“இந்த வருடத்திற்காக, அதிக ஹிட் கொடுத்த பின்னணி பாடகி என்கிற விருதினை பெறுகிறார், இளம் பின்னணி பாடகி பைரவி…” என்று நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மேடையில் பைரவியின் பெயரை அறிவிக்க,
முகம் கொள்ள புன்னகையோடு, தான் உடுத்தியிருந்த காஞ்சிவரம் பட்டு புடவையை சரி செய்தபடியும், மற்றொரு கரத்தால் தோள் வரைக்கும் புரண்ட கேசத்தை, அழகாய் ஒதுக்கியவள், தன் ஏழு மாத மேடிட்ட வயிற்ரோடு அன்ன நடையிட்டு மேடையேற, அத்தனை பெருமையாய் பார்த்திருந்தான் சிவா.
அவளருகே தான் அமர்ந்திருந்தான். அவர்களின் இருக்கைக்கு சற்று இரு வரிசைகள் தள்ளி, ரஞ்சிதம், செல்வி மற்றும் பைரவியின் தோழமைகள் எல்லாம் கரகோசமிட்டு அமர்ந்திருக்க, சொக்கன் முடியாது என்று வரவில்லை. ஆனாலும் தொலைகாட்சியில் அவர் பார்த்துக்கொண்டு தான் இருந்தார்.
ஆனந்த கண்ணீர் லேசாய் அவருக்கு.
பைரவியோ, மேடைக்குச் செல்லும் போதும் சரி, மேடை ஏறிய பிறகும் சரி சிவாவை பார்த்து புன்னகை சிந்தாமல் இல்லை.
அவளைப் பார்ப்பதற்கே அத்தனை அழகாய் இருந்தது. முன்னரே அழகி தான். இப்போது நிறைவான வாழ்வும், தாய்மையும் மேலும் அவளது அழகை கூட, இமைக்க மறந்து ரசித்துப் பார்த்து அமர்ந்திருந்தான் சிவா.
அப்போதும் கூட அவனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை ‘இவளை நல்லா பார்த்துக்கணும்…’ என்று.
சொல்லப்போனால் அவனைத்தான் பைரவி நன்றாய் பார்த்துக்கொள்கிறாள். அப்படித்தான் நிலை ஆகிப்போனது. அவளின்றி அவனுக்கு எதுவும் ஆவதில்லை.
சக்தியின்றி சிவமில்லை என்பது போல, இங்கே பைரவி இன்றி சிவா இல்லை.
“வாழ்த்துக்கள் பைரவி மேம்… இது உங்களோட முதல் விருது. என்ன மாதிரி பீல் பண்றீங்க?” என்று தொகுப்பாளர் கேட்கும் போதே, மேடை திரையில் பைரவி சிறு வயதில் அவளின் அம்மாவோடு எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை ஒளிப்பரப்ப, இன்னும் கரகோஷம் கூடியது.
கையினில் விருதினை வாங்கியவள், மீண்டும் சிவாவைப் பார்த்து ஒரு புன்னகை சிந்தியவள் “எல்லாருக்கும் வணக்கம். எனக்கு வாய்ப்பு கொடுத்த மியூசிக் டைரக்டர்ஸ் எல்லாருகுமே மனமார்ந்த நன்றிகள். இதை தவிர வேறென்ன சொல்ல? என்னமாதிரி பீல் பண்றீங்கன்னு கேட்டீங்க? அதை சொல்றதுக்கு நிஜமா வார்த்தைகள் இல்லை. அதையும் மீறி, இதோ, இந்த போட்டோவே சொல்லும்.. நானும் அம்மாவும்…” என்றவள், அந்த புகைப்படத்தை திரும்பிப் பார்த்தவள்,
“நிஜமா இந்த நிமிஷம் ஐ மிஸ் மை மாம்..” என்றிட, சிவாவின் கண்கள் சுருங்கி விரிய,
பைரவியோ மாறாத புன்னகையோடு “இப்படியொரு விருது, வாங்கிட்டு தான் நான் இன்னார் பொண்ணுன்னு சொல்லனும்னு இருந்தேன். பட் எது எது எப்போ நடக்கணுமோ அப்போத்தானே நடக்கும். அம்மா என்னோட இல்லைன்னாலும், கண்டிப்பா அம்மா பார்த்துட்டு தான் இருப்பாங்க.. சந்தோசப் படுவாங்க…” என்றவள்,
“இந்த விருது, என் அம்மா, மறைந்த முன்னாள் பின்னணி பாடகி கிருஷ்ணாவிற்கு அர்ப்பணம்…” என்று சொல்லி முடிக்க, மீண்டும் அங்கே கரகோஷம்.
