Advertisement

ஸ்மிரிதியின் மனு – 13
“என்ன மா இது? குளிர்ல காலத்தில டிரஸ்ஸ ஈரம் செய்யறீங்க? என்று கேட்டான் மனு.
மனுவிற்குப் பதில் சொல்லாமல்,”திரேன்..ரோட்டி கொண்டு வா.” என்று சிவகாமி குரல் கொடுக்க,
கிட்சனிலிருந்து ஃபூல்காவுடன் வெளியே வந்தான் திரேன்.  அவன் கொண்டு வந்த தட்டிலிருந்தது இரண்டே இரண்டு ஃபூல்கா. அதை பெரியவர்கள் இருவரும் ஆளுக்குவொன்றாக எடுத்து கொள்ள, சிவகாமியை முறைத்துக் கொள்ளாமல் மனு அவனின் முறைக்காகப் பொறுமையாகக் காத்திருக்க தீர்மானித்தான்.
“இரண்டு ரோட்டி செய்ய இவனுக்கு இரண்டு மணி நேரமாகுது..கேட்டா குளிருதுனு சொல்றான்..முதலே செய்து கஸரொல்ல  வைக்கலாம்னா ஒவ்வொருத்தர் ஒவ்வொரு டயமுல வர்றீங்க அப்பறம் காய்ஞ்சு போயி காக்கா சாப்பிடற மாதிரினு கம்ப்லெயிண்ட்..எல்லாம் என் தலையெழுத்து..நம்ம ஊர்ல இருந்தோம்னா சூடா சாதத்தை வடிச்சு இருக்கறத ஊத்தி இதுக்குள்ள சாப்பிட்டு முடிச்சு, படுக்க போயிருக்கலாம்.” என்று அங்கலாய்த்தார் சிவகாமி.
“இதென்ன இப்பெல்லாம் ரொம்பதான் உங்க ஊரப் பற்றி பேசிக்கிட்டு இருக்கீங்க..உங்களுக்கு வீடு வாங்கிக் கொடுக்க முடிவு செய்தாச்சே அப்பறம் ஏன் புலம்பறீங்க?” என்று சிவகாமியை முறைத்துக் கொள்ளக்கூடாது என்ற அவனின் முயற்சியை கைவிட்டு விட்டு அவரின் வாயைத் திறக்க வாய்ப்பு கொடுத்தான் மனு.
“நான் எது பேசினாலும் உனக்கு ஏன் தப்பா தெரியுது? என்று தப்பாக பேசிய அவனின் தாய்க்குப் பதில் சொல்ல முடியாமல் திருதிருவென முழித்தான் வக்கீல்.
“அவன் சொல்றது சரிதான்..இனி நீ ஊரைப் பற்றி எதுவும் பேசாத..நீ நினைக்கறதுதான் இந்த வீட்ல நடக்குது..கோயமுத்தூர் போன பிறகு மகன்களைப் பார்க்கணும்னு ஆசைப்பட்ட அவ்வளவுதான்..நானும், நீயும்தான் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துகிட்டு இருக்கணும்.” என்று மகனிற்கு உதவி கரம் நீட்டினார் அதுவரை மௌனமாக இருந்த நாதன்.
“கலெக்டர், வக்கீல் எல்லாரும் ரூல்ஸ் பேசறீங்க..ஆர்டர் போடறீங்க..இனி நீங்க சொல்ற போது வாயத் திறக்கறேன்..உங்களோட விருபப்படி பேசறேன்..என்ன டா.. ஷிவானி பற்றி பேசிக்கிட்டு இருக்கட்டுமா..உன் காதுக்கு இனிமையா இருக்குமா?” என்று குசும்பாகக் கேட்டார் சிவகாமி.
அதற்குள் அவனுக்கான ஃபூல்கா வந்தவுடன் அதை சாப்பிடுவதில் கவனம் செலுத்திய மனுவைப் பார்த்து மறுபடியும்,”உன்கிட்டதான் கேட்டேன்..ஷிவானி புராணம் படிக்கலாமா?” என்று சிவபுராணம் படிக்கட்டுமா என்று பக்தியோடு அனுமதி கேட்பது போல கேட்டார் சிவகாமி.
