Advertisement

ஸ்மிரிதியின் மனு – 16_1
“என்ன சொல்ற? புரியலை.” என்றார் பிரேமா.
“தல்ஜித்கிட்ட உங்களுக்கு ஒரு வேலைக்கு சொல்லியிருக்கேன்..இனி நீங்க பெங்களூர்ல இருக்க வேணாம்..ஜலந்தர் வந்திடுங்க..அங்க நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கு..அவங்க பல விதத்தில மக்களுக்கு சேவை செய்யறாங்க..எதாவது ஒரு இடத்தை நீங்க மெனெஜ் செய்யலாம்..பெண்களுக்குனுத் தனியா  இன்ஸ்டிடுயுட்ஸ் இருக்கு..உங்க விருப்பம் எதுவோ அது நடக்கும்.” என்றாள் ஸ்மிரிதி.
“ஏன் திடீர்னு ஸ்மிரிதி?”
“என்னால உங்களை அடிக்கடி பார்க்க வர முடிய மாட்டேங்குது..நீங்க அங்க பக்கத்தில இருந்தா பஸ்ல, டி ரெயின்ல நினைச்சபோது வந்து பார்க்க முடியும்.”
“அதான் ஏன்? இவ்வளவு நாள் இல்லாம இப்ப ஏன்?”
“நீங்க சொன்னீங்க இல்ல..ஒரு வேலையைத் தேடிக்க சொல்லி அதனாலதான் முதல்ல உங்களை அங்க அனுப்பறேன்..அப்பறம் நானும் அங்கையே வந்திடறேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“மனுவைப் பிடிச்சிருக்குணு சொல்ற..என்னை ஜலந்தருக்கு கூப்பிடற..நீ ஒரு வேலையத் தேடிக்க போறேனு சொல்ற..தில்லிய விட்டிட்டு ஜலந்தருக்கு வர போறேனு சொல்ற..ஒரே குழப்பமா இருக்கு ஸ்மிரிதி.”
“எங்க இரண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு அவ்வளவுதான்..அதுக்கு அப்பறம் என்ன நடக்கபோகுதுனுத் தெரியாது..நீங்க ஜலந்தருக்கு வரப் போகிறது நிச்சயம்..மனுவிற்கும் அதுக்கும் சம்மந்தமில்லை..நான் தல்ஜித்கிட்ட பேசியாச்சு..இங்க உங்க இடத்துக்கு ஆள் பார்க்க சொல்லிடுங்க.” என்றாள் ஸ்மிரிதி.
“எனக்கு அங்க ஒத்துவராது ஸ்மிரிதி.” என்று மறுப்பு தெரிவித்தார் பிரேமா.
“ப்ளீஸ்..தயவு செய்து நான் சொல்றதைக் கேளுங்க..அங்க எல்லாத்துக்கும் தல்ஜித் இருப்பான்..எவ்வளவு நாள் உங்களால தனியா இருக்க முடியும் மா? இன்னும் எத்தனை வருஷம் டீச்சர் வேலைப் பார்ப்பீங்க?”
“இங்க எனக்கு பழகிப்போச்சு..பக்கத்திலேயே எல்லாம் இருக்கு.” என்றார் பிரேமா.
“அங்கையும் எல்லாம் இருக்கு..மெடிடேஷன், யோகா, சேவா எல்லாம் செய்யலாம்..எதுவும் செய்ய வேணாம்னாகூட சும்மா உட்கார்ந்திருக்கலாம்..இங்க அப்படி முடியாது..சம்பளம் கொடுக்கறாங்க..வேலைப் பார்க்கணும்.”
“அதுக்குதான் தல்ஜித்கிட்ட பணம் கொடுத்தியா? எனக்காகவா?” என்று கேட்டார் பிரேமா.
“யெஸ்..உங்களைப் போல ஆளுங்களுக்காக….சின்ன குழந்தைங்கலேர்ந்து, பெரியவங்க வரைக்கும் காரணமில்லாம இந்த சழூகம் ஒதுக்கி வைக்குது..அவங்க எல்லாருக்கும் ஒரு இடம் வேணுமில்ல..அந்த இடம் தல்ஜித்  ஏற்படுத்தி கொடுக்கறான்.” என்றாள் ஸ்மிரிதி.
