அத்தியாயம்  – 34

காலம் தான் எத்தனை வலிமையானது.. எத்தனை மாற்றங்களை தரவல்லது. இத்தனை ஆண்டுகளாகட்டும்… இத்தனை மாதங்கள் ஆகட்டும்.. காலத்தின் நியதியை யாரால் தான் மாற்றிட முடியும்.

இந்த ஒருமாத காலம் கூட அப்படித்தான் இருந்தது.

பைரவி, தன் அம்மாவின் பெயரில் ட்ரஸ்ட் ஆரம்பித்தும் கூட இதோ இன்றோடு முழுதாய் ஒருமாதகம் ஆகிவிட்டது. அவள் திரும்ப இங்கே வந்த போது ஏற்பட்ட பூசல்கள், சச்சரவுகள் எல்லாம் இப்போது இருந்த இடம் தெரியவில்லை. யாரெல்லாம் வீட்டின் முன்னே வந்து கலாட்டா செய்து கல் விட்டேரிந்தார்களோ, இன்று அவர்களே பைரவியை மெச்சினர்.

‘என்ன இருந்தாலும் குடுக்க மனசு வேணும்…’

‘அவங்கம்மாவோட கடைசி நேர ஆசையாம்…’

‘அந்தம்மா பாரேன் மனசுல எத்தனை புளுங்கிருக்கும்.. நல்ல மனசு தான் போல..’

‘அம்மா சொல்லுக்கு இத்தனை மெனக்கெட்டு செய்யுது…’

‘நமக்கு நல்லது செய்யன்னு வந்திருக்கு..’

இப்படியாக ஏகப்பட்ட பேச்சுக்கள் அங்கே உலாவ, ட்ரஸ்ட் திறப்பு நாள் அன்று சிவா வரவில்லை. வரவில்லை என்பதை விட, அவன் அங்கே எங்கேயுமே இல்லை. சொல்லப்போனால் அவனது வீட்டினில் கூட யாருமில்லை.

ஷர்மாவிற்கு இது மிகுந்த ஏமாற்றம். சிவா இருந்திருந்தால் நன்றாய் இருக்கும் என்று. அவனுக்கு அழைத்துப் பேச “சார் தப்பா எடுத்துக்காதீங்க. ரெண்டு மாசம் முன்னமே புக் பண்ண அப்பாயின்மென்ட். பாரின் டாக்டர் ஒருத்தர் வர்றார். அப்பாவை காட்ட வந்திருக்கோம்…” என்றிட, இதற்குமேல் அவரால் என்ன சொல்ல முடியும்?!

“ஓ! டேக் கேர்…” என்று முடித்துக்கொண்டார்.

பைரவிக்கோ தலைக்கு மேலே வேலைகள் இருந்தாலும், இதயத்தின் ஒரு ஓரத்தில் ‘அவன் வருவானா?!’ என்ற தேடல் இருக்க, ஷர்மா அவளிடமும் இதுதான் விஷயம் என்று சொல்லிட “ஓ!” என்று முடித்துக்கொண்டாள்.

மிக மிக முக்கியமான வேலை தான். ஒருவழியாய் மனது சமன் பட்டுக்கொண்டது. நான் என் அம்மாவை நினைக்கும்போது, அவன் அவனின் அப்பாவை யோசிக்க மாட்டானா?!

இப்படி கேட்டு மனதை ஆற்றிக்கொண்டவள், அடுத்த வேலைகளை கவனம் செலுத்த, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதலில் நிதி உதவி வழங்கப்பட, அதன்பிறகு படிப்பிறகு, திருமணத்திற்கு, வைத்திய வசதிக்கு என்று பல குடும்பங்களும் கூட, தங்களின் தேவைகள் இன்னதென்று சொல்லி, அதற்கான ஆவணங்களை கொடுக்க, இதோ இந்த ஒருமாத காலத்தில் அவரவர் தேவைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பூர்த்தியாகிக் கொண்டு இருந்தது.

