Advertisement

அதில் எழுதப்பட்டிருந்த தொகையைப் பார்த்து அதிர்ந்த தல்ஜித்,
“என்னது இது?”
“எங்கப்பா என் கல்யாணத்துக்காக மாப்பிள்ளைக்கு கொடுக்க ஒத்துகிட்ட ரொக்கம்..அவனைக் கல்யாணம் செய்துகிட்டு அவன் வாழ்க்கைய ஒலிமயமாக்க நான் விரும்பல..அனில் மாதிரி பசங்களோட வாழ்க்கைல வெளிச்சத்தைக் கொண்டு வர விரும்பறேன்…
இந்தமுறை என்னோட சுய உதவிக் குழுவிலிருந்து பத்து பசங்க இங்க படிக்க வருவாங்க..இதே போல ஒவ்வொரு வருஷமும் குழந்தைங்க வர ஆரம்பிப்பாங்க..நீ உன்னால முடிஞ்சதை அவங்களுக்கு செய்யற நான் என்னால முடிஞ்சதை அவங்களுக்கு செய்ய விரும்பறேன்..அதுக்குதான் இதை உன்கிட்ட கொடுக்கறேன்..உன் விருபப்படி யூஸ் செய்திக்க.” என்றாள் ஸ்மிரிதி.
“அப்ப உன் கல்யாணம்?” என்று கேட்டான் தல்ஜித்.
“அது எப்ப நடக்கணுமோ அப்ப நடக்கும்..எங்கப்பாகிட்ட பணம் வாங்கிகிட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்கறவன் எனக்கு சரிப் பட மாட்டான்..கல்யாணத்துக்கு அப்பறமும் வாங்கிட்டு வரச் சொல்லுவான்.” என்றாள் ஸ்மிரிதி.
“இது புதுசு இல்ல ஸ்மிரிதி..நம்ம வட்டத்தில நடக்கறதுதான்..என் தங்கச்சிக்கு நாங்க இதைவிட நிறைய செய்தோம்..வேணாம்னு அவங்களும் சொல்லல நாங்களும் அதைத் தப்பா எடுத்துக்கல.” என்றான் தல்ஜித்.
“நான் எங்கப்பா பார்த்த மாப்பிள்ளையை வேணாம்னு சொன்னதுக்கு வெறும் பணம் மட்டும் காரணமில்ல..உங்களோட தொழில் வேற எங்கப்பாவோட தொழில் வேற…கல்யாணத்துக்குப் பிறகு பணமா கேட்காம எங்கப்பாகிட்ட வேற ஏதாவது உதவி அவன் கேட்டா அதை மறுக்க முடியாத சூழ் நிலை  அவருக்கு உருவாயிடும்..இப்ப அவருக்கு ஒரு குடும்பம் இருக்கு என்னால எந்தச் சங்கடமும் அவங்களுக்கு வரக் கூடாது.” என்றாள் ஸ்மிரிதி.
“இந்த செக்கைக் கொடுக்கதான் புறப்பட்டு வந்தியா?” என்று தல்ஜித் கேட்க,
“இல்ல..இன்னொரு விஷயமிருக்கு.” என்று சொல்லி மௌனமானாள் ஸ்மிரிதி.
அவள் மௌனத்தைப் பார்த்து கவலையடைந்த தல்ஜித் சேரிலிருந்து எழுந்து வந்து அவளருகேக் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.
“என்ன ஆச்சு?” என்று தல்ஜித் கேட்க,
“என்னோட அம்மாக்கு இங்க ஒரு வேலைப் போட்டு கொடு.” என்றாள் ஸ்மிரிதி.
“வாட்?” என்று அதிர்ச்சியானான் தல்ஜித்.
“நான் எங்கம்மாவோட கொஞ்ச நாள் இருக்கணும்னு நினைக்கறேன்..அவங்க இங்க வந்துட்டாங்கன்னா நானும் அவங்களை அடிக்கடி வந்து பார்க்க முடியும் அதே சமயம் என்னோட வேலையையும் தொடர முடியும்… இனி அவங்க தனியா பெங்களூர்ல இருக்கறது சரி வராது.” என்றாள் ஸ்மிரிதி.
