Advertisement

ஸ்மிரிதியின் மனு – 27
 
“வாவ்..தட்ஸ் எ ஸர்பரைஸ்..கன்கிராட்ஸ் மேம்.” என்றான் ஸ்மிரிதியைப் பார்த்து.
 
“தாங்க்ஸ்.” என்று ஒரு புன்சிரிப்புடன் கரனுக்குப் பதில் சொன்னாள் ஸ்மிரிதி.
 
“வாங்க.” என்று சொல்லி அவர்களைச் சந்திக்க அவன் வந்த கதவைத் திறந்து அதை ஒட்டியிருந்த மாடிப்படி வழியாக அவர்களை டெரெஸுக்கு அழைத்து சென்றான் கரன்.  அங்கே கண்ணை உறுத்தாத மிதமான விளக்கொளியில் ஒரு ஜோடி மட்டும் உணவருந்த தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. 
 
அந்த இடம் சிறியதாக இருந்தாலும் கலை இரசனையுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  மாடியின் கைப்பிடி சுவர் முழுவதும் தொட்டிகளில் விண்டர் பூக்கள் நறுமணத்தையும், தனிமையையும் ஒருசேர அளித்தன. டெரெஸின் ஒரு மூலையில் வெப்பத்தைக் கொடுக்க எலெக்ட் ரிக் ஸிகிடி வைத்திருந்தார்கள். அதைப் பார்த்தவுடன் அதனருகே சென்று அவள் கைகளைக் காட்டி சூடேற்றிக் கொண்டாள் ஸ்மிரிதி. 
 
ஸ்மிரிதியின் தென்னிந்திய தோற்றத்தைத்தயும் அவள் வெப்பத்தைத் தேடி சென்றதையும் பார்த்து “மேம்..உங்களுக்கு குளிருதுன்னா உள்ள அரேன் ஜ் செய்யறேன்.” என்றான் கரன்.
 
“நோ..என்னோட ஸ்கூல் லைஃப்யெல்லாம் தெராதூன்லதான்..எனக்கு பிராப்ளமில்லை.” என்றாள் ஸ்மிரிதி.
 
“மேம்..எங்க ஊர் நீங்க..ஐ யாம் கரன் நேகி.” என்று அவன் முழுப்பெயருடன் அறிமுகப்படுத்திக் கொண்டு சினேகிதமாகப் புன்னகைத்தான்.
 
“நான்..ஸ்மிரிதி கார்மேகம்.” என்று ஸ்மிரிதியும் அவளை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
 
“கிளாட் டு மீட் யு மேம்..கான்கிராட்ஸ் ஒன்ஸ் அகெய்ன்..முதல் முறையா என் இடத்துக்கு வந்திருக்கீங்க என்ன வேணும்னு சொல்லுங்க..ஐ வில் மேக் இட் மைஸெல்ஃப்.” என்றான் கரன்.
 
அதுவரை அவர்கள் உரையாடலைக் கேட்டு கொண்டிருந்த மனு,”சொல்றோம்..கொஞ்ச நேரம் கழிச்சு..ரொம்ப லேட்டாக்க மாட்டோம்..நீயும் கிளோஸ் செய்யணும்..நானும் இவளை வீட்டுக்கு அழைச்சுகிட்டு போகணும்.” என்றான் மனு.
 
“ப்ளீஸ்..எவ்வளவு லேட்டானாலும் பரவாயில்லை.” என்று சொல்லி அவர்களுக்குத் தனிமையைக் கொடுத்து விலகிக் கொண்டான் கரன்.
 
அந்த தெருவின் மற்ற இடங்களில் விளக்கெரிந்து கொண்டிருக்க, மனுவும், ஸ்மிரிதியும் இருந்த மாடியும் அதைச் சுற்றி இருந்த இடத்திலும் அதிக வெளிச்சமில்லை.
 
அங்கே தரையில் விரிக்கப்பட்டிருந்த தரியில் சுவற்றில் சாயந்தபடி அமர்ந்துக் கொண்டாள் ஸ்மிரிதி.
 
“கீழே உட்காராதே..கொஞ்ச நேரத்திலே குளிரும்.” என்று சொன்னவனின் கையைப் பிடித்து இழுத்து அவளருகே உட்கார வைத்தாள் ஸ்மிரிதி. அவளின் அழைப்பை மறுக்காமல் அவனும் சுவற்றில் சாய்ந்து  கால்களை மடக்கி அவளருகையே அமர்ந்தான் மனு.
 
