Advertisement

ஸ்மிரிதியின் மனு – 11_1 
“அவரோட அந்த ஆரம்பம் எத்தனை பேருக்குத் தெரியும்? இங்க வந்த அப்பறம் என்ன செய்தாருனு தெரில….பிரேமாவோட விவகாரத்துக்குப் பிறகு அவளுக்கு ஏதாவது உதவி செய்யணுமுனு உங்கம்மாக்குத் தோணிச்சு ..அவளோட குடும்பத்தைப் பற்றி விசாரிச்சோம் ஆனா அவங்க யாரும் அவ மேல இண்ட் ரெஸ்ட் காட்டல…. அதை பிரேமாகிட்ட சொன்ன போது யார் தயவும் வேணாம் தனியா இருக்கேனு சொல்லிட்டா.” என்றார் நாதன்.
“நேத்து கார்மேகம் அங்கிளோட பையனப் பார்த்தேன்.” என்றான் மனு.
“அவரோட பையனில்ல அவன்..அவரோட இரண்டாவது மனைவி ஒரு விதவை..அவங்களோட பையன்.” என்றார் நாதன்.
“எனக்கு அந்த விவரம் தெரியாது.” என்றான் மனு.
“நாங்களும் அவரோட இன்னொரு குடும்பத்தை சந்திச்சதில்ல..கேள்விபட்டதுதான்..அவரு இரண்டாவது கல்யாணம் செய்துகிட்டாருனு ஸ்மிரிதிதான் பிரேமாகிட்ட சொல்லியிருக்கா..பிரேமா உங்கம்மாகிட்ட சொல்லியிருக்கா..உங்கம்மா மூலமாதான் எனக்குத் தெரியும்….
அவரோட இரண்டாவது மனைவி குடும்பமும் இவர மாதிரிதான்..எங்க, எப்படி சந்திச்சாங்கனு தெரில..ஸ்மிரிதி 11 வகுப்புல இருக்கறச்சே அவங்கள கல்யாணம் செய்துக்க போகறதா அவகிட்ட சொல்லியிருக்காரு…அவளுக்கு அவங்களோட செட் ஆயிடுச்சு போல அப்படியே அவங்க வீட்லையே இருந்திட்டு வரா.”என்றார் நாதன்.
“அவகிட்ட எல்லாரும் அன்பாதான் நடந்துக்கறாங்க.” என்றான் மனு.
“அவ நல்லா இருந்தா போதும்..உங்கம்மா கோயமுத்தூர் போயிட்டு வந்ததுலேர்ந்து ஸ்மிரிதியப் பற்றிதான் வாய் ஒயாமப் பேசிகிட்டு இருக்கா.. ஸ்மிரிதியோட சகஜமா உறவு வைச்சுக்க முடியாததுக்குக் காரணம் நாந்தானு சொல்றா..நானா காரணம்? கார்மேகம்தான் காரணம்.” என்றார் நாதன்.
அந்தக் காலை வேளையில் காரணத்தைக் கண்டறியும் கட்டாயம் மனுவிற்கு ஏற்படவில்லை.
“விடுங்க பா..ரொம்ப வருஷமா நாமளும் இங்கதான் இருக்கோம்..அவரும் இங்கதான் இருக்காரு..அப்படியே இருந்திட்டு போறோம்.” என்றான். ஒரு முக்கியமான இருப்பை மனக் கணக்கில் கொண்டு வர மறந்தான் மனு.  ஸ்மிரிதி என்னும் காற்று அவன் மனதைக் களவாடிச் செல்ல போவதைக் கணிக்கத் தவறினான்.
