Advertisement

ஸ்மிரிதியின் மனு – 25
ஸ்மிரிதி, மீரா  இருவரையும் நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தது மீராவின் ஃபோன்.
அவர் ஃபோன் அழைப்பை ஏற்று,”என்ன டா? சொல்லு.” என்றார் மீரா.
உடனே அழைத்திருப்பது கபீர்தான் என்று கண்டு கொண்டாள் ஸ்மிரிதி.  கபீர் அழைத்தான் என்றால் அதற்குமுன் மனு அவனை அழைத்திருப்பான் என்று யுகித்தாள்.  அவள் தில்லி வந்ததிலிருந்து அதுதான் வழக்கமாக நடந்து வருகிறது.  அவளிடம் நேரடியாக மனு பேசுவதேயில்லை.  அவளால் இப்போது சாதாரணமாக பேச முடிந்தாலும் அவளும் பிரேமாவைத் தவிர வேறு யாருடனும் ஃபோனில் பேசவில்லை. 
“நிஜமாவா..மாப்பிள்ளையே உன்கிட்ட சொன்னாரா?” என்று கபீரிடம் கேட்டுக் கொண்டிருந்தார் மீரா. அவர் ஃபோனில் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு கொள்ளாமல் அவளுடை ஸுவட்டர், ஸாக்ஸ், கிளவுஸ் என்று கழட்டி வைத்திருந்த அனைத்தையும் அணிய ஆரம்பித்தாள் ஸ்மிரிதி. அவள் அணிந்து முடித்த போது மீராவின் ஃபோன் பேச்சும் முடிந்திருந்தது.
“ஸ்மிரிதி” என்று சந்தோஷமாக அழைத்தபடி அவளை அணைத்துக் கொண்டார் மீரா.
“என்ன ஆன்ட்டி?’
“வெட்டிங்”
யாருக்கு என்று ஸ்மிரிதி கேட்கவில்லை.  அவளை சந்திக்க வரும் கார்மேகம் மனுவை மாப்பிள்ளையென்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வார்த்தைகளால் வலிமைப்படுத்தி அவர்கள் உறவை உறுதிபடுத்தி கொண்டிருந்தார்.
“எப்ப ஆன்ட்டி?”
“இரண்டு, மூணு தேதி சொல்லியிருக்காங்க மாப்பிள்ளை வீட்லே..உன் சௌகரியம் பார்த்து ஃபிக்ஸ் செய்யலாம்னு மாப்பிள்ளை இப்பதான் கபீர்கிட்ட சொல்லியிருக்காரு..எல்லாம் தேதியும் அடுத்த இரண்டு வாரத்துக்குள்ள.” என்றார் மீரா.
அப்போது ஸ்மிரிதியின் ஃபோன் அழைக்க, அழைத்தது சுசித் ரா. மனுதான் அவளுடைய வருங்காலம் என்று தெரிந்தவுடன் அவளின் நட்பு வட்டம் அதை அப்படியே ஏற்று கொண்டது. முன்பே அவர்களுக்கு ஏன் தெரியப்படுத்தவில்லை, பகிர்ந்து கொள்ளவில்லை என்ற கேள்விகள் அவர்களை அலைகழித்து கொண்டிருதாலும் அதற்கு பதில் சொல்லும் நிலையில் ஸ்மிரிதி இல்லாததால் நால்வரும் சரியான வாய்பிற்காகக் காத்து கொண்டிருந்தனர்.
“சொல்லு சுசி.” என்றவுடன்,
“ஃப்ரியா இருக்கியா? வீடியோ கால் பண்றேன்.” என்றாள் சுசித் ரா.
“மீரா ஆன் ட்டியோட உட்கார்ந்துகிட்டிருக்கேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“கிரெட்.” என்று சொல்லி வீடியோ காலில் வந்தாள் சுசித் ரா.
பெங்களூரில் சில வாரங்களுக்கு முன் நேரில் பார்த்தபோது இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவாக தென்பட்டாள் சுசித் ரா.
