Advertisement

ஸ்மிரிதியின் மனு – 11_2
“அம்மா, நான் உங்கள அழைச்சுகிட்டு வந்தேனாம்… இவள பார்க்கணுமுனு நீங்கதான் என்னைக் கட்டாயப்படுத்தி அழைச்சுகிட்டு வந்தீங்க..இன்னிக்காவது நேரத்துக்கு வீட்டுக்குப் போயி நான் தூங்கணும்.” என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் உண்மையைப் போட்டு உடைத்தான். ஆனால் மனு அப்போது அறிந்திருக்கவில்லை அவன் எந்த நேரத்திற்கு வீட்டிற்குப் போனாலும் அன்றிரவு அவன் தூங்கப் போவதில்லையென்று.
மனுவிடமிருந்து அவள் மெஸெஜூக்கு பதில் வராதபோது அவனைப் பற்றி நினைக்ககூடாதென்று ஸ்மிரிதி அவள் மனதைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பின்னும், மனுவும், சிவகாமியும் கல்யாணத்திற்கு வர போகிறார்கள் என்று தெரிந்தவுடன் அவள் அதுவரை உணர்ந்திராத உணர்வுகள் அவளுள் எழுந்து அவளை அலைகழிக்க ஆரம்பித்தன. அவளுள் ஏற்பட்டு கொண்டிருந்த மாற்றம் மனுவின் பதிலைக் கேட்டு ஏமாற்றம் அடைந்தது. அந்த ஏமாற்றத்தை உதறி எறிந்து விட்டு அந்த இரவிற்குள் ஒரு முடிவுத் தெரியவேண்டும் என்று மனதிற்குள் உறுதி பூண்ட ஸ்மிரிதி, சிவகாமியைப் பார்த்து,
“ஏன் ஆன்ட்டி?” 
“என்ன மா?”
“எதுக்கு நீங்க என்னைப் பார்க்கணும்?” என்று கேட்டாள்.
சிவகாமி பதில் சொல்லுமுன் கார்மேகம் அங்கே வந்து சேர்ந்தார். அவன் அமர்ந்திருந்த சோபாவிலிருந்து மரியாதை நிமித்தம் மனு எழுந்து கொள்ள,
“நீங்க உட்காருங்க தம்பி..சிவகாமி மா சௌக்கியமா இருக்கீங்களா?” என்று விசாரிதார் கார்மேகம்.
“நல்லா இருக்கேன்..ஸ்மிரிதியைப் பார்க்கணும் போல இருந்திச்சு அதான் இவன அழைச்சுகிட்டு கிளம்பி வந்திட்டேன்.” என்று அவர் கல்யாணத்திற்கு வந்ததற்கானக் காரணம் ஸ்மிரிதிதான் என்று கார்மேகத்திற்கு தெரியப்படுத்தினார் சிவகாமி.
“நல்லது..நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம்..அடுத்த கல்யாணம் ஸ்மிரிதி மா கல்யாணம்தான்… அதுக்கு கலெக்டர் ஐயாவோட நீங்க கண்டிப்பா வரணும், ஆசிர்வாதம் செய்யணும்.” என்றார் கார்மேகம்.
“கண்டிப்பா குடும்பத்தோட வரோம்.” என்று வாக்களித்தார் சிவகாமி.
அப்போது அங்கே ஓடி வந்த மனிஷ்,”மெஹக் தீதி வெயிட் செய்யறாங்க உனக்காக.” என்று ஸ்மிரிதியைப் பார்த்து சொன்னவன், மனுவைப் பார்த்து,”ஹாய்.” என்று சொல்லிவிட்டு அவனருகில் நின்று கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்து,”நமஸ்தே ஆன்ட்டி.” என்று சொல்லி அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினான். 
சிவகாமியை வணங்கி எழுந்த மனிஷை அவருடன் அணைத்துக் கொண்ட கார்மேகம்,”இவன் என் பையன் மனிஷ்.” என்று சிவகாமிக்கு அறிமுகப்படுத்தினார்.
அவர் சொன்னதைக் கேட்டு ஒரு கணம் திடுக்கிட்ட சிவகாமி,”என்ன படிக்கற?” என்று மனிஷைப் பார்த்து கேட்டார்.
