Advertisement

ஸ்மிரிதியின் மனு – 21
அவன் ஆலோசனையை மறுத்து பேசிய ஸ்மிரிதியை வழிக்கு கொண்டு வர ஒரே வழி அவளின் பொதுவழியாக அவன் மாறி கொள்ள முடிவு செய்தான். அந்த எண்ணத்தை செயல்படுத்த அடுத்து மனு அழைத்தது கார்மேகத்திற்கு.
“உங்க பொண்ணு உதய்ப்பூர்ல கபீரோட ஹோட்டலே இருக்கா..அவ சாமான் வைச்சிருந்த இடத்திலே அப்பறம் அந்த ஊர் கடைத்தெருவுலேத்  தீ விபத்து ஏற்பட்டிருக்கு..அதுலே அவளோட ஃபோன் டமேஜ் ஆயிடுச்சு….அதான் அவ உங்களுக்குப் ஃபோன் செய்யலே….
இந்த வேலையை நான் ஏன் செய்தேன்னு இப்ப என்னையே கேள்வி கேட்டுகிட்டு இருக்கேன்..இந்த மாதிரி ஸ்மிரிதியைப் பற்றி நான் தகவல் சொல்ல இல்லை கிடைச்ச தகவலைப் பகிர்ந்துக்க உங்களுக்கும் எனக்கும் நடுவுல…ஸ்மிரிதிக்கும், எனக்கும் நடுவுல என்ன இருக்கு?
உங்க பொண்ணுக்கு புருஷனாகற தகுதி எனக்கு இல்லேன்னு நீங்க நினைக்கறீங்க..உங்களுக்கு என்னுடைய மாமனார் ஆகற தகுதியில்லேன்னு எங்க வீட்ல நினைக்கறாங்க..ஆனா இன்னைக்கு நீங்க அந்த தகுதியில்லாதவன் கதவைதான் தட்டியிருக்கீங்க.. நானும் எதையும், யாரையும் பற்றி யோசிக்காம உங்களுக்கு உதவி செய்திருக்கேன்..
இப்ப சில நாட்களா நீங்க ஸ்மிரிதி விஷயத்திலே என் உதவியைக் கேட்கறீங்க..சொந்தமா இருந்தோம்ன்னா நமக்குள்ள இது சங்கடமாத் தெரியாது..உறவு இருந்திச்சின்னா இது உதவிலே சேராது…. இனி ஸ்மிரிதியோட விஷயத்திலே நான் தலையிடணும்னா அவளோட வாழ்க்கைத் துணையா இருந்தாதான் தலையிட முடியும்…அதுவும் அவ விரும்பினாதான் தலையிடுவேன்.” என்றான் மனு.
மனுவின் தெளிவானப் பேச்சில், ஸ்மிரிதியினால் அவருக்கு ஏற்படும் கவலைக்கு அவன் சொன்ன தீர்வைக் கேட்டு ஸ்தம்பித்து போனார் கார்மேகம்.  அவன் சொல்வதில் இருந்த உண்மையை உணர்ந்தவர்,
“தம்பி..எனக்கு இருக்கற ஒரே இரத்த பந்தம் அவதான்..அவளோட அப்பாவா நான் எப்பவும் இருக்க விரும்பறேன்…என் பொண்ணுகிட்டேயிருந்து என்னாலேத் தள்ளி இருக்க முடியாது…உங்களுக்கு என் பொண்ணைக் கல்யாணம் செய்து கொடுத்தா நான்தான் தள்ளி இருக்கணும்..அது என்னாலே முடியவே முடியாது தம்பி…..அதனாலதான் நீங்களும், உங்க வீடும் ஒத்துவராதுன்னு அவகிட்ட சொன்னேன்.” என்றார் கார்மேகம்.
“அங்கிள்..நீங்க கார்மேகம்..எங்கப்பா முன்னாள் கலெக்டர் தில்லை நாதன்..இதை இனிமே யாரும் மாற்ற முடியாது..ஆனா இன்னைக்கு நீங்க இருந்த மன நிலைலே உங்களுக்கு இந்த இரண்டும் நினைவுலே இல்லை..நீங்க ஸ்மிரிதிக்காகதான் என்கிட்ட பேசினீங்க..நானும் ஸ்மிரிதிகாகதான் இதை செய்தேன்..நான் கபீரோ, தல்ஜித்தோ கிடையாது கண்ணை மூடிக்கிட்டு கேள்வி கேட்காம அவ எது சொன்னாலும் செய்யறத்துக்கு, எது செய்தாலும் அதை ஏத்துகறத்துக்கு..இது நம்ம இரண்டு பேருக்கும் தெரியும்..ஸ்மிரிதிக்கும் தெரியும்..
