Advertisement

ஸ்மிரிதியின் மனு – 19_1
அன்றைய இரவு நாதனுடன் பேசியபின் ஸ்மிரிதியைப் பற்றிய சஞ்சலங்களுடன் அவருடைய சின்ன மகனைப் பற்றிய சஞ்சலங்களும் கைகோர்த்துக் கொண்டதால் கலெக்டரையும், கார்மேகத்தையும் கல்யாண விஷயத்திலிருந்து கழட்டி விட்டு விட்டு “அம்மா” என்ற ஆயுதத்தையும், கவசத்தையும் அணிந்து கொண்டு களத்தில் இறங்க திட்டமிட்டார் சிவகாமி. 
அடுத்த நாள் காலை சாப்பாடு டேபிளில் அமர்ந்திருந்த மூவரையும் பார்த்து,
“நானும், அப்பாவும் கோயமுத்தூர் போயிடலாம்னு முடிவெடுத்திருக்கும்.” என்று மூன்று பேர் தட்டில் டிபனைப் போடாமல் குண்டைப் போட்டார் சிவகாமி. 
“அம்மா, காலங்கார்த்தாலே எதுக்கு இந்த மாதிரி கலவரப்படுத்துறீங்க..எத்தனை முறை இதே போல பயமுறத்த போறீங்க?” என்று கேட்டான் மனு.
“நான் பயமுறத்தலே..இதுதான் என் முடிவு..தில்லில இருந்தது போதும்..இந்த வீட்டோட மேல் போர்ஷந்தான் நமக்கு சொந்தம்..கீழ் போர்ஷன் இன்னும் காலியாதான் இருக்கு..அது வித்து போயிடுச்சுன்னா அவங்களோட ஒத்துப் போய் இருக்கணும்….இனிமே எனக்கு யாரோடையும் ஒத்துப் போகாது..கோயமுத்தூர்லே நமக்குன்னுத் தனி வீடு வாங்கியாச்சு..அங்கே சுதந்திரமா இருக்க முடியும்….முதல்ல நானும், அப்பாவும் போவோம் அதுக்கு அப்பறம் நீங்க இரண்டு பேரும் வந்திடுங்க…
ஃபர்னிச்சர் எல்லாம் அந்த வீட்டுக்கு ஏற்ற மாதிரி புதுசா செய்திடலாம்..இங்க இருக்கறதையெல்லாம் வித்திடலாம்..உங்க அப்பாவோட வாக்கிங்க வர்றவங்க யாருக்காவது எதாவது தேவைப்பட்டா அப்படியே கொடுத்திடலாம்..கிட்சன் சாமனெல்லாம் விட முடியாது அதை எடுத்துகிட்டு போயிடலாம்..மூவர்ஸ் அண்ட் பாக்கெர்ஸ் ஆள் யாரையாவது வரச் சொல்லுங்க ஒரு எஸ்டிமெட் கொடுப்பான்..அதை வைச்சுகிட்டு எப்படி செய்யணுமோ யோசிச்சு செய்யலாம்..நம்மூர்ல இவ்வளவு குளிர் கிடையாது அதனால குளிர்காலத்துக்குத் தேவையான சாமனெல்லாம் இங்கேயே விட்டிடலாம் இல்லை திரேனுக்கு கொடுத்திடலாம்…
நான் புவனாகிட்ட பேசறேன்..ஒருமுறை ராமோட போய் வீடு எவ்வளவு முடிஞ்சிருக்குண்ணு பார்க்க சொல்றேன்..அதுக்கு அப்பறம் இங்கேயிருந்து காலி செய்திடலாம்..அங்க ஷிஃப்ட் ஆன பிறகுகூட மற்ற வேலைகளை நம்ம கண் பார்வைல செய்துக்கலாம்.” என்று இராத்திரி முழுவதும் கண் விழித்து தேர்வுக்குத் தயாரான மாணவியைப் போல் அவர் தயாரித்த திட்டத்தை விளக்கினார் சிவகாமி.
அவர் திட்டத்தை விளக்கியவுடந்தான் அதன் தீவிரம் மூவருக்கும் புரிந்தது.  முதலில் நாதன்,
“கீழ் போர்ஷனைப் பற்றி ஓனர்கிட்ட பேசியிருக்கோம்..அவரும் யோசிச்சுகிட்டு இருக்காரு..இப்ப நீ எதுக்கும் அவசரப்படாத.” என்று அவர் மனைவியை அமைதியாக கையாள முயன்றார்.
மனு மீது ஸ்மிரிதி பாய்ந்தது போல நாதன் மீது பாய்ந்தார் சிவகாமி.
