Advertisement

ஸ்மிரிதியின் மனு – 14
“மனு.” என்று கத்தினாள் ஸ்மிரிதி.
“லெட்ஸ் ஸ்டாப் திஸ்..உன்னால என்னவெல்லாம் செய்ய முடியும்..என்னவெல்லாம் இதுவரைக்கும் நீ செய்திருக்கேனு எனக்கு ஐடியா இருக்கு அதனால எனக்கு அதிர்ச்சி கொடுக்கணும்னு நீ அசிங்கமா பேசறத நிறுத்திக்கோ..நீ என்னைப் பற்றியும், நான் உன்னைப் பற்றியும் ஸீரியஸா இருக்கோம்னா நாம அதைப் பற்றி மேல யோசிக்கணும்..அப்படி இல்லைனா நேத்து நைட் உங்கப்பா பார்த்த மாப்பிள்ளையே உன் மூக்குத்தியத் தேடி கொடுப்பான்.” என்று அவர்கள் உறவு ஆரம்பிக்கும் முன்பே அதற்கு முற்றுபுள்ளி வைத்தான் மனு.
“எங்கப்பா பார்த்த மாப்பிள்ளையை எனக்கு பிடிச்சிருந்தா நேத்து நைட்டே அவனை என் மூக்குத்தியத் தேடித் தர சொல்லியிருப்பேன் இன்னிக்கு நைட் உன்னோட ஃபோன்ல அதைப் பற்றி பேசிகிட்டு இருக்கமாட்டேன்….என் மாமனாருக்கும், மாமியாருக்கும் இப்படியொரு முட்டாள் பையன்.” என்று அவன் முற்றுபுள்ளி வைக்க நினைத்த உறவை உறுதி படுத்திக் கொண்டாள் ஸ்மிரிதி.
“எங்கம்மா உனக்கு மாமியாராக விருப்பமில்லைனு சொன்னா என்ன செய்யறது? என்று மனு கேட்க,
“ஏன், என்னோட மாமனாராக விருப்பமில்லைன்னு அங்கிள் சொல்ல மாட்டாரா? என்று பதிலுக்கு கேட்டாள் ஸ்மிரிதி.
“அவரு  வொட்டு செல்லாது.. நேத்து அம்மா அதை தள்ளுபடி செய்திட்டுதான் உங்க வீட்டுக் கல்யாணத்துக்கு வந்தாங்க..எனக்கு எங்கம்மா சம்மதம் முக்கியம்.. அவங்க உன்னை வேணாம்னு சொன்னா என்ன செய்வ.” என்று மறுபடியும் கேட்டான் மனு.
மனுவிடமிருந்து அப்படியோரு கேள்வியை எதிர்பார்க்காத ஸ்மிரிதி சிறிது நேர மௌனத்திற்கு பின்,”அவங்க கால்ல விழுந்து மனுவ எனக்கு கல்யாணம் செய்து வைங்கனு கேட்பேன்.” என்று சிறிதுகூட தயக்கமில்லாமல் சொன்னாள் ஸ்மிரிதி ஸம்வர்தினி.
“ஸ்மிரிதி ஸ்டைல்ல..மகன கல்யாணம் செய்து கொடுங்கன்னு வருங்கால மாமியாரோட கால்ல விழறது.” என்றான் மனு.
“எனக்கு உன்னை கல்யாணம் செய்துக்கணும் அதுக்கு ஆன் ட்டி அனுமதிய எப்படி கேட்டா உனக்கு என்ன? காரியம் கைகூடலேனா நோக்கம் சரியா இருந்து என்ன பிரயோஜனம் அதனால்தான் எல்லாரும் செய்யற முயற்சி போல இல்லாம என் வழில எல்லாத்தையும் முயற்சி செய்து பார்ப்பேன்.”
அதற்குமேல் அவளுடன் சிவகாமியின் சம்மதத்தைப் பற்றி பேசாமல்,
“உங்கப்பாகிட்டேயிருந்து எடுத்துகிட்டு போனதை என்ன செய்த?” என்று கேட்டான் மனு.
“மனு..அது உனக்குத் தேவையில்லாதது.. தலையிடாத.” என்றாள் ஸ்மிரிதி.