ஸ்மிரிதியைப் பற்றி எனக்கும், என்னைப் பற்றி அவளுக்கும், எங்க இரண்டு பேரைப் பற்றி நம்ம இரண்டு குடும்பத்துக்கும் தெரியும்..இதெல்லாம் தெரிஞ்சுதுதான் நாங்க இரண்டு பேரும் கல்யாணம் செய்துக்க விரும்பினோம்..இதெல்லாம் தெரிஞ்சுதான் நீங்களும் அவளை என்கிட்டேயிருந்து ஒதுங்கி இருக்க சொல்லியிருக்கீங்க..
நான் அவளோட கணவனா இல்லேன்னா அவளே அடுத்த முறை “மனுவை எதுக்கு என் விஷயத்திலே இழுக்கறீங்கன்னு?” உங்களை கேட்பா..அவளை யாரும் கட்டுப்படுத்த முடியாது…எதுக்கும் கட்டாயப்படுத்தவும் முடியாது..ஆனா உங்களைப் போல அவளைக்கு கெட்டது எதுவும் நடக்காம நான் காபாந்து செய்யணும்னா அவளை என் கண் பார்வைல, கண்காணிப்புல வைச்சுகிட்டாதான் முடியும்.. அது நடக்க எங்க கல்யாணம் நடக்கணும்.” என்று தெரிவித்தான் மனு.
மனுவிற்கும், அவருக்கும் ஸ்மிரிதிதான் மையப்புள்ளி என்று உணர்ந்த கார்மேகம் ஒரு முடிவிற்கு வந்தார்.
“ஸ்மிரிதி தில்லி வரட்டும்..நான் உங்க வீட்ல வந்து பேசறேன் மாப்பிள்ளை.” என்று அவர்கள் கல்யாணத்திற்கு அதுவரை தடையாக இருந்தவர் தடமாக மாறினார்.
“அவளை நாளைக்கு காலைலே கபீர் தில்லிக்கு அழைச்சுகிட்டு வரான்..அவங்க வீட்டுக்குக் கூட்டிகிட்டு போகப் போறான்..நீங்க இரண்டு நாள் கழிச்சு அவளைப் போய் பாருங்க..அவளாலே இப்ப சரியா பேச முடியலே..அவளுக்கு எல்லாம் சரியான பிறகு நீங்க எங்க வீட்டுக்கு வந்து பேசுங்க.” என்றான் மனு.
“என்ன தம்பி ஆயிடுச்சு? ஏன் அவளாலேச் சரியாப் பேச முடியலே?” என்று பதட்டமடைந்தார் கார்மேகம்.
“அவளோட வோக்கல் கார்டுக்கு நச்சுப் புகையாலேப் பாதிப்பு ஏற்பட்டிருக்கு..அதனால வாய்ஸ் ரெஸ்ட் எடுத்துக்க சொல்லியிருக்காங்க டாக்டர்ஸ்.” என்றான் மனு.  ஆனால் கார்மேகம் கவலைக் கொண்டார்.
“இரண்டு தீ விபத்துன்னா சொன்னீங்க?” என்று மனுவைப் போல் அவரும் சந்தேகம் கேட்க,
“ஆமாம்..அப்படி தான் கபீர் சொன்னான்..இவ இரண்டு இடத்திலேயும் இருந்திருக்கா..மற்ற விவரம் எதுவும் எனக்குத் தெரியாது.” என்றான் மனு.
“சரி..நான் கபீர்கிட்டேயே விவரம் கேட்டுக்கறேன்.” என்றார் கார்மேகம்.
“நோ..நீங்க அவனை எதுவும் கேட்காதீங்க..கேட்கணும்னா ஸ்மிரிதிகிட்ட தான் நாம கேட்கணும்..இப்ப அவ நம்ம கேள்விகளுக்குப் பதில் சொல்ற நிலைலே இல்லே..அவ உடம்பு சரியானப் பிறகு இதைப் பற்றி அவகிட்ட பேசலாம்..ஆனா அப்பவும் அவ எதுவும் நம்மகிட்ட சொல்லுவான்னு எனக்குத் தோணலே.” என்று ஸ்மிரிதியைப் பற்றிய முடிவுகளை இனி அவர் தனியாக எடுக்க முடியாது என்று தெளிவாக அவருக்குத் தெரியபடுத்தினான் மனு.
