Advertisement

ஸ்மிரிதியின் மனு – 18_1
இனி ரோட்டில் நின்று கொண்டு பேச எதுவுமில்லை என்று முடிவுக்கு வந்த மனு,”நான் கிளம்பறேன்.” என்று சொல்லி அவன் பைக்கில் அமர்ந்தபோது, திடீரென்று அவள் கையிலிருந்தப் பையை அவன் முன்னால் பைக்கில் வைத்துவிட்டு அவன் பின்னே ஏறி அமர்ந்து கொண்டாள் ஸ்மிரிதி.
“என்ன பண்ற?”
“நான் சொல்ற இடத்திலே என்னை இறக்கிவிடு.” என்று பதில் சொன்ன ஸ்மிரிதி மனதிற்குள் ஒரு முடிவிற்கு வந்திருந்தாள்.  அவளைப் பிடித்திருந்தும் அதைப் பற்றி ஒரு முடிவிற்கு வராமல் பிடிவாதமாக விளக்கவுரைக் கேட்டு கொண்டிருந்த வக்கீலை வழிக்கு கொண்டு வர அவன் அம்மாவிடம் வழக்கைக் கொண்டு போக முடிவு செய்திருந்தாள்.
அவர்கள் புறப்பட்டு பத்து நிமிடம் கழித்து அவன் வீட்டிற்கு போகும் சாலையை அடைந்தபோது ஸ்மிரிதியின் மௌனத்தைப் பார்த்து அவள் திட்டத்தை தாமதமாகப் புரிந்து கொண்ட மனு, பைக்கை சர்வீஸ் ரோட்டில் நிறுத்திவிட்டு அவன் பின்னே அமர்ந்திருந்தவளிடம்,”கார்ல கிழவன்…கல்யாணத்தில ஹாய் பேபி..இப்ப என்ன ஐடியாவுல என் பின்னாடி உட்கார்ந்திருக்க?” என்று கேட்டான்.
“காருக்கும், கல்யாணத்துக்கும் நடுவுல ஒரு மெஸெஜ்..நீ அதுக்கு இன்னும் பதில் அனுப்பலே ஓல்ட் மனு..பேட்.“என்று வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்றினாள் ஸ்மிரிதி.
“ஸ்மிரிதி.” என்று கர்ஜித்தான் பொறுமையிழந்த மனு.
அதற்கு மேல் அவனை சோதிக்காமல்,“கால்ல விழற ஐடியாவுலதான்.” என்றாள் அசால்டாக.
“அதுக்குதான் என்கூட வர்றியா?.” என்று கேட்டான் மனு.
“இப்ப உனக்குப் புரிஞ்சிடுச்சு இல்ல..லேட்டாக்காத..குளிருது.” என்று சொல்லி அவனை நெருங்கி உட்கார்ந்து அவன் பாக்கெட்டில் கைவிட்டுக் கொண்டாள்.
“இவளோட மட்டும் ஏன் எல்லாம் லேட்டாவே புரியுது? நடக்குது?” என்று யோசித்தபடி மறுபடியும் வண்டியை செலுத்திய மனுவும் மனதிற்குள் ஒரு முடிவிற்கு வந்திருந்தான்.
இரண்டு வாரங்களுக்கு முன் போன அதே வழியில் அவன் சென்றபோது அவன் வீட்டிற்கல்ல அவள் வீட்டிற்குப் போகிறான் என்று உணர்ந்த ஸ்மிரிதி அவள் வீட்டுக்குச் சென்றபின் அவனிடம் தீர்மானமாகப் பேசிவிட வேண்டும் என்று அப்போதைக்கு மௌனமானாள்.  அவள் வீட்டின் கேட்டின் முன் பைக்கை நிறுத்திய மனுவிடம்,
“உள்ள வந்திட்டு போ.” என்றாள் ஸ்மிரிதி.