“நைந்த் கிளாஸ்.” என்று பதில் அளித்தான்.
“எங்க படிக்கற?” என்று கேட்டவுடன்.
தில்லியின் பிரபலமான பள்ளி ஒன்றின் பெயரைச் சொன்னான். அதன்பின் சிவகாமி, மனுவை இருவரிடமும்,”ப்ரோகரமுக்கு டயமாச்சு..ஸ்மிரிதி தீதி ரெடியாகணும்.” என்று சொல்லி ஸ்மிரிதியை அவனுடன் அழைத்து சென்றான்.
கார்மேகமும், மனிஷும் ஆடம்பரமான பட்டு ஷெர்வானி உடுத்தியிருந்தனர்.  அவர்களைச் சந்திக்க வந்த ஸ்மிரிதியோ சாதாரண சல்வார் கமீஸ் அணிந்திருந்தாள்.
மனிஷும், ஸ்மிரிதியும் அங்கிருந்து அகன்றவுடன்,”நானே கொஞ்ச நாளா உங்கள சந்திக்கணுமுனு நினைச்சுகிட்டிருந்தேன் இன்னிக்குதான் அதுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு.” என்றார் கார்மேகம்.
“என்னையா? எதுக்கு?” என்று ஆச்சர்யமாகக் கேட்டார் சிவகாமி.
“ஸ்மிரிதி விஷயமாதான்..அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்கணுமுனு நினைக்கறேன் ஆனா அதைப் பற்றி நானோ அவ அம்மாவோ அவகிட்ட பேச முடியாது.. உங்களைப் போல ஒருத்தர் எடுத்து சொன்னா அவ புரிஞ்சுக்கலாம்..அதே சமயம் நீங்க பிரேமாகிட்டையும் இதைப் பற்றி பேச முடியும்..அம்மா, பொண்ணு இரண்டு பேருக்கும் நீங்க வேண்டப்பட்டவங்க.”
இளமைப் பருவத்தில இந்த உலகத்தையே மாற்ற முடியுமுனு நாம எல்லாரும்தான் நினைச்சோம்..கலெக்டர் ஐயா எந்த அளவு மாற்றம் கொண்டு வந்தாருனு அவருக்குத் தான் தெரியும்..மனு எழுதிக் கொடுத்து நீங்க ஆரம்பிச்ச எவ்வளவு விஷயம்  மாறி போச்சுன்னு உங்களுக்குதான் தெரியும்..
எனக்கும், பிரேமாவுக்கும் எங்க கனவுனால எங்க வாழ்க்கைதான் மாறிப் போயிருச்சு..காலத்தோடக் கட்டாயத்தில நான் மாறிப் போனது அவளுக்குப் பிடிக்கல..அவ மாறாம இருந்தது எனக்குப் பிடிக்கல..ஸ்மிரிதி அதைப் புரிஞ்சுகிட்டதுனால நானும், பிரேமாவும் எங்க விருபப்படி வாழ்க்கைய அமைச்சுக்க முடிஞ்சுது..
இப்ப ஸ்மிரிதி விரும்பற வாழ்க்கைய அமைச்சு கொடுக்க எனக்கு  வசதி இருக்கு ஆனா அவ விருப்பம்தான் என்னெனு எனக்குப் புரிய மாட்டேங்குது..மக்கள் வாழ்க்கைல மாறுதலைக் கொண்டு வர என்னென்னமோ முயற்சி செய்துகிட்டு வரா.. அவ செய்யற எல்லா முயற்சியும் அவ சுயமா செய்யறது….அவ என் பொண்ணுனு நிறைய பேருக்குத் தெரியாது..அவளும் அதை வெளில சொல்லிக்கறது இல்ல..
ஒரு கல்யாணத்தை செய்துகிட்டு இதெல்லாம் செய்யலாமுனு நீங்கதான் அவளுக்குப் புத்திமதி சொல்லணும்..நான் பார்க்கற மாப்பிள்ளை யாரும் அவ செய்யற எதுக்கும் தடை சொல்லப் போகறதில்ல ஆனாலும் அவ யாருக்கும் சரினு சொல்ல மாட்டேங்கறா.  
