Advertisement

ஸ்மிரிதியின் மனு – 17_2
“அவரு மேல தப்பில்ல..நான் தான் தப்பு செய்தேன்..அவரை இழுக்காத என் விஷயத்தில.”
“நீயே உன் விஷயத்தில எல்லாரையும் இழுத்துப்ப.” என்றான் மனு.
அப்போது அவர்கள் ஆர்டர் செய்த உணவு வர, இருவரும் சாப்பாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.  வேக வேகமாக எல்லாவற்றையும் காலி செய்து கொண்டிருந்த ஸ்மிரிதியைப் பார்த்து,
“எப்ப கடைசியா சாப்பிட்ட?” என்று மனு கேட்க,
“காலைல..லன்சுக்கு டயமில்ல.” என்று பதில் அளித்தாள்.
“பெங்களூருக்கு ஆன் ட்டியைப் பார்க்க போனேன்னு நினைச்சேன்.” என்று தூண்டில் போட்டான் மீனவன் மனு.
“அம்மாவோட ஒரு நாள் தங்கினேன்.” என்று அவன் தூண்டிலில் சிக்காமல் துண்டுப் பிரசுரமாக செய்தியை வெளியிட்டாள் ஸ்மிரிதி.
அவள் பதிலில் அதிருப்தி அடைந்த மனு,“உன் ஃபோன் எப்படி மஞ்சு நாத்கிட்ட போச்சு?” என்று நேரடியாக அவளைக் கேட்டான்.
“அவங்க படுக்கை மேல இருந்திச்சு..அவந்தான் பக்கத்தில இருந்தான்..நீ விடாம ஃபோன் பண்றதைப் பார்த்திட்டு எடுக்கவானு என்கிட்ட கேட்டான்..சரி எடுத்து நீயே மனுகிட்ட சொல்லிடு விஷயத்தேன்னு சொன்னேன்.” என்றாள்.
“இன்னிக்கு நான் உன்கிட்டேயிருந்து ஃபோன் தான் எதிர்பார்த்தேன்..நேர்ல சந்திப்போம்னு நினைக்கலை.”
“எப்படியும் நான் இன்னிக்கு இங்க வந்திருப்பேன்..என் வேலை எல்லாம் நின்னு போயிருக்கு.” என்றாள் ஸ்மிரிதி.
“இரண்டு வாரத்துக்கு மேல ஆயிடுச்சு நீ தில்லி விட்டு போய்..எங்கெல்லாம் போன?”
“முதல்ல தல்ஜித்கிட்ட போனேன்..அப்பறம் அங்கேயிருந்து கிளம்பி தில்லி வழியாதான் பெங்களூர் போனேன்.” என்றாள்.
“அப்படி என்ன உனக்கு ஊர் சுத்தற வேலை? எதுவாயிருந்தாலும் உங்கப்பாகிட்ட சொல்ல வேணாமா?” என்று மனு கேட்க,
“எப்பவும் சொல்லிட்டுதான் போவேன் இந்தமுறை சொல்ல விரும்பலை..அவருக்குப் பெங்களூர் போன பிறகு நிதானமா ஃபோன் பேசணும்னு நினைச்சுகிட்டிருந்தேன் அதுக்குள்ள ஆன் ட்டியே என்கிட்ட பேசிட்டாங்க..எங்கப்பாகிட்ட அதுக்கு அப்பறம் நானும் பேசினேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“எல்லாரோடையும் பேசுவே..என்கிட்ட பேச மாட்ட..என் ஃபோன் எடுக்க மாட்ட..ஏன்?”
“எதுக்கு எடுக்கணும்? என்ன பேசணும்?”
“நமக்குப் பேச வேண்டிய விஷயமேயில்லையா?” என்று அவளைப் பார்த்து மனு கேட்க,
“இல்லை..நான் எங்கப்பா பார்த்திருக்கற மாப்பிள்ளையை கல்யாணம் செய்துக்கலாம்னு நீ சொன்ன பிறகு என்ன பேச்சு இருக்கு நமக்குள்ள?” என்று சற்று கோபத்துடன் கேட்டாள்.