கோவிலிலிருந்து திரும்பிய சிவகாமி, ஜனனி அணிந்திருந்தப் புடவையைக் காட்டி,”இது ஸ்மிரிதியோட பிரண்ட் பெங்களூர்லேந்து கூரியர்ல அனுப்பி வைச்சது..புடவைக்கூடவே பிளவுஸூம் தைச்சு அனுப்பிச்சிட்டா..ராமுக்கும் மெட்சிங்கா குர்த்தா..அவங்க டிரெஸ்ஸ பார்த்தவுடனையே கோவில்ல எல்லாருக்கும் புது கல்யாண ஜோடினு தெரிஞ்சிடுச்சு.” என்றார் புலங்காகிதத்துடன்.
“ஆன் ட்டி..நான் பிளவுஸ மாடல் ஃபோடோ பார்த்து செலக்ட் செய்தேன்.. அதே போல தைச்சு அனுப்பியிருக்காங்க..இனிமே அவங்ககிட்டதான் தைச்சுக்கணும்.” என்றாள் ஜனனி.
“இதுவரைக்கும் நம்ம ஊர்லதான தைச்சுகிட்ட..இப்ப என்ன புதுசா?” என்று கேட்டான் புது கணவன்.
“வித்தியாசமா இருக்கதான்.” என்றாள் ஜனனி.
அவள் பதிலைக் கேட்டு பயந்து போன ராம்,”நீ நார்மலா இரு..எனக்கு அதுதான் பிடிச்சிருக்கு.”என்று அவளுக்கு அவன் மன நிலையைப் புரிய வைக்க முயன்றான்.
“ஸ்மிரிதி பிரண்ட்ஸ் எல்லாரும் ஒரே மாதிரியா இல்ல..என் பிரண்ட்ஸ் எல்லாரும் ஒரே மாதிரியா இருக்காங்க..இப்ப ஸ்மிரிதி ஒருத்திதான் வேற மாதிரி பிரண்ட் எனக்கு.” என்றாள் ஸ்மிரிதியால் ஆட்கொள்ளப்பட்ட ஜனனி.
“லா, லாஜிகிற்கு அப்பாற்பட்டவ ஸ்மிரிதி..அவ உறவுகளும் அந்த மாதிரி..அந்த ஸைகாலஜிக்கு பெயரு ஸ்மிரிதிலாஜி.  ” என்று அந்த விவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தான் லாயர் மனு.
“சரி..எல்லாரும் சாப்பிட வாங்க..ஏர்போர்ட்டுக்குக் கிளம்பணும்.” என்று சிவகாமியும் சொன்னவுடன், ஸ்மிரிதியைப் பற்றிய பேச்சிற்கு மூடுவிழா என்று மனு எண்ணியிருக்க அதுதான் அமோகமானத் திறப்பு விழா என்று அறிந்திருக்கவில்லை மடையன் மனு வளவன்.
ராமையும், ஜனனியையும் ஏர்பார்ட்டில் விட்டுவிட்டு மனு வீடு திரும்பியபோது மணி நான்கு ஆகியிருந்தது.  வரவேற்பறையில் அமர்ந்து டீ குடித்து கொண்டிருந்தனர் வீட்டிலிருந்த மூவரும்.  சோபாவில் படுத்தபடி ஒரு கையால் அவன் போனில் விளையாடிக் கொண்டிருந்தான் மாறன்.  நாதன், சிவகாமியும் ஏதோ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.
“டீய குடிங்க..எடுத்திட்டு வரும்போதே பாதி ஆறிப் போயிருக்கும் இப்ப உங்க இரண்டு பேர் பேச்சுல மொத்தமா சூடு போயிருக்கும்.” என்றான் மனு.
“உங்கம்மாகிட்டேயிருந்து டீ கடன் வாங்கிக்கும்.” என்று கடுப்பாகப் பதிலளித்தார் நாதன்.
சிவகாமி சூடாக இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தவுடன் தம்பியின் அருகே பாதுகாப்பாக அமர்ந்து கொண்டான் அண்ணன். அவனின் செய்கையில் அவன் மன நிலையை அனுமானித்த சிவகாமி அவர் ஏவுகணைகளை மனு மீது திருப்பினார்.
