Advertisement

ஸ்மிரிதியின் மனு – 15
“என்ன நடந்திச்சு?” என்று கட்டலில் அவர் மகளின் அருகில் அமர்ந்து அவளை தோளில் சாய்த்து கொண்டார் பிரேமா.
“தெரில மா..எப்பவுமே, எல்லாத்திலேயும் தெளிவா இருந்த எனக்கு அவனால கொஞ்சம் குழப்பம்…திடீர்னு அவந்தான் எனக்கு சரியானத் துணைனுத் தோணிடுச்சு..அவனுக்கும் அப்படிதான் தோணது ஆனா ஆன் ட்டி சம்மதம் இருந்தாதான் என்னைக் கல்யாணம் செய்துபேன்னு சொல்றான்..இல்லைனா நான் ஸ்மிரிதி..அவன் மனு..அப்படியே இருந்திக்கலாம்னு சொல்றான்.” என்றாள் ஸ்மிரிதி.
“அவன் சொல்றது சரி..அந்த வீட்ல சிவகாமி ஆட்சிதான்..நாதன் ஆபிஸ்ல மட்டும்தான் அதிகாரி..அவ ஆசிர்வாதமில்லாம கல்யாணம் வேணாம்..அவகிட்ட பேசிட்டானா?” என்று கேட்டார் பிரேமா.
“நாங்க இரண்டு பேருமே இன்னும் இதைப் பற்றி சரியா பேசிக்கலை..நாங்க பேசிகிட்ட அப்பறம்தான் ஆன்ட்டிக்கிட்ட பேசணும்.” என்றாள் ஸ்மிரிதி.
”சிவகாமிகிட்ட உன் கல்யாணத்தைப் பற்றி உங்கப்பா கவலைப்பட்டிருக்காரு..என்னையும் உன்கிட்ட அதைப் பற்றி பேச சொல்லியிருக்காரு..அவரு கவலைப்படறது சரிதான் ஸ்மிரிதி..உன் வாழ்க்கைக்கு ஒரு வழி காட்டணும்னு நினைக்கறாரு.” என்றார் பிரேமா.
“ஏன் மா திடீர்னு எல்லாரும் என் கல்யாணத்த பற்றியே பேசறீங்க?” என்று ஸ்மிரிதி கேட்க,
“திடீர்னு இல்ல..உன்கிட்ட எப்படி பேச்சை ஆரம்பிக்கறதுனு தயக்கத்துலேயே டயம் ஓடி போயிடிச்சு..புவனா பையன் கல்யாணத்துக்கு அப்பறம் என் மனசுல தோணினதை நான் அப்பவே உன்கிட்ட சொல்லிட்டேன்..உங்கப்பாவும் அதே யோசனைலதான் இருக்காருனு எனக்கு இப்பதான் தெரிஞ்சுது.” என்றார் பிரேமா.
“அவரு இரண்டு, மூணு வருஷமா யாரையாவது அறிமுகப்படுத்தி வைக்கறாரு..எனக்குதான் யாரையும் பிடிக்க மாட்டேங்குது..இந்த கல்யாணத்திலேக்கூட ஒருத்தனை அறிமுகப்படுத்தி வைச்சாரு…அவங்க வீட்ல எல்லாருக்கும் என்னைப் பிடிச்சிருச்சு ஆனா எனக்குதான் அவனைக் கொஞ்சம்கூட பிடிக்கலை..அதுக்கு இரண்டு காரணம்..ஒண்ணு மனு, இன்னொண்ணு அப்பா..
என்னை கல்யாணம் செய்துக்கறதுக்கு அப்பா அவனுக்குப் பணம் கொடுத்து  பக்காவாக்கப் பார்த்தாரு.. நிச்சயத்துக்குப் பணம் கேட்கறவங்க கல்யாணத்துக்கும், கல்யாணத்துக்கு அப்பறமும் என்னவெல்லாம் கேட்பாங்களோ..அதனால அப்பாகிட்ட “அவன் எல்லாத்தையும் வாங்கிகிட்டு என்கூடத்தான் நிச்சயமா இருக்கப் போறானு என்ன நிச்சயம்னு கேட்டேன்?” உடனே அவருக்குக் கோபம் வந்திடுச்சு..