அவர் பேசுவது புரியாமல்,”அவள எதுக்கு மா நியாபகப்படுத்துறீங்க..அவ தொல்லை ஆபிஸ்ல தாங்க முடியல, ஃபோன்ல தாங்க முடியல..அவளை எதுக்கு சாப்பாட்டு டேபிளுக்கு கொண்டு வர்றீங்க?” என்று வெகுளியாகக் கேட்டான் மனு.
“என்ன டா சொல்ற? சாப்பாடு டயம் தாண்டி, நேரம் போகறது தெரியாம அவக்கூட பேசிக்கிட்டிருக்கறது நீதான்.. அதான் விசாரிச்சேன்.” என்றார் சிவகாமி.
“அவ்வளவு நேரம் எஃப்ர்ட் போட்டும் அடுத்த நாள் எதையாவது சொதப்பிடறா..என்னால இனி அவளோட சேர்ந்து வேலை செய்யமுடியாதுனு நினைக்கறேன்..நாங்க மூணு பேரும்தான் மெனேஜ் செய்யணும்.” என்றான் மனு.
“அவளை உங்க ஆபிஸ்ல சேர்ந்துக்கறச்சே எங்க போச்சு இந்த அறிவு..நீங்க மூணு பேரும் முட்டாளா இல்லை அவ ஒருத்திதான் புத்திசாலியா?” என்று கேட்டார் சிவகாமி.
“நாங்க மூணு பேரும் ஜெண்ட்ஸ்..அவ ஒருத்திதான் லேடி..ஸோ லேடி கிளையண்டஸ்ஸ ஹாண்டில் செய்ய அவள ஹையர் செய்தோம்..அவ வேலைப் பார்க்கற லெவல்ல இப்ப இருக்கற மற்ற கிளையண்ட்ஸ் எல்லாம் போயிடுவாங்க போலிருக்கு.” என்றான் மனு.
“ஏன் டா அப்ப அவளை வேலைக்கு சேர்த்தீங்க..வேற லேடி உங்களுக்குக் கிடைகலையா..லேடீஸ்கிட்ட தான பேசுணும்.. நான் வீட்ல சும்மாதான இருக்கேன் நான் வரேன் உன் ஆபிஸுக்கு..எத்தனை லேடீஸ்கிட்ட, எத்தனை ஊர்ல பேசியிருக்கேன்..கதை கேட்டிருக்கேன்..உங்கப்பாவோட வலது கையே நாந்தான்.” என்றார் சிவகாமி.
“அம்மா..சும்ம இருங்க மா..எங்களுக்கு தேவை லேடி வக்கீல்..கிளையண்ட்ட முதல் முறை சந்திக்கும் போதே முழு விவரமும் கேட்டு, கேஸ் இருக்கா இல்லையானுத் தீர்மானிக்கணும்..நீங்க நினைக்கறது போல வெட்டிக் கதை கேட்கற வேலைக் கிடையாது.” என்றான் மனு.
“அவ வக்கீலுங்கற அப்பறம் ஏன் டா அவளுக்கு வேலை தெரியலைனு சொல்ற.”
“கதையும் கேட்கணும் அதிலேர்ந்து கேஸையும் உருவாக்கணும்..அவ உங்களாட்டம் கதை மட்டும் கேட்டுக்கறா..மற்ற வேலைய எங்க மூணு பேருக்கும் பிரிச்சு கொடுத்திடறா..நாங்க கோர்ட்டுக்குப் போவோமா இல்ல அவ பிரிச்சு கொடுக்கறதப் படிச்சு கேஸ் இருக்கானு பார்த்துகிட்டு இருப்போமா?” என்றான் மனு.
“ஏன் டா..முன்னாடி ஒரு அம்மா வந்திட்டு இருந்தாங்களே அவங்களுக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டார் சிவகாமி.
