Advertisement

ஸ்மிரிதியின் மனு – 12
மனு அருகில் அமர்திருந்த சிவகாமியோ ஸ்தம்பித்து போயிருந்தார்.  ஸ்மிரிதியின் இந்தப் பரிமாணம் அவர் அறியாதது.  ஆடம்பரமில்லாமல் அதே சமயம் அழகானப் புடவையில் அவள் ஆடியதும், பாடியதும் அவர் மனதை கொள்ளைக் கொண்டிருந்தது.  அவள் எப்போது, எந்த வயதில், யாரிடம் இந்த மாதிரி பஞ்சாபி பாட்டைப் பாடவும் அதற்கேற்ப ஆடவும் கற்று கொண்டாள்? அதுவும் மெஹக்கிற்கு சமமாக அவ ஆடியதை நினைத்து அவர் ஆச்சர்யப்பட்டு போனார்.
அம்மா, மகன் இருவரும் அவரவர் சிந்தனை உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்க அவர்கள் இருக்குமிடம் வந்தனர் அவர்களின் சிந்தனையில் உலாவிக் கொண்டிருந்த கன்னியர் இருவரும்.  மெஹக்கும், ஸ்மிரிதியும் சிவகாமியின் அருகில் வந்துவுடன் மற்றொரு சோபாவில் அமர்ந்து கொண்டான் மனு.
“ஆன் ட்டி..இவ மெஹக்..நினைவிருக்கா உங்களுக்கு..என்கூட ஸ்கூல்லப் படிச்சா.” என்று மெஹக்கை சினிமா நடிகை என்று சொல்லாமல் அவள் சினேகதி என்று சிவகாமிக்கு அறிமுகப்படுத்தினாள் ஸ்மிரிதி.
“நமஸ்தே ஆன் ட்டி.” என்று சிவகாமியின் பாதங்களை தொட்டு வணங்கினாள் மெஹக்.
“பரவால்ல மா..வந்து பக்கத்தில உட்காருங்க.” என்று அவர்கள் இருவரையும் அவரருகில் அமர வைத்த சிவகாமி, 
“இரண்டு பேரும் ரொம்ப நல்லா டான்ஸ் ஆடினீங்க..ஸ்மிரிதி நீ பாட்டெல்லாம் பாடுவேனு எனக்கு இப்பதான் தெரியும்.” என்றார் ஹிந்தியில்.
“ஆன் ட்டி..நான் பாட்டும் மட்டும்தான் பாடறதா இருந்தேன்….இன்னிக்கு மெஹக்கூட ஆட வேண்டிய பொண்ணு மத்தியானதிலேர்ந்து ரிகர்செல் செய்து கடைசி நிமிஷத்திலக் கால சூளுக்கிகிட்டா..மெஹக்கூட யாரு ஆடறதுனு ஒரே போட்டியா போயிடுச்சு..கல்யாண வீட்ல இதனால பிரச்சனை வர வேணாம்னு நானே பாட்டு பாடிகிட்டு அவக்கூட சேர்ந்து ஆடலாம்னு முடிவெடுத்தேன்..
எல்லாருக்கும் மெஹக் டான்ஸ் பார்க்கறதுக்குதான் காத்துகிட்டிருந்தாங்க..ஒன்ஸ் மோர் கேட்டீங்க இல்ல அது மெஹக் டான்ஸுக்குதான்..நல்ல வேளை பாதி நேரம் மேடை இருட்டா இருந்திச்சு இல்லைனா பாதி டான்ஸ்ல என்னைய வெளியப் போக சொல்லியிருப்பாங்க.” என்று ஹிந்தியில் பதில் சொல்லி சிரித்தாள் ஸ்மிரிதி.
“இல்ல ஸ்மிரிதி..நீ நல்லா பாடற அதே போல நல்லா டான்ஸ்ஸூம் ஆடற.” என்று தமிழில் அவள் கூற்றை மறுத்த சிவகாமி அதன்பின் மெஹக்கைப் பார்த்து,
“நீ எப்படி இருக்க, உன் தங்கை எப்படி இருக்கா?” என்று ஹிந்தியில் குசலம் விசாரிக்க ஆரம்பித்தார்.
