Advertisement

ஸ்மிரிதியின் மனு – 9_1
அறையிலிருந்து மற்றவர்களுடன் வெளியே சென்ற ஸ்மிரிதி அறைக்குளிருந்த மனுவைப் பார்த்து,”நான் இவங்களோட கார்வரைக்கும் போயிட்டு வரேன்.” என்று சொன்ன விதம் மற்றவர்களுக்கு சாதாரணத் தகவலாகத் தெரிந்தது ஆனால் மனுவிற்கும் மட்டும் அதன் அர்த்தம் புரிந்தது.
“திரும்பி மேல வரும்போது என் பைக் சாவியோட வா.” என்று கட்டளையிட்டான் மனு.
“சரி” என்று பதில் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்தாள் ஸ்மிரிதி.
அறையினில் விடபட்ட மனுவைப் பார்த்து,”ஒரு அஞ்சு நிமிஷ வேலை இருக்கு..நீ வெயிட் பண்ணு நான் வந்திடறேன்.” என்று சொல்லி அடுத்த அறைக்கு மறுபடியும் சென்றாள் மெஹக்.
மெஹக் சென்று பத்து நிமிடம் கழித்து வாயிற்கதவை திறந்து கொண்டு  ஸ்மிரிதி உள்ளே நுழைந்தாள்.  சோபாவில் அமர்ந்திருந்த மனுவின் மேல் அவன் பைக் சாவியை விட்டெறிந்தாள். மனுவின் அருகில் சாவி லாண்ட் ஆனது.  அவனருகில் விழுந்த சாவியை பொருட்படுத்தாமல் ஸ்மிரிதியை இமைக்கால் பார்த்தான் மனு.
“கிளம்பு..உன் பைக் சாவி கிடைச்சிடுச்சில்ல.” என்றாள் ஸ்மிரிதி.
“உன் வேலைய என்கிட்டையேக் காட்டறியா?” என்று அடிக்குரலில் ஆத்திரத்துடன் கேட்டான் மனு.
மனு அதுபோல் கேட்டதும் ஸ்மிரிதி அவன் மேல் பாய்ந்தாள்.
“என்ன வேலையக் காட்டினேன்? உனக்கு என்ன அப்படி அவசரம்..சாப்பிடதானக் கூப்பிட்டேன் அதுக்குள்ள என்னவோ அவங்கள அழைச்சுகிட்டு ஓடிப் போற..என்னைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது..நானும், மெஹக்கும் அப்படி என்ன உனக்கு வித்தியாசமா தெரியறோம்? 
நீங்க என்னோட பிரண்ட்ஸுனு அவ ரூமுக்கு சாப்பாடு வரவழைச்சு விருந்து உபசாரம் செய்யறா..அது உனக்குப் பெரிசாத் தெரில..அவ ஊத்திக் குடிக்கறதுதான் உன் கண்ணுக்குப் பெரிசாப் படுது..நீ அப்படியேதான் இருக்க மனு..நீ மாறவேயில்ல..போ..உன் பைக்க எடுத்துகிட்டு ஒழிஞ்சு போ.” என்றாள் கோபமாக.
“உனக்கு நீ சொல்றபடி எல்லாமும். எல்லாரும் நடக்கணும் அப்படி நடக்கலைனா அதை எந்த வழிலையாவது நடத்தி காட்டிடுவ..நான் சொல்லல வீட்டுக்குப் போகணுமுனு அந்தப் பொண்ணு ஜனனி சொல்லிச்சு..அதுக்கு இதெல்லாம் பழக்கமில்லனு ஃபீல் பண்ணிச்சு..அவகிட்ட ராம் கோபப்பட்டான் உங்க அப்பா அம்மா விஷயத்தைப் பற்றி விசாரிச்சதுக்கு..
உன்னோட வாழ்க்கையப் பற்றி எதுக்கு அவகிட்ட சொன்ன..உன் வாய வைச்சுகிட்டு நீ சும்மா இருந்திருந்தேனா நாங்களும் டின்னர் சாப்டிட்டு வீட்டுக்குப் போயிருப்போம்..தேவையில்லாத வேலை நீ செய்வ..அது எங்கையோ போய் முடியும் அதைச் சரிப்படுத்த இன்னும் தேவையில்லாத வேலைய செய்யக்கூடாத வழில செய்து காட்டுவா..இதுல உனக்கு என்ன சந்தோஷம் கிடைக்குது ஸ்மிரிதி? என்று மனுவும் கோபத்துடன் கேட்டான்.
