Advertisement

அந்த ஸ்கூல்ல எல்லாருக்கும் எல்லாரோட குடும்பமும் அத்துபடி..அவங்க அப்பா, அம்மாலேர்ந்து, கஸின்ஸ் எல்லாரும் அங்கையே படிச்சிருக்காங்க இல்லை படிச்சுகிட்டிருந்தாங்க…
ஏழாவது கிளாஸ்ல ஒரு பையன் என்னைப் பார்த்து.”நீ எப்படி இங்க படிக்க வந்த..நீ என்னோட வீட்டுல வேலை செய்யற வேலைக்காரப் பொண்ணு மாதிரி இருக்கேன்னு சொன்னான்.. என்று ஸ்மிரிதி மேலேத் தொடருமுன்,
“ஸ்மிரிதி.” என்று அதிர்ச்சியானார் பிரேமா.
“உங்களுக்குக் கேட்கவே கஷ்டமா இருக்கு இல்ல? இப்ப அதைப் பற்றி சொல்றசே எனக்கு கஷ்டமாவே இல்ல….அதை நான் நிகழ்வாகப் பார்த்ததுனால அது என்னோட அனுபவமாயிடுச்சு..நினைவுகளாகப் பார்த்திருந்தேன்னா அந்த அனுபவத்திற்கு மகிழ்ச்சி, துக்கம்னு அடைமொழி போட்டிருப்பேன்..அடைமொழியோட இருக்கும் அனுபவங்கள் நமக்கு ஆசானாக முடியாது..
இன்னிக்கு என்னை இங்க அழைச்சுகிட்டு வந்த டாக்ஸி டிரைவர் என் தோற்றத்தைப் பார்த்து எனக்கு ஹிந்தி தெரியாதுனு நினைச்சு என்னைப் பற்றி யார்கிட்டையோ ஃபோன்ல சொல்லிகிட்டிருந்தான்..ஏழாங் கிளாஸ்ல அந்தப் பையன் சொன்னதுக்கும் இன்னிக்கு இந்த டாக்ஸி டிரைவர் சொன்னதுக்கும் அதிக வித்தியாசமில்லை…
அன்னிக்கு அந்தப் பையன்கிட்ட என்ன பதில் சொன்னேன் தெரியுமா?..நான் உன் வீட்டுக்கு வேலைக்குப் போயிடறேன்..நீ என் வீட்டுக்குப் போயிடு..எங்க வீட்ல வீட்டு வேலை செய்ய உன்னை மாதிரி ஒரு பையனத்தான் தேடிக்கிட்டிருகாங்கனு சொன்னேன்.” என்று ஸ்மிரிதி முடிக்குமுன் அவள் பேச்சை இடைமறித்தார் பிரேமா,
“ஏன் ஸ்மிரிதி?” என்று கேட்டார்
“அவனைப் பற்றி ஸ்கூல்ல கம்ப்ளயெண்ட் செய்யாம அவன்கிட்ட ஏன் அப்படி சொன்னேன்னு கேட்கறீங்களா?’
“ஆமாம்” என்று பிரேமா தலையசைக்க, ஸ்மிரிதி அவள் விளக்கத்தைத் தொடர்ந்தாள்.
“அவனை புல்லினு (bully) கம்ப்ளெய்ண்ட செய்திருக்கலாம்..அப்படிதான் செய்யணும்னு ஸ்கூல் ரூல்ஸ்….ஆனா நான் அவனை பதிலுக்கு அவமானப்படுத்தினேன்…நம்மளை யார், எப்படி நடத்தறாங்ககறது  நம்ம கைலதான் இருக்கணும்…
இன்னிக்கு இந்த டிரைவர்கிட்ட என்ன சொன்னேன் தெரியுமா…டாக்ஸில வர பொண்ணுங்களப் பற்றி இப்படிதான் தகவல் சொல்லிக்கிட்டிருக்க போல..இந்தத் தகவலை சொல்ல வேண்டிய இடத்தில சொல்லி வைக்கறேன்..
அடுத்தமுறை யாராவது பொண்ணுங்க காணாம போனா உன்னை உன் வீட்லேர்ந்து ஆளுங்க  அழைச்சிட்டு போவாங்க..நீ திரும்பி வரும்போது உன் இரண்டு கால் மட்டும் இருக்காது அப்பறம் எப்படி வண்டி ஓட்டி உன் காலத்தை ஓட்டவேனு பார்க்கறேன்னு  மிரட்டிட்டு வந்திருக்கேன்..நான் சொன்ன ஆளுங்க போலீஸ் இல்லைனு அவனுக்குத் தெளிவா புரியவைச்சேன்.” 
