Advertisement

வெளிநாட்டில் வேலை, படிப்பு என இருக்க.. தர்மாவிற்குத் திருமணம் என்றதும், அவனை விடவும் மனமில்லை. அவனைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்ற பிறகும், அவளது விருப்பத்திற்கு மதிப்பு இருக்கவில்லை. 

ஏனோ அவளுக்குப் பிடித்த மாதிரியும் இன்னும் வேறு யாரையும் அவள் சந்திக்கவில்லை. உண்மையில் இனியா யாரோடும் ஓட்டும் ரகமும் இல்லை. அவளுக்கு நெருங்கிய தோழிகள் என யாருமே இல்லை. அவள் இருக்கும் இடத்தில் அந்த நேரத்திற்குப் பொழுது போவதற்காக வேண்டுமானால் பேசுவாளே தவிர…. அவளிடம் உண்மையான நட்பு இருக்காது. எல்லோரிடமும் மேம்போக்காகத் தான் பழகுவாள். இந்த மாதிரி குணாதிசயங்கள் கொண்டவர்கள் யாரையும் அப்படி எளிதாகத் திருமணம் செய்து கொண்டு விடமாட்டார்கள். அதே அலைவரிசையில் அவளைப் போல யாராவது கிடைத்தால் தான் உண்டு. எதையும் எளிதாக எடுத்துக் கொள்பவர்கள் மற்றும் எதையும் எதிர்ப்பார்க்காதவர்களாக இருக்க வேண்டும். அதோடு அவளின் சுதந்திரத்தில் தலையிடாதவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படியொரு வரன் வர வேண்டுமே? 

அவள் பெற்றோருக்கும் அது புரிந்திருந்தது. அதனால்தான் சின்ன மகளுக்காவது காலாகாலத்தில் திருமணம் செய்வோம் என நினைத்து. அதற்குரிய வேலையில் இறங்கினர். 

இனியாவிற்குத் தர்மா மீது காதல் எல்லாம் இல்லை. தான் மட்டுமே சிறந்தவள், உயர்ந்தவள் என்ற எண்ணம். தன்னைத் திருமணம் செய்யாதது தர்மாவை பாதிக்கவேயில்லை. அவன் கீர்த்தியை விரும்பி மணந்து, இப்போது நன்றாக வாழ்வது அவளுடைய ஈகோவை தூண்டியிருக்க… ஏற்கனவே தர்மாவுக்கும் விஷாலுக்கும் ஆகாது என்று தெரியும். அவனை வைத்து தர்மாவை கொஞ்சமாவாது பழி தீர்க்க நினைத்தாள். 

“நீங்க அப்படியெல்லாம் தனியா பிசினஸ் செஞ்சிட மாட்டீங்களாம். உங்க அண்ணன் சொல்றார்.” எனத் தர்மா சொன்னதை மாற்றி விஷாலிடமும் சொன்னாள். 

“இவரை விட்டு எல்லாம் நாம தனியா முன்னேரிடக் கூடாது. இவருக்குதான் எல்லாம் தெரியும். இவரை நம்பித்தான் நாம இருக்கோம்னு எண்ணம்.” எனச் சூரியா வேறு ஏற்றிவிட…. வசீகரன் ரித்விகாவுக்கு எல்லாம் சொந்த புத்தியே கிடையாது. இனியா மற்றும் சூரியா சொன்னதை அப்படியே இருவரும் மண்டையில் ஏற்றி, அதற்குத் தலையும் ஆட்டினர். விஷால் தீவிரமான யோசனையில் இருந்தான். 

“எல்லாமே இவரால்தான் நடக்குது. இவருக்குதான் எல்லாமே தெரியும்னு நினைக்கிறார் பாரு, முதல்ல நாம அதை உடைக்கணும்.” எனச் சூரியா சொன்னதற்கு, “அது நீங்களும் எங்களோட பிஸ்னஸ்ல சேர்ந்தா தான் முடியும்.” என இனியா தான் திட்டமிட்டிருந்ததைச் செயல்படுத்தினாள். 

அபிக்கு பிறந்தாநாள் அன்று. காலையில் கோவிலுக்குச் சென்று வந்திருந்தனர். அதோடு ஒரு ஆசிரமத்திற்கும் அபி பெயரில் மதிய உணவும் வழங்க ஏற்பாடும் செய்திருந்தனர். அதெல்லாம் ஒரு பக்கம் நடந்தாலும், தர்மா மதியமே அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியிருந்தான். 

மதிய உணவை உண்டுவிட்டு, தர்மாவும் கீர்த்தியும் சேர்ந்து வீட்டு ஹாலை அலங்கரித்தனர். அபியும் அவர்களுக்குப் பலூன் ஊதிக் கொடுப்பது என உதவிக்கொண்டு இருந்தாள். 

