ஸ்மிரிதியின் மனு – 24
அந்த மதிய நேரத்து வெய்யிலை அனுபவித்தப்படி புல் வெளியில் இருந்த சேர் ஒன்றில் சப்பணமிட்டு அமர்ந்திருந்தாள் ஸ்மிரிதி.  அவள் வெறும் டிராக் ஸூட்டில் இருக்க அவளெதிரே அமர்ந்திருந்த மீராவோ கைகளில் கிளவுஸ், கால்களில் ஸாக்ஸ், தலையில் மஃப்ளர், உடலைச் சுற்றி ஷால் என்று குளிரைத் தடுத்து நிறுத்த சகலமும் அணிந்திருந்தார்.
“என்ன உன் மேல போட வேண்டியதெல்லாம் சேருக்குப் போட்டு விட்டிருக்க?” என்று ஸ்மிரிதி அருகிலிருந்த சேரை சுட்டிக் காட்டினார் மீரா. அந்த சேரில் ஷால், ஸுவட்டர், ஸாக்ஸ் என்று சகலமும் குமித்து வைக்கப்பட்டிருந்தது.
“வெளிலே வந்தது வெய்யிலை அனுபவிக்க..இதையெல்லாம் போட்டுகிட்டு அதை செய்ய முடியுமா?..பத்து நிமிஷம்..அதுக்கு அப்பறம் எல்லாத்தையும் ஒண்ணு விடாம போட்டுக்கறேன்.” என்று வாக்குறுதி அளித்தாள்.
“நானும் ஒரு காலத்திலே உன்னை மாதிரிதான் இருந்தேன்..இப்ப வயசாயிடுச்சு..ஒரு தடவை போட்டுகிட்டா அவ்வளவுதான்..அப்பறம் இராத்திரிக்கு தான் அவிழ்க்கறேன்.” என்றார் மீரா.
“உங்களுக்கு வயசாயிடுச்சா? நம்பமுடியலையே..கபீருக்குத் தங்கையாட்டம் இருக்கீங்க.” என்று மீராவுடன் வாயாடிக் கொண்டிருந்தாள் ஸ்மிரிதி.
“ஸ்மிரிதி..கபீருக்கு அக்கான்னு சொன்னா ஒகே….ஆனா கபீருக்குத் தங்கைன்னு சொன்ன பாரு..ஒவர்.” என்ற மீரா..”என்னோட மருமக இரண்டு பேரும் நீ சொன்னதைக் கேட்டா உன்னை தடி எடுத்துகிட்டு அடிக்க வந்திடுவாங்க.” என்றார் மீரா.
“வரட்டும்..வரட்டும்..உங்களை சொன்னா அவங்களுக்கு என்ன வந்திச்சு..அப்படி அவங்க தடியோட வந்தா நான்  தடியன்களோட தயாரா இருப்பேன்.” என்றாள் சிரித்துக் கொண்டே ஸ்மிரிதி.
“நீ தயார் செய்ய வேணாம்…..உன்னை ஏதாவது, யாராவது சொன்னாங்க… கபீர் ஒரு தடியன் போதும்.”
மீரா அப்படி சொன்னவுடன்,”எனக்கு அவன் தடியன்னு இப்பதான் தெரிஞ்சுது ஆன் ட்டி…நான் தில்லி வரமாட்டேன்னு சொன்ன பிறகும் என்னை அதட்டி உங்க வீட்டுக்கு அழைச்சுகிட்டு வந்துட்டான்..அந்தக் கபீரை நான் எதிர்பார்க்கவே.” என்றாள் ஸ்மிரிதி.
“நிஜமாவா ஸ்மிரிதி?” என்று மீரா எதிர்பார்புடன் கேட்க,
அவன் ஏன் கேட்கிறார் என்று புரிந்து கொண்ட ஸ்மிரிதி,”நிஜம் தான் ஆன் ட்டி..அன்னைக்கு எனக்கு அவ்வளவு சந்தோஷம்..சிரிச்சுகிட்டு இருந்தேன்.”
“எனக்கும் நீ எங்க வீட்டுக்கு வந்தது சந்தோஷம் ஸ்மிரிதி…அவனா எடுக்கற முடிவுகள் அவன் தன்னம்பிக்கையைக் காட்டுது….என்னோட மற்ற பசங்களுக்கு அது தானாவே வந்திடுச்சு இவனுக்குத் தன்னம்பிக்கை தாமதமா வந்திருக்கு…இப்பவும் சில விஷயங்களுக்கு அவங்க அப்பாவோட அங்கீகாரத்தை எதிர்பார்க்கறான்.” என்றார் மீரா.