“யார் இவன் மனு?”
 
“கிளையெண்ட்..நிறைய தடவை இன்வைட் செய்திருக்கான் ஆனா இன்னைக்குதான் எனக்கு இங்க வரணும்னு தோணிச்சு..கபீராட்டம் பெரிய லெவல் இல்லை..பட் கரனும் எக்ஸ்கிளுஸிவ்தான்.”
 
“முதல்லே உள்ளே நுழைஞ்ச போது எல்லா இடத்திலெயும் “k” யைப் பார்த்து பெரிய ஈகோன்னு நினைச்சேன்..அவன்கிட்ட பேசின அப்பறம்தான் அது அவனோட பிரைடுன்னு புரிஞ்சுது.” 
 
கரனைச் சரியாக அவள் எடைப் போட்டதில் சந்தோஷமடைந்த மனு,
 
“அதனாலதான் அவன் எக்ஸ்கிளுஸிவ்” என்றான். 
 
அதற்கு வெறும் புன்னகையைப் பதிலாக அளித்த ஸ்மிரிதி,“நான் உன்கிட்ட சில விஷயங்கள் சொல்லணும் மனு.” என்றாள்
 
“உதய்ப்பூலே நடந்தது பற்றிதானே..அங்கே நடந்த இரண்டாவது தீ விபத்து உன் மேற் பார்வைலேதான் நடந்திச்சு..உங்க சாமானை எரிச்சவங்களோடக் கடைகளை உங்க ஆளுங்க எரிச்சிருக்காங்க..அது எதுவும் தப்பா முடியக்கூடாதுன்னு அவங்க பக்கத்திலேயே இருந்து நீ தைரியம் கொடுத்திருக்க..கரெக்டா?” என்று கேட்டான்.
 
கபீர் சொன்னது போல் லைவ் ஃபீட் பார்த்தவனை போல் பேசினான் மனு.  ஆனால் அவன் யுகித்ததில் ஆச்சிர்யமடையாமல் அமைதியாக அவனைப் பார்த்து,
 
‘எல்லாம் திட்டப்படி நடந்திச்சு.” என்றாள் ஸ்மிரிதி.
 
“இல்லை..நீ உன்னோட குரல் பாதிக்கப்படும்னு நினைக்கலே.” என்றான் மனு.
 
“நாங்க எல்லாருமே எங்க முகத்தை மூடியிருந்தோம் மனு..ஆனா எதிர்பாராதவிதமா அந்த சாமானெல்லாம் நினைச்சதை விட சீக்கிரமாப் பத்திக்கிச்சு அதனால சட்டுன்னு புகை சூழ்ந்திடுச்சு.” என்றாள் ஸ்மிரிதி.
 
அவள் சொன்ன விளக்கத்தைக் கேட்டவன்,“நீ செய்தது தப்பா தெரியலையா உனக்கு?” என்று கேட்க,
 
“தப்பு செய்தவங்களைத் தண்டிக்க செய்யற செயலுக்கு பெயர் தப்பு இல்லை மனு..அதுக்கு பெயர் தண்டனை…நீ ஒரு வக்கீல் உனக்கு நான் தண்டனையைப் பற்றி விளக்க வேணாம்.”
 
“நீ யார் ஸ்மிரிதி அதை தீர்மானிக்க..போலீஸுக்கு சொல்லியிருக்கலாமில்லே?’
 
“பாதிக்கப்பட்டவங்கதான் தண்டனையைத்  தீர்மானிக்கணும்..போலீஸ் பற்றி எனக்குத் தெரியாது..எங்க கௌடவுன் தீ பிடிச்ச போது அவங்க யாரு வரலை..முன்னாடியே விஷயம் தெரிஞ்சும் கண்டுக்கலே.”
 
“அதுக்காக நீயும் பழிக்குப் பழி மாதிரி நடந்துக்குவியா?”
 
“பழித் தீர்த்துக்கலே..என் வழிலே வாழ்க்கைப் பாடம் சொல்லித் தந்தேன்..எங்களுக்குச் செய்ததைத் திரும்ப செய்தோம்..கஷ்டம் கொடுக்கறவங்களுக்கு கஷ்டம் கொடுக்கணும்.” என்றாள் ஸ்மிரிதி.
 