“அவங்க பார் டைம்தான் வந்தாங்க..எங்களுக்கு இப்ப முழு நேரம் ஆள் தேவைப்படுது..நிறைய கேஸ் வருது..எங்களுக்குதான் டயமில்ல.” என்றான் மனு.
அப்போது மறுபடியும் சிவகாமியின் ஃபோன் அழைக்க, ஃபோனைப் பார்த்து சந்தோஷத்துடன் “ஸ்மிரிதி டா.” என்றார் சிவகாமி.
சிவகாமிக்கு பதில் சொல்லாமல் மௌனமாக அவன் உணவை சாப்பிட்டான் மனு.
“சொல்லு மா.” என்றார் சிவகாமி.
“ஆமாம்..நானும், அம்மாவும் இன்னிக்கு முழுக்க டி ரை செய்தோம்.” என்றார் சிவகாமி.
அதற்கு மேல் சிவகாமி அந்தப் புறம் சொல்வதை மௌனமாகக் கேட்டு கொண்டிருந்தார்.  கடைசியாக “சரி” என்று சொல்லி ஃபோனை வைத்தார்.
அவர் மற்றவர்களிடம் ஸ்மிரிதியிடம் பேசியதைப் பற்றி சொல்லுமுன் மனுவின் ஃபோன் அழைத்தது.  அழைப்பை அட்டெண்ட் செய்யாமல் அவன் ஃபோனையே யோசனையுடன் பார்த்து கொண்டிருந்தான் மனு.
“யாரு டா?” என்று நாதன் கேட்க,
“கார்மேகம் அங்கிள்.” என்றான் மனு.
சிவகாமியும், நாதனும் ஒருவரையொருவர் நம்பமுடியாமல் பார்க்க, “எடுத்து பேசு டா.” என்றார் சிவகாமி.
அவன் ஃபோனை எடுத்து,“சொல்லுங்க அங்கிள்.” என்றான் மனு.
அவர் என்ன சொன்னர் என்று தெரியவில்லை ஆனால் அதை கேட்டு கொண்டிருந்த மனுவின் முகபாவனையில் பயந்து போயினர் மற்ற இருவரும்.  ஒரு வார்த்தைப் பேசாமல் கார்மேகம் சொன்னதை மட்டும் கேட்டு கொண்டிருந்த மனு கடைசியாக “நானே உங்களுக்குப் ஃபோன் செய்யறேன்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.
“அம்மா..எங்க இருக்கா அவ?” என்று ஃபோனை வைத்தவுடன் கேட்டான் மனு.
“எதுக்கு டா?”
“காலைலேர்ந்து அவகிட்ட பேச டிரை செய்துகிட்டு இருக்காரு அங்கிள்.. அவ ஃபோனை எடுக்க மாட்டேங்கறா..நேத்து நைட்டு அவ வீட்டுக்குப் போகாம மெஹக்கோட  ஹோட்டலுக்கு போயிருக்கா..இன்னிக்கு, இதுவரைக்கும் வீட்டுக்கு வரல. .ஃபோன் செய்தா பஞ்சாபில மெஸெஜ் வருதுனு அங்கிள் சொல்றாரு..உங்ககிட்டையோ இல்ல பிரேமா ஆன் ட்டிக்கிடையோ பேசினா அவருக்குத் தகவல் தர சொல்றாரு.” என்றான் மனு.
“அவ தில்லில இல்ல வெளியூர்ல இருக்கா..எங்க இருக்கானு என்கிட்ட சொல்லல டா……இன்னும் ஒரு வாரம் கழிச்சு வீட்டுக்கு போயிடுவானு மட்டும் சொன்னா..பிரேமாகிட்டையும் அதேதான் சொல்லியிருக்கா” என்றார் சிவகாமி.