“எனக்கு அங்கே நடந்தது என்னென்னு தெரியணும் தம்பி..அவ சரியாகற வரைக்கும் எதுக்குத் தம்பி காத்திருக்கணும்..நான் ஆள் அனுப்பி விசாரிக்கறேன்.” என்று கார்மேகம் மனுவைக் கன்வின்ஸ் செய்ய முயன்றார்.
“நானும் தான் என்ன நடந்திச்சுன்னு தெரிஞ்சுக்க ஆசைப்படறேன்..ஆனா ஸ்மிரிதி விரும்பினாதான் அவகிட்டேயிருந்து தகவல் வரும்..இப்ப இந்த தீ விபத்தைப் பற்றி வெளிலே யாருக்கும் தெரியலே..நீங்களாப் போய் விசாரிச்சு அதைப் பெரிய விஷயமாக்காதீங்க..உயிர் சேதம் இல்லாததுனாலே விஷயம் பெரிசாகலேன்னு நினைக்கறேன்..அதனால இதை இப்படியே விட்டிடுங்க..முதல்ல ஸ்மிரிதி தில்லி வரட்டும்.” என்று மாப்பிள்ளை மனு.
“சரி..நீங்க சொல்றபடியே செய்யறேன்..அவளுக்கு உடம்பு சரியானப் பிறகு நாம அவகிட்ட பேசிக்கலாம்.. நானும் உங்க வீட்டு வந்து கலெக்டர் ஐயாகிட்ட பேசறேன் மாப்பிள்ளை.” என்று இனி அவர்கள் கல்யாணத்திற்கு அவரிடமிருந்து எந்த ஆட்சேபமும் கிளம்பாது என்று மனுவிற்கு மறுபடியும் தெரியப்படுத்தினார் கார்மேகம்.
“நீங்க எங்க வீட்டுக்கு வர்றத்துக்கு முன்னாடி நானும் எங்கப்பாகிட்ட  பேசிடறேன்.” என்று மாமனாருக்கு வாக்குறுதி கொடுத்தான் மாப்பிள்ளை.
மனுவும், ஸ்மிரிதியும் பேசி முடித்த பின் அவளிடமிருந்து ஃபோனைப் பெற்று கொண்ட கபீர்,
“நான் பயந்து போயிருக்கேன் ஸ்மிரிதி.” என்றான்.
அவளிடமிருந்த் பதில் எதிர்பாக்காமல் அவனேத் தொடர்ந்தான்,
“அன்னைக்கு டி ரெயிலே நீ சொன்னதுக்கு ஒரு வார்த்தை மறுப்பு சொல்லாம உன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு என்னை உங்ககூடவேக் கூட்டிக்கிட்டு போய் உங்க வீட்லையேத் தங்க வைச்சாரு அங்கிள்…இன்னைக்கு வரைக்கும் நம்மளோட நட்புக்கு நடுவுலே அவரு வர்றதில்லே..இப்ப நான் செய்திருக்கற காரியத்திற்கு அப்பறம் என்ன நடக்குமோத் தெரியலே..
எல்லாருக்கும் நீ முக்கியம் ஸ்மிரிதி..மனு பையா சொல்றது கரெக்ட்..அங்கிள் ஃபோனை நான் அடெண்ட் செய்திருக்கணும்..அவருகிட்ட உன்னைப் பற்றி சொல்லியிருக்கணும்..
நாளைக்கு நாம இரண்டு பேரும் தில்லிக்குப் போறோம்..நேரா எங்க வீட்டுக்கு…எங்கம்மா உனக்கு வேண்டியதைச் செய்வாங்க..உன்னைக் கவனமாப் பார்த்துப்பாங்க..நீ கம்ப்ளீட் ரெஸ்ட் எடுத்துக்க……எங்கப்பாவை என்கூட அழைச்சுகிட்டுப் போய் நானே அங்கிள்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட போறேன்..அன்னைக்கு எனக்காக  நீ எங்கப்பாகிட்ட பேசின..இன்னைக்கு உனக்காக நான் உங்கப்பாகிட்ட பேச போறேன்.” என்றான்.
கபீர் சொன்னதற்கு அவள் மறுப்பைத் அவள் தலையசைவால் தெரிவித்த ஸ்மிரிதி,
“கபீர்.. நீ அப்ப இருந்த நிலை வேற, நான் இப்ப இருக்கற நிலைமை வேற…எங்கப்பாவை என்கிட்ட விடு.” என்று மெல்லிய குரலில் அதே சமயம் அவன் ஐடியாவைக் கடுமையாக மறுத்தாள்.
