Advertisement

                           சிவபைரவி – 8

பைரவிக்கு இப்போது ஜான் மீதுதான் கோபம் கோபமாய் வந்தது. தேவையே இல்லாது தினேஷை ஏன் இப்போது வரவழைத்து இருக்கிறான் என்று. தினேஷ் அம்மா பெண் கேட்ட விசயமே தெளிவு பெறாத போது, தினேஷை சந்திப்பது என்பது அவளுக்கு அவ்வளவு நல்லதாய் இல்லை.

சிறு வயது முதல் உற்ற நண்பனாய் இருக்கும் ஒருவனை, ஏனோ அவளுக்கு காதலனாய், கணவனாய் எல்லாம் நினைத்துப் பார்க்க முடியவில்லை.     அதுபோக சந்தோஷி வேறு, அவளிடம் சொன்னால் ஏதேனும் ஒரு யோசனை சொல்வாள் என்று பார்த்தாள், அவளோ திருமணம் தான் செய்துகொள்ளேன் என்பது போல் பேசுகிறாள்.

அதிலும் தினேஷை விட நல்லதொரு வரன் எங்கு அமையும் என்று வேறு கேட்கிறாள். இவர்களின் பேச்சே பைரவிக்கு தன் எதிர்காலம் குறித்து ஒரு பயத்தைக் கொடுத்துவிட்டது. அதை சந்தோஷியிடம் காட்டிக்கொள்ளவில்லை. அப்படி எதுவும் பேசியிருந்தால் அவ்வளவுதான்.  இப்போதும் கூட, தினேஷ் வரவும் நிச்சயம் அவள் ஏதேனும் பேசுவாள். வெளிப்படையாய் பேசுகிறேன் என்று கொஞ்சம் வம்பு இழுத்து வைத்துவிடுவாள். அவளது குணம் அப்படி.

“அவனுக்கு இன்னிக்கு டியூட்டி இல்லையா என்ன?!” என்று கேட்பதுபோல், தினேஷ் வருகையில் தனக்கு விருப்பமில்லை என்று சொல்லாமல் சொல்ல,

“டியூட்டி என்ன பையு தினமும் தான் அவனுக்கு இருக்கும். அதுக்காக ஒரு ஒருமணி நேரம் நம்மக்கூட வந்து இருக்கக் கூடாதா என்ன?!” என்ற ஜான் “நான் வீடு வரைக்கும் போயிட்டு வந்திடுறேன். வரும்போது அவனையும் கூட்டிட்டு வர்றேன்…” என்று கிளம்ப, பைரவி முகம் அப்பட்டமாய் கடுகடுத்தது.

சந்தோஷி எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தாள். சிவாவையும் கூட. பைரவி முகம் மாறவுமே, சிவாவின் முகம் மாறியதையும் அவள் கவனிக்கத் தவறவில்லை.

நடந்த அனைத்தையுமே பைரவி கூறியிருக்க, சந்தோஷிக்கு ஒன்றுமட்டும் புரிந்தது. சிவாவிற்கும் சரி, பைரவிக்கும் சரி அந்தந்த சூழல் கொடுத்த கோபமே தவிர, மற்றவர்கள் மீது தனிப்பட்ட கோபமோ காழ்ப்புணர்ச்சியோ இல்லை என்று.

ஜான் சொன்னதை வைத்து என்னவோ என்று நினைத்திருந்த சந்தோஷிக்கு சிவா மீது நல்லதொரு எண்ணம் கூட வந்தது    

செல்வி வந்து “பாப்பா என்ன சமைக்கட்டும்…?” என்று வினவ,

“எதுவும் வேணாம் செல்விம்மா. கடைல ஆர்டர் பண்ணிக்கலாம். மெசின்ல துணி போட்டு எடுங்க போதும்…” என்றவள் “இதோ வர்றேன்…” என்றுவிட்டு உள்ளே செல்ல, வரவேற்பறையில் சிவா, மணி, சிண்டு மற்றும் சந்தோஷி இருக்க, சந்தோஷி சிவாவிடம் “தேங்க்ஸ்…” என்றாள்.

