Advertisement

ஸ்மிரிதியின் மனு – 1
கோயமுத்தூர்
“நினைவுகள்..வரமா? சாபமா?”
கோயமுத்தூர் உங்களை வரவேற்கிறது.  விடியற்காலை வேளையில் அந்தப் பெயர் பலகையைப் பார்க்கையில் கண்கள் கண்ணீர் குளமாகின பிரேமாவிற்கு. அவருகே சோர்வில்லாமல் காரை ஓட்டிக் கொண்டிருந்த அவர் மகளைப் பார்த்து,
“ஊருக்குள்ள நுழையப் போறோம்.” என்றார்.
“நவிகெஷன் போட்டிருக்கேன் மாம்.” என்றாள் ஸ்மிரிதி.
“தாங்கஸ்.” என்றார் பிரேமா.
“எதுக்கு?”
“என்னைக் கோயமுத்தூர் அழைச்சுகிட்டு வந்ததுக்கு.”
“நோ பிராப்ளம்..என்கிட்ட டயம் இருந்திச்சு..சுசித்ரா கிட்ட வண்டி இருந்திச்சு..அதனால இது முடிஞ்சுது.”
“எனக்காக நீ வந்திருக்க அதுக்குதான் அந்த தாங்க்ஸ்.”
“உங்களுக்காக நான் எதுவும் இதுவரைக்கும் செய்யலைனு சொல்றீங்களா?” என்று பிரேமாவின் நன்றிக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருந்த வருதத்தைக் கண்டு பிடித்து கேட்டாள் ஸ்மிரிதி.
“நீ உன் அம்மாகாகக் பெங்களூர் வரல..உன்னோட பிரண்டுகிட்ட வேலை இருந்திச்சு அதுக்குதான் வந்த..எனக்காக உன் ப்ரோகரமை மாத்திப்பேனு நான் எதிர்பார்க்கல அதனாலதான் அந்த தாங்க்ஸ்.” என்றார் பிரேமா.
“அம்மா..ப்ளீஸ்..உங்களுக்காக நான் எது செய்ய முடியுமோ அதைக் கண்டிப்பா செய்வேன்..இனிமே நோ தாங்க்ஸ்..ஒகே.” என்று சொல்லிப் புன்னகைத்தாள் ஸ்மிரிதி.
அது விடியற்காலை வேளை என்பதால் ஊர் இன்னும் விழிக்கவில்லை.  தெரு விளக்குகள் இன்னும் அதன் வேலையைச் செய்து கொண்டிருந்தன.
“எத்தனை மணிக்குக் கல்யாணம்?” என்று மௌனமாக இருந்த பிரேமாவிடம் கேட்டாள் ஸ்மிரிதி.
“காலைல மூகூர்த்தம்..போன்ல டீடெய்ல்ஸ் இருக்கு.”
“ஹோட்டலுக்கு போகலாமா? இல்ல டிரெக்ட் மண்டபமா?”
“இவ்வளவு காலை வந்து சேருவோமுனு நான் நினைக்கல..புவனாக்கு போன் போடறேன்.”
“இந்த நேரம் ஹோட்டல்தான் பெஸ்ட்..அப்பறம் உங்க இஷ்டம்.”
கோயமுத்தூரை விட்டுசென்று பல வருடங்களானப் பின் மறுபடியும் அதே ஊருக்கு வரும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை பிரேமா.  இப்போது அங்கு வந்தபின் என்ன செய்வதென்று யோசனையானது. ஸ்மிரிதி சொல்வது போல ஹோட்டல் போவதுதான் சிறந்தது என்று அறிவு அறிவுறுத்த,
“நீ சொல்றது சரி..ஒரு ஹோட்டலுக்கு போயிடலாம்..அது மண்டபம் பக்கத்தில இருந்தா நல்லாயிருக்கும்.”
“வண்டிய ஓரமா நிறுத்தறேன்..அதே லோகேஷன்ல ஹோட்டல் கண்டுபிடிக்கலாம்.”
அவளது போனில் ஹோட்டலைத் தேடிக் கொண்டிருந்த அவர் மகளையேப் பார்த்து கொண்டிருந்தார் பிரேமா.  முதல்முறைப் பார்க்கும் யாரையும் வசீகரிக்ககூடிய முகவெட்டு. வட்ட முகம், கருங்கூந்தல், பிறைப் போன்ற நெற்றி, கூர்மையான நாசி, செவ்விதழ்கள், அவள் கூந்தலைவிட சற்று குறைவானக் கருமை நிறத்தில் தோற்றமளித்த அவர் மகளுக்கும் அவருக்கும் இருந்த ஒரே ஒற்றுமை குறுகுறுபானக் கண்கள்.  
