Advertisement

ஸ்மிரிதியின் மனு – 22
“மனு” என்று ஒரே வார்த்தையில் அதிர்ச்சியிலிருந்து வெளி வந்த சிவகாமி ஆட்சேபிக்க, நாதனோ அமைதியாக இருந்தார்.
“எனக்கு ஸ்மிரிதிதான் முக்கியம் மா..அதை என் மாமனார் புரிஞ்சிகிட்டாரு..நீங்களும் புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கறேன்..அவரு நாளைக்கேகூட நம்ம வீட்டுக்கு வந்து கல்யாணம் பேசியிருக்கலாம் ஆனா ஸ்மிரிதிக்குச் சின்ன அக்ஸிடெண்ட்..அவளுக்குச் சரியான பிறகு நம்ம வீட்டுக்கு அங்கிள் வருவாரு.” என்றான் மனு.
“ஸ்மிரிதிக்கு அக்ஸிடெண்டா? “என்ன டா ஆச்சு அவளுக்கு? காரை வேகமாக ஓட்டி எங்கையாவது மோதிட்டாளா?” என்று பதட்டமாகப் பழையக் கதையைப் போலவா என்று கேட்டார் சிவகாமி.
சிவகாமி கேள்வியில் கோபமடையாமல் ஸ்மிரிதியிடமிருந்து தகவலில்லை என்று கேள்விப்பட்டவுடன் அவனும் அதேபோல தானே நினைத்தான் என்று உணர்ந்ததால் அவன் அம்மாவிற்குப் பொறுமையாக விளக்கினான் மனு.
“இல்லா மா..கார் விபத்து இல்லே..தீ விபத்து..உதய்ப்பூர் பக்கத்திலே அவ வேலை செய்துகிட்டிருந்த இடத்தில தீ விபத்து ஏற்பட்டிருக்கு..ஸ்மோக் இன்ஹலேஷன் ஆனதாலே அவ குரல் பாதிச்சிருக்கு….
கொஞ்சம் நேரம் முன்னாடி கார்மேகம் அங்கிள் எனக்கு ஃபோன் செய்து ஸ்மிரிதிகிட்டேயிருந்து மூணு நாளா தகவல் இல்லை..எனக்கு ஏதாவது தெரியுமானு விசாரிச்சாரு..நானும், அவளும் பேசிக்கிட்டு இரண்டு வாரமாயிடுச்சுன்னு சொன்னேன்..அதுக்கு அப்பறம் ஒரு வக்கீலா அவருக்கு ஆலோசனைக் கொடுத்தேன்..இன்னைக்கு இராத்திரிகுள்ள தகவல் தெரியலேன்னா நாளை காலைலே ஹெபியஸ் கார்பஸ் ரிட் ஃபைல் பண்ண சொன்னேன்..அவரு அதைக் கேட்டு கொஞ்சம் கலவரமாயிட்டாரு..அவ காணாம போனதுக்கு அவருதான் காரணமா இல்லை ஸ்மிரிதியே காரணமான்னு தெரியாம குழப்பத்திலே இருந்தாரு..
அவரோட ஃபோன் அழைப்பைக் கபீர் தவிர்க்கிறான்னு அவர் சொன்னவுடனே எனக்கு அவன் மேலே சந்தேகம் வந்திச்சு..சரி நானே விசாரிச்சு அவருக்கு தகவல் சொல்றேன்னேன்..
கபீர்கிட்ட ஃபோன்லேப் பேசினபோது அவன் என்கிட்ட விஷயத்தைச் சொன்னான்..நான் அதை அங்கிள்கிட்ட சொல்லிட்டேன்.. இதுக்கு மேல ஸ்மிரிதி விஷயமா அவரு என்கிட்ட பேசணும்னா நான் அவளோட கணவனா இருந்தாதான் முடியும்னு அவர்கிட்ட கண்டிப்பா சொல்லிட்டேன்.” என்றான் மனு.
