Advertisement

ஸ்மிரிதியின் மனு – 19_2
“என்னைப் பற்றிய கவலை உங்களுக்கு வேணாம்..அதேபோல மனீஷ் பற்றியும் கவலைப்படாதீங்க..அவனை என்னோடத் தம்பியாதான் நான் பார்க்கறேன்..கீதிகாவுக்கு அவங்க வீட்டு ஆளுங்க இருக்காங்க அதனால உங்க கவலை அனாவசியமானது.” என்றாள் ஸ்மிரிதி.
“இல்ல..அனாவசியமில்ல..அவசியம்..நீங்க உங்க விருபப்படி கல்யாணம் செய்துக்க முடிவு எடுத்துயிருக்கீங்க அதனால இப்ப நான் என்னோட இரண்டாவது கல்யாணத்தைப் பற்றி சொல்ல வேண்டிய நிர்பந்தத்திலே இருக்கேன்..
எனக்கும், உங்கம்மாவுக்கும் விவாகரத்து ஆகியிருந்த சமயத்துலே கீதிகா குடும்பத்துக்காக ஒரு வேலை செய்து கொடுத்தேன்….அது கீதிகா சம்மந்தப்பட்டது..அதுலேதான் எங்க இரண்டு பேருக்கும் பழக்கம் ஏற்பட்டிச்சு..
அவளுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க எடுத்த எல்லா முயற்சியையும் அவளோட முதல் கணவனோட குடும்பம் கலைச்சு விட்டுகிட்டிருந்தாங்க..அவளோட அண்ணங்க மேல நம்பிக்கையில்லாம அவங்க அப்பா அவருக்கு அப்பறம் அவரோட பசங்க கீதிகா வாழ்க்கையோட விளையாடலாம்னு நினைச்சு என்கிட்ட அவளைக் கல்யாணம் செய்துக்க சொல்லி கேட்டாரு..
எனக்கு அப்ப என்ன பதில் சொல்றதுன்னு தெரியலே..திரும்ப குடும்ப வாழ்க்கை எனக்கு ஒத்துவருமான்னு யோசனையா இருந்திச்சு..எனக்குன்னு இருந்த குடும்பம் திடீர்னு இல்லாம போயிடுச்சு..அவளுக்கு குடும்பம் இருந்தும் இல்லாதது போலதான்.. ஆனா எனக்கும், கீதிகாவும் இருந்த ஒரு ஒரே ஒற்றுமைதான் என்னைக் கல்யாணத்துக்கு சரின்னு சொல்ல வைச்சுது..எங்க இரண்டு பேருக்கும் இது இரண்டாவது கல்யாணம்….. அதனால கீதிகாவுக்கு இஷ்டமிருந்தா எனக்கும் ஒகேன்னு சொல்லிட்டேன்..
கீதிகா வாழ்க்கைல அவளுக்குத் தேவையானதை அவ முடிவு செய்யாம அவ வீடு முடிவு செய்தே அவளுக்குப் பழக்கம்..அவளோட முதல் கல்யாணம் அவ குடும்பத்தோட ஆதாயத்துக்காக நடந்திச்சு..…அந்தக் கல்யாணம் முடிஞ்சு போன பிறகுதான் அவளுக்கு அவ குடும்பத்து மேல வெறுப்பு, அவநம்பிக்கை எல்லாம் ஏற்பட்டிச்சு..
கீதிகாவுக்கு எல்லாத்துக்கும், எப்பவும் ஒரு துணை தேவை..அவ குடும்பத்தை, வீட்டைத் தனியா சமாளிக்க தைரியமில்லை அதே சமயம் அவங்களைச் சார்ந்தும் இருக்க விரும்பலே..அந்த மாதிரி ஒரு சூழ் நிலைலே அவ விருப்பத்துக்கு நான் மதிப்பு கொடுத்தேங்கற ஒரே காரணத்துக்காக என்னைக் கல்யாணம் செய்துக்க சம்மதிச்சா..அவளைக் கேட்டு அவ வாழ்க்கைல நடந்த முதல் விஷயம் எங்க கல்யாணம்தான்..
