Advertisement

                           சிவபைரவி – 6

கிட்டத்தட்ட ஒருவாரம் கழிந்திருந்தது…

பைரவி சிவாவிடம் பேசவேண்டும் என்று எண்ணியதை முழுதாய் பேசவில்லை தான். சிவாவும் அவள் பேசிய விசயத்தை சாதாரணமாய் எடுத்துக்கொள்ளவில்லை தான். ஏன் நீ இப்படி சொன்னாய் என்று அவளிடம் கேட்கவேண்டும் என்று இருக்க, பைரவி ஒருவாரம் ஊரிலேயே இல்லை.

ஷூட்டிங் என்று கேரளா சென்றுவிட்டாள்.

ஒரு ஆல்பம் பாடலுக்கு அவள் ஒப்பந்தமாகியிருக்க, கேரளா சென்று ஒருவாரமும் ஆகிவிட்டது. செல்விக்கு அங்கே வேலையில்லை.

தினமும் நேரத்திற்கு கடை திறப்பது வியாபாரம் செய்வது இதுதான்..

சிவாவிற்கு முதலில் இது தெரியாது.

செல்வியும் எதுவும் சொல்லவில்லை.

பைரவி ஊருக்குச் சென்ற நாங்காவது நாள், வேறொரு வேலையாக சிவா பைரவி வீடு பக்கம் செல்ல, வீடும் பூட்டியிருக்க, அங்கே அவளின் காரும் இல்லை.

‘வெளியே சென்றிருப்பாள்…’ என்று விட்டுவிட, அதன்பின் செல்விதான் சிண்டுவிடம் சொல்லியிருந்தார்.

சிவா தனது மெக்கானிக் செட் செல்ல, சிண்டு மும்முரமாய் மணியிடம் பேசிக்கொண்டு இருந்தான்.

“ண்ணா கேரளா குளுகுளுன்னு இருக்குமா?” என,

“ஆமாடா அதுவும் இப்போ அங்க செமையா இருக்குமாம்…” என்று மணியும் சொல்ல,

“அதான் அங்க போயிருக்காங்க…” என்று சிண்டு சொல்லிக்கொண்டே ஒரு காரின் டயரை கழுவ,

“யார் எங்க போயிருக்காங்க?!” என்றபடி வந்தான் சிவா.

“அதாண்ணே அந்த டீவிக்காரக்கா… கேரளா போயிருக்காங்களாம்.. ஷூட்டிங்காம்… ஒரு வாரம் அங்கதானாம்…” என்று நீட்டி முழக்கி சிண்டு பேச,

“ஓ…!” என்றவனுக்கு இந்த செய்தி அவ்வளவு உவப்பானதாய் இல்லை.

என்னவோ அதன் காரணமும் தெரியவில்லை.

பீச்சில் வைத்து எதுவோ பேசவந்தாள். அது முழுமை அடையவில்லை. அதன்பின்னே பேசும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. இப்போது கேரளா… அதுவும் ஒருவாரம்.. ஹ்ம்ம் எப்படி இப்படி செல்கிறாள் என்றுவேறு கேள்வி எழுந்தது.

அவனுக்குத் தெரிந்து, அவன் வட்டாரத்தில் இருக்கும் பெண்கள் வீட்டு ஆண்களோ இல்லை வீட்டு மனிதர்களோ இல்லாது பக்கத்து ஊருக்குக் கூட சென்றதில்லை. அத்தனை ஏன், அவனின் அம்மா கூட பிறந்தவீடு என்றாவது ஒருநாள் போவார் இல்லையோ போனதும் அன்றே திரும்பிடுவார்.

அப்படியிருக்க, இவள் எப்படி தனியே… யாரை நம்பிப் போனாள்.. அதுவும் எந்த தைரியத்தில் என்றெல்லாம் சிந்தனைப் போக,

“செல்விக்கா…” என்று வந்து வேகமாய் நின்றான்.