“அவசரப்படறேனா..எத்தனை வருஷமா பொறுமையா வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கேன்..இனி என்னால  முடியாது..இங்கையே இருக்கப் போறோம்னா அங்க எதுக்கு வீடு வாங்கறீங்க..அங்க போயிடலாம்ங்கற ஐடியாவுலதான வாங்கினோம்..நமக்காக வாங்கினீங்கன்னு மட்டும் சொல்லாதீங்க..நாம இரண்டு பேரும் அங்கையே இருக்கப் போறோம்னா இவனுங்க இரண்டு பேரும் இங்க இருந்துகிட்டு என்ன செய்ய போறாங்க? உங்க வேலையினால இவ்வளவு நாள் இங்க இருந்தோம் இப்ப அதுக்கு அவசியமில்லை..ஊரோட போயிடலாம்.” என்று கறாராகப் பேசினார் சிவகாமி.
“அம்மா..என்னால எப்படி வர முடியும்? என் தொழில் இங்கதான்..நான் செட்டாயிட்டேன்.” என்று நாதன் முந்தைய இரவு சொன்னது போல் கோயமுத்தூர் வர முடியாது என்றான் மனு.  அவனுக்கும், ஸ்மிரிதிக்கும் ஏற்பட இருக்கும் நிரந்தர உறவை முறிக்கதான் நிரந்தரமாக குடும்பத்துடன் கோயமுத்தூர் செல்லும் திடீர் முடிவை சிவகாமி எடுத்துயிருக்கிறார் என்று சந்தேகமேயில்லாமல் கண்டு கொண்டான் மனு.
“நான் உன்னைப் போல படிச்சவ இல்ல ஆனா அதே சமயம் ஒண்ணும் தெரியாத முட்டாளுமில்ல..நீ எங்க வேணுமுனாலும் உன் தொழிலைச் செய்யலாம்..அந்த பார் கவுன்சில்ல மெம்பராகணும்..அவ்வளவுதான்.” என்றார் சிவகாமி.
“அம்மா..அது அப்படி கிடையாது..சில இடத்தில மெம்பராகறதே கஷ்டம்..நீங்க நினைக்கற மாதிரி ஆல் இந்தியா பிராக்டீஸ் செய்யறதுக்கு அதாரிட்டி வெறும் பேப்பர்லதான் இருக்கு..அக்டிவா இன்னும் நடைமுறைல வரலே.” என்று விளக்கினான் மனு.
“சரி..அப்ப அது அக்டிவ்வா வர்ற வரைக்கு நீயும் அக்டிவா ஏதாவது பிஸ்னஸ் செய்.” என்று ஒரே போடாகப் போட்டார் சிவகாமி.
“அம்மா.” என்று மனு அலற,
“படிச்ச படிப்புக்கு ஏற்ற வேலை எல்லாருக்கும் அமையறதில்லே..வாழ்க்கையை ஓட்ட கிடைச்ச வேலையை செய்யறாங்க..எனக்கு உன் வாழ்க்கை முக்கியம்..வக்கீல் தொழில் இல்லை.” என்று அதிரடியாக அவன் வாயை அடைத்தார் சிவகாமி.
அதுவரை அவர்கள் இருவரின் பேச்சைக் கேட்டு கொண்டிருந்த மாறன் சிவகாமியின் திடீர் முடிவில் குழப்பமடைந்திருந்தான்.  
“அம்மா..மனுக்கு எந்த பிஸ்னஸும் செய்ய முடியும்..எனக்கு அப்படி கிடையாது..நான் ஏற்கனவே அங்க சரியா வேலை அமையாமதான் இங்க வந்தேன்..திரும்ப அங்கையே முயற்சி செய்ய எனக்கு விருப்பமில்லே.” என்று மாறனும் சிவகாமியின் திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்தான்.
“நீ கோயமுத்தூர்ல இருக்க வேணாம்..பக்கத்தில பெங்களூர்ல ஒரு வேலையப் பார்த்துக்க..அங்கையே ஒரு வீடும் பார்த்திடு..நாங்க மூணு பேரும் வீக்கெண்டுக்கு உன்கிட்ட வந்திடறோம்.” என்று நாதன், மனு, மாறன் என்று வரிசையாக அவர் கைவரிசையைக் காட்டினார் சிவகாமி.