“என்ன டா..சின்னவன் பக்கத்தில போயி உட்கார்ந்துகிட்டிருக்க.” என்று பிள்ளைகளைப் பிரிக்க முற்பட்டார்.
“அவனுக்கும், எனக்கும் சேர்ந்தா மாதிரி வீட்ல இருக்க டயம் கிடைக்கறதில்ல…  ராம் வீட்டுக்கு வந்தான் அதனால எங்களுக்கும் கொஞ்சம் ரிலாக்ஸேஷன்.” என்றான் மனு.
அவனின் விளக்கத்தை கேட்டு போனிலிருந்து கண்களை அகற்றிய மாறனைப் பார்த்து மனு,”என்ன?” என்று கேட்க, “மாட்டிகிட்ட.” என்று சத்தமில்லாமல் செய்தியை அண்ணனுக்குக் கடத்தினான் தம்பி.
“அவன்கிட்ட பேசினது போதும்..என்னோட நீங்க யாரும் டயம் செலவழிக்க மாட்டேங்கறீங்க..உங்கப்பாக்கு இவ்வளவு நாள் வேலை ஒரு சாக்கு இப்ப அவரேதான் என்னோட பேசிக்கிட்டிருக்காருனு புதுசா ஒரு சாக்கு..நீங்க இரண்டு பேரும் உங்கம்மாக்கு என்ன தேவைனு என்னிக்காவது கேட்டிருக்கீங்களாடா?” என்றார் மகன்களைப் பார்த்து கோபமாக.
“இந்தக் குளிர்ல காலைல எழுந்து நீங்க சொன்னபடி உங்களைக் கோவிலுக்கு கூட்டிகிட்டு போனேன்..என்னோட கோட்டா முடிஞ்சிடுச்சு.” என்று கழண்டு கொண்டான் மாறன்.
“எனக்காகவா செய்த? ராமுக்காக செய்த.” என்றார் சிவகாமி.
“உங்களைத் திருப்திபடுத்த முடியாது..ராம் பாவம்..பெயருக்கு ஏற்ற மாதிரி ராமனா சாந்தமா நீங்க சொன்னத கேட்டுகிட்டு கோவிலுக்கு புறப்பட்டு வந்தான்..நானா இருந்தேனா என் புது பொண்டாட்டியோடு போர்வைக்குள்ளையேப் பதுங்கி இருந்திருப்பேன்.” என்று சொல்லி மனுவிற்கு ஹைஃபை கொடுத்தான் மாறன்.
“உங்க மூணு பேர் தூக்கத்தைப் பற்றி எனக்குத் தெரியாதா? அன்னிக்கு காலைல எத்தனை முறை போன் செய்தேன்..யாராவது ஒருத்தர் எழுந்தீங்க? உங்களை மாதிரிதான ஸ்மிரிதிக்கும் களைப்பா இருந்திருக்கும்..அதுவும் பிரேமாவ டிரைவ் செய்து கோயமுத்தூர் அழைச்சுகிட்டு வந்தா..
அடுத்த நாள் காலைல என் போன் எடுத்து பொறுப்பா பதில் சொல்லுறா..அங்கிள் பாவம் ஆன் ட்டி..தூங்கட்டுமுனு கலெக்டர் மேல கரிசனம் வேற..என்னைய சொல்லணும் உங்களோட எல்லாத்துக்கும் ஒத்து போறேனில்ல அதான் நான் கேட்கறத்துக்கு நீங்க யாரும் ஒத்து வர மாட்டேங்கறீங்க.” என்றார் சிவகாமி
“அம்மா, அ ந்நியாயமா பேசாதீங்க..நீங்க சொன்னதுதான் நடக்குது இந்த வீட்ல..அன்னிக்கு நம்ம வீட்ல எல்லாம் ரெடியாதான் இருந்திச்சு.. ஸ்மிரிதிதான் நடுவுல புகுந்து குழப்பிட்டு இப்ப நல்ல பெயர் வாங்கிட்டா.” என்றான் மாறன்.