“என்ன டா சொல்ற? அவர்கிட்டயேவா? நேரடியாவா?” என்று நம்பமுடியாமல் சிவகாமி கேட்க,
“ஆம்மாம்..உங்ககிட்ட இப்ப சொன்னது போலதான் அவர்கிட்டயும் சொன்னேன்..அவரு பொண்ணுக்கு நான் வாழ்க்கைத் துணையா இருந்தாதான் அவ இழுத்துகிட்டு வர்ற வம்பை வீட்டு வாசல்லையே வாட்ச்மேனா தடுத்து நிறுத்து முடியும் இல்லை கோர்ட் வாசலுக்கு வக்கீலா கொண்டு போகமுடியும்னேன்..
அந்த இரண்டையும் எங்களுக்குள்ள கணவன், மனைவின்னு உறவு இருந்தாதான் நான் உரிமையோட செய்யமுடியும் இல்லைன்னா ஸ்மிரிதி என்னைய அவகிட்ட சேர்க்க மாட்டா அப்ப அவ சிக்கலைத் தீர்க்க காசுக்கு வாட்ச்மனா, வக்கீலாக் கடமையை நிறைவேத்தறங்களைத் தேடிப் போகணும்னேன்.” என்றான் மனு.
மனுவின் விளக்கத்தைக் கேட்டு கொண்டிருந்த சிவகாமியின் மனது அவன் திருமணத்திலிருந்து ஸ்மிரிதியின் தீ விபத்திற்குத் தாவியது.
“தீ விபத்தா? என்னடா சொல்ற? ஸ்மிரிதிக்கு ஒண்ணும் ஆகலே இல்லே? நல்லா விசாரிச்சியா டா? நீ அவகிட்ட பேசினியா?  அங்க டாக்டர் என்ன சொன்னாங்க? அவ பேசறத்துக்கு இன்னும் எத்தனை நாள் ஆகும்?  எத்தனை நாள் அங்க இருக்கணும்?  எப்ப அவ தில்லி வர முடியும்?” என்று கேள்விகளை அடுக்கினார் சிவகாமி.
“அம்மா..ஸ்டாப்…அவ உங்க சினேகிதியோட பொண்ணு..நீங்க தாராளமா அங்கிள்கிட்ட பேசி இந்தக் கேள்விங்களுக்குப் பதில் தெரிஞ்சுக்கலாம்.” என்றான் மனு.
“நான் கேட்டா கார்மேகம் பதில் சொல்லுவாராடா? என்று சந்தேகத்துடன் சிவகாமி கேட்க,
“அங்கிள் கிட்டேயிருந்துப் பதில் வேணும்னா சம்மந்திங்கற முறைலே கேளுங்க உங்களுக்குப் பதில் சொல்லாம அவராலேத் தப்பிக்க முடியாது.” என்று சிவகாமியை உசுப்பேற்றினான் மனு.  ஆனால் மனுவின் உந்துதலில் உணர்ச்சிவசப்படாமல் உஷாரானார் சிவகாமி.
“அவருக்கு நீ தகவல் கொடுத்திருக்க..நான் உன்கிட்ட கேட்காம அவர்கிட்ட கேட்டு அதே தகவலைத் தெரிஞ்சுக்கணுமா?” என்று மகனை மடிக்கிப் பேசினார் சிவகாமி.
“தெரியுது இல்லே..என்கிட்டேயிருந்துதான் விஷயம் வெளியே போகுதுன்னு..அப்பறம் எதுக்கு அத்தனை கேள்வி..உங்க கேள்வி எல்லாத்துக்கும் என்கிட்ட பதில் கிடையாது.” என்று கறாராக பேசி சிவகாமியைக் குழப்பினான் மனு.
அதுவரை அவர்கள் உரையாடலை மௌனமாகக் கேட்டு கொண்டிருந்த நாதனிடம்,“என்னங்க இவன் இப்படி பேசறான்..நான் ஸ்மிரிதியைப் பற்றி தெரிஞ்சுக்கதானே விசாரிச்சேன்.” என்று முறையிட்டார் சிவகாமி.
“உன் முடிவுக்கு அவன் விட்டிட்டான்..சாதாரணமா விசாரிக்கறையோ இல்ல சம்மந்தியா விசாரிக்கறையோ உன் இஷ்டம்.” என்று விவகாரத்திலிருந்து நழுவப் பார்த்தார் நாதன்.