“அது உன்னோட சம்பாத்தியமில்ல..உங்கப்பாவோடது..அவரு எப்படி சம்பாதிச்சாருனு யாருக்குத் தெரியும்?”
“எனக்கும் அது தெரிய தேவையில்ல…என்னைக் கல்யாணம் செய்துக்க கேட்டவன் வீட்டுக்குப் போகாம வீடே இல்லாதவங்களுக்கு போகுது…அப்பா எப்படி சம்பாதிச்சா என்ன? எல்லாருக்கும் வாழ்க்கைல ஒரே மாதிரி வசதியோ, வாய்ப்போ கிடைக்கறதில்ல..அவருக்கு கிடைச்ச வாய்ப்பை வைச்சு அவரு வாழ்க்கையை வசதி ஆக்கிகிட்டிருக்காரு….அவரு கொடுக்கற பணத்தை வைச்சு நான் மற்றவங்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரேன்…வாய்ப்புதான் வாழ்க்கை.”
“உன் செலவை எப்படி பார்த்துக்கற..உன் கைல எதுவும் வைச்சுக்காம எப்படி உன்னால இருக்கமுடியுது..கோயமுத்தூர் ஹோட்டல் செலவு, இந்த மாதிரி வந்து போற செலவெல்லாம் எப்படி செய்யற?”
“எல்லாம் என்னோடதுதான்..சுசித்ரா, கபீர் இரண்டுபேரும் கமிஷன் தராங்க..எனக்கு தேவைப்படும்போது அதை செலவழிக்கறேன்..மற்ற செலவை அப்பா பார்த்துக்கறாங்க.” என்றாள் ஸ்மிரிதி.
“அவங்க இரண்டு பேரும் தொழில் செய்யறாங்க ஸ்மிரிதி..நீயும் இதை தொழிலா செய்..எங்கையும் வேலைக்குப் போக வேணாம்.”
“சுசித் ராவும், கபீரும் பொருளை வித்து தராங்க மா..அவங்க இரண்டு பேருகிட்ட போன பிறகுதான் அந்தப் பொருளுக்கு மதிப்பு கூடுது..முன்னாடி பக்கத்துலேயேதான் வித்துகிட்டிருந்தோம்…அங்க இருக்கற போட்டி, பொறாமைல திறமை, தரம் தனியா தெரியலை..எல்லாத்துக்கும் ஒரே விலை..அதனால நாந்தான் இந்தப் புது முயற்சியை ஆரம்பிச்சேன்..இதுக்கு நான் அவங்ககிட்டேயிருந்து காசு எடுத்துக்க முடியாது..திறமைக்கு வழி அமைச்சு கொடுக்கறது அஸிஸ்டன்ஸ்.. வல்யூ அடிஷன் (value addition) கிடையாது..” என்றாள் ஸ்மிரிதி.
“எனக்கு தெரிஞ்சதை சொல்லிட்டேன்..அப்பறம் உன் இஷ்டம்..எப்ப கிளம்பற?” என்று கேட்டார் பிரேமா
“நாளைக்கு சுசித் ரா வீட்டுக்குப் போறேன்..அவளுக்கு அர் ஜெண்டா கடையைப் பார்த்துக்க ஆள் தேவைப்படுது….மஞ்சு நாத்னால முடியாது அதான் நான் வந்திருக்கேன்..அப்படியே உங்ககிட்ட எல்லாத்தையும் பேசிடலாம்னு நினைச்சேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“என்னைப் பார்க்க வந்தேனு சொன்ன..இப்ப சுசித்ராக்காக வந்தேனு சொல்ற.” என்றார் பிரேமா.
“இரண்டும்தான் மா.”
“போனமுறையும் அவ கடை விஷயமாதான் வந்த..இப்பவும் வந்திருக்க..ஒரு வாரத்தில என்ன ஆச்சு ஸ்மிரிதி?”
“இப்ப கடைக்காகன்னு வரலை..அவளுக்காக வந்திருக்கேன்..கடையையும் பார்த்துப்பேன்.” என்றாள் ஸ்மிரிதி.