“என்கூட என் வீட்டுக்குதான் வரறேனு வாய திறந்து  சொல்லமாட்ட..திடீர்னு என் பின்னாடி வந்து உட்கார்ந்துக்குவ..நீ எதுவும் சொல்லாம நானா புரிஞ்சுக்கணும்..எங்க வீட்டுக்கு வந்து எங்கம்மா கால்ல விழுந்த உடனே அடுத்த மூகூர்தத்தில நம்ம கல்யாணம்தானா..எதையுமே யோசிக்காம இப்படிதான் அவசரமா முடிவெடுக்கற..இதுக்கு மேல இப்ப எதுவும் பேச வேணாம்னு பார்க்கறேன்.” என்றான் கடுப்புடன்.
“அவசரமாவா? டூ வீக்ஸ்..நானும், நீயும் நம்ம மனசில இருக்கறதை சொல்லி..அதைப் பற்றி பேசாம என்னைப் பற்றி பேசத்தான் இன்னிக்கு ஹோட்டலுக்குப் போனோமா?..வக்கீலுங்கறதுனால கல்யாண விஷயத்தையும் கிடப்பில  போடுவியா?” என்று ஸ்மிரிதி கேட்க, அதற்கு மனு பதில் சொல்லுமுன் அவர்கள் அருகில் வந்து நின்ற காரின் பின் ஸீட்டில் அமர்ந்திருந்த கார்மேகம் கண்ணாடியை இறக்கி,
“என்ன இங்க கேட்ல நின்னுகிட்டு இருக்கீங்க மனு தம்பி?” என்று கேட்டார்.
அந்த நேரத்தில் கார்மேகத்தின் வரவை இருவருமே எதிர்பார்க்கவில்லை. உடனே அவர் மகள்,
“அவன் என்னை வீட்ல கொண்டுவிட வந்தான் பா.. கிளம்பிட்டான்.” என்று சொல்லி கார்மேகத்தின் கார் கதவைத் திறந்து முன்புறம் அமர்ந்து கொண்டாள்.
கார்மேகத்தின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அதற்கு மேல் அங்கே ஒரு நிமிஷம் நிற்காமல், அப்பா, மகள் இருவர் மனதிலும் சஞ்சலத்தை ஏற்படுத்தி அவன் பைக்கை உதைத்து புறப்பட்டான் மதம் பிடித்த மனு.  அவன் வேகத்தைப் பார்த்த கார்மேகம்,
“என்ன மா? மனு தம்பி இத்தனை வேகமா போறாராரு?
“வேகமா போகட்டும்…சோகமா போகட்டும்..கோபமா போகட்டும்..விட்டுத் தள்ளுங்க பா.” என்று விட்டேத்தியாகப் பதில் சொன்னாள் ஸ்மிரிதி.
ஆனால் கார்மேகத்தினால் விட்டுத் தள்ள முடியவில்லை.  ஸ்மிரிதியை வீடு வரை கொண்டு வந்து விட்ட மனுவின் வரவை அவர் விரும்பவில்லை.
கார்மேகம், ஸ்மிரிதி இருவரும் வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே வரவேற்பறையில் அமர்ந்திருந்த கீதிகா கார்மேகத்தைப் பார்த்து,
“நானும், மனிஷீம் இன்னும் சாப்பிடாம உங்களுக்காகக் காத்துகிட்டிருக்கோம்..சேன் ஜ் செய்துகிட்டு வாங்க..அவனுக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு.” என்றார்.
“நான் முதல்ல ஸ்மிரிதிமாவோட கொஞ்சம் பேசணும் அதுக்கு அப்பறம் நாம எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்.” என்றார்.
கீதிகா அங்கிருந்து சென்றவுடன், ஸ்மிரிதியைப் பார்த்து,
“உங்க ரூமுக்குப் போய் பேசலாம்.” என்றார் கார்மேகம்.
அவள் அறைக்குள் சென்றவுடன்,
“நீங்க என்கூட வீட்டுக்கு வந்திருக்கலாமே..நீங்க ஃபோன் செய்வீங்கன்னு எதிர்பார்த்தேன்.” என்றார் கார்மேகம்.
“இல்ல பா..மனுக்கூட வந்திடலாம்னுதான் உங்களுக்குக் ஃபோன் செய்யலை.”