“ஆன் ட்டி..என் தங்கைய நினைவுல வைச்சிருக்கீங்க.” என்று ஆச்சர்யப்பட்டாள் மெஹக்.
“ஸ்கூல் லீவுல ஸ்மிரிதி எங்க வீட்டுக்கு  வரும்போது அவளோட அம்மாகிட்டையும், என்கிட்டையும் அவ ஸ்கூல்ல நடக்கறத பற்றி பேசிகிட்டு இருப்பா..அதெல்லாம் ஒரு காலம்..நான் ஸ்மிரிதியையே இப்பதான் நிறைய வருஷம் கழிச்சு பார்க்கறேன் அதனால இப்ப நீங்கெல்லாம் எப்படி இருக்கீங்கனு நீ சொன்னாதான் தெரியும்.” என்றார் சிவகாமி.
“என் தங்கை மீனல் வெளி நாட்டுலப் படிச்சுகிட்டிருக்கா ஆன் ட்டி.” என்றாள் மெஹக்.
“ரொம்ப சந்தோஷம்..அப்பா எப்படி இருக்காங்க? அம்மா எப்படி இருக்காங்க? குறைச்சுகிட்டாங்களா?” என்று பூடகமாக விசாரித்தார்.
“இரண்டு பேரும் அப்படியேதான் இருக்காங்க..நாந்தான் இப்ப சம்பாதிக்கறேனே.” என்றாள் வருதத்துடன் மெஹக்.
“கடவுள் மேல நம்பிக்கை வை..எல்லாம் சரியாயிடும்..தைரியமா இரு..புத்திசாலியா இரு.”
“புத்திக்கும், தைரியத்துக்கும்தான் ஸ்மிரிதி என் பக்கத்தில இருக்கா..அங்கிள் என்னை அவரோட இன்னொரு பொண்ணா நினைக்கறாரு..அதான் குடும்பத்தில ஒருத்தியா கல்யாணத்தில கலந்துக்க வந்தேன்.” என்றாள் மெஹக்.
“நீ கவலைப்படாத எல்லாம் சரி ஆகிடும்..தமிழ் படத்தில நடிக்கப் போறேனு மனு சொன்னான்.” என்றார் சிவகாமி.
“ஆமாம் ஆன் ட்டி..மனுதான் காண்ட் ரக்ட்ட படிச்சு திருத்தி கொடுத்தான்.” என்றாள் மெஹக்.
“உனக்கு என்ன உதவி வேணுமோ அவன்கிட்ட கேளு..செய்து கொடுப்பான்.” என்று மனுவின் சார்பாக உதவி கரம் நீட்டினார் சிவகாமி.
அவர்கள் இருவரின் பேச்சில் கலந்து கொள்ளாமல் மற்ற இருவரும்  மௌனமாக இருந்தனர்.  ஜோத்பூரி ஸூட் அணிந்து ஸ்மார்டாக ஜோத்பூர் பரம்பரை ராஜபுத்திரன் போல் அமர்ந்திருந்தான் சோழப் பரம்பரைப் பெயரை கொண்ட மனு வளவன்.  ஸ்மிரிதியின் பாடல் அவனுள் ஏற்படுத்திய மன அதிர்வுகளை ஆராய்ந்தப்படி அமைதியாக இருந்தான். 
அவனின் அமைதியான தோற்றத்தைப் பார்த்து அவள் அவனுக்கு அனுப்பிய செய்தி அவனிடம் சரியாகப் போயி சேர்ந்திருக்கறதா என்று சந்தேகம் கொண்ட ஸ்மிரிதியும் அவனிடம் பேச்சு கொடுக்காமல் அவனின் மனதில் ஏற்பட்டு கொண்டிருந்த மாற்றங்களை அவன் முக பாவனையில் படிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.  ஆனால் அவளை மொத்தமாகத் தவிக்கவிட்டு கொண்டிருந்தான் சிலையாக அமர்ந்திருந்த மனு.
மெஹக்கூடன் பேசிக் கொண்டிருந்த சிவகாமி திடீரென்று மற்றொரு சோபாவில் அமர்ந்திருந்த மனுவைப் பார்த்து,
“உன் ஃபோன்ல எங்க மூணு பேரையும் ஃபோடோ எடு.” என்றார்.