“ஏன்?” என்று தல்ஜித் கேட்க,
“அம்மாக்கு ஹெல்த் பிராப்ளமிருக்கு..அவங்க இப்ப வேலைப் பார்க்கற இடத்தில எல்லாத்தையும் இழுத்து போட்டுகிட்டு செய்யறாங்க.…ரிலாக்ஸ்ட் லைஃப் ஸ்டைல் அப்பறம் மருந்து, மாத்திரை எல்லாம் கரெக்டா சாப்பிட்டா மனேஜ் செய்யலாம்..இங்க உன்கிட்ட மெடிக்கல் காலேஜ், ஆஸ்பத்திரி எல்லாம் பக்கத்திலையே இருக்கு அதனால அவங்க உடல் நிலையைப் பற்றி நான் கவலைப்பட வேணாம்.” என்றாள் ஸ்மிரிதி.
“இதைப் பற்றி நல்லா யோசனை செய்திட்டியா?”
“இப்போதைக்கு எனக்கு வேற எதுவும் தோணலை.” என்றாள் ஸ்மிரிதி.
“நீயும், ஆன் ட்டியும் எப்ப வேணும்னாலும் இங்க வரலாம்..எத்தனை நாள் வேணும்னாலும் இருக்கலாம்..நான் இங்கனு சொல்றது என் வீடு..அப்படி உங்க இரண்டு பேருக்கும் ஜலந்தர்ல இருக்கறது கஷ்டமா இருந்திச்சுன்னா..பீயாஸ்ல (beas) பீஜிக்கூட இருக்கலாம்..நீ ஆன் ட்டிக்கு வேலைப் போட்டு கொடுனு பேசினது பீஜி கேட்டிருந்தாங்கன்னா மனசு உடைஞ்சுப் போயிருப்பாங்க.” என்றான் தல்ஜித்.
“அம்மாக்கு அவங்க உடம்பைப் பற்றி தெரியாது..சரியாயிடும்னு நினைக்கறாங்க..நானும் அதைதான் விரும்பறேன்..இங்க வேலை செய்யதான் வருவாங்க..சும்மா உட்கார்ந்திருக்க வர மாட்டாங்க..அதனால பீயாஸ் வேணாம்..இங்க எதையாவது மனேஜ் பண்ற வேலைக்கு ஏற்பாடு செய்..இந்த அகடெமிக் இயர் முடியறத்துக்குள்ள அவங்க மனச மாற்ற முயற்சி செய்யறேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“அவங்களுக்கு உடம்பு சரியில்லைனு உனக்கு எப்படி தெரிஞ்சுது?”
“இப்ப பெங்களூர் போனேனில்ல அப்ப நாந்தான் அவங்கள சுசித் ராவோட ஆஸ்பத்திரிக்கு அழைச்சுகிட்டு போனேன்..அப்பதான் இதெல்லாம் தெரிய வந்தது.. மஞ்சு நத்தும், சுசித் ராவும் அவங்களை செக் அப்புக்கு கூட்டிகிட்டு போறேனு சொல்றாங்க..எனக்குதான் அவங்கள இனி தனியா விட மனசு வரல.” என்றாள் ஸ்மிரிதி.
“உங்கப்பாகிட்ட சொல்லிட்டியா?”
“எப்படி சொல்றதுனு எனக்குத் தெரியல..இங்க அம்மாவ கூட்டிக்கிட்டு வந்த பிறகு அவர்கிட்ட சொல்லலாம்னு இருக்கேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“ஆன் ட்டி இங்க வந்த பிறகு என்ன வேலை செய்யணும்னு இஷ்டப்படறாங்களோ அதைச் செய்யட்டும்.” என்று உறுதி அளித்தான் தல்ஜித்.
“தாங்கஸ் படி (buddy) என்றாள் ஸ்மிரிதி.
அவளின் திட்டப்படி ஒரு வாரத்தில் ஸ்மிரிதி தில்லி திரும்பவில்லை. அவனின் ஃபோன் கால்கலை மறுத்து கொண்டிருந்த ஸ்மிரிதியை எப்படி தொடர்பு கொள்ளலாம் என்று மனு எண்ணிக் கொண்டிருக்கும் போது கார்மேகமே அவனுக்கு ஃபோன் செய்தார். 
“இன்னும் வீட்டுக்கு வரல தம்பி..என்னிக்கு வருவானுத் தெரியல..என்னோட பேசவே மாட்டேங்கறா..உங்ககிட்ட பண விஷயத்தைப் பற்றி சொன்னதுக்கு என்னைக் கோவிச்சுகிட்டா.” என்றார் கார்மேகம்.