“சரி டா..நீ என்ன எனக்கு சொல்றது..நானே ஸ்மிரிதிகிட்ட என்ன நடந்திச்சுன்னு கேட்கறேன்..மாமியார் கேட்டா மருமக பதில் சொல்லணும்.” என்று சிவகாமி சொன்னவுடன் அவரின் மனதில் ஸ்மிரிதியை மருமகளாக ஏற்று கொள்ள ஆரம்பித்திருக்கிறார் என்று புரிந்து கொண்ட நாதன் எந்த அளவிற்கு என்று தெரிந்த கொள்ள விரும்பி,
“மாமியாரா? எப்படியும் நாம இங்க இருக்க போகறது கொஞ்ச நாள்தான்..நீ விரும்பினது போல கோயமுத்தூர்தானேப் போக போறோம்.” என்றார்.
“நாம கோயமுத்தூர் போயிட்டா நான் மாமியார் இல்லைன்னு ஆகிடுமா? நீங்க சும்மா இருங்க..எனக்குத் தெரியும் ஸ்மிரிதியை எப்படி விசாரிக்கணும்னு.” என்று அவர் ஃபோனை எடுத்தார் சிவகாமி.
“அம்மா..அவ நல்லா இருக்கா..கபீர் அவக்கூட இருந்து பார்த்துக்கறான் மா..நீங்க ஃபோன் போடாதீங்க..அவளோட ஃபோன் டமெஜானதுனால உங்க ஃபோன் கால் போகாது.” என்று சிவகாமியின் மனமாற்றத்தைப் புரிந்த கொண்ட மனுவும் அவரிடம் ஸ்மிரிதியைப் பற்றி மேலும் பகிர்ந்து கொண்டான.
“அவ நல்லா இருக்கான்னு முதல்லே சொல்ல வேண்டியதுதானே..அப்பறம் நான் ஏன் இவ்வளவு பேச போறேன்.” என்றார் சிவகாமி.
“அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தா நானும் உங்களோட இப்படி பேசிக்கிட்டு இருப்பேனா?..இனி இதுபோல எதுவும் நடக்க வேணாம் அப்படி நடந்திச்சுன்னா அவ தனியா இல்லே நானும்கூட இருக்கேன்னு உணர்த்ததான் எங்க கல்யாணம்.” என்றான் மனு.
மனு சொன்னதைக் கேட்டு அவரின் சினேகிதியின் நினைவுக்கு வர,“ஸ்மிரிதிக்கு இப்படி ஆயிடுச்சுன்னு பிரேமாக்குத் தெரியுமா டா?” என்று சிவகாமி கேட்க,
“தெரியாதுன்னுதான் நினைக்கறேன்..கபீரைத் தவிர அவ பிரண்ட்ஸ் யாருக்கும் தெரியாது..இப்ப நம்மளைத் தவிர வேற யாருக்கும் தெரியாது..ஆன் ட்டிக்கு அங்கிள் சொல்லணும் இல்லே நாம சொல்லணும்..அப்படி ஏதாவது நாம செய்தா ஸ்மிரிதிக்குப் பதில் சொல்ல வேண்டிவரும்.” என்றான் வக்கீல்.
“என் பிரண்டுக்கு நான் தகவல் சொல்ல போறேன்..அதுக்கு நான் எதுக்கு அவளுக்கு பதில் சொல்லணும்?”  என்று பொங்கினார் சிவகாமி.
“ஐயோ அம்மா, நான் அந்த அர்தத்திலே சொல்லலே..நீங்க ஆன் ட்டிக்கு ஃபோன் போடுவீங்க உடனே ஆன் ட்டி கபீருக்கு ஃபோன் போடுவாங்க..ஸ்மிரிதிகிட்ட பேசணும்னு சொல்லுவாங்க..அப்ப அவங்க கேட்கற கேள்விகெல்லாம் ஸ்மிரிதி பதில் சொல்லணுமில்லே அதுக்கு சொன்னேன்…அவளாலலே ஒரு வாக்கியம் கூட சரியா பேச முடியலே..வார்த்தைகளுக்கு நடுவுலே கேப் விட்டுப் பேசறா.” என்று சிவகாமியை அமைதிப்படுத்தினான் மனு.