“உங்களோட உணர்வுகள் நல்லாவே புரியுது பைரவி மேம். நீங்க இப்போ பின்னணி பாடகி மட்டும் இல்லை. வெற்றிகரமா அம்மா பேர்ல ட்ரஸ்ட் ஆரம்பிச்சு, அதனால பலபேருக்கு நல்லது செய்றீங்க. அதுக்கெல்லாம் தனி மனசு வேணும்..” என்றிட,
“இதுவும் என் அம்மானால தான். அம்மாவோட கடைசி நேர வார்த்தைகள் தான் என்னை இப்போ இங்க வரை கொண்டு வந்து நிறுத்தி இருக்கு…” என்று அவள் பேச,
“நல்லது பண்றதுக்கும் ஒரு மனசு வேணும்.. இன்னும் நீங்க நிறைய நிறைய சாதனைகள் செஞ்சு, மேலும் மேலும் பலருக்கு நல்லது செய்யனும்னு வாழ்த்துறோம் மேம்..” என்றவர் “சரி இப்போ உங்களோட காதல் கதைக்கு வாங்க.. என்ன நடந்தது? எப்போ நடந்தது? எப்படி நடந்தது? சொல்லுங்க..” என்று கேட்க, பைரவிக்கு சட்டென்று ஒரு வெட்கப் புன்னகை.
மீண்டும் சிவா பக்கம் பார்வையை வீசியவள் “என்ன சொல்றது?!” என்று அவனைப் பார்த்தே கேட்க,
‘என்னவேனாலும் சொல்லு…’ என்று சிவா சைகை செய்ய,
“அட அட அட… பார்க்கவே கண் கொள்ளா காட்சியா இருக்கே..” என்று பேசிய தொகுப்பாளர் “சொல்லுங்க மேம்…” என்று சொல்ல,
“சொல்றதை விட பாடிட்டா பெட்டர்.. ஏன்னா அடுத்து நீங்க எப்படியும் ஒரு பாட்டு பாட சொல்வீங்க தானே…” என்று பைரவி மீண்டும் புன்னகை பூக்க, அரங்கமே அதிர்ந்தது.
“என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெய்யிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை
அறிவான் இவன்…” என்று பைரவி, உளமார, ரசித்துப் பாட, அவளின் பார்வையிலும் குரலிலும் அப்படியே சிவாவின் மீதிருக்கும் காதல் ததும்பி வழிய, அடுத்த இரண்டு நொடிகளில் மீண்டும் கரகோஷ சத்தம் மட்டுமே அங்கே.
“வாவ்.. வாவ்… என்ன சொல்ல ஏது சொல்ல… அருமை அருமை…” என்று மீண்டும் தொகுப்பாளர் பாராட்டியவர், மேலும் அவளை நிறுத்தி பேசியவரிடம், அதற்கு ஏற்றார் போல பதில் பேசிவிட்டு மேடை விட்டு கீழிறங்க, சிவா அவளை கை பிடித்து படிகளில் இறக்கவென்று மேடைக்கு அருகேயே நிற்க, அவளது கையினில் இருந்த விருதினை அவனிடம் கொடுத்தவள், அவன் கரத்தினை இறுகப் பற்றிக்கொண்டு படியிறங்க, இருவரின் உருவங்களும் பெரிய திரையில் காட்டப்பட,
“முதல்ல போய் சுத்தி போடணும்…” என்றார் ரஞ்சிதம்.