“இப்ப அங்கிள் கிட்ட என்ன சொல்றது?” என்று மனு கேட்க,
“நம்மகிட்ட சொன்னதுதான் சொல்லமுடியும் ஆனா ஸ்மிரிதிகிட்ட கேட்டுகிட்டு அவர்கிட்ட பேசலாம்.” என்றார் சிவகாமி.
“ஆமாம்..அவ பெரிய மனுஷி அவகிட்ட பர்மிஷன் கேட்டுகிட்டு பேசணும்..நேத்து நைட் சினேகிதிங்க இரண்டு பேரும் சேர்ந்து ஹோட்டல்ல  தண்ணி போட்டிருப்பாங்க..இன்னிக்கும் ஏதாவது பிளான் இருக்கும்.. அதான் வீட்டுக்கு போகாம வேற எங்கையோ கிளம்பி போயிட்டா.” என்றான் மனு.
“மனு.” என்று அதிர்ச்சியாயினர் சிவகாமியும், நாதனும்.
“ஏன் மா உங்களுக்கு அதிர்ச்சி..கோயமுத்தூர்ல சிகரெட் வேணுமானு அவ என்னைக் கேட்கல..முந்தா நாள் எங்க முன்னாடியே மெஹக் அவ கைல கிளாஸோட சுத்திகிட்டிருந்தா.” என்றான் மனு.
“மனு..எதுவும் தெரியாம நீ பேசாத..மெஹக் விஷயம் வேற..அவ அம்மாவால அந்தப் பொண்ணுக்கு சின்ன வயசுலேர்ந்தே சிலது பழகிப் போயிடுச்சு..நேத்துக்கூட அதைப் பற்றிதான் அவகிட்ட விசாரிச்சேன்..முன்னாடி பணம் இல்லாதபோது அவங்க  பழக்கம் கம்மியா இருந்திச்சு.. இப்ப மெஹக் சமபாதிக்கறதையும் சேர்த்து அந்தம்மா கரைக்கறாங்க..ஆனா மெஹக் அவ அம்மா போல இல்ல.” என்று சிவகாமி முடிக்குமுன்,
“ஸ்மிரிதியும் பிரேமா ஆன் ட்டி போல இல்லை.” என்றான் மனு.
“இல்லைதான்.” என்று ஒப்புக்கொண்டார் சிவகாமி.
சிவகாமி “இல்லை” என்று ஒப்புக்கொண்டதுதான் ஸ்மிரிதியை அவர் மருமகளாக ஒப்புக்கொள்ள முடியாததற்கு காரணாமாகப் போகிறது என்று அந்த மூவரும் அப்போது உணரவில்லை.
“உங்களுக்கும், ஆன் ட்டிக்கும் ஃபோன் பேசினவ அவங்க அப்பாவுக்கும் ஃபோன் போட வேண்டியதுதான.” என்றான் மனு.
“டேய்..நீயேதான் அன்னிக்கு சொன்ன ஸ்மிரிதி அவங்க அப்பாகிட்ட அவ வீட்டுக்கு வர போகறதில்லைனு தகவல் சொல்லியிருந்தானு..இப்ப அவ அவருக்குத் தகவல் சொல்லாம போனதுக்கும் ஏதாவது காரணம் இருக்கும்….அவகிட்ட பேசிட்டு முடிவெடுக்கலாம்.” என்றார் சிவகாமி.
“நீங்களே அவளுக்கு ஃபோன் செய்து விசாரிங்க… அதுக்கு அப்பறம் நான் அங்கிள்கிட்ட பேசறேன்.” என்றான் மனு.
“நீங்கெல்லாம் சாப்பிடாம ஃபோன்லையேப் பேசிகிட்டு இருக்கீங்க..எப்ப சாப்பிட்டு முடிப்பீங்க.” என்று கிட்சனிலிருந்து வந்த திரேன் கேட்க,
“இவன் இரண்டு மணி நேரம் எடுத்துப்பான் சமைக்க ஆனா நாம இவனுக்குப் பயந்துகிட்டு இரண்டு நிமிஷத்தில சாப்பிட்டு முடிக்கணும்..ஏதாவது குறை சொன்னா ஊருக்கு ஓடிப் போயிடுவான்..அப்பறம் கிட்சனை யார் ஓட்டறது?” என்று திரேனை விமர்சித்தார் சிவகாமி.