“அவன் ஒரு நாள் தனியா முடிவெடுப்பான்னு எனக்கு நம்பிக்கை இருந்திச்சு ஆன் ட்டி..ஆனா என் விஷயத்திலே அவன் வெளிப்படுவான்னு நான் நினைக்கலே.” என்றாள் ஸ்மிரிதி.
“கபீருக்கு மட்டுமில்லை எங்களுக்கும் நீ ஸ்பெஷல் ஸ்மிரிதி..பணமிருந்தும், குடும்பமிருந்தும், கூடப் பிறந்தவங்க இருந்தும் கபீர் தனி ஆனதுக்கு நாங்கதான் காரணம்னு நீ சுட்டிக் காட்டியிருக்காட்டா அவன் வாழ்க்கையும், எங்க வாழ்க்கையும் என்ன ஆயிருக்குமோ..
அங்கிளோட சேர்ந்து நானும் பிஸ்னஸைக் கவனிச்சுகிட்டு இருந்ததுன்னால கபீர் மேல கவனம் செலுத்த முடியலே..என்னோட மூணு பசங்களையும் ஒரே மாதிரிதான் வளர்த்தேன்..அதுலே கபீர் மட்டும் வேற விதமா வளர்ந்திட்டான்னு நீ சொல்லாம தெரிஞ்சிருக்காது..மற்ற இரண்டு பசங்களும் என்னையும், அங்கிளையும் எதுக்குமே எதிர்பார்க்கலை..கபீர் எங்களோட அருகாமையை எதிர்பார்த்தான்னு நீ சொல்லிதான் தெரிஞ்சுது..நல்லவேலை அன்னைக்கு நீயும், உங்கப்பாவும் அவனை உங்க வீட்டுக்கு அழைச்சுகிட்டு போனீங்க இல்லைன்னா அவன் எங்க போயிருப்பானோ?” என்றார் மீரா.
“எங்கே போயிருப்பான் ஆன் ட்டி? பீஜிகிட்டதான் போயிருப்பான்.”
“நிஜமாவா சொல்ற ஸ்மிரிதி?’ என்று இத்தனை வருடங்கள் கழித்து மீரா சந்தேகத்துடன் கேட்க,
“நிஜம் தான்..நீங்க கபீரைப் புரிஞ்சுக்கலேன்னா அவன் அவனைப் புரிஞ்சுக்கற ஆள்கிட்ட தானே போவான்..எங்க எல்லாருக்கும் அது பீஜிதான்.” என்றாள் ஸ்மிரிதி.
“பீஜி எப்படி இருக்காங்க ஸ்மிரிதி?
“நான் சமீபத்திலே அவங்களை நேர்லே பார்க்கலை.. ஜலந்தர் போயிருந்தேன் ஆனா பியாஸ் போக முடியலே…வீட்டோட தான் இருக்காங்க..நல்லா இருக்காங்க..நிறைய வெளியே வர்றதில்லை.”
“தல்ஜித்தான் எல்லாத்தையும் பார்த்துக்கறானா?”
“ஆமாம் ஆன் ட்டி.”
“அவனை உங்க ஸ்கூலுக்கு அனுப்பினதுனாலதான் உங்க எல்லாருக்கும் பீஜி கிடைச்சாங்க..அவங்களாலே எனக்கு கபீர் திரும்பக் கிடைச்சான்.” என்றார் மீரா.
மீரா சொன்னதைக் கேட்ட  ஸ்மிரிதியின் மனதில் சுசித் ராவுடனான அவளின் கடைசி சந்திப்பு புகுந்து கொண்டது.
சுசித் ராவும் அவள் பெற்றோருக்குத் திரும்ப கிடைத்தது பீஜியால் தான்.  சுசித் ராவைப் புரிந்து கொள்ள மறுத்த அவள் பெற்றோர்களால் அவளுக்கு எற்பட்ட மன அழுத்தமும் அதன் விளைவுகளும் அவளை இன்றுவரை பாதிப்பதைப் பற்றி நினைத்துப் பார்த்த ஸ்மிரிதிக்கு சுசித் ராவின் வாழ்க்கையைக் கேள்வி குறியாக்கிய அவளின் படித்த பெற்றோர்கள் கபீரைப் பெற்றவர்கள் முன் தற்குறியாக தோன்றினர்.  
