“ப்ளான் பண்ணாம எதையும் பண்ணக் கூடாது…” இதுவே தான் பைரவி மண்டைக்குள் ஓடிக்கொண்டு இருந்தது.
சிவா அதையே தான் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தான் ‘யோசிச்சு எதுவும் பண்ண மாட்டீங்களா?!‘ என்று. எத்தனை முறை, எத்தனை விதத்தில் சொல்லியிருப்பானோ தெரியாது.
ஆனால் இன்றோ, இத்தனை சுமுகமாய் இந்த பிரச்சனைகள் எல்லாம் ஒரளவு முடிவிற்கு வரும் என்று யாருமே எண்ணவில்லை. சிவாவினால் தான் எல்லாமே என்றும் சொல்ல முடியாது. ஆனால் சிவா இருந்ததினால் நிறைய நடந்தேறியது என்றும் சொல்லலாம்.
பைரவி மனதினில் பல திட்டங்கள் வைத்திருக்க, அவள் ஒன்றும் எடுத்ததுமே தான் இன்னாரின் மகள் என்று சொல்லிக்கொள்ள எண்ணவில்லை. வீட்டிற்கு அவளின் அம்மாவின் பெயரை வைத்து பலகை மட்டுமே மாட்ட, ரஞ்சிதமும் சிவாவும் வந்து பேசியதில் தான் அக்கம்பக்கத்தில் விஷயம் பரவியது.
இதனை சிவாவும் ஓரளவு யூகித்திருக்க, கவுன்சிலர் என்னவோ அனைத்தையும் தான் பார்த்துக்கொள்கிறேன் என்றாலும் அவர் சொல்வது போல் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் கொடுப்பது என்பது யாருக்கும் உவப்பை கொடுக்கவில்லை.
தினேஷோ, இதில் உள்ளே முழுவதுமாய் இறங்க முடியாது. அதனால் அவனுக்கு தோன்றிய சில யோசனைகளை சொல்ல, ஷர்மா தான் மௌனமாய் அமர்ந்திருக்கும் பைரவியைப் பார்த்து “நீ எதுவும் யோசிக்காம வரலைன்னு எனக்குத் தெரியும்.. நீ என்ன ப்ளான் பண்ணிருக்க பையு…” என்று கேட்க,
“பைரவி பத்தி உங்களுக்கு என்ன தெரியுமோ எனக்குத் தெரியாது. ஆனா எனக்கு அவங்க அம்மாவையும் தெரியும். பைரவி பத்தியும் சில கண்ணோட்டங்கள் இருக்கு..” என்று அனுபவம் வாய்ந்தவராக பேச, சிவா முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு பைரவியை முறைக்க,
அவனை ஒரு பார்வை பார்த்தவள் “அம்மா பேர்ல ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிக்கனும் அங்கிள். அப்படிதான் ப்ளான் பண்ணேன். இங்க வந்தது நான் போர்ட் மாட்டவுமே பிரச்சனை ஸ்டார்ட் ஆகிருச்சு…” என,
“அதை முதல்ல பண்ணிட்டு, கொஞ்சம் கொஞ்சமா எல்லாருக்கும் நீ என்ன செய்யனும்னு நினைச்சியோ அதை செஞ்சிட்டு, அதுக்கு அப்புறம் கூட நீ யாருன்னு சொல்லிருக்கலாம். இத்தனை டென்சன் அப்போ தேவையிருக்காது…” என்றான் சிவா பார்வையை எல்லாம் தினேஷ் மீது வைத்து.
‘இதெல்லாம் உன் மண்டைக்குள் தோன்றாதா?!’ என்ற கேள்வி அவன் கண்களில் தெரிய, தினேஷோ ‘இவன் என்ன எல்லாத்துக்கும் என்னையே முறைக்கிறான். டேய் ஜான்.. என்னை அனுப்பிட்டு நீ தப்பிச்சிட்ட…‘ என்று எண்ணியவன்,
“நல்ல ஐடியா சிவா…” என்றான் மெச்சுதலாய்.