நீங்களும், பிரேமாவும் அவகிட்ட இதைப் பற்றி பேசினா எனக்கு நிம்மதியா இருக்கும்..தயவு செய்து பிரேமாவையும் அவகிட்ட பேச சொல்லுங்க..ஸ்மிரிதியக் கட்டாயப்படுத்த வேணாம் ஆனா அதை சமயம் கண்டிப்பா பேசுணும் அவகிட்ட..
நீங்களும், மனு தம்பியும் இன்னிக்கு வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்..ஸ்மிரிதியப் பற்றி கவலைக் குறைஞ்ச மாதிரி இருக்கு.” என்று அவர் மனதைத் திறந்து மழைப் பொழிந்து விலகினார் கார்மேகம்.
கார்மேகம் அங்கிருந்து சென்றவுடன்,”இன்னிக்கு ஸர்வம் ஸ்மிரிதி மயம்.” என்றான் மனு. அவன் அறிந்திருக்கவில்லை அந்த இரவு முடியும்போது அவனும் ஸ்மிரிதி என்னும் ஸாகரத்தில் கலந்து ஸ்மிரிதியின் மனுவாக மாறப் போகிறானென்று.
“கார்மேகம் என்கிட்ட இவ்வளவு நல்லபடியா பேசுவாருனு நான் எதிர்பார்க்கலைடா..பிரேமாவ விட்டு பிரிஞ்ச அப்பறம் நானும், உங்கப்பாவும் அவரை நிறைய முறை சந்திச்சிருக்கோம் ஆனா எனக்கு அவர் மேல கோபமிருந்ததால நான் பேசல..ஸ்மிரிதி மேலயும் கோபம்..அவங்க அம்மா விட்டிட்டு எந்தப் பொண்ணு அவங்க அப்பாவோட போகும்? ஆனா இவ போகணுமுனு சொன்னா..அதான் அவளையும் எனக்கு பிடிக்காமப் போயிடுச்சு.” என்றார் சிவகாமி.
“எத்தனை முறை உங்கிட்டேயிருந்து இதே கதையைக் கேட்டாச்சு..அதான் இப்ப அவள பார்த்தாச்சே உங்க மனசு திருப்தியாயிடுச்சா?..புறப்படலாமா.” என்று கேட்டான் மனு.
“என்ன டா..கல்யாணத்துக்கு இருக்க வேணாமா?”
“இனிமேதான் பாட்டு, கூத்து..அது முடிஞ்ச பிறகு கல்யாணம்..எப்படியும் ஒரு மணி போல ஆயிரும்..என்ன சொல்றீங்க? கிளம்பிடலாமா?” என்று கேட்டான் மனு.
“நல்லாயிருக்காது டா..கல்யாணம் முடிஞ்ச பிறகு போவோம்..கல்யாண ஜோடிக்கு கிஃப்ட் கொடுத்திட்டுதான் போகணும்.” என்று மறுப்பு தெரிவித்தார் சிவகாமி.
அடுத்த ஒரு மணி நேரம் அந்த நடன மேடையில் அனைத்து வயதினரும், ஆண், பெண், குழந்தைகள் என்று பாரபட்சமில்லாமல் எல்லா பாட்டிற்கும் எல்லாரும் சேர்ந்து நடனமாடி அந்த இடமே அமர்க்களப்பட்டது.  
கார்மேகமும் அவர் மகன் மனிஷூம் சேர்ந்து நடனமாடுவதைப் பார்த்து கொண்டிருந்தார் சிவகாமி. அந்தக் கூட்டத்தில் ஸ்மிரிதி இல்லாதது வித்தியாசமாகத் தெரிந்தது சிவகாமிக்கு.
“ஏன் டா..ஸ்மிரிதி எங்க டா..அவ டான்ஸ் ஆடல.” என்று மகனை விசாரித்தார் சிவகாமி.
