Advertisement

ஸ்மிரிதியின் மனு – 18_2
“எனக்குத் தெளிவாத் தெரிஞ்ச பிறகுதான் உங்களுக்கு சொல்ல முடியும்..எனக்கு இப்பதான் கொஞ்ச நாளா அப்படி தோணுது அதான் இன்னிக்கு அம்மாகிட்ட சொல்லிட்டேன்.” என்றான் மனு.
“அவ குடும்பமும் சாதாரணம் கிடையாது..கார்மேகத்தைப் பற்றி நான் உனக்கு சொல்ல வேணாம்…. 
அவரோட இரண்டாவது மனைவியும் அரசியல் பின்புலம் இருக்கறவங்க..ஸ்மிரிதியைக் கல்யாணம் செய்துகிட்டேனா எல்லாத்தையும் நாம ஏத்துக்கவும், எதிர்கொள்ளவும் தயாரா இருக்கணும்..அவ பிரேமாவோடப் பொண்ணுனு அவளை மட்டும் தனியாப் பார்க்க முடியாது..
அவளோட அவ அப்பா, அவரோட இரண்டாவது குடும்பம் எல்லாம் சேர்ந்துதான் உன் குடும்பமாகும்.. சம்மந்தம் வைச்சுகிட்ட  பிறகு எந்த சந்தர்பத்துலையும் என்னோட சம்மந்தியோடவும் அவங்க சொந்தகாரங்களோடவும் சம்மந்தமில்லைன்னு நான் சொன்னா யாரும் நம்ப போகறதில்லை…
நீ கல்யாணம் செய்துகிட்டு சந்தோஷமா இருக்கணும்னுதான் நானும், அம்மாவும் நினைப்போம் அதே சமயம் ஸ்மிரிதியும் கல்யாணம் செய்துகிட்டு சந்தோஷமா இருக்கணும்னுதான் நாங்க நினைக்கறோம்..இப்ப நீங்க இரண்டு பேரும் கல்யாணம் செய்துகிட்டு எங்களை சங்கடத்துல தள்ளாதீங்க..நான் ஸ்மிரிதிக்கு அறிவுரை சொல்ல முடியாது ஆனா உனக்கு சொல்ல விரும்பறேன்.” என்றார் நாதன்.
“நீங்க சொல்றது சரிதான் பா…அவளோட சேர்ந்த எல்லாத்தையும், எல்லாரையும் ஏத்துக்க நான் தயாரா இருக்கேன்..அவளும் என்னையும், என்னை சார்ந்த எல்லாத்தையும் ஏத்துக்குவா.”என்றான் மனு
“மனு, நீ நினைக்கற மாதிரி சுலபமானது இல்லை இது..கார்மேகத்திற்கும், நமக்கும் ஒருபோதும் ஒத்துவராது..ஒத்துவரணும்னா ஒண்ணு அவரு பொண்ணை அவரு விட்டுக் கொடுக்கணும் இல்ல நாங்க உன்னை விட்டுக் கொடுக்கணும்..இரண்டும் நடக்காது.” என்று அவருரகே உட்கார்ந்திருந்த சிவகாமியைக் கலந்து ஆலோசிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர்கள் இருவர் சார்பாக முடிவை அறிவித்தார் நாதன்.
அதற்குமேல் பேச ஒன்றுமில்லை என்று நாதனும், சிவகாமியும் அவர்கள் அறைக்கு சென்றுவிட வரவேற்பறையில் தனிமையில் விடப்பட்ட வக்கீல் அவனின் கல்யாண வழக்கு விசாரணைக்கு வராமலேயே தள்ளுபடியானதை உணர்ந்தான்.
அவள் அறையிலிருந்து கார்மேகம் வெளியேறியவுடன் அவள் படுக்கையில் படுத்திருந்த ஸ்மிரிதிக்கு அவரைப் பற்றி பிரேமா சொன்னது நினைவிற்கு வந்தது.  அவர் தேர்ந்தெடுத்த பாதையிலிருந்து கார்மேகம் மாறப் போவதில்லை அதே சமயம் அவளுடைய வாழ்க்கைப் பாதையை அவர் தேர்ந்தெடுக்க விரும்புவதை அவளால் ஏற்று கொள்ளவும் முடியவில்லை.  
அவள் எண்ணவோட்டங்கள் அவளை மனுவிடம் அழைத்து செல்ல அவனின் செய்கையால்தான் கார்மேகத்திற்கு அவர்களின் விவாதம் பற்றி தெரிய வந்தது என்று வெகுண்டாள் ஸ்மிரிதி. 