ஷர்மாவும் “நல்ல யோசனை தான். ஆனா இப்போ அதெல்லாம் மீறிடுச்சே.. முதல்ல இப்போ பைரவியோட பாதுகாப்பு ரொம்ப முக்கியம். அதுக்கு பிறகு தான் மத்தது எல்லாம்…” என்று சொல்ல,
ஆனால் இதற்கெல்லாம் சிவா மசிவானா என்ன?! இல்லை அவன் மனது தான் ஏற்குமா என்ன? காவல்துறையின் பொறுப்பில் பைரவியை விட்டுவிட்டு, அவன்மட்டும் எப்படி நிம்மதியாய் இருப்பான். வேண்டுமென்றே வம்பிழுத்து விஷயத்தை பெரிதாக்க நினைப்பவர்கள் இருக்கையில், அவளை அப்படியே தனிய விட முடியாது.
அவனைப் பொறுத்தவரைக்கும், அவனோடு இல்லாது, அவளோடு வேறு யார் இருந்தாலுமே அவள் தனியாய் இருப்பதாய் தான் அவனுக்குத் தோன்றும். மனது அப்படி எண்ணத்திலே ஊறிப்போய்விட்டது.
ஷர்மாவின் பார்வை எல்லாம் சிவாவின் முகத்தில் இருக்க, அவனோ கடுகடுவென்று அமர்ந்திருப்பது கண்டு “என்ன சிவா?!” என்றார் தன்மையாய்.
“இல்ல சார். பிரச்சனை செய்யனும்னு நினைக்கிறவங்க, எத்தனை பேர் இருந்தாலும், யார் இருந்தாலும் செய்யத்தான் செய்வாங்க. போலீஸ் வந்து இருக்கிறது சரிதான். ஆனாலும்…” என்று திருப்தியின்மையில் இழுத்தான்.
“நான் பத்திரமா இருந்துப்பேன்…” என்று பைரவி, என்னவோ வெள்ளைக் கொடி பறக்கவிட்டு பேச,
“இனி ஒரு வார்த்தை நீ பேசினன்னு வை..” என்று அவன் விரல் நீட்டி மிரட்ட, பைரவி பாவமாய் பார்த்து வைத்தாள்.
ஷர்மாவோ “சரிம்மா பைரவி.. நீ சொல்றதுபோல, இதோ இந்த வீட்லயே ட்ரஸ்ட் ஆரம்பிக்கலாம். அதுக்கான வேலைகள் நான் பார்த்துத் தர்றேன்…” என,
“அதோட உங்க வேலை முடிஞ்சதுன்னு நினைக்கவேணாம் சார். ட்ரஸ்ட் பொறுப்பு எல்லாம் உங்களோடது. பைரவியால எல்லாம் இத்தனை ஹேண்டில் பண்ண முடியாது…” என்று இப்போதும் சிவா பேச, தினேஷ் அடக்கப்பட்ட சிரிப்போடு பைரவியை பார்த்தான்.
பைரவியோ “ஏன்.. ஏன் பார்க்க முடியாது என்னால?!” என்று சண்டையிட,
“ம்ம்ச் இதை என் போக்குல விட்டா, கொஞ்சம் சீக்கிரம் பிரச்சனை முடியும்… என்ன சொல்ற?!” என்று சிவா கறாராய் பேச,
அவன் இத்தனை வந்து செய்வதே பெரிது என்று தோன்ற, அதை முழுதாகவும் ஏற்கமுடியவில்லை அவளுக்கு. தான் இன்னார் என்று தெரியவுமே அனுப்பத்தானே செய்தான். அமர்த்தி பேசியிருக்கலாமே. இதோ இப்போது பேசுகிறான் தானே என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என்று.