“கபீர் அதிர்ஷ்டசாலி ஆன் ட்டி..உங்க அண்டர்ஸ்டாடிங்குக்கு அதிகமாக் காத்திருக்க வேண்டி இருக்கலே..உங்களுக்கும் ஒரேயொரு சந்தர்ப்பம் தான் தேவைப்படிச்சு அவனைப் புரிஞ்சுக்க.” என்று சொன்ன  ஸ்மிரிதியின் மனது அந்த நிகழ்வு ஏற்பட்ட அந்த தினத்தில் போய் நின்றது.
ஸ்மிரிதி சொன்னதைக் கேட்டு கொண்டிருந்த மீராவின் மனதும் பின்னோக்கி பயணம் செய்தது. 
ஸ்கூலிலிருந்து ஸ்ஸ்பெண்ட் செய்யபட்ட பின் ஸ்மிரிதி மறுபடியும் பள்ளிக்கு வந்த போது அவள் நண்பர்களிடமிருந்து ஒதுங்கிப் போனாள். முன்பு போல் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து வம்பு பேசுவது, விளையாடுவது, படிப்பது என்று அனைத்தும் நின்று போயிருந்தது.  சுசித் ரா, மெஹக் இருவரையும் அவள் ஒதுக்கம் பெருமளவு பாதிக்கவில்லை ஆனால் தல்ஜித், கபீர் இருவரையும் அவளின் ஒதுக்கம் பாதித்தது.  
அடுத்த பள்ளி விடுமுறையின் போது மற்ற நால்வருடன் பியாஸ் போகாமல் பள்ளியிலேயே தங்க ஸ்மிரிதி முடிவெடுத்தது பாய்ஸ் இருவரையும் குற்ற உணர்வில் தள்ளியது. கார் விபத்தினால் மாறிப் போன அவர்கள் நட்பை பழைய நிலைக்குக் கொண்டு வர பாய்ஸ் இருவரும் தனிப்பட்ட முறையில் முயற்சி மேற் கொண்டனர்.  அதன் விளைவாக ஸ்மிரிதியைப் பியாஸுக்கு அழைத்து செல்ல பீஜியே நேரடியாகப் பள்ளிக்கு வந்தார். அவருடன் பியாஸ் புறப்பட்டு சென்ற ஸ்மிரிதியும்  பீஜியின் வீட்டில் மற்ற நால்வருடன் சேர்ந்து சகஜமாக இருந்த போதும் அவர்கள் ஐவர் நடுவில் கண்ணுக்குத் தெரியாத விலகல் இருந்தது. 
அதற்கு அடுத்த வந்த பள்ளி விடுமுறையின் போது விடுமுறையைக் கழிக்க அவரவர் வீட்டிற்கு பயணம் செய்தனர் ஐவரும்.  எப்போதும் போல் கபீரும், ஸ்மிரிதியும் ஒரே இரயிலில் தில்லிக்கு வந்தனர்.
எல்லாவற்றிலும் அவ நம்பிக்கையுடன் செயல்படும் கபீர் அந்த முறை இரயில் பயணத்தின்போது ஒருவிதமான மன திடத்துடன் செயல்பட்டது ஸ்மிரிதிக்கு வித்தியாசமாக இருந்தது.  எப்போதும் தில்லி சென்றடைந்தவுடன் அவளுக்கு பை சொல்லிவிட்டு அவன் டிரைவருடன் செல்லும் கபீர் அன்று அமைதியாக அவன் ஸீட்டில் அமர்ந்திருக்க அவனுக்குப் பை சொல்லிவிட்டு அவளுக்காகக் காத்திருந்த கார்மேகத்துடன் இரயலடியிலிருந்து வெளியே வந்த ஸ்மிரிதி, திடீரென்று கார்மேகத்தின் கைகளைப் பற்றி,
“அப்பா..கபீரை அழைச்சுகிட்டு போக யாரும் வரலேயே.” என்றாள்.
“வருவாங்க மா..நானும் இப்பதான் வந்தேன்.” என்றார்.
