Advertisement

                           சிவபைரவி – 4

அதிசயமாய் மகன் வீடு வந்திருப்பது பார்த்து ரஞ்சிதம் கேள்வியாய் மகனை நோக்க, அவனோ வந்ததும் அப்படியே அங்கிருந்த இருக்கையில் பொத்தென்று அமர, நடந்த விஷயங்கள் எல்லாம் ஓரளவு ரஞ்சிதம் காதிற்கும் வந்திருந்தது தான். ஆனால் மகன் அதனை முன்னிட்டு இப்படி வீடு வருவான் என்றெல்லாம் யோசிக்கவில்லை.

இதுபோல் எத்தனை எத்தனை அவன் பார்த்திருப்பான். எத்தனை பேர் அவனிடம் அடி வாங்கி இருப்பர். இதெல்லாம் புதிதா என்ன?!

ஆனால் ரஞ்சிதம் அறியாத ஒன்று பைரவியிடம் சிவா அடி வாங்கியது..

“இன்னாடா… என்னாச்சுன்னு இப்படி வந்து உக்காந்துருக்க.. சாப்பிடுறியா?” என்றபடி டிவியை அணைத்துவிட்டு மகனிடம் எழுந்து வர,

“ம்ம்ச் ஒண்ணுமில்ல.. கொஞ்சம் சும்மா இரு…” என,

“என்ன சும்மா இருக்க. எல்லாம் என் காதுக்கும் வந்துச்சு…” என்றவர் “இப்படி எத்தனை எத்தனை பார்த்திருப்போம். பின்ன என்ன?” என்றார் கொஞ்சம் கோபமாய்.

அவருக்கு மகன் வந்து இப்படி சோர்ந்து அமர்ந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“இப்போ என்ன? நான் இந்த நேரம் வந்தது தப்பு அப்படித்தான?” என்று சிவா எரிந்து விழ,

“ஏய்… ஏய்…!” என்றவர் “நீ என்னவோ பண்ணு…” என்றுவிட்டு மீண்டும் டிவியை போட்டுக்கொண்டு அமர,

‘அதான பார்த்தேன்…’ என்று ஒருபார்வை பார்த்தான் சிவா.

இதற்குமேல் அங்கே பேச்சுவார்த்தை இருக்காது என்பது தெரியும். இவர்களின் சத்தத்தில் சொக்கன் எழ, “என்ன வேணும்?” என்பதுபோல் ரஞ்சிதம் அவரைப் பார்க்க,

அவரோ ‘என்ன சத்தம்?’ என்று சைகையில் கேட்க,

“ஒண்ணுமில்ல சும்மாதான்…” என்ற ரஞ்சிதம் மீண்டும் டிவிக்கு பார்வையை திருப்ப, சொக்கன் மகனைப் பார்த்தார்.

அப்போதும் கூட சிவாவிற்கு அப்பாவின் அந்த பழைய தோற்றம் நினைவில் வந்தது. பள்ளிவிட்டு வரும்போது அவனை தூக்கிக்கொண்டு வரும் அப்பா, அவன் பேசுவதை எல்லாம் புன்னகைத்து கேட்கும் அப்பா, வேண்டும் என்பதை எல்லாம் கடினப்பட்டேனும் வாங்கித் தரும் அப்பா என்று கண் முன்னே பழைய காட்சிகள் வந்துபோக, இன்று ஏனோ அவனுக்கு நாளே நன்றாய் இல்லையோ என்று இருந்தத.

பொதுவாய் சிவா, தன்னை எந்தவொரு விசயமும் பாதிக்கும்படி இருக்கமாட்டான். மனதை உடனே வேறு ஒன்றி செலுத்திவிடுவான். ஆனால் இன்று ஏனோ அப்படி இருக்க முடியவில்லை. பைரவி அடித்தது ஒருபுறம் இருந்தாலும், அவளின் அந்த ‘யாருமில்லாத நிலை…’ அவனை வெகுவாய் பாதித்தது.