அதுபோல அன்றும் பேசியிருக்கலாம் தானே.
ஒருவார்த்தை.. ஒரே ஒரு வார்த்தை என்னிடம் கேட்டு இருக்கலாம் தானே.
எத்தனை பிடிவாதமாய் அனுப்பினான் என்று எண்ணியவள், ஆழ மூச்செடுத்து அவன் காட்டிய அந்த பிடிவாதத்தை இப்போது தனக்குள் ஏற்றிக்கொண்டு “நீங்க சொல்றபடி செய்யலாம் தான். ஆனா, அதுக்காக எல்லாமே நீங்க சொல்றதைத்தான் செய்யனும்னு இருக்க முடியாது…” என்று ஆணித்தரமாய் சொல்ல,
கண்களை இடுக்கி அவளைப் பார்த்தவன் “சரி சொல்லு…” என்றட, பைரவியும் அவள் மனதினில் இருப்பதை சொல்ல, அவள் சொல்வது அனைவருக்குமே ஏற்புடையதாய் இருந்தது.
அதாவது அவளின் அம்மா கிருஷ்ணாவின் சொத்துகளில் எழுபத்தி ஐந்து சதவிகீத சொத்துக்களின் வருமானம், அந்த சொத்துக்களை பராமரிப்பதற்கும், இந்த ட்ரஸ்ட் வழியா மக்களுக்கு உதவி செய்வதற்கும் கொடுப்பதாகவும், அம்மாவின் பூர்வீக சொத்தாய் இருக்கும் இருபத்தி ஐந்து சதவீதத்தை மட்டுமே தான் எடுத்துக்கொள்வதாகவும், அதற்குமேலும் தான் சம்பாரிப்பதில் இருந்தும், ட்ரஸ்ட் வழியாக பிறருக்கு உதவி செய்ய தன்னால் முடிந்த அளவு தொகையை கொடுப்பதாகவும் கூறினாள்.
சிவா அவள் பேசுவதை எல்லாம் பார்த்து அமர்ந்திருந்தான்.
கொடுப்பதற்கும் ஒரு மனம் வேண்டும்?!
அந்த மனம் எத்தனை பேருக்கு இருக்கிறது என்று யார் கண்டது.
அவள் அம்மாவிற்காக என்றாலும், இன்றைய சூழலில் பைரவியின் பலமே அவளது பணம் தானே. இப்போது முக்கால்வாசியை தூக்கி கொடுக்கிறாள். என்ன பெண் இவள் என்று எண்ணாமல் இருக்கவே முடியவில்லை.
‘ஆண்டவா இவ நல்லா மட்டும் தான் இருக்கணும்…’ என்று அவனது இதயம் அவளுக்காக வேண்டாமலும் இருக்க முடியவில்லை.
பணத்திற்காக, இவளது நல்ல உள்ளதை ஏமாற்றவும் எத்தனையோ பேர்கள் இருக்கத்தான் செய்வார்கள். கொடுக்கிறாள் என்று தெரிந்தால், பொய் கதைகள் பல சொல்லி, அவளிடம் பணம் பார்க்கவும் செய்வார்கள். என்ன செய்வது என்று யோசித்தவன்
“நல்ல எண்ணம் தான் பைரவி. ஆனா ஒன்னு, ஒருத்தர் ஒரு உதவின்னு கேட்டு வர்றாங்கன்னா, அதுக்கான தகுந்த ஆதாரம் இருந்தா மட்டும் பேச்சு வார்த்தை வை. ஒரு லட்சம் தேவைன்னா, ஐம்பதாயிரம் மட்டும் கொடு. ரொம்பவே முடியாம இருக்கிறவங்க, வாழ்வாதாரமே இல்லைங்கற பட்சத்துல, உனக்கு எப்படி தோணுதோ அப்படி செய். ஆனா எதையும் பல தடவை யோசிச்சு பண்ணு.. இன்னிக்கு இருக்குன்னு குடுக்குற. நாளைக்கு சூழ்நிலை எப்படின்னாலும் மாறலாம்…” என்று சிவா பேச பேச, அவன் பேசினில் இருக்கும் நிதர்சனம் ஷர்மாவிற்கும், தினேஷிற்கும் மனதை தொட்டது.