உடனே,”நான் வேணாம்.” என்று மறுத்தாள் மெஹக்.
“ஏன் மா..நான் என் ஃபோன்ல வைச்சுக்கதான் கேட்கறேன்..அப்பறம் ஸ்மிரிதியோட அம்மாவுக்கும் அனுப்பலாம்னு நினைச்சேன்.” என்றார் சிவகாமி.
“ஒகே.” என்றாள் மெஹக்.
மனு அவர்களைப் ஃபோடோ எடுக்குமுன்,”ஒரு நிமிஷம்.” என்று சொல்லி அவர் கைப்பையிலிருந்த ஸ்டிக்கர் பொட்டு பாக்கெட்டிலேர்ந்து ஒரு பொட்டை எடுத்து ஸ்மிரிதியின் நெற்றியில் ஒட்டினார் சிவகாமி. 
அவர் பொட்டு வைத்துவிட்டது கோயமுத்தூரில் பிரேமாவின் செயலை நினைவுப்படுத்த அதுவரை அவள் உணர்வுகளைக் கட்டுபடுத்தி கொண்டிருந்த ஸ்மிரிதி, சிவகாமியை இறுக்கமாக அணைத்து கொண்டு, “நீங்க இப்ப பொட்டு வைச்சுவிட்டது அம்மாவ நினைவுபடுத்தது.” என்று சொல்லி கண் கலங்கினாள்.
“எனக்கும் அவ நினைவு வருது அதான் உன்னைப் பார்க்க இன்னிக்கு கிளம்பி வந்தேன்..இனி நானோ, அம்மாவோ சொல்லாம நீயே புடவை கட்டும்போது நெற்றிலப் பொட்டு வைச்சுக்கணும்..சரியா?” என்று சிவகாமி கேட்க, “சரி.” என்று தலையசைத்தாள் ஸ்மிரிதி. 
அதேபோல் அவரின் மறுபுறம் அமர்ந்திருந்த மெஹக்கின் நெற்றியிலும் ஒரு பொட்டை ஒட்ட வைக்க, மெஹகோ”ஆன் ட்டி..எனக்கு இந்த லுக் வர என் ஸ்டைலிஸ்ட் நிறைய கஷ்டப்பட்டா..ஒரு பிந்தில எல்லாத்தையும் பாழ் பண்ணிட்டீங்க.” என்று அவள் அழகான முகம் கலங்கப்பட்டது போல் கலவரமானாள் மெஹக்.
“உன் ஸ்டைலிஸ்டுக்கு கண் இல்லை அதான் கண்ணுக்கு அழகு எதுனு தெரிய..இப்படி உங்க இரண்டு பேர் முகத்தையும் பார்த்தா கண்ணு பட்டிடும்..உனக்குப் பிடிக்காட்டா ஃபோடோக்கு அப்பறம் எடுத்திடு.” என்று மெஹக்கிடம் சொன்னார் சிவகாமி.
உடனே அவள் ஃபோன் கமெராவில் அவள் முகத்தின் அழகைப் பார்த்து கொண்ட மெஹக்,
“நல்லா இருக்கு ஆன் ட்டி..தமிழ் படத்துக்கு பொட்டு வைச்சு பழகிக்கணுமில்ல..இருக்கட்டும்” என்று அவள் தொழில மேல் கொண்ட ஆர்வத்தில் சிவகாமியின் செயலை ஒப்புக்கொண்டாள்.
அதன்பின் அவர்கள் மூவரையும் ஃபோடோ எடுத்தான் மனு.  அவன் ஃபோடோ எடுத்து முடித்தவுடன் அவனருகில் வந்த மெஹக் அவன் கையிலிருந்து ஃபோனை வாங்கி,
“நீ போயி உட்காரு.. உங்க மூணு பேரையும் நான் எடுக்கறேன்.” என்றாள்.  அவள் சொன்னதைக் கேட்ட சிவகாமியும்,
“ஆமாம் டா..வா.. என் பக்கத்தில் உட்காரு..பிரேமாக்கு இதையும் அனுப்பறேன்.” என்றார்.