“நான் சொன்ன உடனே எல்லாத்தையும் நீ கேட்டுடறேயா? இல்ல எல்லார் சொல்றதையும் உடனே கேட்டு செய்திடறேயா? யாருக்கும் அடங்கிப் போகற பழக்கம் கிடையாது..எல்லாரையும் அடக்கி ஆளுறது உனக்கு வழக்கமாயிடுச்சு.” என்றான் மனு.
“நான் யாரையும் அடக்கறதில்லை..அவங்களா என்கிட்ட அடங்கிப் போறாங்க.”
“உன்கிட்ட அடங்கிப் போகலை..உன்கூட இருக்கறவங்க எல்லாத்தையும் உன்கிட்ட அடகு வைச்சிடறாங்க.”
“மனு..நான் யாரையும் என் வழிக்கு கட்டாயப்படுத்தறதில்லை..எனக்கு சரினு தோணறதைதான் நான் செய்யறேன்.” என்று ஸ்மிரிதி சொல்ல,
“உனக்கு சரினு தோணறது மற்றவங்களுக்கு சரியில்லைனு தோணுது.” 
“அதுக்கு காரணம் அவங்க எல்லாருக்கும் எது சரினு சொல்றத்துக்கு துணிவில்லை.” 
அவள் சொல்வது போல் அவனுக்கும் துணிவில்லையோ என்று ஒரு நொடி யோசித்த மனு அதற்கு மேல் அவளுடன் வாக்குவாதம் செய்யாமல்,
“எப்ப வந்த இங்க? என்று கேட்டான்
“மத்தியானம்.”
“இனிமே இங்கதானா? இல்ல வேற வெளியூர் வேலை இருக்கா?”
“இப்போதைக்கு இங்கதான் இருப்பேன்..ஆனா எதுவும் பக்காவா சொல்லமுடியாது.
“ஆன் ட்டியோட ஒரு நாள்தான் இருந்திருக்க அப்ப பெங்களூருக்கு வேற எதுக்கு போன? என்று அவள் ஒருவாரம் பெங்களூரில் தங்கியதற்கானக் காரணம் அறிய ஆசைப்பட்டான் மனு.
“தேவையிருந்திச்சு.”
“நான் ஃபோன் செய்தபோது நீ ஒருமுறைகூட எடுக்கலை. ஒருமுறைக்கூட  எனக்கு திரும்ப ஃபோன் செய்யலை.” என்று மறுபடியும் அவனைப் புறக்கணித்ததைப் பற்றி பேசினான்.
அவர்களின் ஃபோன் பேச்சு அவர்களுக்குள் இடைவெளியையும், சஞ்சலத்தையும் ஏற்படுத்துவதை அவனிடம் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. அதனால்,
“இப்ப நேர்ல பார்த்தச்சு.. சொல்லு..எனக்கு எதுக்கு ஃபோன் செய்துகிட்டிருந்த? என்று டிஷ்யூ பேப்பரால் அவள் உதட்டை துடைத்தபடி கேட்டாள் ஸ்மிரிதி.
“இப்ப உன்கிட்ட எதுக்கு சொல்லணும்? என்று வீம்பு பிடித்தான் மனு.
“சரி..சொல்லாத..இனி எனக்கு ஃபோனும் செய்யாத…நான் கிளம்பறேன்.” என்று எழுந்து கொண்டாள் ஸ்மிரிதி.
“ஹலோ..ஒசில சாப்டிட்டு போற..இது கபீரோட ஹோட்டலில்லை..நான் உன் பிரண்டும் கிடையாது.. ….பணத்தை வைச்சிட்டு போ.” என்றான்.
“வைக்க முடியாது..நான் சொன்னேனா என்னை இங்க அழைச்சுகிட்டு வர..நீயா அழைச்சுகிட்டு வந்த..டிஃபன் ஆர்டர் செய்த..அண்ட் நீ என்னோட பிரண்ட் ஆக முடியாது.”
