Advertisement

                           சிவபைரவி – 5

சிவாவிற்கும் சரி, பைரவிக்கும் சரி தங்களை மறந்த உறக்கம். நடந்தவைகளில் இருந்து வெளிவர வேண்டும் என்று சிவாவிற்கும், நடந்ததை தாங்கிக்கொள்ள முடியாது அது கொடுத்த சுய அலசலும், தன் கழிவிரக்கமும் தாங்காது பைரவிக்கும் அப்படியொரு உறக்கம்.

மதியம் முடிந்து, மாலை கூட வந்துவிட்டது. சூரியனும் மறைந்துவிட்டான். இருள் சூழத் தொடங்க, செல்வி மனது கேளாது வீட்டிற்கு வந்து பார்க்க, வீடு உள் பக்கமாய் பூட்டியிருக்க, காலிங் பெல் அடித்துப் பார்த்தார்.

விடாது அடிக்கவும் தான் பைரவிக்கு உறக்கம் களைந்து, “ஹா வர்றேன்…” என்று மெதுவாய் எழுந்து வந்து கதவைத் திறந்தாள் பைரவி.

“என்ன செல்விம்மா?”

“இன்னா பாப்பா… தூங்கிட்டியா?” என்றபடி செல்வி உள்ளேவர,

“ம்ம் ஆமா… நான் தான் பாத்துக்கிறேன் சொன்னேன் தானே…” என,

“மனசு கேட்கல பாப்பா…” என்றவர் “சப்பாத்தி போட்டு வச்சிட்டு போறேன். கடை எடுத்து வச்சிருக்கேன்..” என்று வேகமாய் செல்வி அடுப்படிக்குள் போக, பைரவிக்கு அப்போதுதான் எத்துனை நேரம் உறங்கி இருக்கோம் என்று புரிந்தது.

தன் முகத்தை அழுந்தத் துடைத்தவள், “செல்விம்மா நீங்க கடைக்கு போங்க. நான் அங்கேயே வந்து சாப்பிட்டுக்கிறேன். எனக்குன்னு தனியா எல்லாம் செய்யவேணாம்…” என,

செல்வி நம்ப மாட்டாமல் ‘ஆ..!’ எனப் பார்க்க,

“என்ன?” என்றாள் பைரவி.

“என் கடைக்கு, நீயா பாப்பா…?” என்று ஆச்சர்யமாய் கேட்க,

“ம்ம் ஏன்?!” என்றாள்.

“அங்கன உக்கார கூட இடமிருக்காது… நீயெல்லாம் அங்க வர வேணாம் பாப்பா.. பசங்க ஆளுங்கன்னு நிறைய இருப்பானுங்க.. எல்லாரும் ஒரே மாதிரின்னு சொல்ல முடியாது…”

“பரவாயில்ல.. நான் இப்போ வெளிய போறேன்.. நீங்க கடைக்கு போங்க.. வர்றப்போ நான் அங்க வந்து சாப்பிட்டுக்கிறேன்.. இல்ல வாங்கிட்டு வந்துடுறேன்…” என்றவள் அவளின் அறை நோக்கிப் போக, செல்வி வேறு வழியில்லாது அவரின் கடைக்குச் செல்ல, சிவா அப்போது தான் உறக்கம் விடுத்து எழுந்திருந்தான்.

செட்டிற்கு வெளியே வந்து, முகத்தைக் கழுவியவன், செல்வி இல்லாமல் கடை மட்டும் இருக்கவும் சிண்டுவிடம் கேட்க “டிவிக்காரக்க வீடுக்கு போயிருக்கு…” எனும் போதே செல்வி வந்துவிட, கேள்வியாய் பார்த்தான் சிவா.

“இன்னா கண்ணு நீயும் இப்போதான் முழிச்சியா?! அந்த பாப்பாக்கு ரெண்டு சப்பாத்தி போட்டு வச்சிட்டு வரலாம்னு போனேன். நல்ல தூக்கத்துல இருந்து இப்போதான் அதுவும் எழுந்துச்சு. வெளிய போகுதாம். கடைல வந்து சாப்பிட்டுக்கிறேன். நீங்க போங்கன்னு சொல்லிடுச்சு. இன்னாதான் புள்ளையோ அது. நம்ம கடைக்கு வந்து அது நிக்க கூட முடியுமா?! கொஞ்சம் கூட அது பந்தா பண்றது இல்ல.. செல்விம்மான்னு வாய் நிறைய கூப்பிடுது.. இதேது மத்தவங்க வீடுன்னா வேலைக்காரிய பேர சொல்லித்தான் கூப்பிடுவாங்க…” என்று பேசியபடி அவரின் வேலையை ஆரம்பிக்க,

சிவா அங்கேயே ஒரு ஸ்டூலை இழுத்துப் போட்டு அமர,

“ஆம்லேட் போட்டுத் தரவா கண்ணு?” என்றார் செல்வி.