“யாராவது கம்ப்ளெயண்ட் கொடுத்து நீ மாட்டியிருந்தா என்ன செய்திருப்ப?” என்று கேட்க,
 
“நான் மாட்டற லெவல்லே விஷயம் போயிருந்திருந்தா கார்மேகம் வந்திருப்பாரு.” என்றாள் ஸ்மிரிதி.
 
“உங்கப்பா கார்மேகம் கிருஷ்ண பகவானில்லே..நினைச்ச நேரத்தில்லே, நினைச்ச இடத்திலேத் தரிசனம் கொடுக்கறத்துக்கு..உன்னோட சரி, தப்புக்கு புது பகவத் கீதைப் படைக்கறத்துக்கு .” என்றான் மனு.
 
“நாம எல்லாருமே கிருஷ்ண பகவான் தான்..நம்மளோட மனப் போர் தான் நமக்கு மஹாபாரதப் போர்.. அவங்க அவங்க மனசைப் பொறுத்துதான் ஒவ்வொருத்தரோட சரி, தப்பு..அதுதான் அவங்களோட பகவத் கீதை..என்னை அழிக்க நினைக்கறவங்கிட்ட என்னாலே அன்பு காட்ட முடியாது..அவங்களோட அந்த நினைப்பை அழிக்க எல்லாம் செய்வேன்.” என்றாள் ஸ்மிரிதி.
 
“என்ன பேசறேன்னு தெரிஞ்சு தான் பேசறியா?”
 
“அழிவு அழிவைத்தான் கொடுக்கும்னு சொல்றேன்.” என்றாள் தெளிவாக ஸ்மிரிதி.
 
“அவசியமில்லை ஸ்மிரிதி..அன்பையும் கண்டு பிடிச்சு கொடுக்கும்.” என்றான் மனு.
 
மனு சொன்னதை கேட்டு ஸ்மிரிதியின் முகத்தில் ஆச்சிர்யம் கலந்த சந்தோஷம்.  அதைப் பார்த்து,
 
“என்ன?” என்று அவன் கேட்க,
 
“நீ இப்ப பேசினது பீஜி பேசறது போல இருந்திச்சு..அழிவுலேர்ந்து அன்பை கண்டு பிடிச்சவங்க பீஜி.” என்றாள் ஸ்மிரிதி.
 
“அப்ப உனக்கு இது புதுசு இல்ல..ஏன் பீஜி சொன்னதை உன்னாலே ஒத்துக்க முடியலே ஸ்மிரிதி?” .
 
“ஏன்னா அவங்க பீஜி..நான் ஸ்மிரிதி கார்மேகம்…ஆனா நான் என்னையே அழிச்சுக்காம இருந்ததுக்கு காரணம் அவங்க அன்பு தான்.” என்றாள்.
 
“அன்பு அழிவைவிட பெரிசுங்கறத்துக்கு ஆதாரமே நீதான் ஸ்மிரிதி.”
 
“கரெக்ட் மனு..ஆனா எல்லாருகிட்டையும், எல்லா நேரத்திலேயும் அன்பு வேலை செய்யாது..அதுதான் என்னையும், பீஜியும் பிரிச்சு காட்டற ஃபால்ட் லைன் (fault line).” என்றாள் ஸ்மிரிதி.
 
“நாம எல்லாரும் ஒரே போல இல்லாம வேற மாதிரி இருக்கறதுக்கு பெயர் ஃபால்ட் லைன் இல்லே..அதுக்கு பெயர் பாட்டம் லைன் (bottom line)..உன்னோட பாட்டம் லைனும் பீஜிதும் எங்கையோ ஒண்ணா சேர்ந்திருக்கு..என்னோட பாட்டம் லைனும் உன்னோடதும் எங்கையோ ஒண்ணாயிடுச்சு.” என்று அலங்கார வார்த்தைகள் எதுவுமில்லாமல் அவர்களின் சிறப்பு வழியைத் திறந்து வைத்தான் வக்கீல்.
 