பிரேமாவின் கண்களைக் கடவுள் கஷ்டபடாமால் காபி செய்து ஸ்மிரிதியின் முகத்தில் பதித்துவிட்டார்.  மற்றபடி அம்மாவிற்கும், பெண்ணிற்கும் உருவத்தில் சம்மந்தமேயில்லை. பிரேமாவைப் பார்க்கும் யாருக்கும் அவருடையத் தோற்றம் மரியாதையை உண்டு பண்ணும் அதே சமயம் அவருடன் பழகுபவர்களுக்கு அவரின் பேச்சும், நடத்தையும் அவரின் மேல்தட்டு பிறப்பு, வளர்ப்பை உறுதிப்படுத்தும்.  
ஸ்மிரிதியின் வெளித்தோற்றம் அவளின் பிறப்பையும், வளர்ப்பையும் வெளிக்காட்டாது ஆனால் அவளுடன்  பழகுபவர்கள் அவர்கள் அறியாமலையே அவள் ஆளுமையின் கீழ் வந்துவிடுவர். அது அவள் அப்பாவிடமிருந்து கடவுள் கஷ்டப்படாமல் காபி செய்து அவளுக்கு அளித்தது.  
ஒரு சில சமயம் பிரேமாவே ஸ்மிரிதியின் ஆளுமைக்கு அவரை அறியாமலையே அடிமையாகியிருக்கிறார்.  பத்து வருடங்களுக்கு முன் அவள் இஷ்டபடி அவளை அவள் தந்தையுடனையே இருக்க அனுமதித்தது. நேற்று இரண்டு மணி நேரத்தை அவருடன் செலவழிக்க வந்தவள் இப்போது எட்டு மணி நேரமாக வண்டி ஓட்டி அவரைக் கோயமுத்தூர் அழைத்து வந்திருப்பது.
“அம்மா, மண்டபம் பக்கத்தில ஹோட்டல் இல்ல..கொஞ்சம் தள்ளி இருக்கு..நேரடியாப் போயி செக்-இன் செய்துக்கலாம்..இன்னிக்கு சாயந்திரம் வரைக்கும்…எனக்கு இராத்திரி டெல்லிக்கு இங்கேயிருந்தே ஃபிளைட் புக் செய்துக்கறேன்..அதே ஃபிளைட்ல நீங்க பெங்களூர்..ஒகேவா?” என்று கேட்டாள
“அந்த மாதிரி ஃபிளைட் இருக்கா?”
“இருக்கணும்..புக் செய்யட்டுமா?”
“வேணாம்..நான்  ட் ரெயின்ல போயிடறேன்..புவனா ஏற்பாடு செய்வா.” என்றார்.
பிரேமாவுடன் வாதிடாமல்,”உங்க இஷ்டம்..நான் இன்னிக்கு இராத்திரி கிளம்பறேன்.” என்றாள்.
“வண்டிய எப்படிப் பெங்களூர் அனுப்பிவிடுவ?”
“சுசித்ராவோட ஹஸ்பண்டுக்கு இங்க பிஸ்னஸ் பார்ட்னெர்ஸ் இருக்காங்க..ஹோட்டல்ல இல்ல ஏர்போர்ட்ல வந்து கலெக்ட் செய்துப்பாங்க.”
“எனக்காக எதுக்கு இவ்வளவு கஷ்டம்?  பஸ்ல வந்திருப்பேன்.”
“எனக்கு வண்டி ஓட்ட ஆபர்சூனிட்டி கிடைச்சுது..டெல்லில இப்படித் தனியா ஓட்டிக்கிட்டு போக முடியாது.”
“ஏன்?”
“அப்பா வேணாமுனு சொல்றாங்க.”
“நீ பெங்களூர் வந்தது உங்கப்பாவுக்குத் தெரியுமா?”
“மாம்..கமான் ஆன்..எனக்கு பதினைஞ்சு வயசு இல்ல..இருபத்தஞ்சு..நான் டெல்லிலதான் தனியாப் போகறதில்ல..வெளில எல்லா இடத்துக்கு தனியாப் போறேன்..போனவாரம் ஜெய்ப்பூர் போயிட்டு வந்தேன்..அடுத்தவாரம் உதய்பூர் போகப் போறேன்.”