“நீ முதல்ல அடுப்பப் பத்த வை…” என்றவன்

“டேய்…!” என்றழைக்க,

“ண்ணா…” என்று வந்து நின்றான் சிண்டு.

“போ… போய் நல்லதா ஒரு டீ வாங்கின்னு வா…” என,

“சரிண்ணா…” என்று அவன் போக,

“அந்த பாப்பா போடுற டீ இருக்கே… யப்பா..!! அப்படியே நாக்குல நிக்கும்.. சூப்பரா டீ போடும்… டெய்லி எனக்கு அதுதான் போட்டுத் தரும். இஞ்சி, ஏலக்கா, பட்டைன்னு எல்லாம் தட்டி போட்டு யப்பா! நினைச்சாலே வாசனை இப்போகூட வருது…” என்று செல்வி  அவர்பாட்டில் பேச,

“ம்ம்ச் கசகசன்னு பேசாம வேலைய பாரு…” என்று கடிந்த சிவாவிடம் மணி வந்து அமர்ந்தவன் “என்ன மாப்ள இவ்வளோ நேரம் தூங்கின்னு இருக்க?” என,

“சும்மாதான்…” என்றான் இவன்.

“சும்மாவே நீ தூங்கமாட்ட. இதுல இப்படி ஏன் தூங்கின அப்படின்னு கேட்டா நீ சும்மான்னு சொல்ற… ஹ்ம்ம்.. என்னவோ நீ சரியில்ல…” என்று மணி பேசும்போதே, சிண்டு டீ வாங்கிக்கொண்டு வந்துவிட்டான்.

“ண்ணா சூப்பர் மசாலா டீ…” என்று நீட்ட,

அதனை வாங்கிப் பருகிய சிவாவிற்கு அந்த டீ ருசிக்கவே இல்லை.

“இன்னாடா இது… கன்றாவியா இருக்கு…” என்று முகத்தை சுளிக்க,

“ண்ணா எப்பவும் போடுறது விட ஸ்பெசலா போட்டு வாங்கின்னு வந்தேன்…” என்றான் சிண்டு.

“வாய்ல வைக்க முடியல…” என்று சிவா மீண்டும் பருக, சுடு நீர் குடித்தது போல் தான் இருந்தது.

ஆனால் நிஜமாகவே அந்த டீ நன்றாய் தான் இருந்தது. சிவாவிற்குத் தான் எதுவும் மனதில் ஒட்டவில்லை. நாக்கிலும் கூட.

மிகவும் கடினப்பட்டு குடிப்பதுபோல் சிவா குடிக்க, சிண்டு ஒன்றும் புரியாது மணியைத் தான் பார்த்தான். அவனுக்கும் எதுவும் புரியவில்லை. ஒருவேளை காலையில் நடந்த களேபரத்தில் இப்படி இருக்கிறானோ என்று பார்க்க, சிவா மணியோடு வண்டிகள் விசயமாய் பேச,  செல்வி அதற்குள் இட்லி அவித்து, காரச் சட்னி செய்து கடையை ஆரம்பித்து இருக்க, கொஞ்சம் கொஞ்சமாய் கூட்டம் வரத் தொடங்கியது.

சிவா எதுவும் செய்யவில்லை. அப்படியே அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தான். மனது என்னவோ சோம்பலாய் இருக்க, அது உடலிலும் தெரிவது போலிருக்க, எதுவும் செய்யவில்லை.

“என்னடா இப்படி உக்காந்துன்னு இருக்க…” என்று மணி கூட ஓரிரு முறை கேட்க,

“ம்ம்ச் இப்போ உனக்கு இன்னா வேணும்…” என்று எரிந்து விழுந்தவன், அப்போதும் இடத்தை விட்டு எழுந்தான் இல்லை.

