஸ்மிரிதி,
“யாருக்கும் எதுவும் ஆகலே பீஜி..உயிர் சேதமில்லை.”
“அதனாலே அங்கே நடந்தது சரின்னு ஆகிடுமா? நீ அங்கே என்ன செய்துகிட்டிருந்த ஸ்மிரிதி?”
“அந்த நேரத்திலே எனக்கு சரின்னு தோணினதை செய்தேன் பீஜி..நேத்து மனு சொன்ன பிறகுதான் அது சரியில்லையோன்னு தோணுது.”
“சரி, தப்பு சூழ் நிலைக்கு ஏற்ப மாறிகிட்டு இருக்கும் ஸ்மிரிதி..நாமளும் அதுக்கு ஏற்றார் போலே மாறிகிட்டு இருக்க முடியுமா? அப்படி மாறிகிட்டிருந்தா அது பொது நலத்திலே வராது சுய நலத்திலே சேரும்..
நம்மை சோதிக்கற சூழ் நிலைகளைச் சலனமில்லாம நாம கடந்து வரணும் ஸ்மிரிதி..ஒரு காலத்திலே என்னோட எல்லாம் சேவையையும் எங்க சமுதாயத்துக்கு மட்டும்தான்னு கட்டளைப் போட்டாங்க..அதுக்கு நான் மறுப்பு தெரிவிச்ச போது எங்க சமூகம் என்னை ஒதுக்கி வைச்சுது..அவங்க கேட்டுகிட்டபடி நான் எங்க ஆளுங்களுக்கு மட்டும் சேவை செய்திருந்தா அது பொது நலமா இருந்திருக்காது அது என்னோட சமூகத்தைத் திருப்திபடுத்த நான் எடுத்து சுய நல முடிவாதான் இருந்திருக்கும்..
நான் எடுத்த அந்த முடிவுனாலே என்னை என் குடும்பமே ஒதுக்கி வைச்சுது ஸ்மிரிதி..ஆனா நான் மனம் கலங்காம என் சேவையோட நோக்கம் எல்லாருக்கும் உதவி செய்யறதுதான்னு நான் உறுதியா இருந்தேன்..அன்னைக்கு என்கிட்டேயிருந்து ஒதுங்கி போனவங்க எல்லாம் அவங்களுக்கும் என் உதவி தேவைப்படும் போது தானாவே திரும்பி வந்தாங்க.” என்றார் பீஜி.
பீஜிக்கு அவர்கள் சமுகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அவர் குடும்பத்தினருடனும் ஏற்பட்டு அவரின் பேரக் குழந்தைகள் அனைவரையும் அவரின் ஆளுமையிலிருந்து பிரிக்க எண்ணி அதை செயல்படுத்தான் தல்ஜித் தெராதூன் பள்ளியில் சேர்க்கப்பட்டான். அதன் விளைவாக தல்ஜித்தை தவிர அவனுடையே குடும்பத்திலிருந்த மற்ற குழந்தைகள் அவர்களின் சேவை மனபான்மையை வேரோடு அறுத்து அதே இடத்தில் பணத்தாசையை விதைத்து வளர்த்து கொண்டன்ர்.  தல்ஜித் ஒருவந்தான் அந்த ஆசையில் அகப்பட்டுக் கொள்ளாமல் பீஜி ஆரம்பித்ததை அவர் விருப்பப்படி நடத்த இன்றுவரை அவன் குடும்பத்தாருடன் தினசரி போராடி வருகிறான். 
“தல்ஜித்தும் உங்களைப் போலவே இருக்கான் பீஜி..எந்த சூழ் நிலையிலும் அவன் நோக்கம் அவனுக்குத் தெளிவாத் தெரியுது.” என்றாள் ஸ்மிரிதி.
 
“நீயும் தெளிவா இருக்கணும் ஸ்மிரிதி..எந்த நோக்கத்தோட நீ சேவை செய்ய ஆரம்பிச்சியோ அந்த நோக்கம் தான் முக்கியம்..நோக்கம் மாறிடுச்சுன்னா பாதை மாறிடும்..உனக்கு அது புரியும் போது அந்தப் பாதைலேத் திரும்பி வர்ற முடியாத தூரத்தைக் கடந்திருப்ப. ” என்றார் பீஜி.
