Advertisement

சாரல் மழையே

அத்தியாயம் 6

இப்படியே மேலும் ஒரு வருடம் செல்ல.. இருவரும் நண்பர்களாகவே தொடர்ந்தனர். தர்மா மீது தான் கொண்டிருப்பது காதல் எனக் கீர்த்தி உணரவே இல்லை. தர்மா உணர்ந்தாலும் அதைக் கீர்த்தியிடம் சொல்லவில்லை. 


அவனின் நண்பர்களே ஒருமுறை தர்மாவை கேட்டிருந்தனர். உனக்குக் கீர்த்தியை பிடிச்சிருக்கு தானே…. பிறகு எதுக்குத் தயங்கிற, கீர்த்திகிட்ட பேசு என்றபோது, 

“கீர்த்திகிட்ட எனக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனா நான் அப்படி இல்லை. எனக்கும் கீர்த்திக்கும் வயசு வித்தியாசம் அதிகம். அதோட நான் பட்டப்படிப்பை கூட முடிக்கலை. அதே போல அவங்க அளவுக்குப் பெரிய கோடீஸ்வரனும் இல்லை. இப்படி என்கிட்டே நிறையக் குறைகள் இருக்கு.” 

“உதவி பண்ண வந்த பெண்ணோட மனசை நான் கலைச்சதா இருக்கக் கூடாது. அவளே விரும்பி வந்தா பார்க்கலாம். இல்லைனாலும் நான் வருத்தப்பட மாட்டேன். என்னை விடப் பெஸ்டா அவளுடைய வருங்காலக் கணவன் இருந்தா, அதுவும் எனக்குச் சந்தோஷம்தான்.” என்றான். 

“உன்னை விடப் பெஸ்ட்டா எல்லாம் யாரும் இருக்க மாட்டாங்க.” என்றபோது, அதைக் கீர்த்தித் தான் முடிவு பண்ணனும் என்றான். 

நண்பர்களையும் இதைப் பற்றிக் கீர்த்தியிடம் பேசவே கூடாது என்றுவிட்டான். 

ஒருநாள் எல்லோரும் சேர்ந்திருக்கும் போது, கீர்த்தித் தர்மாவிடம் எதோ கேட்டுக் கொண்டிருந்தாள். “டேய்… சீக்கிரம் கல்யாணம் பண்ணு டா…. நீயும் உன் குடும்பத்தோட நேரம் செலவு செய்வ… சும்மா இவளோட உட்கார்ந்து நேரத்தை வீனாகிட்டு இருக்க…” என்றான் சுமந்த்.
இந்தக் கீர்த்தி இன்னும் நண்பனை புரிந்துகொள்ளவில்லையே என ஆதங்கம் அவனுக்கு. 

தர்மா பதில் சொல்லாமல் சிரிக்க.. கீர்த்தித் தான் சண்டைக்கு வந்தாள். 

“என் கூட அவர் பேசினா உங்களுக்கு என்ன? அவருக்குக் கல்யாணமானாலும் நாங்க பிரண்ட்ஸ்தான்.” என்றதும், 

“அதை நீ முடிவு பண்ணாத. அவன் பொண்டாட்டி வந்ததும் அவங்க முடிவு பண்ணுவாங்க.” 

“யார் பெர்மிஷனும் எனக்குத் தேவையில்லை.” என்ற கீர்த்திக்கு அவ்வளவு கோபம் வர… 

“உங்களுக்குக் கல்யாணம் ஆகிட்டா என்னோட பேச மாட்டீங்களா?” அவள் தர்மாவிடம் நேரடியாகக் கேட்க, 

“அப்படியெல்லாம் இல்லை மா…” என்றான். 

“அவன் இப்ப அப்படித்தான் சொல்லுவான். இப்ப எங்களையே எடுத்துக்கோ… எங்க பொண்டாட்டி விரும்பாததை நாங்க செய்வோமா….” 