“எனக்கு இரண்டும் ஒண்ணாதான் தெரியுது..அன்னைக்கு எங்க வீட்ல என்னை யாரும் புரிஞ்சுக்கலே..இன்னைக்கு அதேபோல அங்கிள் உன்னைப் புரிஞ்சுக்க மாட்டருன்னு நான் நினைக்கறேன்.” என்றான் கபீர்.
பலமுறை முயன்று, அவளுடைய சக்தி அனைத்தையும் அவளின் மெல்லிய குரலில் புகுத்தி,” உன்னோட அப்பா, அம்மா இரண்டு பேரும் உன் இயல்பைப் புரிஞ்சுக்காம இருந்தாங்க..அதைச் சுட்டிக் காட்டின உடனே அங்கிளும், ஆன் ட்டியும் அதை சரி செய்ய முயற்சி எடுத்துகிட்டாங்க…
எங்கப்பாவோட இயல்பு எனக்குத் தெரியும்..என்னோடது அவருக்குத் தெரியும்..எங்கப்பாவுக்கு  என்ன நடந்ததுன்னு தெரிய வந்திச்சுன்னா நான் இங்கே திரும்பி வர முடியாதுபடி ஏதாவது செய்திடுவாரு..அதை என்னாலே ஒத்துக்க முடியாது..
இனி இங்கே செய்யறத்துக்கு என்ன இருக்குன்னு நான் யோசிக்கணும் கபீர்….எல்லாமே முடிஞ்சு போன மாதிரி இருக்கு..திரும்ப ஆரம்பிக்க கூடாதுன்னு எங்களை அடியோட அழிச்சிட்டாங்க…எனக்கு இதைப் பற்றி நிறைய யோசிக்கணும்..அதை நான் இங்க இருந்தாதான் செய்ய முடியும்…அதனால நான் தில்லி வரமுடியாது…வர மாட்டேன்.” என்று உறுதியாக சொன்னாள் ஸ்மிரிதி.
“ஸ்மிரிதி….நாம மனம் தளர்ந்து போகும் போதும் பீஜி என்ன சொல்லுவாங்க..சாப்பாடு சாப்பிட்டு முடிச்சாச்சு.. ஒரு வேலை முடிஞ்சிடுச்சுன்னு நம்ம மனசு நினைக்கும் போதுதான் நம்ம உடம்புலே அந்த உணவிலேர்ந்து சக்தியை பிரிக்கற முக்கியமான வேலை ஆரம்பமாகுது.. அதனால எந்த செயலுக்கும், செய்கைக்கும்  நாம முடிவுன்னு நினைக்கற இடம் அதோட முடிவு கிடையாது..டோண்ட் கிவ் அப்.” என்றான் கபீர்.
அவனுக்குப் பதில் சொல்லாமல் தலை குனிந்து அமர்ந்திருந்த ஸ்மிரிதியின் மௌனத்தைப் பார்த்து அவன் பேச்சை அவள் கேட்க போவதில்லை என்று உணர்ந்த கபீர்,
“சரி..நான் மனு பையாக்கு இப்பவே ஃபோன் போடறேன்.. நாளைக்கு என்கூட தில்லி வர்றத்துக்குப் பாபிக்குப் பிரியமில்லேன்னு சொல்லிடறேன.” என்றவன் ஸீரியஸாக அவன் ஃபோனில் மனுவிற்கு டயல் செய்து கொண்டிருந்தான்.  அவன் அவளை பாபி என்று சொன்னதை கேட்டு  அதிர்ச்சியுடன் தலையை உயர்த்திய ஸ்மிரிதிக்கு ஸ்பீக்கர் ஃபோனில் மனுவின் குரல் கேட்டது,
“என்ன டா?” என்று மனு கேட்க,
“மனு பையா..தில்லிக்கு வர மாட்டேன்னு ஸ்மிரிதி பாபி பிடிவாதம் பிடிக்கறாங்க.” என்று அண்ணனிடம் அண்ணியைப் பற்றி கம்பளெயண்ட் செய்தான் ஸ்மிரிதியின் ஆத்மார்த்த சினேகிதன்.
“ஃபோனை ஸீபிக்கர்லப் போடு.” என்றான் மனு.