பைரவி அடித்ததும் அவனுக்கு மனதில் வந்துகொண்டே இருந்தது. இப்படி, ஒரு பெண்ணிடம் அடி வாங்கிவிட்டோமே என்று தன்னைக் குறித்தே அவனுக்கு அசிங்கமாய் இருந்தது.

தன்னுடைய கண்மூடித் தனமான கோபம் தானே இதற்குக் காரணம் என்று சரியான வழியில் அவன் சிந்திக்க, மேலும் அங்கேயே அமர்ந்திருந்தால் சரிபட்டு வராது என்றெண்ணி, எழுந்து தன் பைக்கைக் கிளப்பிக்கொண்டு பீச் சென்றுவிட்டான்.

மனது ஒருநிலையில் இல்லை என்றால் சிவா எப்போதும் செல்லுமிடம் பீச் தான்.

ஒருமணி நேரமோ இல்லை இரண்டு மணி நேரமோ, அங்கே அமர்ந்துவிட்டால், அவனுக்கு என்னவோ மனது இலகுவாய் போகும் என்ற எண்ணம்.

அப்படித்தான் இதுநாள் வரைக்கும்.

இப்போதும் அப்படியே செல்ல, அவனின் நேரமோ என்னவோ, அவனுக்கு முன்னே அங்கே பைரவி இருந்தாள்.

அவளுக்கும் அப்படியே, மனது ஒருமாதிரி இருக்கிறது என்றாள் கடற்கரைக்குச் சென்றுவிடுவாள். கடல் அலைகளில் சில நிமிடங்கள் கால் நனைத்துவிட்டு, பின் வந்து அமர்ந்து வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்திருப்பாள். மனதை அழுத்தும் பாரங்கள் எல்லாம் அந்த கடல் மண்ணின் ஈரத்தில் கரைந்து போவதுபோல் இருக்கும் அவளுக்கு.

இன்றும் அதுபோல் ஒரு தனிமையை நாடி பைரவி வந்திருக்க, அவளுக்கு சிவாவும் எங்கே வந்திருப்பது தெரியாது.

சிவாவிற்கும் தெரியாது. அவன் ஒருபக்கம் அமர்ந்து வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். அமைதியாய் இருந்தாலும் மனம் மீண்டும் மீண்டும் காலையில் இருந்து நடந்தவைகளில் உழன்றுகொண்டு இருந்தது. செல்வி வந்து அறிவுரை சொன்னது நிஜமே.

தன் கோபத்தை இனியேனும் குறைத்திட வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் நினைக்கிறான் ஆனால் அது முடிவதாய் காணோம்.

“ம்ம்ச்… இப்படி ஒரு பொண்ணு, அதுவும் ஏரியாக்கு புதுசா வந்த பொண்ணு கைல அடிவாங்குற நிலை வந்திடுச்சே…” என்று அவனுக்கு அவனே கன்னத்தை அழுந்தத் தடவி முனங்க, தன் மீதுதான் அவனுக்கு ஆத்திரம் அதிகமானது.

‘அப்படி என்ன உனக்கு அவசரம் ஆத்திரம்.. அங்க இருக்க பொருள் மேல கை வைக்க உனக்கு என்ன உரிமை இருக்கு. அந்த ஜான் தப்பு செஞ்சா அவனை அடி. அதுக்கு பதிலா நீ இப்படி நடக்கலாமா?’ என்று தனக்கு தானே கேள்வி கேட்டு அமர்ந்திருக்க, ஒருநிலைக்கு மேலே அமர்ந்திருக்கவும் முடியவில்லை.

எழுந்து மெல்ல நடக்க ஆரம்பிக்க, சிறுவர்கள் சிலர் கடல் அலையில் கால் நனைத்து விளையாடிக்கொண்டு இருக்க, அவர்களைப் பார்த்தபடி நடந்தவன், கரைப்பக்கம் இருந்து மற்றொரு சிறுவன் ஓடி வந்ததை கவனிக்கவில்லை. ஓடி வந்தவனும் கவனிக்கவில்லை, நடந்து சென்றவனும் கவனிக்கவில்லை.