“அந்த தம்பியை எங்க பார்த்தீங்க?”
“ஜன்பத்ல.”
“ஸ்மிரிதி மா..நீங்க சில விஷயங்களைச் சரியா புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க..இப்ப நான் சொல்ல போகறதைக் கவனமா கேட்டுக்கோங்க.”
அவர் என்ன பேச போகிறார் என்று ஒரளவு யூகித்திருந்த ஸ்மிரிதி அவர் அதை எப்படி அவளிடம் பேச போகிறார் என்பதை யூகிக்கவில்லை. 
“இதுவரைக்கும் கபீரைத் தவிர நீங்களாவே யாரையும் நம்ம வீடுவரைக்கும்  கூட்டிக்கிட்டு வந்ததில்லை..ஒருமுறை இல்ல இன்னியோட இது இரண்டாவது முறை மனு தம்பியோட வீட்டுக்கு வர்றது..இன்னிக்கும் அந்த தம்பி கோபத்தோட போனதைப் பார்த்து எனக்கு மறுபடியும் உங்க இரண்டு பேருக்குள்ள ஏதோ விவாதம்னுப் புரிஞ்சிடுச்சு..
அவங்களை அன்னிக்கு நம்ம வீட்டுக் கல்யாணத்துக்கு கூப்பிட்டதுக்குக் காரணம் உங்க கல்யாண விஷயம் தான்..அடுத்த நாள் உங்ககிட்டேயிருந்து தகவல் வராத போது ஒருவேளை கலெக்டர் அம்மாகிட்டையும், உங்கம்மாகிட்டையும் நடந்ததை சொல்லியிருப்பீங்களோனு நினைச்சு மனு தம்பிக்குப் ஃபோன் செய்தேன்..மற்றபடி அவங்களுக்கும், நமக்கும் நடுவுல எதுவுமில்ல…வேணாம்.” என்று திட்டவட்டமாகக் மனு குடும்பத்தினருடன் எந்த உறவும் கூடாது கூறினார் கார்மேகம்.
கார் விபத்தில் மாட்டிக் கொண்டு பள்ளியிருந்து தற்காலிகமாக வீட்டிற்கு அனுப்பப்பட்ட ஸ்மிரிதிக்கு சில விதிமுறைகளையும், அறிவுரைகளையும் ஒரு அப்பாவாக தெரியப்படுத்திய கார்மேகம் சரியாக பத்து ஆண்டுகளுக்குப் பின் அவரின் மகளிடம் அதே தொனியில் அவர் மனதில் இருப்பதை அன்றும் தெளிவாகத் தெரியப்படுத்தினார்.  மனுவிற்கும், அவளுக்கும் என்ன உறவு என்று அவர்கள் இருவருக்கும் தெளிவாகப் புரியாத போது அதைப் பற்றி அவள் அப்பாவுடன் என்ன பேசுவது என்று தெரியாமல் அவருக்குப் பதில் ஏதும் சொல்லாமல் மௌனம் காத்தாள் ஸ்மிரிதி.
அவளின் மௌனத்தை அவள் புரிதல் என்று எடுத்து கொண்ட கார்மேகம், அறையிலிருந்து வெளியேறுமுன் ஸ்மிரிதியிடம்,”நீங்களும் சாப்பிட வாங்க.” என்றார்.
“நானும், மனுவும் வெளில டின்னர் முடிச்சிட்டோம்..நீங்க போய் சாப்பிடுங்க.” என்று அவரின் அழைப்பை மறுத்து மனுவுடன் இரவு உணவை முடித்து கொண்டதை அவருக்குத் தெரியப்படுத்தினாள் ஸ்மிரிதி.
அதற்கு மேல் ஒரு வார்த்தைப் பேசாமல் ஸ்மிரிதியின் அறையிலிருந்து வெளியேறினார் கார்மேகம்.
 மனு வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவனுக்காகக் காத்திருந்த சிவகாமி,
“என்ன டா, குளிர் காலத்தில இத்தனை கஷ்டப்படுத்தற? வேலை முடிஞ்சவுடன வீட்டுக்குப் புறப்பட்டு வரமாட்டயா?..நீ நினைச்ச போது வீட்டுக்கு வர்ற.. சின்னவன் சில நாள் வர்றதே இல்லை.”