மனுவின் மேல் அவளுக்கிருந்தக் கோபத்தை அவனுக்கு செய்தியாக அனுப்பி அவனையும் கடுப்பாக்கினாள் ஸ்மிரிதி.
“உன்கிட்ட நான் எதுவும் வைச்சுக்ககூடாதுனு எங்கப்பா எனக்கு எச்சரிக்கை செய்திருக்காரு..எங்களுக்கும், உங்களுக்கும் நடுவுல எதுவும் கூடாதுனு சொல்லிட்டாரு.” என்று ஏற்கனவே சோர்ந்து போயிருந்த மனுவிற்கு அவள் செய்தி அனுப்ப,
“எங்கப்பா எனக்கு எச்சரிக்கை செய்யறதுல அர்த்தமிருக்கு..உங்கப்பா அவரைப் பற்றியும் அவரு பொண்ணு பற்றியும் பெரிய அபிப்பிராயம் வைச்சுகிட்டு இருக்காரு போல..கார்மேகம் வானத்திலையே மிதக்கட்டும்.” என்று மனு பதில் அனுப்ப,
“எங்கப்பாவும், நானும் ஊருக்கு உழைக்கறவங்க..கலெக்டரும், வக்கீலும் ஊதியத்துக்கு உழைக்கறவங்க.” என்று ஸ்மிரிதியும் பதில் அனுப்ப,
அவர்கள் இருவரையும் தாண்டி அந்த குறுஞ்செய்தி சண்டையில் கார்மேகமும், கலெக்டரும் உள்ளே நுழைந்தவுடன்,
“என் நேரத்தை வீணாக்காத.” என்று மனு பதில் போட, அதற்கு மேல் அவனுடன் சண்டைப் போட விரும்பாமல் இணைப்பைத் துண்டித்தாள் ஸ்மிரிதி.
அவள் மனதிற்குள்,”இரு.. உன் காலம் பூரா என்னோடதான் வேஸ்டாகப் போகுது.” என்று நினைத்த ஸ்மிரிதி இனியும் காலம் கடத்த விரும்பாமல் கார்மேகத்திடம் மனுவைப் பற்றி சொல்லிவிட வேண்டும் என்று முடிவுக்கு வந்தாள்.
ஆனால் ஸ்மிரிதி அறிந்திருக்கவில்லை மனுவிற்கு அவள் மீதிருந்த விருப்பத்தை சிவகாமியிடம் வெளிப்படுத்தி அவள் செய்ய விரும்பியதை அவன் வழியில் நிறைவேற்றி விட்டானென்று.
அவர்கள் படுக்கையறைக்குள் நுழைந்த சிவகாமி அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் கட்டிலின் மேல் சாய்ந்து அமர்ந்து கொண்டார். அவர் மனைவியின் மன நிலையை அறிந்த நாதன் மௌனமாகப் படுத்து கொண்டார்.
“எப்படி உங்களால தூங்க முடியுது?” என்று நாதனிடம் வெடித்தார் சிவகாமி.
“நீயும் பேசாம படு..மனுகிட்ட என்ன சொல்லணுமோ அதை சொல்லியாச்சு.” என்று பேச்சை முடிக்க பார்த்தார்.
“நான் இந்த மாதிரி நடக்கும்ணு எதிர்பார்க்கலேங்க..மனுவும், அவளும் அன்னிக்கு கார்ல அத்தனை சண்டைப் போட்டாங்க..என் பசங்க தங்கமுணு அவகிட்ட சொன்னேன்..மனுகிட்ட சிகரெட் பாக்கெட்டை நீட்டி எடுத்துக்கன்னு அவ சொல்லும் போது அவன் பேசாம இருந்தான்..ஆன் ட்டி உங்க பையன் தங்கம்தான் சபலம் படலேன்னு சொல்லி காட்டினா…இன்னிக்கு அதே பையன் அவளாலதான் சலனப்பட்டிருக்கான்.” என்று ஸ்மிரிதியின் நடவடிக்கையையில் குற்றம் கண்டுபிடித்தார் சிவகாமி.
“அவ அந்த மாதிரி நடந்துக்கறதுக்கு முன்னாடி என்ன நடந்திச்சு?” என்று கலெக்டர் அவர் விசாரணையை ஆரம்பித்தார்.
சிறிது தயக்கத்துக்குப் பின்,”மனு அவகிட்ட கொஞ்சம் ஜாஸ்தியா பேசினான்..அவளோட பழக்கத்தைப் பற்றி கேட்டான்.” என்றார்.
“அவனும் எல்லை மீறி பேசியிருக்கான் அவளும் எல்லை மீறி நடந்துகிட்டிருக்கா.”
“அவளோட அந்தப் பழக்கமெல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்துவராது.” என்று சம்மந்தமில்லாமல் பேசினார் சிவகாமி.