இருவரும் மோதிக்கொள்ள, அடுத்த நொடி இருவருமே விழ, நல்ல வேலை சிவா சமாளித்து நிற்க, அந்த சிறுவனோ அங்கேயே பக்கத்தில் அமர்ந்திருந்த பைரவி மீது விழ,

“அச்சோ பார்த்து பார்த்து…” என்று அவனைத் தூக்கியவள், கொஞ்சம் அரண்டு தான் போனாள்.

அவளும் இதனை எதிர்பார்க்கவில்லையே.

சிவாவும் “பார்த்து வர மாட்டியா?” என்று கேட்டபடி அவனருகே செல்ல, பைரவி மாஸ்க் அணிந்திருக்க, முதலில் அவன் கவனிக்கவில்லை. பின்னே அவளின் அந்த குரல் தான் அவளை உற்றுப் பார்க்க வைக்க, இவனைக் கண்டதும், திடுக்கிட்டு சுருங்கி விரிந்த அவளின் கண்கள் அவளே தான் என்று உறுதி படுத்த,

‘இங்கயுமா?!’ என்று அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அவளாலும் தான்.

அந்த சிறுவனோ “சாரி சாரி…” என்று சொல்லியபடி ஓடிவிட, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றிருந்தனர்.

இருவரின் சந்திப்புகள் எப்போதுமே பொதுவில் தான் இருக்கும். அருகே செல்வி இருப்பார். இவனோடு மணி பலநேரம் இருப்பான். பொதுவானதொரு பேச்சு கூட அதிகம் இருக்காது.

ஆனால் இப்போது பொது இடம் என்றாலும் கூட இருவரும் தனித்து இருக்க, சிவாவிற்கோ நடந்து நகர்ந்து செல்வதா இல்லை நிற்பதா என்றும், பைரவிக்கோ மீண்டும் சென்று அமர்ந்துகொள்வோமா இல்லை இப்படியே கிளம்பிடுவோமா என்றும் சிந்தனை படர, இருவரும் அப்படியேத்தான் நின்று இருந்தனர்.

“க்கா சுண்டல் க்கா… சூடா இருக்குக்கா…” என்று ஒரு சிறுமி வந்து அங்கே நிற்க,

‘வேணாம்…’ என்று சொல்ல நினைத்தாலும் பைரவிக்கு பசி வேறு எடுக்க அந்த சிறுமி நீட்டிய ஒரு பொட்டலத்தை வாங்கிக்கொண்டாள்.

சிவாவிற்கும் நல்லதொரு பசிதான். எப்போதுமே வயிறு நிறைய உண்டுவிடுவான். இன்று மதியமும் உண்ணவில்லை இல்லையா. அதனால் அவன் இரண்டு  பொட்டலங்கள் வாங்கிக்கொள்ள, அந்த சிறுமிக்கு ஏக சந்தோசம்.

பைரவி நூறு ரூபாய்  நோட்டினை எடுத்துக்கொடுக்க, சிவா ஐம்பது ரூபாய் நோட்டினை எடுத்துக்கொடுக்க,

“சில்ரை இல்லக்கா…” என்றாள் அந்த பெண் பாவமாய்.

“பரவாயில்ல வச்சுக்க..”  என,

“அப்படிலாம்  வாங்கினா அம்மா திட்டும்…” என்ற சிறுமி,

“அந்த அக்காக்கு பாக்கி கொடுத்திடுங்க…” என்று சொல்லி அவளிடம் வாங்கிய நூறு ரூபாயையும், மீதம் ஐந்து ரூபாயை சிவாவிடமும் கொடுத்துவிட்டு “வாங்கிக்கோங்க க்கா…” என்று சொல்லிவிட்டு வேகமாய் நடந்துவிட்டாள்.

எங்கே இன்னும் நின்றால் வேண்டாம் என்று சொல்லி கூட திரும்ப கொடுத்துவிடுவார்களோ என்ற பயம்.

‘ஓ! காட்…’ என்று வேகமாய் முணுமுணுத்தவள், சுற்றி முற்றி பார்த்தாள், யாரிடம் சில்லறை கேட்பது என்பதுபோல்.

சிவாவிற்கு அது புரிய “என்கிட்டேயே சில்லறை இருக்கு..” என்றான் மெதுவாய்.