“அவ எங்கம்மாவைப் பற்றி என்கிட்ட கேட்ட பிறகு நான் உண்மையதான் சொல்ல முடியும்..அது அவளோட தப்பு இல்ல..அதுக்காக நீ ஏன் சாப்பிடமாப் போகணுமுனு நினைச்ச? அவங்க எல்லாரும் சரினு சொன்ன பிறகும் உனக்கு என்ன பிராப்ளம்? உன்னை நான் அப்படி போக விட்டிடுவேன்னு நினைச்சியா? அதான் பைக் சாவியக் கொடுக்காதேனு ரிசெப்ஷன்ல சொன்னேன்.” என்று அவள் செய்ததை ஒப்புக்கொண்டாள் ஸ்மிரிதி.
“நீ என்னை அமைதியா போக விட்டவுடனையே உன் வேலை ஏதோ செய்ய போறேனு எனக்கு தெரிஞ்சிடுச்சு..பைக் சாவியக் காணலைனு அவன் சொன்னவுடனையே எனக்கு நீதானு புரிஞ்சிடுச்சு..என்னால ஒரு டாக்ஸி பிடிச்சு வீட்டுக்குப் போயிருக்க முடியும் ஆனா நான் திரும்பி வந்தது உன் தப்பை உனக்கு தெரியப்படுத்ததான்.” என்றான் மனு
“நான் எந்த தப்பும் செய்யல..நாம எல்லாரும் சேர்ந்து சாப்பிடறதா பிளான் செய்தோம் அதைதான் நிறைவேத்தினேன்… என் வழில….ஜனனியோட விருப்பம் நிறைவேறினதுல  நீ பைக் சாவிக் கிடைக்காம திரும்பி வந்தது எல்லாம் சின்ன விஷயாமாக் காணாமப் போயிடும்.” என்றாள் ஸ்மிரிதி.
“நீ திருந்த மாட்ட.” என்றான் மனு.
“நீ என்னைத் திருத்த வேணாம்.” என்றாள் ஸ்மிரிதி.
“திருந்த மாட்ட” என்று சொன்னவன் சட்டத்தின் உதவியோடு தவறுகளைச் சரி செய்து சமூகத்தை சீர்திருத்த முனைபவன்.  “திருத்த வேணாம்” என்று சொன்னவள் செய்த தவறுகளைச் சுயமாக சரி செய்து அவளைச் சீரமைத்துக் கொண்டவள். சீர்திருத்தம், சீரமைப்பு இரண்டும் சமூக அமைப்பிற்கு இன்றியமையாதது என்று இருவருமேப் புரிந்து கொள்ளவில்லை. 
“நான் வக்கீல் ஸ்மிரிதி..இந்த சமுதாயத்தோட அவலங்கள், ஆசைகள்..அதை சார்ந்த மூகமூடிகள் எல்லாத்தையும் தினமும் பார்க்கறேன்..நீ நினைக்கற மாதிரி உன் வழில எல்லாத்துக்கும் முடிவு எடுக்க முடியாது..சின்ன விஷயமா இருக்கறதுனால உன் முயற்சியோட முட்டாள்தனம் உனக்குப் புரிய மாட்டேங்குது..
இந்த டின்னருக்காக இன்னிக்கு நீ எத்தனை பேர் மனச மாற்றியிருக்கேனு நினைச்சு பாரு..மெஹக் மனச மாற்றி எங்களை இங்க வரவழைச்ச..எங்களுக்குப் போகணுமுனு தெரிஞ்ச பிறகும் ஜனனி மனச கலைச்சு அவளுக்காக நீயே முடிவெடுத்த..என்னை வெளியேப் போக முடியாதபடி கட்டாயப்படுத்தி டின்னர்ல கலந்துக்க வைச்ச..இதெல்லாம் செய்யறத்துக்கு பதிலா இன்னிக்கு எங்களோட உன்னால சாப்பிட வர முடியாதுனு ஜனனிகிட்ட ஸிம்பிலா மறுத்திருக்கலாம்.” என்றான் மனு.