“அம்மா.. நீங்க சாப்பிட்டு முடிச்சிட்டு ஃபோன் செய்யுங்க..அவசரமில்ல..அவ இன்னிக்கு நைட் எப்படியும் அவ வீட்டுக்குப் போகமுடியாது.” என்றான் மனு.
அவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்தபின் மாறனுக்காகத் தனியாக உணவை எடுத்து வைத்துவிட்டு அவர் ஃபோனுடன் அமர்ந்தார் சிவகாமி.  அவர் அருகில் நாதன் அமர்ந்திருக்க, மனு அவனுடைய அறையிலிருந்தான்.
“ஹலோ..ஆன் ட்டி பேசறேன் மா…உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..உங்கப்பா மனுக்கு ஃபோன் செய்தாரு.” என்று ஆரம்பித்தார் சிவகாமி ஆனால் அவரைப் பேச விடாமல் அந்தப் புறம் ஸ்மிரிதி என்ன பேசினாள் என்று தெரியவில்லை ஆனால் “சரி” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தார் சிவகாமி. அதன்பின்,
“மனுகிட்டையேப் பேசிக்கறேனு சொல்லிட்டா.” என்று நாதனிடம் சொன்னார்.
“உன்கிட்ட நேத்திக்கே அவங்க வீட்டுக் கல்யாணத்துக்கு போக வேணாம்னு சொன்னேன் ஆனா நீதான் கேட்கல..இப்ப அவங்க பிரச்சனைல மாட்டிகிட்டு முழிக்கற..உன்னோட இது ஒரு தொல்லை..இத்தனை நாள் கலெக்டர் கணவனா இருந்ததால தப்பிச்சுகிட்ட.” என்றார் நாதன்.
“ஆமாம்..பிரச்சனைய நாந்தான் இழுத்துகிட்டு வரேன்..கல்யாணத்துக்கு மட்டும்தான் போனேன்..பிரச்சனைங்க என்னை பார்த்தவுடன பிடிச்சுப் போயி என்கிட்ட வந்திடுது..நான் கட்டிகிட்ட கலெக்டர் காரணமா இருக்கலாம்.”
“அது சரி..ஊர் பிரச்சனைங்க தான் நம்ம இரண்டு பேரையும் ஒண்ணு சேர்த்து வைச்சுது.” என்றார்  நாதன்.
“கரெக்ட் கலெக்டர்.” என்று சொல்லி சிரித்தார் சிவகாமி.  
அவனைறையில் படுத்து கொண்டிருந்த மனு ஸ்மிரிதியைப் பற்றி தான் யோசித்து கொண்டிருந்தான்.  அப்போது அவன் ஃபோன் அழைக்க, ஸ்மிரிதி என்று தெரிந்தவுடன் சிறிது நேர தாமதத்திற்குப் பின் அழைப்பை ஏற்று கொண்டான்.
“என்ன?” என்று எடுத்தவுடனையே அவளைக் கேள்வி கேட்டான்.
“என் அப்பா  உன்கிட்ட என்ன கேட்டாரு?” என்று வினவினாள் ஸ்மிரிதி.
“நீ எங்க இருக்கேனு கேட்டாரு?”
“அவருக்குத் தெரியும்.” என்றாள் ஸ்மிரிதி.
“அப்பறம் ஏன் எனக்கு ஃபோன் செய்தாரு?”
“இது வேற விஷயம்..இனி நீயோ, ஆன் ட்டியோ என் விஷயத்தில அவர் சொல்றாருனு தலையிடாதீங்க..நான் பார்த்துப்பேன்.” என்றாள்.
