Advertisement

சாரல் மழையே 

அத்தியாயம் 13

வழக்கமாக ஞாயிற்றுகிழமை காலை எப்போதும் போல வீட்டினர் கூடி இருக்கும் நேரத்தில், கீர்த்தி உண்டாகி இருப்பதை நாயகி சொல்லிவிட்டார். ஆனால் இரட்டை குழந்தைகள் எனச் சொல்லவில்லை. அது பிறக்கும் நேரம் தெரியட்டும் என்றுவிட்டார். இதற்கே சுனிதா பொறுமுவார் என்று தெரியும்.

அதே போலத் தங்கள் வீட்டிற்கு வந்ததும், “ஒன்னுக்கு ரெண்டா அங்க குழந்தைகள் வந்திடுச்சு. இங்கதான் இன்னும் ஒன்னுத்துக்கே வழியில்லை.” என அவர் புலம்பலை தொடங்க…

“அம்மா, நாங்கதான் இப்ப குழந்தை வேண்டாம்னு இருக்கோம்னு உங்களுக்குத் தெரியும் தானே….” எனச் சூரியா சொல்ல…

“அதுக்காக இன்னும் எவ்வளவு நாள் டா… கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆகப் போகுது. இன்னும் உங்களுக்கு ஊர் சுத்தி முடியலையா? ஒரு குழந்தையைப் பெத்துட்டு சுத்துறதுக்கு என்ன?”

“உங்களுக்காக எல்லாம் எங்களால அவசரமா குழந்தை பெத்துக்க முடியாது மா… எங்க ரெண்டாவது வருஷம் கல்யாண நாளைக்குச் சுவிட்சர்லாந்து போயிட்டு வந்து பிறகு பார்த்துக்கலாம்.”

“நீங்க நல்லா ஊர் சுத்துங்க. கேட்கிறவங்களுக்குத் தான் என்னால பதில் சொல்ல முடியலை.”

சூரியா குழந்தை என்று வந்துவிட்டால்… பொறுப்பாக இருக்க வேண்டும். இப்படி ஜாலியாக ஊர் சுத்த முடியாது என்ற எண்ணத்தில், குழந்தை பிறப்பை தள்ளிப் போட்டுக் கொண்டே வர… இத்தனை நாள் ஸ்ருதிக்கும் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் இப்போது குழந்தை பெற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது.

அவர்கள் அறையில் இருக்கும்போது அவளும் அதைப் பற்றிப் பேச்சை எடுக்க… “இப்பத்தான் எங்க அம்மா விட்டாங்க. அடுத்து நீ ஆரம்பிக்காத. கொஞ்ச நாள் போகட்டும்.” என்றுவிட்டான்.

அவனது விருப்பம் தான். மனைவியின் விருப்பம் என்ன என்று தெரிந்துகொள்ளக் கூடப் பொறுமை இல்லை.

தர்மா கீர்த்திக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் பற்றிச் சொல்லித்தான் வைத்திருந்தான். ஆனால் அதை ஜமுனா பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அன்று தர்மா அலுவலகத்தில் இருந்து சீக்கிரமே வீடு திரும்பி இருக்க… அவன் வரும்போது, கீர்த்தி உண்டு கொண்டிருந்தாள். பிள்ளை உண்டாகி இருக்கும் மருமகளுக்கு அதுவும் இரட்டை பிள்ளைகள் என ஜமுனா அதிகக் கவனம் எடுத்து ருசியாகச் சமைத்து இருந்தார்.

“அம்மா, நல்லா ருசியா சமைச்சு போட்டு, அவ வெயிட் ஏத்திடாதீங்க.” என்றவன், “நைட் சாதம் சாப்பிட்டா நிறையச் சாப்பிடுவா.. அதனால இனிமே நீ டிபன் சாப்பிடு.” என்றான் மனைவியிடமும்.

“டிபன் சாப்பிட்டா அவளுக்குப் பத்த மாட்டேங்குது டா….” என ஜமுனா சொன்னதற்கு,

“நீங்க அவ வெயிட், குழந்தைங்க வெயிட் எல்லாம் ஏத்தி, அவளுக்கு ஆபரேஷன் தான் ஆகப்போகுது பாருங்க. நீங்க அதுக்குதான் வழி பண்றீங்க.” என்றான் கோபமாக. அதைக் கேட்டு ஜமுனாவின் முகம் மாறியது.

அறைக்கு வந்தும் கீர்த்தி அவனிடம் பேசாமல் அமைதியாக இருக்க, மனைவியின் முகத்தை ஆராய்ந்த தர்மா, “கோபமா கீர்த்தி. உன் நல்லதுக்குதான் சொல்றேன்.” என்றதும்,

“நீங்க என்னை என்ன வேணா சொல்லுங்க. ஏன் அத்தையைச் சொல்றீங்க? அவங்க முகமே மாறிடுச்சு. நீங்க பேசினது எனக்குப் பிடிக்கலை தர்மா.” என்றால் நேரடியாக.

“அவங்க நல்லா வக்கனையா செஞ்சு கொடுக்கிறதுனாலதான நீ சாப்பிடுற.”