அதுவரை பொறுமையாக இருந்த பிரேமா,
“அவளுக்கு வேற ஆளு கிடைக்கலேயா..உன்னை தில்லிலேர்ந்து வரவழைக்கணுமா? நாலு நாள் கடைய மூடி வைக்க முடியாதா? நீ வேலைவெட்டி இல்லாம இருக்க அதனாலதான் இதெல்லாம் செய்ய முடியுது..நீயும் வேலை செய்துகிட்டு இல்ல கல்யாணம் செய்துகிட்டு இருந்தேன்னா இப்படி ஃப்ரீயா சுத்த முடியுமா உன்னால?” என்று ஒரு தாயாய் கொதித்துப் போய் கேட்டார்.
“நான் வேலைல இருந்திருந்தாலும் சரி..கல்யாணம் செய்துகிட்டு இருந்தாலும் சரி சுசித்ராக்குத் தேவைன்னா கண்டிப்பா வருவேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“அவளும் உனக்கு ஏதாவதுன்னா இப்படி எல்லாத்தையும் விட்டிட்டு ஓடி வருவாளா?” என்று கேட்க,
“அதை எதிர்ப்பார்த்து நான் செய்யறது இல்ல.”
“அவளோட குடும்பம் இந்த ஊர்லதான் இருக்கு..அவ கல்யாணமாகி அவ புருஷனோட இருக்கா.”
“தெரியு மா..ஆனா இப்ப அவங்க இரண்டு பேருக்கும் என் உதவி தேவை அவ்வளவுதான்.”
“ஏன்?”
“ஷீ இஸ் பிரக்னெண்ட்.” என்றாள் ஸ்மிரிதி.
“கல்யாணமாகி இரண்டு வருஷமாயிடிச்சில்ல.”
“ஆமாம்.”
“போன வாரமே உனக்கு இந்த விஷயம் தெரியுமா?”
“இல்ல மா..ஆனா அவளுக்கு ஏதோ பிராப்ளம்னு  கெஸ் செய்தேன்..இதுன்னு இப்பதான் தெரியும்.” என்றாள் ஸ்மிரிதி.
“இது நல்ல விஷயம் ஸ்மிரிதி..பிராப்ளமில்லை.” என்றார் பிரேமா
“எல்லாருக்கும் ஒரே மாதிரி தோணாது மா..ஷீ நீட்ஸ் மீ…அதான் வந்திருக்கேன்.”
“ஸ்மிரிதி ..அவளுக்கு உன் வயசு..அவ குடும்பம் முழுக்க டாக்டர்ஸ்..அவங்களுக்குச் சொந்தமா ஆஸ்பத்திரி இருக்கு.” என்று அடுக்கினார் பிரேமா.
“அம்மா,என் வாழ்க்கையோட சில நிகழ்வுகள் சுசித்ரா சம்மந்தப்பட்டது..சிலது மெஹக் சம்மந்தப்பட்டது.. எங்க எல்லாரோடதும் சிலது…எங்களுக்குத் தனியா குடும்பம் இருந்தும் நாங்க அஞ்சு பேரும் ஒரு குடும்பமாயிட்டோம்..அதனால சில  நிகழ்வுகள் நினைவுகளாக எங்களைப் பாதிக்கறச்சே அதைக் கடக்க உதவி தேவைப்படுது..
சுசித்ராவுக்கு இப்ப அந்த மாதிரி ஒரு சூழ் நிலை..அவ அம்மா, அப்பா, கணவர் எல்லாரும் அவளோட இருந்தும் அவ என்னைக் கூப்பிட்டிருக்கா..அவ வீட்டுக்கு முதல்ல போயிருந்தா உடனே உங்களை வந்து பார்த்திருக்க முடியாது அதனாலதான் முதல்ல இங்க வந்தேன்..அவளோட கொஞ்ச நாள் இருந்திட்டு நான் தில்லி போயிடுவேன்.”என்றாள் ஸ்மிரிதி.
“உனக்கும் அந்த மாதிரி சூழ் நிலை ஏற்பட்டிருக்கா?அப்ப நீ யாரை உன் உதவிக்கு கூப்பிட்ட?” என்று பிரேமா கேட்க.