“அப்ப ஒரு வேலை செய்..உன் விஷயம் எதுல நான் தலையிடலாம்..எதுல நான் தலையிடக்கூடாதுன்னு ஒரு லிஸ்ட் போடு அதைப் படிச்சு பார்த்தவுடன நீ உன் சைட்லேர்ந்து ஒரு வக்கீல் ஏற்பாடு செய்துகிட்டு வா நான் அவன்கிட்ட எதை மாற்றணும்னு எடுத்து சொல்றேன் அதுக்கு அப்பறம் ஒத்து வந்திச்சுன்னா மேல பேசலாம் இல்லைனா நோ பிராப்ளம் நான் மனு வளவன்…நீ ஸ்மிரிதி கார்மேகம்..” என்றான் கடுப்பாக.
மனுவின் அதிருப்தியை உணர்ந்த ஸ்மிரிதி சமாதானத்திற்கு வந்தாள்.
“சொல்றேன்..எதுக்கு எடுத்துகிட்டு போனேன்..அதை என்ன செய்தேனு எனக்கு எப்ப தோணுதோ அப்ப சொல்றேன்.” என்று புத்திசாலியாக பதில் அளித்தாள் ஸ்மிரிதி.
“ரொம்ப நல்லது..அப்பவே நாம மற்ற விஷயத்தைப் பற்றியும் பேசலாம்..எதுக்கு இப்பவே அவசரப்படணும்.” என்றான் துளிக்கூட விட்டுக்கொடுக்காமல்.
அவள் சமாதானமாகப் பேசிய பின்னும் அவன் விட்டுக் கொடுக்காமல் இருந்தது ஸ்மிரிதியைக் கோபப்படுத்தியது.
“நீ இந்த மாதிரி எல்லாத்துக்கும் என்கிட்ட காரணம் கேட்டுகிட்டிருந்தேன்னா எனக்கு சரிபடாது, நமக்குள்ள ஒத்துவராது.” என்று வார்த்தைகளைக் கொட்டினாள் ஸ்மிரிதி.
“ஃபைன்..நீ யாரை வேணும்னாலும் கல்யாணம் செய்துக்க..கலெக்டர் அவரு குடும்பத்தோட உன் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்து சொல்லுவாரு.” என்று சொல்லி போனைத் துண்டித்தான் மனு.
அடுத்து வந்த நாட்களில் மனுவைத் தொடர்பு கொள்ள முயலவில்லை ஸ்மிரிதி. அவளிடமிருந்து மெஸெஜையும், ஃபோன் காலையும் எதிர்பார்த்து அலைப்பாய்ந்த அவன் மனது அவளிடம் நிதனாமகாப் பேசியிருக்க வேண்டுமோ என்று எண்ணியது.   
மறு நாள் காலையில் ரஜாய்குள் புதைந்து போயிருந்த ஸ்மிரிதியை கதவைத் தட்டும் ஒலி எழுப்ப,
“வரேன்.” என்று ஹிந்தியில் பதில் சொல்லி, காலில் செருப்பை மாட்டிக் கொண்டு ஒரு ஷாலை அவள் மேலேப் போர்த்திக் கொண்டு கதவைத் திறந்தாள்.
அறை வாசலில் கையில் ஃபிளாஸ்கூடன் ஒரு விடலைப் பையனும் அவன் அருகில் டி ராக் ஸூட்டில் ஒரு சர்தார்ஜி இளைஞனும் நின்று கொண்டிருந்தனர்.  அவர்கள் உள்ளே வந்தவுடன்,
“எதுக்கு டா என்னைய எழுப்பினீங்க?” என்று இருவரிடமும் கோபப்பட்டாள் ஸ்மிரிதி.
“ஏழு மணி ஆகுது..இன்னும் தூக்கமா?” என்று கண்டிப்புடன் கேட்டான் அந்த இளைஞன்.
“போடா தல்ஜித்..அதான் கெடுத்திட்டியே.” என்று சலித்துக் கொண்டாள் ஸ்மிரிதி.
அவர்கள் இருவரும் சண்டைப் போட்டுக் கொண்டிருக்க அறையின் மறு கோடியில் இருந்த மேஜையில் இரு கோப்பைகளில் டீ யை நிரப்பிக் கொண்டிருந்தான் அந்தச் சிறுவன்.
“நீ இன்னிக்கு ஸ்கூல் போகலையா?” என்று அவனைப் பார்த்து கேட்டாள் ஸ்மிரிதி.
“பரீட்சை நடக்குது தீதி..இன்னிக்கு லீவு..நீங்க வந்திருக்கீங்கனு தல்ஜித் பையா நேத்திக்கே சொன்னாரு அதான் உங்களைப் பார்க்க வந்தேன்.” என்று பதில் அளித்தான்.