அவரோட பணமும், பாதுகாப்பும்தான் என்னைக் காப்பாத்தும்னு சத்தம் போட்டாரு..நானும் பதிலுக்கு “இனிமே என் கல்யாணத்தைப் பற்றி கவலைப்படாதீங்க..அந்தப் பணத்தை என்கிட்ட கொடுங்கனு அவர்கிட்டேயிருந்து  செக்க வாங்கிகிட்டு போயி தல்ஜித்கிட்ட கொடுத்திட்டேன்.” என்றாள் ஸ்மிரிதி
“ஸ்மிரிதி.” என்று அதிர்ச்சியுடன் விளித்தார் பிரேமா.
“அப்பாவும், நீங்களும் பணமே இல்லாம வாழ்க்கைய ஆரம்பிச்சீங்க ஆனா நீங்க இரண்டு பேரும் பிரியறத்துக்கு அப்பா சம்பாதிச்ச பணமே காரணமாயிடுச்சு..இப்ப என் வாழ்க்கைய ஏன் பணத்தை வைச்சு தீர்மானிக்கறாரு? நீங்க சொன்ன கொடுக்கல், வாங்கல் இதுதான் போல.” என்றாள் ஸ்மிரிதி.
“உங்கப்பாவ குறை சொல்ல முடியாது..எங்க இரண்டு பேரோட வாழ்க்கைல என்ன தப்பு நடந்திச்சோ அது உன் வாழ்க்கைல நடக்ககூடாதுனு நினைக்கறாரு..அவரு உனக்குப் பணத்தால செய்யணும்னு நினைக்கறது தப்பில்ல..”
நீ சொன்ன மாதிரி நாம வாழ்க்கைல எப்பவும் எல்லாத்தையும் முன்னாடியே முடிவுவரைக்கும் போயி பார்க்க முடியாது..அது போக்கில சில விஷயங்களை விட்டுதான் ஆகணும்..
உங்கப்பா உன் விருப்பத்தை எப்பவும் நிறைவேத்தியிருக்காரு..உனக்கு பதினைஞ்சு வயசுல கார் ஓட்ட சுதந்திரம் கொடுத்தவரு உன் கல்யாண விஷயத்தில கண்டிப்பா உனக்கு சுதந்திரம் கொடுப்பாரு…அவரை அவர் போக்கில விடு.” என்றார் பிரேமா.
“அதையேதான் நானும் சொன்னேன் மா….என்னை என் போக்கில விட சொன்னேன்..அனாதை, பணமில்லைனுதானே அவரை எல்லாரும் ஒதுக்கினாங்க அதனால இப்ப அதே பணத்தை வைச்சு  பந்ததை வாங்க பார்க்கறாரா?..எனக்கு அந்த மாதிரி பந்தம் வேணாம்.” என்றாள் ஸ்மிரிதி.
“என்னால அவருகிட்ட அதைப் பற்றி பேச முடியாது..உனக்கு கல்யாணம் செய்யணும்னு அவர்கிட்ட சொல்ல முடியும் ஆனா எப்படி செய்யணும்னு நான் சொல்ல முடியாது..அவரை மாற்ற முயற்சிக்காத.” என்றார் பிரேமா.
“எனக்குத் தெரியும் மா..நான் இங்க வந்ததுக்கு காரணம் அவரைப் பற்றி பேசறதுக்கு இல்லை.. உங்ககிட்ட மனுவைப் பற்றி சொல்ல விருபப்பட்டேன்.”
“மனுக்கும் உனக்கும் ஒத்துப்போகுமா? நீங்க இரண்டு பேரும் அன்னிக்கு கார்ல பேசினதெல்லாம் கேட்க எனக்கும், சிவகாமிக்கும் சங்கடமா இருந்திச்சு..