“இல்ல பா..இன்னைக்கு அவன் இரயிலேர்ந்து இறங்கலே..இன்னும் உள்ளதான் உட்கார்ந்துகிட்டு இருக்கான்..அவன் எனக்கு முன்னாடியே வெளிய வந்திடுவான்..யாரும் வரலைன்னா கலவரமாயிடுவன்..இன்னைக்கு ரொம்ப அமைதியா உட்கார்ந்திருந்தான் பா.”
“சரி வாங்க..அவனை அவன் வீட்லே கொண்டு விடலாம்.” என்று கார்மேகமும், ஸ்மிரிதியும் மறுபடியும் அவள் வந்திறங்கிய இரயிலை நோக்கி சென்றனர்.
இரயிலே காலியாக இருக்க அவனுடைய ஸீட்டில் அதே இடத்தில் அமர்ந்திருந்தான் கபீர்.
“என்ன டா..இங்கேயே உட்கார்ந்திருக்க..யாரும் வரலேயா?” என்று ஸ்மிரிதி கேட்க,
“தெரியலை.” என்று கபீர் சொன்னவுடனேயே அவன் பொய் சொல்கிறான் என்று புரிந்து கொண்டாள் ஸ்மிரிதி.
“எங்களோட வந்திடு..நாங்க உன்னை வீட்ல விடறோம்.” என்று ஸ்மிரிதி சொன்னவுடன்.
“வேணாம்..கொஞ்ச நேரம் கழிச்சு நானே போயிடுவேன்.” என்றான் கபீர்.
“கொஞ்ச நேரம் கழிச்சு நானே வீட்டுக்குப் போயிடுவேன் என்று சொல்லாமல் நானே போயிடுவேன்.”  என்று கபீர் சொன்னது சரியாகப் படவில்லை ஸ்மிரிதிக்கு.  
“அப்பா..அவன் லக்கெஜை எடுங்க..நம்மளோட வரட்டும்.” என்றாள் ஸ்மிரிதி. அவளின் முடிவைக் கேட்டு அதிர்ச்சியான கார்மேகம்,”என்ன மா..நம்ம வீட்டுக்கா?” என்று கேட்டார்.
“முதல்ல அவனை இங்கேயிருந்து கூட்டிக்கிட்டு போகணும் பா.” என்று திடமாக சொன்ன மகளையும், கபீரையும் அவர் வீட்டிற்கு அழைத்துப் போனார் கார்மேகம்.
அடுத்து வந்த இரண்டு நாட்களில் கபீரின் உயிர்த் தோழியாகிப் போனாள் ஸ்மிரிதி. மூன்றாவது நாள் கபீரைத் தேடி அவள் வீட்டிற்கு அவன் அப்பா மிலிந்தும், அம்மா மீராவும் வந்து சேர்ந்தனர். அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தபோது கார்மேகம், ஸ்மிரிதியுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு கொண்டிருந்தான் கபீர்.
அவர்களைப் பார்த்தவுடன்,”நீங்க எதுக்கு இங்க வந்தீங்க?” என்று கத்தினான் கபீர்.
“கபீர்.” என்று அவன் அப்பா பேச்சை ஆரம்பித்தவுடன்,
“நான் இங்கேயிருந்தே ஸ்மிரிதியோட பியாஸ் போகப் போறேன்..அங்கேயிருந்து நேரா ஸ்கூலுக்கு.” என்று அவர்கள் வீட்டுக்கு போகும் ஐடியா அவனுக்கில்லை என்று தைரியமாக அறிவித்தான் கபீர்.
அத்தனை தைரியத்துடன் கபீர் பேசி அவர்கள் பார்த்ததில்லை. அவன் மனம் திறந்ததை மரியாதைக் குறைவாக எடுத்துக் கொண்டன் அவன் தந்தை,”ஏன் எங்க யாருக்கும் ஃபோன் செய்து எந்த ட் ரெயின்ல வர போறேன்னு நீ தகவல் சொல்லலே.” என்று அவர் மகனைக் குற்றவாளியாக்கினார் அந்தப் பெரிய மனிதர்.
“எங்க ஸ்கூல் லீவு விட்ட பிறகும் அவன் வீட்டுக்கு வரலேன்னு உங்களுக்கு எப்ப தெரிஞ்சுது? எங்கப்பாவே ஃபோன் செய்து சொன்னாங்க..அப்பதான தெரிஞ்சுது.” என்று இடையில் புகுந்து கபீரின் பெற்றோரைக் குற்றவாளியாக்கினாள் ஸ்மிரிதி.