“இன்னா கண்ணு… பணியாரம் சூடாருக்கு…” என்று அவர் சொல்ல,

“அதெல்லாம் இருக்கட்டும்…” என்று வேகமாய் பைரவி பற்றி கேட்கவந்தவன், அப்படியே பேச்சை நிறுத்தி ‘என்ன கேட்க போற?’ என்று தனக்கு தானே கேள்வியும் கேட்டு யோசிக்க,

“இன்னா கண்ணு…” என்றார் செல்வி.

“ம்ம்ச் ஒண்ணுமில்ல.. பணியாரம் ஒரு தட்டு வை…” என,

“சரிதான் போ.. வர வர என்னதான் ஆச்சோ உனக்கு…” என்று சிரித்தபடி செல்வி தட்டினில் பணியாரமும், அதற்கான இஞ்சி சட்னியும் வைக்க, சிவா எதுவும் பேசாது வாங்கி உண்ணத் தொடங்க, சிந்தனை எல்லாமே பைரவி வசம் தான் அவனுக்கு.

அவளின் சிந்தனையில் இருந்து வெளிவரவேண்டும் என்று முயற்சிக்கிறாள் தான். ஆனால் முடிவேணா என்கிறது. ஏதாவது ஒருவிசயம் அவளை நியாபகம் செய்துவிடுகிறது. இல்லை யாரேனும் அவளைப் பற்றிய பேச்சினை எடுத்துவிடுகிறார்கள்.

“இதெல்லாம் உனக்குத் தேவையா சிவா?” என்று அவனின் மனதே கேட்க,

“அதான… இதெல்லாம் எனக்குத் தேவையா?” என்று எண்ணியவன், உண்டுவிட்டு கைகழுவும் போது, பைரவி பற்றிய சிந்தைனையும் கழுவிட நினைத்தான்.

‘வேண்டாம்… என்னை தடுமாறச் செய்யும் எதுவும் வேண்டாம்…’ என்று மனதை இறுக்கம் செய்துகொண்டான்.

இப்படி இவன் பைரவி பற்றி சிந்திக்க, அங்கே கேரளாவில் பைரவியோ சிவா என்ற ஒருவன் இருக்கிறான் என்ற நினைப்பே இல்லாது, அவளது வேலையில் மூழ்கியிருந்தாள்.

மொத்தம் ஐந்து ஆல்பங்கள்… பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் பிரத்யேக வெளியீடு இது.. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை  என்று ஐந்து வகை நிலப்பரப்புகளை மையமாய் வைத்து இந்த ஐந்து ஆல்பங்களும் தயாராக, ஐந்திற்கும் வெவ்வேறு நபர்கள் தேர்வாகியிருக்க, பைரவி குறிஞ்சி நிலத்திற்கு ஒப்பந்தமாகியிருக்க, அதற்கான ஷூட்டிங் நடந்துகொண்டு இருந்தது.

கிட்டத்தட்ட ஆறு நிமிட பாடல்.. அதற்கு ஒருவாரக்கால படமெடுப்பு..

பைரவியோடு ஜானும், சந்தோஷியும் வந்திருந்தன.

பொதுவாய் பைரவி இப்படி வெளியூர்களுக்கு ஷூட்டிங் செல்கிறாள் என்றாள் யாரேனும் ஒருவர் வருவர். அவளை அப்படியெல்லாம் எங்கும் தனியே அனுப்புவதில்லை.

கேரளத்தின் அழகிய மலை பிரதேசத்தில் தான் படமெடுப்பு.

அங்கேயே ரிசாட்டுகள் இருக்க, இவர்களுக்கு அறைகள் எல்லாம் பக்காவாய் ஒதுக்கப்பட்டு இருந்தது.

செல்வி தினம் ஒருமுறை அழைத்து பேசிவிடுவார் பைரவிக்கு. அதுபோலவே பைரவியும் செல்விக்கு இரவு அழைத்து பேசுவாள். அன்றும் அப்படித்தான் பேசிவிட்டு வைக்க, ஜான் பைரவியை அப்பட்டமாய் முறைத்தான். சந்தோஷி கூட ஜானை புரியாது பார்க்க,

“என்ன ஜான்..?” என்றாள் பைரவி..