“அப்படியெல்லாம் யாரும் பெர்மிஷன் வாங்கி என்னோட பேச வேண்டாம்.” என்ற கீர்த்திக் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டாள். 

ஒருநாள் கூட அவளால் தர்மாவுடன் பேசாமல் இருக்க முடியவில்லை. மறுநாள் அவளே அவனை அழைத்துப் பேசிவிட்டாள். 

அன்று கீர்த்தியின் பெற்றோர் அதிசயமாக வீட்டில் இருந்தனர். சேர்ந்து சாப்பிடும் வழக்கம் எல்லாம் அந்த வீட்டில் கிடையாது. எப்போது வந்தாலும் மேஜையில் உணவு உணவு தயராக இருக்கும். அவரவர் விருப்பப்படும் நேரம் உண்பர். சில நேரம் இரவு உணவு மட்டும் கீர்த்தியும், அவள் தம்பி வினோத்தும் சேர்ந்து உண்ணுவார்கள். 

அன்று அவள் குளித்து உடைமாற்றி இரவு உணவுக்கு வர… அவள் வருவதற்காகக் காத்திருந்து பெற்றோரும் அவர்களுடன் சேர்ந்து உண்டனர். 

“கீர்த்தி, உன்கிட்ட ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லணும்.” என்றார் நவீனா. 

“சொத்தா, காரா இல்லைனா வெளிநாட்டுக்கு டூர் எதுவும் போறீங்களா?” கீர்த்தி அவளாகவே யூகிக்க, 

அவள் பெற்றோர் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவர்கள், அதை விடச் சந்தோஷமான விஷயம், “உனக்குக் கல்யாணம் பண்ண போறோம். நம்ம வீட்ல விசேஷம் நடந்தே நாள் ஆச்சு இல்லை. ரொம்பக் கிராண்டா பண்ணும்.” என அவள் அம்மா பேசிக்கொண்டே செல்ல, 

கீர்த்தித் தன்னுடைய திருமணம் பற்றி எல்லாம் யோசித்ததே இல்லை. மேலே படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருந்தாள். வீட்டில் திடிரென்று திருமணம் என்றதும் நம்பவே முடியவில்லை. 

“இப்ப எதுக்கு எனக்குக் கல்யாணம்? எனக்குக் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா எல்லாம் இல்லை.” என்றால் அலட்சியமாக. 

“நாமே எதிர்பார்க்காத சம்பந்தம் வந்திருக்கு. மினிஸ்டர் பையன். அன்னைக்கு அப்பாவோட கம்பனி விழாவுக்கு மினிஸ்டர் வர முடியலைன்னு அவர் பையன் விஷ்வாவை அனுப்பி இருந்தார். அங்க வச்சு உன்னைப் பார்த்ததுதான். அவனுக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிடுச்சாம். அவங்களேதான் கேட்டாங்க. நல்ல சம்பந்தம் தேடி வரும்போது விடுறது புத்திசாலித்தனம் இல்லை. நாங்க சரின்னு சொல்லிட்டோம்.” எனச் சொன்ன போது கீர்த்திக்கு அவ்வளவு கோபம் வந்தது. 

“யாரை கேட்டு நீங்க சரின்னு சொன்னீங்க.” என்றாள் கோபத்தை அடக்கிய குரலில். 

“உனக்கு என்ன தெரியும் கீர்த்தி? நீ சின்னப் பொண்ணு. உன்னை விட எங்களுக்கு நல்லது கெட்டது தெரியும்.” 

“இதுவரை என்னோட விஷயங்கள் நான்தான் முடிவு பண்ணியிருக்கேன். இதுவரை எதாவது தப்பு பண்ணி இருக்கேனா…” 

“இல்லைடா… உன் வயசு பசங்க என்னவெல்லாம் பண்றாங்கன்னு எங்களுக்குத் தெரியும். வி ஆர் ப்ரௌட் ஆப் யூ.” 