மாறனின் பேச்சில் மேலும் கோபமடைந்த சிவகாமி,”அவள எதுக்கு டா இழுக்கற..நீங்க இரண்டு பேரும்தான் சோம்பேறிங்க.. என்னோட எந்தப் பேச்சையும் கேட்கறதில்ல..
உடனே நாதனைப் பார்த்து,
அந்த கோயமுத்தூர் வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுங்க..இந்த இரண்டும் எப்படி வேணுமுனாலும் தில்லில திரியட்டும்..நான் என் ஊருக்கு போயிடறேன்.” என்றார் சிவகாமி.
“அம்மா..எதுக்கு ஊர் மாத்தணும்..உங்களுக்கு வேணுங்கறத செய்ய ஒண்ணுயில்ல..மூணு பேர் இருக்கோம்.” என்றான் மனு.
மனு சொன்னதைக் கேட்டவுடன் “ஐயோ வலைல சிக்கிகிட்டான்” என்று தலையில் அடித்துக் கொண்டான் மாறன், நாதனோ மனதைப் படிக்க தெரியாத மூத்த மகன் எப்படி வக்கீலாக வேலைப் பார்க்கிறான் என்று வியப்படைந்தார். 
“எல்லாரும் அப்படிதான் பேசிக்கறாங்க..சிவகாமிக்கு கூப்பிட்ட குரலுக்கு மூணு பேருனு..அன்னிக்கு ஸ்மிரிதிக்கூட அப்படிதான் சொன்னா..நான் என்னவோ உங்க மூணு பேருக்கும் பெட்டாம்..வீட்ல போட்டியே இல்லாம எல்லாத்தையும் நான் ஒரே ஆளு அனுபவிக்கறேனு.” என்றார் சிவகாமி.
“அடுத்த முறை அவளைப் பார்த்தீங்கன்னா, உங்களுக்கு மூணு பேர் மட்டும்தான் அவ ஊருக்கேப் பெட்டுனு சொல்லுங்க.” என்றான் மனு.
“நான் எங்க அவள பார்க்கப் போறேன்..அவ நம்ம வீட்டுக்கு வந்து போகறதெல்லாம் எப்பயோ நின்னுடிச்சு..இதே ஊர்ல பத்து வருஷமா அவளும் இருந்திருக்கா நானும் இருந்திருக்கேன் ஆனா அன்னிக்கு கோயமுத்தூர்ல பார்க்கறச்சேதான் பக்குனு ஆயிடுச்சு..ரொம்ப பெரிய மனுஷியாயிட்டா…அம்மாவோட பாதுகாப்பு இல்லாம வளர்ந்த பொண்ணு இன்னிக்கு அவ அம்மாக்கு பாதுகாப்பு கொடுக்கற அளவுக்கு வளர்ந்திட்டா..
ஒரே கல்யாணமா அட்டெண்ட் செய்யறையே என்ன விஷயம்? அவளுக்குக் கல்யாணமானு விசாரிச்சேன்..பார்த்துகிட்டிருக்கேன் ஆன் ட்டி, எவனும் சரியா மாட்ட மாட்டேங்கறான்..என் கதை தெரிஞ்சவனதான் கல்யாணம் செய்துக்கணும்..தில்லிகாரந்தான் சரிப்படுவான்.. 
எங்கப்பாவை பற்றியும் அவனுக்குத் தெரிஞ்சிருக்குமுணு அவ்வளவு தெளிவா பதில் சொன்னா..அவ கல்யாணத்தைப் பற்றி அவளே யோசிச்சு வைச்சிருக்கா..இங்க இவன் வக்கீலுனு பெயரு ஆனா நாந்தான் இவனுக்கு யோசனை செய்ய சொல்லிக் கொடுக்கணும்.” என்றார் சிவகாமி.