“அதை உங்கப்பாகிட்ட நேத்து சொல்றது தான..அவரு கூப்பிடவுடன ஊமையா அவரு பின்னாடி போன..அப்ப இந்த வாய் எங்க போச்சு?” என்று சற்றும் சம்மந்தமேயில்லாமல் சீறினான் மனு.
“மனு..அது எனக்கும், எங்கப்பாக்கும் நடுவுல..நீ அதுல தலையிடாத.” என்று மறுபடியும் எச்சரித்தாள் ஸ்மிரிதி.
“கல்யாணத்துக்கு வந்தவங்கள வைச்சு அப்பாவும், பொண்ணும் கால் பந்து விளையாடறீங்களா? அவரு ஃபோன் செய்து பொண்ணு பற்றி தெரியணும்னு சொல்லுவாரு..பொண்ணு ஃபோன் செய்து அவருக்கு ஏற்கனவே தெரியும்ணு சொல்லுவா..உங்க இரண்டு பேர்ல யார் உண்மை பேசறீங்க?” என்று கேட்டான் வக்கீல்.
சிறிது நேர மௌனத்திற்கு பிறகு..
“இரண்டு பேரும்தான்.
அவருக்கு நான் தில்லில இல்லைனு தெரியும் ஆனா எங்க இருக்கேன்னு தெரியாது..உனக்கு அவர் ஃபோன் செய்ததுக்குக் காரணம் நேத்து நைட் நடந்த விஷயத்தைப் பற்றி விசாரிக்க..ஆன் ட்டிக்கிடையோ இல்லை அம்மாகிட்டையோ ஏதாவது சொல்லியிருப்பேனானு தெரிஞ்சுக்க ஃபோன் செய்து இருப்பாரு.” என்று விளக்கினாள் ஸ்மிரிதி.
ஸ்மிரிதியைப் பற்றிய எண்ணங்களும், அபிப்பிராயங்களும் அவனை அலைக்கழித்த வண்ணம் இருந்தாலிம் நேற்றைய இரவு என்ன நடந்தது என்று அறிந்து கொள்ள விரும்பவில்லை மனு. அதனால் அவள் விரும்பியபடி அவள் விஷயத்தில் அவர்கள் தலையீடு இருக்ககூடாதென்று முடிவு செய்தான். 
“உங்கப்பாகிட்ட ஃபோன் போட்டு உன்கிட்டயேப் பேச சொல்றேன்..அம்மாகிட்டையும் சொல்லிடறேன்..இனி உன் விஷயத்தில நாங்க யாரும் தலையிட மாட்டோம்.” என்ற வாக்குறுதியுடன் விலகி கொண்டான் மனு.
அவளுடைய விஷயத்தில் தலையிட மாட்டேன் என்று மனு சொன்னவுடன்,“தாங்க்ஸ்.” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள் ஸ்மிரிதி. ஆனால் அவளுக்குத் தெரியும் கார்மேகத்துடன் பேசியபின் கட்டாயம் அவனிடமிருந்து ஃபோனோ, மெஸெஜோ வருமென்று.
அவள் அழைப்பை அணைத்தவுடன் கார்மேகத்திற்கு ஃபோன் செய்தான் மனு.  அவர் ஃபோனை எடுத்தவுடன்,
“அம்மாக்கு அவ எங்க இருக்கானுத் தெரியாது அங்கிள்..நீங்களே ஃபோன் செய்து விசாரிங்க..அவ உங்க ஃபோனை அடெண்ட் செய்வா.” என்றான் மனு.
“உங்கம்மாகிட்டையும், பிரேமாகிட்டையும் என்ன பேசினா?” என்று கேட்டார் கார்மேகம்.
“இப்ப கொஞ்ச நேரம் முன்னாடிதான் இரண்டு பேர்கிட்டையும் பேசியிருக்கா..என்ன பேசினானு எனக்குத் தெரியாது.” என்றான்.