மனு சொன்னதைக் கேட்டு கொண்டிருந்த ஸ்மிரிதி அவன் கையை இறுக்கப் பற்றிக் கொண்டாள். அவள் இன்னும் ஏதோ சொல்ல விரும்புகிறாள் என்று அவளுடைய அந்த சைகையில் புரிந்து கொண்ட மனு,
 
“என்ன சொல்லணும்னு நினைக்கறேயோ சொல்லு…ஐ யாம் லிஸனிங்” என்றான்.
 
“ஆன்ட்டி நம்ம கல்யாணத்தை எப்படி எடுத்துக்கறாங்க?”
 
“சில சமயம் ரொம்ப சந்தோஷமா எல்லா ஏற்பாடும் செய்யறாங்க..சில சமயம் சிடுசிடுன்னு இருக்காங்க.”
 
“எங்கப்பா இன்னைக்கு காலைலே உங்க வீட்டுக்கு வந்தபோது என்ன நடந்திச்சு?’ 
 
“நானும், அங்கிளும் பேசிகிட்ட மாதிரிதான் நடந்திச்சு.. நீ மட்டும் எங்க வீட்டுக்கு வந்தா போதும்னு அங்கிள்கிட்ட அம்மா சொன்னாங்க..அவரு முடியவே முடியாதுன்னு சொல்லிட்டாரு..உனக்குன்னு கொடுக்க வேண்டியதெல்லாத்தையும் கொடுப்பேன்னு பிடிவாதமா இருக்காரு..உன்னோட முடிவுன்னு எங்கப்பா சொல்லிட்டாரு..நான் சொன்னேன் ஸ்மிரிதிக்கு எது கொடுத்தாலும் அதோட பேப்பர்ஸ்யெல்லாம் என்கிட்ட வந்திடுணும்னு..
 
கல்யாணத்தைப் பாலாஜி மந்திர்ல வைச்சுகிட்டு அன்னைக்கு சாயந்திரமே ஒரு ஹோட்டல்லே ரிசெப்ஷனை வைச்சுக்கலாம்னு எங்கம்மா சொன்னாங்க..உங்கப்பா சரின்னு ஒத்துக்கிட்டாரு..
 
ரிசெப்ஷன் அவசியமில்லைன்னு எங்கப்பா சொன்னாரு..உங்களுக்கு அவசியமில்லை ஆனா எனக்கு அவசியம்..என் மாப்பிள்ளை யாருன்னு என்னோட வட்டத்திலேத் தெரியணும்..உங்க வட்டத்துக்கு உங்க மருமகளை அறிமுகப்படுத்தறதும் அறிமுகப்படுத்தாதும் உங்க இஷ்டம்னு அங்கிள் சொன்னாரு.. 
 
அது எங்கப்பாவைக் காயப்படுத்திடுச்சு..உன்னை முழுமையா ஏத்துக்காத மாதிரி காட்டிடுச்சு அதனாலே எங்கப்பாவும் ரிசெப்ஷன் வைச்சுக்கலாம்னு ஒத்துக்கிட்டாரு..எந்த ஹோட்டல்னு இன்னும் முடிவு செய்யலை..கபீரோட ஹோட்டலாதான் இருக்கும்..ஆனா இட் வில் பி எ பிரைவெட் அஃபையர்..ரொம்ப தெரிஞ்சவங்க..வேண்டப்பட்டவங்க.” என்றான் மனு.
 
“எங்கம்மாகிட்ட ஆன்ட்டி இன்னைக்குதான் பேசியிருக்காங்க.” என்றாள் ஸ்மிரிதி.
 
“உங்கப்பாவோட பேசின பிறகுதான் உங்கம்மாகிட்ட பேசணும்னு நினைச்சாங்க..அதான் இன்னைக்கு அவர்கிட்ட பேசின பிறகு பிரேமா ஆன் ட்டிக்கு ஃபோன் செய்திருப்பாங்க.”
 
“அம்மாவைப் பற்றி என்ன பேசினாங்க அப்பாகிட்ட?”
 
“நம்ம கல்யாணத்திலே பிரேமா ஆன் ட்டிக்கு எந்த சங்கடமும் இருக்கக்கூடாதுன்னு அவங்களை எங்க வீட்லையேத் தங்க வைக்கப் போறாங்கன்னு உங்கப்பாகிட்ட சொன்னாங்க..அப்பறம் கோயமுத்தூர்லே எங்க சொந்தக்காரங்களுக்கு ரிசெப்ஷன் வைக்கணும்னு நினைச்சாங்க அதுக்கு பிரேமா ஆன்ட்டி வரமாட்டாங்கன்னு தெரியும் அதனாலே அது வேணாம்னு மூணு பேரும் முடிவு செய்திட்டாங்க.” என்றான் மனு.
 