“ஜெய்ப்பூருக்கு உங்கப்பா வரலையா உன்கூட.”
“மாம்….இப்பெல்லாம் அப்பா வெளியூர் வரது கிடையாது..அவரும், கீதிகாவும் ரொம்ப பிஸி..அவங்க டெல்லி சர்கியுட்தான்…இது என் விஷயமா நான் செய்யற டிராவல்..அப்பா எதுக்கு வரணும் என்கூட?”
“மனிஷ் என்ன படிக்கறான்?”
“பத்தாவதுல இருக்கான்.”
“எங்க படிக்கறான்?”
“டெல்லிலதான்.”
“உன்னோட ஸ்கூல்ல போடலையா?”
“என்னோட தம்பினு தெரிஞ்சா அவன உள்ளையேச் சேர்க்க மாட்டாங்க.”
“ஏன் இப்படி இருக்க? எவ்வளவு சாதாரணமா எல்லாத்தையும் எடுத்துகற.” என்று உணர்வுகளை அடக்கமுடியாமல் கேட்டுவிட்டார் பிரேமா. ஆனால் ஸ்மிரிதியிடமிருந்து பதிலில்லை.
அந்த வண்டியில் திடீரென்று பாரம் கூடியது.  தாய், மகள் இருவருக்கிடையே ஏற்பட்ட கனமான மௌனம் அதற்கு காரணமானது.
சிறிது நேரத்திற்கு பிறகும் “எப்படி இருக்கேன்?” என்று பிரேமாவைப் பார்த்து நிதனாமானக் குரலில் கேட்டாள் ஸ்மிரிதி. 
ஸ்மிரிதி கேட்டதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல்,
“உங்கப்பாவோட போகட்டும் அவரு செய்யற பாவம்..உனக்கு வேணாம்.” என்றார் பிரேமா
“என்னைப் பற்றி என்கிட்ட கேட்டீங்க ஆனா திடீர்னு அப்பாகிட்ட போயிட்டீங்க..உங்களோட பிராப்ளம் இதுதான்..கேள்விகள் நிறைய ஆனா பதில் கிடைக்கற வரைக்கும் காத்திருக்க வேணாம்..உடனே அடுத்த கேள்வி, அடுத்த ஆள்.”
“ஸ்மிரிதி..ஸ்டாப்..நான் உன்னோட அம்மாங்கறதுனாலக் கேட்டேன்..உங்கப்பா இதெல்லாம் உன்கிட்ட பேசறாரானு எனக்குத் தெரியல..நீ உங்கப்பாக்காக உன் வாழ்க்கையப் பாழ் செய்துகாத.”
“மாம்..நீங்க என்னைப் பற்றி அவ்வளவுதான் புரிஞ்சுகிட்டிருக்கீங்க.”
“நோ..நான் உன்னை நல்லா புரிஞ்சு வைச்சுருக்கேன்..நீ உங்கப்பாவைப் புரிஞ்சுக்கல..அவருக்கு எல்லாமே கொடுக்கல், வாங்கல்தான்..அதுதான் அவரோட கொள்கைனு தெரியாம என் வாழ்க்கைய கொடுத்திட்டு அதுலேர்ந்து மீட்டுகிட்டு வந்தேன்..நீ உன் வாழ்க்கையப் பார்த்துக்க..அவரு உன் அப்பா அதனால இதுக்கு மேல அவர பற்றி நான் பேச விரும்பல.”
“அம்மா…என் வாழ்க்கைய நாந்தான் பார்த்துக்கறேன்.”
“நீ பார்த்துக்கற மாதிரி எனக்குத் தெரியல…என்கிட்ட படிப்பு இருந்திச்சு அதுக்கு தகுந்த வேலைக் கிடைச்சுது அதனாலதான் நான் வெளிய வந்து தனியா இருக்க முடியுது..உன்கிட்டையும் படிப்பு இருக்கு ஆனா அதை வைச்சு என்ன வேலைக் கிடைக்குமுனு எனக்கு தெரியல.” என்று அவர் மகள் வாழ்க்கைப் பற்றிய அவர் கவலையை அவளுடன் பகிர்ந்து கொண்டார் பிரேமா.
