சாரல் மழையே
அத்தியாயம் 11
புதுமணத் தம்பதிகள் வீடு வர… அருணா அவர்களுக்கு ஆரத்தி எடுத்தாள். கீர்த்திப் பூஜை அறையில் விளக்கேற்றி வந்ததும், அருணா அவர்களுக்குப் பால் பழம் கொடுக்க…. உண்டு முடித்தும், தர்மா கீர்த்தியுடன் சென்று அவனது தாத்தா பாட்டி, மற்றும் தன் அம்மாவிடம் ஆசிவாதம் வாங்கினான். பிறகு கீர்த்தியின் பாட்டியிடமும் வாங்கினர்.
கீர்த்தியை உள்ளே அழைத்துச் சென்றுவிட… தர்மா வாசனுடன் ஹாலில் உட்கார்ந்துதான் பேசிக்கொண்டிருந்தான். மதிய விருந்து தயார் ஆனதும், மீண்டும் எல்லோரும் மண்டபத்திற்குச் சென்றே உணவருந்தினர். வீட்டினர் மட்டும் அல்லாது உள்ளுரில் இருக்கும் சொந்தங்களுக்கும் மதியம் அங்குதான் உணவு.
மதிய விருந்து முடிந்து, முதலில் கீர்த்தியின் தாய்மாமா வீட்டினர் கிளம்பினர். தர்மாவையும் கீர்த்தியையும் தங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என அழைப்புவிடுத்த பின்னரே விடைபெற்றனர். அடுத்து அருணாவின் புகுந்த வீட்டினரும் கிளம்பினர்.
நண்பர்கள் கிளம்பும் சமயம் தர்மாவும் கீர்த்தியும், அவர்கள் இருந்த வீட்டிற்கு வழியனுப்ப சென்றனர்.
“நீ எப்போ சென்னை வர…” எனச் சுமந்த் கேட்க,
“ரெண்டு மூன்னு நாள் இங்க இருந்திட்டுதான் கிளம்புவேன்.” என்றான் தர்மா.
“நீ இங்க இருக்கிறதே நல்லது. அங்க வந்தா வேலை வேலைன்னே இருப்ப.” என்றான் தீபக்.
“அதை நீங்க சொல்றீங்களா…” என நிஷா கணவனை முறைக்க,
“கீர்த்தி, நீயும் இனி அவங்க கூட்டணி தானே…” என ராஜேஷ் கேட்க,
“அவங்க எல்லாம் தெரியாம வந்து மாட்டினாங்க. ஆனா கீர்த்தி அப்படியில்லை. அதனால நம்ம அளவுக்குத் தர்மாவுக்குச் சேதாரம் இருக்காது.” என விஷ்ணு சொல்ல…
“அப்படியா கீர்த்தி?” என எல்லோரும் கீர்த்தியைப் பார்க்க,
“அதெல்லாம் இப்பவே சொல்ல முடியாது.” என்ற கீர்த்தியின் பதிலில்…. தர்மா ஆச்சர்யமாகப் புருவத்தை உயர்த்தியவன், “மேடம் மாட்டிக்காம பதில் சொல்றாங்களாம்.” என, எல்லோரும் சிரித்தனர்.
அவர்கள் விடைபெற்றுச் சென்றதும், தர்மாவும் கீர்த்தியும் நடந்தே வீடு வந்தனர். வாசலில் வைத்தே “ஒரு வேலை இருக்கு போயிட்டு வந்திடுறேன்.” எனத் தர்மா வெளியே செல்ல… கீர்த்தி மட்டும் உள்ளே சென்றாள்.
திண்ணையில் உட்கார்ந்திருந்த சந்துரு, “இந்தப் பெண் உங்க அண்ணனை கல்யாணம் பண்ணதுக்குச் சந்நியாசம் வாங்கிட்டு போயிருக்கலாம்.” எனக் கிண்டலாகப் பேச…. சூரியவும் வசீகரனும் அதை ஆமோதித்தனர்.
அவர்களைப் பொறுத்தவரை மகிழ்ச்சி என்பது ஆடம்பரமாக செலவழிப்பது, குடித்து விட்டு கொண்டாடுவது, வகைவகையாக உண்பது. அதனால் அவர்களைப் பொறுத்தவரை தர்மா சந்தோஷமாக வாழத் தெரியாதவன். அவனைத் திருமணம் செய்த கீர்த்தி மட்டும் எப்படி மகிழ்ச்சியாக வாழ்ந்து விடுவாள் என்ற எண்ணம்.
அருணா தூரத்தில் இருந்து பார்த்தாலும் கணவன் தன் தம்பியை பற்றித்தான் எதோ பேசி சிரிக்கிறான் என அவளுக்கு புரியாமல் இல்லை. முதல்ல இவரை இங்க இருந்து கிளப்பணும். இல்லைனா தர்மா என்ன பன்றான்னே பார்த்திட்டு இருப்பார் என நினைத்தவள், உள்ளே சென்று சத்துருவின் பையை எடுத்து வந்தாள்.
“நீங்க போற வழியில இவரைச் சேலத்துல விட்டுட்டு போங்க.” என ஒரு பையைச் சந்துருவின் அருகில் வைக்க…
“நாளைக்கு நீயும் என்னோட வா… நாம சேர்ந்தே போகலாம்.” என்றான் சந்துரு.
“ஒன்னும் தேவை இல்லை. என் தம்பி கல்யாணம், நான் அப்படி உடனே எல்லாம் வர முடியாது. நான் இங்க ரெண்டு நாள் இருந்திட்டு, அப்படியே அவங்களோட சென்னைக்குப் போய், அங்க ஒரு வாரம் இருந்திட்டுதான் வருவேன். அத்தை மாமாகிட்ட நான் சொல்லிட்டேன். நீங்க கிளம்புங்க.” என மனைவியே விரட்டும் போது, என்ன செய்வது? சந்துரு வேறு வழியில்லாமல் கிளம்பினான்.
ரவீந்தர் குடும்பமும், உமாநாத் குடும்பமும் வந்தது போலச் சேர்ந்தே கிளம்பினர். அவர்களுடன் சத்துருவும் சென்றான்.
மாலை விமானத்தில் ரங்கநாதனும் நாயகியும் சென்னைக் கிளம்ப, விஷாலும் அவர்களுடன் சென்றான்.
“நாளைக்குக் காலையில தாத்தாவை பார்த்துக்க மணி வந்திடுவார். நான் வர்ற வரை நைட் மட்டும் நீ துணைக்கு இரு.” எனத் தர்மா சொல்ல, விஷால் சரி என்றான்.
செல்லும் வழியில் விஷால், “தாத்தாவுக்கு இன்னைக்கே போனா களைப்பா இருக்காதா… நாளைக்குக் கூட கிளம்பியிருக்கலாம்.” என,Advertisements
“நாங்க இங்க இருந்தா தர்மா எங்களையே தான் பார்த்திட்டு இருப்பான். அதனால்தான் இன்னைக்கே கிளம்பிட்டோம். அவனும் கொஞ்சம் ப்ரீயா இருக்கட்டும்.” என்றார் நாயகி.
Advertisements