“என்னைப் பார்க்கறத்துக்குதான் வீடியோ அழைப்பா?” என்று ஸ்மிரிதி கேட்க,
“யெஸ் அண்ட் நோ..உன்னைப் பார்க்கறத்துக்கும்..நீ புடவைங்களைப் பார்க்கறத்துக்கும்.” என்றாள் சுசித் ரா.
“புடவையா?’
“யெஸ்..உன் கல்யாணப் புடவையை செலக்ட் செய்யதான் இந்த வீடியோ கால்.” என்றாள் சுசித் ரா.
“உன்கிட்ட கல்யாணப் புடவையைப் பற்றி யார் பேசினாங்க?’ என்று ஸ்மிரிதி கேட்க,
“உன் மாமியார்.” என்று ஸ்மிரிதிக்கு அதிர்ச்சி கொடுத்தாள் சுசித் ரா.
“சிவகாமி ஆன் ட்டியா?” என்று ஸ்மிரிதியும்.
“சம்மந்தி அம்மாவா?” என்று மீராவும் ஒரே சமயத்தில் கேட்க,
“யெஸ்..எனக்கும் ஸேம் ரியக்‌ஷன்…காலைலே ஃபோன் வந்திடுச்சு..உங்கம்மாகிட்டேயிருந்து என் நம்பர் வாங்கியிருக்காங்க…என்னென்ன கலர்னு சொல்லிட்டாங்க..அதுலேர்ந்து செலக்ட் செய்ய வேண்டியது உன் வேலை.” என்றாள் சுசித் ரா.
“சரி..எல்லாத்தையும் எடுத்து போடு.” என்று சொன்ன ஸ்மிரிதி நெருடலாக உணர்ந்தாள்.  அவள் தில்லி வந்தபின் ஃபோனிலோ, நேரிலோ அவளிடம் பேச சிவகாமி முயற்சிக்கவில்லை.  அவர் சம்மதித்தபின் தான் கல்யாணம் நடக்கிறது என்று பிரேமா மூலம் தெரிய வந்தாலும் மனுவை மாப்பிள்ளையாக முழுமனதாகக் கார்மேகம் ஏற்று கொண்டது போல் அவளை சிவகாமி மருமகளாக ஏற்று கொள்ளவில்லையோ என்று கேள்வி அவளுள் எழுந்திருந்தது. அந்தக் கேள்விக்கு அவள் மாமியாரைத் தவிர வேறு யாரும் திருப்தியாக பதில் அளிக்க முடியாது. 
 சுசித் ரா காண்பித்த புடவைகள் அனைத்தும் மஞ்சள், நீலம், அரக்கு வண்ணத்திலிருந்தன.  ஜரிகை வேலைப்பாடு அதிகமில்லாமல் ஸிம்பிலாக அரக்கு வண்ணத்தில் இருந்த சேலையைத் தேர்ந்தெடுத்தாள் ஸ்மிரிதி.
“வேற எதுவும் பிடிக்கலையா?” என்று சுசித் ரா கேட்க,
“மற்றது எல்லாம் உன் கடையோடது கிடையாது..வெளிலேர்ந்து வரவழைச்சியா?” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“ஆமாம்.. அரக்கைத் தவிர வேற டிரெடிஷனல் கலர் காம்பினேஷன் நான் வைச்சுக்கறதில்லே..அரக்கு ஆல்டைம் ஃபெவரேட்..அவுட் ஆஃப் பேஷனாகாது…ரிசெப்ஷனுக்கு என்ன போட்டுகணும்னு நினைக்கற..புடவையா இல்லை வேற ஏதாவதா?”
“அதுக்கு என் மாமியார் என்ன சொன்னாங்க?”
“அவங்க ரிசெப்ஷன் பற்றி பேசலே..கல்யாணத்துக்குதான் புடவை கலர் சொன்னாங்க.” என்றாள் சுசித் ரா.
“பிளவுஸ் பற்றி எதுவும் சொல்லலேயா என் மாமியார்?” என்று கரெக்டான கேள்வியைக் கேட்டாள் ஸ்மிரிதி. 
“துணியை மிச்சம் பிடிக்காம எல்லாத்தையும் யூஸ் செய்ய சொன்னாங்க.” என்று சொல்லி உரக்கச் சிரித்தாள் சுசித் ரா.
