சாரல் மழையே
அத்தியாயம் 1
சென்னை ஓ. எம். ஆர் சாலை, நேரம் நள்ளிரவு இரண்டு மணி. ரேஸ் விட்டது போல இரண்டு கார்கள் சீறிப்பாய்ந்து செல்ல, அந்த இரண்டில் ஒன்றில் இருந்த விஷால் அதிகபடியாகக் குடித்திருந்தபடியால்… சற்றே அவனின் கவனம் சிதற, பாதையின் நடுவே இருந்த டிவைடர்ல் மோத இருந்தவன், கடைசி நொடி சுதாரித்துக் காரை திருப்ப, கட்டுபாட்டை இழந்த கார், தெருவோரம் இருந்த மரத்தில் பெரும் சத்தத்துடன் மோதி நின்றது.
நவீன வசதிகளும் இருந்தபடியால் கார் மோதியவுடன் தற்காப்புக்காக இருந்த பலூன் விரிந்துகொள்ள, விஷாலுக்கு அடி எதுவும் இல்லை. அவன் தட்டுத்தடுமாறி காரில் இருந்து இறங்க, அவனுடன் இருந்த அவனது பெண் தோழி அனுஷ்காவும் இறங்கினாள்.
சத்தம் கேட்டதும் அலறியடித்து எழுந்த பாதசாரிகள் இவர்களை நெருங்கும் முன், சுதரித்தவர்கள், இன்னொரு காரில் ஏறி, அங்கிருந்து வேகமாகச் சென்று மறைந்தனர்.
காரில் எரிய விஷாலுக்குக் குப்பென்று வியர்த்து இருக்க, சட்டையின் மேல் பெத்தானை கழட்டி விட்டவன், சட்டையைப் பின்னுக்குத் தள்ளி, காரில் இருந்த பீரை எடுத்து திறந்து அப்படியே வாயில் கவிழ்த்தான்.
சில்லென்று இருந்த பியர் தொண்டையில் இருந்து இறங்கி, அடி வாயிறு வரை குளிரை நிரப்ப, சற்று தளர்வாக இருக்கையில் சாய்ந்து கொண்டான்.
“நல்லவேளை டா நாங்க பின்னாடி வந்தோம். இல்லைனா இந்நேரம் எவனாவது செல் போன்ல ரெகார்ட் பண்ணி இருப்பாங்க.” எனக் காரில் உடனிருந்த ஜகன் சொல்ல,
“நல்லவேளை வண்டியை மரத்து மேல மோதினீங்க, இதே யார் மேலையாவது மோதி இருந்தா, நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு.” என்றான் ஓட்டுனர் இருக்கையில் இருந்த பிரவீன்.
“ஆமாம் டா நினைக்கவே பயமாத்தான் இருக்கு.”
ஜெகனும் ப்ரவீனுமே பேசிக் கொண்டு வர, விஷால் அமைதியாக இருக்க,
“என்ன டா பயந்துட்டியா? உங்க அப்பா கார் டேமேஜ் ஆனதுக்குக் கோபிப்பாரா அதை நினைச்சு பயப்படுறியா?” என மற்றொரு நண்பன் பிரஜின் கேட்க,
“பயமா எனக்கா? நான் ஆளு மேல மோதியிருந்தா கூடப் பயப்பட மாட்டேன். வீட்ல தூங்காம ரோட்ல தூங்கினா அதுக்கு நானா பொறுப்பு…. இட்ஸ் ஜஸ்ட் அன் ஆக்சிடென்ட்.”
“அப்ப ஏன் ஒரு மாதிரி இருக்க கார் டேமேஜ் ஆனதுக்கா?”
“அதுக்கு எங்க அப்பா கவலைப்படுவார்? என்னோட கவலை அது இல்லை. எங்க வீட்ல ஒரு நல்லவன் வல்லவன் இருக்கானே, அவனை நினைச்சு தான். ஓவரா அட்வைஸ் பண்ணியே கொல்வான்.”
ஜகன், “யாரு உன் தர்மா அண்ணனா?”
“அவரு தான் வேற யாரு?”
பிரஜின், “அவர் ஒன்னும் உன் சொந்த அண்ணன் இல்லையே பிறகு அவர் என்ன சொன்னா என்ன?”
“நான் அவரைக் கண்டுக்காம விட்டாலும், அவர் என்னை விட மாட்டாரே… இழுத்து வச்சு பேசும் போது என்ன பண்றது?”
ஜகன், “உன் அப்பா ஒன்னும் சொல்ல மாட்டாரா?”
“பிஸ்னஸ் எல்லாம் ஒண்ணாதானே இருக்கு. அதனால ஒன்னும் சொல்ல மாட்டார். அதுவும் அவருக்கு எங்க டா நேரம் இருக்கு. கம்பெனியில இருந்து வந்தா தண்ணி அடிக்க உட்கார்ந்துடுவார். என் அம்மாதான் எனக்குச் சப்போர்ட் பண்ணுவாங்க.”
“இன்னும் எத்தனை நாள் டா அவருக்குப் பயப்படப் போற?”
“பயம் எல்லாம் இல்லை. இந்தத் தடவை எதாவது மூக்கை நுழைகட்டும் பிறகு இருக்கு அவருக்கு.” விஷாலின் மனதிற்குள் இருந்த வன்மம் அவன் வார்த்தையில் மட்டும் அல்ல… அவன் முகத்திலும் வெளிப்பட… அந்த நேரம் அவனைப் பார்க்க படு பயங்கரமாக இருந்தது.Advertisements
எல்லாம் பத்து நிமிடங்கள் தான். பிறகு சாதாரணமாக நண்பர்களுடன் ஜோக் அடித்துக் கொண்டு வந்தான். இப்போது அவன் முகம் வசீகரமாக இருந்தது.
Advertisements