Advertisement

ஸ்மிரிதியின் மனு – 26
அதற்குப் பின் சிவகாமியே பேசிக் கொண்டிருக்க அதிர்ச்சியில் மௌனமாகக் கேட்டு கொண்டிருந்தார் பிரேமா.
“இன்னைக்கு கல்யாணம் பேச கார்மேகம் எங்க வீட்டுக்கு வந்திருந்தாரு ..அடுத்த இரண்டு வார்த்துலே பாலாஜி மந்திர்லேக் கல்யாணம் வைக்கலாம்னு இருக்கேன். கல்யாணத்தனனைக்கு சாயந்திரம் ரிசெப்ஷன்…அவர்கிட்ட எல்லாம் தெளிவாப் பேசிட்டேன்…உனக்கு ஒரு சங்கடமும் இருக்ககூடாதுன்னு சொல்லிட்டேன்..இருக்காதுன்னு வாக்கு கொடுத்திருக்காரு..நம்ம வீட்லே எங்களோடதான் நீ தங்க போற..நீ எப்ப தில்லி வரேன்னு மட்டும் எனக்கு சொல்லிடு நான் மற்றதைப் பார்த்துக்கறேன்.” என்றார் சிவகாமி.
பிரேமாவிடமிருந்து பதில் இல்லாமல் போக,
“என்ன டீ இருக்கியா?”
“ஹம்.” என்றார் பிரேமா.
“அந்தப் பொண்ணோட நம்பர் அனுப்பிவிடு..அவகிட்ட முக்கியமா பிளவுஸ் பற்றி பேசணும்.” என்றார் சிவகாமி.
“இதோ அனுப்பிவிடறேன்.”என்று உடனடியாக பதில் அளித்தவர் சிறிது தயக்கத்துக்குப் பின், “நான் தில்லிலே ஹோட்டல்லையேத் தங்கிக்கறேன் டி.” என்றார்.
“ஹோட்டலா? அதெல்லாம் முடியாது..நம்ம வீட்லேதான் தங்கணும்.”
“அது சரிப்படாது..நீ இப்ப எனக்கு சம்மந்தி..நல்லா இருக்காது டீ.”
“நாம இரண்டு பேரும் முதல்லே பிரண்ட்ஸ் டீ.”
“அது அப்படியே இருக்கணும்னா நான் சொல்றதைக் கேளு..நான் ஹோட்டல்லே இருக்கேன்.”
“உனக்கு என்ன டீ பிடிவாதம்..எங்க வீட்டுக்கு வரக்கூடாதுன்னு வைச்சிருக்கியா?” என்று கோபமாகக் கேட்க,
“அப்படியெல்லாம் இல்லை.”
“நான் உனக்காகன்னு கோயமுத்தூர்லே ரிசெப்ஷன் வேணாம் தில்லிலே வைச்சுக்கலாம்னு சொல்லிட்டேன்..நீ எனக்காகன்னு என் வீட்டுக்கு வந்து என்கூட தங்க மாட்டியா?
“சரியா வராது சிவகாமி.” என்றார் பிரேமா.
 “இவ்வளவு நாளா ஸ்மிரிதியை கார்மேகம் போலேன்னு நினைச்சுகிட்டிருந்தேன்..சில விஷயத்திலே அவ உன்னைப் போலதான் இருக்கா டீ..சுசித் ராவோட ஃபோன் நம்பரை அனுப்பு.” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தார் சிவகாமி.
ஸ்மிரிதியின் அழைப்பை ஏற்று கொண்ட பிரேமா, “உன் மாமியார் காலைலே என்கிட்ட பேசினதை நினைச்சுகிட்டிருந்தேன் நீ ஃபோன் செய்திட்ட.” என்று சிவகாமியை சினேகிதி, சம்மந்தி என்று சொல்லாமல் அவளின் மாமியார் என்று சொன்னவுடனையே ஸ்மிரிதியின் முகத்தில் புன்னகை அரும்பியது.
“என்ன சொல்றாங்க என் மாமியார்?”
“கல்யாணப் புடவையைவிட அதோட பிளவுஸ் பற்றிதான் அவளுக்குப் பெரிய கவலை.” என்று சிரித்து கொண்டே சொன்னார் பிரேமா.