“நேத்து நைட் நடந்தது பற்றி அவங்க இரண்டு பேர்கிட்ட ஏதாவது சொன்னாளா?” என்று ஸ்மிரிதி எதிர்பார்த்தது போல் அவர் கேட்க, 
இது என்ன புதுசா என்று நினைத்த மனு,”அம்மாகிட்ட இரண்டு நிமிஷம்கூட பேசல..அவங்களுக்கு எதுவும் தெரியாது.” என்று வலியுறுத்தினான் மனு.
“நேத்து நைட் கோபத்தில அவ கல்யாணத்து வைச்சிருந்த பணத்தை எடுத்துகிட்டு போயிட்டா..பணம் போனா போகுது ஆனா அவளைப் பற்றிதான் கவலையா இருக்கு.” என்றார் கார்மேகம்.
“பணத்தை எடுத்துகிட்டு போயிருக்காளா..என்ன அங்கிள் சொல்றீங்க?” என்று அதிர்ச்சியடைந்தான் மனு.
“ஆமாம் தம்பி…நேத்து கல்யாணத்தில அவளைப் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அவளைப் பிடிச்சிடுச்சுனு சொன்னாங்க..அதுக்கு அச்சரமா பணம் ஏற்பாடு செய்து வைச்சிருந்தேன்..மாப்பிள்ளை பையன் அவளோட பேசணும்னு சொன்னாரு..அவ அந்தப் பையன்கிட்ட என்ன பேசினானு தெரில….
அவனோட பேசின பிறகு என்கிட்ட வந்து அந்தப் பணத்தை எனக்கு கொடுங்க நான் அவனவிட நல்ல பசங்களோட வாழ்க்கைக்கு அதை உபயோகிச்சுக்கறேன்..இனி அவ கல்யாணத்தைப் பற்றி பேசவே வேணாம்னு சொல்லி கோபமா மெஹக்கோட புறப்பட்டு போயிட்டா..
கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லாரும் குழுமி இருந்த அந்த நேரத்தில அவளை என்ன கேட்க முடியும்? அதனால அவ கோபம் தணிஞ்சு இன்னிக்கு காலைல வீட்டுக்கு வந்த பிறகு அவளோட பேசலாம்னு நினைசேன் ஆனா அவ வீட்டுக்கு வரமா தில்லிலேர்ந்து கிளம்பி போயிட்டா ..எனக்குத் தகவல் கொடுக்காம எங்கையும் போக மாட்டா ஸ்மிரிதி..எங்கேயிருந்தாலும் எனக்கு அவ கண்டிப்பா தகவல் சொல்லுவா..இந்த முறை அப்படி நடக்கல அதான் உங்களுக்கு ஃபோன் செய்தேன்.” என்றார் கார்மேகம்.
கார்மேகத்துடன் மேலே என்ன பேசுவதென்று தெரியாமல்,”கவலைப்படாதீங்க அங்கிள் ஒரு வாரத்தில தில்லிக்குத் திரும்பி வந்திடுவா.” என்று சமாதானம் சொல்லி ஃபோனை இணைப்பைத் துண்டித்தான் மனு.
அதற்குபின் பொறுக்க முடியாமல்,”பணத்தை என்ன செய்த?’ என்று ஸ்மிரிதிக்கு மெஸெஜ் அனுப்ப,
“காகிதம் செய்யற கம்பெனில போடலாம்னு இருக்கேன்.” என்று பதில் அனுப்பினாள்.
“உண்மையச் சொல்லு.” என்று மனு மிரட்ட.
“என் விஷயத்திலத் தலையிடாத..அப்பறம் உன் தலை இருக்காது.” என்று பதிலுக்கு மிரட்டினாள்.
“தலையிடுவேன்.” என்று பதில் போட்டான் மனு.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீயே என்கிட்டேயிருந்து விலகிகிட்ட.. இப்ப நீயே திரும்பி வந்து கேள்வி கேட்கற..நீ யாரு என் விஷயத்தில தலையிட?” என்று பதில் கேள்வி கேட்டாள் ஸ்மிரிதி.
“நான் யாருனு உனக்குத் தெரியும்.” என்று மனு பதில் போட்டவுடன் ஸ்மிரிதி கனெக்‌ஷனைத் துண்டித்தாள்.