சிவகாமி நடுவில் இருக்க ஒருபுறம் மனுவும், மறுபுறம் ஸ்மிரிதியும் அமர அதை ஃபோடோ எடுத்தாள் மெஹக்.  
நான்கு நபர்கள், இரண்டு நிழல் படங்கள், இரண்டு நிஜங்கள்.
அதன்பின் ஸ்மிரிதியை மட்டும் தனியாகப் புகைப்படம் எடுத்தாள் மெஹக்.  சிவகாமியிடம் அவள் எடுத்த ஸ்மிரிதியின் படங்களைக் காட்டி,”இதையும் பிரேமா ஆன் ட்டிக்கு அனுப்பிடுங்க..இவ மட்டும் என்னை மாதிரி கலரா இருந்திருந்தா இத்தனை நேரம் இவதான் மும்பையைக் கலக்கியிருப்பா.” என்றாள்.
“உன் கலருக்கு வெறும் பாலிவுட்தான்..என் கலருக்கு ஹாலிவுட்.” என்று அலட்டலாகப் பதில் அளித்தாள் ஸ்மிரிதி.
“கரெக்ட்..அங்கிள்ள ஹாலிவுட் பிரடியுஸர் ஆக்கிடு  பிளாக் பியுட்டி.” என்று சொல்லி ஸ்மிரிதியின் கன்னத்தில் முத்தமிட்டாள் மெஹக்.
“எனக்காகனு சொன்னா அவரு எல்லாத்துக்கும் எவரெடி..எனக்கு நானா எல்லாம் செய்யணும்..அவரைப் போலவே..ஆனா எனக்குனு அவரு என்ன செய்யணும்னு நினைக்கறாரோ அதை நான் மறுக்கறதில்ல..அதை வைச்சு நான் என்ன செய்யறேனு மட்டும் அவர்கிட்ட சொல்லறதில்ல..அவராவே தெரிஞ்சுப்பாரு…
எங்கப்பா தில்லிக்கு வந்தபோதும் சரி இப்பவும் சரி அவரைத் தாங்கிப் பிடிச்சுக்க யாருமில்ல….. அவரு பொண்ணுனு என்னையும் யாரும் தாங்கிப் பிடிக்க வேணாம்.. தூக்கி விடவும் வேணாம்…எங்கப்பாவும்கூட.” என்றாள் ஸ்மிரிதி.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது கல்யாணச் சடங்குகள் ஆரம்பித்தன.  சரியாக அரைமணி நேரத்தில எழு முறை அக்னியை வலம் வந்து, மாலை மாற்றிக் கொண்டு மணமக்கள் இருவரும் கணவன், மனைவியாயினர்.
கல்யாணம் முடிந்தவுடன் மணமக்களை சிவகாமியிடம் அழைத்து வந்தார் கார்மேகம்.  அவருடன் அவரது இரண்டாவது மனைவி கீதிகாவும் அவர்  மகன் மனிஷூம் வந்தனர்.  அதுவரை கீதிகாவை நேரடியாக சந்தித்திராத சிவகாமி சங்கடத்துடன் எழுந்து நிற்க அதை கண்டு கொண்ட ஸ்மிரிதி சிவகாமியை அணைத்து, அங்கே இருந்த அனைவரின் சங்கடத்தை போக்கும்படி,
“என்னோட அம்மாவோட பெஸ்ட் பிரண்ட் சிவகாமி ஆன் ட்டி, இது அவரோட மகன் மனு வளவன்.” என்று பிசிறில்லாமல் தெளிவாக அறிமுகப்படுத்தி வைத்தாள்.
உடனே கார்மேகத்தின் மனைவி கீதிகா சிவகாமியைப் பார்த்து,”நமஸ்தே.” என்றார். பின் மணமக்கள் இருவரும் சிவகாமியின் பாதத்தை தொட்டு வணங்கினர்.  அவர்கள் வணங்கி எழுந்தவுடன் அவர் கொண்டு வந்திருந்தப் பரிசுப் பொருளை மணமகளிடம் கொடுத்தார் சிவகாமி.