“எங்கம்மா கபீரோட ஹோட்டல்லேயேத் தங்கட்டும் மனு..கல்யாணத்துக்கு முன்னாடி நாள் வந்திட்டு கல்யாணம், ரிசெப்ஷன் இரண்டும் முடிச்சிட்டு அடுத்த நாள் கிளம்பிடுவாங்க.” என்றாள் ஸ்மிரிதி.
 
“யார் எடுத்த முடிவு இது?”
 
“நான் எடுத்த முடிவு..உங்க வீட்லே இருக்க சொல்லி ஆன்ட்டி கட்டாயப்படுத்தறாங்க.. அது எங்கம்மாக்கு டென்ஷன் கொடுக்குது.. அவங்களுக்கு அது நல்லதில்லை மனு.” என்றாள் ஸ்மிரிதி.
 
ஸ்மிரிதி சொன்னதை மனுவினால் புரிந்து கொள்ள முடியவில்லை.  
 
“அவங்க டென்ஷனைக் குறைக்கதான் அம்மா எல்லா ஏற்பாடு செய்யறாங்க..நீ உங்க வீட்லதான் இனி கல்யாணம் வரை இருக்க போற..அந்த வீட்லே உங்கம்மா வந்து எப்படி இருக்க முடியும்..அதான் எங்க வீட்டுக்கே வரச் சொல்றாங்க..கபீர் ஹோட்டல் வீடு ஆக முடியாது..ஆன்ட்டி இங்க வர்றது அவங்க பொண்ணு கல்யாணத்துக்கு..அவங்க இனி தனி ஆள் இல்லை ஸ்மிரிதி..நாம எல்லாரும் இருக்கோம் அவங்களுக்கு.” என்றான் மனு.
 
“தெரியும் மனு..ஆனா அவங்களுக்கு நீ இப்ப சிவகாமி ஆன்ட்டியோட பையன் மனு இல்லை.. அவங்களோட மாப்பிள்ளை மனு..அதனாலே உங்க வீட்ல இருக்க முடியாதுன்னுக் கண்டிப்பா சொல்லிட்டாங்க.” என்றாள் ஸ்மிரிதி.
 
“நோ..இதனாலே வீண் மனஸ்தாபம் வரும்..நான் பேசறேன் உங்கம்மாகிட்ட.” என்றான் மனு.
 
“எங்கம்மா என் கல்யாணத்துக்கு வந்திட்டு என்னோட இருக்காம அடுத்த நாளேப் புறப்பட போறாங்க..அதுக்கு நான் ஒத்துக்கிட்டுதான் ஆகணும்…அவங்க இஷ்டத்துக்குதான் விடணும்..வற்புறுத்த முடியாது.” என்றாள் ஸ்மிரிதி.
 
“ஏன்?”
 
ஒரு நிமிடம் கண்களை மூடி அவள் சொல்லப் போவதை மனதில் ஒத்திகைப் பார்த்துக் கொண்டாள்.  பின் மனுவின் புறம் திரும்பி,
 
“அம்மாக்கு அன்ஜைனா…அவங்களுகே இந்த விவரம் தெரியாது..நானும், அம்மாவும் கோயமுத்தூர் வர்றத்துக்கு முன்னாடி அவங்களை சுசித் ரா ஆஸ்பத்திரிக்கு அழைச்சுகிட்டுப் போய் செக்-அப் செய்தேன்..நேத்ரா ஆன் ட்டி மெடிஸன்ஸ் எழுதி கொடுத்திருக்காங்க..மந்த்லி ஃபாலோ அப்புக்கு மஞ்சு நாத்தான் அழைச்சுகிட்டு போறான்..
 