சிவகாமிக்கு பதில் சொல்லாமல் அவன் அறைக்கு சென்றான் மனு.  அன்றைய மாலையில் நடந்தவற்றை நினைத்து கொந்தளித்து கொண்டிருந்தான். “எந்த வீட்டுக்குப் போகணும்னு சொல்லாம அமுக்கமா பின்னாடி உட்கார்ந்துகிட்டு வர வேண்டியது..அவ நினைச்ச மாதிரி நம்ம வீட்டுக்கு அழைச்சுகிட்டு வந்திருக்கணும் அப்ப தெரிஞ்சிருக்கும் அவ அடாவடி எல்லாம் அம்மாகிட்ட நடக்காதுன்னு..இங்க இருந்திருந்தா இரண்டு வாரத்துக்குள்ள கல்யாணத்தையே முடிச்சிருப்பாளாக்கும்.” என்று நினைத்துக் கொண்டே உடை மாற்றிக் கொண்டு வரவேற்பறைக்கு வந்தான்.
டைனிங் டேபிளில் இரவு உணவு தயாராக இருக்க, டீவி பார்த்து கொண்டிருந்த சிவகாமியிடம்,
“நீங்கெல்லாம் சாப்பிட்டாச்சா?” என்று கேட்டான்.
“உங்கப்பாவும், நானும் சாப்பிட்டு முடிச்சிட்டோம்..மாறன் வர மாட்டேனு சொல்லிட்டான்..பழைய கம்பெனில வேலைல இருந்தபோது இப்படிதான் செய்தான்..இந்தக் கம்பனி சேர்ந்த பிறகு திரும்பவும் ஆரம்பிச்சுட்டான்..நீ சாப்பிடு.” என்றார் சிவகாமி.
“எனக்கு வேணாம்..நான் வெளியே சாப்டிட்டேன்.” என்றான் மனு.
“ஏன் டா ஃபோன் பண்ணி சொல்ல மாட்டியா? திரேன்கிட்ட உனக்கும் சேர்த்து செய்ய சொல்லியிருக்க மாட்டேனில்ல?” என்று எரிந்து விழுந்தார்.
“திடீர்னு போனேன்.” என்றான் மனு.
“யாரோட?” என்று சிவகாமி கேட்க,
ஒரு நிமிஷம் யோசித்த மனு,”ஸ்மிரிதியோட.” என்றான்.
அவன் பதிலில் திகைப்படைந்த சிவகாமி,”அவ ஊருக்கு திரும்பிட்டாளா?” என்று கேட்டார்.
“இன்னிக்கு மதியம்தான் வந்தா..எனக்கு சாயந்திரமா ஃபோன் செய்தா..நானும், அவளும் வெளியே சாப்பிட போனோம்.” என்றான் மனு
“ எதுக்கு டா?.” 
“அவளை நேர்ல பார்த்து பேச போனேன்.” சிவகாமியின் என்கோய்ரியில் சற்று எரிச்சலுடன் பதில் அளித்தான் மனு.
“கார்மேகம் சகவாசம் வேணாம்னு உங்கப்பா உனக்கு சொல்லலையா?” என்று கண்டிப்புடன் சிவகாமி கேட்க,
“நான் கார்மேகம் அங்கிளோட வெளிய போகலை.. ஸ்மிரிதியோட போனேன்..அங்கிளுக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம்?” என்று கேட்டான் ஸ்மிரிதியுடன் எந்த விதத்திலும் சம்மந்தமேயில்லாதன்.
அப்பாவிற்கும், பெண்ணிற்கும் என்ன சம்மந்தம் என்று அபத்தமாக கேட்கும் அவர் மகனின் மனதை ஒரு நொடியில் புரிந்து கொண்ட அந்த டீச்சரம்மா உடனே வக்கீலின் அம்மாவாகி,
“பெத்த அப்பனுக்கும் அவரு பொண்ணுக்கும் சம்மந்தம் இருக்கா இல்லையான்னு அவளோட சம்மந்தம்பட்டவங்கதான் சொல்லமுடியும்.” என்றார்.