“நீங்க இரண்டு பேரும் சாப்டிட்டுதான் போகணும். இங்கையே சாப்பாடு வந்திடும்..மெஹக் உங்களோடவே இருப்பா..எனக்கும், ஸ்மிரிதி மாக்கும் கொஞ்சம் வேலை இருக்கு.. எங்களால உங்கள வழியனுப்ப வர முடியாது அதனால தப்பா நினைச்சுக்காதீங்க.” என்றார் கார்மேகம்.
“என்னப்பா வேலை?” என்று கார்மேகத்திடம் ஸ்மிரிதி தமிழில் கேட்க.
“சிவகாமி அம்மாக்குத் தெரியும்..கொஞ்ச என்னோட வாங்க..முக்கியமான விஷயம் பேசணும்..நல்லது நடக்கும் போல இருக்கு.” என்றார் ஸ்மிரிதியிடம்.
அவளுடையக் கல்யாணத்தைப் பற்றிதான் கார்மேகம் பேசுகிறார் என்று சிவகாமிக்கும், மனுக்கும் புரிந்து போனது.  உடனே ஸ்மிரிதியைப் பார்த்து,
“நீ உங்க அப்பாவோட போ..எங்கள மெஹக் பார்த்துப்பா..நாங்க சாப்டிட்டு கிளம்பறோம்.” என்றார் சிவகாமி ஹிந்தியில்.
“சரி ஆன் ட்டி..நீங்க இன்னிக்கு வந்தது ரொம்பவும் சந்தோஷம்.” என்று சிவகாமியிடமும், “மெஹக்..அவங்களப் பார்த்துக்கோ.” என்று மெஹக்கிடமும் சொல்லிக் கொண்டு கார்மேகத்தோடுப் புறப்பட்டு போனாள்.
ஸ்மிரிதியையும், மெஹக்கையும் கீதிகா கண்டு கொள்ளவில்லை. கீதிகாவின் பட்டும் படாமல் நடத்தை விசித்திரமாக இருந்தது சிவகாமிக்கு. கீதிகாவின் அண்ணன் மகள் கல்யாணத்தில் ஸ்மிரிதியும், மெஹக்கும் எடுத்து கொண்ட முயற்சிக்கு ஒரு எதிரோலியும் இல்லை அவரிடம். 
சிவகாமியும், மனுவும் சாப்பிட்டு முடிக்குவரை அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள் மெஹக்.  சிவகாமியும் அவளிடம் பேச்சு கொடுத்தபடி அவருக்கு வேண்டிய தகவலைக் கேட்டு தெரிந்து கொண்டார்.  ஹிந்துஸ்தானி சாஸ்த்ரிய சங்கீதமும், வெஸ்டர்ன்  நடனமும் பள்ளியில் கற்று கொண்டாளென்றும், பஞ்சாபியில் பேசவும், பாடுவும் “பீஜியிடம்” கற்று கொண்டாள் என்றும் ஸ்மிரிதியைப் பற்றிய தகவலைப் பகிர்ந்து கொண்டாள் மெஹக்.
பீஜி என்பவர் அவர்கள் பிரண்டான தல்ஜித்தின் பாட்டியென்றும் அவர் பஞ்சாபில் பியஸ் (beas) என்ற டவுனில் வசிப்பதாகவும், அவர்கள் நண்பர்கள் ஐந்து பேரும் பல விடுமுறைகளை அவர் வீட்டில் அவருடன் கழித்திருப்பதாகத் தெரிவித்தாள். இப்பொழுது ஸ்மிரிதி, கபீர்தை தவிர மற்ற இருவருக்கும் நேரம் கிடைக்காததால் பஞ்சாப் சென்று பீஜியை அடிக்கடி பார்க்க முடியவில்லை என்று வருத்தப்பட்டாள் மெஹக்.
அவள் பள்ளி விடுமுறைகளைப் பஞ்சாபில் ஸ்மிரிதி கழித்தாள் என்பது மனுவிற்கும், சிவகாமிக்கும் புதிய செய்தியாக இருந்தது. அவர்கள் புறப்படுமுன் மெஹக் அவர்களிடம் ஒரு பெரிய பாக்கெட்டைக் கொடுத்தாள்.