இப்ப பெங்களூர் போன போது அவங்க தனி ஆள் இல்லை நான் இருக்கேன்னு சொல்லித்தான் அவங்களை ஜலந்தர் ஷிஃப்ட் செய்ய பேசிட்டு வந்தேன்..அப்பதான் நம்மை பற்றியும் அவங்கிட்ட சொன்னேன்..உன்னைப் பிடிச்சிருக்குண்ணு அம்மாகிட்டதான் முதல்லே சொன்னேன் மனு..நம்ம கல்யாணம் நடக்கும் அதுவும் இவ்வளவு சீக்கிரம் நடக்கும்ணு நான் நினைக்கவேயில்லை..அப்பக்கூட அம்மா என்கிட்ட கேட்டாங்க..மனுவைப் பிடிச்சிருக்குண்னு சொல்ற..ஜலந்தர் வர சொல்ற..குழப்பாதேன்னு..
 
எங்கம்மாகிட்ட அப்ப நான் சொன்னததை இப்ப உன்கிட்ட சொல்ல போறேன்..நம்ம கல்யாணம் நடக்கலேன்னா அதை நான் கடந்து போயிடுவேன்னு சொன்னேன்..ஆனா அப்ப அவங்கிட்ட சொல்லாததை இப்ப உன்கிட்ட சொல்றேன்..
 
எங்கம்மாவுக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா என்னாலே அதைக் கடக்க முடியுமான்னு தெரியலை மனு..என்னை எங்கப்பாவோட விட்டிருக்ககூடாதுன்னு இப்பவும் எங்கம்மா நினைக்கறாங்க.. என் வாழ்க்கைலே நடந்த எல்லாத்துக்கும் அவங்கதான் காரணம்னு சொல்றாங்க..அவங்களோடக் குற்ற உணர்வுதான் அவங்க உடல் நலத்துக்குக் கேடாகுது..
 
அதான் அவங்களை ஜலந்தர்லே தல்ஜித்கிட்ட கூட்டிக்கிட்டு போகப் போறேன்..அங்க அவங்களுக்குப் பிடிச்ச வேலைப் பார்க்க முடியும், பிடிச்ச மாதிரி வாழ முடியும்..நானும் அவங்களை நினைச்சபோது போய் பார்க்க முடியும்.  அவன் அம்மாவை எப்ப வேணும்னாலும் அழைச்சுகிட்டு வர சொல்லியிருக்கான்..இந்த அகடமிக் இயர் முடியட்டும்னு நான் வெயிட் செய்துகிட்டிருக்கேன்.”என்று அங்கே அந்த இரவு வேளையில் மனு திறந்த வைத்த அவர்களுக்கான சிறப்பு வழியில் இணைந்துக் கொண்டாள் ஸ்மிரிதி.
 
அடுத்த சில நிமிடங்கள் இருவரும் மௌனமாக அமர்ந்திருந்தனர்,  மனுவிற்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் தெரிய வேண்டியிருந்தது,
 
“உங்கப்பாகிட்ட சொல்லிட்டியா?’ என்று கேட்டான்.
 
“இல்லை..இப்ப உன்கிட்ட சொன்ன பிறகு அவர்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்லைன்னு நினைக்கறேன்..அம்மாவும் அதை விரும்ப மாட்டாங்க மனு..அவருக்கு இப்ப இன்னொரு குடும்பம் இருக்கு..முக்கியமா மனைவி ஸ்தானத்திலே ஒருத்தங்க இருக்காங்க..
 
என் கல்யாணத்துக்கு அம்மா வர்றதே நான் உன்னைக் கல்யாணம் செய்துகறதுனாலதான்.. அவங்க எல்லாத்திலேர்ந்து ஒதுங்கிப் போயிட்டாங்க..நானும் அதுக்கு காரணம்..எவ்வளவு ஊர் சுத்தியிருப்பேன் அவங்களையும் என்கூட அழைச்சுகிட்டு போயிருக்கணும் இல்லே அவங்ககிட்ட போய் கொஞ்சம் நாட்கள் இருந்திருக்கணும்..இரண்டுமே செய்யலே..இப்ப இந்த ஒண்ணாவது அவங்களுக்காக செய்யணும்னு நினைக்கறேன்..
 
எங்கப்பாவைவிட எங்கம்மாதான் ஸ்ட் ராங்குன்னு நினைச்சு அவங்க விவாகரத்துக்கு அப்பறம் அனாதையான எங்கப்பாவுக்கு ஆதரவா அவர்கூடவே இருக்க முடிவு செய்தேன்..அது என்னோட முடிவு.. அம்மாக்கும் அதுக்கும் சம்மந்தமில்லை..
 