“கல்யாணத்துல மட்டும் அந்த நம்பிக்கை இல்லையா?” 

“உனக்கு நாங்க நல்லதுதான் செய்வோம் கீர்த்தி. உனக்கு நாங்க எது கொடுத்தாலும் பெஸ்டா தான் கொடுப்போம்.” என அவள் தந்தை முதல்முறையாக வாய்திறக்க…. 

“அதை நான் சொல்லணும் பா….” என்றாள். 

“உன்னைக் கேட்காம நாங்க சொல்லி இருக்கக் கூடாதுதான். ஆனா உனக்கு மாப்பிள்ளையைப் பிடிக்கும்.” 

“உடனே எல்லாம் என்னால சரின்னு சொல்ல முடியாது. நான் யோசிக்கணும்.” 

“இந்தா இதுல மாப்பிள்ளை பத்தின விவரம் இருக்கு.” என அவர் ஒரு கவரை அவளிடம் கொடுக்க… வைங்க பிறகு பார்த்துகிறேன் எனச் சென்றுவிட்டாள். 

அப்போது கூடத் தர்மாவை அழைத்துதான் இந்த மாதிரி வீட்ல சொல்றாங்க என்ன செய்வது என்று அவனிடமே கேட்டாள். 

தனது விருப்பத்தை ஒதுக்கிவிட்டு, அவளுக்கு ஒரு நல்ல நண்பனாகத்தான் ஆலோசனை வழங்கினான். 

“உன்னை யாரும் கையைக் காலைக் கட்டி மண மேடையில் உட்கார வைக்க முடியாது கீர்த்தி. உனக்கு உண்மையிலேயே அந்தப் பையனைப் பிடிச்சிருந்தா, பிடிச்சிருக்கு சொல்லு. இல்லைனா பிடிக்கலைன்னு சொல்லு.” 

“உன்னோட விருப்பம்தான். நீதான் வாழப் போற… நீதான் முடிவு பண்ணனும்.” என்றான் தெளிவாக. 

சரி என வைத்துவிட்டாள். தர்மாவிற்குத் தான் உறக்கம் போனது.
பெற்றோர் கொடுத்த கவரை எடுத்து வந்தாள். அதில் மாப்பிள்ளையின் போட்டோவும், பயோடேட்டாவும் இருந்தது.

ஷெர்வானி அணிந்து வட இந்தியன் போல நல்ல நிறமாக இருந்தான் விஷ்வா. 


முதல் பார்வையிலேயே ஏமாற்றம் தான். என்ன இவன் மொழு மொழுன்னு மெழுகு பொம்மை மாதிரி இருக்கான் என நினைத்தவளுக்கு, கண் முன்னே தர்மாவின் தோற்றமே… கட்டு மஸ்த்தான உடம்பு. கோதுமை நிறம், அடர்த்தியான மீசை. சில நேரம் லேசான தாடியோடு இருந்தாலும், அதுக்கூட அழகாக இருக்கும். 

விஷ்வா வெளிநாட்டில் மேனேஜ்மென்ட் கோர்ஸ் முடித்திருந்தான். குரூப் ஆப் கம்பெனீஸ் எம் டி என ஒரு பட்டியலே இருக்க… அவனுக்கு வயசு இருபத்தி ஆறுதான். அதற்குள் இவ்வளவு கம்பெனீஸ் எம் டி என்றால் நம்பும்படியாகவா இருக்கும். எல்லாம் பெயரளவுக்கு எனப் புரிந்து கொண்டாள். 

தர்மா இது போலச் செல்ப் டப்பா இல்லை. எவ்வளவு தன்னடக்கமான மனிதன் என நினைத்துக் கொண்டாள். மாப்பிள்ளையைப் பற்றி ஆராயாமல் தர்மாவைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தாள். இப்போதாவது அவள் மனம் அவளுக்குப் புரியுமா? 