“நான் சாப்பிடுறேன். அதனால்தான் அவங்க செய்யுறாங்க. நீங்க தப்பு சொன்னா என்னைத் தான் சொல்லணும்.”

“சரி நான் செஞ்சது தப்புதான்.” என்றவனுக்கும், உறுத்தலாக இருக்க… தனது அம்மாவின் அறைக்குச் சென்றான்.

அபி உறங்கி இருக்க… ஜமுனா அடுக்களையில் இருந்தார். அவரிடம் சென்றவன், “அம்மா சாரி. நான் உங்களை அப்படிப் பேசி இருக்கக் கூடாது.” என்றதும்,

“நீ என்னைப் பேசினது எனக்கு வருத்தமே இல்லை. ஆனா சாப்பிடுற பெண்ணைச் சாப்பிடாதன்னு சொல்ற பாரு அதுதான் எனக்குக் கஷ்டமா இருக்கு.”

“இதே இந்த நேரத்தில அவங்க அம்மா இருந்தா, மகளை எப்படிக் கவனிப்பாங்க? அவளுக்கு அந்த மாதிரி தோணிடக்கூடாது இல்லை. பாவம் அவளே அவ அம்மா வீட்டுக்கு கூடப் போக முடியாம இருக்கா.” என்றார்.

“கரெக்ட் தான் மா நீங்க சொல்றது. நைட் நேரம்தான் அவ்வளவு சாப்பிட வேண்டாம்னு சொல்றேன். நீங்க பகல்ல உங்க மருமகளை நல்லா கவனிங்க. யாரு வேண்டாம்னு சொன்னா. சாயங்காலம் கூட எதாவது செஞ்சு கொடுங்க. ஆனா நைட் வேண்டாம் . நைட் டிபனே கொடுங்க. ரொம்ப வெயிட் போட்டுட்டா நாளைக்கு அவதான் கஷ்டப்படுவா.”

“சரி டா…. நீ சொல்ற மாதிரி பண்றேன். அவளை ஒன்னும் சொல்லாத.”
தர்மா மீண்டும் அறைக்கு வந்தபோது, கீர்த்திப் பால்கனியில் நடந்து கொண்டிருந்தாள்.

“இப்பவாவது அவங்ககிட்ட ஒழுங்கா பேசினீங்களா?” எனக் கீர்த்திக் கேட்க,

“நீ அவங்களுக்காகப் பார்க்கிற அவங்க உனக்காகப் பார்க்கிறாங்க.” என்றவன், ஜமுனா சொன்னதைச் சொன்னதும் கீர்த்திச் சிரித்து விட்டாள்.

“யாரு எங்க அம்மாவா? முதல்ல அதுக்கு அவங்க வீட்ல இருக்கணும்.” என்றவள், “வேலைக்கு வேணா இன்னொரு ஆள் போட்டிருப்பாங்க. அவங்களுக்கு இதெல்லாம் செய்யத் தெரியாது.” என்றால் தனது தாயை பற்றி அறிந்தவளாக.

உணவிற்கு ஒரு அட்டவணைப் போட்டு கீர்த்தி மற்றும் ஜமுனா இருவரிடமும் தர்மா கொடுத்து விட்டான். அதோடு மாலை நேரம் நடைபயிற்சி. மற்றும் இரவு உணவுக்குப் பிறகு அவனே அவளை நடக்க வெளியே அழைத்துச் சென்றான். கவனமாகப் பார்த்துக்கொள்ளக் கீர்த்தியும் குழந்தைகளும் சரியான எடையில் இருந்தனர்.

தாத்தாவிடம் சவால் விட்டு இரண்டு மாதங்கள் கடந்திருக்க, ஆனால் என்ன செய்வதென்று விஷால் இன்னும் முடிவெடுத்திருக்கவில்லை. அப்போது இனியா, தான் தொழில் தொடங்கப் போவதாகச் சொன்னவள், விஷாலும் தன்னோடு சேர்ந்து கொள்ளலாம் எனச் சொல்ல, விஷாலுக்கும் அது சரியாகப்பட்டது.

யாருக்கும் கீழே தன்னால் இருக்க முடியாது. தனியாகத் தொழில் செய்வதே உத்தமம் என நினைத்தான்.

நம்மகிட்ட இருக்கத் தொழிலை பார்க்கவே ஆள் இல்லை. இதுல இவன் புதுசா ஒன்னு தொடங்கப் போறானா என ரங்கநாதன் தர்மாவிடம் திட்டவே செய்தார்.

“எதுவும் செய்யாம இருக்கிறதுக்கு. எதோ செஞ்சு முன்னேறினா நல்லதுதான்.” என்றான் தர்மா. 


விஷால் தொழில் தொடக்குவது அவன் தந்தைக்கே இஷ்டம் இல்லை. பிறகு பணத்திற்கு அவரிடம் தானே சென்றான். தனியாகத் தொழில் தொடங்க பொதுவில் இருந்து கொடுப்பார்களா என்ன? அவர் தன்னுடைய பணத்தைத்தான் கொடுக்க வேண்டும். விஷாலை நம்பி கொடுக்க அவர் தயாராக இல்லை. 