ஏனோ சொல்ல முடியாத ஓர் அழுத்தம் அவனுள்.

அவனின் அப்பா உடல்நிலை முடியாது மருத்துவமனையில் இருந்த நேரம் அவனின் குடும்பம் எப்படி தவித்தது என்பது அவன் நன்கு அறிந்த ஒன்று.

அப்படி இருக்கையில் யாருமே இல்லாது ஒருத்தி, ஒரு வீட்டினில் வாழ்கிறாள் என்றாள்?! மனது மீண்டும் மீண்டும் அவளின் சிந்தனைக்குச் செல்ல,

‘அதெப்படி யாருமில்லாது இருக்க முடியும்? அப்பா அம்மா இல்லை சரி. சொந்த பந்தங்கள் கூடவா யாருமில்லை..’ என்று யோசிக்க,

இப்போது அப்பா மட்டுமில்லை, அம்மாவும் கூட மகனைத் தான் பார்த்திருந்தார்.

இருவருமே தன்னைக் காண்பது எல்லாம் அவனுக்குத் தெரியவில்லை. சொக்கன் அறையில் படுத்திருந்தபடியே மகனைக் கண்டவர் என்ன நினைத்தாரோ, மெல்ல எழுந்து அமர, அவரின் அசைவு கண்டு, ரஞ்சிதம் அவருக்கு எழுந்து வர உதவ, மெதுவாய் நடந்து வந்தார்.

வந்தவர் மகனின் அருகில் இருந்த இருக்கையில் அமர, அந்த சத்தத்தில் தான் சிவா இயல்பிற்கு வர, ‘என்னாச்சு?!’ என்றார் குழறலாய்.

“ஒண்ணுமில்லப்பா.. ஏரியால சின்ன சண்டை…” என்றான் சிவா.

அம்மாவும் தங்கையும் பேசினாலும் அளவாய் பேசும் சிவா, அப்பா எப்போதாவது பேசினாலும் கண்டிப்பாய் அமர்ந்து பதில் பேசிச் செல்வான்.

“நீ பாக்காத சண்டையா?” இது ரஞ்சிதம்.

அவர் இப்படி சொல்லவுமே, சொக்கன் மனைவியை முறைக்க, சிவாவோ “பெருசா ஒண்ணுமில்ல…” என்றவன் “நான் கொஞ்ச நேரம் படுக்குறேன்…” என்றுசொல்லி இருவரின் பதிலுக்கும் காத்திராது சென்று உள்ளே படுத்தும் விட, எப்படித்தான் அவனுக்கு அந்த நேரத்தில் உறக்கம் வந்ததுவோ தெரியவில்லை.

அப்படியொரு உறக்கம்…!

தன்னை மறந்த உறக்கம்..!

தன்னை மறந்திடவேண்டும் என்ற உறக்கம் அது..!

பொதுவாய் இப்படி ஒரு சூழலில் யாருக்கும் உறக்கம் வராதுதான். ஆனால் சிவா உறங்கினான். இரவில் கூட இப்படி அவன் உறங்கியது இல்லை. இரண்டு மணி நேரம் எப்படி போனது என்றே தெரியவில்லை.

அவன் நன்றாய் உறங்கிக்கொண்டு இருந்த நரம் அங்கே “யக்கா… ரஞ்சிதமக்கா…” என்று இரண்டு மூன்று பெண்கள் வேகமாய் வீட்டினுள் வர,

“என்னங்கடி…” என்றார் ரஞ்சிதமும்.

மெதுவாய் பேசி எல்லாம் அவர்களுக்கு பழக்கம் இல்லை.

அப்பெண்களோ “யக்கா என்ன நடந்திருக்குத் தெரியுமா?” என்று ஆரம்பித்து பைரவி சிவாவை அடித்ததை சொல்ல, பைரவி என்னவோ ஒருமுறை தான் சிவாவை அறைந்தாள், ஆனால் வந்த பெண்களின் கூற்றில் சிவா பலமுறை அடிவாங்கிவிட்டான்.