“நான் உன் பிரண்ட் ஆக முடியாது..கரெக்டா சொன்ன..பணத்தை வை.”
“ஃபைன்..லெட்ஸ் கோ டச் (go Dutch)..நானும் யாருக்கும் ஓசில சாப்பாடு போடறது கிடையாது.” என்று சூடாகப் பதில் சொன்னாள் ஸ்மிரிதி.
அவர்கள் டேபிளில் மீதிருந்த பில்லை சரிப் பார்த்து அதில் பாதி அமௌண்டை வைத்தாள்.
அப்போது  அவளின் ஃபோன் அடித்தது.
ஃபோனை எடுத்த ஸ்மிரிதி,”சொல்லுங்க பா.” என்றாள்.
 கார்மேகம் பேசுவதை மௌனமாக கேட்டுகொண்டிருந்த ஸ்மிரிதி கடைசியில் “ஆமாம் பா…சரிங்க பா.” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தாள். அதற்குள் மனுவும் அவனின் பங்கை வைத்து விட்டு அவளுடனேயேப் புறப்பட்டான்.
அவர்கள் இருவரும் ஹோட்டலிலிருந்து வெளியே வந்தவுடன் மனுவுடன் ஒரு வார்த்தைப் பேசாமல் நடைபாதையிலிருந்து இறங்கி ரோட்டில் நின்று கொண்டாள் ஸ்மிரிதி.  அவளாக அவனுடன் பேச போவதில்லை என்று உணர்ந்த மனு,
“உங்கப்பா வருவாரா உன்னை இங்கேயிருந்து அழைச்சுகிட்டுப் போக?” என்று கேட்டான்.
“ஏன் நீ அழைச்சுகிட்டு போய் பெட் ரோலுக்குப் பணம் புடுங்கலாம்னு பார்க்கறியா?” என்று வெடுக்கென்று கேட்டாள் ஸ்மிரிதி.
“கண்டிப்பா..உன் வீடு வரைக்கும் கொண்டு போயி விட செலவாகும்..நான் மஞ்சு நாத் இல்ல..வண்டிய கொடுத்திட்டு அதை கலெக்ட் செய்ய உன் பின்னாடியே ஃபிளைட்ல வர்றத்துக்கு.” என்று மனுவும் வெடுக்கென்று பதில் சொன்னான்.
“மனு..விஷயம் தெரியாம வாய விடாத..அவன் அவனோட வேலை விஷயமா வந்திருந்தான்.. அப்படியே வண்டிய கலெக்ட் செய்துகிட்டான்..நான் அவனை வர சொல்லலை.” என்றாள் ஸ்மிரிதி.
“அன்னிக்கு ஏர் போர்ட்ல அவன்கிட்ட என்ன பேசிகிட்டிருந்த?” என்று வக்கீல் அவளைக் கூண்டில் ஏற்றி  அதே கேள்வியை கேட்டான்.
மனுவிற்கு பதில் சொல்லாமல் எப்படி தவிர்ப்பதென்று யோசித்து கொண்டிருந்த ஸ்மிரிதி அவனைப் பார்த்து,
“என் வாழ்க்கைல சில சமயம் நான் நோ என்ட்ரி..சில சமயம் ஒன் வே..சில சமயம் போத் வேஸ்..நீ நினைக்கற மாதிரி உன் விருப்பம் போல நான் என் ஸைன் போர்டை மாற்ற முடியாது.”
“வாழ்க்கைல மட்டும்தான் உனக்கு இந்த ரூல்ஸா..வண்டி ஓட்டும்போது கிடையாதா?” என்று மறுபடியும் வாய்பைத் தவற விடாமல் அவள் பத்து வருடமுன் செய்த தப்பை மனு வலியுறுத்த, ஸ்மிரிதியின் பொறுமை அவளைக் கைவிட்டது.