இதற்கு இடையில் பைரவிக்கு சினிமாவில் பாடும் வாய்ப்புகள் வேறு அதிகரிக்க, அதற்காக மிகவும் ஓடிக்கொண்டு இருந்தாள். பல நாட்கள் வீடு வரவே நள்ளிரவு ஒரு மணி, இரண்டு மணி கூட ஆனது. அதிகாலையில் எழுந்து திரும்ப செல்லவேண்டியதும் இருக்க, அனைத்திற்குமே ஜான் மீண்டும் அவளுக்கு உதவியாய் வந்து நின்றுவிட்டான்.

சிவா எல்லாம் கவனித்துக்கொண்டு தான் இருந்தான். எதையும் நேரடியாய் அவளிடம் பேசுவதில்லை. எதுவாகினும் சர்மாவிடம் பேசிக்கொண்டான். அவன் போக்கில் அவன். அவள் போக்கில் அவள். மனதினில் வருத்தங்கள் இருந்தாலும் பைரவி அதனை வெளிப்படுத்தவில்லை.

‘உனக்காக வரவில்லை…’ என்று அவனிடம் சொல்லியாகிவிட்டது.

இனி அவனை பார்த்து, அவன் வரவை எதிர்பார்த்து என்று ஏன் நான் என்னை பலவீனம் செய்துகொள்ள வேண்டும் என்று அவளது இசையை நோக்கி ஓடத் தொடங்கிவிட, சிவாவிற்கோ அவனின் தொழில்கள் அவனை இழுத்துக்கொண்டது

அவனுக்குமே மனது கசந்து தான் இருக்க, ஒரு சிறு ஆறுதல் சொக்கனின் உடல்நிலை முன்னேற்றம். பணம் சம்பாதிக்கவுமே, அவன் எண்ணியது இதைதான் இன்னும் ஒரு முயற்சி அப்பாவிற்காக செய்திட வேண்டும் என்று.

அப்படித்தான், சென்னை மாநகரம் முழுதும் அலசி ஆராய்ந்து, வருடத்திற்கு இரு முறை மட்டுமே வரும் சிறப்பு வெளிநாட்டு மருத்துவரிடம், புக் செய்து சொக்கனை காட்ட, அவரோ புது வகையாய் நிறைய சொன்னார்.

இதுநாள் வரைக்கும் எடுத்துக்கொண்டு இருந்த மருந்து மாத்திரைகளை எல்லாம் மாற்றி, பிசியோதெரப்பி முறைகள் சிலது தொடர்ந்து கொடுக்கச் செய்ய, இந்த ஒரு மாத காலத்தில் அவரின் உடல் நிலையிலும் கொஞ்சம் முன்னேற்றம் கண்டது.

‘அவருக்கு என்ன பிடிக்குமோ அதெல்லாம் பண்ணுங்க.. நான் சொல்றது சாப்பாடு விஷயம் இல்லை. மத்தது.. பிடிச்ச இடம்.. பிடித்த கலர்ஸ்.. பிடிச்ச பாட்டு… இப்படி அவரை பீல் பண்ண வைங்க…’ என்று அந்த மருத்துவர் சொல்லியிருக்க, சொக்கனுக்குத்தான் அவருக்கு பிடித்த இசையை இத்தனை ஆண்டுகளாய் வீட்டினில் தூர நிறுத்தி இருந்தார்களே.

‘இந்த பட்டால வந்தது வினை…’ என்று ரஞ்சிதம் பாடல்கள் வீட்டினில் ஒலிப்பதையே பல வருடங்களாய் நிறுத்தி இருந்தார்.

அதிலும் சொக்கனின் மனதை இளக்கும் கிருஷ்ணாவின் குரலில் கேட்கும் பாடகள் எல்லாம் அறவே தடை செய்யப்பட, பொதுவாகவே இசை பிரியராய் இருக்கும் அவருக்கு, அந்த இசை தான் மருந்து என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் வெளிநாட்டு மருத்துவர்.