“நீங்க சொல்றது போல முக்காவாசி பேர் அவங்க படிப்பை வைச்சு அவங்களோட வாழ்க்கைய வளமாகிக்கறாங்க ஆனா நான் என் படிப்பை வைச்சு மற்றவங்க வாழ்க்கைய வளமாக்க முயற்சி செய்யறேன்..அதுக்கு முதல் கட்டமா மக்களோட தினசரி  வாழ்க்கைல என்ன நடக்குதுணு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன்..அதுகாக சில வருஷமா இரண்டு சுய உதவி குழுவுக்கு எல்லா விதத்திலையும் உதவி செய்துகிட்டு வரேன்…நீங்க நினைக்கற மாதிரி நான் இதை இலவசமா செய்யல அந்த உதவிக்கு அவங்க விருப்பம் போல எனக்கு பணம் தராங்க.” என்றாள் ஸ்மிரிதி.
“அதனாலதான் சொல்றேன்..வாழ்க்கை ஒரே போலப் போகாது..எதையும் எதிர்கொள்ள தைரியம், துணிச்சல் மட்டும் போதாது..பணம் வேணும்..சுயமா சம்பாதிக்கத் தெரியணும்.”
“இப்ப என்ன சொல்ல வரீங்க?”
“நிரந்தர வருமானம் கிடைக்கற மாதிரி ஒரு வேலையத் தேடிக்க.”
“ஒரு கட்டிடத்தை அது உள்ளேயிருந்து பார்க்கறது வேற அதே கட்டிடத்தை வெளியே இருந்து பார்க்கறது வேற..கட்டிடத்துக்கு உள்ள இருக்கற குறைகள் அது உள்ள இருந்து அனுபவிச்சு பார்த்தாதான் தெரியும்..கட்டிடத்துக்கு வெளியே இருக்கற குறைகள் கண் பார்வைலையேத் தெரிஞ்சிடும்..வெளியே இருந்துதான் நாம நிறைய அமைப்புக்களப் பார்க்கறோம், படிச்சு தெரிஞ்சுக்கறோம்…இப்ப நான் ஒரு  அமைப்புக்கு உள்ள இருக்கேன்..என்னோட அந்த அனுபவங்களுக்கு விலைப் பேச முடியாது..விக்கவும் முடியாது.” என்றாள் ஸ்மிரிதி
“இதெல்லாம் உங்கப்பா வாயால கேட்டு, அவர் மேல நம்பிக்கை வைச்சு எல்லாம் கனவா மாறினதுதான் மிச்சம்…ஒரு ஆளுக்குக்கூட பலன் எதிர்பார்க்காம அவர் உதவி செய்தது இல்ல..அவரு அரசியல்வாதிங்கறதவிட ஒரு சுய நலவாதி  அதனாலதான் ஒரு பதிவியும் கிடைக்காம இவ்வளவு நாள் வெறும் ப்ரோகரா சுத்திகிட்டிருக்காரு அரசியல் போர்வைல.” என்று மனக்கசப்புடன் பேசினார் பிரேமா.
“அப்பாவைப் பற்றி நான் பேச விரும்பல.…அவரும், நானும் அவரோட சொந்த வாழ்க்கையைப் பற்றியோ, அரசியல் வாழ்க்கையைப் பற்றியோ அலசினது கிடையாது..அவரு ப்ரோக்கரோ, பரோபகாரியோ அது அவரோட விஷயம்..எனக்கு தேவையில்லாதது.”
“அவருக்குப் பணம் எங்கேயிருந்து வருதுனு யோசனைப் பண்ண மாட்டியா? ஒரு சொத்தோ, சொந்தமோ இல்லாதவர நான் தான் முட்டாள்தனமா நம்பி கல்யாணம் செய்துகிட்டேன்..நாளைக்கு உனக்கு அவரு செய்யறது பிடிக்காம நீ வெளிய வந்தேன்னா அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வ? இந்த மாதிரி கார் கொடுக்கற பிரண்டுகிட்ட போயி நிப்பியா?” என்று ஆத்திரம், ஆதங்கம் கலந்து கேட்டார் பிரேமா.
“இல்ல..இந்த பிரண்டெல்லாம்  நீங்களும், அப்பாவும் எனக்காகத் தேர்ந்தெடுத்த வாழ்க்கையோட மிச்சங்கள்..நீங்க இரண்டு பேரும் நல்லதுன்னு நினைச்சது எனக்கு நல்லதா இருந்திச்சா?”