சிவகாமியின் பேச்சை ஆச்சர்யத்துடன் கேட்டு கொண்டிருந்தார் நாதன்.  அவர் கோபத்திற்கானக் காரணத்தை சொல்லாமல் வேறு விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தவரை சிறிதும் சந்தேகப்படாமல் இருந்த அவரது பெரிய மகனின் மேல் கருணைக் கொண்டார். ஆனால் அவர் வாயைத் திறந்தால் பூகம்பம் வெடிக்கும் என்பதால் பொறுமையாக விஷயத்தின் முடிவிற்காகக் காத்திருந்தார்.
“இன்னிக்கு அவங்க வீட்ல கல்யாணம்..அவங்க லெவல் ஆளுங்க நிறைய பேர் வருவாங்க….அவளுக்கு ஏற்ற ஆள் கிடைக்கலாம்.” என்றான் மனு.
“அதுக்குதான் உங்கப்பாகிட்ட எனக்கு கல்யாணத்துக்குப் போகணும்னு சொன்னேன்..ஸ்மிரிதியோட அந்தக் குடும்பம் அவளோட எப்படி பழகுதுனு தெரிஞ்சுக்கலாமுனு நினைச்சேன்..உங்கப்பா வேணாங்கறாரு..இப்பதான் இவரு ரிடையர் ஆயிட்டாரே இனி கார்மேகத்தோட வீட்டுக்குப் போனா இவருக்கு என்ன பிராப்ளம் வந்திடும்?…
கார்மேகம் நம்மளைக் கல்யாணத்துக்கு அழைச்சிருக்காரு நாம போகறோம்..இதுல உங்கப்பாக்கு என்ன யோசனைனு எனக்குத் தெரியல..இந்த மாதிரி யோசிச்சு யோசிச்சுதான் அந்தப் பொண்ணைத் தள்ளி வைச்சிட்டேன்..அவ அம்மாதான் அவக்கூட இருக்க முடியல நானாவது தூரத்திலேர்ந்து அவளுக்கு துணையா இருந்திருக்கலாமில்ல?” என்று மனம் வருந்தினார் சிவகாமி.
“அம்மா..அவ நாலு பேருக்குத் துணையா இருப்பா..நேத்து நைட் மெஹக்குத் துணையாத் தமிழ் சினிமா ஆளுங்களோட பேசிக்கிட்டிருந்தானு சொன்னேனில்ல…நான் அவளுக்குத் துணையா அவ வீடுவரை கொண்டு போயி விட்டேன் ஆனா நான் திரும்பி வரும் போது அவ எனக்குத் துணையா அவங்க அப்பாவ அனுப்பி வைச்சா..” என்று மனு தொடருமுன்,
“நீங்க எதுக்கு கல்யாணத்துக்குப் போகணுமுனு ஆசைப்படறீங்க..அவங்கெல்லாம் கைல ஸ்கூருடிரைவரோட சுத்தற ஆளுங்க.” என்று மாறன் அவன் பங்கிற்கு வாயைத் திறக்க,
“கல்யாணத்துல எதுக்கு டா ஸ்கூரு டிரைவர்?” என்று சிவகாமி கேட்டவுடன்,
“மாறன்..ஷட் அப்.” என்று சத்தம் போட்டான் மனு.
ஸ்கூரு டிரைவர் என்று சொன்ன சின்ன மகனையும் அவனை சத்தம் போட்ட அவருடைய பெரிய மகனையும் நாதன் யோசனையுடன் பார்த்து கொண்டிருந்தார்.