இப்பவரைக்கும் அவளோட குடும்பம் எங்க விஷயத்தில தலையிடறது இல்லை….அவங்களுக்கு நான் வெளி ஆளா இருக்கறதுனால என்கிட்ட பயமும், மரியாதையும் இருக்கு..எங்க இரண்டு பேருக்கும் வேணுங்கற சுதந்திரத்தை எங்க கல்யாணம் கொடுக்குது..
அவளோட பணம் விஷயத்தை அவதான் பார்த்துக்கறா..என்னோடதை நான் பார்த்துக்கறேன்..இது நான் என் முதல் கல்யாணத்தில கத்துகிட்டது..கணவன், மனைவிக்கு நடுவுல பணம் பிரச்சனையைக் கிளப்பும்..உன் கல்யாணத்துக்காக நான் செய்யறதுலே அவ தலையிட மாட்டா..அதேபோல அவளோடது எல்லாம் மனீஷ்க்கு மட்டும்தான்.. மனிஷ்தான் அவன் அப்பாவோட சொத்துக்கு ஒரே வாரிசு..அவனோடது எல்லாத்தையும் நானும் பொறுப்பா பார்த்துகிட்டு வரேன்..அவனை  நான் சட்டப்படி தத்து எடுத்துகிட்டது காரணமும் அதுதான்.. 
நீ தல்ஜித்கிட்ட கொடுத்த பணம் என்னோடது..எனக்கு கிடைச்ச எந்த சந்தர்பத்தையும் தவறவிடமா அதை எனக்கு சாதகமாக்கி சம்பாதிச்சது..நான் நின்னுகிட்டு இருக்கறது திடமானத் தரை மேல இல்லே திடமே இல்லாத தண்ணீர் மேல..அரசியல்ல ஆரம்பிச்ச நான் இப்ப அதேயே அடிச்சுகிட்டு போற ஆற்றுலே இருக்கேன்..அசதின்னு அசந்து இனி முடியாதுன்னு நான் நினைக்கற அடுத்த நிமிஷம் அதுலேயே மூழ்கி போயிடுவேன்..
இந்த ஆற்று தண்ணிலே நான் தெரிஞ்சேதான் இறங்கினேன்..தண்ணியோட அளவு, ஆழம், போக்கு எல்லாத்தையும் ஒரளவு கணக்கு போட்டு என்னைத் தேடி வர்றவங்களைக் கரை சேர்க்கறேன்…நான் இருக்கற இந்த அபாயகரமான இடத்திலேர்ந்து உங்களைக் கல்யாணம் செய்து கொடுத்து ஒரு பாதுக்காப்பான இடத்திலேக் கரை சேர்த்திடணும்னு நினைக்கறேன்.” என்று கார்மேகம் அவர் மனக் கவலையை அவர் மகளிடம் முதல் முறையாகப் பகிர்ந்து கொண்டார்.
“எதைப் பாதுகாப்பான இடம்னு சொல்றீங்க? இப்ப ஸப்னாக்கு கல்யாணம் செய்து வைச்சுருக்காங்களே அந்த மாதிரியா? கீதிகா வீட்டுக்கு பணமும், பவரும்தான் கண்ணுக்குத் தெரியும்..நான் அது இரண்டுத்தையும் உங்ககிட்ட பத்து வயசுலேர்ந்து பார்த்துகிட்டு வரேன்..பணமில்லாம அம்மாவோட ஆரம்பிச்ச வாழ்க்கை தோல்விலே முடிஞ்சிடுச்சு.. நீங்க பணத்தோட ஆரம்பிச்ச வாழ்க்கை வெற்றியானதுனால எனக்கும் அந்த மாதிரி வாழ்க்கைதான் பாதுகாப்பானதுன்னு அதே வழியைத் தேர்ந்தேடுக்கறீங்க..என்னால முடியாது பா.” என்று அவர் சொன்னதை ஏற்று கொள்ளமுடியாமல் நிராகரித்தாள் ஸ்மிரிதி.
“ஸ்மிரிதி மா..நான் சொல்றதைப் பொறுமையாக் கேளுங்க..குடும்ப வாழ்க்கைக்குக் காசு, பணம் முக்கியம்..காலம் கடந்து, பல கஷ்டங்கள் பட்ட பிறகு நான் தெரிஞ்சுகிட்ட உண்மை அது..உங்கம்மாவும், நானும்  நிறைய வேதனைய அனுபவிச்சிருக்கோம்….