“அம்மா, எந்த முடிவையும் நாம முடிவு வரைக்கும் கணிக்க முடியாது..நல்லது, கெட்டது இரண்டும் இருக்கதான் போகுது….நீங்க உங்களுக்குத் தெரிஞ்ச நல்லத செய்தீங்க..அப்பா அவருக்குத் தெரிஞ்ச நல்லத செய்துகிட்டிருக்காரு..நான் எனக்கு தெரிஞ்சத நல்லத செய்ய போறேன்.”
“என் வாழ்க்கைல நடந்த எல்லாத்துக்கும் நான் தான் பொறுப்பு.. . நீங்க, அப்பா இரண்டு பேரும் காரணமில்ல..பொறுப்புமில்ல….நீங்க வேற..அப்பா வேற..உங்க இரண்டு பேருக்கும் பிறந்த நான் வேற.”
ஸ்மிரிதியின் பேச்சிற்கு பிரேமாவிடம் எதிரோலி இல்லை.
“இன்னும் ஏதாவது பேசணுமா? இல்லை கிளம்பலாமா?” என்று பிரேமாவைப் பார்த்து கேட்டாள் ஸ்மிரிதி.
“ஹோட்டல்ல ரூம் கிடைச்சிடுச்சா?”
“காலி இருக்குணு நெட்ல காட்டுது..போயி பார்க்கலாம்.”
மறுபடியும் வண்டியைக் கிளப்பி, கூகில் மெப்பின் உதவியோடு அந்தப் பிரமாண்டமான ஹோட்டலின் வாசலை அடைந்தாள் ஸ்மிரிதி.
“ரொம்ப ஆடம்பரமா இருக்கு ஸ்மிரிதி..வேற ஹோட்டல் கிடைக்கலையா?” என்று கேட்டார் பிரேமா.
“நான் பே செய்யறேன்…நீங்க வாங்க.” என்று அவரை வலுக்கட்டாயமாக ஹோட்டலுக்குள் அழைத்து சென்றாள் ஸ்மிரிதி.
ரிசெப்ஷன் வாசலில் அவர்கள் வண்டியைப் பார்க் செய்துவிட்டு, அம்மா, மகள் இருவரும் ஹோட்டலுக்குள் நுழைந்தனர்.
அந்தக் காலை வேளையில் தூக்க கலக்கத்துடன் வேலைப் பார்த்து கொண்டிருந்த ஹோட்டல் ரிசெப்ஷனிஸ்ட் அவர்கள் இருவரையும் பார்த்து சற்று விழிப்பு நிலைக்கு வந்தான்.
“குட் மார்னிங் மேம்.” என்றான்.
“டூ சிங்கிள் ரூம்ஸ்..ஜஸ்ட் ஃபார் டூடே.” என்றாள் ஸ்மிரிதி.
ரூம் கேட்ட ஸ்மிரிதியை தலை முதல் கால் வரை ஆராய்ச்சிப் பார்வைப் பார்த்தான் அந்த ரிசெப்ஷனிஸ்ட்.  தலையைச் சுற்றிக் கட்டபட்டிருந்த ஸ்கார்ஃப், லூஸாக அணிருந்திருந்த ஃபூல் ஸ்லீவ் ஷர்ட், காட்டன் பாண்ட் என்று அவள் அருகில் கசங்கிய காட்டன் புடவையில் அமைதியாக நின்று கொண்டிருந்த பிரேமாவிற்கு சற்றும் சம்மந்தமில்லாமல் அலட்டலாகத் தெரிந்தாள்.
“மேம்..இரண்டு நாளைக்கு சார்ஜ் செய்வோம்..எங்க செக்-இன் அண்ட் செக்-அவுட் பகல் பன்னிரெண்டு மணி.
“இஸிட்?” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“ஆமாம் மேம்.” என்று இமைக்காமல் பொய் சொன்னான் அவன்.
அவள் அருகில் நின்று கொண்டிருந்தப் பிரேமாவைப் பார்த்து,”அம்மா, நீங்க சோஃபாவில உட்காருங்க..ஒரு அஞ்சு நிமிஷம் ரூம் புக் செய்திடறேன்.” என்று சொன்னாள் ஸ்மிரிதி.