“அவங்க தமிழச்சி, நான் தில்லிக்காரி அதனாலே என்னைத் தமிழச்சியா கல்யாணத்தன்னிலேர்ந்து மாற்ற பார்ப்பாங்க.” என்று சரியாகச் சொன்னாள் ஸ்மிரிதி. ஆனால் ஸ்மிரிதி அறிந்திருக்கவில்லை சிவகாமியைத் தில்லிகாரியாக மாற்ற அவளின் சினேகிதிகள் சதி செய்ய போகிறார்களென்று.
“இங்க பாரு..கல்யாணத்துக்கு அவ சொல்றதை செய்..ரிசெப்ஷனுக்கு உனக்கு வேணுங்கறதை செய்..கல்யாணத்துக்கு அப்பறம் அவ எல்லா விஷயத்திலேயும் தலையிட மாட்டா ஸ்மிரிதி..நீயும் அதே போல இரு.” என்று பெண்ணிற்கு அட்வேஸ் செய்தார் பிரேமா.
“நான் எப்படின்னு உங்களுக்குத் தெரியும்..ஆன் ட்டிக்கும் தெரியும்..புதுசா என்னாலே மாற முடியாது மா..அப்படி மாறிகிட்டேன்னா  ஆன் ட்டிக்கு மட்டுமில்லே எனக்குமே என்னைப் புரியாது.” என்றாள் ஸ்மிரிதி.
“நீ மாற முடியாதுன்னு தெரியும்..அதை வைச்சு உன் வாழ்க்கையைக் குழப்பிக்காத..உன் விருப்பப்படி மனுவைக் கல்யாணம் செய்துக்க போற..நான் உனக்கு சொன்ன மாதிரி அவ விருப்பத்தோடதான் இது நடக்குது அதுவரைக்கும் எனக்கும் சந்தோஷம்.” என்று அவர் மாற முடியாததால் மாறிப் போன அவர் வாழ்க்கையைப் போல் அவர் பெண்ணின் வாழ்க்கை வாடிப் போகக்கூடாதென்று அவளுக்குப் புரிய வைக்க முயன்றார்.
“அம்மா, போதும் அடவைஸ்..வேற என்ன சொன்னாங்க என் மாமியார்?”
“என்னை அவ வீட்லையே தங்க வைக்க போறேன்னு சொன்னா..நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்.” என்றார் பிரேமா.
“ஏன் மா?”
“அது சரிப் படாது ஸ்மிரிதி..அவ எனக்கு இப்ப சம்மந்தி..அவ வீட்லே கல்யாணத்துக்கு முன்னாடி போய் உட்கார்ந்திருந்தா மரியாதையா இருக்காது..உன் கல்யாணத்திலே எனக்கு மரியாதை வாங்கிக் கொடுக்கணும்னு அவளோட மரியாதையை அவ குறைச்சுக்ககூடாது.. நான் தங்க மாட்டேன்னு சொன்னதை அவ தப்பா எடுத்துகிட்டான்னு நினைக்கறேன்…இது பிரச்சனையா மாறிடுமோன்னு எனக்கு கவலையா இருக்கு ஸ்மிரிதி. ”
“நீங்க கவலைப்படாதீங்க…நான் அதைப் பார்த்துக்கறேன்..மஞ்சு நாத்தோட ஆஸ்பத்திரி போய் செக் செய்துகிட்டீங்களா? ” என்றாள் ஸ்மிரிதி.
“போனேன் ஸ்மிரிதி..உன்கிட்ட சுசித்ரா சொல்லலையா? “
“இன்னைக்கு தான் அவகிட்ட பேசினேன் மா..என் குரலுக்கு ரெஸ்ட் கொடுக்கணும்னு யாருமே என்கிட்ட ஃபோன்லேப் பேசறதில்லே..மனுக்கூட அதனாலதான் என்கிட்ட இதுவரைக்கும் பேசலே போல மா.” என்றாள் ஸ்மிரிதி.
“உடம்பைப் பார்த்துக்க ஸ்மிரிதி..கல்யாணத்துக்கு நாள் குறிக்க போறாங்க.” என்றார் பிரேமா.