“அது அப்போவே சொல்லிருக்க வேண்டியதுதானே…” என்றவள், பணத்தை நீட்ட,

“ஒரு பொட்டலம் பதினைஞ்சு ருபாய்.. அதுல நான் ஒன்னும் குறைஞ்சு போயிடமாட்டேன்.. நீ சாப்பிடு..” என்று சொல்லி நகரப் பார்க்க,

“அப்படியெல்லாம் எனக்கு உங்கக்கிட்ட வாங்கி சாப்பிடனும்னு எதுவும் இல்லை…” என்றாள் பைரவி கோபமாய்.

செய்வது எல்லாம் செய்துவிட்டு, என்னை அழவும் வைத்துவிட்டு, இப்போது நல்லவன் போல பேசுவது என்ன? அவளின் கண்கள் அவளின் கோபத்தை பிரதிபலிக்க, வேகமாய் பைரவி மாஸ்க்கையும் கழட்டிவிட்டு பேச, அப்போதுதான் அவனுக்குத் தெரிந்தது அவளின் முக வித்தியாசம். அழுததின் அடையாளமாய் முகம் வீக்கம் காட்டி இருக்க, கண்களும் அத்தனை ஒன்றும் பிரகாசமாய் இல்லை.

‘அழுதிருக்கா…’ என்று மனது நினைக்கும் போதே,

“ஹெலோ…” என்று அவள் பேச,

“ம்ம்ச் பதினைஞ்சு ருபா தானே.. நீ எப்போவேனா குடு…” என்றான் எரிச்சலை அடக்கி.

“பதினைஞ்சு ருபாய் இல்லாம ஒன்னும் நான் இல்லை…” என்றவள் வேகமாய் நடந்து அங்கிருந்த ஒரு கடையில் சில்லறை மாற்றி வந்து அவனிடம் கொடுக்க, பிடுங்காத குறையாய் வாங்கிக்கொண்டான் சிவா.

‘எங்கம்மா சொன்னது சரிதான். சரியான திமிர் தான் இவளுக்கு…’ என்று நினைக்க,

“உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்…” என்றாள் அடுத்து.

‘என்னடா இது…’ என்று பைரவியைப் பார்க்க,

“இப்படி உக்காந்து பேசலாமா..?” என்று அடுத்து சொல்ல,

“என்ன பேசணும்…” என்றான் நின்றபடி.

இப்படி பீச்சில் அமர்ந்து ஒரு பெண்ணோடு பேசுவது என்பது எல்லாம் அவன் கனவில் கூட கண்டது இல்லை. அதுவும் பைரவியோடு.. ஏனோ கொஞ்சம் படபடப்பாய் இருந்தது. அதனைத் தவிர்க்கவே நின்றபடி பேச, “உக்காந்து பேசினா எதுவும் ஆகிடாது…” என்றபடி பைரவி அங்கே அவள் அமர்ந்திருந்த இடத்தில் மீண்டும் அமர்ந்துகொள்ள, சிவாவிற்கு வேறு வழியில்லை.

கொஞ்சம் இடைவெளிவிட்டு அமர, பைரவி லேசாய் பார்வையை மட்டும் திருப்பிப் பார்க்க, அவளின் அருகே அமரவும் வேகமாய் அவன் நாசியில் நுழைந்தது அவளின் பெர்பியும் வாசம்.

அவனையும் மீறி ஒரு ஆழ மூச்சு எடுத்து விடுக்க ‘சிவா நீ என்ன பண்ற?’ என்று அவனது மனசாட்சி வந்து தலையில் குட்டியது.

முதல் முறையாய் ஏதோ ஒரு தடுமாற்றம் அவனுள் அவனே உணர, பைரவிக்கு அதெல்லாம் இல்லை. அவளுக்கு ஆண் பெண் பேதமெல்லாம் பெரிதாய் இல்லை.  பைரவி சிவாவின் முக மாற்றங்களை எல்லாம் எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை. சிவாவிடம் பேசவேண்டும் என்று எண்ணியது நிஜமே. இப்போது அவனே நேரில் வரவும் அதனை நடத்திக்கொள்ள நினைத்துவிட்டாள்.

“உங்கக்கிட்ட நான் நிறைய தேங்க்ஸ் சொல்லிருக்கேன் இதுவரைக்கும். நேத்து கூட. நீங்க செஞ்ச உதவிக்கு மனசார நன்றி சொன்னேன்.. ஆனா இன்னிக்கு நடந்தது எல்லாமே வேற. உங்களோட கோபம் நியாயம் தான். ஆனா அதை நீங்க வெளிப்படுத்திய விதம் தப்பு…” என்று தன்மையாகவே பேச,

“அதுக்கு?” என்றான் சாதாரணமாய்.