“கல்யாணத்திற்கு வந்த விருந்தாளிங்களுக்கு கிஃப்ட்..உங்களுக்குக் கண்டிப்பா கொடுக்கணும்னு ஸ்மிரிதி சொல்லியிருக்கா…இது அவளோட சுய உதவி குழுவோடத் தயாரிப்பு….அவளுக்கு எப்பவும் அவங்க நினைப்புதான்..இதுவும் ஒரு விளம்பரம்தான் அவங்களோட தயாரிப்புக்கு.” என்றாள் மெஹக்.
மெஹக் கொடுத்தை மறுக்காமல் வாங்கிக் கொண்ட சிவகாமி,”அடுத்த முறை தில்லி வரும்போது நம்ம வீட்டுக்கு நீ வரணும்.” என்று அவளுக்கு அழைப்பு விடுத்தார்.
“ஸ்மிரிதியோட வரேன் ஆன் ட்டி.” என்று ஸ்மிரிதியையும் அவளுடைய அழைப்பில் சேர்த்து கொண்டாள்.
“ஸ்மிரிதியோட தான்.. நீயே அவகிட்டையும் சொல்லிடு.” என்று ஸ்மிரிதியுடந்தான் வர வேண்டும் என்று சிவகாமியும் அறிவுறுத்தினார்.
அந்த இரவில் சிவகாமியும், மனுவும் அவர்கள் வீட்டிற்கு திரும்பி செல்லும் போது அவரின் திறந்த வாய் மூடாமல் கல்யாணத்திற்கு வரும் போது படித்ததைவிட ஸ்மிரிதி புராணத்தை தொடர்ச்சியாக வாசித்தார் சிவகாமி. அவர் புராணத்தை தடை செய்யாமல் கேட்டு கொண்டிருந்த மனுவின் மனதில் வேறு சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தன.  
அவளுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை யாராக இருகக்கூடம் என்று யோசித்தது அவன் மனது.  நேற்று அவனையும் அவன் குடும்பத்தையும் அவர்கள் வீட்டுக் கல்யாணத்திற்கு கார்மேகம் அழைப்பு விடுத்ததின் உள் நோக்கம் ஸ்மிரிதியின் கல்யாணம் என்று கரெக்டாகக் கண்டுபிடித்தான் மனு.
அன்று இரவு அவர்களைச் சந்தித்தது முதல் கார்மேகம் சிவகாமியிடம் சொன்னது, பேசியது எல்லாம் ஸ்மிரிதியின் கல்யாணத்தைப் பற்றிதான் என்று சந்தேகமேயில்லாமல் உணர்ந்தான் மனு.  ஒரு வேளை இன்று அவர் பார்த்திருக்கும் அந்த மாப்பிள்ளைக்காக சிபாரிசு செய்ய சொல்லி மறைமுகமாகக் கேட்டு கொண்டாரோ என்று நினைத்தான் மனு.  
அவர்களைக் கல்யாணத்திற்கு அழைத்தது போல் அந்த மாப்பிள்ளை வீட்டாரையும் கல்யாணத்திற்கு அழைத்து இருக்கிறார் கார்மேகம்.  அவர் பார்த்திருக்கும் மாப்பிள்ளை ஸ்மிரிதிக்குப் பிடித்துவிட்டால் அடுத்தது அவள் கல்யாணம்தான் என்று அவன் நினைத்தபோது அவனுக்கு திடீரென்று அவன் உண்ட கல்யாண விருந்து கசந்து வழிந்தது.
அன்றும் அர்த்தராத்திரியில் வீடு வந்து சேர்ந்து படுக்கையில் விழுந்த மனுவிற்கு முந்தைய இரவு போல் உடனே தூங்க முடியாமல் அந்த மாப்பிள்ளையிடம் ஸ்மிரிதி அவள் தொலைந்துப் போன மூக்குத்தியைத் தேடி கொடுக்க சொன்னாளோ என்று யோசித்தபடி முழுவதுமாகக் தூக்கம் கெட்டு விடிய விடிய சிவராத்திரி போல் விழித்திருந்தான் சிவகாமியின் சீமந்தப் புத்திரன் மனு வளவன்.