“நீ எதுக்கு டா அவனைக் கத்தற?” என்று சிவகாமி கேட்க 
சிவகாமியின் கேள்விக்குப் பதில் சொல்லாமல்,
“ஏதோ எதிர்பாராதவிதமா அவங்க வீட்டுக்குப் போனேன் அதனால அங்கிளும் ஒரு பேச்சுக்குணு நம்மளைக் கல்யாணததுக்குக் கூப்பிட்டாரு அதை ஸீரியஸா எடுத்துகிட்டு நாம இன்னிக்கு அங்க போயி நிக்க முடியுமா?” என்று மனு கேட்க,
சிவகாமி அவனுக்கு அப்போது பதில் சொல்லாமல்,
அன்று இரவு கார்மேகத்தின் வீட்டு கல்யாணத்தில் அவரும் அவர் மகன் மனுவும் விருந்தாளியாகப் போயி நின்றார்கள்.
மனு போன் செய்தவுடன் அவர்களுக்காக வண்டி ஏற்பாடு செய்தார் கார்மேகம்.  எத்தனை மணி என்று மட்டும் கேட்டு கொண்டவர் மற்ற விஷயங்களை அவர் அனுப்பும் ஆள் பார்த்து கொள்வான் என்று வாக்குறுதி அளித்தார்.  அவர் அனுப்பிய வண்டி அவர்கள் சொன்ன நேரத்திற்கு முன்பாகவே அவர்கள் வீட்டு வாசலில் வந்து காத்திருந்தது.
சிவகாமியுடன் கிளம்பிச் சென்ற மனுவின் மனது அலைபாயாமல் ஒரே நிலையில் அமைதியாக இருந்தது.  ஆனால் சிவகாமிக்குதான் அவர் எண்ணங்களைக் கட்டுபடுத்த முடியாமல், கோயமுத்தூரில் ஆரம்பித்த பிரேமாவுடனான நட்பை அரைமணி நேரத்தில் அக்குவேர் ஆணிவேராகப் அலசி அவர் மகனின் மனதையும் அலைக்கழித்தார்.
“அம்மா,  ப்ளீஸ்..கொஞ்ச நேரம் பேசாம வரீங்களா?” என்று வேண்டுகோள் விடுத்தான் மனு.
சிவகாமியும் அவன் வேண்டுகோளை நிறைவேற்றினார்.  
தில்லி-ஜெய்ப்பூர் சாலையில் கார்மேகத்தின் வீட்டிலிருந்து சிறிது தூரத்திலிருந்த ரிஸார்ட் ஒன்றில் கல்யாண ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டிருந்தன.  
வாயிற்கதவிலிருந்து உள்ளே செல்லும் பாதை முழுவதும் வண்ண விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  மிக பெரிய புல் வெளியின் மையத்தில் கோவில் மண்டபத்தைப் போல் மண மேடையை வடிவமைத்திருந்தார்கள்.  மணமேடையிலிருந்து சற்று தள்ளி வட்ட வடிவத்தில் டான்ஸ் ஃப்ளோர் அமைத்து அதை நிதானமாக ரசித்துப் பார்ப்பதற்கு வசதியாக விருந்தினர்களுக்கு ஆங்காங்கே நாற்காலிகளும், சோபாக்களும் போடப்பட்டிருந்தன.
சிவகாமியையும், மனுவையும் காரில் அழைத்து வந்த உதவியாளன் அங்கே இருந்த சோபா ஒன்றில் அவர்களை அமர வைத்தான்.  அவர்களிடம் ஒரு நிமிடம் என்று அனுமதி பெற்று மாயமாக மறைந்து போனான்.  போதிய வெளிச்சம் இருந்தபோதும் எத்தனை விருந்தாளிகள், யார் அவர்கள் என்று தெரியாத வண்ணம், யாருடையத் தனிமையையும் கெடுக்காத வண்ணம் அழகாக அமைக்கப்பட்டிருந்தது சீட்டிங் அரேன் ஜ்மெண்ட்.
“மனு, நாம மட்டும் கல்யாணத்துக்கு வந்த மாதிரி இருக்கு.” என்றார் சிவகாமி.