அவள் பெற்றோர் கொடுத்தது போக, அவள் நெட்டில் விஷ்வாவை பற்றி மேலும் விவரம் தேட…. ரொம்ப ஜாலியான பேர்வழி எனத் தெரிந்தது. கையில் மதுக் கோப்பையுடன், அவன் இருப்பது போலச் சில புகைப்படங்களும். அவனின் பிறந்தநாள் வீடியோ ஒன்றில் பெண்களோடு நடனம் ஆடுவது போலவும் இருக்க… ஹப்பாடா இவனை வேண்டாம்னு சொல்ல காரணம் கிடைத்து விட்டது என நினைத்துக் கொண்டாள். 

உண்மையாகவே விஷ்வாவை வேண்டாம் என்று சொல்லத்தான் காரணம் தேடிக் கொண்டிருந்தாள். ஆனால் இப்போது இன்னொரு விஷயம் புரிந்தது. தான் எப்படிப்பட்ட ஒருவனை மணக்க விரும்புகிறோம் என்றும் புரிந்தது. 

தர்மாவை விட எல்லாம் யாரும் இன்னும் சிறப்பாகக் கிடைத்து விடமாட்டார்கள் எனத் தெரியும். இப்போது யோசிக்கும் போது, தான் அவனை விரும்புவதை உணர்ந்தாள். 

சில நொடிகள் மட்டுமே அந்த மகிழ்ச்சி. இவள் விரும்பினாலும் தர்மா அதற்கு ஒத்துக்கொள்ள வேண்டுமே…. இதுவரை அவனுக்கு அப்படியொரு எண்ணம் இருப்பது போலவே காட்டிக் கொண்டது இல்லை. கண்டிப்பாக ஒத்துக்கொள்ள மாட்டான் என முடிவுக்கு வந்திருந்தாள்.
மறுநாள் அவள் பெற்றோரிடம் சென்று, விஷ்வாவை பிடிக்கவில்லை என்றவள் காரணத்தையும் எடுத்து வைக்க… 

“எந்த உலகத்தில இருக்க நீ. இதெல்லாம் இன்னைக்கு ரொம்பச் சாதாரணம்.” எனப் பெற்றோர் சொன்னதும் கீர்த்திக்கு மிகுந்த அதிர்ச்சி. 

“உங்களுக்கு எப்படியோ எனக்குத் தெரியாது. ஆனா எனக்கு வர்ற கணவன் எப்படியெல்லாம் இருக்கனும்னு எனக்குச் சில எதிர்பார்ப்புகள் இருக்கு.” 

“நீ எதிர்ப்பர்க்கிற மாதிரி எல்லாம் நல்ல குணங்களோட யாரும் இருக்க மாட்டாங்க கீர்த்தி. ஒழுங்கா யதார்த்தத்துக்கு வா…” என்றார் அவளின் அம்மா. 

“உங்களுக்குத் தெரியலைனா அதுக்காக இல்லைன்னு அர்த்தம் இல்லை.” என்றவள், “நான் இந்த விஷ்வாவை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.” என்றால் முடிவாக. 

“நாங்க அவங்ககிட்ட சரின்னு சொல்லிட்டோம். இப்ப முடியாதுன்னு சொல்ல முடியாது கீர்த்தி.” 

“அது உங்கபாடு… அதுக்காக நான் பிடிக்காத கல்யாணம் பண்ண முடியாது.” எனச் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். 

காரை எடுத்துக் கொண்டு வெளியே வந்துவிட்டாள். ஆனால் எங்குச் செல்வது எனத் தெரியவில்லை… காரை சாலை ஓரம் நிறுத்திவிட்டு அங்கேயே உட்கார்ந்து இருந்தாள். 

“இந்த மாதிரியெல்லாம் இருக்க மாட்டாங்களாம். என்ன இருக்க மாட்டங்க.” என அவளுக்குக் கடுப்பாக வந்தது. 