“ஆமாக்கா… எல்லார் கண்ணும் இவங்க மேல தான்..” என்று செல்வியும் சொல்ல,
“சாதாரணமா ஒரு டிரஸ் போடுன்னு கேட்டா இவன் கேட்டானா? பொண்டாட்டி பட்டு புடவை எடுத்துட்டு வந்து குடுத்துட்டான். அவளும் அத்தினி நேரம் சும்மா இருந்தவ, புருஷன் கொண்டு வரவுமே கட்டிக்கிட்டா.. இப்போ பாரு திருஷ்டி பட்டா என்ன ஆகுறது. ஏழு மாசம் வேற.. ரெண்டு நாள் முன்ன தான் வளைகாப்பு முடிஞ்சு இருக்கு…” என்று பெருமையாய் அங்கலாய்த்துக்கொண்டார் ரஞ்சிதம்.
செல்வி அவரை ஒரு பார்வை பார்த்தவர் “ஆனாலும் உன் லொள்ளுக்கு அளவில்லைக்கா…” என்று சொல்லிக்கொள்ள அனைவரின் முகத்திலும் புன்னகை தான்.
இருக்கைக்கு வந்து அமரும் முன்னமே, சந்தோஷியும் அகிலாவும் வந்து பைரவியை கட்டிக்கொள்ள, ஜான் மற்றும் தினேஷும் கூட தங்களின் துணைகளோடு வந்திருக்க, அனைவருமே பைரவிக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க,
“ரொம்ப நிக்காத பைரவி…” என்று சிவா சொல்லிட,
“அதானே இவனுக்கு பொறுக்காது…” என்று ஜான், தினேஷிடம் கடிய
“உனக்கும் அவனுக்கும் எப்பவுமே ஒத்து வர்றது இல்லைடா…” என்றான் தினேஷ்.
இப்போதும் கூட பல நேரங்களில் ஜானுக்கும், சிவாவிற்கும் முட்டிக்கொள்ளும் ஆனால் அதெல்லாம் பைரவி மீதான அதிகப்படி அக்கறையினால் தான்.
எங்கேனும் ரிக்கார்டிங் சென்று வந்தால் போதும் “என்னென்ன ஜூஸ் வாங்கி குடுத்த…” என்று ஜானிடம் தான் கேள்வி கேட்பான் சிவா.
“என்னென்ன குடுக்கனும்னு எங்களுக்கும் தெரியும்.. நாங்களும் கல்யாணம் பண்ணிருக்கோம்.. என் பொண்டாட்டியும் மாசமா தான் இருக்கா…” என்று ஜான் பகடி பேச,
“நீ அவங்களையும் எப்படி கவனிக்கிறன்னு எனக்கெப்படி தெரியும்.. உன் வீட்டம்மாக்கே போன் போட்டு கேட்கிறேன்…” என்று அலைபேசியை எடுத்து விடுவான் சிவா.
விருது நிகழ்சிகள் முடியும் முன்னமே, சிவா பைரவியை அழைத்துக்கொண்டு வீடு வந்துவிட்டான். ரஞ்சிதத்திற்கும், செல்விக்கும் இப்படியெல்லாம் நிகழ்சிகளை நேரில் காண்பது இதுவே முதல் முறை. அதனால் முழுதாய் இருந்து பார்க்கவேண்டும் என்று ஆசை இருக்க, சிவாவின் வாய்க்கு யார் அவல் ஆவது என்று அமைதியாய் அவனோடு வர ,
“இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு வந்திருக்கலாம்… பாவம் ஆன்ட்டியும் செல்விம்மாவும்…” என்று பைரவி பேச,
“எத்தனை நேரம் நீ அங்க அப்படியே உக்கார்ந்து இருக்க முடியும்..?” என்றான் பட்டென்று சிவா.