“இருக்கப் பிஸ்னஸ் பாரேன் டா… எனக்கும் முடியலை. நீ பார்த்தா நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பேன்.” எனச் சொல்லிப் பார்த்தார். ஆனால் விஷால் பணம் வேண்டும் என்று நின்றான். 

விஷால் இதை இனியாவிடம் சொல்ல… மொத்த பணமும் நாமே போடுறது கஷ்டம்தான். லோன் வாங்கலாம் ஆனாலும் பத்தாது வேற என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்.” என்றாள். ஆனால் அவள் ஏற்கனவே யோசித்து வைத்தது போலத்தான் இருந்தது.

இரவு ஆபீஸ்ல் இருந்து வந்த தர்மா காரை அவர்களின் கேட்டிற்குள் விட… அப்போதுதான் இனியாவும் காரை நிறுத்திவிட்டு இறங்கிக் கொண்டு இருந்தாள்.

தர்மாவைப் பார்த்ததும் அவள் காரில் சாய்ந்து கொண்டு திமிராகப் பார்த்து சிரித்தாள். தர்மாவுக்கும் அவளோடு பேச வேண்டியது இருந்தது. அதனால் காரை நிறுத்திவிட்டு இறங்கினான்.

“என்ன தர்மா? புதுப் பிஸ்னஸ் தொடங்கப் போறோம்னு சொன்னதும் பயம் வந்திடுச்சா? எல்லாமே உங்களுக்குக் கீழே இருக்குன்னு தானே இத்தனை நாள் நினைச்சிட்டு இருந்தீங்க. ஆனா இனிமே அப்படி இல்லை.” என்றாள்.

“நீ என் மேல இருக்க வெறுப்புல, என்னவோ பண்ணிட்டு இருக்க. ஆனா ஒன்னு தெரிஞ்சிக்கோ… என்ன சண்டை போட்டாலும், விஷால் எனக்கு எதிரா போக மாட்டான்.” என்றான் தர்மாவும் நம்பிக்கையாக.

“பாவம் ஏமாந்து போகப் போறீங்க.”

“யாருன்னு பார்க்கலாம்.” என்றவன் காரில் ஏறி சென்றுவிட…இனியா முகம் மாறிவிட்டது.

இனியா சின்ன வயதில் இருந்தே அத்தை வீட்டுக்கு வருவாள். ஆனால் தர்மாவை அதிகம் பார்த்தது இல்லை. அவன் இன்ஜினியரிங் சேர்ந்திருந்த சமயம் ஒருமுறை பார்த்திருக்கிறாள். 


இனியா படிப்பில் கெட்டி… முயன்று படித்து ஹைதராபாத் ஐ. ஐ. டி யில் இன்ஜினியரிங் சேர்ந்து விட்டாள். படிப்பு படிப்பென்றே நாட்கள் சென்றது. எப்போதோ ஒருமுறைதான் அவள் வீட்டிற்கே வருவாள். அதனால் மற்றவர் வீட்டு விஷயங்கள் எதுவும் தெரியாது.

கடைசி வருடம் படிக்கும் போது கேம்பஸ் இன்டர்வியூவில் ஒரு பன்னாட்டுக் கம்பனியில் வேலையும் கிடைத்தது. அங்கேயே ஹைதராபாத்தில் வேலைப் பார்த்தாள். 


தர்மாவுக்கு வரன் பார்க்க…. சுனிதாதான் தேவையில்லாமல் இனியாவைப் பார்க்கலாம் என்றார். அதை அவர் அண்ணன் வீட்டிலும் சொல்ல…. இனியா அத்தை வீட்டுக்கு வருவது போலத் தர்மாவைப் பார்க்கக் வந்திருந்தாள். 

அவளுக்கு அவனைப் பார்த்ததும் பிடித்தும் இருந்தது. அவன் இன்ஜினியரிங் முடித்துவிட்டே அவர்கள் தொழிலைப் பார்ப்பதாக நினைத்திருந்தாள். அதனால் திருமணதிற்குச் சரியென்றாள். 

தர்மாவுக்கு வீட்டினர் சொன்னதுதான். அப்படி உடனே எல்லாம் திருமணதிற்கு சரியென்று சொல்லியிருக்க மாட்டான். முதலில் அவளுக்கும் தனக்கும் ஒத்து வருமா என்றெல்லாம் தெரிந்துகொள்ளாமல், அவன் முடிவு சொல்வதாக இல்லை. ஆனால் அதற்குள் தர்மா படிப்பை முடிக்கவில்லை என்று தெரிய… இனியா வீட்டில் ஒரே ரகளை. 

படிக்காத ஒருவரை நான் திருமணம் செய்ய முடியாது எனச் சொல்ல… நல்லது என இருப்பக்கமும் விலகிக் கொண்டனர். ஆனால் இனியாவிற்கு வேறு யாரையும் திருமணம் செய்ய அப்போது எண்ணம் இல்லை. அதனால் வெளிநாட்டிற்குப் படிக்கச் சென்றாள். 

Advertisement