“நீ என்ன சொன்ன?’என்று ஸ்மிரிதி கேட்க,
“உன் விருப்பம் போலதான் செய்வேன்னு சொன்னேன்.” என்றாள்.
“என் மாமியார்கிட்ட என்னை மாட்டி விட்டிட்டியா?’ என்று ஸ்மிரிதி சிரித்துக் கொண்டே கேட்க,
“அவங்க உன்கிட்ட மாட்டிகிட்டாங்க..மனு நம்ம கூட்டத்திலே மாட்டிக்கிட்டான்.” என்று பதில் சொன்னாள் சுசித் ரா.
“மஞ்சு நாத்தான் நம்ம கூட்டத்திலே புதுசா மாட்டிகிட்டான்..மனுவுக்கு நாம யாரும் புதுசு இல்லை.”
“ஸ்மிரிதி..வேணாம் வேற பேசுவோம்..இப்ப எந்தப் புடவைப் பிடிச்சிருக்குணு சொல்லு.” என்று காட்டமாகப் பேசினாள் சுசித் ரா.
“அரக்கு கலர் எனக்கு ஒகே..ஆன் ட்டிகிட்டேயும் சொல்லிடு.” என்றாள் ஸ்மிரிதி.
“ஃபைன்..ரிசெப்ஷனுக்கு என்னால முடியாது ஸ்மிரிதி….அதைப் பற்றி மெஹக் உன்கிட்ட பேசுவா.”
சுசித் ரா அவளின் உடல் நிலைக் காரணமாக மறுக்கிறாள் என்று நினைத்த ஸ்மிரிதி,“சரி ரிசெப்ஷனுக்கு அவகிட்ட சொல்றேன்.” என்றாள்.
“அப்ப நான் தில்லிலே உட்கார்ந்துகிட்டு என்ன செய்ய போறேன்?” என்று  இடையில் புகுந்து கேட்டார் மீரா.
“என்னை கவனிச்சுக்க உங்க ஹோட்டலை ரெடி செய்து வைங்க..என்னை நல்லா கவனிக்கலே டிரிப் அட்வைஸர்ல உங்க ஹோட்டலுக்கு அட்வர்ஸ் ரேட்டிங் கொடுத்திடுவேன்.” என்று மீராவை மிரட்டினாள் சுசித் ரா.
“எப்படி உன்னோட சமாளிக்கறாரு மஞ்சு நாத்?” என்று விசாரித்தார் மீரா.
“விவரம் தெரியாம மாட்டிக்கிட்டாரு ஆன் ட்டி.” என்பதோடு நிறுத்தாமல் அந்த வரிசைலே இப்ப வம்பு, தும்பை தீர்த்து வைக்கற வக்கீலும் சேர்ந்திட்டாரு.” என்று சொல்லிக் கண்ணைச் சிமிட்டினாள் சுசித் ரா.
“மனு மாப்பிள்ளை அப்படியெல்லாம் அப்பாவின்னு சொல்ல முடியாது..கபீர்கிட்ட அதிகாரமாதான் பேசறாரு….அவரு கட்டளையெல்லாம் கபீர் மூலம் தான்..ஸ்மிரிதிதான் பாவம்..அவகிட்ட ஒரு வார்த்தை நேரடியா பேச வக்கீலுக்கு எதுக்கு தயக்கம்னு தெரியலை..இப்ப ஸ்மிரிதி நல்லாதான் பேசறா..நானும், அவளும் தினமும் கொஞ்ச நேரம் வெயில்லே உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கோம்..இப்பவும் அதுதான் செய்துகிட்டிருந்தோம்..நீ கால் செய்திட்ட.” என்றார் மீரா.
“இரண்டு பேரும் விவரமானவங்க..பக்கத்திலே இருந்த எங்களுக்கு விவரம் தெரியாம இப்படியொரு கனெக்‌ஷன்..பேசாமேயா வந்திருக்கும்..பெங்களூர் வந்திட்டு பூனையாட்டம் சத்தமேயில்லாம போன திருடி இவ ..அங்க தில்லிலே மெஹக் ரூம்ல இரண்டு பேரும் அப்படி சண்டைக் கோழிங்களாட்டம் ஒரே சவுண்ட்..