“கபீரை இதுலே நம்பலாமா டா? எதையாவது மறைச்சிருக்கப் போறான்..அவன் ஸ்மிரிதிக்கு கிளோஸ் பிரண்ட.” என்றார் நாதன்.
“கபீர் என்னோட தம்பி..அவனோட அண்ணியை நாளைக்குத் தில்லி அழைச்சுகிட்டு வர்ற பொறுப்பு அவனோடது..ஸ்மிரிதியைப் பற்றி எந்த முடிவையும் என் மாமனாரும், என் தம்பியும் என்னைய கேட்காம இனி எடுக்க மாட்டாங்க.” என்று மாமனார், அண்ணி, தம்பி என்று பேசிய மனுவை பார்த்த சிவகாமிக்குச் சித்தம் கலங்கியது. மனுவின் திடீர் குடும்பச் சித்தாந்ததைக் கேட்ட நாதனோ சிந்தைக் கலங்காமல்,
“மனு, நான் சொல்றதை செய்..இப்பவே அவனுக்குப் ஃபோன் போடு..அவன்கிட்ட ஸ்மிரிதியை ஒரு ஃபோடோ எடுத்து அனுப்ப சொல்லு..அது வந்த பிறகு உங்கம்மா பிரேமாகிட்ட பேசட்டும்..நமக்கும் கொஞ்சம் தெம்பா இருக்கும்.” என்றார்.
நாதன் ஆலோசனையைக் கேட்ட மனுவிற்கு இன்னொரு முறை கபீருக்கு ஃபோன் செய்ய தயக்கமாக இருந்தது.  கபீரைக் காரணமில்லாமல் ஸ்மிரிதி கோபித்து கொள்ளக்கூடாதென்றுதான் சற்று முன் ஃபோன் செய்து அவளிடம் மிரட்டலாகப் பேசியிருந்தான்.  அதனால் அங்கே உதய்பூரில் அவர்கள் இருவரும் எந்த மன நிலையில் இருப்பார்களோ என்ற யோசனையுடனேயே கபீருக்கு மறுபடியும் ஃபோன் செய்தான் மனு. 
அங்கே ஹோட்டல் அறையில் அமைதியாகப் படுத்து கொண்டிருந்த ஸ்மிரிதியின் முகத்தில் புன்னகை.  அதை நம்பமுடியாமல் பார்த்து கொண்டிருந்தான் படுக்கையருகே இருந்த சோபாவில் அமர்ந்திருந்த கபீர். மனுவுடன் பேசிய பின் அவள் தோழன் கபீரின் மனதைக் கரைக்க முற்பட்ட ஸ்மிரிதியிடம்,”இனி நீ ஒரு வார்த்தை தில்லி போகறதைப் பற்றி பேசின..இப்பவே ஒரு சார்ட்டர் பிளேன்ல அழைச்சுகிட்டு போயிடுவேன்.” என்று கபீர் கத்தியவுடன் முற்றிலும் அமைதியாகிப் போனாள் ஸ்மிரிதி.  அதற்கு பின் அவள் உதட்டில் சிறு புன்னகை குடியேறியது. அந்த அதிசயத்தை பார்த்து கொண்டிருந்த கபீரை அவன் ஃபோன் அழைக்க, மறுபடியும் மனு என்றவுடன் ஒரு பக்கம் பயமும் மறுபக்கம் “என்னங்க டா நடக்குது இதுங்க நடுவுலே” என்று ஆர்வமும் அவனை உந்த உடனே அழைப்பை ஏற்று,”சொல்லுங்க பையா.” என்றான் பவயமாக.
“எங்க டா இருக்க? அவ ரூம்லேயா?’
“ஆமாம் பையா.” என்றான் கபீர்.
“மறுபடியும் தூங்கிட்டாளா டா அவ?” என்று மனு கேட்க,
“இல்லை பையா..சும்மா படுத்துகிட்டுதான் இருக்கா..ஸ்பீக்கர்ல போடட்டான்?” என்று கேட்டான் கபீர்.
“வேணாம்..அவளை இப்ப ஒரு ஃபோட்டோ எடுத்து அனுப்ப முடியுமா?” என்று கேட்டான் மனு.