வரவேற்பறையிலிருந்தப் பெரிய சோஃபாவில் அமர்ந்து கொண்டார் பிரேமா.
அவளெதிரே இருந்த ரிசெப்ஷனிஸ்டுடன் ஒரு வார்த்தைப் பேசாமல் அவள் போனில் தீவிரமானாள் ஸ்மிரிதி.  சரியாக பத்து நிமிடம் கழித்து அவள் தலையை நிமிர்த்தி எதிரே நின்று கொண்டிருந்தவனைப் பார்த்து,
“உங்க நெட் புக்கிங் செக் செய்யுங்க..இரண்டு சிங்கிள் ரூம்..ரவுண்ட் தி கிளாக் செக்-இன்,செக்-அவுட்,ஃபார் ஒன் டே..ஸ்மிரிதி கார்மேகம் பெயர்ல.” என்றாள்.
அவனெதிரே இருந்த கணிணித் திரையில் கவனமானான் அந்த ரிசெப்ஷனிஸ்ட்.  அடுத்த சில நிமிடங்களில் அவளிடமிருந்து ஐ டி ப்ருஃ எடுத்துக் கொண்டு, அறையின் கீ கார்டை அவளிடம் நீட்டினான்.
கீ கார்டைப் பெற்று கொண்ட ஸ்மிரிதியைப் பார்த்து,” டிரெக்ட் புக்கிங்கோட டர்ம்ஸ் நான் மாற்ற முடியாது….நீங்க நெட்ல புக் செய்துகிட்டது நல்லது..அவங்களோட டர்ம்ஸ் வேற.” என்று மறைமுகமாக மன்னிப்பு கேட்டான்.
“என்னோட டர்ம்ஸ்தான் நான் ஃபாலோப் பண்ணுவேன்..உங்க நெட் புக்கிங் எனக்கு ஏற்ற மாதிரி இருந்திருக்கலைனா நான் வேற ஹோட்டல் போயிருப்பேன்..எல்லாருக்கும் சரியாத் தெரியற எதுவும் எனக்கு ஒத்துவராது..எனக்கு ஒத்துவரதைச் சரியா? தப்பானு நான் பார்க்கறதில்ல.” என்று அவளின் அறவழியை அவனுக்கு விளக்கிய ஸ்மிரிதி, 
“உங்க வேலை என்ன இங்க?” என்று விசாரித்தாள்.
“ஹோட்டலுக்கு வர கஸ்டமர்ஸ்க்கு ரூம் பற்றி சொல்லணும் அப்பறம் அவங்க புக்கிங்கு உதவணும்.” என்றான்.
“எங்கள மாதிரி வாக்-இன் கஸ்டமர்ஸக்கு உங்க நெட் ஆப்ஷன் பற்றி நீங்க சொல்லலாம்….நாங்க கேட்ட மாதிரி ஹோட்டல் இங்க பக்கத்தில இருந்தா அதைக் கூட நீங்க ரெகமெண்ட் செய்யலாம்.. இதெல்லாம் உங்களோட தொழில் தர்மம்..இது எல்லாத்தையும் தூக்கிப் போட்டிட்டு இவ்வளவு காலைல இரண்டு லேடீஸ் வந்திருக்காங்கனு எதுவும் கேட்காம காலியா இருக்கற இரண்டு ரூம கொடுத்திருக்கலாம் அது அறம்..எல்லாரும் அவங்க கடமைய தர்மத்தோட கடைப்பிடிச்சு அறத்தோட அரவணைச்சுக்கலாம்.” என்றாள்.
“ஸாரி, மேம்.” என்றான்.
“ரூம நேர்லப் பார்க்காம ஃபோடோப் பார்த்து புக் செய்திருக்கேன்..அதே மாதிரி இருக்குமில்ல?” என்று அவன் முன் சிக்கலானக் கேள்வியை வைத்தாள்.
“சில ரூம் ஃபோடோல வேற மாதிரி தெரியும்..ஆனா எல்லா ரூம்ஸூம் நீட் அண்ட் கிளீனா இருக்கும்..நான் கியாரண்டி..உங்களுக்குப் பிடிக்கலைனா எந்த ரூம் வேணுமானும் மாற்றி கொடுக்கறேன்.” என்று சற்றுமுன் அவன் கற்ற அறவழியை அவன் அளவில் அரவணைத்து கொண்டான்.