‘இதென்ன புதுசா சொல்லின்னு இருக்கார்…’ என்று ரஞ்சிதம் கூட நொடிக்க,

“ம்மா இப்போ நிறைய வந்திருக்கு ம்மா..” என்றான் சிவாவும்.

“ஏன்டா.. இந்த மனுஷனுக்கு பாட்டுன்னு ஒன்னு இருந்தா பொண்டாட்டி பிள்ளையே கண்ணுக்குத் தெரியாது.. அதுவும் மகராசி போய் சேர்ந்தாலே அவளோட பாட்டுன்னா சுத்தி நடக்குற எதுவுமே தெரியாது. அவனால தான் நம்ம குடும்பமே இப்படியாச்சு. இப்போ அந்த பாட்டையே அவருக்கு போடுங்கன்னு சொன்னா எப்படி டா?” என,

“முயற்சி பண்ணி பார்ப்போமே…” என்றான் சிவா.

“எனக்கு மனசு ஆரல…” என்று ரஞ்சிதம் பேச,

“அப்போ அப்பா உனக்கு நல்லாகனும்னு இல்லையா?” என்று சிவா பேச

“டேய்..!” என்றார் அதிர்ந்து.

“பின்ன என்னம்மா… உன்னோட பிடிவாதத்தை கொஞ்சம் தள்ளி வை…” என்று சொல்ல,

“நீ என்ன சொல்ற?!” என்றார் கண்களை இடுக்கி.

“அப்பா விஷயம் மட்டும் தான் நான் பேசுறேன்…” என்று சிவாவும் காரமாய் பதில் சொல்ல, ரஞ்சிதத்திற்கு இப்போதும் அங்கலாய்ப்பு தான்.

‘அப்படி என்ன டா? பொண்டாட்டி பிள்ளைங்க மேல இல்லாத ஈர்ப்பு பாட்டுல உங்கப்பனுக்கு.. ஏன் நம்ம படுற பாட்டெல்லாம் அவர் பார்த்தார் தான. அப்போ மனசு வரலையா, நம்ம நல்லாகி எந்திரிச்சு வரணும்னு…’ என்று கண்களை துடைத்துக்கொண்டார்.

“என்ன பாட்டுன்னாலும் போடு. ஆனா அவ பாட்டு இங்க போட கூடாது…” என்று பிடிவாதமாய் சொல்ல, சிவா பாவமாய் அப்பா முகம் பார்க்க, அவரோ மெல்லிய புன்னகை சிந்தி ‘சரி…’ என்பது போல் தலையை ஆட்ட,   

சிவா எதற்கும் பதில் பேசவில்லை. வீட்டினில் மீண்டும் சொக்கனுக்கு பிடித்தமான மெல்லிய இசையமைப்புடன் கூடிய பாடல்கள் ஒலிக்க, அவருக்கோ முகத்தினில் ஒரு தனி பிரகாசம். முன்னரை விட இப்போது உணவும் கூட நல்லமுறையில் எடுக்க, இதனோடு சேர்ந்து பிசியோதெரப்பி  வேறு  தொடர்ந்து செய்ய, இந்த ஒரு மாதத்தில் நல்லதாகவே முன்னேற்றம். 

ட்ரஸ்ட் ஆரம்பித்து ஓரிரு நாளிலேயே பைரவி வீட்டினை காலி செய்கிறேன் என்று சொல்ல  “எல்லாம் நார்மல் ஆகட்டும்… ஒரு மாசம் போகட்டும்…” என்று சொல்லி நிறுத்தியது சிவா தான்.

இதோ அந்த ஒருமாத நாள் தான் இன்றைய தினம்.  இன்று வீட்டினை காலி செய்திட வேண்டும். அவள் என்ன உடைகள் மட்டும் தானே கொண்டு வந்தாள். மற்றது எல்லாமே சிவா வங்கி வைத்திருந்த பொருட்கள் தானே.