“அப்ப பரீட்சைக்குப் படிக்காம நீ எதுக்கு டா டீ கொண்டு வந்த அனில்?” என்று ஸ்மிரிதி அதட்ட,
“இன்னிக்கு ஒரு நாள் தான் தீதி..உங்கள பார்த்து பேசணும்னு நினைச்சேன்..தல்ஜித் பையாகிட்ட சொன்னேன்..அழைச்சுகிட்டு வந்திட்டாரு..
இந்த மாதிரி எத்தனை பேருக்கு எத்தனை ட் ரெயின்ல டீ ஊத்தி கொடுத்திருப்பேன்..அவங்க கண்ணுக்கு நான் வெறும் டீ விக்கற பையனாதான் தெரிஞ்சேன் உங்க கண்ணுக்கு மட்டும்தான் படிக்கற பையனா தெரிஞ்சேன்..நீங்க மட்டும் என்னை இங்க அழைச்சுகிட்டு வராட்டா இன்னும் நான் ட் ரெயின்ல டீ வித்துகிட்டுதான் இருந்திருப்பேன்.” என்று அனில் சொன்ன போது அவன் கண்கள் கலங்கின.
“உனக்கும் சேர்த்து ஒரு கப்ல டீ எடுத்துகிட்டு வா.” என்ற சொன்ன ஸ்மிரிதி அவள் படுக்கையில் அமர்ந்து கொள்ள, தல்ஜித் அந்த அறையிலிருந்த சேரில் அமர்ந்து கொண்டான்.  அவர்கள் இருவருக்கும் டீ கொடுத்த பின் நின்றபடியே அவனுடைய டீ யை குடிக்க ஆரம்பித்தான் அனில்.
அவர்கள் மூவரும் மௌனமாக டீ குடித்து முடித்தனர்.  அதுவரை பேசமாலிருந்த அனில், ஃபிளாஸ்கூடன் புறப்படுமுன் கட்டிலில் அமர்ந்து கால்களைத் தொங்கப் போட்டிருந்த ஸ்மிரிதியின் பாதங்களைத் தொட்டு வணங்கினான்.
“என்ன டா இது?” என்று பதறிப் போன ஸ்மிரிதியைப் பார்த்து,
“பரீட்சைக்கு முன்னாடி நீங்க வந்தா உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கணும்னு நினைச்சேன் தீதி..எனக்குனு நீங்க மட்டும்தான் இருக்கீங்க தீதி.” என்று அவன் சொல்லி முடிக்குமுன் அவன் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாக விழ அதை அவனுடைய ஸ்வெட்டரில் துடைத்துக் கொண்டான் அனில்.
“எதுக்கு டா அழற..இங்க உன்னோட எத்தனை பேர் இருக்காங்க அப்பறம் எப்படி யாருமில்லைனு சொல்லுவ..அழுகைய நிறுத்து..கண்டதையும் யோசிக்காம படிப்புல கவனம் செலுத்து.” என்று கட்டளையிட்டாள் ஸ்மிரிதி.
சட்டென்று அழுகையை நிறுத்தி,”சரி தீதி..நல்லா படிப்பேன் தீதி..நல்ல மார்க் வரும்.” என்றான் அனில்.
“நீ நல்லா படிச்சு பெரிய ஆள் ஆனபிறகு இந்த தீதிக்கு உதவி செய்வேனு நம்பறேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“கண்டிப்பா.”என்று சொன்னவன் மறுபடியும் தயக்கத்துடன் “தீதி” என்று அழைத்தான்.
“என்ன டா?”
“ட் ரெயின்ல தனியா வந்தீங்களா?” என்று கேட்டான்.
“ஆமாம்” என்று தலையசைத்தாள் ஸ்மிரிதி.
“நான் கொடுத்ததைப் பத்திரமா வைச்சிருக்கீங்களா?” என்று சந்தேகத்துடன் கேட்டான் அனில்.
“இருக்கு டா.” என்று அசால்டாகப் பதில் அளித்தாள் ஸ்மிரிதி.
“காமிங்க என்கிட்ட.” என்று ஆர்டர் போட்டான் அனில்.
“எதுக்கு டா.”
“காமிங்க தீதி.” என்று அவன் வற்புறுத்த.