“வந்திடு வா..பணத்தை என்ன செய்தானு தெரிஞ்சுதா.” என்று கேட்டான்.
“எப்பவும் போலதான்.” என்றார் கார்மேகம்.
அந்த எப்பவும் போல என்னவென்று தெரியாத மனு அதைப் பற்றி அவரிடம் விசாரிக்காமல்,”நான் அவகிட்ட பேசிக்கறேன்.” என்றான்.
அப்பா, மகள் நடுவில் அவன் எப்படி மாட்டிக் கொண்டான் என்று மனுவிற்கு விளங்கவில்லை. அன்று முழுவதும் ஸ்மிரிதிக்கு போன் செய்து தோற்று போனவன் மாலை சிவகாமியிடம் சரணடைந்தான்.  
அன்று மாலை வீடு திரும்பிய மனு, இரவு உணவிற்காக திரேனுக்கு உதவி செய்து கொண்டிருந்த சிவகாமியிடம் அவர் ஃபோனை நீட்டி,
“ஸ்மிரிதிக்கு ஃபோன் போடுங்க.” என்றான்.
“இப்பவா..எதுக்கு டா?”
“ஒரு வாரத்தில தில்லி திரும்பியிருக்கணும் ஆனா இன்னும் வீட்டுக்கு வரலைனு கார்மேகம் அங்கிள் சொல்றாரு..அவங்க வீட்டுக் கல்யாணத்துக்கு போனதிலிருந்து நாமதான் அவளுக்கு கார்டியனாயிட்டோம்..என் ஃபோன் கால் அவளுக்கு போயிருக்கும் ஆனா திரும்பி போன் செய்ய மாட்டேங்கறா..அவர்கிட்டையும் பேசறதில்லைனு சொல்றாரு..நீங்க அவகிட்ட பேசி எப்ப வீட்டுக்கு வரானு கேளுங்க.” என்றான் மனு.
அவர் செய்து கொண்டிருந்த வேலையைப் பாதியில் நிறுத்திவிட்டு அவருடைய ஃபோனிலிருந்து ஸ்மிரிதிக்கு போன் போட்டார். சிறிது நேரத்திற்கு பின் அவர் போன் அழைப்பை ஏற்று கொண்ட ஸ்மிரிதி,
“சொல்லுங்க ஆன் ட்டி.” என்றாள்.
“என்ன மா? எங்க இருக்க நீ? உங்கப்பா கவலைப்பட்டுகிட்டு இருக்காரு நீ இன்னும் வீட்டுக்கு வரலைனு.” என்று சிவகாமி சொன்னவுடன்.
“எனக்கு இன்னிக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருந்திச்சு அதான் என்னால மனுகிட்டையும் பேச முடியல..நான் நல்லா இருக்கேன்..அப்பாக்கு இப்பவே ஃபோன் செய்யறேன்..இனிமே உங்க யாரையும் அவர் தொந்திரவு செய்ய மாட்டாரு.” என்றாள் ஸ்மிரிதி.
“சரி மா.” என்று சொல்லி போனை வைத்தார் சிவகாமி.
“எங்க அம்மா போயிருக்கா அவ?” என்று மனு கேட்க, அப்போதுதான் சிவகாமி உணர்ந்தார் அவள் இருக்குமிடத்தைப் பற்றி ஸ்மிரிதி அவருக்கு சொல்லவே இல்லையென்று.
“எங்க இருக்கானு தெரியல டா..ஆனா அவங்க அப்பாகிட்ட இப்பவே பேசறேனு சொல்லியிருக்கா..இனி நம்மள தொந்திரவு செய்ய மாட்டாருனு சொல்றா.” என்றார் சிவகாமி.
சிவகாமியின் பதில் மனுவை யோசனையில் ஆழ்த்தியது.  ஏன் அவள் இருப்பிடத்தை அவள் சொல்லவில்லை என்று அவனுக்கு காரணம் தெரிய வேண்டியிருந்தது. 
அடுத்த பத்தாவது நிமிடம் அவனிடம் ஃபோன் செய்து மன்னிப்பு கேட்டார் கார்மேகம்.  இனி அவனையோ அவன் குடும்பத்தையோ தொந்திரவு செய்ய மாட்டரென்றும் ஸ்மிரிதி அவருடன் அப்போதுதான் பேசினாள் என்றும் தகவல் சொன்னார்.  அவனிடம் மட்டும் பேசாமல் மற்றவர்களிடம் ஸ்மிரிதி பேசியது அவனுக்குக் கோபத்தை உண்டு பண்ணியது.  அவள் தில்லி திரும்பியவுடன் கண்டிப்பாக அவளைச் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.