“எதுக்கு?!” என்று சிவா புரியாமல் கேட்க,

“பைரவி இங்க, அதாவது இந்த ஏரியால நல்லபடியா இருக்கேன்னு சொல்றா. எங்களுக்கு இப்பவும் கூட நம்ப முடியலை. அவளோட லெவலே வேற. நீங்க பார்க்கிற பைரவி இல்லை அவ. அவங்கம்மா இருந்திருந்தா தெரியும். பரவாயில்ல, நீங்க செல்விம்மா எல்லாரும் அவளுக்கு ஹெல்ப் பண்றீங்க. உங்க எல்லார் மேலயும் அவளுக்கு நிறைய மரியாதை இருக்கு…” என,  சிவா பொதுவாய் தலையை ஆட்டிக்கொள்ள, மணியும் சிண்டுவும் தங்களின் முப்பத்தியிரண்டு பற்களையும் காட்ட,

“பைரவி நினைச்சு நாங்க எல்லாம் ரொம்ப கவலைப் பட்டுட்டு இருக்கோம்.. அவளுக்கு நல்லபடியா ஒரு லைப் அமைஞ்சு அவ செட்டில் ஆகிட்டா நிம்மதி. ஆனா அவ அதுக்கு ஒத்துக்க மாட்டேங்கிறா…” என்று பேசவும் சிவாவின் முகம் மாறியது.

“எஸ். தினேஷ், இப்போ சொன்னோமே.. அவனுக்குத் தான் பைரவிய கல்யாணம் பேசலாம்னு எல்லாம் இருக்கோம். ஆனா பைரவி முடியாதுன்னு சொல்றா…” என, சிவாவிற்கு ஏனோ இந்த செய்தி இனிக்கவே இல்லை.

அவளின் திருமணத்தைப் பற்றி, அவளுக்கு ஒரு வாழ்க்கை அமைவது பற்றி யார் யோசிப்பர் என்றெல்லாம் விடிய விடிய யோசித்தவன், இப்போது பைரவியின் திருமணப் பேச்சு வரவும், அவனால் அதனை ஏற்க முடியவில்லை.

முயன்று தன் உணர்வுகளை அடக்கியவன் “ஏன்?!” என்றான் ஒற்றை வார்த்தையாய்.

“ஏனோ… பிரண்டா இருக்கிறவன எப்படி கல்யாணம் பண்ண முடியும் அப்படின்னு சொல்றா…” எனும்போதே பைரவி வந்துவிட, சந்தோஷி அதோடு பேச்சை முடித்துக்கொள்ள, சிவாவின் பார்வை என்னவோ பைரவியைத் தான் ஆராய்ந்தது.

அவளது முகத்தில் சோர்வையும் தாண்டிய ஒருவித சோகம் தெரிவது போலிருக்க, அவனுக்கோ ‘நீ எதுவும் கலங்காதே…’ என்று ஆறுதல் சொல்லவேண்டும் போலிருக்க, சிவாவின் பார்வை தன்மீதே இருப்பது கண்டு பைரவி கூட “எதுவும் வேணுமா?!” என,

“இல்ல…” என்று தலையை ஆட்டியவனுக்கு கிளம்பிடலாம் போலிருக்க

“கார் செர்வீஸ் சார்ஜ் எவ்வளோ…” என்றாள் பைரவி.

“நான் தான் சொன்னேனே வேணாம்னு…”

“பரவாயில்ல.. நீங்க ஏற்கனவே நிறைய ஹெல்ப் பண்றீங்க…” என, சிவாவோ பட்டென்று “அப்போ என்கிட்டே இனிமே ஹெல்ப் கேட்காதீங்க…” என்றான் வேகமாய்.