எங்க இரண்டு பேருக்கும் இப்பவும் புரியலே இதுங்க இரண்டும் எப்படி சேர்ந்திச்சுங்கன்னு? வக்கீலுக்கும், இவளுக்கும் வைச்சிருக்கோம்..வரோம் தில்லிக்கு..இவ கதை அத்தனையும் வெளியே விடறோம்..அப்ப தெரியும் வக்கீலுக்கு அவரையே இவ எப்படி கேஸாக்கிடுவான்னு.” என்று போலி வன்மத்துடன் சுசித் ரா ஸ்மிரிதியை கேலி செய்ய, ஸ்மிரிதியோ ஸீரியஸாக புல் வெளியை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.
ஸ்மிரிதியைப் பார்த்துக் கொண்டிருந்த மீராவிற்கு அவளின் மன நிலைப் புரியவில்லை.  அவருடனும், சுசித் ராவுடனும் சற்றுமுன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த ஸ்மிரிதி திடீரென்று ஏன் அமைதியானாள் என்று புதிராக இருந்தது.  அவளின் யோசனையிலிருந்து ஸ்மிரிதி மீளவில்லை என்றுணர்ந்த மீரா,
“சுசி..அவ உன்னோட அப்பறம் பேசுவா ஒகே..டேக் கேர் பேட்டா.” என்று கூறி வீடியோ இணைப்பைத் துண்டித்தார்.
“என்னாச்சு ஸ்மிரிதி? உடம்பு ஏதாவது செய்யுதா? ஆஸ்பத்திரி போய் செக்-அப் செய்துகலாமா? என்று கேட்டார்.
மீரா அப்படி கேட்டவுடன் தான் அவளது மௌனத்தை ஸ்மிரிதி உணர்ந்தாள்.  
“ஆஸ்பத்திரியெல்லாம் வேணாம் ஆன் ட்டி..நல்லா இருக்கேன்..யோசிச்சுகிட்டிருக்கேன் ஆன் ட்டி..எப்ப வீட்டுக்குப் போகலாம்னு..அப்பாகிட்ட இன்னைக்குப் பேசறேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“என்ன டா அவசரம்? இந்த வாரக் கடைசிலேப் போகலாமே.” என்றார் மீரா.
“இல்லை ஆன் ட்டி..அப்பாவோட பேச வேண்டியது இருக்கு..அம்மா தில்லி வர போறாங்க.” என்று காரணத்தை விளக்காமல் கோடிட்டுக் காட்டினாள் ஸ்மிரிதி.
“நீ உங்கம்மாவைப் பற்றி கவலைப்படாதே..அவங்க பிரண்டுதான் அவங்களோட சம்மந்தி ஆகப் போறாங்க அதனால பிரச்சனை எதுவும் இருக்காது.” என்று எல்லாரும் சொல்லுவது போல் சொன்னார் மீரா.
ஆனால் ஸ்மிரிதிக்குதான் தெரியும் சினேகிதி சம்மந்தியாக மாறுவதில் இருந்த, இருக்கும் சிக்கல்கள். இரண்டு சினேகிதிகளைப் பற்றிய கவலைகள் அவளை கரையான் போல் சாப்பிட்டுக் கொண்டிருந்தன.  அவள் கல்யாணத்திற்காகத் தில்லி வரும் பிரேமா எந்தவித உடல நல குறைவோ, மனக் குறையோ இல்லாமல் பெங்களூர் திரும்பி போய் சேரும் வரை அவளுக்கு இருப்புக் கொள்ளாது.  அதே போல் சிவகாமியின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளாத வரை அவளுக்குத் தூக்கம் வரப் போவதில்லை.
இரண்டையும் எப்படி செயல்படுத்துவது என்று யோசனையானது ஸ்மிரிதிக்கு.  இன்னும் இரண்டு வாரத்திற்குள் திருமணமென்றால் பிரேமாவின் ப்ரோகரமை சுசித் ரா, மஞ்சு நாத்துடன் சேர்ந்து திட்டமிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.  அப்படி செய்தால் தாய், மகள் இருவருக்கும் கல்யாணத்திற்கு முன்பு தனிமைக் கிட்டாது என்று தெரியும். ஆனால் அதைத் தவிர வேறு வழியில்லை என்றும் உணர்ந்தாள். 