யாரும் எதிர்பாக்காத இடத்தில் ஸ்மிரிதி இருந்தாள்.  அவள் வருவதை அந்த நபரும் எதிர்பார்க்கவில்லை.  அன்று காலையில் பள்ளிக்கு செல்ல அவர் அறையில் தயாராகிக் கொண்டிருந்த பிரேமாவிற்கு விஸிட்டர் என்று தகவல் வந்தவுடன், யார் வந்திருப்பார்கள் இத்தனை காலை வேலையில் என்று ரிசெப்ஷனுக்குப் போனபோது, பெரிய பேக்குடன் அமர்ந்திருந்த ஸ்மிரிதியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
“என்ன மா..இங்க வந்திருக்க?” என்று கேட்க.
“உங்களைப் பார்க்கணும்னு தோணிச்சு அதான் புறப்பட்டு வந்திட்டேன்..யாருக்கும் தகவல் சொல்லலை.” என்றாள் ஸ்மிரிதி.
திடீரென்று வருகைத் தந்திருந்த மகளைப் பார்த்து,”நீ என் ரூம்ல இருந்திக்க..நான் லீவு எடுக்க முடியாது..ஸ்கூல முடிச்சிட்டு வரேன்..அப்ப பேசலாம்..மத்தியானம் மெஸ்ல சாப்டிக்க..என் பெயர்ல எழுதிடு.” என்று சொல்லிவிட்டு வேலைக்கு சென்று விட்டார் பிரேமா.
பிரேமாவின் அறையிலையே அன்றையப் பொழுதைக் கழித்த ஸ்மிரிதி சாப்பாட்டிற்க்குகூட அறையைவிட்டு வெளியே செல்லவில்லை.  மனுவிடமிருந்து போன் வந்த வண்ணம் இருந்தபோது அதைப் புறக்கணித்துவிட்டு படுக்கையில் படுத்துக் கிடந்தாள்.
பள்ளி முடிந்து மதியம் மூன்று மணி போல் அவர் அறைக்கு வந்த பிரேமா ஸ்மிரிதியை பார்த்து கோபம் கொண்டார்.
“நீ லன்ச் சாப்பிட போகலையா?” என்று கேட்டார்.
“இல்ல.”
“ஏன்?”
“எனக்குப் பசிக்கல.” என்றாள் ஸ்மிரிதி.
அவர் அறையிலிருந்த பழக்கூடையிலிருந்து வாழைப்பழத்தை எடுத்து நீட்டினார் பிரேமா.
“நீ என்ன பேசணுமோ அதை நீ சாப்பிட பிறகு பேசலாம்.” என்றார் பிரேமா.
பிரேமா கொடுத்ததை மறுக்காமல் ஸ்மிரிதி சாப்பிட அதற்குள் பிரேமா அவர் புடவையைக் களைந்து விட்டு நைட்டிக்கு மாறினார்.
அவள் சாப்பிட்டு முடித்தவுடன், “இப்ப சொல்லு.” என்றார் பிரேமா.
“நீங்க என்கிட்ட  சொன்னீங்க இல்ல என் வயசுல முட்டாளா இருந்தீங்கனு இப்ப உங்கள மாதிரி நானும் முட்டாளாயிட்டேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“என்ன சொல்ற?” என்று ஸ்மிரிதி சொன்னது புரிந்தாலும் விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள மறுபடியும் கேட்டார் பிரேமா.
“மனுகிட்ட என் மனசுல இருக்கறத சொல்லி மனு போட்டேன்..அவன் முடியாதுனு சொல்லிட்டான்.” என்று பட்டென்று மனதிலிருந்ததைச் சொன்னாள் ஸ்மிரிதி.
“என்ன சொல்ற நீ? நம்ம மனுவா?” என்று அதிர்ச்சியாகக் கேட்டார் பிரேமா.
“உங்க பிரண்ட் சிவகாமி ஆன் ட்டியோட மகனைப் பற்றிதான் சொல்றேன்.” என்றாள் ஸ்மிரிதி

Advertisement