“எனக்கு எப்படி மா தெரியும்..உள்ள நுழைஞ்சதுலேர்ந்து உங்களோடதான் உட்கார்ந்திருக்கேன்.” என்று சிடுசிடுத்தான் மனு.  அவனை மேலும் சோதிக்காமல் வாயை மூடிக் கொண்டார் சிவகாமி. 
கல்யாணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் நடனத்தில் கலந்து கொள்ள அந்த இரவு வேளையை அனைவரும் மகிழ்ச்சியுடன் அனுபவித்து கொண்டிருந்தனர். மேடையில் நடனமாடி கொண்டிருந்த பெரும்பாலான ஆண்கள், பெண்கள் இருவரும் கைகளில் கிளாஸுடன் நடனமாடினர்.
திடீரென்று மியூஸிக் நிறுத்தப்பட்டு அனைவருக்கும் நன்றி கூறி விடைபெற்றான் டி.ஜே. அப்போது நடன மேடையில் மைக்குடன் தோன்றிய கார்மேகம், இன்னும் ஒரே ஒரு நிகழ்ச்சி பாக்கி என்றும் அது முடிந்தபின் திருமணம்தான் என்றும் அறிவித்தார்.  அதற்கு பின் விருந்தினரிடன் ஒரு சிறப்பு வேண்டுகோள் விடுத்தார்.  அடுத்து வரும் நிகழ்ச்சியில் அவருடைய இரண்டு மகள்களும் பங்கேற்கவிருப்பதால் அதை வீடியோ எடுக்க வேண்டாம் என்று வின்னப்பித்துக் கொண்டார். அவர் பேசி முடித்தவுடன் நடன மேடை இருட்டானது.  
பின்னணி இசை மெலிதாக ஆரம்பிக்க, திடீரென்று மேடையின் மையத்தில் மங்கலாக, வட்டமாக வெளிச்சம் விழ, அந்த வட்டத்தில், வெள்ளைக் கற்களாலான அணிகலன்கள் அதனோட சேர்ந்த வெளீர் பச்சை நிறத்தில் குந்தன் வேலைபாடு செய்யப்பட்டிருந்த லேஹங்கா சோலியில் வெளிப்படாள் மெஹக். 
பின்னணி இசைக்கேற்ப அவள் உடலை அசைத்து மெஹக் நடனமாட ஆரம்பித்தவுடன் அவளுக்கு பின்னால் அவளுடன் ஒட்டி நின்று கொண்டிருந்த மற்றொரு உருவம் வெளிப்பட, நடன மேடையின் மங்கலான வெளிச்ச வட்டம் பெரிதாகி அவர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டது.
மெஹக்கின் பின்னாலிருந்து வெளிப்பட்ட அந்த இன்னொரு உருவம்  ஸ்மிரிதி கார்மேகம்.  டக்வாயிஸ் பச்சை மற்றும் கிரீம் கலரில் பட்டும், நெட்டும் சேர்ந்த ஹாஃப் அண்ட் ஹாஃப் புடவைவையும் அதே நிறத்தில் நூல் வேலைப்பாடு செய்யப்பட்ட பிளவுஸ்ஸும் உடுத்தியிருந்தாள்.  கழுத்தில் பெரிய முகபோடு தங்கத்தில் ஹாரமும், அதே முகப்பு டிஸைனில் நெற்றிசுட்டியும் அணிந்திருந்தாள்.
“பீசே, பீசே ஆந்தா மேரி ஜால்வெந்த் ஆயி (peeche, peeche aandha meri jaalvaenda aayi)..என்று பாட்டு ஆரம்பித்த கொஞ்ச நேரத்திற்கு பிறகுதான் அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருப்பது ஸ்மிரிதி என்று சிவகாமிக்கு தெரிய வந்தது.  அதற்குபின் அவள் வாயசைவிலிருந்து பாடுவது அவள்தான் என்று அவருக்கு உறுதியானது.  
பாட்டு ஆரம்பித்தவுடன் கல்யாணத்திற்கு வந்திருந்த விருந்தினர் அனைவரும் அவர்கள் இருக்கையின் அருகிலையே சிறு சிறு கூட்டமாக நடனமாட ஆரம்பித்தனர். பாட்டுப் பாடியபடி மெஹக்குடன் சேர்ந்து ஸ்மிரிதியும் நடனமாட அவளுடைய குரலிலும் அவர்கள் இருவரின் நடன அசைவிலும் கல்யாணக் கூட்டம் கட்டுபாடின்றிப் போனது. 