அந்த கால் டாக்சியில் மிக மிக சின்னதான ஒரு பிரச்சனை. சிண்டு வந்திருந்தால் கூட சரி செய்து இருப்பான். அதற்கு போய் பணம் கேட்பதா?! அது பைரவியிடமா?!

“எனக்கு இங்க வேற யாரையும் தெரியாதே…” என்ற பைரவி “சரி இதையும் சுண்டல் கணக்குல சேர்த்துக்கிறேன்…” என்று சொல்லி மெல்லிசாய் சிரிக்க,

‘போதும்டா சிவா கிளம்பிடு…’ என்று அவனது மனசாட்சி கத்தியது.

நிச்சயம் அவளுக்கு இந்த நேரத்தில் ஓய்வு தேவை என்பது அவனுக்குத் புரிந்தது.

“ஓகே நீங்க ரெஸ்ட் எடுங்க…” என்று பொதுவாய் சொல்லிவிட்டு எழ, பைரவியோ “ஜூஸ் குடிக்கவே இல்லையா?” என்று நேரடியாகவே வினவ,

“இருக்கட்டும்…” என்றவன் ‘போலாம்…’ என்பது போல் மணியிடம் தலையசைக்க, சரியாய் சிவாவிற்கு அவனின் அம்மாவிடம் இருந்து அழைப்பு வர, முதலில் அதனை துண்டித்துவிட்டான்.

பின் மீண்டும் விடாது அழைப்பு வர, முன்னே நடந்துகொண்டே “என்னம்மா?!” என்று கேட்க,

“அந்த பாட்டுக்காரி வூட்ல என்னடா செய்ற நீ?!” என்று ஏகத்திற்கும் சத்தமாய் ரஞ்சிதம் கேட்க,

“ம்மா?!” என்றான் சிவா, ஒன்றும் விளங்காது.

பைரவியை, பைரவியாய் மட்டுமே காணும் அவனுக்கு ‘பாட்டுக்காரி…’ என்ற அடைமொழி புரியவில்லை.

“அதான் அந்த டிவிக்காரி… பாடுறாளே… திமிர் பிடிச்சவ.. அவ வூட்ல என்ன பண்ற நீ? முதல்ல அங்க எதுக்கு போன நீ? வெக்கமா இல்ல உனக்கு.. அடிச்சிருக்கா அங்க போய் உக்காந்துட்டு இருக்க..?” என்று ஆரம்பிக்க,

“யார் சொன்னா உனக்கு?!” என்றான் இறுகிய குரலில்.

“ம்ம் தெருவே சொல்லுது…”

“ஓ..! அப்போ நான் இங்க ஏன் வந்தேன், என்ன பண்ணேன் அப்படின்னு தெருக்கிட்டயே கேளு…” என்று சிவாவும் பேச,

“கேள்வி கேட்டா பதில் சொல்லுடா.. நீ இப்படியா இருப்ப? எங்க போச்சு உன் ரோசமெல்லாம்..” என்று ரஞ்சிதம் கேட்டதில் சிவாவிற்கு பயங்கரமாய் கோபம் வந்துவிட்டது.

“இத்தன வருசமா நான் காலைல சாப்பாடு எதுவும் சாப்பிட்டேனான்னு கேட்க ஒரு போன் பண்ணிருப்பியா நீ? கேட்டதும் இல்லை செஞ்சு குடுத்ததும் இல்லை. இப்போ யாரோ என்னவோ சொல்றாங்கன்னு என்னைய நீ கேள்வி கேட்கிற… நல்லாவாம்மா இருக்கு இது?” என்று சிவா தன் மனதில் இருந்த ஆற்றாமையையும், கோபத்தையும் வெளிப்படுத்த,

“சிவா..!” என்று அதிர்ந்து போனார் ரஞ்சிதம்.