அப்படிப்பட்ட ஒருவனுடன் தான் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகப் பழகுகிறாள். அப்படியிருக்கத் தர்மா மாதிரி சிறந்த ஒருவனை விட்டு வேறு யாரையும்தான், என்ன காரணமாக இருந்தாலும், எப்படி மணக்க மனம் வரும். 

என்ன செய்வது எனத் தெரியாத குழப்பத்தில் அவள் அங்கேயே இருக்க… தர்மா சுமந்த்தை அழைத்தான். 

“என்ன அதிசயமா இன்னைக்குப் போன் பண்ணி இருக்க… அதுவும் காலையிலேயே.” 

“நீ பிஸியா இருக்கியா என்ன?” 

“இன்னைக்குக் கதை விவாதம் இருந்தது. ஆனா இப்போ இல்லை. பிரீயாதான் இருக்கேன் சொல்லு.” 

தர்மா முன்தினம் கீர்த்தித் தன்னை அழைத்துப் பேசியதை சொன்னவன், “நீ கீர்த்திக்கு போன் பண்ணி பேசேன்.” என்றான். 

கீர்த்தி என்ன முடிவெடுத்திருப்பாளோ என மனதிற்குள் ஒரே பதட்டம். இவனே கேட்கலாம்தான். ஆனால் அவள் திருமணத்திற்குச் சரி என்று சொல்லி இருந்தால்… அதைத் தன்னால் சாதாரணமாகக் கேட்டுக்கொள்ள முடியும் எனத் தோன்றவில்லை. அதனால்தான் நண்பனிடம் சொன்னான். சுமந்திற்கும் அது புரிய… சரி பேசிட்டு சொல்றேன் என வைத்துவிட்டான்.
அவன் உடனே கீர்த்தியை அழைக்க… அவளும் எடுத்தாள். 

“ஹலோ….” 

“ஹாய் கீர்த்தி, நேத்து தர்மாகிட்ட என்னவோ சொன்னியாமே… என்ன ஆச்சு?” என அவன் நேரடியாகக் கேட்க, அதுக்குள்ள எல்லார்கிட்டயும் சொல்லிட்டானா என்ற கடுப்பில், சுமந்திடம் கோபமாக வெடித்தாள். 

“என்ன எப்ப கல்யாணம் சாப்பாடு போடுவேன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தீங்களா எல்லோரும்? அப்போ யாருக்கும் என் பீலிங்க்ஸ் பத்தி ஒன்னும் இல்லை. நான் பிடிக்கலைன்னு சொல்றேன் என் வீட்லதான் கார்னர் பண்றாங்கன்னா… நீங்களும் இப்படிக் கேட்கிறீங்க?” 

“ஹே… எதுக்கு இப்போ கத்துற? என்ன ஆச்சுன்னு தானே கேட்டேன்.” 

“எனக்குப் பிடிக்கலை சொல்லிட்டேன். ஆனா நாங்க ஓகே சொல்லிட்டோம். அதோட மினிஸ்டரோட பையன் அப்படி வேண்டாம்னு எல்லாம் சொல்ல முடியாதுன்னு என்னைக் கார்னர் பண்றாங்க.” எனக் கீர்த்தி அழுகையை அடக்கிக் கொண்டு பேச… 

“ஹே… அவன் எவனா இருந்தா என்ன? உனக்குப் பிடிக்கலை இல்லை. நாங்க பார்த்துக்கிறோம் விடு. நீ முதல்ல என் வீட்டுக்கு வா… நாம பேசலாம்.”
கீர்த்தியும் எங்குச் செல்வது எனத் தெரியாமல் தானே இருந்தாள். அதனால் சுமந்த் அழைத்ததும், அவன் வீட்டிற்குச் சென்றாள். 

தர்மாவை அழைத்து நடந்ததைச் சொன்ன சுமந்த். “இன்னைக்கு நீ கீர்த்திகிட்ட பேசுற. இல்லைனா நாங்க பேசுறோம்.” என்றான் கண்டிப்புடன். 