ஸ்மிரிதியின் பஞ்சாபி பாட்டும், மெஹக்கின் நடனமும் அதை கேட்டு  கொண்டிருந்தவர்களையும், பார்த்து கொண்டிருந்தவர்களையும் பைத்தியமாக்கியது. சினேகிதிகள் இருவரும் அந்த குளிர் இரவில், வெள்ளி நிலவொளியின் வெளிச்சத்தில், வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தை வாரியிறைத்த அவர்களின் நடனசைவில் அந்த நடன மேடையை அதிர வைத்தனர். 
“மேரா லாங்க் கவாச்சா (mera laung gawachaa)” என்று ஸ்மிரிதி ஒவ்வொருமுறை பாடியபோதும் அந்த குளிர் இரவும் அவளின் குரலின் குழைவில் சூடானது. விருந்தினர்  கூட்டம் முழுவதும் “மேரா லாங்க் கவாச்சா” என்று அவளுடன் சேர்ந்து கோரஸ் பாடியது.  
“மேரா லாங்க் கவச்சா” என்று கடைசி முறையாக ஸ்மிரிதி பாட்டை பாடி முடித்த போது ஒன்ஸ் மோர், ஒன்ஸ் மோர் என்று கோஷம் எழும்ப அதைக் கண்டு கொள்ளாமல் ஸ்மிரிதி, மெஹக் இருவரும் மேடையிலிருந்து மறைந்து போயினர்.  
அப்போது மேடையில் தோன்றிய வயதான பெரியவர் ஒருவர் இன்னும் சிறிது நேரத்தில் கல்யாணம் நடக்க போகிறது என்றும் அவர்கள் அதுவரைப் பார்த்து இரசித்தது மணப்பெண்ணிற்காக அவர்கள் வீட்டு பெண்கள் இருவரின் தனிப்பட்ட, சிறப்பு முயற்சி என்றும் அவர்கள் இருவரையும் மறுபடியும் தொந்திரவு செய்வது தவறு என்றும் எடுத்துரைத்தார்.  அவரின் கோரிக்கையை ஏற்று கூட்டம் அமைதியாக அதற்குபின்  மணமேடையில் கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் மும்மரமாக ஆரம்பித்தன.
அங்கே நடந்து கொண்டிருந்த எதுவும் சோபாவில் அமர்ந்திருந்த மனுவின் மனதில் பதியவில்லை.  அவன் மனம் முழுவதும் ஸ்மிரிதியின் குரலும், அவளின் நடன அசைவுதான் நிறைந்திருந்தது.  ஸ்மிரிதியினால் பஞ்சாபிக் குடி (பெண்) போல் பாடவும், ஆடவும் முடியும் என்று அவன் அறிந்திருக்கவில்லை.  
மெஹக்கின் நடனத்திற்கு மெருக்கேற்றியது சுவடேயில்லாமல் அதனுடன் சுகமாகக் கலந்து போன ஸ்மிரிதியின் பாட்டுதான் என்று சந்தேகமேயில்லாமல் உணர்ந்தான் மனு. 
அவளுடைய “என்னுடைய தொலைந்து போன மூக்குத்தியைத் தேடிக் கொடு” என்ற அந்தப் பாட்டும், நடனமும் அவனுக்கானச் சிறப்பு செய்தி போல் தோன்றியதற்குக் காரணம் ஸ்மிரிதியின் மனுவனாக அவன் மாறிப் போனதால்தான் என்ற உண்மையை உணராமல் அறியாமையில் அலைபாய்ந்தது அதுவரை அமைதியாக இருந்த மனு வளவனின் மனது. 
மூடுபனியின் முன்னிலையில், முந்தைய இரவில் முறுக்கிக் கொண்ட  ஸ்கூருடிரைவர் அன்றைய இரவில் சின்ன மூக்குத்தியிடம் ஸைலண்ட்டாக சரணடைந்தது.

Advertisement