“அப்படிதான் எல்லாரும் உணர்வாங்க..பெரிய இடத்தில எல்லாம் இப்படிதான்..யார் வராங்க, போறாங்கனு கல்யாண வீட்டு ஆளுங்களுக்குதான் தெரியும்..விருந்தாளிங்க ஒருத்தர ஒருத்தர் விருபப்பட்டதான் பார்த்துக்க முடியும்.” என்றான் மனு.
அவர்கள் பின்னனியில் மெலிதாகப் பாட்டு ஓடிக் கொண்டிருக்க அவர்கள் இருந்த இடத்தில் சூடான பானத்துடன் தோன்றினான் பேரர்.
“அம்மா, என்ன வேணும் உங்களுக்கு?’ என்று மனு கேட்க,
“இவன் எங்கேயிருந்து டா வந்தான் திடீர்னு?” என்று பதில் கேள்வி கேட்டார் சிவகாமி.
“இன்னிக்கு நைட் பூரா இந்த மாதிரி மாயமா ஆட்கள் வந்து போயிகிட்டு இருப்பாங்க..கல்யாண வீட்லேர்ந்துதான் எல்லாரும் வராங்க..கேள்வி கேட்காம எடுத்து குடிங்க..குளிர்ல வெளில உட்கார்ந்திருக்கோம்..எவ்வளவு நேரம் உட்கார்ந்திருக்கணுமோ.. எனக்கு தொடர்ச்சியா இது இரண்டாவது இரவு.” என்று கடுப்புடன் கூறிய மனு அவருக்கு ஒரு கோப்பையைக் கொடுத்துவிட்டு அவனும் ஒரு கோப்பையைக் கையில் எடுத்து கொண்டான்
அவன் சொன்னது உண்மை என்பதால் அவனை மறுத்து பேசாமல் அவன் கையிலிருந்தக் கோப்பையை வாங்கிக் கொண்டார் சிவகாமி.  மிதமான சூடில் சூப்பைக் குடிக்க சுகமாக இருந்தது அவருக்கு. அவர்கள் சூப்பைக் குடித்து முடித்தவுடன் அவர்கள் எதிரே ஆஜராகி காலி கோப்பையை எடுத்து சென்றான் பேரர். 
கல்யாண இடம் போலில்லாமல் அமைதியாக இருந்த இடத்தைப் பார்த்து,”ஏன் டா..எல்லாரும் எங்கடா இருக்காங்க? ஒருத்தரும் கண்ணுக்குத் தெரிய மாட்டேங்கறாங்க.” என்றார் சிவகாமி.
“யார் கண்ணுலையும் படமா இருப்பாங்கனுத் தெரிஞ்சுதான் இந்த மாதிரி கல்யாணத்துக்கு எல்லாரும் வராங்க..கான்ஃபிடேன்ஷியாலிடி அக்ரிமெண்ட்ல கையெழுத்துப் போட்டிட்டு வந்திருப்பாங்க..நம்மகிட்ட அந்த மாதிரி கையெழுத்து எதுவும் வாங்காம கார்மேகம் அங்கிள் எதுக்கு இன்னிக்கு கூப்பிட்டாருனுத் தெரியல.” என்ற வக்கீல் மனு சொல்லி முடித்த அடுத்த  நிமிடம்,
“ஆன்ட்டி” என்று கத்தியபடி ஓடி வந்த ஸ்மிரிதி சிவகாமியை அணைத்துக் கொண்டாள்.
“நீங்க வர மாட்டீங்கனு நினைச்சேன்.” என்று சொல்லி அவரை அணைப்பிலிருந்து விடுதலை செய்து அவர் அருகில் அமர்ந்திருந்த மனுவைப் பார்த்து,
“இந்தக் கல்யாணத்துக்கு ஆன்ட்டியை நீ அழைச்சுகிட்டு வந்ததால நீ இதுவரை செய்த தப்பு எல்லாத்தையும் நான் மன்னிச்சிடறேன்.” என்றாள் பெருந்தன்மையுடன்.

Advertisement