“ஸீபிக்கர்லதான் பேசிக்கிட்டிருக்கேன்..அவ கேட்டுகிட்டு இருக்கா.” என்றான் கபீர்.
“ஒழுங்கா கபீரோட தில்லி வந்து சேரு..நீ இங்க வரலே அடுத்த ஃபோன் என் மாமனாருக்குதான்…அதுக்கு அப்பறம் உன் இடத்துக்கு என் மாமனாரும் அவரோட ஆளுங்களும் வந்திடுவாங்க..…இப்ப நான் எது கேட்டாலும் கேள்வி கேட்காம எனக்காக எதையும் செய்ய தயாரா இருக்காரு என் மாமனார்.” என்று அவனை மாப்பிளையாகக் கார்மேகம் ஏற்று கொண்டுவிட்டதை ஸ்மிரிதிக்கு உணர்த்தினான் மனு.
அவன் சொன்னதை அவள் சரியாகப் புரிந்து கொண்டாளா என்ற சந்தேகத்தைக் களைய,“என்ன சொல்ற நீ?” என்று குரலை உயர்த்தினாள் ஸ்மிரிதி.
“உன்னோட வாயைத் திறக்காம உன் தேவரோட தில்லிக்குத் திரும்பி வான்னு சொல்றேன்.” என்று சொல்லி அதற்குமேல் அவளுடன் வாதிட விரும்பாமல் ஃபோன் அழைப்பை அணைத்தான் வக்கீல்.
இரவு சாப்பாட்டிற்கு வராமல் அவனறையிலேயே முடிங்கிக் கிடந்த அவரின் மூத்த மகனை விளிக்க சென்ற சிவகாமி மனு ஃபோனில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவனைத் தொந்திரவு செய்ய விரும்பாமல் வரவேற்பறைக்குச் சென்றார். சிறிது நேரத்திற்கு பின் அவர் மறுபடியும் வந்தபோது மனுவின் அறைக் கதவருகேயே நின்று கொண்டார்.
கார்மேகத்திடம், கபீரிடம், ஸ்மிரிதியிடம் என்று மாறி மாறி பேசி முடித்த மனு,“என்ன மா?” என்று கேட்க,
“யாரு டா ஃபோன்ல..இத்தனை நேரமா பேசிகிட்டு இருக்க?” என்று விசாரித்தார்.
“நீங்க எதுக்கு இங்கே வந்தீங்க?” என்று அவர் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவர் அவனறைக்கு வந்த காரணத்தைக் கேட்டான் மனு.
அவன் கேள்வியில் கடுப்பான சிவகாமி,“சினிமா பார்க்கதான்.” என்று பதிலளித்து மனுவைக் கடுப்பாக்கினார்.
“அம்மா..சினிமாவா ஓடுது இங்க.” என்று எரிச்சலுடன் கேட்டான் மனு.
“பின்னே நான் எதுக்கு டா வருவேன்?..சாப்பாடு கடையை எத்தனை நேரம் திறந்து வைச்சுகிட்டு இருக்கமுடியும்..மூடிடட்டுமான்னு கேட்கதான்.”என்றார் சிவகாமியும் எரிச்சலுடன்.
“மாறன் வந்துட்டானா மா?” என்று மனு கேட்க,
“உன்கிட்ட தான் கேட்கணும்னு நினைச்சேன்..ஒரு ஆள் காணாம போய் எத்தனை நாள் கழிச்சு போலீஸ் கம்ப்ளெயண்ட் கொடுக்கணும்.” என்று மனுவின் கேள்விக்கு சம்மந்தமில்லாத கேள்வி கேட்டார் சிவகாமி.
“எதுக்கு மா?” என்று கேட்ட மனு,  ஒருவேளை ஸ்மிரிதியைப் பற்றிய செய்தி பிரேமா மூலம் சிவகாமிக்கு சென்றடைந்து விட்டதோ என்று சந்தேகப்பட்டான். அப்படி அடைந்திருந்தால் அவ்வளவு சாதாரணமாக அதை எடுத்துக் கொள்ள மாட்டேரே என்று யோசனையுடன் அவரைப் பார்த்தான்.
“உன் தம்பிக்காகதான் கேட்டுத் தெரிஞ்சுக்கறேன்..அவனை உங்கப்பா தண்ணி தெளிச்சு விட்டிட்டாரு..என்னாலே அப்படி இருக்க முடியலேயே..
நேத்து காலைலே வீட்டை விட்டுப் போனவன்..நேத்து இராத்திரி வீட்டுக்கு வரலே..இன்னைக்கு இப்பவரைக்கும் தகவல் இல்லே.” என்றார் சிவகாமி.