மகள் வெட்ட வேண்டிய கேக்கையும் கீர்த்தி அவளே தயார் செய்திருந்தாள். கணேசன் வந்திருக்க… அவரும் ஜமுனாவும் இரவு உணவுக்கு வீட்டிலேயே ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். 

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு எல்லாம் தயாராக இருக்க… அபிக்குக் கீர்த்திப் புது உடை அணிவித்து, ஒப்பனை செய்து விட…. அந்த வீட்டின் இளவரசி குட்டி தேவதையாக சுற்றித் திரிந்தாள். 

அவர்கள் குடும்பத்திற்கு மற்றும் அபியின் நெருங்கிய நண்பர்கள் வீட்டினருக்கு மட்டுமே அழைப்பு.

மாலையில் வீட்டில் விளக்கேற்றிய பின்னர், அபி கேக்கை வெட்ட, “அம்மாவுக்குக் கொடு.” எனத் தர்மா சொல்ல… அபி முதலில் கீர்த்திக்கு ஊட்டி விட… அடுத்து அம்மா மகள் இருவருமாகத் தர்மாவிற்குக் கொடுத்தனர். பிறகு ஜமுனா, ரங்கநாதன் மற்றும் நாயகிக்கு அபியே சென்று கேக்கை ஊட்டிவிட்டாள்.

சுனிதா, சுபா, ஸ்ருதி, ரித்விகா மற்றும் அவளின் நண்பர்களுக்கு எனக் கீர்த்திக் கேக்கை வைத்துக் கொடுக்க, அபியே சென்று அவர்களிடம் கொடுத்து எல்லோரின் வாழ்த்துக்களையும் பெற்றாள். பிறந்தநாள் விழாவுக்கு வீட்டுப் பெண்கள் மட்டுமே வந்து கலந்து கொண்டனர்.
இரவு உணவை பஃப்பே முறையில் அவர்கள் வீட்டு டைனிங் ஹாலில் வைத்திருக்க அவரவருக்குத் தேவையானது எடுத்து உண்டனர். 


“இந்த மாதிரி வீட்ல நாமே எல்லாம் செஞ்சு பிறந்தநாள் கொண்டாடுறது இப்ப ரொம்ப அரிதாகிட்டு வருது. இப்போ எல்லாம் பிறந்தநாட்கள் மெக் டொனல்ட்ஸ் இல்லை ஹோட்டல்ல தான் கொண்டாடுறாங்க.” என வந்திருந்த விருந்தினர் ஒருவர் சொல்ல…

“நம்ம பசங்களுக்கு நாமே செய்யுறது தான் சந்தோஷமே.” என்றான் தர்மா. 


“கரெக்டா சொல்றீங்க சார். ஆனா அது இப்போ இருக்கப் பசங்களுக்கு எங்கப் புரியுது. என் ப்ரண்டு பிசா ஹட்ல கொண்டாடினான். நானும் அங்கதான் கொண்டாடுவேன்னு சொல்றாங்க. என்ன செய்யுறது?” என்றார். இப்போது பிறந்த நாள் விழாக்கள் நமக்காகக் கொண்டாடுவது போய் மற்றவர்களுக்காகத்தான் கொண்டாடடி கொண்டிருக்கிறோம். 

விருந்தினர்கள் கிளம்பும் சமயம், அபி கையால் அவர்களுக்குத் தொட்டி செடியை அன்பளிப்பாகக் கொடுக்க வைத்தனர். 

சுனிதா சுபா கிளம்பும் போது அவர்கள் வீட்டினருக்கு உணவுவெடுத்து சென்றனர். ஸ்ருதி மட்டும் இருந்தாள். 

எல்லோரும் கிளம்பியதும், “நீ உட்காரு.” எனக் கீர்த்தியிடம் சொன்ன தர்மா, அவன் ஜமுனாவுக்கு உதவியாக எல்லாம் எடுத்து வைக்க… ஸ்ருதியும் உதவினாள். 

“அப்பா, எனக்குத் தம்பியும் வேணும்னு ஆசையா இருக்கு, தங்கச்சியும் வேணும்னு ஆசையா இருக்கு.” என அபி சொல்ல… தர்மா மகளைப் பார்த்துச் சிரித்தான். இன்னும் இரட்டை குழந்தைகள் என அபிக்குத் தெரியாது. அவளுக்கு ஆச்சர்யமாக இருக்கட்டும் என அவளிடமும் சொல்லவில்லை. 