“இன்னும் இரண்டு வாரத்திலே எனக்கும், மனுக்கும் கல்யாணம் பீஜி.. இனிமே என் ஆளுங்களுக்கு என்ன செய்யறது, எப்படி செய்யறது, அவங்களுக்கு என்மேலே எப்படி நம்பிக்கை வரவழைக்கறதுன்னு ஒரே குழப்பமா இருக்கு.” என்று மனம் திறந்தாள் ஸ்மிரிதி.
“மனுவை உனக்கு எப்பலேர்ந்து பழக்கம்?” என்று ஸ்மிரிதியோடு வாழ்க்கையை இணைத்து கொள்ளப் போகும் மனுவைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலானார் பீஜி.  பிரேமா, சிவகாமி இருவரின் நட்பில் ஆரம்பித்து, பீஜி, அவள், மனு என்று அவர்கள் மூவரின் ஒன்றாகி போன அடிப்படையில் வந்து கதையை முடித்தாள் ஸ்மிரிதி. 
“நீ உன் உடம்பை ஜாக்கிரதையா பார்த்துக்க..அதுதான் இப்ப முக்கியம்..மற்ற விஷய்ததைப் பற்றி கவலைப்படாத..எல்லாம் நல்லபடியா நடக்கும்..வாஹே குரு.” என்று ஃபோன் உரையாடலை முடித்துக் கொண்டார் பீஜி.
ஸ்மிரிதியுடன் பேசிய பின் அழிவிலிருந்து அன்பை அறிய அதைவிட அரிய வாய்ப்பு அவளுக்கு அமையாது என்று உணர்ந்த பீஜி உடனே தல்ஜித்தை ஃபோனில் அழைத்து அவர் திட்டத்தை வெளியிட்டார்.  
பீஜியின் யோசனையைக் கேட்ட தல்ஜித்,”எங்க அஞ்சு பேருக்காக நீங்க எப்போதும் இப்படியே நல்லது செய்துகிட்டு இருக்கணும்.” என்றான்.
“எல்லாருக்காகவும் யோசிக்கணும்னு உங்க எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்தேன்..ஸ்மிரிதியும் நீ என்னைப் போலவே தெளிவா இருக்கேன்னு சொல்றா ஆனா நீ இப்பவும்  உங்க அஞ்சுபேரை பற்றி மட்டும் யோசிக்கற.” என்று கடிந்து கொண்டார்.
“ஸாரி பீஜி..எப்பவும் உங்களைப் போல யோசனை செய்ய வர மாட்டேங்குது..சில சமயம் தல்ஜித்தா யோசிக்கறேன்..இப்ப நீங்க சொன்னதை எப்படி செயல்படுத்த போறேன்.” என்று கேட்டான்.
“அதை ஸ்மிரிதி செய்வா..அவளுக்கு நீ துணையா இரு.” என்றார் பீஜி.
“அவ ஒத்துப்பாளா பீஜி?”
“தெரியலே..ஸ்மிரிதியியைப் புரிஞ்சுக்கறது கஷ்டம்….முயற்சி செய்து பார்ப்போம்.” என்றார். 
அதே இரவில் ஸ்மிரிதியைப் பற்றி மனுவின் மனதிலும் அதே எண்ணம் தான் இருந்தது. முன்னிரவு வேளையில் கரனின் ஹோட்டலில் பிரேமாவின் உடல் நிலையைப் பற்றி ஸ்மிரிதி அவனிடம் பகிர்ந்து கொண்டது முதல் அதை எப்படி கையாளுவது என்று யோசித்து கொண்டிருந்தான் மனு.  அந்த யோசனையின் முடிவில், ஸ்மிரிதியின் கணவனாகிய பின் அவனுடைய ஆலோசனைகளுக்குப் பிரேமாவிடமிருந்து எந்த விதமான எதிர்ப்பும் வராது என்று திடமாக நம்பியவனுக்கு அதே சமயம் அவள் கணவனான பிறகும் அவனுடைய ஆலோசனைகளை ஸ்மிரிதி எப்படி ஏற்று கொள்ளுவாள் என்று அவனால் கொஞ்சமும் யுகிக்க முடியவில்லை. 