பணம் சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகு அதுவே எங்க பிளவுக்குக் காரணமாயிடுச்சு..நீங்க பேசறது பிரேமா பேசறது போலவே இருக்கு..குடும்பம் நடத்த அருகதை இருக்கணும் இல்லேன்னா அதே குடும்பத்தால அவமானம் எற்படும்..குடும்பமே இல்லாத நான் என்னோட குடும்ப வாழ்க்கைலேர்ந்து கத்துகிட்ட பாடம்.” என்று அவரின் முடிந்து போன மணவாழ்க்கையின் மனவேதனையை மகளிடம் சொல்ல,
“அம்மாவோட விவாகரத்து..கீதிகாவோடக் கல்யாணம்..இந்த இரண்டு பற்றியும்  நான் இதுவரைக்கும் காரணமோ, விளக்கமோ கேட்டதில்ல..உங்க வாழ்க்கை, உங்க விருப்பம்..அதேபோலதான் என் வாழ்க்கை என் விருப்பமா இருக்கணும்.”
இனி அவர் சொல்வது ஸ்மிரிதியிடம் போய் சேராது என்று உணர்ந்த கார்மேகம் அவரின் வாழ்க்கையை விட்டு விலகி சற்று முன்பு கேட்ட அதே கேள்வியை வேறு விதமாக ஸ்மிரிதியிடம் கேட்டார். 
“மாப்பிள்ளை வீடு எப்படி?”.
ஆனால் அவர் கேட்டதைப் புரிந்து கொண்டு அவர் கேட்க விரும்பிய விவரத்தை மறைக்காமல் சொன்னாள் ஸ்மிரிதி.
“உங்க மாப்பிள்ளை வீடு உங்களை மாதிரி வசதி கிடையாது..அவன் சொந்தமா தொழில் செய்யறான்..அவனோட வருமானத்தைப் பற்றி நான் விசாரிக்கலே..நீங்க சொல்றது சரிதான்..அவன் குடும்பத்தையோ இல்லை அவன் வருமானத்தையோ நம்பி நாங்க குடும்பம் நடத்த முடியாது….எனக்கும் இப்ப கொஞ்சம் வருமானம் வருது..கபீர், சுசித் ரா, மெஹக் மூணு பேரும் நான் செய்யற வேலைக்கு என் கணக்குலப் பணம் போடறாங்க.”
“நம்ம குடும்பம் பற்றி மாப்பிள்ளை வீட்ல தெரியுமா?” என்று கேட்டார் கார்மேகம்.
“நம்ம குடும்பப் பின்னனி, என் படிப்பு, வேலை, சேவை, பழக்கம், வழக்கம் எல்லாத்தையும் பற்றி மாப்பிள்ளைக்கும் அவங்க வீட்டுக்கும் தெரியும்.” என்றாள் ஸ்மிரிதி.
“மாப்பிள்ளைத் தம்பி யாரு மா? பெயரென்ன?” என்று மரியாதையுடன் அவர் மகளை மணந்து கொண்டு அவர்கள் குடும்பத்துடன் சேரப் போகும் அந்த அந்நியனைப் பற்றி விசாரித்தார் கார்மேகம்.
ஸ்மிரிதியின் முகத்தில் லேசாக புன்னகை அரும்பியது.
“உங்களுக்கும் தெரிஞ்சவன் தான் பா..மனு.” என்றாள்.
“ஸ்மிரிதி மா..”என்று குரலை உயர்த்தியவர்,”சரிப் படாது.” என்று ஒரே வார்த்தையில் அவள் தேர்ந்தெடுத்த வாழ்க்கைத் துணையை மறுத்தார்.
“ஏன்?”
“இப்ப அதைப் பற்றி பேச வேணாம்..ஆனா எனக்கு இஷ்டமில்லை.” என்று தெளிவாக அவர் மறுப்பைத் தெரிவித்தார்.