“நீ ஏன் பையு இப்படி இருக்க? உனக்கு அந்த ஏரியா செட்டே ஆகாது. உன்னோட ரேஞ் என்ன? உன்னோட ஸ்டேட்டஸ் என்ன? அங்க போயிட்டு நீ…” என்று ஜான் எரிசலாய் பேச, பைரவி இப்போது அவனை முறைத்தாள்.

“நீ முறைச்சாலும் நான் இதான் சொல்லுவேன்…”

“ம்ம்ச் ஜான்… உனக்கே தெரியும்.. இது எங்கம்மாவோட விருப்பம்…” என்று பைரவி சொல்ல,

“ஆமா…!” என்று கடுப்படித்தவன் “ஆன்ட்டிக்கு ஏன் இப்படியொரு ஆசைன்னு தெரியலை.. அங்க வீடு எப்பவோ வாங்கிப்போட்டாங்க சரி.. ஆனா இப்போ அதை புதுசு பண்ணி, நீ அங்க இருக்கணும்னு சொன்னது எல்லாம் என்னால ஏத்துக்கவே முடியாது பைரவி. சென்னைல உனக்கு வீடே இல்லையா என்ன? சிட்டில எத்தன ப்ளாட்ஸ் இருக்கு உனக்கு.. அதோட மாச வாடகையே உனக்கு லட்சத்துக்கு மேல வருது.. ஆனா நீ இப்படி ஒரு ஏரியால போய் இருக்க…” என,

“எனக்கும் அங்க பிடிச்சிருக்கு ஜான்…” என்றாள் பைரவி.

“அமாமா பிடிச்சது…” என்று அங்கலாத்தவன், “ஒருத்தன் வீடு புகுந்து சண்டை போடுறான் சந்தோஷி…. கார் அந்த ஏரியாக்குள்ள போனாலே பசங்க எல்லாம் மேல வந்து விழுந்து… ஓ…! காட்..!” என,

“பைரவி… எனக்கே இதெல்லாம் கேட்டு டென்சன் ஆகிடுச்சு.. நல்லவேளை இன்னும் தினேஷ்க்கு தெரியாது.. தெரிஞ்சது அவ்வளோதான்…” என்று அவளும் சொல்ல,

“கொஞ்சம் ரெண்டு பெரும் சும்மா இருக்கீங்களா? சும்மா அது இதுன்னு பேசிட்டு… இப்போ என்னாச்சுன்னு இப்படி பேசுறீங்க.. இப்போ எந்த பிரச்சனையும் இல்லை. முதல் தப்பு உன்மேல ஜான்.. நீ காரை சரியா ஓட்டி வந்திருக்கணும். அந்த பசங்கட்ட சரியா பேசிருக்கணும்.. அதை நீ பண்ணல…” என்ற பைரவி

“போதும் இதோட இந்த பேச்சு.. இந்த விசயத்துல இருந்து நான் வெளிய வந்துட்டேன்.. திரும்ப அதை நினைக்க வைக்காத ஜான்.. ப்ளீஸ்…” என

சந்தோஷி எதுவும் பேசாதே என்று ஜானுக்கு சைகை காட்ட, பைரவியின் மனநிலை புரிந்து “ஓகே.. ரெண்டு பெரும் தூங்குங்க… நான் போறேன்…” என்று அவனும் கிளம்பிவிட்டான்.