அடுத்து வந்த அவர்களின் மௌனமே அவள் சொன்னது சரியென்றது.
அவரின் தவற்றை உணர்ந்த கபீரின் தாய் மீரா,“கபீர்.” என்று குற்ற உணர்வில் அழைக்க,
அப்போது ஸ்மிரிதி முற்றிலும் எதிர்பார்க்காததை செய்தான் கபீர். “ஓ” வென்று அழுது கொண்டே பக்கத்து அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான். கபீரின் அழுகை ஸ்மிரிதியின் மனதை உடைத்தது.
அவன் அழுது கொண்டு போனதைப் பார்த்த மிலிந்த்,”எப்ப பாரு எல்லாத்துக்கும் அழுகைதான்..லைக் எ பேபி….அவங்க அண்ணங்க போல தைரியம் எப்ப வர போகுது இவனுக்கு.” என்று கோபப்பட்டார்  
மிலிந்தின் கோபத்தைக் கண்டு பயப்படாமல் மீராவை பார்த்து,
“ஏன் ஆன் ட்டி இப்படி இருக்கீங்க?” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“எப்படி மா?”
“அவனைவிட பெரியவங்க இருக்கற வீட்லே அவன்தான் ஒவ்வொரு தடவையும் அவன் பயணத்தைப் பற்றி தகவல் கொடுக்கறான்..நீங்க யாரும் அவன் மேல ஆர்வம் காட்டாம அவன் முக்கியமில்லேன்னு காட்டறீங்க..
ஒவ்வொரு முறையும் அவனே ஃபோன் செய்து எந்த ட் ரெயின்னு சொன்ன பிறகுதான் வீட்லேர்ந்து யாராவது அவனை அழைச்சுகிட்டு போக வரணுமா?…இந்தமுறை அவன் வேணுமிட்டேதான் உங்க யார்கிட்டையும் சொல்லலே..
எல்லா ஊர்லேயும் ஹோட்டல் கட்டி விட்டிருக்கீங்க..அது எல்லாத்தையும் நீங்களும், அங்கிளும் வருஷத்துக்கு ஒருமுறையாவது டர்ன் போட்டுக்கிட்டு போய் பார்த்திட்டு வர்றீங்க..ஒரே ஒரு வீடு.அந்த வீட்லே கபீரைத் தவிர எல்லாரும் பெரியவங்களாயிட்டாங்க..அவனுக்கு உங்க கேர் தேவையில்லையா….இல்லே அவனும் நீங்க எந்த ஹோட்டலுக்கு போறீங்கனு பார்த்துகிட்டு அவன் டர்னுக்கு அங்க வரணுமா?” என்று ஸ்மிரிதி கேட்க,
“ஸ்மிரிதி மா..பெரியவங்ககிட்ட அப்படி பேசாதீங்க.” என்று ஸ்மிரிதியைக் கண்டித்தார் கார்மேகம்.
ஸ்மிரிதியின் கேள்வியில் கல்லாய் சமைந்தார் மீரா.
ஆனால் கார்மேகத்தின் கண்டிப்பைப் புறக்கணித்த ஸ்மிரிதி,
“ஒரு ஹோட்டல் அறையை நாம குடியிருக்கற வீட்டைப் போலப் பாதுகாப்பான இடமா, சந்தோஷத்தைக் கொடுக்கற இடமா மாத்தற திறமை உங்களுக்கு இருக்கு..உங்க ஹோட்டலுக்கு போய் என் ஜாய் செய்திட்டு அந்த சந்தோஷத்தை அவன்கிட்ட ஸ்கூல்லேப் பகிர்ந்துக்கற பசங்ககிட்ட அவன் என்ன சொல்ல முடியும்..அவன் வீட்டுலே அவனுக்கு அந்த சந்தோஷம் கிடைக்கலேன்னா.. 
அவன் லீவுக்கு வீட்டுக்கு எதுக்கு வரான் ஆன் ட்டி..உங்களோட இருக்கதான்…தனியா இருக்க இல்லை..அவன் தனியானா தப்பாயிடுவான்.” என்றாள் ஸ்மிரிதி.