“அதைப் பற்றி உனக்கு என்ன வந்திச்சு..நீ எதுக்கு கவலைப்படற..அவ இன்னும் உன் பையனோட பொண்டாட்டியாகலை..அப்படியே ஆனாலும் கவலைப்பட வேண்டியது உன் பையந்தான்.” என்று ஸ்மிரிதியின் பழக்கத்தைப் பற்றி சாதாரணமாகப் பேசினார் நாதன்.
“இன்னும் அந்தப் பழக்கமெல்லாம் இருக்காணுத் தெரியல….பிரேமாவுக்கு இந்த விஷயம் தெரிய வந்திச்சுன்னா நான் என்ன பண்ணுவேன்..அவ பொண்ணை என் மருமகளா ஏத்துக்கலேனு உடைஞ்சுப் போயிடுவா.” என்று இன்னொரு கோணத்தில் யோசிக்க ஆரம்பித்தார் சிவகாமி.
“பிரேமாவுக்கு விளக்க தேவையில்லை..காரணங்களுக்குப் பஞ்சமில்லை..அவளுக்கேப் புரிஞ்சிடும்.” என்று தெளிவாக்கினார் நாதன். 
“கார்மேகம் வீட்டுக் கல்யாணத்துக்குப் போனது தப்பாயிடுச்சு..இப்படி என் பையன் கல்யாணத்துல வந்து நிக்கும்னு நான் நினைக்கவேயில்ல.” என்று புலம்பினார் சிவகாமி.
“இவ்வளவு நாள் உன் பையன் கல்யாணம் செய்துகலேன்னு கவலைப்பட்டுகிட்டு இருந்த..இப்ப அவன் கல்யாணம் செய்துக்க போறானேனு கவலைப்படற.” என்று நாதன் மேலும் சிவகாமியை டென்ஷன் செய்தார்.
“உங்களுக்கு இல்லையா கவலை அவன் கல்யாணத்தைப் பற்றி.” என்று சிவகாமி கேட்க,
“இல்லை..அவனை நான் கண்ட் ரோல் செய்ய முடியாது..கண்டிக்க முடியாது..கருத்துதான் சொல்ல முடியும்..அதையும் செய்தாச்சு..உனக்கும் அது தெரியும்..இனி நாம அவன் இஷ்டப்படி நடக்க வேண்டியதுதான்.” என்றார் நாதன்.
“இப்பதான் நமக்கும், கார்மேகத்துக்கு ஒத்துவராதுனு அவங்கிட்ட கத்திட்டு வந்தீங்க.” என்று புரியாமல் சிவகாமி கேட்க,
“ஆமாம்..அப்படிதான் சொன்னேன்..ஆனா ஸ்மிரிதிக்கும் நமக்கும் ஒத்துவராதுனு நான் சொல்லவே இல்லை.” கலெக்டர் கிளாரிஃபை செய்ய,
“என்ன சொல்றீங்க நீங்க?” என்று டீச்சர் ஸுடண்ட் போல சந்தேகமாகக் கேட்க,
கலெக்டர் கணவராகி மனைவிக்கு,”மனுவுக்கும், அவளுக்கும் ஒத்துப் போயிடுச்சுனா கார்மேகமும், கலெக்டரும் கைகுலுக்கிக்க வேண்டியதுதான்.” விளக்கினார்.
“எப்படிங்க ஒத்துப் போகும்? அவளுக்கு எல்லா பழக்கமும் இருக்கு.” என்று மறுபடியும் ஆரம்பித்தார் சிவகாமி.
“அது மனுவுக்குத் தெரியும்..இதோட அந்தப் பேச்சை விட்டிடு.” என்றார் நாதன்.
“என்னால விட முடியாது.” என்றார் சிவகாமி.
“சரி..அப்ப நான் சொல்றதைக் கேட்டுக்க..உன்னோட நல்ல காலம் மனுகிட்ட சிகரெட் பாக்கெட்டை நீட்டினா ஸ்மிரிதி..அதே உன் சின்ன பையன்கிட்ட நீட்டியிருந்தா உடனே “தாங்க்ஸ்” சொல்லி ஒண்ணு எடுத்துகிட்டிருப்பான்..அதோட ஒரு கிளாஸும்  ஊத்தி கொடுக்க சொல்லியிருப்பான்.” என்று சிவகாமியைத் தாக்கினார் நாதன்.
“என்ன சொல்றீங்க நீங்க?” என்று அதிர்ச்சியுடன் சிவகாமி கேட்க.