மகன் இப்படிக் கேட்பான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

அதிலும் இப்படி இதெல்லாம் யோசிப்பானா என்றும் கூட அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

மொத்தத்தில் அவனைப் பற்றி, அவனது உணர்வுகள் பற்றி, அவனுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்பது பற்றியெல்லாம் ரஞ்சிதம் யோசிக்கவேயில்லை. அதற்கான நேரமும் சூழலும் கூட இல்லை அங்கே.

என்ன இருந்தும் அவனை பின்னே யார் கவனிப்பார்களாம்?!

எல்லாரும் இருந்தும் கூட அவனுக்கு யாருமில்லாத நிலை தான் இப்போது.

“பதில் பேசும்மா..? இப்போ ஏன் அமைதியா இருக்க? என்னைக் கேள்வி கேட்கிறப்போ மட்டும் அவ்வளோ சத்தமா பேசின.. இப்போ பேச்சு வரலியா?!” என்று சிவா கேட்க,

“நீ ஏன்டா இப்படியெல்லாம் பேசுற?!” என்று ரஞ்சிதமும் கேட்க,

“நீ பேசுனது மட்டும் நல்லாவா இருக்கு…” என்றான்.

அதற்குள் சிவாவின் செட்டும் வந்திட, மணியும் சிண்டுவும் சிவாவின் பேச்சினை கவனித்துக்கொண்டு தான் இருந்தனர்.

“நான் அங்க என்ன பண்றன்னு தானே கேட்டேன்…” என்றவர் எங்கே மகனிடம் மேலும் பேசினால், வேறெதுவும் பேசி சண்டை போடுவானோ என்று நினைத்து “நீ என்னவோ பண்ணு…” என்று வைத்துவிட்டார்.

சிவாவிற்கு எரிச்சலாய் இருந்தது. அவனுக்குத் தெரிந்து இன்றுதான் ரஞ்சிதமிடம் இப்படி பேசியிருக்கிறான். ஏதோ ஒருவகை மன அழுத்தம் அவன் உணர, கையில் இருந்த அலைபேசியை அங்கிருந்த மேஜை மீது தூக்கி வீசிவிட்டு அமர,

“என்ன மாப்ள…” என்று மணி கொஞ்சம் அமைதியாய் தான் கேட்டான்.

“ம்ம்ச் ஒண்ணுமில்ல…”

“நாங்களும் கவனிச்சோம் நீ பேசினத…” என்றவன் “நான் ஒன்னு சொல்றேன்…” என,

“என்ன?” என்றான் சிவாவும் கடித்துத் துப்பினான்.

“பேசாம நீ கல்யாணம் பண்ணிக்கோ மாப்ள…” என்று மணி சொல்ல,

“ஏய்..!” என்று சிவா அதிர,

“நிஜம்தான்… இதுதான் சரியான நேரமும் வயசும்… கல்யாணம் பண்ணிக்கோ.. அப்புறம் பாக்கலாம் வீடு கற்றது இல்லை வாங்குறது பத்தி எல்லாம்…” என்று மணி சொல்லவும், சிவாவின் முகம் அப்படியே மாறிப்போனது.

“என்னடா அமைதியா இருக்க.. உன்னை கவனிக்க ஒருத்தர் வேணாமா? இப்படியே காலத்துக்கும் இருந்துப்பியா நீ?!”

“ம்ம்ச் இப்போ என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்… ஷாலினி இருக்காளே…”

“இருக்கட்டும்.. இன்னும் காலேஜே முடிக்கல… எப்படியும் அவளுக்கு ரெண்டு இல்லைன்னா மூணு வருஷம் கழிச்சு முடிச்சா கூட போடும். ஆனா உனக்கு இப்போதான் இருபத்தியஞ்சு வயசுன்னு நினைப்பா?! நீ முதல்ல கல்யாணம் பண்ணு.. அப்புறம் வீடு பத்தி யோசி.. அப்புறம் ஷாலினி கல்யாணம் பண்ணலாம்…”

“இல்லை.. அது சரி வராது…” என்றான் சிவா பட்டென்று.