“ஸ்மிரிதி..நீ அப்படி செய்திருக்ககூடாது..அவன் வண்டி நம்பர் நோட் செய்து போலீஸ்கிட்ட கொடுத்திருக்கணும்.” என்றார் பிரேமா.
“எல்லாரும் அதையேதான் செய்யறாங்க ஆனாலும்  தனியா பயணம் செய்யற பெண்கள் காணாம போயிகிட்டுதான் இருக்காங்க..இரயில், பஸ் இந்த மாதிரி பொது போக்குவரத்துல பயணம் செய்யறவங்ககூட இறங்க வேண்டிய இடத்துல இறங்கறது இல்ல..
தனிப்பட்ட முறைல பயணம் செய்யறவங்க எல்லாரும் பயந்துகிட்டுதான் செய்யறாங்க இல்ல எனக்கு அந்த மாதிரி நடக்காதுனு நம்பிக்கைல இருக்காங்க..இந்த மாதிரி விஷயத்துக்கு பயமும், நம்பிக்கையும் வேலைக்கு ஆகாது..
நம்ம ஊர்ல தப்பு நடந்த பிறகு நியாயம் கேட்க நூறு பேர் போராடறாங்க..தப்பு நடக்கும் போதே அதை தட்டி கேட்க, தடுத்து நிறுத்த ஒரு ஆளில்ல….நான் நூத்துல ஒருத்தியா இருக்க விரும்பல..தைரியமுள்ள அந்த ஒரே ஒரு ஆளா இருக்க விரும்பறேன்..அதனாலதான் அந்தப் பையனை அப்பவே அவமானப்படுத்தினேன்..இன்னிக்கு இந்த டிரைவரைப் பயமுறுத்தி தப்பை தடுக்க முயற்சி செய்திருக்கேன்…சில சூழ் நிலைகளுக்குப் பொதுவான விதிமுறைகள், கோட்பாடுகள் சரியா வராது.” என்றாள் ஸ்மிரிதி.
“அந்த டாக்ஸி டிரைவர் உன்னை வேற எங்கையாவது அழைச்சுகிட்டு போயிருந்தா என்ன செய்திருப்ப?” என்று பயத்துடன் கேட்டார் பிரேமா.
“உங்ககிட்ட இவ்வளவுக்கூட சொல்லியிருக்ககூடாது.. இன்னிக்கு என் கலரைப் பற்றி பேசின அவனுக்குக் கண்டிப்பா சிவப்புக்  கலரையாவது காட்டியிருப்பேன்.”
“என்ன சொல்ற நீ?”
“என் பாதுகாப்பைப் பற்றி யோசிக்காம நான் இந்த மாதிரி தனியா டி ராவல் செய்யமாட்டேன்..எனக்கு தற்காப்பு கலைகள் தெரியும் மா..மஞ்சு நாத்கிட்டையும் எல்லா டீடெய்ல்ஸூம் கொடுத்திட்டுதான் இருந்தேன்.. 
ஒவ்வொருத்தரும் அவங்களுக்குத் தெரிஞ்ச விதத்திலதான் ஒரு சூழ் நிலைய கையாள முடியும்….எனக்கு பிடிக்காத விஷயத்தைக்கூட சில நேரம் அந்தச் சூழ் நிலையோட கட்டாயத்தில நான் செய்திருக்கேன்..இன்னிக்கு எனக்கு அந்த டிரைவரோட பேசவே பிடிக்கலை ஆனா அவனை மிரட்டிப் பேச வேண்டிய சூழ் நிலை..அந்த வாய்ப்பை நான் மிஸ் செய்ய விரும்பலை.”என்றாள் ஸ்மிரிதி.
“எங்களோட விவாகரத்து ஏற்படுத்தின சூழ் நிலைய அப்படிதான் ஏத்துகிட்டையா?..உனக்குப் பிடிக்காமதான் உங்கப்பாவோட இருக்கியா ?” என்று அத்தனை நாட்களாக அவரை உறுத்திக் கொண்டிருந்ததைக் கேட்டார் பிரேமா.
“அப்பாவும், நீங்களும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பி கல்யாணம் செய்துகிட்டீங்க..நீங்க உங்க குடும்பத்தை எதிர்த்து உங்க வாழ்க்கைத் துணைய தேர்ந்தெடுத்தீங்க..பதினைந்து வருஷம் கழிச்சு அந்த துணை வேணாம்னு தனியா வாழ முடிவெடுத்தீங்க..