“எனக்கு அந்த மாதிரி சூழ் நிலை இதுவரைக்கும் வரலை… வராது மா..நான் வெறும் நிகழ்வுகள்தான்…” என்றாள் ஸ்மிரிதி.
“இல்ல ஸ்மிரிதி..உன்னையும் ஒரு நாள் எல்லாம் நினைவுகளும் சேர்த்து அழுத்தப் போகுது.” என்றார் பிரேமா.
“ஒகே..அப்ப நீங்க வாங்க என்னோட உதவிக்கு.. நீங்க இருங்க என்னோட.” என்றாள் ஸ்மிரிதி.  
“கண்டிப்பா..உன்கூடவேதான் இருப்பேன்.” என்று பதில் சொன்ன பிரேமா அறிந்திருக்கவில்லை அவர்கள் இருவரும் அமர்ந்திருந்த அதே அறையில், அதே கட்டிலில் அவரின் நினைவுகளால்தான் ஸ்மிரிதிக்கு அந்த நிலை ஏற்பட போகிறதென்று.
அதன்பின் தாய், மகள் இருவரும் மாணவிகள் பயிற்சி செய்யும் விளையாட்டு மைதானத்தில் போய் அமர்ந்துக் கொண்டனர்.  அந்த மாலை வேளையில் மற்ற மாணவிகளுடன் கால் பந்து விளையாடினாள் ஸ்மிரிதி.  அவள் விளையாடுவதைப் பார்த்து கொண்டிருந்த பிரேமாவிற்கு ஸ்மிரிதியினுடையப் பள்ளிப் பருவம் மனதில் வந்து போனது. 
பயிற்சி முடிந்தவுடன் அங்கே குழுமியிருந்த மாணவிகளுடன் பிரேமா பேசிக் கொண்டிருந்த போது ஒய்வெடுத்து கொண்டிருந்த ஸ்மிரிதியை அவளின் ஃபோன் அழைத்தது.  அவளை அழைப்பது சிவகாமி என்று தெரிந்தவுடன் சிறிது பதட்டத்துடன் ஃபோனை அட்டெண்ட் செய்தாள் ஸ்மிரிதி. அவருடன்  பேசிய பிறகு அவர்களைப் பற்றி மனு இன்னும் சிவகாமியிடம் எதுவும் சொல்லவில்லை என்று அவளுக்கு உறுதியானது. அதன்பின் சிவகாமிக்கு வாக்களித்தது போல் கார்மேகத்திற்கும் ஃபோன் செய்து பேசினாள் ஸ்மிரிதி.  
அவருடன் அறைக்குத் திரும்பிய ஸ்மிரிதியைப் பார்த்து,
“யாரு ஃபோன்ல?” என்று கேட்டார் பிரேமா.
“சிவகாமி ஆன் ட்டி பேசினாங்க.. மனுவுக்கு ஃபோன் போட்டு என்னைப் பற்றி விசாரிச்சிருக்காரு அப்பா..நானே அப்பாகிட்ட பேசிடறேனு ஆன் ட்டிக்கிட்ட சொன்னேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“உங்கப்பாகிட்ட மத்தியானம் பேசியிருக்கலாமே.” என்றார் பிரேமா.
“என் ஃபோன் டி ரை செய்த எல்லாருக்கும் நான் பெங்களூர்ல இருக்கறது தெரிஞ்சிருக்கும்.”
“ஆனாலும் நீ தகவல் சொல்லணும் ஸ்மிரிதி.”
“உங்களோட பேசின பிறகுதான் அப்பாகிட்ட பேசணும்னு நினைச்சேன்..அதுக்குள்ள ஆன் ட்டி ஃபோன் செய்திட்டாங்க.. இன்னிக்கு பூரா மனு எனக்கு ஃபோன் செய்துகிட்டிருந்தான்..நான் அடெண்ட் செய்யலை..அதனாலதான் ஆன் ட்டிய எனக்கு ஃபோன் செய்ய சொல்லியிருப்பான்.” என்றாள் ஸ்மிரிதி.
“அவன் ஃபோன் செய்தபோது அவன்கிட்ட பேசியிருக்கலாமே ஸ்மிரிதி.” என்றார் பிரேமா.