“ஏன்?!”

“ம்ம்ச் இந்த பேச்சை விடுடா…” என்று சிவா கத்த, மீண்டும் ரஞ்சிதம் அழைத்தார்.

“உனக்கு என்னத்தான் ம்மா வேணும்…” என்று சிவா அவரிடமும் கத்த,

“வூட்டுக்கு வா…” என்று அவரும் சொல்ல,

“வேலை இருக்கு.. அதெல்லாம் முடியாது…” என்றான் பிடிவாதமாய்.

“நீ இப்போ வர்றியா இல்லியா…” என்று ரஞ்சிதம் அவனுக்கும் மேலே பிடிவாதமாய் பேச,

“வந்து தொலையுறேன்…” என்று கடிந்தபடியே தான்  எழுந்து சென்றான்.

அங்கே வீட்டினிலோ விருந்தாட்கள்.. எப்போதோ ஏதோவொரு விசேசத்தில் கண்டவர்கள். அதாவது ரஞ்சிதம் பக்கத்து சொந்தங்கள். அதான் இத்தனை அவசரமாய் மகனை அழைத்து இருக்கிறார் என்று புரிந்தது.

“வாங்க… வாங்க…” என்று பொதுவாய் அனைவரையும் பார்த்து உபசரிப்பாய் பேசிவிட்டு, உள்ளே ரஞ்சிதமை தேடி சென்று “என்னம்மா?!” என்றான்.

“என் சித்தப்பா குடும்பம்டா. உனக்குத்தான் தெரியுமே. ஊர்ல இருந்து வந்திருக்காங்க…” என,

“அதான் திடீர்னு எதுக்கு வந்திருக்காங்க…” என்றான் சிவாவும்.

“அதுசரி. எனக்குன்னு இருக்குற சொந்தமே இவங்க குடும்பம்தான்.. எதுக்கு வந்திருக்காங்கன்னு கேக்குற…” என்றவர் “எல்லாம் ஒரு நல்ல செய்தியோடதான்…” என,

“என்ன?!” என்றான் நெற்றி சுறுக்கி.

“என் அண்ணன் மகளுக்கு உன்னை தர்றோம்னு பேச வந்திருக்காங்க…” என்ற ரஞ்சிதத்தின் முகம் அப்படியொரு பூரிப்பை பூசியிருந்தது.

இதனைக் கேட்டு சிவாவிற்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. பதில் பேசாமல் நிற்க “என்னடா?!” என்றார் ரஞ்சிதம்.

“இல்ல நம்ம சாப்பாடுக்கே கஷ்டப்பட்டு நின்னப்போ எங்க போனாங்க இவங்கல்லாம்…” என்று சிவா நக்கலாய் கேட்க,

“ம்ம்ச் இப்போ ஏன் அந்த பேச்சு. இப்போ நல்லாத்தானே பொழைக்கிறோம். உனக்கும் கல்யாண வயசு ஆச்சு.. உன்னை கவனிக்க ஒருத்தி வேணாமா?” என்று ரஞ்சிதம் தூண்டில் போட,

அதென்ன தெளிந்த குலமா அவன் மனது.. ஏற்கனவே சஞ்சலத்தில் இருக்கும் மனது, குழப்பத்தில் இருக்கும் மனது, தன் திருமண யோசிப்பை விட பைரவி திருமணம் பற்றி அதிகம் யோசித்த மனது. அதில் தூண்டில் போட்டால் என்ன அகப்படும்.

எதுவும் அகப்படாது..

அதிலும் சிவாவின் அகமோ படாதபாடு பட்டுக்கொண்டு இருக்க, ரஞ்சிதத்தின் பேச்சுக்கள் அங்கே எடுபடவில்லை.