“அவ்வளோ தைரியமா அவளுக்கு.. இந்தா வர்றேன்… கேட்க ஆள் இல்லையா என்ன? அந்த செலுவி அங்கதானே இருக்கா..? அவளுக்கும் இருக்கு…” என்று சத்தம் போட்டபடி ரஞ்சிதம் சேலையை இழுத்து சொருகி நேராய் பைரவி வீட்டிற்கு நடையை கட்டிவிட்டார்.

சொக்கனுக்கோ வேகமாய் எழுந்து சென்று தன் மனைவியை தடுக்கும் உடல்நிலை இல்லை. அவருக்கு மகனின் கோபமும் வேகமும் நன்கு தெரியும் தானே. அதனால் எப்படியும் ஓரளவு கொஞ்சம் யூகித்து, மெதுவாய் முயன்று மெல்ல சுவர் பிடித்து நடந்து சிவாவை எழுப்பப் போக, அதற்குள் சிவாவின் அலைபேசி பல முறை அழைத்து அவனை கண்கள் திறக்க வைத்தது.

சொக்கனும் அவனை நெருங்கி இருக்க, அப்பா தனியாய் வருவது பார்த்து வேகமாய் எழுந்து அமர்ந்தவன் “ப்பா என்னப்பா…” என்று அவரை தாங்கி, அமர வைக்க, மீண்டும் அவனின் அலைபேசி மணி அடிக்க,

‘எடுத்துப் பேசு…’ என்றார் சொக்கன்.

மணி தான் அழைத்தான்.

“இன்னாடா… ஒருத்தன நிம்மதியா தூங்கக் கூட விடமாட்டீங்களா?” என்று சிவா சத்தம் போட,

மணியோ “சிவா…” என்றழைத்து, அங்கே பைரவி வீட்டினில் ரஞ்சிதமும் அவரோடு சென்ற பெண்களும் சத்தம் போடுவதை சொல்ல,

‘அச்சோ..!’ என்று தலையினில் அடித்துக்கொண்டான்.

“நான் வர்றேன்…” என்றவன் போகவேண்டும் என்பதுபோல் அப்பாவைப் பார்க்க, அவரும் ‘வேகமாய் போ…’ என்பதுபோல் சைகை செய்தார்.

“பார்த்துப்பா…” என்றவன் வேகமாய் பைரவி வீடு செல்ல, அங்கேயோ பைரவி வெளி வராண்டாவில் நின்றிருக்க, ரஞ்சிதம் ஆட்டமாய் ஆடிக்கொண்டு இருந்தார்.

“உன்ன இழுத்துப்போட்டு நாங்க நாலு அடி அடிக்க ஒரு நிமிஷம் ஆகாது…” என்று அவர் பேசிக்கொண்டு இருக்க,

“ம்மா…!” என்றபடி சிவா வர, பைரவி வேகமாய் அவனை முறைக்க, செல்வியோ கையைப் பிசைந்து நின்றிருந்தார்.

அதற்குள் அங்கிருந்தவர்கள் “இன்னா கண்ணு நீ ஒருவார்த்த எங்கட்ட சொல்லமாட்டியா…” என்று அங்கலாய்க்க,

“யார் உங்கள இங்க வர சொன்னது…” என்றவன் “நீ உள்ள போ பைரவி…” என்றான் அவளைப் பார்த்து.