மகள் ஆச்சர்யப்பட்டுப் பார்க்கும் அந்த நொடிக்காகவே தர்மா காத்திருந்தான். இப்போது அபியே இப்படிக் கேட்க, “தம்பியா இருந்தா என்ன? தங்கச்சியா இருந்தா என்ன? எதுனாலும் ஓகே டா… உனக்கு இன்னும் மூன்னு சித்தப்பா இருக்காங்க. அவங்கள்ள யாருக்கு குழந்தை பிறந்தாலும், அவங்களும் உனக்குத் தம்பி தங்கச்சிதான். அதனால எப்படியோ உனக்கு ரெண்டும் உண்டு.” என்றதும், அபிக்கு ஒரே சந்தோஷம். 

அபி சென்று ஸ்ருதியிடம், “உங்களுக்கு எப்ப பாப்பா வரும்?” எனக் கேட்க, அப்படியெல்லாம் கேட்க கூடாது எனக் கீர்த்திக் கண்டிக்க… 

“விடுங்க கீர்த்தி. அவ ஆசையில் தானே கேட்கிறா…. அவ மட்டுமா கேட்கிறா. எல்லோரும் தான் கேட்கிறாங்க.” எனச் சொல்லும் போதே ஸ்ருதி எதோ மனத்தாங்களில் இருக்கிறாள் எனப் புரிந்து, கீர்த்தி அவளைத் தனியே அழைத்துச் சென்று பேச…. ஸ்ருதி சூரியா சொன்னதைச் சொல்ல… அவள் கிளம்பியதும் கீர்த்தி அதைத் தர்மாவிடம் பகிர்ந்து கொண்டாள்.  

“அவனுக்கு என்ன சுவிட்சர்லாந்து போகணும் அவ்வளவுதானே… அதை அடுத்த வாரமே போயிட்டு வர சொல்லு… இதுக்காக இன்னும் நாலு மாசம் காத்திருக்கணுமா என்ன?” என்றான் எளிதாக. 

“நீங்க எல்லாம் சொல்வீங்க. அவர் கேட்கணுமே…” எனக் கீர்த்திச் சொல்ல… அது தானே என்றான் தர்மா. 

அபி இன்னும் உடை மாற்றாமல் விஷாலுக்காகக் காத்திருந்தாள். விஷால் அபியின் பிறந்தநாளுக்கு எப்போதும் வந்துவிடுவான். அபி வாசலை வாசலைப் பார்க்க… தர்மாவும் தான். 

விஷால் என்ன நினைப்பில் இருக்கிறான் எனத் தர்மாவுக்குப் புரியவில்லை. அவன் இப்போது எல்லாம் வார இறுதியிலும் வீட்டுக்கு வருவதில்லை. அவன் இன்று வரவில்லை என்றால் அபி மிகவும் ஏமாந்து விடுவாள். 

அபி வைத்திருக்கும் விளையாட்டுச் சாமான்களில் முக்கால்வாசி விஷால் வாங்கிக் கொடுத்ததுதான். தர்மா அதற்கெல்லாம் செலவு செய்ய மாட்டான். விஷாலையும் வாங்கிக் கொடுக்காதே என்றுதான் சொல்வான். விஷால் என்றைக்கு இவன் பேச்சைக் கேட்டிருக்கிறான். 

தர்மா கீர்த்தியோடு தோட்டத்தில் நடக்கும் போது, “நான் எதாவது தப்புச் செய்றேனா கீர்த்தி. ஏன் இவனுங்க ஒட்டாம விலகி போறாங்க. நான் விஷாலுக்கு நல்லதுதானே சொல்றேன். அவனுக்கு ஏன் அது புரிய மாட்டேங்குது.” என வருத்தப்பட… 

“உங்க அனுபவத்தில, நீங்கபட்ட கஷ்டம் அவங்களும் படக் கூடாதுன்னு சொல்றீங்க. ஆனா உங்களுக்குதான் எல்லாமும் தெரியிர மாதிரி நீங்க பேசுறதா அவங்க நினைக்கிறாங்க.” 

“எப்படியும் போகட்டும்னு விடச் சொல்றியா?” 

“இதுவரை நீங்க இப்படி இருங்க, அப்படியிருங்கன்னு நான் சொல்லி இருக்கேனா… இனியும் சொல்ல மாட்டேன். ஆனா அவங்களைக் கண்டிக்கப் பெத்தவங்க இருக்காங்க அதையும் மறக்காதீங்க.” 

“கூடவே இருந்திட்டு எப்படியும் போங்கன்னு விட முடியலை.” என்ற கணவனின் ஆதங்கம் கீர்த்திக்குப் புரியாமல் இல்லை. ஆனால் சிலருக்குப் பட்டால்தான் புரியும். தர்மாவுக்கும் சேர்த்து தான்.

Advertisement