“ஆன் ட்டி..நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கறேன்.” என்று சொல்லி மீராவின் பதிலை எதிர்பார்க்காமல் அவளறைக்குச் சென்றாள் ஸ்மிரிதி.
மனுவை மாப்பிள்ளையாக கார்மேகம் ஏற்று கொண்டதையும், அவரே அவன் வீட்டிற்குச் சென்று அவர்களின் கல்யாணத்தைப் பற்றி பேச போகும் தகவலை ஸ்மிரிதான் பிரேமாவுடன் பகிர்ந்து கொண்டாள்.  தில்லி வந்து சேர்ந்த பின் அவளுக்கு நடந்த விபத்தை, நடக்க போகும் விவாகத்தைப் பற்றி பிரேமாவிற்கு யாரும் தகவல் கொடுக்கவில்லை என்று உணர்ந்த ஸ்மிரிதி ஒரு மதிய வேளையில் பிரேமாவிற்கு ஃபோன் செய்தாள்.
“என்ன கரெக்டா லன்ச் டயத்திலே ஃபோன் செய்திருக்க?” என்று அவள் அழைப்பை ஏற்று கொண்ட பிரேமா கேட்க,
“உங்ககிட்ட பேசணும்னு தோணிச்சு மா.” என்று சொன்ன ஸ்மிரிதியின் குரலின் சோர்வைக் கண்டு கொண்டார் பிரேமா.
“குரல் ஏன் ஒரு மாதிரியா இருக்கு? உடம்பு சரியில்லையா? வீட்லே இருக்கியா இல்லை வெளியூர்லே இருக்கியா?’ என்று கேள்விகளை அடுக்கினார்.
“கபீர் வீட்லே இருக்கேன்..உதய்பூர்ல ஒரு தீ விபத்திலே மாட்டிக்கிட்டேன்..அதுலே குரல் கொஞ்சம் பாதிக்கப்பட்டிருந்திச்சு..இப்ப நல்லா ஆயிடுச்சு.”
“என்ன ஸ்மிரிதி சொல்ற?தீ விபத்தா? எப்ப நடந்திச்சு?
“கொஞ்ச நாளாயிடுச்சு மா..இப்ப நல்லா இருக்கேன்..இங்க தில்லிலே டாக்டர்கிட்ட காட்டியாச்சு.” என்றாள்.
“ஏன் ஸ்மிரிதி எனக்கு யாரும் இதைப் பற்றி எதுவுமே சொல்லலை.” என்று பிரேமா கேட்க,
அவர் “யாரும்” என்று சொன்னது கார்மேகத்தைதான் குறிக்கிறது என்று புரிந்து கொண்ட ஸ்மிரிதி,”அப்பா வேறோரு முக்கியமான வேலைல பிஸியா இருக்காரு மா..அதான் உங்களுக்கு நானே இன்னைக்குப் ஃபோன் செய்தேன்.”
“உன் உடம்பை விட முக்கியமான விஷயம் இருக்கா?”
“இப்போதைக்கு அதுதான் ரொம்ப முக்கியமான விஷயம்..மனுவோட என் கல்யாணம்.” என்று முன்னறிவிப்பு இல்லாமல் கல்யாண அறிவிப்பை வெளியிட்டாள் ஸ்மிரிதி.
“உனக்கு மனுவோட கல்யாணமா? சிவகாமி எப்படி ஒத்துகிட்டா?
“அப்பா மட்டும் நான் மனுவைக் கல்யாண செய்துக்க விரும்பறேன்னு சொன்னவுடனே சரின்னு சொன்னாரா? மனுவும், அவன் வீடும் ஒத்துவராதுன்னு கண்டிப்பாச் சொல்லிட்டாரு..நானும் அவனைத் தவிர வேற யாரையும் கல்யாணம் செய்துக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்..இப்படியே போயிருக்கும் நான் உத்ய்பூர் போகாம இருந்திருந்தேன்னா..அங்கே நடந்ததைக் காரணம் காட்டிதான் மனு இப்ப அப்பாவை சம்மதிக்க வைச்சிருக்கான்..ஆன் ட்டியை எப்படி சம்மதிக்க வைச்சான்னு எனக்குத் தெரியலை மா.” என்றாள் ஸ்மிரிதி.