அவன் கேட்டது இயல்பாய் தான் கேட்டான். ஆனால் அது பைரவிக்கு குதர்க்கமாய் பட,

“பொறுமையா பேசவே மாட்டீங்களா?” என்றாள் அவனை நேருக்கு நேர் பார்த்து.

அவளின் அந்த நேர்கொண்ட பார்வையை சிவாவினால் அந்த நொடி தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

தன்னுடைய தடுமாற்றம் பைரவிக்கு தெரியக்கூடாது என்பதிலேயே சிவா குறியாய் இருக்க, “ம்ம்ச் என்ன விஷயம் அதை சொல்லு…” என்றான் பார்வையை வேறெங்கோ திருப்பி.

“நீங்க பேசிக்கலி நல்ல டைப்.. எல்லாருக்கும் ஹெல்ப் பண்றீங்க. தப்புன்னா தட்டி கேட்குறீங்க. ஆனா உங்க கோபம் இருக்கே, அதை வெளிப்படுத்துற விதம் தப்பு. உங்க மரியாதையை கீழ இறக்கித்தான் உங்க கோபம் வெளிப்படனும்னா, அப்படிப்பட்ட கோபம் உங்களுக்குத் தேவையா?” என, சத்தியமாய் அவளின் வார்த்தைகள் சிவாவிற்கு புரியவில்லை.

முதலில் இப்படியெல்லாம் அவனைப் பற்றியே அவனிடம் யாரும் பேசியதில்லை. நீ செய்வது தவறு என்று அவனின் பெற்றோர் கூட சொல்லியதில்லை. அதிலும் அவனின் நடத்தைப் பற்றி இதுவரை யாரும் பேசியதில்லை. ஒருவேளை பேசும் தைரியம் வரவில்லையோ என்னவோ.

செல்வி வந்து காலையில் பேசினார்தான். ஆனால் இப்போது பைரவி பேசுவது என்னவோ மனதை பிசைவது போல் இருந்தது. யாரோ ஒருத்தி… அதுவும் புதிதாய் வந்தவள். அவள் வந்து உன்னைப் பற்றி பேசும்படியா நீ இருக்கிறாய் என்று யோசிக்க,

“என்னடா இப்படி பேசுறான்னு தப்பா நினைக்கவேணாம்…” என்றாள் ஒரு கசப்பான சிரிப்பை சிந்தி.

“இல்ல.. நீ.. நீ என்ன பேசுறன்னு எனக்கு புரியலை…” என்றான் சிவா வெளிப்படையாகவே.

“என்னது புரியலையா?”

“ஆமா.. என் மரியாதை எங்க கம்மியாச்சு…” என்று வேகமாய் கேட்க,

“என் பார்வைல… ஜான் பார்வைல.. இப்படி அடுத்து அடுத்து நீங்க வேற யார் யார் மேலயும் கோபம் காமிச்சு சத்தம் போட்டாலோ இல்லை அடிச்சாலோ அவங்க பார்வைல… இப்படி…” என்று பைரவி சொல்ல,

“ஓ..!” என்றான் சிவா.

“ம்ம்ம்… நேத்து நைட் வரைக்கும் உங்களை நல்லவர்னு நினைச்சேன் ஆனா இப்போ அப்படி முழுசா நினைக்க முடியாது இல்லையா?” என்று அவனிடமே கேள்வி கேட்க,

‘அட ஆண்டவா இந்த பொண்ணு என் வாயாலயே நான் நல்லவன் இல்லைன்னு சொல்ல வச்சிடுவா போலவே…’ என்று சிவா நினைக்க,

“மச்சி… சிவா… இன்னாடா பீச்ல…” என்று நாலைந்து இளைஞர்கள் பக்கம் வர,

“போச்சுடா…” என்று வேகமாய் எழுந்துகொண்டான்.