இவர்களின் பேச்சினை அடிப்படையாய் வைத்து, ஷர்மா அவருக்கு தெரிந்த சில விசயங்களை சொல்ல, அடுத்தடுத்த வேலைகள் துரிதமாய் நடந்தேறியது.
பைரவியை சிவா “எல்லா ப்ராப்பரா ஆரம்பிக்கிற வரைக்கும் நீ இந்த வீட்ல இருக்க வேண்டாம்.. ” என,
“என்னால எல்லாம் இங்கிருந்து போக முடியாது…” என்றாள் பட்டென்று.
அவளுக்கு என்னவோ அவள் அம்மா வாழ்ந்த இந்த வீட்டில் இருப்பது தனி சுகமாய் இருந்தது. ஒரு ஆறுதலாய் இருந்தது. ஒருமுறை இங்கிருந்து சென்றதே போதும். மீண்டும் சென்றால், அவ்வளவு தான் இவன் என்னை இங்கே தங்கவே விடமாட்டான் என்று தோன்ற, முடியவே முடியாது என்று மறுத்தால்.
“கொஞ்ச நாள் தானே பைரவி…” என்று ஷர்மாவும் சொல்ல,
“இல்ல அங்கிள்.. நான் இங்க தான் இருப்பேன்…” என்று சொல்ல,
“அப்போ… எல்லாம் ஒரு அமைதிக்கு திரும்புற வரைக்கும் பைரவி வந்து என்னோட புது வீட்ல இருக்கட்டும்…” என்று சிவா சொல்லவுமே அனைவருக்குமே பக்கென்று ஆனது.
பைரவி அதற்கும் உடனே “அதெல்லாம் முடியாது…” என்று சொல்ல,
“இதுல ரெண்டுல ஒன்னு தான்.. கொஞ்சம் எல்லாம் செட்டில் ஆகுற வரைக்கும் நீ இந்த வீட்ல தனியா இருக்க வேணாம்… அப்படி போக முடியாதுன்னா, என்னோட வீட்ல வந்து இரு. வேற ஆப்சன் எல்லாம் இல்லை…” என்று சொல்ல,
“அது ஒத்து வருமா?!” என்றான் தினேஷ்.
“ஏன் ஒத்து வராது. நான் அங்க இருக்க போறது இல்லை. பைரவிக்கு துணையா செல்வியக்கா வந்து இருக்கட்டும்.. என்னை மீறி அங்க எவனும் வர முடியாது…” என்று சொன்னவனின் பாவனையில் என்ன இருந்ததோ, ஆனால் பைரவிக்கு மனது மீண்டும் அடித்துக்கொள்ள ஆரம்பித்தது.
தயக்கமாய் ஷர்மாவின் முகம் பார்க்க “உங்க வீட்ல பெரியவங்க…” என்றார் அவரும்.
“அது நான் பார்த்துக்கிறேன் சார். இன்னிக்கு கொஞ்ச நேரத்துலையே கல் விட்டு எரிச்சாங்க. போலீஸ் பாதுகாப்பு இருந்தா மட்டும் போதாது. இங்க இருக்கவங்க சப்போர்ட் வேணும். அதுக்கு நான் ஏற்பாடு செய்வேன்.. அது எல்லாத்துக்கும் மீறி…” என்று எதையோ சொல்ல வந்தவன், வார்த்தைகளை வேகமாய் கை விட்டு,
“அங்க வந்து இருக்கட்டும்…” என்று அழுத்தம் திருத்தமாய் சொல்ல,
தினேஷோ “அப்படில்லாம் அனுப்பிட முடியாது சிவா.. நாங்களும் எல்லாம் யோசிக்கணும்..” என்றான்.