என்னவோ இத்தனை நாட்களாய் இல்லாத ஒருவகை அழுத்தம் மனதினில் வந்து அமர்ந்துகொள்ள, எப்போதும் அமரும் ஜன்னலோர திவானில் சம்மணம் இட்டு பைரவி அமர்ந்து இருந்தாள். கண்களோ எங்கேயோ வெறித்துக்கொண்டு இருக்க, இதோ இந்த வீடு என்பது அவளுக்கும் அவனுக்குமான கனவு தானே.

வீடு கட்ட ஆரம்பிக்கவுமே அவன் சொல்லிய முதல் விஷயம் ‘இது நம்ம வீடு டி பைரவி…’ என்பது தான்.

அவளோ புரியாமல் பார்க்க ‘எஸ்.. இது நமக்காக நான் கட்டுறது.. நீயும் நானும் சேர்ந்து வாழப் போற வீடு…’ என்று சொல்ல,

‘அப்.. அப்போ அங்கிள் ஆன்ட்டி…’ என்றாள் இழுத்து..

“ம்ம்ஹூம்.. அவங்க இங்க வர மாட்டாங்க.. அம்மா ஏற்கனவே சொல்லிட்டாங்க. அவங்களுக்கு அங்க தான் செட்டாகும்.. அந்த வீட்டை கொஞ்சம் சரி பண்ணி கொடுக்கணும்…” என்றிட, அன்றிலிருந்து வீட்டின் கட்டுமான பணிகள் வளர வளர, இவர்களது கனவும் கற்பனையும் வளர்ந்துகொண்டே தான் இருந்தது.

எப்போது வீட்டினை பைரவி பார்க்க வந்தாலும் ‘வாங்க ஓனரம்மா…’ என்பான்.

ஆனால் இப்போது அவளே வாடகை கொடுப்பேன் என்று சொல்லும் நிலை.

என்ன ஒன்று வந்த நாளில் இருந்து, அங்கே இருக்கும் அந்த மாஸ்டர் பெட்ரூம் பூட்டித்தான் இருக்கிறது. பைரவி அதனை திறக்கக் கூட இல்லை. அதன் சாவி அங்கேயே தான் தொங்கிக்கொண்டு இருக்க

‘இந்த ரூம இன்னாத்துக்கு பூட்டியே வச்சிருக்கானுங்க…’ என்று முனங்கியபடி செல்வி, அதனை திறந்து வைத்துவிட, பைரவி வந்தவள் “அது லாக் பண்ணிடுங்க செல்விம்மா…” என்றுவிட்டாள்.

“எதுக்கு பாப்பா… நல்லா பெரிய ரூமு…” என்று செல்வி சொல்ல,

“எனக்கும் ரூப்பாக்கும் அந்த ஒரு ரூமே போதும் செல்விம்மா.. நீங்க ஹால்ல தானே படுக்கிறீங்க.. ஒருத்தர் உதவி செய்றாருன்னு, நம்ம ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்க கூடாது..” என்று சொல்லிவிட

“என்னவோ…” என்று முனங்கியபடி அந்த அறையை பூட்டிவிட்டார்.

பின்னே இந்த அறையை வைத்து, அவனுக்கும் அவளுக்கும் தான் எத்தனை காதல் பேச்சுக்கள்.

‘இங்க தான் பெட் போடணும்…’

‘இந்த கலர்ஸ்ல எல்லாம் ரூம்ல கர்டைன்ஸ் போடணும்…’ என்று அவள் ஆரம்பிக்க,

‘நீ இந்த பக்கம்.. நான் அந்த பக்கம்…’ என்று சிவா பேச,

‘நோ நோ… நான் தான் இந்த சைட் படுப்பேன்..’ என்று அவளும் பேச,

‘நீ எந்த சைட்னாலும் படு.. ஆனா என் மேல படு…’ என்று அவனும் சரசம் பேச,

‘அய்யோடா..!’ என்று வெட்கமாய் சிரித்த நாட்கள் எல்லாம் இப்போது அவளுக்கு நினைவில் வந்து தொலைத்து, தொண்டையை அடைக்க வைத்தது.