“எத்தனை முறை சொல்றது..உங்க விருப்பத்திற்கு நான் கல்யாணம் செய்துக்க முடியாது..என் விருப்பம் போலதான் என் கல்யாணம் நடக்கும்.” என்றாள் ஸ்மிரிதி.
அதைக் கேட்டவுடன் கடைசி முறையாக அவர் மகளிடம் முறையிட்டார் கார்மேகம்.
“நீங்க என்னோட ஒரே மக.. அந்த அடையாளத்தை அழிச்சிட்டு வேணும்னா நீங்க அவங்களோட மருமகளாக முடியும்..அதை செய்யறதுலே எனக்கு உடன்பாடில்லை..எனக்கு நீங்க ஒருத்தங்கதான் பொண்ணு அந்த உறவை எந்த வீட்ல மதிக்கறாங்களோ அந்த வீட்ல உங்களைக் கல்யாணம் செய்து கொடுக்கறதுதான் நமக்கு நல்லது..
இன்னிக்கு என்கிட்ட காசு பணத்துக்கு கம்மி இல்ல அதேபோல பாசம் காட்டவும் ஒரு குடும்பம் இருக்கு..உங்களுக்கும் ஒரு நல்ல குடும்பம் அமையணும்னு நான் முயற்சி செய்துகிட்டு வரேன்..நீங்க அந்த முயற்சியா வீணாக்கிடாதீங்க..
இப்பவரைக்கும் கலெக்டர் வீட்ல என்னைய ஒரு ஆளா மதிக்கறதில்லை..அதைப் பற்றி நான் கவலைப்பட்டதுமில்லை ஆனா என் பொண்ணை அவங்க வீட்ல கட்டி கொடுத்த பிறகு அந்த மாதிரி நடந்துகிட்டா என்னால அதை ஏத்துக்க முடியாது..
உறவுனு ஏற்பட்ட பிறகு அதுலே உயர்வு, தாழ்வு பார்க்கறது அந்த உறவுக்கு செய்யற அவமரியாதை..என்னை மதிக்காத வீட்ல நான் என்னிக்கும் காலடி வைக்க மாட்டேன்.. உங்க அம்மா வீட்டோட அப்படிதான் இருந்தேன்..உங்க வீடா இருந்தாலும் அப்படிதான் இருப்பேன் ஸ்மிரிதி மா.” என்று ஸ்மிரிதி பேசுவதற்கு வாய்ப்பேக் கொடுக்காமல் அவள் வாயைத் திறக்க முடியாமல் தாள் போட பார்த்தார் கார்மேகம்.
“நீங்க இதையெல்லாம் சொல்லத் தேவையில்லை..அவங்க குடும்பத்துக்கு நாம ஒத்துவர மாட்டோம்ங்கறது எனக்குத் தெரியும்..அதே சமயம் என் கல்யாணம் என் விருபப்படிதான் நடக்கணும்னுங்கறது என்னோட விருப்பம்..இப்ப இதைப் பற்றி பேச நானும் விருப்பப்படலை.” என்றாள் ஸ்மிரிதி.
அவர் தரப்பு வாதத்தை ஏற்று கொள்ளாமல் பிடிவாதமாக இருந்த ஸ்மிரிதியின் பதிலில் கோபமடைந்த கார்மேகம்,”நீங்க என்னோட மகளா இருக்கறது கேவலம்னு கலெக்டர் வீட்டு மருமகளாகணும்னு நினைக்கறீங்களா?..உங்கம்மாவோட சினேகிதி உங்களுக்கு வாழ்க்கையைப் பற்றி புரிய வைப்பாங்கண்னுதான் அன்னிக்கு அவங்களை நம்ம வீட்டுக் கல்யாணத்துக்குக் கூப்பிட்டேன்..அவங்க பையனோட உங்களுக்கு வாழ்க்கை அமைச்சு கொடுக்க இல்லை..
விருப்பமில்லாம நம்ம வீட்டு கல்யாணத்துக்கு அவங்க வந்தது உங்களுக்காக..நானும் விருப்பமில்லாதவங்களை வற்புறுத்தி கல்யாணத்துக்குக் கூப்பிட்டது உங்களுக்காகதான்..உங்களை அவங்க வீட்ல விரும்ப மாட்டாங்க ஸ்மிரிதி மா..அதுக்கு காரணம் நான் மட்டுமில்லை..நீங்களும்தான் மா..