“அப்ப இன்னைக்கு இராத்திரி கண்டிப்பா வந்திடுவான் மா..ஒரு நாளைக்கு மேலே அவனை யாரு வைச்சுப்பாங்க?” என்று கேட்டான் மனு.
“ஒரு நாளுன்னு சொல்லி  ஒன்பது நாள் வெளியே இருக்கான் டா..அவன் இஷ்டம் போல.” என்று சொன்னதோடு நிறுத்தாமல், “இனி எல்லாம் உங்க இரண்டு பேர் இஷ்டத்துக்கு தான் நடக்கும் போலே.” என்று புலம்பி அவரை அறியாமலேயே மாற்றத்தை ஏற்று கொள்ள அவர் மனம் தயாராகிறது என்பதை வெளியிட்டார்.
அவர் மகன்களின் இஷ்டம் என்று சிவகாமி சொன்னதைக் கேட்டவுடன் அவன் கல்யாணத்தைப் பற்றி திரும்ப அவருடன் பேச சரியானத் தருணமது என்று உணர்ந்து,“நீங்க போய் சாப்பாடு எடுத்து வைங்க..நான் வரேன்..உங்கிட்டையும், அப்பாகிட்டையும் சில விஷயங்கள் பேசணும்.” என்று அவரை அறையிலிருந்து அனுப்பி வைத்த மனு உடனே கபீருக்கு ஃபோன் செய்தான்.
மனுவும், ஸ்மிரிதியும் பேசி முடித்த பின் அதுவரை அவன் ஃபோனிலிருந்த கவனத்தை ஸ்மிரிதி மீது திருப்பினான் கபீர்.  அவனை அவள் முறைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து,” என்ன?” என்று அவன் கேட்க,
“எப்பலேர்ந்து நீ எனக்கு தேவர் டா?” என்று கொதித்து போய் அவள் தோழனை ஸ்மிரிதி கேட்க,
“மாட்டினேன் டா.” என்று நினைத்த கபீர், ஸ்மிரிதியை எப்படி சமாளிப்பது என்று அவன் யோசித்து கொண்டிருக்கும் போது அவன் ஃபோன் அழைக்க, அதை ஏற்று,
“சொல்லுங்க பையா.” என்றான் கபீர். அதற்குபின் ஸீபிக்கர் ஃபோனை போட்டவுடன்,
”அவன் எப்ப உன் தேவரானான்னு தேவையில்லாததைக் கேட்டு நீ அவனையும், உன் தொண்டையையும் டிரபில் செய்யற..இரண்டுத்துக்கும் ஓய்வு கொடு.” என்று ஸ்மிரிதிக்கு மனு ஆணையிட,
அவனை “அது” என்று மனு சொன்னதைக் கண்டு கொள்ளாமல், ”பையா..நீங்க வக்கீலா? விஸார்டா?.” என்று வியந்து போய் அவர்கள் இடையே புகுந்தான் கபீர்.
“வாட்ச்மேன்.” என்று மனு பதில் சொன்னவுடன், 
“பையா” என்று கபீர் அலற,
“ஸ்மிரிதிக்கு..கீப்  மீ போஸ்டட் க்பீர்.” என்று கட்டளையிட்டு விட்டு  ஃபோன் இணைப்பைத் துண்டித்தான் மனு.
கபீர் ஃபோன் மூலம் ஸ்மிரிதிக்கு அவள் தில்லி திரும்புவதைத் தவிர்க்க முடியாது என்று தெரிவித்த பின் இரவு உணவிற்காக வரவேற்பறைக்கு வந்த மனு,  
“அம்மா, கார்மேகம் அங்கிள் கொஞ்ச நாள் கழிச்சு நம்ம வீட்டுக்கு வந்து உங்ககிட்டையும், அப்பாகிட்டையும் பேசறேன்னு சொல்லியிருக்காரு.” என்றான் எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல்.
ஏன், எதுக்கு என்று சிவகாமியும், தில்லை நாதனும் கேட்கவில்லை.  ஆனால் மனு அவர்கள் மௌனத்தைப் பொருட்படுத்தாமல்,
“என்னோட கல்யாணம் விஷயம் பேச என் மாமனார் வராரு.” என்றான்.
கார்மேகத்தை மாமனார் என்று  மனு அறிவித்தவுடன் அதிர்ச்சியாயினர் இருவரும்.

Advertisement