நம்ம மூணு பேர் வாழ்க்கைல விவாகரத்துங்கற நிகழ்வோட விளைவா ஏற்பட்ட  மாற்றங்கள் நம்ம யாருக்குமே சாதகமா இல்ல..மூணு பேரும் முயற்சி செய்து சாதகமாக்கிகிட்டோம்..
அனாதையா இருந்த அப்பா உங்களைக் கல்யாணம் பண்ணிகிட்டு ஒரு கணவனா, ஒரு குழந்தைக்குத் தகப்பனா வாழ்ந்த பிறகு எப்படித் திரும்ப அனாதையாக முடியும்..அவரு வாழ்க்கைல அந்த மாதிரி நடக்கறது தப்புனு எனக்குப் பட்டிச்சு..
உங்களைப் பிடிக்காம, அவரைப் பிடிச்சு, எனக்கு என்ன பிடிக்குமுன்னு நினைச்சு நான் எடுத்த முடிவு இல்லை அது..அப்பாக்கு என் துணை அவசியம்னு நினைச்சு அவரோட இருக்க முடிவு செய்தேன்….அப்ப என் வாழ்க்கைல இருந்தவங்களுகெல்லாம் என் முடிவு தப்பா பட்டிருக்கும் ஆனா எனக்கு அது சரியா பட்டிச்சு..
கொஞ்ச நாள் கழிச்சு அப்பா கீதிகாவை கல்யாணம் செய்துகிட்டாரு..அதுவும் எல்லாருக்கும் தப்பா படிச்சு.….எனக்கு இனி அவர் அனாதையா உணர மாட்டருனு மட்டும் தோணிச்சு..
இப்ப நீங்க உங்களோட மண வாழ்க்கையின் சில பகுதிகளை நிகழ்வுகளாகப் பார்க்கறீங்க..சிலதை நினைவுகளாகப் பார்க்கறீங்க..அப்பா சம்மந்தப்பட்டதெல்லாம் நிகழ்வுகள்..நான் சம்மந்தபட்டதெல்லாம் நினைவுகள்..
மனு கல்யாணத்துக்கு வரும்போது நான் சிரிச்சுகிட்டிருப்பேனானு கேட்டீங்க இல்ல…எனக்கும் கஷ்டமாத்தான்  இருக்கும் மா..அவனோட சார்ந்த நினைவுகளை நான் நிகழ்வுகளாகப் பார்க்க கத்துக்கணும்..அப்படிப் பார்க்க கண்டிப்பா முயற்சி செய்வேன் முடங்கிப் போக மாட்டேன்….நான் ஸ்மிரிதி மா.”என்றாள் ஸ்மிரிதி.
“நீ சொன்னது சரி ஸ்மிரிதி..உன் நினைப்புதான் எனக்கு எப்பவும் இருக்கு..உன்னை விட்டிட்டு வந்தது தப்புணு தோணுது..எங்கம்மா செய்த அதே தப்பை நான் உனக்கு செய்திட்டேன் ஸ்மிரிதி..உன்னை விட்டுக் கொடுத்திட்டேன்..
எங்கம்மாக்கு ஒரு பையன் இருக்கான் அவங்க செய்த பாவத்தை கரைச்சு, வைதாரணியக் கடக்க வைச்சிடுவான்..நான் செய்த பாவம் என்னை இங்கையே பிடிச்சு வைக்கப் போகுது..என்னால வைதாரணியக் கடக்க முடியாது ஸ்மிரிதி.” என்று சொன்ன பிரேமா ஒ வென்று அழ ஆரம்பித்தார்.
“வைதாரணியா? என்னது மா அது?” என்று ஸ்மிரிதி கேட்க,
ஸ்மிரிதியின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அழுது கொண்டிருந்தார் பிரேமா. 
“ப்ளீஸ் அழாதீங்க..என்ன மா அது?” என்று மறுபடியும் கேட்டாள்.
அவரை அமைதிப்படுத்தி கொண்ட பிரேமா,
“என்னோட வீட்டுல  சரி, தப்பு, பாவம், புண்ணியம் எல்லாம் அவங்க கண்ணோட்டத்திலதான் பார்ப்பாங்க..எங்கம்மாக்கு புவனாவை விதவைனு வீட்ல சேர்க்க பிடிக்கல..சிவகாமிய வேற ஜாதினு வெளியவே வைச்சு பேசுவாங்க..அவங்க இரண்டு பேரும் என்னோட சினேகிதிங்கறதைத் தாண்டி வேற எதுவும் என் கண்ணுல படலை..