“நீங்க உங்க உடம்பை ஜாக்கிரதையா பார்த்துக்காங்க..ஆன் ட்டி வீட்லே தங்கற விஷயம் நான் பார்த்துக்கறேன்.” என்று வாக்குறுதி அளித்தாள் ஸ்மிரிதி. 
அன்றைய இரவு மனுவின் காரில் ஸ்மிரிதியின் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தனர் மனுவும், ஸ்மிரிதியும்.  கல்யாணத்திற்கு முன் அவளுடன் நேரடியாக பேசாமல் கபீர் முலமே அவளை அனுக வேண்டுமென்று நினைத்திருந்தவன் எப்படி அவளுடன் காரில் இப்போது பயணம் செய்து கொண்டிருக்கிறான் என்று புரியவில்லை சில நாட்களில் அவளுடன் ஒன்றாக வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பிக்கப் போகிறவனுக்கு.
ஒரே சீரான வேகத்தில் காரை ஓட்டிக் கொண்டிருந்த மனுவிடம், 
“காரை இங்க பார்க் பண்ணு மனு.” என்று அவர்கள் இடதுபுறம் இருந்த பெரிய மார்கெட்டை சுட்டிக் காட்டினாள் ஸ்மிரிதி.
 “எதுக்கு?” என்று கேட்டுக் கொண்டே காரை பார்க் செய்ய இடம் தேடினான் மனு.  
அந்த செக்டர் மார்கெட்டின் ஒரு புறம் இருளும் மறுபுறம் வெளிச்சமும் இருந்தது.  உணவு கடைகள் அந்த இரவு வேளையில் சுறுசுறுப்பாக செயல்பட்டு கொண்டிருந்தன மற்ற கடைகள் மூடப்பட்டு அன்றை தினத்திற்கான வியாபாரத்தை முடித்திருந்தன.  முக்கியமாக அங்கே வரிசையாக இருந்த தள்ளு வண்டியிலிருந்து அந்தக் குளிருக்கு இதமாக சாட், கார்ன், டிக்கி என்று குடும்பம், குடும்பமாக மக்கள் அவர்கள் விருப்பம் போல் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.  
அந்த மார்கெட்டின் மற்றொரு கேட்டின் அருகே வந்தவுடன்,”மனு, இங்கையே ஒரமா நிறுத்திடு..வெளியே போக வசதியா இருக்கும்.” என்று சொல்லி காரை ஸ்மிரிதி நிறுத்த சொன்ன இடத்தில் டூ வீலர்களுக்கு மத்தியில் அவன் பார்க் செய்ய அதன் எதிர்புறம் தள்ளு வண்டியில் குல்ஃபி இருந்தது.
காரை மனு நிறுத்தியவுடன்,”நான் குல்ஃபி சாப்பிட போறேன்..உனக்கு வேணுமா?” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
பைக்கில் பயணம் செய்ய முடியாத அளவிற்குக் குளிர் இருந்ததால் காரில் வந்திருந்த மனு ஸ்மிரிதியின் கேள்வியில் ஆச்சிர்யமடைந்தான்.
“எனக்கு வேணாம்.” என்று அவன் மறுத்தவுடன்,
காரிலிருந்து இறங்கிய ஸ்மிரிதி நேரே  குல்ஃபிவாலாவிடம் சென்றாள். அங்கேயிருந்தே சைகையில் உனக்கு வேணுமா? என்று மறுபடியும் கேட்க, “வேணாம்” என்று தலையசைத்தான் மனு.
அந்த இரவு வேளையில் குளிர் காரணமாக அங்கே வந்திருந்த முக்காவசி நபர்கள் சூடாக சாப்பிட்டுக் கொண்டிருக்க, ஸ்மிரிதி மட்டும் கையில் குல்ஃபி குச்சியை ருசித்து கொண்டு வந்தது வினோதமாக இருந்தது.
அந்த கடுங்குளிரில் குல்ஃபி சாப்பிடும் குண்டுதைரியத்தைப் பார்த்து கொண்டிருந்த மனுவிற்கு இரண்டு வாரம் கழித்து இதே நாளில் அவள் இதே போல் செய்தால் அவள் கணவனாக அவன் என்ன செய்வான் என்று யோசித்து கொண்டிருந்தான்.