அவ்வளவு தான் பைரவி உட்பட அனைவரும் ‘ஆ!’ என்று பார்க்க,

ரஞ்சிதமோ “இதுவர உன் முன்னாடி நின்னு சத்தம் போட்டு பேச கூட எல்லாம் பயப்படுவாங்க.. இப்போ என்னடான்னா இவ அடிச்சிருக்கா…” என்று சத்தம் போட,

“ம்மா பைரவி என்னை அடிச்சது மிஞ்சி போனா பத்து பேருக்கு தெரியும். இப்போ நீ கத்துற கத்துல இந்த ஏரியா முழுசுக்கும் தெரியப் போகுது…” என்று வார்த்தைகளை கடித்துத் துப்ப,

“அதுக்காக இப்படியே இவளை சும்மா விட சொல்றியா நீ?” என்று எகிறினார்.

“அடிச்சது பைரவி.. அடி வாங்கினது நான். இதை நாங்களே பேசித் தீர்த்துக்கிறோம்…” என்று தெளிவாய் சிவா பேச,

“டேய்…” என்று அப்போதும் ரஞ்சிதம் கோபம் குறையாமல் பேச,

“ம்மா… வீட்டுக்கு போ..” என்றவன் மற்ற பெண்களைப் பார்த்து “நீங்களும் போங்க…” என,

“இன்னா சிவா..” என்று அங்கலாய்த்தனர்.

“ம்ம்ச் சொன்னா கேட்க மாட்டீங்களா நீங்க…” என்று சிவா ஒரு சத்தம் போடவும், அவனின் முகமே சொன்னது அவன் எத்துனை கோபத்தை உள்ளடக்கி இருக்கிறான் என்று.

அதனால் அனைவரும் பேசாது நகர்ந்து செல்ல, ரஞ்சிதமோ பைரவியை முறைத்தபடி செல்ல “உள்ள போக சொன்னேன்தான…” என்றான் சிவா.

“நீ சொன்னா நான் போகனுமா?” என்று பைரவி பதில் சொல்ல,

“தோ தோ இப்படித்தான்… இப்படித்தான் சிவா எல்லாத்துக்கும் ஏகத்தாளமா பதில் சொன்னா. யம்மாடி எவ்வளோ திமிரு…” என்று ரஞ்சிதம் மீண்டும் முன்னே வர,

“ம்மா இப்போ நீ போறியா இல்லியா?” என்று சிவா கத்த, மீண்டும் அங்கே சூழல் சரியில்லை.

செல்வியோ “பாப்பா நீ உள்ள போ…” என,

“செல்விம்மா என் வீடு தேடி வந்து இவன் சண்டை போட்டு பிரச்சனை பண்ணுவான். இந்தம்மா வந்து என்னை சத்தம் போடும். நான் சும்மா இருக்கனுமா..?” என்று பேச, அவ்வளோதான் அத்தனை நேரம் பைரவி மீது மட்டுப்பட்டிருந்த கோபம் இப்போது சிவாவிற்கு மீண்டும் கிளர்ந்து வர,

“ஏய்…! வாயை மூடு…” என்றான் விரல் நீட்டி.

‘அய்யோ…!’ என்று தலையில் அடித்துக்கொண்ட செல்வி “பாப்பா சிவா சொன்னா அதுக்கு எதுனா காரணம் இருக்கும். நீ பேசாம உள்ள வா…” என, சிவா பார்த்த பார்வை ஏனோ பைரவியை அந்த நேரம் வாயடைக்க வைக்க,

செல்வியோ “வா பாப்பா. சொன்னா கேளு…” என,

அப்போதும் பைரவி ரஞ்சிதமை ஒரு பார்வை பார்த்துவிட்டே உள்ளே செல்ல, “சரியான திமிரு டா…” என்றார் மகனிடம்.

“இப்போ நீ இன்னாத்துக்கு என்ன கேட்காம இங்க வந்த?”

“அதுசரி… உன்ன அடிச்சிருக்கா. கேட்டதும் எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா?”