பைரவி அடுத்து எதுவும் பேசாது அமைதியாய் இருக்க, சந்தோஷிதான் “பையு உனக்கு என்னாச்சு…?” என்று கேட்க,

“நத்திங்…” என்றவள் அப்படியே படுக்க,

“எதுவா இருந்தாலும் நீ ப்ரீயா பேசுற டைப் பையு… உன்னோட இயல்பு இது இல்ல.. ஆனா இப்போ நீ அங்க போனதுக்கு அப்புறம் அப்படியில்ல. எங்களோட பேசுற டைம் கம்மியாகிடுச்சு.. ஓகே ஓகே எல்லாருமே ஒருவகைல பிசிதான். ஆனா அன்னிக்கு தினேஷ் தங்கச்சி பர்த்டேக்கு கூட வரல நீ.. கேட்டதுக்கு சரியா பதிலும் சொல்லல.. அவன் எவ்வளோ எதிர்பார்த்தான் தெரியுமா?” என,

“அதான் வரல…” என்றாள் பைரவி பட்டென்று.

“ஹேய் என்ன சொல்ற நீ?!” என்று சந்தோஷி கொஞ்சம் அதிர்ச்சியாகி வந்து அவளது பக்கம் அமர,

“ம்ம்ம்… தினேஷ் அம்மா என்னை தினேஷ்க்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறாங்க…” என்ற பைரவியின் பார்வை விட்டத்தை வெறித்திருக்க,

“என்ன டி சொல்ற?!” என்றாள் சந்தோஷி நம்பாது.

“ம்ம்ம் ஆமா… இது உங்கம்மாக்கும் தெரியும்.. என்கிட்ட கேட்டதே உன்னோட அம்மாதான்…” என,

“நிஜமாவா? எனக்கு இதெல்லாம் தெரியாதே.. உன்னோட நான் இங்க போறேன் சொன்னப்போ கூட யாரும் எதுவும் சொல்லலயே..” என்று சந்தோஷி சொல்ல,

“சொல்ல மாட்டாங்க.. நான் சரின்னு சொல்லாம இதுபத்தி  வெளிய யாரும் பேசமாட்டாங்க.. அதேபோல நான் சரின்னு சொல்றது வரைக்கும் சும்மாவும் இருக்கமாட்டாங்க…” என்றாள் பைரவி கசந்த குரலில்.

“ஏய் பையு ஏன் டி நீ இப்படி பேசுற… நீ முதல்ல இதுபத்தி தினேஷ்கிட்ட பேசு.. அவனுக்கு இதெல்லாம் தெரியாம கூட இருக்கலாம் இல்லையா…” என்ற சந்தோஷி “ஏன் பைரவி.. தினேஷ் பத்தி நாங்க யாரும் சொல்ல வேண்டியது இல்ல.. உனக்கே தெரியும்.. பின்ன ஏன் யோசிக்`கிற?” என்றும் கேட்க,

பட்டென்று அவளை முறைத்துப் பார்த்தவள் “தினேஷ் நமக்கு பிரண்ட்.. அதுலயும் அவனை எனக்கு ரொம்ப சின்னதுல இருந்து தெரியும். கல்யாணம் எல்லாம் அவனோட என்னால யோசிக்கக் கூட முடியாது…” என,

“நல்ல நண்பன் நல்ல வாழ்க்கைத் துணையாவும் இருக்கலாம் இல்லையா…” என்றாள் சந்தோஷி.

“நோ என்னால இதை ஏத்துக்க முடியலை…”

“சரி இப்போ சொல்லு எப்படியும் நம்ம எல்லாருக்கும் கல்யாணம் நடக்கத்தான் போகுது.. அகிலா செட்டில் ஆகிட்டா.. இதோ ஜானுக்கு அவனோட ஆளு ரெடியா இருக்கா.. எனக்கு எங்க வீட்ல வரன் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.. நீ என்ன செய்ய போற? ” என்று கேட்க,

இந்த கேள்வி பைரவிக்குள் பெரும் இடியை இறக்கியது..

நிஜம் இதுதானே..

சந்தோஷியின் அம்மாவும் இதனைத் தானே சொன்னார்கள்.