 “அப்படி வண்டி ஓட்டினதும் என் வாழ்க்கைலதான் நடந்தது உன்னோடதுல இல்லை…இனி எனக்கு ஃபோன் செய்யாத.”
“இதைச் சொல்லத்தான் என்னை ஃபோன் செய்து கூப்பிட்டியா?” என்று மனு கேட்க,
”நீதான் எனக்கு நிறைய தடவை ஃபோன் செய்த.” என்று அவனுக்கு நினைவுப்படுத்தினாள் ஸ்மிரிதி. 
அவளுக்கு பதில் சொல்லாமல் அவளையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான் மனு.
“இப்ப நீ நோ என்ட் ரி போர்டா? என்று கேட்டாள் ஸ்மிரிதி.
அதற்குப் பதில் சொல்லாமல்,”மஞ்சு நாத் எப்படி போன் எடுத்தான்?” என்று மறுபடியும் கேட்டான் மனு.
அந்த விடாக்கண்டன் விடை கிடைக்காமல் விடமாட்டான் என்றுணர்ந்த ஸ்மிரிதி,
“நீங்க இரண்டு பேரும் இப்பதான் மீட் செய்தீங்க..மனுகிட்ட பேசட்டுமானு என்கிட்ட கேட்டான்..சரினு சொன்னேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“அவங்க பெட் ரூம்ல உனக்கு என்ன வேலை?”என்று மனு கேட்க, அந்த கேள்விக்குப் பதில் சொல்வதின் மூலம் அவள் வாழ்க்கையில் மனுவிற்கு அனுமதி  அளிக்கறாள் என்பதை நன்கு உணர்ந்த ஸ்மிரிதி, மனுவை தள்ளி வைக்கமுடியாமல் அவளின் மனக்கதவை திறந்து அவனை உள்ளே அழைக்கும் புது முயற்சியை மேற்கொண்டாள்.
“சுசித் ரா இஸ் பிரெக்னெண்ட்.” என்ற ஸ்மிரிதியின் பதிலைக் கேட்டு அவளே மேலே பேசட்டும் என்று நடைபாதை கம்பியில் சாய்ந்து  கொண்டான் மனு.
அப்படியா, சந்தோஷம் என்று சம்பிரதாயப் பதில்கூட சொல்லாமல் மௌனமாக இருந்தவனிடம் அதற்குமேல் பேச்சைத் தொடர விரும்பாமல்,
 
“அப்பா இங்கதான் இருக்காரு..நீ கிளம்பு..நான் அவரோடவே போயிடறேன்.” என்று அவள் சற்றுமுன் எடுத்து புது முயற்சியைக் கைவிட்டு விட்டு மனுவை அவள் வாழ்க்கையின் வாசலில்ளிருந்து வெளியேற்றினாள் ஸ்மிரிதி.
“உங்கப்பாவோட போகணும்னா என்னை எதுக்கு இங்க கூப்பிட்ட?” என்று கோபமாகக் கேட்டான் அதுவரை அவள் வாழ்க்கையை எட்ட இருந்து பார்த்து கொண்டிருந்தவனுக்கு எட்டி பார்க்க அளிக்கப்பட்ட அனுமதி உடனே பறிக்கப்பட்டவுடன் ஏமாற்றமடைந்த மனு.
“நீதான் என்கிட்ட பேச ஒரு வாரமா முயற்சி செய்துகிட்டு இருந்த அதான் ஊருக்கு வந்த பிறகு ஃபோன் எதுக்கு உன்னை நேர்ல பார்க்கலாம்னு முடிவு செய்தேன்.” என்று அவர்கள் சந்திப்பிற்கு அவனைக் காரணமாக்கினாள் ஸ்மிரிதி.
யார் யாரிடம் பேச விழைந்தார்கள், எதைப் பற்றி பேச நினைத்தார்கள் என்று இருவருமே அறிய முற்படவில்லை.  காரணம் தெரியாமலேயே அந்த மாலை நேர சந்திப்பு காலாவதியாகப்  போகிறதா? 

Advertisement