புவனா வீட்டுக்குப் போன பிறகு சிவகாமிகிட்ட நீ பேசினதுக்கு நான் மன்னிப்பு கேட்டேன்..ஏன் ஸ்மிரிதி உனக்கு அவ்வளவு கோவம் வந்திடுச்சு..எல்லாத்தையும் நிகழ்வுகளாகப் பார்க்கறேனு என்கிட்ட சொன்ன ஆனா அன்னிக்கு உன்னால அப்படி பார்க்க முடியல.. உன் கோவத்தை கார் மேல, மனு மேல காட்டின..அவன் உன்னைப் பற்றி சொன்னது தப்பிலையே ஸ்மிரிதி.” என்றார் பிரேமா.
“யெஸ்..அதனாலதான் அவன் எனக்கு சரி வருவான்னு நினைக்கறேன்…..என்னோட ஒத்துப்பாடறவன் எனக்குக் கணவனாக முடியாது மா..என்னை அப்படியே ஒத்துக்கறவன் தான் என் கணவனாக முடியும்..மனுவுக்கும், எனக்கும்  ஒத்துப்போகும் மா.” என்றாள் ஸ்மிரிதி
“எனக்கு என்ன சொல்றதுனு தெரில ஸ்மிரிதி..நாம மூணு பேரும் சாதாரணக் குடும்பமா இருந்திருந்தா எந்தப் பிரச்சனையும் வந்திருக்காது..உங்கப்பாவும் நல்ல வழில வாழ்ந்திருப்பாரு..உனக்கு நல்ல பழக்கங்கள் வந்திருக்கும்..நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கும்.” என்றார் பிரேமா.
“மனுவுக்கு வேற பொண்ணு பார்த்து உங்களைக் கூப்பிடாம ஆன் ட்டி அவனுக்கு கல்யாணத்தை நடத்தி வைச்சா வருத்தப்படாதீங்க..அதுக்கு ஆன்ட்டியோ, அங்கிளோ, மனுவோ இல்லை நீங்களோ, அப்பாவோ காரணமில்ல..ஸ்மிரிதிதான்..ஸ்மிரிதி மட்டும்தான்..ஒகே..இதை உங்க முகத்துக்கு நேர சொல்லத்தான் ஜலந்தர்லேர்ந்து நேரா இங்க வந்தேன்.” என்றாள் புன்சிரிப்புடன் ஸ்மிரிதி.
“எப்படி உன்னால சிரிக்க முடியுது..அப்படியே உன்னையும், என்னையும் அவன் கல்யாணத்துக்கு கூப்பிட்டா என்ன செய்வ..சிரிச்சுகிட்டே அட்டெண்ட் செய்வியா?” என்று பிரேமா ஆதங்கத்துடன் கேட்க,
“என்னை இன்வைட் செய்தா கண்டிப்பா மனு கல்யாணத்துல கலந்துப்பேன்..அவன்கிட்ட என் மனசில இருக்கறதை சொல்லாம, அவன் மனசுல என்ன இருக்குணுத் தெரியாம போயிருந்தா எனக்கு வருத்தமா இருந்திருக்கும்..இப்ப அவன் மனசு எனக்கு தெரிஞ்சிடுச்சு அவனுக்கும் என் மனசு தெரிஞ்சிடுச்சு.. ஆனா எங்களுக்கு மார்கம் அமையல..அவ்வளவுதான்.” என்றாள் ஸ்மிரிதி.
“நீயும் வேற யாரையாவது கல்யாணம் செய்துப்பியா?”
“தெரில மா..மனுவைப் பற்றி இந்த மாதிரி நினைப்பு வரும்னுகூட நான் நினைக்கல…வாழ்க்கைல என்ன வேணும்னாலும் நடக்கலாம்.” என்றாள்.
“நீ சொல்றது சரி ஸ்மிரிதி..உங்கப்பாவால இன்னொரு கல்யாணம் செய்துக்க முடிஞ்சுது என்னால அந்த மாதிரி நினைச்சுக்கூட பார்க்க முடியல.” என்றார் பிரேமா.