அவனைப் பற்றி அவன் சொல்ல முடியாததை, சொல்லத் தயங்கியதை கபீரின் அப்பாவிற்கு, அம்மாவிற்கும் ஸ்மிரிதி எடுத்து சொன்னவுடன் அதிர்ந்து போய் அமைதியாகக் கேட்டு கொண்டிருந்தனர் இருவரும்.
அவர்களின் அமைதியைப் பார்த்து,
“ஹோட்டல் வேற, வீடு வேற..ஹோட்டல்லேத் தங்கறவங்க கெஸ்ட்..வந்து போயிகிட்டு இருப்பாங்க..உங்க ஹோட்டல்லே அறை கிடைக்காட்டா இன்னொரு ஹோட்டல்..எல்லாம் தற்காலிக ஏற்பாடுகள்..
பீஜி சொல்லுறாங்க நிரந்தர உறவுகள் உறையும் இடம் வீடுதான்னு ..
இந்தமுறை அவன் வீட்டுக்கு வர்ற விரும்பலை… அதனாலே அவனை அப்படியே விட்டிடுங்க..அடுத்த லீவுக்கு நீங்க  ஏதாவது ஸ்பெஷலாப் பிளான் செய்யுங்க..அவனும் ஸ்பெஷல்தான் ஆன்ட்டி.” என்றாள் ஸ்மிரிதி.
“பேட்டா.” என்று ஸ்மிரிதியை அவரருகே அழைத்து அணைத்துக் கொண்ட கபீரின் அம்மா, மீராவின் கண்கள் கலங்கியிருந்தன.
“நானும், அங்கிளும் இன்னைக்குதான் வெளியூர்லேர்ந்து வந்தோம்..அவனைப் பற்றி நான் இந்த மாதிரி யோசிக்கவே இல்லே..ஆன் ட்டி தவறு செய்திட்டேன் டா..இனி அப்படி நடக்காது……அவன் எப்ப வீட்டுக்கு வந்தாலும் அவன் அப்பா, அம்மா நாங்க இரண்டு பேரும் வீட்லே இருப்போம்…
அவனை இந்தமுறை நான் வற்புறுத்த விரும்பலே..அடுத்த முறை நம்ம வீட்டுக்கு நீங்க இரண்டு பேரும் சேர்ந்து வாங்க.” என்றார்.
“சரி ஆன் ட்டி..நான் கபீர்கிட்ட போறேன்.” என்று கபீர் இருந்த அறைக்கு ஸ்மிரிதி செல்ல,
சாப்பாட்டு அறையில் தனித்து விடப்பட்ட கார்மேகத்திடம்,
“உங்க பொண்ணு தப்பைச் சுட்டிக் காட்டறா, தட்டிக் கேட்கறா, திருத்திக்க சொல்றா… தகுதி, வயசு, அனுபவம் எதைப் பற்றியும் யோசிக்கலே..இந்த மாதிரி அறிவு, துணிவு, தைரியம் நான் பார்த்ததில்லை..பெரிய ஆளா வருவா.” என்றார் மிலிந்த்.
“எனக்குதான் என் தகுதி பற்றி கேள்விகள் இருக்கு..ஸ்மிரிதிக்கு அது கிடையாது..அவ எல்லாத்துக்கும் தகுதியானவள்னு அவளுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை..அந்த நம்பிக்கை சில சமயம் பிரச்சனேலேக் கொண்டு போய் விடுது..நீங்க சொல்ற அதே துணிவும், தைரியமும்தான் அறிவைத் தாண்டி வேண்டாத பழக்கத்தையும், வழக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கு..
நான் அவ வயசுலே எல்லா இடத்துக்கும் நடந்துதான் போயிருக்கேன்..முதன்முதலா சொந்தமா கார் வாங்கினவுடனே எனக்குள்ள பயம்..ஓட்ட முடியுமான்ங்கறதைவிட எனக்கு காரெல்லாம் ஒத்துவருமான்னு..ஆனா என் பொண்ணுக்கு அதெல்லாம் இல்லை..காரை வீட்டுக்கு எடுத்திட்டு வந்த முதல் நாளே டிரைவர் ஸீட்டிலே உட்கார்ந்துகிட்டா..தகுதி பற்றியெல்லாம் யோசிக்கலே..அவளோட அந்த தைரியம், துணிவு எனக்குப் பிடிச்சிருந்திச்சு..அதனாலதான் அவளுக்குக் கார் ஓட்ட கத்து கொடுக்க சொன்னேன்..