வக்கீலாக இருந்து கொண்டு எப்படி அவன் வார்த்தைகளாலேயேப் பிடிப்பட்டான் என்று நம்பமுடியாமல் நொந்து கொண்டிருந்தவனைப் பார்த்து அடுத்த ஏவுகணையை ஏவினார்.
“உனக்கும், ஸ்மிரிதிக்கும் என்ன சம்மந்தம்?” என்று தெளிவாகக் கேட்டார் சிவகாமி.
அவரின் அந்தக் கேள்வியைத் தள்ளுபடி செய்ய முடியாது என்று உணர்ந்து அவரருகே சென்று அமர்ந்து கொண்ட மனு, 
“அது குழப்பமா இருக்கு மா.. ஆனா அவளோட வாழ்க்கைல கார்மேகம் அங்கிள் எந்த அளவு முக்கியம்னு நான் தெரிஞ்சுக்க விரும்பறேன்.”
“அது எதுக்கு உனக்கு?”
“கார்மேகம் அங்கிளுக்கும் எனக்கும் உறவு அவங்க பொண்ணு மூலம்தான் ஏற்படும்..அவரும், நானும் எவ்வளவு முக்கியம்னு ஸ்மிரிதான் முடிவு செய்யணும்.”
“என்ன டா சொல்ற?” என்று நம்ப முடியாமல் மனுவைப் பார்த்து கேட்டார் சிவகாமி.
அதுவரை எந்த வடிவத்திலும் வடிக்க முடியாமல் அவனை வதைத்து கொண்டிருந்த எண்ணங்களுக்கு வார்த்தை வடிவம் கொடுத்தான் வக்கீல்.
“அம்மா..நான் ஸ்மிரிதியைக் கல்யாணம் செய்துக்க விரும்பறேன்.” என்று முன்னறிவிப்பு ஏதுமில்லாமல் அவன் விருப்பத்தை அறிவித்தான் மனு.
“மனு.” என்று அலறினார் சிவகாமி.  அவர் கத்தியதைக் கேட்டு அவர்கள் படுக்கையறையிலிருந்து வெளியே வந்த நாதன்,
“என்ன டா? உங்கம்மா எதுக்கு கத்தறா?” என்று மனுவைப் பார்த்து கேட்டார்.
மனு அவன் வாயைத் திறக்குமுன் சிவகாமியே அவரைப் பார்த்து,”உங்க பையன் அவனாவே ஒரு முடிவெடுத்திருக்கான் அதை போனாப் போகுதுன்னு என்கிட்ட சொல்லியிருக்கான்..நாம இரண்டு பேரும் ஸ்மிரிதிக்கு மாமனார், மாமியார் ஆகப் போறோம்.” என்று அவர் பங்கிற்கு நாதனுக்கு அதிர்ச்சி அளித்தார் சிவகாமி.
“என்ன டா சொல்றா உங்கம்மா?” என்று நம்ப முடியாமல் கேட்ட நாதன் அவர் மனைவியின் அருகில் சோபாவில் அமர்ந்து கொண்டார்.
“நான் ஸ்மிரிதியக் கல்யாணம் செய்துக்க விரும்பறேன் பா.” என்று நாதனுக்கும் தெரிவித்தான் மனு.
சிவகாமியைப் போல் கத்தாமல் அமைதியாக மனுவைப் பார்த்த நாதன்,”எப்பலேர்ந்து இந்த எண்ணம்?” என்று கேட்டார்.
பதில் பேசாமல் இருந்த மனுவிடம்,
”உங்கம்மா உனக்காக எத்தனை இடத்திலப் பொண்ணு தேடியிருப்பா அப்பெல்லாம் உனக்கு இது மாதிரி எண்ணம் இருக்குதுன்னு நீ ஒரு வார்த்தை சொல்லியிருக்காலமில்ல.” என்று கேட்டார் நாதன்.

Advertisement