தினேஷிற்கு கண் முன்னே, அன்று வம்படியாய் பைரவியை கண்ணீர் வழிய அவள் கெஞ்ச கெஞ்ச அவன் அனுப்பி வைத்தது. அதன்பின் பைரவி பட்ட கஷ்டங்கள் எல்லாம் அவன் கண் கூடாக கண்டானே. இப்போது வந்து அவளை என் வீட்டில் தங்க அழைக்கிறேன் என்று சொன்னால், உடனே அனுப்பிட முடியுமா?!
“என்ன யோசிக்கணும்.. இல்லை என்ன யோசிக்கணும்னு கேக்குறேன்? இல்லை யார் கிட்ட பேசனும்? சொல்லு நான் வந்து பேசுறேன். ஏன் டா தெரியாமத்தான் கேக்குறேன்.. நீங்க அஞ்சு பேர் இருக்கீங்க, அஞ்சு வீட்லையும் பெரியவங்க இருக்காங்க தானே. ஒருத்தர் பேச்சு கூடவா இவ கேட்கலை.. இல்லை நீங்க யாருமே, யார் பேச்சையுமே கேட்க மாட்டீங்களா டா?! எல்லாரும் உங்க விருப்பத்துக்குன்னு விட்டுட்டாங்களா?!” என்று ஆரம்பிக்க,
‘ஆரம்பிச்சுட்டான் டா இவன்…’ என்று மீண்டும் தினேஷ் பைரவியை பாவமாய் பார்க்க,
அவளோ “அவன் இப்போ என்ன பேசிட்டான்?!” என்றாள் நண்பனுக்கு ஏற்று.
ஷர்மாவிற்கு சிவாவின் மனது நன்கு புரிந்தது. அவளை தனியே விட முடியாமல் தவிக்கிறான். ஏற்கவும் முடியாமல், விடவும் முடியாமல், அவனது நிலை அவருக்கு நன்கு விளங்க, இப்படியொருவன் பைரவிக்கு துணையாய் அமைந்துவிட்டால், அவளுக்கு வாழ்வின் கடைசி வரைக்கும் அவன் தக்க பாதுகாவலனாய் இருப்பான் என்பது அவருக்கு சந்தேகமே இல்லை.
இந்த சூழலிலும், அவளை தன் வீட்டிற்கு அழைக்க ஷர்மா இப்போது “பைரவி டோன்ட் வொர்ரி.. ரூப்பாவை நான் அனுப்புறேன். அவளுக்கு இப்படியான சோசியல் ஆக்டிவிட்டீஸ்ல இன்ட்ரஸ்ட் ஜாஸ்தி. நீங்க ரெண்டு பேருமா அங்க ஸ்டே பண்ணிக்கோங்க.. என்ன சிவா?” என்றார் அவனிடமும்.
“எனக்கொண்ணும் இல்லை…” என்பது போல் அவன் தலையை ஆட்ட, பைரவிக்கு உள்ளூர என்னவோ முரண்டியது.
அவன் அன்று அவளை அனுப்பியது இன்றளவும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் இப்போது அவன் வீட்டிலேயே சென்று தங்குவதா என்றிருக்க,
“அங்கிள் நீங்க சொல்றதுனால சரி. ஆனா நான் சும்மா எல்லாம் இருக்க மாட்டேன். பேயிங் கெஸ்டா போய் இருக்கிறதுன்னா சரி…” என்று சொல்ல, சிவா, கண்களை இறுக மூடித் திறந்தான்.