“வேஸ்ட் மா..அவனை நேர்ல பார்த்துதான் பேசணும்.” என்று அவர் ஆலோசனையைப் புறக்கணித்தாள் ஸ்மிரிதி.
அதற்குபின் மனுவைப் பற்றி பேசாமல் அவளைப் பற்றி பேசினார் பிரேமா.
“இன்னிக்கு நீ அந்த ஸ்டுடண்ஸோட விளையாடும் போது எனக்கு உன்னோட ஸ்கூல் டேஸ் நினைவுக்கு வந்திச்சு…நீ படிப்பு, விளையாட்டு எல்லாத்தைலேயும் முதல்ல வருவே..அதான் உங்கப்பா உனக்கு லோக்கல் ஸ்கூல் சரிபடாதுனு தெரதூன்ல ஹாஸ்டல்ல சேர்த்துவிட்டாரு.” என்றார் பிரேமா.
“வாழ்க்கைக்குத் தேவையானதையும் அங்கதான் கத்துகிட்டேன்..இந்த ஸ்மிரிதி அங்கே பிறந்தவ.”
“நீ தனியா உணர்ந்திருக்க ஹாஸ்டல்ல…நிறைய விஷயம் சொல்லவேயில்ல..சில விஷயம்தான் சொல்லியிருக்க என்கிட்ட.” என்றார் பிரேமா.
“நோ..தனியா இல்ல..பிரண்ட்ஸ் இருந்தாங்க..சில விஷயத்துக்கு விளக்கம் கொடுக்க முடியாது அதனால அதைப் பற்றி சொன்னதில்லை….இப்ப உங்களைப் பார்க்க வந்ததுக்கு எவ்வளவு விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கு..கேள்வி கேட்கறது எல்லாத்தையும் இன்னியோட விட்டிடுங்க..
மனு இன்னும் ஆன் ட்டிகிட்ட எங்களைப் பற்றி சொல்லலை..உங்களுக்கு ஆன்ட்டி ஃபோன் செய்தா சாதாரணமா பேசுங்க..எங்க உறவு இதுக்கு மேல முன்னேறிச்சின்னா உங்களுக்கு நானோ இல்ல ஆன்ட்டியோ ஃபோன் செய்வோம்..அப்படி நடக்கலேன்னா ஒண்ணு பிராப்ளமில்ல..நீங்க அவங்களோட இருக்கற உறவை மெயிண்டெயின் செய்யுங்க..நான் தில்லில இருக்கறவரைக்கும் ஆன்ட்டியும், நானும் எப்பவும் போல ஒருத்தரை ஒருத்தர் அவாய்ட் செய்திடுவோம்..வருத்தப்படாதீங்க.” என்றாள் ஸ்மிரிதி.
“அவ என்கிட்ட பேசிகிட்டுதான் இருக்கா..கல்யாணத்தில எடுத்த ஃபோடோஸ் அனுப்பியிருந்தா..அதுக்கு அப்பறம் நிறைய நேரம் பேசிக்கிட்டிருந்தோம்..அப்பதான் உங்கப்பா, மனிஷ், கீதிகா, மெஹக் எல்லார் பற்றியும் சொன்னா..கல்யாணத்தில கீதிகா சரியாப் பேசலைனு சொன்னா.” என்றார் பிரேமா.
“அவங்க அப்படிதான்..என்கிட்டகூட அளவோடதான் பேசுவாங்க..அவங்க குடும்பத்துலேர்ந்தும் ஒதுங்கிதான் இருக்காங்க….எனக்குத் தெரிஞ்சு மனிஷும், அவங்களும் இந்தக் கல்யாணத்திலதான் அவங்க குடும்பத்தோட கொஞ்சம் நெருக்கமா இருந்திருக்காங்க..அவங்க மனசுல என்ன இருக்குன்ணு அவங்களுக்குதான் தெரியும்.” என்றாள் ஸ்மிரிதி.
மனதைப் பற்றி பேசிய ஸ்மிரிதியை யோசனையாகப் பார்த்து கொண்டிருந்த பிரேமா, “சிவகாமினு சொன்னானா இல்லை ஷிவானினு சொன்னானா மனு?” என்று திடீரென்று கேட்டார்.

Advertisement