“இங்க பார் பைரவி… நீ வேற சந்தோஷி வேற இல்ல எனக்கு.. உங்கம்மாவும் நானும் எவ்வளோ க்ளோஸ் பிரண்ட்ஸ்ன்னு உனக்கே தெரியும்.. நீ பிறந்தப்போ உன்னை முதல்ல கைல வாங்கினது நான்தான். அந்த உரிமைல தான் பேசுறேன்.. என்னிக்கு இருந்தாலும் நீ ஒருத்தரை கல்யாணம் பண்ணித்தானே ஆகணும். அது ஏன் தினேஷா இருக்கக் கூடாது.

எங்க கண்ணு முன்னாடி வளர்ந்த பையன். உனக்கும் நல்லா தெரிஞ்சவன். எல்லாத்தையும் விட உன்னை நல்லா தெரிஞ்சவன். யாரோ எவனுக்கோ உன்னை பேச எங்களுக்கு மனசு வருமா என்ன? இல்லை யாரை நம்பி உன்னை நாங்க கல்யாணம் பண்ணி கொடுக்க முடியும். உனக்கு நாங்க கெடுதல் செஞ்சிடுவோமா சொல்லு…” என்று இப்படித்தான் பேசினார்.

எது எப்படி என்றாலும் பைரவிக்கு மனது என்ற ஒன்று இருக்கிறதே.

அதில் அவளின் தனிப்பட்ட கருத்துக்கள், விருப்பங்கள் இருக்கிறதே..

பைரவி சந்தோஷியிடம் பதில் சொல்லாது இருக்க “பைரவி பதில் சொல்லு நீ…” என்றாள் சந்தோஷி.

“என்ன சொல்லட்டும். இப்போ நான் கல்யாணம் பத்தியெல்லாம் நினைக்கவே இல்லை டி.. எங்கம்மா அவ்வளோ பேமஸா இருந்தாங்க.. ஆனா திடீர்னு பாடவே போறது இல்லன்னு நிறுத்துனாங்க.. அதோட காரணம் இப்போ வரைக்கும் எனக்கு புரியல… அவங்க மட்டும் பாடுறத நிறுத்தாம இருந்திருந்தா இப்போ எவ்வளோ பெரிய பேர் புகழ் கிடைச்சிருக்கும்.. எத்தனை விருதுகள் அவங்களுக்கு வந்திருக்கும். இப்படி நான் யாரோ போல மீடியால என்னை காட்டிக்க வேண்டியதே இல்லை.. இன்னாரோட மகள்னு நான் என்னை பெருமையா வெளிப்படுத்தி இருக்கலாம்.

எங்கம்மா அதுலயும் எனக்கு கண்டிசன் போட்டுட்டாங்க.. மீடியாதான் உனக்கான வழின்னா எக்காரணம் கொண்டும் நீ என்னோட பேர சொல்லி முன்னேற கூடாதுன்னு.. கண்டிப்பா எங்கம்மா பேரை நான் யூஸ் பண்ணமாட்டேன்னு தான். ஆனா பெருமையா கூட நான் எங்கம்மா பேரை நான் சொல்லிக்கக் கூடாதுன்னா எப்படி.. இதெல்லாம் எனக்கு எவ்வளோ டென்சன் கொடுக்குதுன்னு யாருக்குமே தெரியாது.

உங்க பேமிலி பத்தி சொல்லுங்கன்னு யாரும் கேட்டிடுவாங்களோன்னு எனக்கு எவ்வளோ பயம் இருக்குன்னு எனக்குத்தான் தெரியும். அப்பா அம்மா இல்லை. ஆனா இன்னார்னு சொல்லிக்கக் கூட முடியலை… அம்மா இறக்கும்போது இதோ இந்த ஏரியால உனக்கு வீடு இருக்கு நீ அங்கதான் இருக்கணும். முடிஞ்சளவுக்கு நீ அங்க இருக்க ஆளுங்களுக்கு உதவி பண்ணுன்னு வேற சொல்லிட்டாங்க… இதெல்லாம் ஏன் எதுக்குக்கு நான் காரணம் கண்டு பிடிக்கிறதுக்கே எனக்கு வயசாகிடும். உங்கம்மாக்கு எல்லாம் தெரியும் இருந்தும் சொல்லாம இருக்காங்க…” என்ற பைரவி,