“என்ன யோசனை உனக்கு?’ என்று கேட்டாள் காரினுள் அமர்ந்த ஸ்மிரிதி.
“எதுக்கு என்னை நீ இன்னைக்குக் கூப்பிட்டேன்னு யோசிச்சேன்..குல்ஃபிக்காகவா? கார்மேகம் இதுகெல்லாம் கட்டாயம் காரை நிறுத்தி இருக்க மாட்டாரு.” என்றான்.
“அதெல்லாமில்லே..கட்டாயம் நிறுத்தி வாங்கி கொடுத்திருப்பாரு..இந்த செக்டர் மார்கெட்லே இவன்கிட்ட தான் நல்லா இருக்கும்.” என்று குல்ஃபியைச் சப்பிக் கொண்டே பதில் அளித்தாள்.
அவள் ரசித்து சாப்பிடுவதை ரசனையோடுப் பார்த்து கொண்டிருந்தான் வக்கீல். அவனின் ஆழமானப் பார்வையைப் பார்த்து,
“உனக்கு வேணுமா?” என்று கேட்டாள்.
“வேணாம்” என்று யோசனையாகத் தலையசைத்தான்.
“அப்ப எதுக்கு இப்படி பார்த்துகிட்டு இருக்க?” என்று கேட்டாள்.
ஏன் என்ற காரணத்தை சொல்ல விரும்பாமல்,“அவனவன் சீக்கிரமா வீட்டுக்குப் போய் ரஜாய்க்குள்ள முடங்கப் பார்க்கறான்..நீ இந்தக் குளிர்காலத்திலேக் கல்யாணத்தை வைச்சுகிட்டு கவலையில்லாம குல்ஃபியைச் சப்பிக்கிட்டு இருக்க.” என்றான்.
“என் கல்யாணத்தை நான் ஹையர் பண்ணியிருக்கற ஆளு பார்த்துப்பாரு.” என்றாள் அசால்ட்டாக.
“யார் அது?” என்று அவன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அவர்களின் கல்யாணத்தை நடத்தி வைக்க அடுகு வைத்த மனு கேட்க,
“நீ சொன்ன மாதிரியே ஒரு வக்கீலைப் பிடிச்சேன்.. அவர் நலனைக்கூடப் பொருட்படுத்தாம  என்னோட நலந்தான் முக்கியம்னு எல்லாரையும் கன்வின்ஸ் செய்து கல்யாணம் வரை கொண்டு வந்திட்டாரு.” என்றாள் ஸ்மிரிதி குறும்பாக.
“ஸ்கீமர்” என்று அவளைச் செல்லமாகக் கடிந்து கொண்டவன் கைகட்டியபடி அவள் ஐஸ்கிரீம் சாப்பிடும் அழகைப் பார்த்து கொண்டிருந்தான்.  
ஸ்மிரிதியின் கையிலிருந்த குல்ஃபி கொஞ்சம்கூட உருகாமல் கல் போல் இருக்க அதை அவள் நாவால் உருக்க  அவள் செய்து கொண்டிருந்த முயற்சியைப் பார்த்து அவளெதிரே இருந்தவன் அந்த செய்கையில் சூடாகி மொத்தமாக உருகிக் கொண்டிருந்தான். அந்தக் கடைசி துண்டை அவள் கடித்து உண்ண முடிவு செய்த போது அவள் கையிலிருந்து குல்ஃபியை லாவகமாகப் பறித்து, உறிஞ்சி உண்ண ஆரம்பித்தான் மனு.
“மனு..உனக்குத் தனியா வாங்கி தர்றேன்னு சொன்னேனில்லே.” என்று அந்தக் கடைசி துண்டைச் சாப்பிட முடியாத ஏமாற்றத்தில் ஸ்மிரிதி கத்த,
“அது கல்லாட்டாம் இருக்கும்..அதை யார் கரைக்கறது..உன்னோட கடின உழைப்பை அனுபவிக்க வேணாமா? என்று சொல்லி கண் சிமிட்டியவன் கண்சிமிட்டும் நேரத்தில் அதை சாப்பிட்டு முடித்து கார் கதவைத் திறந்து வெளியே இருந்த குப்பைத் தொட்டியில் குல்ஃபி குச்சியை விட்டெறிந்தான்.