அப்படி இப்படி என்று ஏதேதோ பேசி, ஒருவழியாய் பைரவி ரூப்பாவோடு சிவாவின் புது வீட்டினில் தங்க வர, அங்கே அப்படியொன்றும் பொருட்கள் எல்லாம் இல்லை தானே. ஆனால் அவள் வருவது உறுதியாகவுமே செல்வியையும் மணியையும் அனுப்பி என்னென்ன தேவையோ எல்லாம் வாங்க வைத்து, வீட்டினை தயார் செய்துவிட்டான்.
“என்ன? என்ன இப்போ? உன் வேலையை மட்டும் பாரு…” என்று கடிய, பைரவி வந்து தன் இருப்பிடத்தில் தங்குகிறாள் என்பதே அவனுக்கு மனதில் ஏதோ ஒரு வகையில் நிம்மதியை கொடுக்க, ரஞ்சிதமோ அங்கே ஆடித் தீர்த்துக் கொண்டிருந்தார்.
“நான் அத்தனை பேசிட்டு வர்றேன்… இவன் இப்படி பண்ணிருக்கான்…” என்று மனது ஆறவே இல்லை.
அம்மாவின் எண்ணம், சிவாவிற்கு தெரியாதா என்ன?!
மகன் வீடு வரமாட்டான் என்று அவர் கத்திக்கொண்டு இருக்க, சிவாவோ வீடு வந்தான்.
வந்தவன் சோர்வாய் அமர, சொக்கன் பாவமாய் மகன் முகம் பார்க்க ஷாலினி நக்கலாய் அண்ணன் முகம் பார்க்க, ரஞ்சிதமோ மகனை வெறுமையாய் பார்த்து வைத்தார். இத்தனை வருடங்களாய் குடும்பத்தின் அத்தினை சிரமங்களிலும் உடன் நின்ற மகன், ஒருநிலைக்கு மேலே குடும்ப பாரத்தை தான் ஒருவனாய் சுமந்த மகன், இன்று அனைத்தையும் மறந்து எவளோ ஒருத்தியை முக்கியமாய் கருதுகிறான் என்பதனை அவரால் தாங்கவே முடியவில்லை.
அதிலும் எப்பேர்பட்ட சிரமங்களை எல்லாம் தாண்டி வந்திருக்கிறோம், இன்றளவும் கூட சொக்கனின் உடல் நிலை தேறவில்லை தானே. எத்தனை வைத்தியம். எத்தனை மருந்துக்கள். சிவா மட்டும் ஒரு தொழில் செய்து சம்பாதனை செய்திராவிட்டால், இந்த குடும்பமும் உணவிற்கு கூட பிறரை நம்ப வேண்டிய நிலை தானே.
உணவிற்கே அப்படியெனில், மற்றது எல்லாம்?!
யோசிக்க யோசிக்க ரஞ்சிதத்தின் மனது வெகுவாய் வேக ஆரம்பிக்க, மகன் வந்து சோர்வாய் அமரவும், அவர் நெஞ்சில் ஆயிரம் கேள்விகள்.
ரஞ்சிதத்தை ஏறிட்டுப் பார்த்தவன் “ம்மா…” என,
“அப்படி கூப்பிடாத என்னை…” என்றார் பட்டென்று.
இம்முறை ஷாலினி கூட அதிர்ந்து அன்னையைப் பார்க்க, சொக்கனோ கண்டனமாய் பார்த்து வைத்தார்.
“கூப்பிடாத.. அம்மான்னு கூப்பிடாத… படிச்சு படிச்சு சொன்னேன்.. ஒரு பாட்டுக்காரின்னால நம்ம குடும்பமே கேட்டு சீரழிஞ்சு போச்சு.. இன்னொரு பாட்டுக்காரி பழக்கம் வேணாம்னு.. நீ பிடிவாதமா நின்ன. சரி நானும் மகன் விரும்பம்னு விட்டேன்.. ஆனா இப்போ அவ யாருன்னு தெரிஞ்சும் நீ இந்த ஒரு வருஷம் அமைதியா இருந்திருக்க.. என்ன சிவா இதெல்லாம்..” என,
“ம்மோவ் நீ சொல்றது எல்லாமே சரி.. ஆனா ஒன்னு புரிஞ்சுக்கோ, பைரவி இன்னார்னு தெரியவுமே, நான் முடிவு பண்ணிட்டேன், அவ நம்ம குடும்பத்துக்கு இல்லைன்னு. இப்போ வரைக்கும் அதுல எந்த மாற்றமும் இல்லை…” என்று மனதை கல்லாக்கிக் கொண்டு அவன் பேச,
‘இதை நான் நம்பனுமா?!’ என்று பார்த்து வைத்தார் ரஞ்சிதம்.