“உண்மைதான் சொல்றேன்..அடிக்கடி வீட்டுக்கு வராம பிரண்ட்ஸோட தங்கறானே எதுக்குனு நினைக்கற..இந்த மாதிரி பார்ட்டி எல்லாம் அட்டெண்ட் செய்யறதுனாலதான்..இன்னிக்கும் அவன் வீட்டுக்கு வர போகறதில்லை..நாளை காலைல ஸைலண்டா சாப்பாடு டேபிளுக்கு வந்திடுவான்..இராத்திரி எங்க இருந்தான்? ஏன் வீட்டுக்கு வரலைனு கேட்டா ஏதாவது காரணம் சொல்லுவான்.
நானும் அவன் நடவடிக்கையைக் கவனிச்சுகிட்டுதான் வரேன்..மனுவைப் போல இல்லை மாறன்..படிச்சிருக்கானேத் தவிர குறிக்கோள் இல்லாத குருடனா இருக்கான்..இப்ப நான் எது சொன்னாலும் அவனுக்குத் தப்பாதான் தெரியும்..
அப்படியே நான் அவனை கண்டிச்சா..நான் சம்பாத்திக்கறேன், என் பணம் நீங்க யாரும் கேள்வி கேட்க முடியாதுனு சொல்லிட்டா நாம என்ன செய்ய முடியும்..அதான் சரியான சந்தர்பத்துக்கு காத்துகிட்டிருக்கேன்..அவனைக் கொஞ்சம் ஜாக்கிரதையாதான் கையாளணும்..என்னோட அறிவுரை அவன் மனசுல ஆணிப் போல பதியணும்.”
“மாறனைப் பற்றி மனுவுக்குத் தெரியுமா?” என்று சிவகாமி கேட்க,
“தெரிஞ்சிருக்கணும்.” என்றார் நாதன்.
“அடுத்து திரேனுக்கூட தெரியும்னு சொல்லுவீங்க..நம்ம வீட்ல எனக்கு மட்டும்தான் தெரியலை போல.”
“திரேன் நம்ம வீட்ல வேலைப் பார்க்கறவன்..அவனை எதுக்கு இப்ப இதுல கொண்டு வர்ற..மாறனைப் பற்றி மனு என்கிட்ட பேசினதில்லை..நானும் பேசினதில்லை..நான் இருக்கும் போது மாறன் விஷயத்தில அவன் தலையிட மாட்டான்.” என்றார் நாதன்.
“எப்படிங்க..என் பையனுக்கு எப்படி இந்தப் பழக்கமெல்லாம்?”
“இந்தக் காலத்தில அப்பா, அம்மாவைப் பார்த்து பிள்ளைங்களை எடை போட முடியாது.. நாலு வருஷம் வெளியூர்ல போய் படிச்சிருக்கான்..மூணு வருஷமா சம்பாதிக்கறான்..குடும்ப பொறுப்பு ஒண்ணும் கிடையாது..இப்ப இதெல்லாம் சகஜமா நடக்குது..எண்டில்லாத வீக் எண்ட் பார்ட்டீஸ்.” என்றார் நாதன்.
“உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியுது?”
“பார்க்ல வாக்கிங்க போகற போது எல்லாரும் சொல்றதைக் கேட்டுதான்…தில்லிலேருந்து கோயமுத்தூர் போனோம்னா சின்னவனை நம்மகூட கூட்டிகிட்டுப் போயிடணும்..அவனை இங்க விடக்கூடாது.”
“இரண்டு பேரையும் கூட்டிக்கிட்டு நம்ம ஊருக்கேப் போயிடலாம்..எனக்கு இங்க நடக்கறது எதுவுமேப் பிடிக்கலை.” என்றார் சிவகாமி.
“மனு வர மாட்டான்..அவன் இங்க செட்டாயிட்டான்..மாறனுக்கு இன்னும் சரியா எதுவும் அமையலை..அவன் நம்மளோட வரலாம்..பெங்களூர்ல அவனுக்கு வேலை கிடைக்கும்..வீகெண்டுக்கு நாம பெங்களூர் போயிடலாம்.” என்றார் நாதன்.
அவருடைய இரண்டு மகன்களும் சந்தோஷமாக, ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்த சிவகாமி, நாதன் சொன்னதைக் கேட்டவுடன் யோசனையில் ஆழ்ந்தார்.
இரு வீடுகளிலும் விஷயம் தெரிந்த பின் கலெக்டர் அவர் மகனுக்காக கார்மேகம் இருக்குமிடம் கருணை மனுவோடு வர போகிறாரா இல்லை கார்மேகம்தான் அவர் மகளுக்காக கலெக்டரின் குடும்பம்மீது கருணை மழை பொழியப் போகிறாரா?

Advertisement