“சரி நானே பேசுறேன்.” என்றான் தர்மா. 

கீர்த்தி வந்ததும் சுமந்ததும், அவன் மனைவியும் அவளை வரவேற்று பேசிக் கொண்டு இருந்தனர்.
இருந்த வேலைகளை முடித்து வைத்துவிட்டு, மதிய நேரம்தான் தர்மா அங்குச் சென்றான்.
அவன் வந்ததும் எல்லோரும் சேர்ந்து உணவருந்தினர். கீர்த்தி அவனைப் பார்ப்பதையும் தவிர்த்தாள். இவன் கண்டிப்பாக ஒத்துக்கொள்ள மாட்டான் என நினைத்து அவள் சோர்வாக இருக்க…. 

“விடு கீர்த்திப் பார்த்துக்கலாம். உன்னை யாரும் அப்படிப் போர்ஸ் பண்ணி எல்லாம் கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்க முடியாது. கவலைப்படாதே நாங்க இருக்கோம்.” எனச் சுமந்த் சொல்ல, 

“நான்தான் முடியாதுன்னு சொல்லிட்டு வந்துட்டேனே. நான் அதுக்காகக் கவலையா இல்லை.” என அவள் சொன்னதும், அவள் சொன்ன விதத்தில், “பிறகு வேற என்ன கவலை உனக்கு?” என்பது போலத்தான் பார்த்தனர். 

“விடுங்க என்னால சொல்ல முடியாது.” என்றாள். 

அவள் மனதில் என்ன இருக்கிறது என யாருக்கும் யூகிக்க முடியவில்லை. தர்மா அவளிடம் பேச முயன்றாலும், கீர்த்தி அவனிடமிருந்து விலகி செல்ல… தர்மாவால் தன் மனதில் இருந்ததைச் சொல்லவும் முடியவில்லை. 

இருவருமே அங்கிருந்து கனத்த மனதுடனே கிளம்பி சென்றனர். 

இரவு அவரவர் அறையில் இருவருமே தவித்தனர். மனதில் இருப்பதைச் சொல்லிவிடலாம். பிறகு அவள் முடிவு எனத் தர்மா நினைத்திருக்க… கேட்காம இருக்கிறதுக்குக் கேட்டுட்டு திட்டு வாங்கிக்கலாம் என்ற முடிவுக்குக் கீர்த்தியும் வந்திருந்தாள். 

தர்மா அழைப்பதற்குள் கீர்த்தியே அவனை அழைக்க…. அவனும் உடனே எடுத்தான். 

“சொல்லு கீர்த்தி.” 

“என்ன பண்றீங்க?” 

“இப்பத்தான் சாப்பிட்டு மேலே வந்தேன். நீ சாப்பிட்டியா?” 

“ம்ம்…” 

“என்ன ஆச்சு வீட்ல ஒன்னும் பிரச்சனை இல்லையே?” 

“நான் யாரையும் பார்க்கலை. அதை விடுங்க. உங்களை ஒன்னு கேட்கட்டா… நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை?” 

“நான் என்ன உன்னை மாதிரியா? உனக்குத்தான் மினிஸ்டர் வீட்டு பையன் எல்லாம் வரிசையில நிற்கிறாங்க.” எனத் தர்மா கேலி பேச… 

“எனக்கு அவங்க எல்லாம் வேண்டாம். நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?” எனக் கேட்டே இருந்தாள். 

தர்மாவால் தான் கேட்டதை இன்னும் நம்பவே முடியவில்லை. ஆனாலும் அவள் சொன்னதும், உடனே அவன் தனக்கும் விருப்பம் என்று சொல்லிவிடவில்லை. 

“என்ன திடிர்ன்னு? இத்தனை நாள் ஒன்னும் சொன்னது இல்லையே. இன்னைக்கு மட்டும் ஏன் இப்படிக் கேட்கிற? உங்க வீட்ல ஏற்பாடு செஞ்ச கல்யாணத்துல இருந்து தப்பிக்க, என்னைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறியா?” 