மறு நாள் காலை மனு எழுவதற்குள் அவனின் அலுவலகத்திற்கு கிளம்பி சென்றிருந்தான் மாறன். அவனது படுக்கையறையிலிருந்து அலுவலகம் செல்ல மனு வெளிப்பட்ட போது டைனிங் டேபிளில் காலை டிபனுடன் காத்திருந்தார் சிவகாமி.
“வா டா..தூங்கலையா டா..கண்ணு சிகப்பா இருக்கு.” என்று காலை வேளை ஆராய்ச்சியை ஆரம்பித்தார்.
“பார்த்தாலேத் தெரியுது தூங்கலைனு.” என்றார் டிபன் சாப்பிட்டு கொண்டிருந்த நாதன்.
“நேத்து ஸ்மிரிதியும் அவ பிரண்ட் மெஹக்கும் டான்ஸ் ஆடினாங்க..நாங்க புறப்பட கொஞ்சம் நாங்க நினைச்சவித லேட்ட்டாயிடுச்சு.” என்றார் சிவகாமி.
“டான்ஸ் இருந்திச்சா கல்யாணத்தில?” என்று விசாரித்தார் நாதன்.
“பஞ்சாபி பாட்டு பாடிகிட்டு டான்ஸ் ஆடின ஸ்மிரிதி..கார்மேகம்கூட நேத்து என்கிட்ட ரொம்ப நல்ல மாதிரியா பேசினாரு..ஸ்மிரிதியக் கல்யாணம் செய்துக்க சொல்லி அடவைஸ் செய்ய சொல்றாரு..பிரேமாவையும்  ஸ்மிரிதிகிட்ட பேச சொல்லுங்கனு சொன்னாரு..நேத்து நைட்கூட யாரோ மாப்பிள்ளை வீட்டுக்காரங்கிட்ட அவள கூட்டிகிட்டு போனாரு..அதான் நானும், மனுவும் கிளம்பி வரும்போது அவங்க யாருமில்ல..மெஹக் மட்டும் எங்கள கார்வரைக்கும் வந்து ஏத்திவிட்டா.” என்றார் சிவகாமி.
அவர்கள் பேச்சில் கலந்து கொள்ளாமல் மௌனமாக சாப்பிட ஆரம்பித்தான் மனு.
“மனு..உங்கப்பாகிட்ட நீ நேத்து எடுத்த ஃபோடோவெல்லாம் காட்டு..அதை அப்படியே என் ஃபோனுக்கும் அனுப்பிவிடு.” என்றார் சிவகாமி.
டிபன் சாப்பிட்டு கொண்டிருந்த மனு ஒரு கையால் அவன் போனை நாதன் புறம் தள்ள, அதை கையில் எடுத்து சிவகாமி, ஃபோடோ ஒவ்வொன்றையும் நிதானமாகக் கமெண்ட் அடித்தபடி நாதனுக்கு காட்டினர்.  அதற்குள் சாப்பிட்டு முடித்து அலுவலகம் செல்ல தயாரான மனு, அவன் ஃபோனிற்காக கை நீட்ட,
“இரு டா..இன்னும் சரியா பார்க்கல.” என்றார் சிவகாமி.
“நாலு ஃபோடோவ நாப்பது நிமிஷமா பார்க்கறீங்க..உங்க போனுக்கு அனுப்பிவிடறேன் நாள்பூரா பார்த்துகிட்டே இருங்க.” என்று கோபப்பட்டான்.
“கோவம் எதுக்குடா..நீ ஃபோடோவ எனக்கு அனுப்பு, நான் பிரேமாக்கு அனுப்பிவிடறேன் அதுக்கு அப்பறமா ஸ்மிரிதிகிட்டையும் இன்னிக்கு பேசறேன்.” என்றார் சிவகாமி.
“அவ நம்மள மாதிரி இல்ல..காலைல எழுந்து வேலைக்குப் போகணும்னு கட்டாயம் கிடையாது..இழுத்துப் போர்த்திகிட்டு குளிருக்கு இதமா தூங்கிகிட்டிருப்பா..மத்தியானம் எழுந்திரிச்சாலப் பெரிசு..லன்சு டயத்துக்கு ஃபோன் போடுங்க..தூக்க கலக்கத்தோட குட் மார்னிங் சொல்லுவா உங்களுக்கு.” என்று ஸ்மிரிதியைப் பற்றி வெறுப்புடன் விமர்சித்தான்.