“அம்மா..நீங்க சொல்ற மாதிரியெல்லாம் செய்ய முடியாது..இப்ப இருக்கற வேலைல சேர்ந்து இரண்டு மாசம்தான் ஆகுது..உடனே விடமுடியாது..அப்படியே விட்டாலும் வேற வேலை அவ்வளவு சீக்கிரமா கிடைக்காது.” என்று மாறனும் கோயமுத்தூருக்கு குடிபெயர மறுக்க,
“அம்மா” என்ற ஆயுதமும், கவசமும் செயலிழந்து அதனால் கலையிழந்த சிவகாமி,“நாந்தான் தப்பு செய்திட்டேன்..உங்க இரண்டு பேரையும் ஹாஸ்டல்ல சேர்த்திட்டு உங்கப்பாவோடவே எல்லா ஊருக்கும் போயிருக்கணும்..உங்க இரண்டு பேருக்காகன்னு நான் இங்கையே இருந்தது என்னோட தப்பு..இனி உங்க இஷ்டம் போல நீங்க இரண்டு பேரும் இருங்க..நான் என் இஷ்டம் போல இருக்கேன்.” என்றார் விரக்தியுடன்.
அவர்கள் இஷ்டம் போல என்று சொன்னவுடன் மனுவுக்கு புரிந்தது அவர் ஸ்மிரிதியைப் பற்றிதான் பேசுகிறாரென்று ஆனால் மாறனுக்கு அதைப் பற்றி தெரியாததால் அவன் சிவகாமிக்கு திடீரென்று என்னவாயிற்று என்று யோசனையானான்.  
அவரின் மனைவியின் மனநிலையை உணர்ந்த நாதன், மகன்கள் இருவரையும் பார்த்து,
“உங்கம்மா சொல்றது சரி..உங்களுக்காகன்னு இவ்வளவு நாள் இங்க இருந்தாச்சு இனி நாங்க எங்க விருபப்படிதான் வாழணும்.” என்று சிவகாமி சொன்னதை வழிமொழிந்தார்.
இங்கே வருங்கால மாமியாரோ முழுமூச்சாக, மொத்தமாக தலை நகரிலிருந்து மூட்டைக் கட்டுவதற்கு தீவிரமாக செயல்பட அங்கே அவரின் வருங்கால மருமகளோ அவளின் அப்பாவின் மனதை முழுமூச்சாக மாற்ற முயன்று கொண்டிருந்தாள்.
அடுத்த நாள் காலையில் டைனிங் டேபிளில் தனியாக அமர்ந்து காலை உணவை சாப்பிட்டு கொண்டிருந்தார் கார்மேகம்.
“அப்பா, என் கல்யாணத்தை பற்றி உங்களோட கொஞ்சம் பேசணும்.” என்று நேரடியாக விஷயத்தை ஆரம்பித்தாள் ஸ்மிரிதி.
“கீதிகா டிஃபன் முடிச்சாச்சு.மனீஷ் ஸ்கூல் போயிட்டான்..நீங்களும் டிஃபன் சாப்பிடுங்க..பேசலாம்.” என்றார்.
“டிஃபன் அப்பறம்..முதல்ல நான் சொல்றதை கேளுங்க..நீங்க இனி எனக்காக மாப்பிள்ளைத் தேட வேணாம்.” என்றாள் ஸ்மிரிதி.
“அதான் முன்னாடியே சொல்லிட்டீங்களே மா..பணத்தையும் எடுத்துகிட்டு போயிட்டீங்க..கல்யாணம் செய்துகாம என்ன செய்யறதா இருக்கீங்க?” என்று கார்மேகமும் டிஃபனைத் தள்ளி வைத்துவிட்டு நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.
“நீங்க மாப்பிள்ளை பார்க்க வேணாம்னு சொன்னேன்..நான் கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு சொல்லலே.” என்றாள் ஸ்மிரிதி.
ஸ்மிரிதியின் பதிலில் பொதிந்திருந்த அர்தத்தைப் புரிந்து கொண்ட கார்மேகம், கோபத்துடன், அதுவரை அவளுக்கு அளித்த மரியாதையைக் கைவிட்டு விட்டு,
“நீயே மாப்பிள்ளைப் பார்த்துகிட்டியா? நான் அவனைப் பற்றி விசாரிக்காம உனக்கு கல்யாணம் செய்ய மாட்டேன்..என்ன நினைச்சுகிட்டிருக்க நீ..உன் வாழ்க்கையோட விளையாடறியா..இனி நீ வீட்டை விட்டு வெளிய போக வேணாம்..அந்த மாப்பிள்ளை எவனா வேணும்னாலும் இருக்கட்டும் என் பொண்ணுக்கு நான் பார்க்கறவனோடதான் கல்யாணம் நடக்கும்..
உன் வழிக்கு வர வேணாம்னு பொறுமையா இவ்வளவு நாள் இருந்தேன் இனி என் வழில நான் இந்த விஷயத்தை முடிக்கறேன்..அடுத்த மூகூர்தத்தில உன் கல்யாணம்.” என்று அடாவடி அப்பாவாகப் பேசி ஸ்மிரிதியை அடிபணிய வைக்க நினைத்தார்.