அவங்களோட என் நட்பை ஒத்துக்கிட்ட எங்க வீட்ல உங்கப்பாவோட நான் அமைச்சுகிட்ட வாழ்க்கைய ஏத்துக்க முடியல.. அவங்க கண்ணோட்டத்தில அதுதான் நான் செய்த பெரிய பாவம்..ஆனா எனக்கு  இந்தப் பிறவில நான் செய்த ஒரே பாவம் உன்னைத் தனியா விட்டிட்டு நான் தனியா ஒரு வாழ்க்கையை அமைச்சுகிட்டதுதான்..அந்தப் பாவத்தைக் போக்கத்தான் வழியைத் தேடிகிட்டு இருக்கேன்..
புண்ணியம் செய்தவங்க பாதைல வைதாரணி வராது ஸ்மிரிதி..பாவம் செய்தவங்க பாதைலதான் வைதாரணி நதி வரும்…அதைக் கடந்து போக சில வழிகளைக் கருட புராணத்தில சொல்றாங்க..” என்று பிரேமா மேலேத் தொடருமுன்,
“அம்மா..ஸ்டாப்…இந்த உலகத்தில பாவம் செய்யாதவங்கனு யாருமேக் கிடையாது..அதுவும் நீங்க சொல்ற அந்தப் பாவம் நீங்க செய்யலை நாந்தான் செய்தேன்..உங்களைத் தனியா விட்டிட்டு நாந்தான் அப்பாவோட இருக்க முடிவு செய்தேன்..ப்ளீஸ் இந்த மாதிரி யோசிக்கறதை விடுங்க.”
“இல்லை ஸ்மிரிதி..அந்த சூழ் நிலைல நான் சுய நலமா இருதிட்டேன்..இப்ப என்னால அதை சரி செய்ய முடியாது..அந்தப் பாவத்துக்கு பிராயச்சித்தம்தான் செய்ய முடியும்.” 
“உங்கம்மா வேணும்னா சுய நலமா இருந்திருக்கலாம்..என்னோட அம்மா இல்லை..நீங்க செய்தது சரி..நான் செய்ததும் சரி..அப்படி நீங்க செய்தது தப்புன்னு இன்னும் தோணிச்சின்னா என்னை தனியா  விட்ட பாவத்தையெல்லாம் இத்தனை வருஷம் இந்த ஸ்கூல்ல எத்தனையோ பொண்ணுங்களோட படிப்புக்கு உதவி செய்து,  வழி காட்டியாக இருந்து நீங்களும் புண்ணியம் செய்திருக்கீங்க..அதனால நீங்க சொல்ற அந்த வைதாரணி நதி உங்க வழில வராது மா.” என்றாள் ஸ்மிரிதி.
அவள் சொன்னதை அமைதியாகக் கேட்டு கொண்டிருந்த பிரேமா ஸ்மிரிதியின் கூற்றை ஆமோதிக்கவுமில்லை ஆட்சேபிக்கவுமில்லை. அதற்குமேல் அவரிடம் பேசி பிரயோஜனமில்லை என்று உணர்ந்த ஸ்மிரிதி,
“அம்மா, மனுவைப் பற்றி இன்னும் நான் அப்பாகிட்ட சொல்லலை….உங்ககிட்ட சொன்னதுக்குக் காரணம் ஆன்ட்டியும், நீங்களும் பிரண்ட்ஸ்.” என்று பிரேமாவின் மனதை திசை திருப்பினாள் ஸ்மிரிதி.
“என் பிரண்ட் உங்க இரண்டு பேரைப் பற்றி ஏதாவது கேட்டா என்னால அவகிட்ட பொய் சொல்ல முடியாது.” என்று பதில் சொன்னார் பிரேமா.
“வேணாம்..நீங்க பொய் பேச வேணாம்..அவங்க ஒத்துகிட்டாதான் மனு என்னைக் கல்யாணம் செய்துபாங்கற உண்மையை நானே அவங்ககிட்ட போயி சொல்லிடறேன்”
“ஸ்மிரிதி..வேணாம்..அப்படி எதுவும் ஏடாகூடமா செய்திடாத.” என்று பதட்டமானார் பிரேமா.
“பயப்படாதீங்க மா.. அப்படி ஏதாவது செய்ய நான் தில்லில இருக்கணுமில்ல.” என்றாள் ஸ்மிரிதி.
“தில்லில இருக்க போகறதில்லையா? வேற எங்க இருக்க போற?” என்று கவலையுடன் கேட்டார் பிரேமா.
“உங்களோட ..ஜலந்தர்ல.” என்றாள் ஸ்மிரிதி.

Advertisement