ராம், ஜனனி கல்யணத்து போதுதான் அம்மா மனசுலே இருக்கிறதை நான் புரிஞ்சுகிட்டேன்..அவங்க எந்தத் தப்பும் செய்யலே மனு அதனால அவங்க குற்ற உணர்வுலேக் கஷ்டப்படறது தப்பு..அதை சரி செய்ய விரும்பறேன்..
 
அம்மா, உங்க வீட்லே தங்க விரும்பலே மனு அதனாலே நான் அவங்களுக்குக் கபீர் ஹோட்டல்லே அறை புக் செய்திடறேன்.” என்று அவள் முடிவை மீண்டுமொருமுறை அவனுக்குத் தெரிவித்தாள் ஸ்மிரிதி.
 
அவர்களுக்கான சிறப்பு வழியில் தற்காலிக தடைகளை எழுப்பி அவர்கள் பாதையை, பயணத்தின் திசையை அவள் மட்டுமே மாற்றி அமைப்பதை விரும்பவில்லை மனு.  ஆனால் அதை சுட்டிக் காட்டும் தருணம் அதுவல்ல என்று உணர்ந்து அமைதியாக இருந்தான்.
 
அவள் முடிவைக் கேட்டதற்கான அறிகுறி எதுவுமில்லாமல் அமைதியாக இருந்தவனின் தோள் மீது சாயந்து கொண்ட ஸ்மிரிதி அதுவரை அவளுக்கு இருந்த மனபாரம் நீங்கி லேசாக உணர்ந்தாள். அதற்கு மேல் கரனை தாமதம் செய்ய முடியாது என்று உணர்ந்த மனுவும் அவன் ஃபோனை எடுத்து கரனிடம்,”வி ஆர் ரெடி நவ்..உன்னோட பெஸ்ட் மட்டும் போதும்.” என்றான். அந்தப் புறம் கரன் சொன்னதை கேட்டு ஸ்மிரிதியின் புறம் திரும்பி அவளை அவன் எதுவும் கேட்கும் முன்,
 
“எனக்கு எதுவும் வேணாம் மனு.” என்று மறுத்தாள் ஸ்மிரிதி.
 
“ஆர் யு ஷுயர்?.”
 
“யெஸ்..எனக்கு வேணாம். ” என்று திடமாகப் பதில் அளித்தாள் ஸ்மிரிதி.
 
“கரன்..ஒன்லி ஃபார் மீ.” என்று அவன் சொல்ல மறுபடியும் கரன் அவனிடம் ஏதோ சொல்ல,”இல்லை..அவ வேணாம்னு சொல்லிட்டா..ஒகே கேட்கறேன்.”
 
“அவன் இடத்துக்கு முதல் தடவை வந்திட்டு நீ எதுவும் சாப்பிடாம போகக்கூடாதுன்னு சொல்றான் கரன்.”
 
“ப்ளீஸ் வேணாம்.” என்று மறுபடியும் மறுத்தாள் ஸ்மிரிதி.
 
“கரன்..எனக்கு மட்டும்தான்.” என்று சொல்லி ஃபோன் இணைப்பைத் துண்டித்தவன், 
 
“ஃபைன் ஸ்மிர்தி..நீ சாப்பிட வேணாம்..நான் சாப்பிட போறேன்..நான் சாப்பிடறதை நீ பார்த்துகிட்டு இரு.” என்ற சொல்லி தரையிலிருந்து எழுந்த மனு ஸ்மிரிதியையும் கை கொடுத்து எழுப்ப, அவர்கள் இருவரும் அங்கே இருந்த வட்ட டேபிளுக்கு சென்று அமர்ந்து கொண்டனர்.
 
சில நிமிடங்கள் கழித்து டெரெஸ்ஸிற்கு வந்த கரனின் கைகளில் சாப்பாடு இல்லை ஆனால் சில சாதனங்கள் இருந்தன.
 
“ஸர்..என்ன வேணும்?” என்று கேட்டான் கரன்.
 
“ப்ளெயின் வண்ணிலா வித் நட்ஸ்.” என்றான் மனு.
 