“வாவ்..அந்த லாஸ்ட் டாலப் தான் ஸேம டேஸ்ட்.” என்ற சொல்லி கார் கதவை சாத்திய மனுவை முறைத்துப் பார்த்த ஸ்மிரிதியை பார்த்து, மறுபடியும்,
“நிஜமாவே நல்லா இருந்திச்சு..ஒரு வாரம் முன்னாடி சரியாப் பேசக்கூட முடியலை..இன்னைக்கு குல்ஃபி..குண்டுதைரியம்தான் உனக்கு.” என்றான் மனு.
அவனோடு பேச்சு வளர்க்காமல் அவள் கைப்பையிலிருந்து டிஷ்யூவை எடுத்து அவள் உதட்டைத் துடைத்து கொண்டவள் அதே டிஷ்யூவை அவனுக்கும் கொடுத்தாள்.  பின் லிப் பாம்மை எடுத்து உதடுகளில் தடவிக் கொண்டு அதையும் அவனிடம் கொடுத்தாள்.  அவள் கொடுத்த டிஷ்யூ, லிப் பாம் எதையும் மறுக்காமல் வாங்கிக் கொண்ட மனுவிற்கு அவளின் செயல்கள் புதிராக இல்லாமல் ஏதோ செய்தி சொல்வது போல் இருந்தன. 
அவள் கொடுத்த இரண்டையும் ஏற்று கொண்டவன் அடுத்து அவன் என்ன கொடுக்கப் போகிறாள், செய்ய போகிறாள் என்று காத்திருந்தான்.  அவனிற்கு ஸ்மிரிதியின் எந்த செயலும் அர்த்தமில்லாததாகத் தெரியவில்லை ஆயிரம் அர்த்தம் கொண்டதாகத் தோன்றியது.  
அவனை இன்று ஃபோனில் அழைத்து அவளை அவள் வீட்டிற்கு கொண்டு விடும்படி கேட்டுக் கொண்டதற்கானக் காரணமும், அர்த்தமும் அறிய காத்திருந்த மனுவின் மனதில் ஒருவேளை அவர்கள் கல்யாணத்தில் அவளுக்கு ஏதாவது பிரச்சனையா? அவளை ஒதுக்கி வைக்காமல் அவளுடன் தினமும் இரண்டு வார்த்தையாவது பேசியிருக்க வேண்டுமோ என்ற எண்ணம் வந்தது.  அவன் ஸ்மிரிதியிடம் பேசாததற்குக் காரணம் அவளை அவன் மனைவியாக்க வேண்டிய கட்டாயத்தில் அவனிருந்ததால் அதைச் செயல்படுத்த அவளிடமிருந்தே விலகி இருந்தான்.
“ஸ்மிரிதி..ஐயாம் வெயிட்டீங்.” என்றான் மனு.
அதற்கு மேல் அவள் பேச வேண்டியதைத் தள்ளிப் போட முடியாதென்று உணர்ந்து,“குண்டுதைரியத்திற்குதான் குல்ஃபி சாப்பிட்டேன்..இன்ஸ்டெண்ட் எனர்ஜி.” என்று அவள்  ஐஸ்கிரீம் இடியலாஜியை விளக்கினாள் ஸ்மிரிதி.
அவன் கணித்தது சரியென்று உணர்ந்த மனு,”இப்ப உனக்கு என்ன குழப்பம்?” என்று அவள் குழப்பம் எதுவாக இருந்தாலும் அதை தீர்த்து வைக்க முடிவெடுத்தான் மனு.
அதுவரை நேராக அமர்ந்து கொண்டிருந்த ஸ்மிரிதி அவன் புறம் திரும்பி அமர்ந்து கொண்டாள்.  வெளியே இருந்த மக்களின் இரைச்சல், காரினுள் இருந்த இருவர் மனதின் பேரிரைச்சல் இரண்டுமே அங்கே அந்த காரினுள் கேட்கவில்லை. அந்தப் பேரமைதியை உடைத்து,
“மனு, உன்கிட்ட சிலது சொல்லணும்.” என்றாள் ஸ்மிரிதி.