ரூபாவிற்கு என்றைய தினம், வங்கியில் எதோ வேலை என்று சென்றிருக்க, வீட்டிலும் வேலைகளை முடித்துவிட்டு செல்வி கீழே அவரின் கடைக்கு வந்துவிட, பைரவி மட்டும் தான் இருந்தாள். பார்வை வீட்டினையே சுற்றி சுற்றி வர, பெருமூச்சுக்கள் அடிக்கொருதரம் வந்துகொண்டே இருந்தது.

அதிலும் முதல்நாள் அவன் வந்து பேசிச் சென்றதை இன்னமும் அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

மீண்டும் போ என்கிறானே..

நினைத்து நினைத்து மறுகிக்கொண்டு இருந்தாள் பைரவி.  

‘ஓ!’ என்று கத்தி அழவேண்டும் போல இருக்க, அவளுக்கு மூச்சு விடுவது கூட சிரமமாய் இருந்தது.

ஆம் சிவா வந்து முதல் நாள் பேசிவிட்டு சென்றிருந்தான். பைரவி சும்மா இல்லாமல், செல்வியிடம் “செல்விம்மா நாளைக்கோட ஒருமாசம் முடியுது. நம்ம காலி பண்றோம்னு சொல்லிடுங்க…” என்று சொல்லி அனுப்ப,

“நான் பேசிக்கிறேன்…” என்று செல்வியிடம் சொன்னவன், நேராய் மேலேறி வந்தான் அவளைக் காண.

பைரவி அவளது ரீல்ஸ் ஒன்றினை எடிட் செய்துகொண்டு அமர்ந்திருக்க “பைரவி…” என்று பின்னிருந்து அவன் ஆழ்ந்த குரலில் அழைக்க,

“ஹா…!” என்று வேகமாய் திரும்பினாள்.

“செல்வியக்கா வந்து சொல்லுச்சு…” என்று நின்றபடி அவன் பேச,

‘இங்கேயே இந்த வீட்டிலேயே இரு…’ என்பனோ என்று சிறு ஆவல் தோன்ற, கண்களில் கேள்வியோடு தான் பார்த்தாள் அவனை.

“காலி பண்றது ஓகே.. ஆனா நீ இந்த எரியாவிட்டே போயிடு.. நீ நினைச்சது நடந்திடுச்சு தானே.. ட்ரஸ்ட் நல்லபடியா நடக்குது. ஷர்மா சார் பார்த்துக்கிறார்.. தேவை படுறப்போ நீயும் வந்து பார்த்துட்டு போ.. உனக்கு இந்த ஏரியா செட் ஆகாது…” என்று சொல்ல, அவளோ அதிர்ந்து பார்த்தாள்.

முன்னராவது போ என்று சொல்வதற்கு அவனிடம் ஒரு காரணம் இருந்தது.

ஆனால் இப்போது?!

பதில் சொல்லத் தெரியாமல், மலங்க மலங்க அவள் விழித்து நிற்க, சிவாவிற்கே அவள் அப்படி திகைத்து நிற்பது மனதை அறுப்பதாய் இருந்தது. ஆனாலும் என்ன செய்ய, இவள் இங்கேயே இருந்தால், நிச்சயம் தன்னை தாண்டி எதையும் யோசிக்க மாட்டாள் என்பது அவனுக்குத் திண்ணம்.

ஜானிடமும், சந்தோஷியிடமும் சிவா பேசியிருக்க, சந்தோஷியோ “கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க சிவா…” என்று சொல்ல,

“இல்லம்மா… இது ஒத்து வராது.. பைரவி லைப்ல இன்னும் நல்ல நிலைக்கு வரணும்.. இங்க இருந்தா என்னை மீறி எதையும் யோசிக்கவே மாட்டா…” என்று சொல்ல, ஜானோ ஏகமாய் முறைத்தான்.

“என்ன ஜான்..?!” என்று சிவா நிதானமாகவே பேச,

“இல்ல… இதெல்லாம் நாங்க சொன்னா தப்பு.. நீங்களே சொல்லிக்கிட்டா அக்கறை.. அவளை இந்த அளவு மீட்டு எடுக்க நாங்க என்ன பாடுபட்டோம்னு எங்களுக்குத்தானே தெரியும்.. திரும்ப அவளை இங்கிருந்து போன்னு நீ சொன்னா, அவ மொத்தமா உடைஞ்சிடுவா சிவா…” என்று சொல்ல,

“நிச்சயமா இல்லை…” என்றான் சிவா.