அங்கே அந்த வட்ட டேபிளில் அவர்கள் கண் முன்னே பால்,  க்ரீம், வண்ணிலா எஸ்ன்ஸ் சேர்த்து, நட்ஸினால் டாப்பிங் செய்து நொடிகளில் லிக்விட் நைட் ரஜனை உபயோகித்து ஃபிளாஷ் ஃப்ரீஸ்  முறையில்  ஐஸ்கிரீம் தயாரித்தான் கரன். லிக்விட் நைட் ரஜன் உருவாக்கிய செய்றகை பனி மூட்டத்தால் சூழப்பட்டிருந்த இருவரையும் பார்த்து, 
 
“ஸர், மேம்..வில் பி ரெடி டு ஈட் இன் ஃப்யூ மினிட்ஸ்.” என்று சொல்லி அங்கிருந்து அகன்றான்.
 
அவளெதிரே அமர்ந்திருந்த மனுவை ஸ்மிரிதி முறைத்துப் பார்க்க, அதைக் கண்டு கொள்ளாமல், குனிந்த தலையை நிமிர்த்தாமல் அவனின் வண்ணிலா நைஸ்கிரீமை நிதானமாக சுவைத்து உண்ண ஆரம்பித்தான் மனு.  அவனுடன் பங்குப் போட்டு கொள்ள அவளுக்கு அவன் அழைப்பு விடுப்பான் என்று காத்திருந்த ஸ்மிரிதிக்கு அவனின் நைஸ்கிரீமைப் பார்த்து நாவில் எச்சில் ஊற,
 
“என்கிட்ட நீ என்ன ஆர்டர் செய்ய போறேன்னு சொல்லவே இல்லை.” என்று அவள் ஏமாற்றத்தை வெளியிட்டாள்.
 
அவளுக்குப் பதில் சொல்லாமல் மௌனமாக நைஸ்கிரீமை சாப்பிட்டுக் கொண்டிருந்தான் மனு.
 
“உன்னைதான் கேட்கறேன்..நீ என்கிட்ட ஏன் கரனோட பெஸ்ட் எதுன்னு சொல்லலை?” என்று கேள்வி கேட்டாள்.
 
அப்போது அவளை நிமிர்ந்து பார்த்த மனு,”நான் உன்கிட்ட எதுவும் சொல்றத்துக்கு முன்னாடி நீயே  வேணாம்னு மறுத்துட்ட..அவன் இடத்துக்கு வந்திட்டு ஒண்ணும் சாப்பிடாம போகக்கூடாதுன்னு கரனும் சொன்னான் நீதான் பிடிவாதமா இருந்த.” என்று பதில் அளித்தான்.
 
அவன் சொன்னது அத்தனையும் உண்மை என்பதால் அதை மறுத்து பேச முடியாமல் அவன் நைஸ்கிரீமை காலி செய்வதை இயலாமையுடன் பார்த்து கொண்டிருந்தவள் அவன் கடைசி வாய் சாப்பிடுமுன் அவனின் கப்பைப் பறிக்க பார்க்க, அவளின் அந்த செய்கையை எதிர்பார்த்திருந்த மனு அவள் கையைத் தட்டிவிட்டான்.
 
“நீ மட்டும் என்னோட கடின உழைப்பை அனுபவிப்ப..நான் மட்டும் உன்னோட கடின உழைப்பை அனுபவிக்ககூடாதா?” என்று கோபத்துடன் ஸ்மிரிதி கேட்க,
 
அந்தக் கப்பில் இருந்த கடைசி வாயை அவன் வாயினுள் போட்டுக் கொண்டு கப்பில் மிச்சம் மீதி இல்லாமல் மொத்தமாக சாப்பிட்டு முடித்தான் மனு.
 
அவன் செய்கையை நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டிருந்தவளிடம்,
 
“என் கடின உழைப்பை இப்ப நீ அனுபவிக்கலாம்.” என்றான் நிதனமாக சேரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்ட மனு.
 
அவன் சொன்னதைப் புரிந்து கொண்ட ஸ்மிரிதி அவள் சேரிலிருந்து எழுந்து வந்து அவன் மடியில் அமர்ந்து அவனின் கடின உழைப்பை சுவைக்க ஆரம்பிக்க அவளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தான் மனு.
 
குல்ஃபி ஐஸ்கிரீம் சுவையுடன் ஆரம்பித்த அந்தக் குளிர் இரவு அவ்விருவரின் கடின உழைப்பால் நைஸ்கிரீமின் சுவையில் நிறைந்து நிரந்தரமாக அவர்களுக்குள் உறைந்துப் போனது.

Advertisement