“சிவகாமி உன்கிட்ட பேசலையா?”
“என் குரல் சரியானப் பிறகு பேசுவாங்கன்னு நினைக்கறேன் மா.” என்றாள் ஸ்மிரிதி.
“என்கிட்டையும் அவ இதுவரைக்கும் பேசலை ஸ்மிரிதி..என்னவாயிருக்கும்?” என்று கவலையுடன் கேட்டார் பிரேமா.
அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை ஸ்மிரிதிக்கு. அதன்பின் ஒவ்வொரு இரவும் தாயும், மகளும் பேசிக் கொள்வது வழக்காமாகிப் போனது.  அதனால் நேற்று இரவு வரை பிரேமாவுடன் சிவகாமி பேசவில்லை என்று ஸ்மிரிதிக்குத் தெரியும்.  இன்று காலையில் கார்மேகம் அவர்கள் வீட்டுக்கு வந்து சென்ற பின் பிரேமாவுடன் சிவகாமி பேசியிருக்கிறார் என்ற முடிவுக்கு வந்த ஸ்மிரிதியால் அதற்குமேல் வெளியே உட்கார்ந்திருக்க முடியவில்லை.  அவளறைக்கு வந்தவுடன் பிரேமாவை அழைத்தாள் ஸ்மிரிதி.
ஸ்மிரிதி அவரை ஃபோனில் அழைத்த போது அன்று காலையில் சிவகாமியுடன் பேசியதைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தார் பிரேமா.
அன்று காலை எப்போதும் போல் ஷார்ட் பிரேக்கில் அவருடைய ஃபோனை செக் செய்ய அதில் சிவகாமியிடமிருந்து மிஸ்ட் கால்கள்.  ஃபோன் செய்வதா வேண்டாமென்று பிரேமா யோசித்துக் கொண்டிருக்கும் போது ஃபோன் சிணுங்க, அழைப்பது சிவகாமி என்றவுடன் அழைப்பை ஏற்று கொண்டு, ஸ்டாஃப் ரூமிலிருந்து வெளியே வந்து வராண்டவைத் தாண்டி அமைக்கப்பட்டிருந்த சிறிய தோட்டத்தில் வந்து அமர்ந்து கொண்டார்.
‘என்ன டி பிஸியா இருந்தியா? ஃபோன்  அட்டெண்ட் செய்யலை.” என்றார் சிவகாமி.
“அப்ப கிளாஸ்லே இருந்தேன்..இப்பதான் பிரேக்ல ஃபோனைப் பார்த்தேன்..உனக்கு ஃபோன் பேசணும்னு நினைச்சேன்..நீயே பேசிட்ட.” என்றார் பிரேமா.
அதற்கு மேல் சினேகிதிகள் இருவரும் எப்படி பேச்சைத் தொடர்வதென்று சங்கடத்தில் மௌனமாக இருக்க, இயல்பாய் அந்தச் சங்கடமான மௌனத்தை அதிரடியாக உடைத்தார் சிவகாமி.
“அந்த சுசித் ரா ஃபோன் நம்பரை என்னோட ஷேர் பண்ணு.” என்றார் பிரேமாவிடம்.
“சுசித் ராவோடதா? எதுக்கு?” என்று பிரேமா புரியாமல் கேட்க,
“அவதான துணிக்கடை வைச்சுகிட்டு இருக்கா..என் மருமகளுக்கு அவளுக்குப் பிடிச்ச கடைலே மூகூர்த்தப் புடவையை ஆர்டர் செய்யலாம்னு இருக்கேன்.” என்று ஸ்மிரிதியை மருமகளாக ஏற்று கொண்டதை சினேகிதிக்கு தெரிவித்தார் சிவகாமி.

Advertisement