“நிஜம் ம்மா.. நம்பனும்.. நம்பித்தான் அகனும்.. இல்லைன்னா அவளை அத்தனை பிடிவாதமா நான் அனுப்பிருக்கவே மாட்டேன் தான.. இப்போ பைரவி திடீர்னு வருவான்னு எனக்கும் தெரியாது. ஆனா ஒன்னு, அவளுக்கு பாதுகப்பா இந்த விசயத்துல நிக்கனும்னு நினைக்கிறேன்.. எல்லாம் முடிஞ்சு ஒரு சுமுகம் வந்துட்டா, மறுபடியும் அவளை நான் இங்க இருந்து அனுப்பிடுவேன்…” என,
“அது உன்னால முடியுமா?!” என்றார் ரஞ்சிதம்.
“என் வார்த்தைல உனக்கு எப்போ நம்பிக்கை போச்சு?!” என்று சிவா கேட்க,
“அதுக்காக, அவளை கூப்பிட்டு புது வீட்ல தங்க வைக்கணுமா?” என்றார் ஆதங்கமாய்.
“பின்ன இங்கயா கூட்டிட்டு வருவான்?!” என்று ஷாலினி நக்கலாய் கேட்க, அவளை முறைத்தவன் “பைரவி மட்டுமில்ல, கூட அவளோட பிரண்ட் வந்திருக்கு.. வாடகை கொடுக்கிறேன்னு சொல்லித்தான் வந்திருக்கா. ம்மா இன்னொன்னும் இருக்கு, பைரவி எனக்காக வரல. வந்தது அவங்கம்மாக்காக…” என,
“ஆனாலும் இதெல்லாம் என்னால ஏத்துக்க முடியாது. யார்னா உங்கப்பா இப்படியானாரோ, நீ அவ பொண்ணுக்கே இடம் கொடுத்திருக்க…” என்று சொல்ல,
“ம்மா நான் சொல்லிட்டேன்ல பைரவி என் வாழ்க்கைல இனி இல்லை. ஆனா இந்த பிரச்சனைல அவளை அப்படியே விட முடியாது.. நான் சொன்னதுனால தான் இங்க என்ன நடந்ததுன்னே அவளுக்கு தெரியும். அவ நினைச்சிருந்தா தான் இன்னாரோட மகன்னு சொல்லாம கூட விட்டிருக்கலாம். நான் சொன்னதுமே அவங்க என் அம்மான்னு மறைக்காம சொன்னா..
இப்போ வரைக்கும் அவ பக்கம் எந்த தப்பும் இல்லை. இந்த முறை அவளுக்கு நான் சப்போர்ட் பண்ணித்தான் ஆவேன். அதுல எந்த மாற்றமும் இல்லை…” என்று பேசிக்கொண்டு இருக்க,
அங்கே புது வீட்டினில் பைரவியோ, அங்கு மாட்டப் பட்டிருந்த எல்லாம் வல்ல விநாயகர் படத்தின் முன்பு கரம் கூப்பி நின்று இருந்தாள்.
ரூப்பாவோ “வீடு சூப்பரா இருக்கே…” என்றபடி உள்ளே சுற்றிக்கொண்டு இருக்க, செல்வியோ எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தார்.