அவள் படுத்திருந்த தலையணையின் கீழேயிருந்து கைக்கு அடக்கமானப் பொருளை எடுத்து அவனிடம் காட்டினாள்.
அதைப் பார்த்தவுடன் அவன் முகத்தில் சந்தோஷம். “இனி தனியா வராதீங்க..அப்படி வந்தா இதைக் கண்டிப்பா கைலேயே வைச்சுகிட்டு டி ராவல் செய்யுங்க.” என்று அறிவுரை அளித்தான் அனில்.
அதுவரை அவர்கள் இருவரின் சம்பாஷனையை மௌனமாகக் கேட்டு கொண்டிருந்த தல்ஜித், ஸ்மிரிதி கையிலிருந்து மிகச் சிறிய ஸ்கால்பெல்லைப் (scalpel) பார்த்து,
“யாரோட ஐடியா இது?” என்று கேட்டான்.
“என்னோடது..கைல இருக்கறது தெரியாது..வலியேத் தெரியாமக் கிழிச்சிடும்..இரத்தம் கொட்டறதைப் பார்த்துதான் வெட்டுபட்டிருக்குணுத் தெரியும்….
முன்னாடி நிறைய தடவை தீதி தனியா இங்க இராத்திரி ட் ரெயின்ல வருவாங்கயில்ல அப்ப அவங்க பாதுகாப்புக்கு நாந்தான் இதைக் கொடுத்தேன்..இராத்திரி தூங்கும்போது தலையணை கீழ வைச்சுக்க சொன்னேன்..தீதி இப்பவும் அதையே ஃபாலோ செய்யறாங்க.” என்றான் அனில்.
“இதுவரைக்கும் இதை உபயோகிக்க சந்தர்ப்பம் கிடைக்கலை…உதய்பூருக்கு இரயில்லதான் போறேன்..இது துணையோடதான் டி ராவல் செய்யறேன்.” என்றாள் சிரித்து கொண்டே ஸ்மிரிதி.
“தீதி..ஒரே ஒரு கோடு அவ்வளவுதான்..அஞ்சு நிமிஷத்தில மயக்கம் வந்திடும்.” என்றான் அனில்.
“ஞாபகமிருக்கு டா..நீ கிளம்பு.” என்று சொல்லி அனிலை அறையிலிருந்து அனுப்பி வைத்தாள் ஸ்மிரிதி.
“அவனுக்கு உன் மேல பிரியம்..நேத்துலேர்ந்து என்கூட வருவேனு ஒரே பிடிவாதம்..இராத்திரி உன்னை தொந்திரவு செய்ய வேணாம்னு காலைல அழைச்சுகிட்டு வந்தேன்.” என்றான் தல்ஜித்.
“அவனைப் பார்த்தா நம்மள அந்த வயசுலப் பார்க்கற மாதிரி இருக்கு.” என்றாள் ஸ்மிரிதி.
“எனக்கு பன்னிரெண்டாவது கிளாஸ் திரும்ப படிக்க வேணாம்..ஸ்கூலுக்கும் போக வேணாம்.” என்றான் தல்ஜித்.
“ஸ்கூல், காலேஜ் ஓனர் மாதிரியா பேசற..வெளிலத் தெரிஞ்சுது உன் பிஸ்னஸ் படுத்திடும்.” என்றாள் ஸ்மிரிதி.
“படுக்கட்டும்..நான் ஒருத்தன் மட்டும்தான் இதை சேவைனு நினைச்சு செய்துகிட்டு வரேன் மற்றவங்க எல்லாருக்கும் இது பணம் பண்ற வேலை.” என்றான் வெறுப்புடன் தல்ஜித்.
“பீஜி அப்படி நினைக்கல தல்ஜித்.” என்று மென்மையாக அவன் கூற்றை மறுத்தாள் ஸ்மிரிதி.
“அவங்களும் என் தாத்தாவும் நினைச்சதை சாதிக்க இவ்வளவு வருஷமாயிருக்கு ஆனா அதை நிமிஷத்தில சிதைக்கறாங்க.” என்றான் தல்ஜித்.
தல்ஜித்தின் பெரிய கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் கொள்கை வேற்றுமைகளைப் பற்றி ஸ்மிரிதி ஏற்கனவே அறிந்திருந்ததால் அவன் பேச்சைப் புறக்கணித்து அவள் கைப்பையைத் திறந்து அதிலிருந்த காசோலையை எடுத்து தல்ஜித்திடம் கொடுத்தாள்.

Advertisement