மனுவின் கோரிக்கையைக் கேட்டு,”லைவ் ஃபீட் பார்க்கறவருக்குப் ஃபோட்டோ எதுக்கு? என்றான் கபீர்.
“என்ன டா சொல்ற?’
“அவ இங்கே பேசறது அங்கே தில்லிலே உங்களுக்குக் கேட்குது…அதனாலதானே கரெக்டா கொஞ்ச நேரம் முன்னாடி ஃபோன் செய்தீங்க..அவ இங்கே சிரிக்கிறது உங்களுக்கு அங்கேத் தெரியுது..அதானலதானே இப்ப கரெக்டா ஃபோட்டோ கேட்கறீங்க.” என்று கேட்டான் ஸ்மிரிதி சிரிப்பால் சிந்தைக் கலங்கிப் போயிருந்த கபீர்.
“சிரிச்சுகிட்டு இருக்காளா?” என்று ஆச்சர்யம் தாங்காமல் கேட்டான் மனு.
“ஆமாம் பையா..நீங்க பேசினதிலேர்ந்து அவகிட்டே சின்ன சிரிப்புதான்.” என்றான் கபீர். ஆனால் கபீர் அறிந்திருக்கவில்லை அந்தச் சிரிப்பிற்கு காரணம் அவன் பேசியதென்று.
“டேய்..அவளை உடனே ஒரு ஃபோட்டோ எடுத்து எனக்கு அனுப்புடா.” என்று சொல்லி ஃபோன் இணைப்பைத் துண்டித்தான்.
மனுவிடமிருந்துதான் ஃபோன் என்று தெரிந்தும் அமைதியாக இருந்தாள் ஸ்மிரிதி.  கபீர் அவளை ஃபோட்டோ எடுத்த போதும் அதே அளவான புன்னகையுடன் அமர்ந்திருந்தாள்.
கபீர் அனுப்பிவிட்ட ஃபோட்டைவைப் பார்த்து உண்மையில் அதிர்ச்சியடைந்தான் மனு.  ஆனால் அதை வெளிக்காட்டாமல்,
“அப்பா, இப்ப எடுத்த ஃபோட்டோ..பாருங்க.” என்று அவன் ஃபோனை அவருக்குக் கொடுத்தான்.  நாதன் அதை வாங்குமும் மனுவின் ஃபோனை வாங்கிய சிவகாமி,”கொஞ்சம் சோர்வாதான் தெரியறா..ஆனா சிரிச்சுகிட்டுதான் இருக்கா..தீ விபத்துலே சிக்கினவ மாதிரி தெரியலேயே.” என்றார்.
“அவ தில்லி வரட்டும் மா.. ஒரு நாள் நம்ம வீட்டுக்கு அழைச்சுகிட்டு வரேன் அப்ப உங்க இஷ்டம் போல என்ன நடந்திச்சுன்னு அவளை நீங்களே விசாரிங்க” என்றான் மனு.
“வேணாம்..இப்ப அவளை நம்ம வீட்டுக்கு அழைச்சுகிட்டு வர வேணாம்..உங்க கல்யாணம் முடிஞ்ச பிறகு நம்ம வீட்டு மருமகளா அவ வரட்டும்..எனக்கு கொஞ்சம் டயம் வேணும் இந்த விஷயத்தை ஏத்துக்க…இப்ப நீ அவளை வீட்டுக்கு அழைச்சுகிட்டு வந்து நான் ஏதாவது கேட்டு அவ ஏதாவது பதில் சொல்லி அப்பறம் விபரீதமா ஏதாவது ஆயிடுச்சுனா எல்லாருக்கும் கஷ்டமாயிடும்..கல்யாணத்துக்கு அப்பறம் நான் மாமியார், அவ இந்த வீட்டு மருமக..அந்த ஸ்தானம்தான் எங்க இரண்டு பேருக்கும் மரியாதையைக் கொடுக்கும்.” என்று அவரின் தெளிவான பேச்சால் மறுபடியும் அங்கே குழப்பம் ஏற்பட்டது.
“அம்மா, அவளை உங்களுக்கு சின்ன வயசுலேர்ந்து தெரியும்..அவ ஏதாவது சொன்னா பொருட்படுத்தாதீங்க.” என்றான் மனு.