பிரேமா ஆன்ட்டியின் உடல் நிலையை பற்றி எப்படி, எப்போது அவன் அம்மாவிடம் தெரிவிப்பது என்று எண்ணித் தூக்கம் வராமல் அந்த இரவை விழித்தே கழித்தான். விடியும் நேரத்தில், அவர் உடல் நிலையைப் பற்றி பிரேமா ஆன்ட்டியே அறிந்திராத போது அதைப் பற்றி தற்போது சிவகாமிக்கு தெரிவித்து வீண் கவலையையும், கலவரத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்று எண்ணியவன், கல்யாணம் முடிந்த பின் அவனுடைய முதல் கடமை பிரேமாவின் உடல் நிலையை சரி செய்வதுதானென்றும், அந்தக் கடமையை சரிவர நிறைவேற்ற நாதனுடையே உதவி கட்டாயம் தேவைப்படும் என்று உணர்ந்து அவரைக் கலந்தாலோசிப்பது என்ற முடிவுக்கு வந்தான்.
அடுத்த நாள் மாலைப் பொழுதில், சிவகாமி, தில்லை நாதன், மனு மூவரும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர். அப்போது மனுவின் ஃபோன் அழைக்க அதைக் கண்டு கொள்ளாமல் அமர்ந்திருந்தான் மனு.
“யாருடா ஃபோன்லே?” என்று சிவகாமி விசாரிக்க,
“உங்க மருமகதான்.” என்றான்.
“ஏன் டா பேச மாட்டேங்கற?”
“அவளுக்குதான் வாய்ஸ் ரெஸ்ட் எடுத்துக்க சொன்னாங்களான்னு சந்தேகமா இருக்கு..நேத்து அவளை அவங்க வீட்லே கொண்டு விட்டதிலிருந்து விடாம ஃபோன் போடறா..நான் தான் ரெஸ்ட் எடுக்கட்டும்னு அவளைத் தவிர்த்துகிட்டு வரேன்.” என்றான் மனு.
“ஏன் டா? அவளுக்கு இன்னும் சரியாகலையா?”
“சரி ஆயிடுச்சு மா….அதான் சும்மா இருக்க மாட்டேங்கறா..ஆபீஸ் நேரத்திலையும் உங்க மருமக தொல்லை தாங்கமுடியலே” என்றான் மனு.
“நான் பேசறேண்டா அவகிட்ட.” என்றார் சிவகாமி.
“வேற வினையே வேணாம்..நீங்க இரண்டு பேரும் கல்யாணம் வரைக்கும் பேசாம இருங்க.” என்று ஆர்டர் போட்டான் வக்கீல்.
அதற்குபின் சிவகாமியும் ஸ்மிரிதியுடன் பேச ஆர்வம் காட்டவில்லை.
அன்று இரவும் ஸ்மிரிதி அவனை விடாமல் அழைக்க, ஒரு அளவிற்கு மேல் பொறுக்க முடியாமல் ஃபோனை எடுத்து,
“நான் தூங்கணும்..வை ஃபோனை.” என்றான் மனு.  அவனுடைய பதிலில் சற்றும் அசராமல்,
“ஒழுங்கா முதல் முறையே ஃபோனை எடுக்க வேண்டியதுதான..இராத்திரி நீ மட்டும்தான் தூங்குவியா..நாங்கெல்லாம் தூங்க மாட்டோமா?”.” என்று மிரட்டலாகக் கேட்டாள்.
“என்ன வேணும் உனக்கு?” என்று கேட்ட மனுவிற்குத் தெரியும் அவள் காரணத்தைச் சொல்ல போவதில்லையென்று.
“ஒண்ணும் வேணாம்.” என்று அவன் எதிர்பார்த்த பதிலைச் சொன்னாள் ஸ்மிரிதி.
“அப்ப போய் தூங்கு.” என்றான் மனு.
அதற்கு பதில் சொல்லாமல் மெதுவாக,”மனு” என்று அழைத்தாள் ஸ்மிரிதி.
“என்ன?” என்று கேட்டான் மனு.
“நாளைக்கு உங்க வீட்டுக்கு வந்து ஆன்ட்டியை மீட் செய்யலாம்னு நினைக்கறேன்.” என்றாள் ஸ்மிரிதி.
எதுக்கு?
“கல்யாணம் முடிவு செய்ததிலேர்ந்து நானும், ஆன்ட்டியும் ஃபோன்லேகூட பேசிக்கவே இல்லை..அதான் நேர்லே பார்த்து பேசலாம்னு நினைச்சேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“நீ இன்னைக்கு சாயந்திரம் ஃபோன் செய்த போது அம்மா பக்கத்திலேதான் இருந்தாங்க.. உன்கிட்ட பேசறேன்னு சொன்னாங்க நான தான் வேணாம்னு சொல்லிட்டேன்..உனக்கும் அதே தான் சொல்ல போறேன்..அம்மாவை நீ தொந்தரவு செய்யாத..உனக்கு என்ன சொல்லணுமோ அதை இப்ப என்கிட்டையே சொல்லு.”