நீங்க கல்யாணம் செய்துகிட்டு போற வீட்ல உங்களை மதிக்கணும்..கலெக்டர் வீட்ல உங்களுக்கு அது கிடைக்காது..நீங்க உங்க அப்பாவை நம்புங்க ஸ்மிரிதி மா..உங்களை கௌரவமா பார்க்கற, நடத்தற இடத்திலதான் நான் கல்யாணம் செய்து கொடுப்பேன்…
எனக்கும் இனி இதைப் பற்றி பேசறதுல விருப்பமில்லே..அப்படி நீங்க உங்க இஷ்டப்படி மனு தம்பியதான் கல்யாணம் செய்துப்பீங்கன்னா நான் உங்கம்மாகிட்ட பேச வேண்டி வரும்.” என்றார் கார்மேகம்.
“மாட்டாங்க பா..அவங்களுக்கு ஏற்கனவே மனுவைப் பற்றி தெரியும்.” என்றாள் ஸ்மிரிதி.
பிரேமாவிற்கு ஏற்கனவே இதைப் பற்றி தெரியும் என்றவுடன் அவர் மனதிலிருப்பதை ஸ்மிரிதிக்கு புரிய வைக்க மீண்டும் முயன்றார் கார்மேகம்.
“ஸ்மிரிதி மா……நான் உங்கம்மாவோட வாழ்க்கைலே இருந்தபோதும் என்னைய இல்லாத மாதிரி நடத்தினவங்க..நீங்களும், உங்கம்மாவும் தான் அவங்களோட உறவு வைச்சுகிட்டிருந்தீங்க….
உங்களோட வாழ்க்கைலே நான் எப்பவும் இருக்கணும்னு நினைக்கறேன்..அந்த வீட்ல கல்யாணம் செய்துகிட்டு போனீங்கன்னா உங்கப்பாவை நீங்க விட்டிடணும்..உங்களால அது முடியும்..உங்கம்மாவை விட்டிட்டு நீங்க என்னோட இருந்தது போல என்னையும் விட்டிட்டு நீங்க அவங்களோட இருந்திடுவீங்க.. என்னால அப்படி இருக்க முடியுமானுத் தெரியலே மா.” என்று அப்பா மகளிடம் கெஞ்ச,
“அப்படி எதுவும் நடக்காது பா..அம்மாவும், நீங்களும் பிரிஞ்ச பிறகு நான் உங்களோட இருக்க முடிவு செய்ததுக்குக் காரணம்….நீங்க என் அப்பா..நான் உங்க மக..அது எப்பவும் மாறாது பா.…என் கல்யாணம் அதை மாற்றாது பா..
நீங்க நினைக்கறது போல நான் உங்களை நிராகரிச்சிட்டு மனுவை ஏத்துக்க போகறதில்லை..
மனுவுக்கு எப்படி ஆன் ட்டியோட சம்மதம் முக்கியம்னு தோணிச்சோ அதேபோல எனக்கும் அவங்க சம்மதம் முக்கியம் அதைவிட முக்கியம்மானது உங்க சம்மதம்..ஆன் ட்டி சம்மதிச்சாக்கூட உங்க சம்மதமில்லாம என் கல்யாணம் நடக்காது.. 
இன்னியோட என் கல்யாண பேச்சை விட்டுடிங்க….ப்ளீஸ் இனி எனக்காக வேற மாப்பிள்ளையும் தேடாதீங்க.” என்றாள் ஸ்மிரிதி.
ஸ்மிரிதியின் முடிவைக் கேட்டு கவலையானார் கார்மேகம்.  சிவகாமியும், பிரேமாவும் அவர் பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கு அவளைச் சம்மதிக்க வைப்பார்கள் என்று நினைத்து அவர் செயல்பட ஆனால் இப்போதோ அவரின் செய்கையால் சாதாரணமாகப் பேசிக் கொள்ள முடியாத அளவிற்குச் சங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர் சினேகிதிகள் இருவரும்.

Advertisement