“ம்மா நான் இப்போ கல்யாணம் பண்ற ஐடியால எல்லாம் இல்ல. வந்தவங்களை நல்லபடியா கவனிச்சு அனுப்பி வை.. அவ்வளோதான். இதுக்கு மேல என்னைக் கூப்பிடவும் செய்யாத..” என்றவன் அவரின் கையில் ஆயிரம் ரூபாயை வைத்து,

“என்ன வாங்கணுமோ வாங்கிக்கோ…” என்று சொல்லி கிளம்ப,

ரஞ்சிதமிற்கு முதல் முறையாய் ‘மகன் நம் பிடியில் இல்லை…’ என்பது நன்கு விளங்கியது.

கையில் இருந்த பணத்தையும், ஹாலில் இருப்பவர்களிடம் ‘கொஞ்சம் வேலை இருக்கு…’ என்று சொல்லிச் செல்லும் மகனையும் மாறி மாறி பார்த்துக்கொண்டு நின்று இருந்தார்.

“என்ன அண்ணி… மாப்ள என்ன சொல்லிட்டு போறாப்ல…” என்றபடி அவரின் சித்தப்பா மருமகள் வர,

“அ.. அது.. முக்கியமா வேலை இருக்காம். போயி ஆவனுமாம்.. வேணுங்கிறத வாங்கி செய் அப்படின்னு சொல்லிட்டு போறான்…” என்று ரஞ்சிதம் சமாளிக்க,

“அதுசரி…” என்ற அந்த பெண்மணியோ,

“எதுவும் சொன்னீங்களா?” என்றார் ஆவலாய்.

“சொல்லிருக்கேன்.. யோசிக்கனுமாம்.. நான் சொன்னா என் மகன் மீறமாட்டான்…” என்ற ரஞ்சிதம் ‘மீறிவிடக் கூடாது…’ என்று நினைத்தார்.

சொல்ல முடியாத ஒரு பயம் அவனது அவருள் ஒட்டிக்கொண்டது.

இத்தனை நாள் ஷாலினியை எண்ணி, அவளுக்கு ஒரு நல்ல வாழ்வு அமைத்துக்கொடுப்பது எண்ணி பயந்து இருந்தவர், முதல் முறையாய் மகனை எண்ணி பயந்தார்.

அவனொருவன் இல்லையெனில் அவர்கள் யாரும் இல்லை..

அவனின் நிழல் இல்லையெனில் இவர்கள் யாரும் நிற்கவும் முடியாது..

சிவா இல்லையெனில், இவர்களின் ஜீவனம் எளிதில்லை..

அப்படியிருக்கையில், சிவாவே அவர்களிடம் ஒட்டுதலாய் இல்லாது போனால், பின் என்ன நடக்கும்?!

யோசிக்கும் போதே ரஞ்சிதமிற்கு ரத்த அழுத்தம் கூடியது.

சிறிதேனும் மகனையும் கவனித்து இருக்கவேண்டுமோ என்று தோன்றியது. சம்பாதிக்கிறான் என்பதற்காக, அவனை அப்படியே விட்டது தவறோ என்று எண்ணியவர் ‘இனி அப்படி இருக்கக் கூடாது…’ என்று நினைத்துக்கொண்டார்.

ஆனால் சிவாவோ, தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்..

அங்கே பைரவி வீட்டிலோ ஜானும் தினேஷும் வந்திருக்க, தினேஷ் நேரடியாகவே “ஏன் பையு என்னை அவாய்ட் பண்ற…?” என்று கேட்க,

பைரவி “அப்படில்லாம் இல்லை…” என்று சமாளிக்க,

“உன்னை இந்தளவுக்குக் கூட புரியாத முட்டாள் நானில்லை பையு…” என்று தினேஷ் பேச, பைரவிக்கு தர்ம சங்கடமாய் இருந்தது.

     

      

 

 

   

 

             

 

          

        

     

 

Advertisement