கார்மேகத்தின் கோபத்தில் சற்றும் அசராமல் அமைதியாக அவரைப் பார்த்து,
“அடுத்த மூகூர்தத்தில கல்யாணம் செய்துக்க அவங்க வீட்ல பேசறேன்..அவங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான்.” என்றாள் நிதானமாக ஸ்மிரிதி.
அவளின் நிதானத்தைப் பார்த்து கார்மேகமும் அதைப் பின்பற்றி விசாரணையில் இறங்கினார்.
“பையனுக்கு என்ன செல்வாக்கு?”
“அவனுக்கு ஒண்ணும் கிடையாது..அவங்க அப்பாக்கு இருக்கு..நம்ம வீடு போலதான் உங்களுக்கு செல்வாக்கு இருக்கு எனக்கு ஒண்ணுமில்லே.”
“என்ன தொழில் செய்யறான்?”
“பஞ்சாயத்துதான்…உங்களை மாதிரி.”
ஸ்மிரிதியின் பதிலைக் கேட்டு யோசனையாக அவளைப் பார்த்து,
“எனக்குத் தெரிஞ்சு சின்ன வயசு பசங்க யாருமில்லே.” என்று சொன்னவர் அதிர்ந்து போயி,
“ஸ்மிரிதி மா, மாப்பிள்ளைக்கு என்ன வயசு? முதல் கல்யாணம்தானே?” என்று அதுவரை இருந்த கோபத்தை விட்டுவிட்டு கலவரவமாகக் கேட்டார் கார்மேகம்.
அப்போது கோபமடைவது ஸ்மிரிதியின் முறையானது.“முதல் கல்யாணம்தான்..எங்க இரண்டு பேருக்கும்.” என்றாள்.
“உங்களைப் பற்றி கேட்கல மா..பையனைப் பற்றி கேட்டேன்.” என்று சமாதான முயற்சியை ஆரம்பித்தார் கார்மேகம்.
“எவ்வளவோ செய்த ஸ்மிரிதி யார்கிட்டையும் சொல்லாம கல்யாணம் செய்துகிட்டிருக்கலாமே.” என்றாள் கோபத்துடன்.
“ஸ்மிரிதி மா கோபப்படாதீங்க..உங்க வாழ்க்கை நல்லபடியா அமையணும்னு என் மனசுல எண்ணம் இருக்கு..ஆனா உங்க மனசுலதான் என்ன இருக்குண்னு எனக்குப் புரிய மாட்டேங்குது…
நான் பார்த்த மாப்பிள்ளைங்க எல்லாரும் நமக்கு ஏற்றவங்க..நீங்களேப் பார்த்துகிட்ட மாப்பிள்ளை நம்ம லெவல்ல இல்லைனா சரிபட்டு வராது..நான் இங்க பணத்தையோ, சொத்தையோ பற்றி பேசலே..
நம்மகூட உறவு வைச்சுக்க நினைக்கறவங்களுக்கு நாம எப்படிபட்டவங்கனு தெரிஞ்சிருக்கணும்..இந்த ஒரே காரணத்துக்காகதான் நமக்கு தெரிஞ்சவங்ககிட்ட சொல்லி உங்களுக்கு ஏற்ற மாதிரி மாப்பிள்ளையைத் தேடிக்கிட்டு வரேன்.” என்று விளக்க முற்பட்டார் கார்மேகம்.
“அப்பா, நீங்க பார்க்கற மாப்பிள்ளை எல்லாரும் நான் கார்மேகத்தோட பொண்ணுங்கறதுனால என்னைக் கல்யாணம் செய்துக்க விரும்பறாங்க….உங்களை வைச்சு அவங்களோட செல்வாக்கை மாற்றி அமைக்க நினைக்கற மாப்பிள்ளை எனக்கு சரி வரமாட்டான்..நானே உங்களை சார்ந்திருக்க விரும்பாத போது என்னோட வாழ்க்கைத் துணை உங்களை சார்ந்திருக்கறதை நான் எப்படி விரும்புவேன்?”என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“நான் சொல்றது உங்களுக்குப் புரிய மாட்டேங்குது மா…உங்களை நான் முன்பின் தெரியாது ஆளுக்குக் கல்யாணம் செய்து கொடுக்க முடியாது….என்னோட செல்வாக்கு என் வருங்கால மாப்பிள்ளையும் சேர்த்துதான்..
நான் பார்க்கற மாப்பிள்ளை நம்ம எல்லாரையும் ஒரே குடும்பமா ஏத்துப்பாரு..எனக்கு அப்பறம் அதுதான் உங்களுக்கு, கீதிகாவுக்கு, மனீஷுக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கைய அமைச்சு கொடுக்கும்.” என்று மனம் விட்டு பேசினார் கார்மேகம்.

Advertisement