“பரவால்ல..இன்னிக்கு ஒருத்தன் மாறிட்டான்.” என்று மனதுள் நினைத்து கொண்டாள் ஸ்மிரிதி.
சோஃபாவில் உட்கார்ந்திருந்த பிரேமாவைப் பார்த்து,”அம்மா..எழுந்திருங்க..ரூமுக்கு போகலாம்.” என்றாள்.
அவர்கள் இருவரிடமும் ஆளுக்கொரு ஹோல்டால் பாக் மட்டும் இருந்தது.  இரண்டாவது மாடியில் அவர்களுக்காக இரு அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.  
இரு அறைகளும் அருகருகே இருந்ததைப் பார்த்து,”நீங்க முதல்ல இருக்கறது எடுத்துக்கோங்க..நான் அடுத்ததை எடுத்துக்கறேன்.” என்று லிஃப்ட் அருகில் இருந்த அறையை பிரேமாவிற்கு கொடுத்தாள் ஸ்மிரிதி.
அவர்களுடன் வந்த ஹோட்டல் சிப்பந்தி, தாய், மகள் இருவரும் ஒரே அறையில் தங்காமல் தனிதனி அறையில் தங்குவதை அதிசயமாகப் பார்த்தான்.  
“ஒரு ரூம் திறந்துவிடுங்க..நெக்ஸ்ட் ரூம் நான் பார்த்துக்கறேன்.” என்று சொல்லி ஹோட்டல் சிப்பந்தியிடமிருந்து கீ கார்டை வாங்கிக் கொண்டாள் ஸ்மிரிதி.
அவன் அங்கிருந்து அகன்றவுடன் அவசர அவசரமாகப் பாத் ரூமிற்கு சென்றார் பிரேமா.
கட்டிலின் மேல் அமர்ந்து கொண்டு பிரேமா வருவதறகாகக் காத்திருந்தாள் ஸ்மிரிதி.
பாத் ரூமிலிருந்து வெளியே வந்தவரைப் பார்த்து,”என்ன மா?” என்று விசாரித்தாள்.
“ஒரு மாதிரி தள்ளுது..கொஞ்சம் நேரம் தூங்கிட்டு கிளம்பலாமுனு நினைக்கறேன்.” என்றார் பிரேமா.
“நானும் ரெஸ்ட் எடுத்துக்கறேன்..நீங்க ரெடியாயிட்டு எனக்கு போன் போடுங்க.” என்று அவள் அறைக்கு கிளம்பினாள் ஸ்மிரிதி.
“நீயும் இங்கையேப் படுத்துக்க.” என்றார் பிரேமா.
அவளுடைய ஏழாவது வயதிலிருந்து தனி படுக்கை, பத்தாவது வயதிலிருந்து ஹாஸ்டல் வாசம் என்று தனியாகவே இருந்து பழகிப் போன ஸ்மிரிதி பிரேமாவிற்கு பதில் சொல்லாமல் பாத் ரூமிற்கு சென்றாள். 
அவள் வெளியே வந்தபோது கட்டிலில் ஒரு ஓரமாகச் சுவற்றைப் பார்த்தபடி படுத்திருந்தார் பிரேமா.
அந்த சிங்கிள் கட்டிலில் மீதமிருந்த இடத்தில்  படுத்து கொண்டாள் ஸ்மிரிதி. தாய், மகள் இருவரும் அருகருக்கே கடைசியாகப் படுத்து உறங்கியது எப்போது  என்று யோசித்த போது பிரேமாவின் கண்கள் கலங்கின. அவரருக்கேப் படுத்து கொண்ட ஸ்மிரிதியின் புறம் திரும்பிய பிரேமா சலனமில்லாத அவள் முகத்தைப் பார்தார்.
“என்ன மா?” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“உன்னால எப்படி இப்படி இருக்க முடியுது?” என்று உணர்ச்சியற்ற அவள் முகத்தைப் பார்த்து கேட்டார் பிரேமா.
“எப்படி மா?”
“எதையும் நினைக்காம.”
“நான் ஸ்மிரிதி மா….நினைவுகள்..…முயற்சி செய்யாம எல்லாமே நினைவுல இருக்கும்..முயன்றாலும் எதையும் மறக்கமுடியாது..இது இரண்டுத்துக்கும் நடுவுல வெறும் நிகழ்வுகளாக மட்டும் நான்.” என்றாள் ஸ்மிரிதி கார்மேகம்.

Advertisement