“மனு..அவங்க கால்லே விழந்து ஒரு விஷயம் பேசணும்னு சொன்னேனில்லே அதுக்கு வாய்ப்பு கொடுக்காம எல்லாத்தையும் நடத்தி கொடுத்திட்டாங்க அதான்..”என்று இழுத்தாள் ஸ்மிரிதி.
“ஸ்மிரிதி..” என்று குரலை உயர்த்தினான் மனு.
“சரி..விடு..உனக்காக நல்ல மாதிரியா செய்யணும்னு நினைச்சேன் ஆனா நீயே அதுக்கு தடையா இருக்க.” என்றாள் ஸ்மிரிதி.
“ஸ்மிரிதி..எதையாவது விபரீதமா செய்யாத..உனக்கு வேண்டியதை நான் செய்யறேனில்ல..பேசாமத் தூங்கப் போ.” என்றான் மறுபடியும்.
“எனக்கு வேண்டியதை செய்யறியா இல்லை உனக்கு வேணுங்கறதை என்னை வைச்சு செய்துகிறயா?” என்று கரெக்ட்டாக கேட்டாள் ஸ்மிரிதி.
“நம்ம இரண்டு பேருக்கும் வேணுங்கறதை செய்யறேன்.”
“இல்லை..நான் நம்ப மாட்டேன்.”
“சரி..இப்பவே அம்மாகிட்ட ஃபோனைக் கொடுக்கறேன்..அவங்களோடயே பேசி உன் நம்பிக்கையை வளர்த்துக்க.”
“கொடு..நாங்க இரண்டு பேரும் பேசிக்க ஆயிரம் விஷயமிருக்கு…அதுலே ஏதாவது ஒண்ணு பேசி என் நம்பிக்கையை வளர்க்க ஆரம்பிக்கறேன்.”
“அவங்களோட பேசி நீ நம்பிக்கையை வளர்க்க போகறதில்லை…ஆசி வாங்கிதான் ஆரம்பிக்கபோற..எனக்குத் தெரியும்.” என்றான் மனு.
“ஃபோன்லே அது சரி வராது மனு..என் கல்யாணத்தனைக்கு அவங்க கால்லே ஜோடியா விழுந்து ஆசீர்வாதம் கேட்பேன்.”
“ஸ்மிரிதி..இப்ப உனக்கு என்ன வேணும்? யார்கிட்ட பேசணும்?” என்று கேட்டான் பொறுமையிழந்த மனு.
“டென்ஷனாகாத… அமைதியா தூங்க போ.” என்று சொல்லி ஃபோன் இணைப்பைத் துண்டித்தாள் ஸ்மிரிதி.
அவளுடன் சிவகாமி பேசாமல் இருப்பது அவளை உறுத்துகிறது என்று தெரிந்தும் அதை நேரடியாக அவனிடம் சொல்லாமல் தேவையற்றதைப் பேசி கடுப்பாக்கும் இவளைக் கல்யாணம் வரை எப்படி கட்டிப்  மேய்ப்பது? என்று யோசனை செய்தபடி உறக்கம் வராமல் புரண்டு படுத்தவன் கல்யாணத்திற்குப் பிறகாவது அவளைக் கட்டிப்பிடித்து மேய்க்க முடியும் என்று ஆறுதல் அடைந்து உறங்கப் போனான்.
மறு நாள் காலையில் அவனை எழுப்பியது ஸ்மிரிதியின் ஃபோன் கால்தான்.
“இப்ப என்ன?” என்று கடுப்பாகக் கேட்டான் மனு.