“எதுவா இருந்தாலும் பிரச்சனை எல்லாம் அப்பப்போ முடிச்சு விட்டுடனும். இப்படி வீட்டளவுல வந்து எல்லாம் பெருசு பண்ண கூடாது. அதுவுமில்லாம அது அப்பா அம்மா இல்லாத பொண்ணு. நான் தேவையில்லாம உள்ள புகுந்து ரகளை பண்ணவும் பைரவியும் டென்சன் ஆகிடுச்சு… தப்பு என்மேலயும் தான். இப்போ நம்ம வீட்ல யாராவது வந்து ரகளை செஞ்சா சும்மா இருப்போமா?!” என்று அம்மாவிற்கு எடுத்து சொல்லியபடி நடக்க,

மகன் இத்தனை பொறுமையாய் பேசி எல்லாம் ரஞ்சிதம் கண்டதில்லை. அதிலும் அவரிடம் இத்தனை விளக்கமாய் பேசியது எல்லாம் ம்ம்ஹூம். வீட்டு செலவிற்கு பணம் மாதாமாதம் கொடுத்துவிடுவான். அப்பாவின் வைத்திய செலவுகள் எல்லாம் அவனே பார்த்து விடுவான். தங்கையின் கல்லூரி செலவு இவ்வளவு என்று சொல்லிவிட்டால் அதுவும் தயாராகிவிடும். அதுபோக அம்மாவிடம் அவ்வப்போது பணம் கொடுப்பான்.

அதனை எல்லாம் மகளின் திருமணத்திற்கு என்று ரஞ்சிதம் சேர்த்து வைத்திருக்கிறார். எல்லாம் அவனுக்குத் தெரியும். ஆனால் எதுவும் பேசிக்கொண்டது இல்லை.

சிவாவை பைரவி அறைந்தது எத்துனை பெரிய விஷயம் என்பது ரஞ்சிதம் புரியாமல் இல்லை. அதனை இத்தனை இலகுவாய் மகன் கடந்து வந்தது தான் அவருக்கு புரியவில்லை.

இதேது பைரவி இடத்தினில் வேறு யாரேனும் இருந்திருந்தால், இந்நேரம் அங்கே வீடு என்ற ஒன்றே இருந்திருக்காது. அப்படியிருக்கையில் இது புதிதாய் இருக்க, மகனை கேள்வியாய் ரஞ்சிதம் பார்க்க

“வீட்ல அப்பா தனியா இருக்காரு… நீ போ…” என்றவன் மீண்டும் அவனின் மெக்கானிக் செட்டிற்கு சென்றுவிட்டான்.

வீட்டிற்குப் போனால் தேவையில்லாத பேச்சுக்கள் இனி நீளும். அன்று நடந்தவைகளை சிவா மறக்க நினைத்தான். அதனில் இருந்து வெளிவர நினைக்க, நேராய் செட்டிற்கு சென்று அங்கேயும் படுத்துவிட்டான்.

அங்கே வீட்டினில் பைரவிக்கோ கோபத்தினை அடக்கவே முடியவில்லை. ரஞ்சிதமும் அவரோடு வந்த பெண்களும் அத்துனை பேசியிருந்தனர். பைரவி எதுவுமே பதில் பேசவில்லை ஒன்றைத் தவற “நான் அடிச்சது தப்புன்னா உங்க மகன் பண்ணதும் தப்புதான்…” என்பதைத் தவிர.

ஜான் மீது தவறே இருந்தாலும், அவளால் சிவா செய்ததை ஏற்க முடியவில்லை.

அவளின் அந்த ரெக்கார்டிங் அறை இப்போது வெற்று அறையாய் இருந்தது. அம்மா இல்லாத அவளின் வாழ்வு போல. எப்போதும் இப்படியெல்லாம் யோசிக்கவே கூடாது என்பதால் தான் எப்போதுமே தன்னை தானே பைரவி மிகவும் பிசியாய் வைத்திருப்பாள்.

அவள் உறங்குவது கூட தன்னை மீறித்தான்.

நட்புப் பட்டாளம் ஏராளம்.

அதில் ஜான், தினேஷ், சந்தோஷி, அகிலா இவர்கள் தான் நெருக்கம்.