“இனி நான் இப்படியே இருக்கப் போறது இல்லை.. அப்பா பேரு மட்டும்தான் எனக்குத் தெரியும்.. அவங்க பக்கம்  வேற யாரையுமே எனக்குத் தெரியாது. அம்மா இந்த நாடுக்கே இன்னார்னு தெரியும்.. கண்டிப்பா ஒரு நாள் நான் இவங்களோட பொண்ணுன்னு சொல்லத்தான் போறேன்…” என்றாள்.

சந்தோஷிக்கு பைரவி பேச பேச, மனது சங்கடமாய் போனது. பைரவி சந்தோசமாய் இருப்பது போல் இருந்தாலும். அத்தனை கஷ்டங்களை மனதிற்குள் தாங்கிக்கொண்டு இருக்கிறாள். இவளது இந்த நிறை குறைகள், வலி, துக்கம் எல்லாம் தெரிந்து புரிந்த ஒருவன் அவளுக்கு கணவனாய் வந்தால் நன்றாய் இருக்கும் என்று எண்ண, தினேஷ் அதற்கு தகுதியானவன் என்றே தோன்றியது.

இருந்தும் பைரவியின் விருப்பம் என்று ஒன்று உள்ளதே..!

“ஓகே… ரிலாக்ஸ் பைரவி… நீ இதெல்லாம் யோசிக்காத… நடக்கும்போது எல்லாமே நல்லதாவே நடக்கும்…” என்று அவளுக்கு ஆறுதல் சொல்ல,

“ஹ்ம்ம் கண்டிப்பா சினிமால ஒரு ஹிட் பாட்டு கொடுத்துட்டு.. அடுத்து நான் சொல்வேன் என்னோட அம்மா இவங்கதான் அப்படின்னு…” என்று பைரவி விடாது பேச,

“நீ கொஞ்சம் எதுவும் யோசிக்காம தூங்கு பைரவி… அப்போதான் நாளைக்கு ஷூட்டிங் நல்லா பண்ண முடியும்…” என்று சந்தோஷி பேச,

“ம்ம்ச்…” என்றவள் அப்படியே புரண்டு குப்புறப் படுத்துக்கொள்ள,

 சிவாவும் அப்படித்தான் குப்புறப் படுத்து பைரவியின் வீடியோக்களை பார்த்துக்கொண்டு இருந்தான்.

கடந்த இரண்டு தினங்களாய் தான் சிவா பைரவியின் வீடியோக்களை பார்த்துக்கொண்டு இருக்கிறான். முகப்புத்தகத்திலும், இன்ஸ்டாவிலும் அவளை பாலோ செய்ய, விடிய விடிய பார்த்தாலும் தீராது போல் இருந்தது.

சில பாடல்கள் அவள் பாடியது எல்லாம் அப்படி மனதை தொடுவது போல் இருந்தது.

பொதுவாய் அவனின் செட்டில் எப்போதுமே பாடல் ஒலித்துக்கொண்டு இருக்கும். ஆனால் அதன் வரிகளில் எல்லாம் அவன் கவனம் செலுத்தியது இல்லை.  இப்போதோ ஒவ்வொரு வரிகளும், வார்த்தைகளும் அவனுக்கு வியப்பைக் கொடுப்பது போலிருக்க, எங்கே தமிழ் மீதே காதல் வந்துவிடும் போலிருந்தது அவனுக்கு.

சில வீடியோக்களை திரும்ப திரும்ப போட்டுப் பார்த்துக்கொண்டு இருந்தான்..

அன்றைய இரவும் அப்படித்தான்

“கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்…

கேட்பதை அவனோ அறியவில்லை…” என்று பைரவி உறுகி உறுகி பாட, சிவாவின் மனதும் உறுகிக்கொண்டு இருந்தது.

                 

    

             

   

 

            

   

 

 

         

    

 

    

 

Advertisement