“என்னோட பிரண்டு பொண்ணா அவளை எனக்குத் தெரியும்..என் பையனோட பெண்டாட்டியா இதுவரைக்கும் நினைச்சுப் பார்த்ததில்லே..அவளுக்கும் என்னை சிவகாமி ஆன் ட்டியாதான் தெரியும்..அவளோட மாமியாராத் தெரியாது..உனக்கு இதெல்லாம் ஈஸியா இருக்குது..எனக்கு அப்படி இல்லே மனு.” என்று கவலையானார் சிவகாமி.
“சரி..உங்க விருப்பப்படியே அவ என் மனைவியானப் பிறகு நம்ம வீட்டுக்கு வரட்டும்…பிரேமா ஆன் ட்டிகிட்ட எந்தச் செய்தியை எப்ப சொல்ல போறீங்கறது உங்க விருப்பம்.” என்று சினேகிதிக்கு சந்தோஷத்தை, துக்கத்தை ஏற்படுத்தும் சங்கதியை சொல்லும் முடிவை சிவகாமியிடமே ஒப்படைத்தான் மனு.
“எனக்கு இதைப் பற்றி யார்கிட்டையும் பேச வேணாம்..பிரேமாவுக்குத் தெரிய வந்தா அவளே என்கிட்ட பேசுவா..என்னக்கு, எப்ப கல்யாணம்னு சொல்லு நாங்க வரோம்.” என்று மறுபடியும் புதிரானார் சிவகாமி.
“என்ன மா நீங்க என்னென்னமோ பேசறீங்க..இந்த மாதிரி நீங்க நினைப்பீங்கன்னா நான் எதுக்கு மறுபடியும் உங்ககிட்ட எங்க விஷயத்தை சொல்லணும்..கார்மேகம் அங்கிள் சம்மதத்தோட ஸ்மிரிதியும், நானும் கோர்ட்ல கல்யாணம் செய்துகிட்டு இருக்கலாமே..உங்க ஆசீர்வாதத்தோடதான் எங்க கல்யாணம் நடக்கணும்னு நாங்க இரண்டு பேரும் நினைக்கறோம்.” என்றான் மனு.
“மனு ப்ளீஸ் என்னை வற்புறுத்தாத..உன் கல்யாணத்தை எதிர்பார்த்தேன் ஆனா ஸ்மிரிதியோட எதிர்பார்க்கலே…இப்ப நான் என்ன யோசிக்கறேன்னு எனக்கேத் தெரியலே..
கோயமுத்தூரிலே அவ கல்யாணத்தைப் பற்றி கேட்கறச்சே அவளைப் பற்றி, அவங்க அப்பாவைப் பற்றி தெரிஞ்ச ஆளைத்தான் கல்யாணம் செய்துப்பேன்னு சொன்னா..அது நீயா இருப்பேன்னு நான் நினைக்கவே இல்லே..நீ அவ மேலே உண்மையா ஆசைப் பட்டாலும் அவளைப் பற்றி அவ குடும்பத்தைப் பற்றி நமக்கு நல்லாத் தெரியும்ங்கறதுனால அவ உன்மேல ஆசைப்பட்டிருந்தா உங்க இரண்டு பேருக்கும் சரிப்பட்டு வராது..
நாம மேலே இதைப் பற்றி பேசினோம்னா நான் ஏதாவது ஏடாகூடமா சொல்லிடுவேன் அப்பறம் நாம இரண்டு பேரும் வருத்தப்பட வேண்டிவரும்..எனக்கும், அப்பாவுக்கு உன் கல்யாண விஷயத்தை சொன்ன மாதிரி மாறன்கிட்டையும் நீயே விஷயத்தைச் சொல்லிடு.” என்று மனுவின் கல்யாண விஷயத்திலிருந்து அவரை முற்றிலுமாக விலக்கிக் கொண்டார் சிவகாமி. 
“நீங்க இரண்டு பேரும் சாப்பிடுங்க..நான் ரூமுக்குப் போறேன்.” என்று சொல்லி அந்த உரையாடலிலிருந்து அவரை விடுவித்துக் கொண்டு அவர் படுக்கையறைக்குச் சென்றார் சிவகாமி.

Advertisement