“குட் மார்னிங்.” என்று அவனுக்குக் காலை வணக்கம் தெரிவித்தாள். அதன் பிறகு அவன் பதிலிற்குக் காத்திராமல் வேறு யாருடனோ அவள் விவாதித்துக் கொண்டிருப்பது மனுவை மேலும் எரிச்சல் படுத்த,
“உனக்கு காலைலே வேலை இல்லைன்னா எனக்கும் இருக்காதா? என்று மனு கேட்க, அவள் பேசிக் கொண்டிருந்த நபரிடம்,”ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு, மனுவிடம்,
“இன்னைக்கு உனக்கு ஒரு வேலை வைச்சிருக்கேன்..நீ அதை நல்லபடியா செய்து கொடு அதுக்கு அப்பறம் நான் உன்னை ஃபோன் செய்து தொந்தரவு செய்ய மாட்டேன்…கல்யாணம் வரை நானும் பிஸியாதான் இருக்கப் போறேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“ஸ்மிரிதி..லிஸன்..எனக்கு இன்னைக்கு சுத்தமா டைம் கிடையாது நாளைக்கு வேணும்னா நீ சொல்ற வேலையை செய்து கொடுக்க டிரை செய்யறேன்..இல்லை ஒரு வேலை செய்..கல்யாணம் வரை காத்திரு..அதுக்கு அப்பறம் கண்டிப்பா செய்து தர்றேன்.”
“நீ கல்யாணத்துக்கும், ரிஸெப்ஷனுக்கும் டிரெஸ் எடுத்திட்டியா?”
“இன்னும் இல்லை..கல்யாணத்துக்கு கோயமுத்தூலேர்ந்து ராம் வாங்கிட்டு வருவான்..ரிஸெப்ஷனுக்கு இங்க தான் வாங்கணும்..” என்று மனு பதில் சொல்லி முடிக்குமுன்,
“ஜிஜு” என்று மனிஷ் லைனில் வந்தான்.
ஃபோனில் பேசுவது மனிஷ் தான் என்று புரிந்து கொண்ட மனு,”என்ன டா இன்னும் ஸ்கூலுக்கு கிளம்பலேயா? எதுக்கு தீதியோட சண்டைப் போட்டுகிட்டு இருக்க? என்று விசாரித்தான்.
“கல்யாணத்துக்கும், ரிஸெப்ஷனுக்கும் நாம இரண்டு பேரும் ஒரே போலே டி ரெஸ் போட்டுக்கணும்..அதைப் பற்றி தான் ஸ்மிரிதி தீதிகிட்ட பேசிக்கிட்டிருந்தேன்..நீங்க ஷாப்பிங் போகும் போது என்னையும் உங்ககூட அழைச்சுகிட்டு போகணும்னு சொல்றத்துக்குதான் தீதி ஃபோன் செய்தாங்க.” என்றான் மனிஷ்.
“டன்..உனக்கும் சேர்த்து எடுத்திடலாம்..நீ, மாறன், நான்..நாம மூணு பேரும் ஸேம் டைப்லே போடலாம்..நீ ஸ்கூல் முடிஞ்சு எப்ப ஃப்ரீயொ அப்ப என் ஆபிஸுக்கு வந்திடு..மாறனும் வந்திடுவான்..நம்ம ஷாப்பிங்கை முடிச்சிடலாம்..உன் தீதியை கழட்டி விடு..காலைலே டயம் வேஸ்ட் செய்யறா.” என்று மச்சானுடன் கூட்டணி அமைத்த மாமன் அக்காவை அம்போ என்று விட அட்வைஸ் செய்ய,
“என்னை கழட்டி விட்டிட்டா அவன் எப்படி உனக்கு ஜிஜு ஆவான்? என்று மனிஷிடம் சிரித்து கொண்டே ஹிந்தியில் கேட்ட ஸ்மிரிதி, “என்னை கழட்டி விட்டா கிழவனைக் கல்யாணம் செய்துக்க யார் தயாரா இருக்காங்கன்னு நானும் பார்க்கறேன்?” என்று மனுவிடம் சவாலாக கேட்க,
“நீ எதுக்கு இந்தக் கிழவனைக் கல்யாணம் செய்துக்க தயாரா இருக்க?” என்று பதில் கேள்வி கேட்டான் மனு.
“த்ரிலுக்குக்காகதான்..கிழவனோட கடின உழைப்பு எத்தனை நிமிஷம் தாக்குப்பிடிக்குதுண்ணு கண்டுபிடிக்க.”என்று ஸ்மிரிதி ஸ்டைலில் கல்யாணத்திற்கான காரணத்தையும் விளக்கினாள்.
அவள் விளக்கத்தைக் கேட்டு அதிர்ச்சியான மனு,“ராட்சசி.” என்றான்.
“கரெக்ட்..உன்னோட கடின உழைப்பை உறிஞ்சி அனுபவிக்க ராட்சசியா இருந்தாதான் முடியும்.” என்று பட்டென்று பதில் கொடுக்க,

Advertisement