“யெஸ்..நானும் முதல்ல மறுத்தேன் ஆனா அவ இந்தச் சின்ன விஷயம்கூட செய்ய முடியாதானுக் கேட்டவுடன சரி செய்யறேனு அவகிட்ட சொல்லிட்டேன். எப்பவும் உதவியோ, உபகாரமோ கேட்கறவங்களுக்கு அது சின்ன விஷயமாதான் தெரியும் அதை நிறைவேத்தறவங்களுக்குதான் அது பெரிய விஷயமாப் போயிடும்… 
அடுத்தவங்களுக்கு உதவணுமுனா அதை செய்யறவங்கதான் கஷ்டத்தை அனுபவிக்கணும்..அந்த உதவியோட பலன் செய்யறவங்களுக்குக் கிடைக்காது..அப்படி கிடைச்சா அதுக்கு பெயர் உதவியும் கிடையாது.. அதனாலதான் பொதுவா இப்ப யாரும் யாருக்கும், எதுக்கும் உதவறது இல்ல..
இன்னிக்கு ஜனனிக்கு இந்த அனுபவம் வித்தியாசமாவும், சந்தோஷமாவும் இருந்திருக்கும்..அவளுக்கு அதை கொடுக்கறதுக்கு நான் என்னென்ன வேலை செய்தேனு எனக்குதான் தெரியும்..யாருக்கும் தெரியாது..உனக்குக்கூட.” என்று ஸ்மிரிதி விளக்கம் கொடுத்து கொண்டிருக்கும் போது, அடுத்த அறையிலிருந்து கையில் ஒரு கொத்து காகிதங்களுடன் வெளியே வந்தாள் மெஹக்.
“அவங்க கிளம்பியாச்சு..இதை மும்பை எடுத்துகிட்டு போயி என் மனேஜர் கிட்ட ஒரு தரம் சரி பார்க்க சொல்லிட்டு ஸைன் போட்டு ஒகே சொல்ல வேண்டியதுதான்.” என்றாள்.
அதைக் கேட்டவுடன் மெஹக்கைக் கட்டிப்பிடித்த ஸ்மிரிதி,
“மனு, மெஹக்கைத் தமிழ் பட கதா நாயகியா நான் நினைச்சுகூட பார்க்கல.” என்று ஹிந்தியில் அவனுடன் அவள் சந்தோஷத்தைப் பகிர்ந்துக் கொண்டாள்.
அவர்கள் பேசிக் கொண்டிருந்ததைப் பாதியில் விட்டுவிட்டு மெஹக்கைப் பற்றி ஸ்மிரிதி பேசியவுடன் மனுவும் மெஹக்கைப் பார்த்து,”எத்தனை படம்?” என்று ஹிந்தியில் கேட்டான்.
“மூணு படம்..எல்லாத்துக்கும் ஒரே கான் ட் ரக்ட்.’ என்று அவள் கையிலிருந்த பேப்பரைக் காட்டினாள் மெஹக்.
“நீ டின்னர் சாப்பிடு..நான் அதுக்குள்ள உன் காண்ட் ரக்டைப் படிக்கறேன்.” என்று மெஹக் மறுக்கும் முன் அவளிடமிருந்து பேப்பரைப் எடுத்து கொண்டான் மனு.
அத்தகைய செய்கையை மனுவிடமிருந்த எதிர்ப்பார்க்காத பெண்கள் இருவரும் ஆச்சர்யத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். சோபாவில் அமர்ந்தபடி மெஹக்கின் காண்ட் ராக்ட்டை மனு பரிசீலிக்க, அவளுக்கான இரவு உணவை ஒரு பிளேட்டில் எடுத்து வந்து மனு எதிரே அமர்ந்து கொண்டாள் மெஹக்.  அவர்கள் இருவரையும் தனியே விட்டு விட்டு வெளி மாடிக்குச் சென்று போனில் பேச ஆரம்பித்தாள் ஸ்மிரிதி.
பதினைந்து நிமிடமானது மனுவிற்கு அந்த காண்ட் ராக்ட்டை ஆதியிலிருந்து அந்தம் வரை படிப்பதற்கு.  அவன் படித்து முடிக்கும் வரை மௌனமாக இருந்த மெஹக்,
“என்ன?” என்று கேட்க
“உனக்கு ரொம்ப அவசியமா இப்ப தமிழ் படம் செய்ய?” என்று கேட்டான் மனு.
“பணம் அவசியம்..மார்கெட் இருக்கறச்சே அதை உபயோகிச்சிக்கணும்..அஞ்சு வருஷமா ஹிந்தில நடிக்கறேன்..இப்பதான் டாப்ல இருக்கேன்..அதேபோல எல்லா மொழிலையும் ஒரே நேர்த்தில டாப்ல இருக்கணுமுனு நினைக்கறேன்..