“எப்படி சொல்ற நீ?!” என்று தினேஷும் இவர்களுடன் சேர்ந்துகொள்ள,

“முன்ன அவளுக்கு வாழ்க்கைல எந்த பிடிமானமும் இல்லை. ஆனா இப்போ அப்படி இல்லை. ட்ரஸ்ட் அப்படிங்கிற ஒரு மிக பெரிய பொறுப்பு அவளுக்கு இருக்கு…” என, மற்ற மூவரும் வாய் மூடிக்கொண்டனர்.

இவர்களை எல்லாம் பேசி வாய் மூட வைத்துவிட்டான். ஆனால் பைரவியிடம், அவள் கேள்வியாய் சில நேரம் பார்க்கும் பார்வையிடம் மொத்தமாய் அவன் மனது வீழத்தானே  செய்கிறது.

அதனால் தானே அவன், அவள் முன்னே வருவதே இல்லை.

ஒருமுறை அவளை விலக்கி, மனதை வேறு திசையில் திருப்பி என்று எல்லாம் செய்ய முடிந்தது. திரும்ப அவள் வந்து நிற்கும்போது அவனது விழிகள் மொத்தமாய் அவளை அவனது இதயத்தில் நிரப்பிய வேகம் அவன் தானே அறிவான்.

‘பைரவி.. பைரவி…’ என்று இப்போதும் அவன் அவளை எண்ணாமல் ஒருநாள் கூட உறங்குவது இல்லையே.

அவளோடு எழுத்து வழியாய் பேசிக்கொண்டவைகளை எல்லாம், ஒருநாளைக்கு ஒருமுறையேனும் படிக்காமல் இருப்பது இல்லையே.

இத்தனை இருந்தும், அவனுக்கு அவள் வாழ்வில் எத்தனை தேவை என்பது அவன் நன்கு அறிந்தும் கூட, அவனின் அம்மா இத்தனை வருடங்களாய் அனுபவிக்கும் துன்பத்திற்காக மட்டுமே அவளை விலக்கி வைக்க நினைக்கிறான்

நிச்சயம் ஒரு மகனாய், பைரவியை அவனது வாழ்க்கை துணையாய் ஏற்று, அம்மாவின் மனதை கொன்று புதைக்க முடியாது.

‘ஹ்ம்ம்…’ என்று ஆழ்ந்த மூச்சினை வெளி விட்டவன் “நாளைக்கு நீ இந்த எரியாவிட்டே போயிடு…” என்று திரும்ப சொல்ல, அவளோ அவனையே உறுத்துப்  பார்த்துக்கொண்டு இருந்தவள்,

“அதை நீங்க ஏன் சொல்லணும்?!” என்றாள் முகத்தை கடினமாய் மாற்றி.

‘என்னது?!’ என்பது போல் சிவா கண்கள் சுறுக்கிப் பார்க்க “முன்னவாது என்னை அனுப்ப உங்களுக்கு ரைட்ஸ் இருந்ததுன்னு நினைக்கிறேன். ஆனா இப்போ என்ன இருக்கு? என்னோட இஷ்டம் தான் நான் எங்க இருக்கணும்னு நினைக்கிறது. நான் ஒன்னும் கெஞ்சிட்டு நிக்கப் போறது இல்லை. நான் போக மாட்டேன்னு சொல்லிட்டு. நீங்களே சொன்னா கூட எனக்கு இங்க இருக்க முடியாது தான்… சோ நீங்க ஒன்னும் பெருசா அலட்டிக்க வேணாம்…” என்று மிக மிக அசால்ட்டாக பதில் சொன்னவள் தான் இதோ இன்று தனிமையில் நொந்துகொண்டு இருக்கிறாள்.