தர்மா இப்படியெல்லாம் கேட்பதில் கீர்த்திக்கு ஆச்சர்யமே இல்லை. அவன் உடனே ஒத்துக்கொள்ள மாட்டான். இப்படியெல்லாம் கேள்வி வரும் என அவள் எதிர்பார்த்ததுதான். அவளுக்குத்தான் தர்மாவை தெரியுமே… எதற்குமே ஒரு தெளிவான விளக்கம் எதிர்பார்ப்பான். 

“இத்தனை நாளா நான் கல்யாணத்தைப் பத்தி யோசிச்சதே இல்லை. ஆனா இப்போ எந்த மாதிரி கணவன் வேணும்னு யோசிக்கும் போது, நீங்கதான் எனக்கு நினைவுக்கு வர்றீங்க. ஒருவேளை உங்களை எனக்கு முன்னாடி இருந்தே பிடிக்குமோ என்னவோ…” 

“என்னைப் பத்தி தெரியும் உனக்கு. நான் ஜாலியான ஆள் இல்லை. வசதி இருந்தாலும் எளிமையான வாழ்க்கைதான் என்னுடையது. வயசு வித்தியாசமும் நமக்கு அதிகம். நல்லா யோசிச்சு சொல்லு கீர்த்தி.” 

“எனக்கு இதெல்லாம் தெரியும் தர்மா. இதெல்லாம்தான் எனக்கு உங்ககிட்ட பிடிக்கும்.” 

அவளின் பதிலில் மகிழ்ந்தவன், “அப்படியா சரி. எப்ப உங்க வீட்ல நம்ம கல்யாணத்தைப் பத்தி பேசலாம்.” என்றதும், கீர்த்திக்கு நம்பவே முடியவில்லை.

“நிஜமாதான் சொல்றீங்களா?” என்றால் ஆச்சர்யம் குறையாமல். 


“ஏன் உனக்கு இவ்வளவு சந்தேகம்?” என்றான் புன்னகையுடன். 

“நீங்க ஒத்துக்கவே மாட்டீங்கன்னு நினைச்சேன்.” 

“எனக்கு உன்னை முன்னாடியே பிடிக்கும் கீர்த்தி.” 

“கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கா?” 

“ஆமாம்.” 

“அப்ப ஏன் என்கிட்டே சொல்லலை?” என்றதும், தர்மா அவன் யோசித்த விஷயங்களைச் சொல்ல… 

“நான் பயந்திட்டு உங்ககிட்ட கேட்காம இருந்திருந்தா… நான் உங்களை மிஸ் பண்ணியிருப்பேன் தானே…” அதைச் சொல்லும் போதே அவளின் பயத்தைத் தர்மா உணர்ந்தான். 

“ஹே அப்படியெல்லாம் விட்டிருக்க மாட்டேன். இன்னைக்கு நானே பேசணும்னு தான் இருந்தேன்.” 

“உண்மையாத்தான் சொல்றீங்களா?” 

“நான் பொய் சொல்ல மாட்டேன் கீர்த்தி.” 

அதன் பிறகுதான் கீர்த்திக்கு மனம் நிம்மதியானது. அதன்பிறகும் இருவரும் வெகு நேரம் பேசிவிட்டு மகிழ்ச்சியான மனநிலையிலேயே உறங்க சென்றனர். 

நான் உன்னைக் காதலிக்கிறேன் என்றோ.. நீயில்லாமல் நான் இல்லை போன்ற காதல் வசனங்களோ அங்கே இல்லை. பக்குவமானவர்களின் காதல் கூடப் பக்குவபட்டுதான் இருக்கும். 

இருவருக்குமே வாழ்க்கை சட்டென்று வண்ணமையமாக மாறிவிட்டது.

Advertisement