அதுக்குதான் முதல் தமிழ் ஒத்துக்கறேன்..தெலுங்குலையும் கேட்டாங்க ஆனா எனக்கு அங்க யாரையும் தெரியாது..தமிழ்ல எனக்கு ஸ்மிரிதி மட்டும் தெரியும்..அதான் எதுவும் முடிவு செய்யறத்துக்கு முன்னாடி அவள முன்னால வைச்சு பேச்சு வார்த்தை நடத்தினேன்.” என்றாள் மெஹக்.
“இரண்டு படத்துக்கு ஒத்துக்கோ..மூணு வேணாம்..முதல் படத்திலையே உனக்கு வரவேற்பு எப்படினு தெரிஞ்சிடும்..படம் ஓடலைனாக்கூட படத்தோட கதா நாயகிக்கு வேற படம் கிடைக்க வாய்ப்பு இருக்கு..அவங்க உன்னை அறிமுகப்படுத்தறதுனால அவங்களுக்கு இன்னொரு படம் நடிச்சு கொடு ஆனா மூணாவது வெளி ஆளுக்குதான் செய்யணும்..இதைவிட மூணு பங்குப் பணத்துக்கு.” என்றான் மனு.
“ஒத்துப்பாங்கனு நினைக்கறையா? வேற யார்கிட்டையாவது போயிட்டாங்கன்னா?” என்று சந்தேகமாகக் கேட்டாள் மெஹக்.
“அவங்களுக்கு நீ தேவைனுதான் இவ்வளவு தூரம் வந்திருக்காங்க..உன்னோட மூணு படத்துக்கு அக்ரிமெண்ட் போடறாங்க..உன்னோட மார்கெட்ட நீயே குறைச்சு எடைப் போடாத..இரண்டு படம் இதே டர்ம்ஸுக்கு ஒத்துக்க..மூன்றாவது செய்யணுமுனா வேற டர்ம்ஸ்..
எல்லாத்துக்கும் சரினு முதல்லையே சொன்னேன்னா நீ தான் அவங்க பின்னாடி போயிகிட்டு இருப்ப..அப்பறம் அக்ரிமெண்ட்ல பேமண்ட் டர்ம்ஸ்ல நிறைய வீக் பாயிண்ட்ஸ்..வெறும் பூஜியத்தை மட்டும் கவுண்ட் செய்யற போல..எத்தனை நாள்ல எவ்வளவு பூஜியமுனு கணக்குச் செய்யல.” என்று சிரித்து கொண்டே அந்த அக்ரிமெண்டில் திருத்த வேண்டிய இடங்களைத் திருத்தி கொடுத்தான் மனு.
மனு திருத்தியை இடங்களைப் படித்து பார்த்த மெஹக் கலங்கிய கண்களுடன்,”தாங்க்ஸ் மனு…எங்கம்மா காலத்து அக்ரிமெண்ட அப்பப்ப வேணுங்கற சேன் ஜஸ் செய்திருக்கேன்..நீ சொன்ன மாதிரி வெறும் பூஜயத்தை மட்டும் திருத்தியிருக்கேன் ஆனா அதை எப்படி வசூல் செய்யணுமுனு இதுவரை யோசிக்கல..எல்லாம் அதுவா வந்துகிட்டிருக்கு எதையும் மாற்ற எங்கம்மா விரும்பல.” என்றாள் மெஹக்.
“உங்கம்மா காலம் வேற உன்னோட காலம் வேற..மும்பைல நல்ல லீகல் ஃபர்ம் ஹையர் செய்துக்க..யாருக்கு எப்ப தேவை ஏற்படுமுனு சொல்ல முடியாது..இந்த ஆளுங்களுக்குப் பணம் எங்கிருந்து வருது?” என்று கேட்டான்.
“அதெல்லாம் நான் கேட்கல..பழையத் தயாரிப்பாளர்கள் ஆனா புது பார்ட்னர் ஒருத்தரை சேர்த்துகிட்டிருக்காங்க..அவருதான் மூணு படத்துக்கும் பணம் போடறாரு..யாருனு கேட்டா எனக்குதான் பிரச்சனை வரும். நடிச்சதுக்கு எனக்கு பணம் வந்தா போதும்..அவங்களுக்குப் பணம் எப்படி வருதுங்கறது எனக்கு தேவையில்லாதது.” என்றாள் மெஹக்.