விளையாட்டா ஓட்ட கத்துகிட்டா.. அவளுக்கு நான் சொன்ன சில கண்டிஷனை மனசுலே வைச்சுகாம ஸ்கூல்லேக் காரை ஓட்டி, மரத்திலே மோதி, ஸஸ்பெண்ட் ஆகி வீட்லே இருந்தா..அதுக்கு பிறகு நான் சொல்றவரைக்கும் அவ காரைத் தொடக் கூடாதுன்னு சொல்லிட்டேன்..அது அவளுக்கு ஸ்கூல் கொடுத்த தண்டனையைவிட பெரிய தண்டனை..எனக்கும் தண்டனை கிடைச்சிருக்கணும்..அவ வயசுக்கு முதல்லே கார் ஓட்ட கத்து கொடுத்திருக்ககூடாது..முதல் தப்பை செய்தது நாந்தான்.” என்றார் கார்மேகம்.
ஸ்மிரிதியின் கதையை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
“எங்ககிட்ட கபீர் இதெல்லாம் சொல்லவேயில்லை…எங்களுக்குத் தல்ஜித், சுசித் ரா, மெஹக் மூணு பேர் குடும்பம் பற்றி தெரியும்….அவங்கெல்லாம் அவனோட முதல்லேர்ந்து பிரண்ட்ஸ்..,ஸ்மிரிதியைப் பற்றி இப்ப இரண்டு வருஷமாதான் கேள்விப்படறோம்.” என்றார் மிலிந்த்.
“எனக்கும் அவ பிரண்ட்ஸ் பற்றி நிறைய தெரியாது..என் மனைவிக்குதான் தெரியும்..இப்ப என் மனைவி என்கூட இல்லே..நான் சமீபத்திலே விவாகரத்தானவன்..ஸ்மிரிதி அவங்க அம்மாவோட பெங்களூர் போகாம என்னோட இருக்க விருப்பம்னு சொல்லிட்டா..அதனாலே ஸ்கூலேர்ந்து அவ லீவுலே வீட்டுக்கு வரும்போது நானும் அதுக்கு ஏத்த மாதிரி என் வேலைகளை மாற்றிகிட்டு அவளோட இருக்கேன்..
அப்படி எனக்கு சரிப்படலேன்னா இங்க அவளை வேலைகாரங்களோட விடணும் இல்லை அவளை அவ அம்மாகிட்ட அனுப்பணும்..அவ அம்மா ஒரு ரெஸிடென்ஷியல் ஸ்கூல்லே டீச்சரா வேலைப் பார்க்கறாங்க..அங்கே ஸ்மிரிதிக்கு சரிப் படாது…போனமுறை லீவுக்கு ஸ்மிரிதி தெராதூன்லேயே இருந்துக்கறேன்னு சொல்லிட்டா..எனக்கு அவளை ஸ்கூல்லே விட மனசு இல்லை அதே சமயம் வேற ஏற்பாடும் செய்ய முடியலே..அப்பதான் ஸ்மிரிதியை இனி லீவுக்குப் பியாஸ்க்கு அனுப்பி வைக்கணும்னு பிஜீ என்கிட்ட கேட்டுகிட்டாங்க…நானும் சரின்னு சொல்லிட்டேன்.” என்றார் கார்மேகம்.
கார்மேகத்தின் கதையைக் கேட்டவுடன்,
“ஸ்மிரிதியைப் பற்றி இனி நீங்க கவலைப்பட வேணாம்..இன்னைலேர்ந்து அவ எனக்கும் பொண்ணு.. தில்லிலே அவளுக்கு இன்னொரு வீடு எங்க வீடு.” என்றார் கபீரின் தந்தை மிலிந்த். அப்படிதான் கபீரின் பெற்றோர் மிலிந்த், மீரா தம்பதியர் ஸ்மிரிதி கார்மேகத்தின் வாழ்க்கையில் நுழைந்தனர்.
பழைய நிகழ்வுகளை நினைத்து பார்த்த ஸ்மிரிதிக்கு எதற்கெடுத்தாலும் அழுது கொண்டிருந்தவன் இன்று அதட்டுபவனாக மாறியிருப்பது அவ(ன்) நம்பிக்கை அவன் தன்னம்பிக்கையாக மாறியிருப்பதை அவளுக்கு உணர்த்தியது.