ஜலந்தரில் கடுங்குளிரில் இரண்டு ரஜாய்க்குள் படுத்திருந்த ஸ்மிரிதி, “உனக்குத் தெரியும்.” என்ற பதிலைப் பார்த்தவுடன் அவள் அனுப்பிய செய்தி அவனுக்கு சரியாக போயி சேர்ந்திருக்கிறது என்று  பதட்டமடைந்த அவள் மனதை நிதானத்திற்கு கொண்டு வர முயன்று கொண்டிருந்தாள்.   
ஸ்மிரிதி எப்படியும் மறுபடியும் அவனைத் தொடர்பு கொள்ளுவாள் என்று காத்திருந்தான் மனு.
அவன் எதிர்பார்த்தது போல் சிறிது நேரத்திற்கு பின் “நான் யார்னு உனக்கு எப்ப தெரிஞ்சுது?” என்ற கேள்வியுடன் மறுபடியும் தொடர்பில் வந்தாள்.
அவளுக்கு என்ன பதில் சொல்லுவது என்று அவன் யோசித்து கொண்டிருந்த போது,
“நீ எனக்கு யாருனு உன் பின்னாடி பைக்ல உட்கார்ந்துகிட்டு உன் பாக்கெட்ல கைவிட்ட உடனையேத் தெரிஞ்சிடுச்சு.” என்று பதில் போட்டாள் ஸ்மிரிதி.
அவனின் பதிலிற்காகக் காத்திருந்த ஸ்மிரிதி அவனின் நீண்ட மௌனத்தைப் பார்த்து,
“இருக்கியா?” என்ற அவனைக் கேட்க, அதை பார்த்தவுடன் மனுவின் முகத்தில் புன்னகை அரும்பியது.
“இருக்கேன்” என்று ஆமோதிக்காமல் “எப்பனு நீ நேர்ல வா அப்ப சொல்றேன்.” என்று விட்ட இடத்திலிருந்து விவாதத்தைத் தொடர்ந்தான் மனு.
“நீ சொல்ல வேணாம்..எனக்கேத் தெரியும்..இப்ப என்னால உன்னைப் பார்க்க நேர்ல வர முடியாது.” என்று பதில் போட்டு மறுபடியும் இணைப்பைத் துண்டித்தாள் ஸ்மிரிதி.
அதற்கு அடுத்த நிமிடம் அவனின் ஃபோன் அழைக்க, அதை அவன் எடுத்தவுடன்,
“நேத்திக்கே உனக்கும், எனக்கும் நடுவுல என்னென்னு உனக்கு தெரிஞ்சிடிச்சு இல்ல.. அப்ப ஏன் சும்மா இருந்த? உன் மடில நானா வந்து உட்கார்ந்துபேனு உல்லாசமா கனவு கண்டுகிட்டு இருந்தியா?” என்று அவன் மனதின் ஆசையை அவன் உணருமுன் அதை அவனுக்கு உணர்த்த ஸ்மிரிதி எடுத்து கொண்ட வழியை அவன் ஆராய்ந்து கொண்டிருந்த அந்த தருணத்தைப் பற்றி அடாவடியாக கேட்ட அவளை அடக்க,
”என் பக்கத்தில உட்கார்ந்திருந்த எங்கம்மாவ நினைச்சு சும்மா இருந்தேன்..அவங்களோட  சினேகிதி மக ஒரு பஞ்சாபி பாட்டு மூலம் அவங்க மகனுக்கு ரூட் போட்டு மூக்குத்தியத் தேடி கொடுனு மூட் ஏத்திகிட்டு இருந்ததை எப்படி அதிர்ச்சியில்லாம அவங்களுக்கு எடுத்து சொல்றதுனு யோசிச்சுகிட்டிருந்தேன்.” என்று ஸ்மிரிதியைப் போலவே அதிரடியாகப் பதில் அளித்தான் மனு.

Advertisement