“உங்கம்மா இருக்காங்க..நீயும் அஞ்சு வருஷமா நடிச்சுகிட்டு வர..நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன்….எல்லா இடமும் ஒரே போலக் கிடையாது..ஜாக்கிரதை.” என்றான் மனு.
“உன் போன் நம்பர் ஷேர் செய்..ஏதாவது டவுட் வந்திச்சுன்னா உன்கிட்ட கேட்டுப்பேன்.”என்று மனுவின் நம்பரை பெற்று கொண்டு அவளின் போன் நம்பரை அவனுடன் பகிர்ந்துக் கொண்டாள் மெஹக்.
“தாங்க்ஸ்.” என்று நன்றி சொன்ன மெஹக் மனுவைப் பார்த்து,”நாளைக்கு கல்யாணத்துக்கு நீ வரியா?” என்று கேட்டாள்.
“எந்தக் கல்யாணம்? என்று விசாரித்தான் மனு.
“ஸ்மிரிதி வீட்ல நடக்குதே..கீதிகா அண்ணன் பொண்ணுக்கு..சங்கீத்ல கலந்துக்கதான் நான் வந்திருக்கேன்….அவங்க அண்ணன் பொண்ணுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் அதனால ஸ்மிரிதிகிட்ட சொல்லி என்னை வரவழைச்சிருக்காங்க.” என்றாள் மெஹக்.
“ஸ்மிரிதி குடும்பத்தோட எங்களுக்குப் பழக்கமில்ல..அவளோட அம்மாவோட மட்டும்தான் பழக்கம்..இப்பதான் அவங்களையும், ஸ்மிரிதியையும் கோயமுத்தூர்ல ஜனனி, ராம் கல்யாணத்தில சந்திச்சோம்.” என்றான் மனு.
“ஆன்ட்டி எப்படி இருக்காங்க?” என்று கவலையாகக் கேட்டாள் மெஹக்.
“நல்லா இருக்காங்க..ஏன் கேட்கற?” என்று அவளின் கவலையைப் பார்த்து யோசனையுடன் கேட்டான் மனு.
“ஸ்மிரிதி வாஸ் வரிடுனு சுசித்ரா சொன்னா.” என்றாள் மெஹக்.
“வொய்?” என்று மனு கேட்கும்போது அறையினுள் நுழைந்தாள் ஸ்மிரிதி.
“வொய்? வொய்?” என்று மனுவைப் பார்த்து கேட்டாள் ஸ்மிரிதி.
“நீ ஆன்ட்டியப் பற்றி கவலையா இருந்தேனு சுசித்ரா சொன்னத மனுகிட்ட சொல்லிகிட்டிருந்தேன்.” என்றாள் மெஹக்.
மெஹக் சொன்னதைக் கேட்டவுடன் ஸ்மிரிதியின் முகம் ஒரு க்ஷணத்திற்கு இருண்டு போனது. அதைக் கவனித்த மனு மேலும் எதுவும் கேட்குமுன்,
“நீ கிளம்பு.” என்று அவனைக் கிளப்பினாள் ஸ்மிரிதி.
“யு நோ (know) மனு என்னோட பேமண்ட் டர்ம்ஸ் மாற்றிக் கொடுத்திருக்கான்..இப்ப கிளியரா எனக்கே புரியுது எல்லாம்.” என்று ஸ்மிரிதியிடம் குதுகலித்தாள் மெஹக்.
“குட்..கடமையைக் கடைப்பிடிச்சு அறவழிய அரணைச்சுகிட்டிருக்கான்..உன் தேவை, அவன் தேவைனு பிரிச்சுப் பார்க்காம அந்த அக்ரிமெண்டோடத் தேவைய சரியா புரிஞ்சுகிட்டு செயல்பட்டிருக்கான்.” என்று பாராட்டினாள் ஸ்மிரிதி.
அவள் பாராட்டை பாராட்டாமல் அவளைப் பார்த்து,”நீ எப்படி வீட்டுக்குப் போவ?” என்று கேட்டான்.”எப்ப என்று கேட்காமல், எப்படி என்று கேட்ட மனுவை இரண்டு பெண்களும் விசித்திரமாகப் பார்த்தனர்.