அதிலும் இப்போதுதான் அகிலாவிற்கு திருமணம் முடிந்து இருந்தது. அவள் ஹனிமூனில் இருக்க, தினேஷ் போலீஸ் அதிகாரி. ஜான் இவளைப் போல் இசை துறையில் இருக்கிறான். அவளின் மேனேஜர் என்றும் கூட சொல்லலாம். சந்தோஷி அவள் அம்மாவின் நெருங்கிய தோழியின் பெண். அவளும் இப்போது அவளின் மாமா வீடு சென்றிருக்க, யாரிடமும் இப்போது மனம் விட்டு பேசும் நிலையில் இல்லை.

எப்படியும் ஜான் நடந்தவைகளை இவர்களிடம் சொல்லுவான் என்பது தெரியும். இருந்தும் இதனையே திரும்ப திரும்ப பேசவோ, நினைக்கவோ விருப்பமில்லை.

ஒருமுறை அந்த ரெக்கார்டிங் அறைக்கு சென்று பார்த்தவள், செல்வியை அழைத்து “நீங்க கிளம்புங்க செல்விம்மா.. நைட்டுக்கு ரெண்டு சப்பாத்தி நானே போட்டுக்கிறேன். நாளைக்கு வாங்க…” என,

“அதில்ல பாப்பா…” என்று அவர் தயங்க,

“ஒன்னும் ஆகாது நீங்க கிளம்புங்க. நான் கொஞ்சம் தனியா இருக்கணும்…” என்றாள் பைரவி.

“யாரும் வந்து சத்தம் போட்டா…”

“போடும்போது பாப்போம்…”

“இல்ல நான் வெளிய இருக்கேனே…”

“வேணாம் செல்விம்மா.. நான் கொஞ்ச நேரம் தூங்கிட்டு வெளிய கிளம்பிடுவேன்.. நைட் தான் வருவேன். நீங்க போங்க.. காலைல வாங்க…” என,

“இல்ல நீ வந்தபின்ன நான் வந்து நைட் படுக்கிறேன்…” என்றார் செல்வி.

எப்படியும் அங்கே ஏரியாவில் இந்த செய்தி பரவ, நிச்சயம் யாரேனும் வந்து தகராறு செய்வர் என்பது செல்வியின் எண்ணம்,

“உங்க பொண்ணு தனியா இருக்குமே..”

“அவளையும் கூட்டி வந்துடுறேன்..” என, அதற்குமேல் பைரவியால் மறுக்க முடியவில்லை.

செல்வி கிளம்பவும், வீட்டினை உள்பக்கம் பூட்டிக்கொண்டவள், அங்கிருந்த சோபாவில் படுத்துக்கொள்ள, முதல்முறையாய் தனக்கு யாருமில்லை என்பதை வலியுடன் உணர்ந்தாள் பைரவி.

அம்மாவின் இறப்பிலேயே இது புரிந்த ஒன்றுதான்.

ஆனால் இன்று ஏனோ, தன் வீட்டிற்குள் நுழைந்து ஒருவன் இப்படி நடக்க, எத்தனை தைரியம் இருக்கவேண்டும். ஆக, கேட்க யாருமில்லை என்கிற எண்ணம் தானே. நினைக்க நினைக்க பைரவிக்கு ஆத்திரமும், அழுகையும் முட்டிக்கொண்டு வர, வெகு நாளைக்கு பிறகு மனம் விட்டு அழுதாள் பைரவி.

மனதினுள் அழுத்தி வைத்தவைகள் எல்லாம் ஒவ்வொன்றாய் வெளிவர, ஏதேதோ சிந்தனைகள், கவலைகள் எல்லாம் அவளை மீறி வலி கொடுக்க, கண்கள் கண்ணீரை நிறுத்துவதாய் காணோம்.

அழுது அழுது அவளை மீறி உறங்கியும் போனாள்.

          

                

  

 

                   

 

  

      

                         

                     

Advertisement