“உங்க கல்யாணம் தோல்வி அடைஞ்சதுக்கு நீங்க மட்டும் காரணமில்லை மா..அந்தக் குற்ற உணர்விலேர்ந்து வெளிய வாங்க..இப்ப எனக்கு கல்யாணமே ஆகாம போனா நான் அதை நினைச்சு மறுகிப் போக மாட்டேன்..அந்த நிகழ்வு நடக்கலைனு கடந்து போயிடுவேன்.” என்றாள் ஸ்மிரிதி
“எப்படி ஸ்மிரிதி? எப்படி இப்படி இருக்க? மனுவோட சேர்ந்த நினைவுகள் உன்னை வதைக்காதா?” என்று பிரேமா அழுகையுடன் கேட்க,
“ஒகே மாம்..இன்னிக்கு எல்லாத்தையும் பேசிடலாம்..ஒன் டைம் ஆஃபர் இது..இதுக்கு அப்பறம் கிடையவே கிடையாது.” என்று சொன்ன ஸ்மிரிதி,
“சுகமோ, துக்கமோ அது அந்த நேரத்திலதான் பெரிசா தெரியும்..அதுக்கு அப்பறம் காலப் போக்கில எல்லாமே கடுகு அளவாயிடம்..சில நிகழ்வுகள் நடக்கும் போது சந்தோஷத்தைக் கொடுக்குது, சிலது துக்கத்தை கொடுக்குது..நிகழ்வுகள் நடந்து முடிஞ்ச அப்பறம் அவை வெறும் நினைவுகள்தான்…
எத்தனை விதமா, எத்தனை முறை அந்த நிகழ்வுகளை நினைச்சுப் பார்த்தலும் அதே உணர்வுகளைத் திரும்ப நாம உணர முடியாது..சில சமயம் அந்த உணர்வுகளை நாம மறந்துகூட போயிடறோம்….எப்படி இது நடக்குது? 
நமக்கு நடந்ததை நமக்கு நடக்காத மாதிரி நடத்தும் போதுதான் நம்ம நினைவுகளோட உணர்வுகள் சேராம அது வெறும் நிகழ்வா மட்டும் மனசுலப் பதிஞ்சு போயிடுது…சில பேருக்கு அந்த மன மாறுதல் காலத்தோட கட்டாயத்தில நடக்குது..சில பேருக்கு நிகழ்வுகளோட விளைவுகள் அந்த மன மாற்றத்திற்கு காரணமாகுது..
நான் இப்படி இருக்கறதுக்கு இரண்டுமே காரணம்..
என்னோட வாழ்க்கைல எனக்கு ஏற்பட்ட எல்லாத்தையும் நிகழ்வுகளாக மட்டும் பார்க்க கத்துகிட்டேன்..அதேபோல அந்த நிகழ்வுகளோட விளைவுகளைத் தனியா சந்திக்கவும் செய்தேன்.. 
என்னால முடிஞ்ச அளவு என் நினைவுகளோட சேர்ந்த உணர்வுகளை உதறிட்டு அது எதுவும் என்னைப் பாதிக்காத மாதிரி பார்த்துக்கறேன்…சில சமயம் நான் சறுக்கிடறேன்.. அன்னிக்கு கோயமுத்தூர்ல கார்ல வரும்போது அதுதான் நடந்திச்சு.” என்றாள் ஸ்மிரிதி.
“எப்பலேர்ந்து இந்த முயற்சி செய்யற ஸ்மிரிதி?”
“என்னைப் பத்து வயசுல ஹாஸ்டல்ல சேர்த்தீங்க..எனக்கும் அங்க இருந்த மற்ற பசங்களுக்கும் எதுவுமே ஒத்துவரல.. அதுக்கு காரணம் என்னோட தோற்றம், அப்பறம் நம்ம குடும்பம்…
நான் கருப்பா இருக்கறதுனால என்னை வேலைக்காரியா நடத்த பார்த்த பசங்க..எங்க அப்பா பெரிய ஆளு, நான் பெரிய வீட்டு பையன்னு என்னை மிரட்ட பார்த்த பசங்க..பசங்களோடத் தொல்லை போதாதுனு அங்க இருந்த டீச்சர்ஸ்..

Advertisement