“ம்ம்ச்.. அட்லீஸ்ட் இவங்களாவது இருந்து பார்த்துட்டு வந்திருக்கலாம் தானே…” என,
“அதெல்லாம் வேணாம்.. அப்பாக்கு சப்பிட்டாரான்னு தெரியலை…” என்றவன், சொக்கனுக்கு அழைத்து விசாரிக்க, அவரும் உண்டுவிட்டேன் என்றிட,
“ஏதாவது ஹோட்டல் பார்த்து நிறுத்துங்க. சாப்பிட்டே போகலாம்…” என்று பைரவி சொல்ல, அவள் முகத்தில் தெரிந்த பசி கண்டு, எதுவும் மறுக்காமல் நல்ல உணவகமாய் பார்த்து நிறுத்தினான் சிவா.
“பாரேன்.. இதேது நம்ம ஏதாவது சொன்ன, வூட்ல செஞ்சு வச்சிட்டு வந்திருக்கலாம்ல அப்படின்னு சொல்வான்…” என்று ரஞ்சிதம், செல்வியின் காதினில் கிசுகிசுக்க, செல்விக்கோ சிரிப்பாய் வந்தது.
பின்னே ரஞ்சிதம் திடீரென்று மாமியார் கோதாவில் குதித்து, மருமகளின் கட்சியில் இணைந்து இப்போது எதற்கெடுத்தாலும் மகனுடன் தானே மல்லுக்கு நிக்கிறார்.
“நீ சரியில்ல டா…”
“ஐயோ மனுஷனா நீ? அந்த பொண்ணு பாவம்..”
“அவளை ஏன் டா நீ இப்படி அதிகாரம் பண்ணிட்டு இருக்க…”
“நீ ஏன் மா அவனை எல்லாத்துக்கும் கேக்குற…” என்று இப்படி ஏதாவது ஒன்று இருவரிடமும் பேசிக்கொண்டே தான் இருப்பார்.
கணவன் மனைவி இருவருமே ஒரு புன்னகையோடு தான் அவர் பேசுவதை கேட்டுக்கொண்டு இருப்பார்.
ஒருவழியாய் இரவு உணவை முடித்து, வீடு வர, ரஞ்சிதத்தை கொண்டு போய் அவரின் வீட்டினில் விட்டவன், செல்வியையும் அவரின் வீட்டினில் விட, இவன் இந்த வேலைகளை எல்லாம் முடித்து வருவதற்குள், பைரவி சின்னதாய் ஒரு குளியல் போட்டு, இரவு உடைக்கு மாறி இருக்க,
“என்ன வேகம் உனக்கு? நிதானமே இல்லை…” என்றான் சிவா.
“இப்போ என்ன பண்ணிட்டேன் நான்…” என்று அவள் கேட்கும் போதே, பைரவிக்கு ரஞ்சிதம் அழைத்து “அவனை சுத்தி போட சொல்லு…” என்றிட,
“சரிங்க ஆன்ட்டி…” என்றாள் ஒரு மென்கையோடு.
“என்னவாம்.. சுத்தி போடணுமா?” என்று சிவா கேட்க,
“ஆமாம்…” என்று அவள் சொல்ல “இப்போ சொல்லித்தானே விட்டாங்க..” என்றவன் அவளுக்கு சுத்த,
“உங்களுக்கும் சுத்திகோங்க…” என்றிட,
“போ டி…” என்றான் வீம்பாய்.
“அட.. உங்களையும் தான் எல்லாரும் பார்த்தாங்க…” என,
“பாக்குறாங்க தான். ஆனா உன்ன மாதிரி யாரும் பாக்குறதில்லை…” என்றபடி சுற்றி போட்டு வர, அப்போதும் அவள் முகத்தினில் புன்னகை மாறவில்லை.
“பால் சூடு பண்ணி எடுத்துட்டு வர்றேன்…” என்றவன் சமையல் அறைக்குச் செல்ல,
“இப்போ என்ன அவசரம்?” என்றாள்.
“மணி என்னாச்சுன்னு பார்த்தியா? உனக்கென்ன நீ ராக்கோழி.. நான் அப்படியில்லை.. நேரத்துக்கு தூக்கணும்.. காலைல சீக்கிரம் கியளம்பனும்…” என, எதற்கும் புன்னகையை தவிர வேற எந்த மாற்று பாவனையும் இல்லை.