“அவ என்னோடதான் இன்னிக்கு நைட் இங்க இருக்க போறா..நாளைக்கு மத்தியானம்தான் அவ வீட்டுக்குப் போவா..நாளைக்கு இராத்திரி சங்கீத் அப்பறம் கல்யாணம்.” என்றாள் மெஹக்.
“நீ நைட் உன் வீட்டுக்குப் போகறதில்லையா? அன்னிக்கு நைட் கபீர் ஹோட்டலுக்குப் போயிட்ட..இன்னிக்கு நைட் இவளோட இருக்க போற..என்ன விஷயம்?” என்று தமிழில் கோபமாகக் கேட்டான் மனு.
அவன் தமிழுக்கு தாவியவுடன் அவர்களுக்குள் வாக்குவாதம் என்று புரிந்து கொண்ட மெஹக் மௌனம் காக்க,
“உன் வேலையப் பார்த்துகிட்டு போ.” என்று கோபத்துடன் பதில் அளித்தாள் ஸ்மிரிதி.
“எங்கம்மாகிட்ட சொல்லி ஆன்ட்டிக்கு போன் செய்ய சொல்றேன்..நீ இராத்திரி வீட்டுக்குப் போகாம இந்த மாதிரி ஹோட்டல் ரூம்ல இருக்கேனு தெரிஞ்சா ஆன்ட்டி வருத்தப்படமாட்டாங்க?” என்று கேட்டான் மனு.
“எங்கம்மாகிட்ட என்னைப் பற்றி ஏதாவது விஷயம் போச்சு உன்னை மொத்தமா முடிச்சிடுவேன்.” என்று ஆட்காட்டி விரலை அசைத்து கத்தினாள் ஸ்மிரிதி.
அவர்கள் இருவரின் சண்டையைப் பார்த்து பயந்து போன மெஹக்,”கயீஸ் ரிலாக்ஸ்..ஸ்மிரிதி..சத்தம் போடாத..சில்லாக்ஸ்.” என்றாள்
மெஹகை இருவரும் புறக்கணித்தனர்.
“என்னை நீ முடிச்சிடுவியா?” என்று நிதானமாகக் கேட்டான் மனு.
“என்னால முடியாதுனு நினைக்கறையா..நான் கார்மேகத்தோட பொண்ணு.” என்று மனுவை மிரட்டினாள் ஸ்மிரிதி.
அவளுக்குப் பதில் சொல்லாமல் மெஹக்கைப் பார்த்து  ஹிந்தியில்,”உன்னோட இவ இன்னிக்கு இராத்திரி தங்க மாட்டா..ஒண்ணு என்னோட என் வீட்டுக்கு வர போறா இல்ல என்னோட அவளோட வீட்டுக்குப் போவா..இரண்டும் இல்லை…” என்று வாக்கியத்தை முடிக்காமல் அவன் பைக் சாவியை எடுத்து கொண்டு அறையிலிருந்து புறப்பட்டான் மனு.
“என்ன நடக்குது இங்க?” என்று ஸ்மிரிதியிடம் மெஹக் கேட்க,
“அவன்கூட கிளம்பறேன்..நாளைக்கு மத்தியானம் போன் பேசறேன்.” என்று விளக்கம் கொடுத்துவிட்டு மனுவுடன அவள் போகா விட்டால் அவன் என்ன செய்ய போகிறானென்று ஸ்மிரிதியைப் போல் எச்சரிக்கை விடுக்காமல் செய்து காட்டுவான் என்று புரிந்ததால் அவளுடைய பையை எடுத்து கொண்டு அவசர அவசரமாக அவன் பின் சென்றாள் ஸ்மிரிதி.
இருவரும் மௌனமாக லிஃப்டில் பயணம் செய்தனர்.  ஹோட்டலிற்கு வெளியே வந்தவுடன் பயங்கரமாக குளிர் தாக்கியது.  அவள் தலையைச் சுற்றி ஸ்கார்ஃபை அணிந்து , அதற்கு மேல் அவன் கொடுத்த ஹெல்மெட் போட்டுக் கொண்டு அவன் பைக்கில் ஏறி அமர்ந்தவுடன்,”என் வீட்டுக்கு.” என்றாள் ஸ்மிரிதி.
“எனக்கு வழித் தெரியாது..நீதான் சொல்லணும்.” என்றான் மனு.
“நீ போ..நான் சொல்றேன்.”

Advertisement