“அவ அப்படி கிடையாது..அன்னிக்கு ஹோட்டல்ல அவ சீக்கிரமே எழுந்திரிச்சுட்டா.” என்று மனுவிடம் மறுத்தார் சிவகாமி.
“ஆமாம்..அன்னிக்கு எழுந்திரிச்சா இன்னிக்கு எழுந்திரிசாளானு யாருக்குத் தெரியும்?” என்று மறுபடியும் ஸ்மிரிதியை குற்றவாளியாகினான் வக்கீல் மனு.
ஆனால் மனு அறிந்திருக்கவில்லை அன்று காலை அவனுக்கு முன்பாகவே எழுந்து கொண்ட ஸ்மிரிதி, அவளைப் பற்றி அவன் விமர்சித்து கொண்டிருந்தபோது அவள் தில்லியைவிட்டு கிளம்பி இரண்டு மணி நேரமாகியிருந்தது என்று.
அன்று இரவு மனு வீடு வந்து சேர்ந்த போது மணி எட்டாகியிருந்தது.  மாறன் வீடு திரும்பியிருக்கவில்லை.  அவன் வீடு திரும்ப இன்னும் தாமதமாகும் என்பதால் மற்ற மூவரும் இரவு உணவிற்காக டேபிளில் ஆஜராகினர்.  அப்போது சிவகாமியின் ஃபோன் ஒலிக்க,
“சொல்லு பிரேமா.” என்றார் சிவகாமி.
அதன்பின் மறுமுனையில் என்ன சொல்லப்பட்டது என்று  தெரியவில்லை ஆனால் ஃபோனை அணைத்தவுடன்,
“பிரேமாகிட்ட இப்பதான் பேசினாளாம்.” என்றார் சிவகாமி.
“யாரு ஸ்மிரிதியா?” என்று விசாரித்தான் மனு.
“ஆமாம்..காலைலேர்ந்து டி ரை செய்து இப்பதான் அவளுக்கு போன் கிடைச்சிருக்கு.” என்றார் சிவகாமி.
“நீங்க ஏன் மா அவங்க விஷயத்தில தலையிடறீங்க..அவள பற்றி உங்களுக்குத் தெரியாது..அவ பாடு அவங்க அம்மா பாடு.” என்றான் மனு.
“டேய்..காலைல பிரமாவுக்கு ஃபோடோ அனுப்பிட்டு ஸ்மிரிதிக்கு போன் போட்டேன்..கவரெஜ்ல இல்லைனு மெஸெஜ் வந்திச்சு..அப்பறம் மத்தியானமா திரும்பவும் போன் போட்டேன் அதே மாதிரிதான் மெஸெஜ் வந்தது..சரி பிரேமாகிட்ட கேட்கலாம்னு அவளுக்கு ஃபோன் போட்டேன் அவளும் அதையேதான் சொன்னா..நாங்க இரண்டு பேரும் அதுக்கு அப்பறம் விடாம டி ரை செய்தோம்..இப்பதான் ஸ்மிரிதி அவகிட்ட பேசியிருக்கா..அதான் ஃபோன் செய்து பிரேமா எனக்குத் தகவல் சொன்னா.” என்றார் சிவகாமி.
“அவ எங்கையாவது ஊர் சுத்திகிட்டு இருந்திருப்பா..நீங்க இரண்டு பேரும் அவள பற்றி கவலைப்பட்டு உங்க மண்டைய உருட்டிகிட்டு இருந்திருக்கீங்க..காலைல வீட்டை விட்டு போனபோதும் அவள பற்றிதான் பேசினீங்க இப்ப வீட்டுக்குத் திரும்பி வந்த அப்பறமும் அவள பற்றிதான் பேசுறீங்க..இரிடேடிங்.” என்றான் மனு.
மனுவின் பேச்சில் கோபமடைந்த சிவகாமி, டேபிளிலின் மீது டொக் என்று தண்ணீர் கிளாஸை வைக்க அதிலிருந்து தண்ணீர் தளும்பி மனுவின் மீது தெறித்தது.

Advertisement