சிவா அவளுக்கு ஒரு பெரிய கண்ணாடி டம்ப்ளரில் பால் கொண்டு வந்து கொடுத்தவன் “இப்போ எதுக்கு நீ சிரிச்சிக்கிட்டே இருக்க?” என்றான்.
“சிரிக்காம என்ன செய்றது?” என்றவள் அவன் கொடுத்த பாலினை குடிக்க
“மெதுவா… இப்போ எதுக்கு ஒரே மூச்சுல முடிக்கிற நீ…” என்று அதற்கும் சத்தம்.
“ஷ்! யப்பா…” என்று செவியை தேய்த்துக்கொண்டவள்
“ஆன்ட்டி சொல்றது போல நீங்க ரொம்ப மாறிட்டீங்க…” என்று சொல்ல,
“எல்லாம் உன்னால தான்…” என்றான் பட்டென்று.
“ஐயோ! சாமி தெரியாம கேட்டுட்டேன்…” என்று கை எடுத்து கும்பிட்டாள்.
இந்த பேச்சு ஆரம்பித்தாலே போதும், சிவாவை நிறுத்த முடியாது. தெரிந்தே பல நேரங்களில் பைரவி வார்த்தையை விட்டுவிடுவாள். இருவருக்குள்ளும் எல்லாமே சரியாகிவிட்டதா என்றால், அது சந்தேகமே.
அவ்வப்போது முட்டிக்கொள்ளும். ஆனால் யாரேனும் ஒருவர் நிதானித்து மௌனித்து சென்றிடுவார். ஒன்றே ஒன்று மட்டும் உறுதி, காதலும் பிடித்தமும் முன்னை விட இன்னமும் அதிகமாகி இருக்கிறது.
ஒருவரை விட்டு ஒருவர் இருப்பதில்லை…
“என்ன தெரியாம கேட்டுட்ட.. நீ எங்கம்மா எல்லாம் ஒரே ரகம்.. உங்களுக்கு என்ன வேணுமோ அதை செஞ்சிடுவீங்க.. ஆனா நான் தான் சிக்கிட்டு தவிக்கணும்.. எப்படியொரு நிலைல நீ என்னை விட்டுப் போன டி.. மனசாட்சி இருக்கா உனக்கு?” என்று அவன் பேச ஆரம்பிக்க,
“போச்சு டா…” என்று முணுமுணுத்துக் கொண்டாள்.
“இப்போவும் என்னால மறக்க முடியலை.. எந்திரிச்சு பாக்குறேன் நீ இல்லை.. எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? எப்படி டி உனக்கு மனசு வந்துச்சு…” என்று மீண்டும் அதையே அன்று நடந்ததை போலவே பேச,
“ஷ்..!” என்றாள் சிக்கிக்கொண்ட உணர்வில்.
“பதில் சொல்றியா நீ? நெஞ்சழுத்தம் டி உனக்கு. என்னை நினைக்கவே இல்லை…” என்றவன், அவள் பார்க்கும் பார்வை கண்டு,
“என்ன இப்போ, நீ திரும்பக் கேட்ப என்னை யோசிச்சு பார்த்தியா நீ அப்படின்னு.. பிடிவாதமா அனுப்பினவன் தானே நீ அப்படின்னு கேட்ப…” என்று பேச,
“நான் எதுவுமே கேட்கல…” என்றவள், சோபாவின் பக்கவாட்டில் சற்று அட்ஜஸ்ட் செய்ய, தன்னைப்போல் அவளது கால்களை நீட்டவென்று, சோபா விரிந்தது.
அவள் கால் நீட்டியதுமே, சிவா உள்ளே சென்று ஒரு என்ணெய் பாட்டிலை எடுத்து வந்தவன், அவளது கால்களுக்கு மசாஜ் செய்துவிட “ஷ்..! யப்பா.. சிவா…” என்றாள் சுகத்தில்.
“ஆமா இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை… இப்படி முனகி முனகி தான் என்னை பைத்தியம் ஆக்கிட்டு போன…” என்றவன் அவளது விரல்களுக்கு சொடுக்கு எடுக்க,