‘அப்பாடி தப்பித்தோம்…’ என்ற உணர்வும் இருக்க, இப்படி பைரவியோடு அமர்ந்து பேசியதை இவர்கள் எப்படி காண்பார்களோ என்று இருக்க, பைரவி என்னவோ இயல்பாய் அவர்களைப் பார்க்க,

“நீங்க சிங்கர் பைரவி தானே…” என்று ஒருவன் கேட்க,

“ம்ம்…” என்று பைரவி புன்னகைக்க,

“போன வாரம் நீங்க பேஸ்பூக்ல போட்ட வீடியோ சூப்பர்ங்க.. செமையா பாடுறீங்க…” என்று அவனும் பேச, சிவாவிற்கு புசுபுசுவென்று எரிச்சல் வந்தது.

நம்மைத் தவிர மற்றவர்கள் அனைவருக்கு இவளைத் தெரிந்திருக்கிறது என்று.

“உங்க ரீல்ஸ் எல்லாம் விடாம பார்ப்பேன்.. எங்கம்மாக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்…” என்று இன்னொருவன் சொல்ல,

“தேங்க்ஸ் சொன்னேன் சொல்லிடுங்க…” என்றாள் சிரித்தபடி.

“டேய் இன்னாடா இங்க?!” என்று ஒருவன் ஜாடையில், பைரவியை காட்டி சிவாவிடம் பேச,

சிவா பதில் சொல்வதற்குள் பைரவி சுதாரித்துவிட்டாள்.

“இவங்க ஏரியாக்கு புதுசா வந்திருக்கேன்.. இங்க திடீர்னு பார்த்தேன் அவ்வளோதான்…” என்றவள்

“ஓகே…” என்று தலையாட்டி, சிவாவிடம் ‘நான் போகிறேன்…’ என்று கண்ணசைவில் சொல்லிவிட்டு நடக்க, சிவாவிற்கோ ஐயோ என்று இருந்தது.

‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன?!’ என்று எங்கிருந்தோ பாடல் சத்தம் வர, சிவாவின் பார்வை பைரவியை தொடர,

“டேய்…. இங்க எங்கள பாருடா…” என்று வந்தவர்கள் அவனைத் திருப்ப,

“ம்ம்ச் இன்னாங்கடா…” என்று எரிச்சலை அடக்கியே திரும்பினான்.

“பைரவிக்கு எத்தினி பேன்ஸ் இருக்காங்க தெரியுமா…” என்று ஒருவன் பேச,

“டேய்.. எத்தினி பேரு இருந்தா இன்னாடா.. டிவிக்காரி…” என்று எதுவோ சொல்லி, கொஞ்சம் மோசமாய் ஒருவன் பேச, சிவா பட்டென்று அவனை அடித்துவிட்டான்.

“தப்பா பேசின தொலைச்சிடுவேன்…” என்று விரல் நீட்டி மிரட்ட,

அடிவாங்கியவன் கன்னத்தில் கைவைத்து திகைத்து நிற்க “டேய் டேய் அவள பேசினா உனக்கின்னா நோவுது…” என்று மற்றொருவன் கேட்க,

“பைரவி நிக்கும்போது பல்ல காட்டிட்டு பேசின இப்போ இன்னா?” என்று சிவாவும் எகிற,

“அப்படித்தான்.. அதுக்காக.. அடிப்பியா நீ…” என்றான் அடி வாங்கியவன்.

இவர்கள் எல்லாம் கல்லூரி கால நண்பர்கள்.. அதனால் கொஞ்சம் உரிமையும் கோபமும் ஜாஸ்தியே..

“அடியோட விட்டேன்னு இரு… ஒருத்தர் இருந்தாலும் இல்லைன்னாலும் அவங்க முன்னாடினாலும், பின்னாடினாலும் எப்பவும் ஒரே மாதிரி பேசணும்.. அப்படி இல்லையா முகத்தை திருப்பிட்டு போயிட்டே இருக்கணும்…” என,

“நீ ஒரு தினுசா தான் பேசுற…” என்றான் ஒருவன்.

“ஷ்…!” என்று தன் நெற்றியை கீரியவன்,

“நான் கிளம்புறேன்… பேசிக்கின்னே போனா சண்டை தான் வரும்…” என்று நடக்க,

“டேய்… விழுந்துட்டன்னு நல்லா தெரியுது…” என்று அவர்களின் கிண்டல் அவன் செவியைத் தொட,

“போங்கடா டேய்…” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே நடந்தான் சிவா.

       

           

               

            

      

          

 

            

   

  

           

 

      

 

            

Advertisement