“உதய்ப்பூரா?” என்று மனு கேட்க,
“அதுவும்.” என்றாள் ஸ்மிரிதி.  அவளின் தனிவழி அவனின் பொது வழியோடு இணைந்து அவர்களுக்கான சிறப்பு வழியை உருவாக்க முயல்கிறது என்பதை சட்டென உணர்ந்து கொண்ட வக்கீல்,
“லேட்ஸ் கோ ஸம்வேர்..கார்லே உட்கார்ந்து பேச வேணாம்.” என்று சொல்லி அவன் ஃபோனை எடுத்து கால் செய்து,”கரன்..ஆர் யு ஒபன் நவ்?” என்று கேட்டான்.  அந்தப் புறம் சொன்னதைக் கேட்டவுடன்,”பத்து நிமிஷத்திலே வந்திடுவேன்.” என்று சொல்லிக் காரைக் கிளப்பியவன் அவள் வீடு செல்லும் பாதையில் செல்லாமல் வேறொரு கிளைப் பாதையில் வண்டியைச் செல்லுத்தினான்.
அவர்கள் எங்கு செல்லுகிறார்கள் என்று கேட்க விரும்பாமல் மௌனமாக வந்தாள் ஸ்மிரிதி. பத்து நிமிட பயணத்திற்குப் பின் அவர்கள் ஒரு சின்ன தெருவின் தொடக்கத்தில் இருந்த ஷாப்பிங் காம்ப்ளெக்ஸின் முன் பார்க் செய்தனர்.  அந்த நேரத்தில் ஆள் ஆரவாரமில்லாமல் அமைதியாக இருந்தது அந்த இடம்.
அவர்கள் காரிலிருந்து இறங்கியவுடன் அந்த இடத்தை நோட்டம் விட்ட ஸ்மிரிதி முக்காவாசி கடைகள் மூடியிருப்பதைப் பார்த்து,”இங்க எல்லாம் மூடியிருக்கு.” என்றாள்.
“நமக்காக ஒரு இடம் திறந்திருக்கு..வா.” என்று சொல்லி அவளை நெருங்கி அவள் தோள் மீது கை போட்டு அவனோடு அவளை அணைத்துக் கொண்டான் மனு.
ஸ்மிரிதியும் மனுவின் நெருக்கத்திலிருந்து விலகாமல் அவனோடு மேலும் நெருக்கமாக ஒட்டிக் கொண்டாள்.  இரு தளத்தைக் கொண்ட அந்த காம்ப்ளெக்ஸ்ஸின் இரண்டாவது தளத்தின் பாதியை ஆக்கிரமித்திருந்தது அந்த ரெஸ்டாரண்ட். அதன் வாயில் கதவில் ஆங்கில எழுத்து “k” தங்க நிறத்தில் மின்னியது. அவர்கள் கதவைத் திறந்து உள்ளே சென்றவுடன் முதலில் ஸ்மிரிதியின் கவனத்தில் பதிந்தது “k” என்ற எழுத்து தான். நாற்காலியின் பின்புறம், டேபிளின் மேல், அலங்கார விளக்குகள், ஸால்ட், பெப்பர் ஹொல்டர், டிஷ்யு பேப்பர் ஹொல்டர் என்று சகல இடத்திலும் சின்னது, பெரிதுமாக ஒரே “k” மயாமாக இருந்தது. முழு உணவகமும் “k”  வடிவில் வடிவமைக்கப்பட்டிருந்தது.   
அந்த நேரத்தில் இரண்டு, மூன்று டேபில்களில் மட்டும் ஆட்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். எங்கே உட்காருவது என்று அவர்கள் யோசித்து கொண்டிருக்கும் போது உணவகத்தின் மறு கோடியிலிருந்தக் கதவை திறந்து கொண்டு வந்த இளைஞன் மனுவை நோக்கி கை அசைத்தான்.  அவனைப் பார்த்து,”ஹாய்” என்று சொல்லி ஸ்மிரிதியுடன் அவனை நோக்கிச் சென்றான் மனு.
“மேம் வெல்கம் டு கரன்’ஸ..வெல்கம் ஸர்.” என்று அவர்கள் இருவரையும் வரவேற்றான் அந்த இளைஞன்.
“கரன்..ஷீ இஸ் ஸ்மிரிதி..மை வைஃப் டூ பி.” என்றான் மனு.

Advertisement