Advertisement

                  சிவபைரவி – 3

நிசப்தம்…!! அப்படியொரு நிசப்தம்… கன்னத்தை தாங்கி நின்ற சிவாவிற்கு கூட சட்டென பேச்சு வரவில்லை. ஒரு அதிர்ந்த பாவனை.

அங்கிருந்த அனைவருக்குமே அப்படித்தான். செல்வியோ நெஞ்சிலே கை வைத்து நின்றுவிட்டார்.

வெளியே நின்றிருந்த சிறுவர்களோ ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, ஜான் ஒரு திமிர் பார்வை தான் அப்போதும் சிவா மீது வீச, சிவாவிற்கு உச்சியில் இருந்து உள்ளங்கால் வரைக்கும் தகித்தது.

இமைக்கும் நொடியில் கண்கள் சிவந்திட, பார்வை மட்டும் பைரவியை அளக்க, அப்போதும் அவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கித்தான் நின்றிருந்தாள். இன்னும் அவளுக்கு ஆங்காரம் அடங்கவில்லை. பின்னே உடைந்தது அவளின் அம்மாவின் பரிசு அல்லவா.

அம்மா இல்லை. அம்மாவின் நினைவுகளாய் வைத்திருப்பவற்றை இப்படி எவனோ ஒருவன் வந்து உடைத்துவிட்டுப் போனால், சும்மா இருப்பதா??!!  

மற்றவர்களுக்கு எப்படியோ செல்விக்கு தான் இதயம் தாறுமாறாய் துடிக்க “என்ன பாப்பா நீ….” என்றார் மெல்ல,

அவரின் குரலில் லேசாய் கலைந்தவன், பார்வையை செல்வியின் புறம் திருப்ப, சிவாவின் முகத்தினை ஏறிட்டு கூட காணமுடியவில்லை.

இவ்விசயம் மட்டும் வெளியே தெருவினில் தெரிந்தால்?!

பைரவியின் வீடு நொடி பொழுதில் சுக்கு நூறாகிப் போகுமே. அச்சோ..!! நினைத்துப் பார்க்கவே பயமாய் போனது செல்விக்கு.

“கண்ணு.. சிவா… வா… நீ மொதல்ல வா.. எதுன்னாலும் பேசிக்கலாம்…” என்று அவன் தோள் தொட, பட்டென்று தோளை ஒரு குலுக்கு குலுக்கியவன், அதன் பின் கண்ணிமைக்கும் நொடியில், அந்த அறையில் இருந்த பொருட்கள்  முழுவதையுமே, அடித்து நொறுக்கிவிட்டான்.

யார் தடுத்தும் அவனை நிறுத்திட முடியவில்லை. மின்னல் வேகம்….

அவனுள் அப்படியொரு ஆத்திரம் கிளர்ந்து, வளர்ந்துகொண்டு இருக்க, அனைத்தும், அனைத்துமே ஒன்றுமில்லாது போனதுதான் மிச்சம்.

பைரவி ஸ்தம்பித்துத் தான் போனாள்..!!

அதற்குமேலே ஜான்… அதற்கும் மேலே செல்வி..!!

அவனுக்குப் புரிந்து போனது, இதெல்லாம் பைரவிக்கு மிக மிக முக்கியம் என்று. அது ஒன்று போதாதா?!

அனைத்தையும் ஒன்றுமில்லாது செய்துவிட்டு, என்ன செய்வது என்றே தெரியாது நின்ற பைரவியின் முன் சொடுக்கிட்டவன் “இப்போ என்ன செய்வ நீ?? ம்ம்.. சொல்லு என்ன செய்வ? என்னை போட்ருவியா? சொல்லு போட்ருவியா…?” என்று உறும,

“நீ… நீ இப்போ என்ன பண்ணிருக்கன்னு தெரியுதா??” என்றாள் பைரவி.

“நீ என்ன பண்ணன்னு உனக்கு தெரிஞ்சதா??”

“உன்ன அடிச்சேன்…”

“அதையே நானும் பண்ணிருந்தா நீ இப்படி நிக்கமாட்ட…” என்றவன், “சொல்லி வை…” என்று செல்வியிடம் சொல்லிவிட்டு நடக்க,

“ஹேய் நில்லு….” என்று கத்தி கூச்சலிட்டாள் பைரவி.

அவளுக்குத் தெரிந்து பைரவி இப்படி சத்தம் போட்டு பேசியது எல்லாம் இல்லை. இப்படி கோபப்பட்டதும் இல்லை. யாரையும் இப்படி கை ஓங்கி அடித்ததும் இல்லை. இதுவே முதல் முறை. அதுவும் முதல்நாள் தான் சிவாவிற்கு மனதார நன்றி சொல்லிவிட்டு, இன்று அவனை அடிக்கும் சூழல் வருமென்று நினைக்கவில்லை.

சிவா நின்று திரும்பிப் பார்க்க “என்ன நீ… என்ன நினைச்சிட்டு இருக்க? வந்த அவனை அடிச்ச, இங்க இருக்க பொருள் எல்லாம் உடைச்ச.. இப்போ நீ பாட்டுக்கு போற.. இந்த பொருட்களோட மதிப்புத் தெரியுமா உனக்கு…?” என்று பேசியபடி அவனருகே பைரவி செல்ல,

“பாப்பா வேணாம் பாப்பா…” என்று செல்வி அவளை பிடித்து நிறுத்த,

“நீங்க கொஞ்சம் சும்மாருங்க செல்விம்மா…” என்றவள் “சொல்லு இதெல்லாம் என்னன்னாவது தெரியுமா உனக்கு?” என்றாள் நக்கலாய்.

“ஏய் எதுவா இருந்தாலும் அது எனக்கு பெருசில்ல தான்.. முதல்ல இதோ இங்க நிக்கிறானே இந்த தடிமாடு… இவனை ஒழுங்கா இருக்கச் சொல்லு…” என்று ஜானை பார்த்து கை நீட்ட,

“மரியாதையா பேசு…” என்றாள் பைரவி.

“அது அவனவன் நடந்துக்கிறது பொறுத்து…” என்ற சிவா மீண்டும் வெளியேறப் போக,

“உன்னை இன்னும் நான் போகச் சொல்லல…” என்ற பைரவியின் இறுகிய குரலில்,

‘என்னடா இது…’ என்று சிவாவிற்கு சலிப்பாய் இருந்தாலும், பைரவியின் இந்த திடம், தைரியம் எல்லாம் அவனை வியக்க வைத்தது நிஜம்.

“ம்ம்ச்… உனக்கு ஒரு அடி பத்தாது போல…” என,

“அதே அடி உனக்கும் விழ நேரமாகாது…” என்ற பைரவி, “நான் கேட்டதுக்கு பதில் சொல்லு நீ…” என்றாள்.

“ஷ்..! அதான் சொல்லிட்டனே.. எதுவா இருந்தாலும் எனக்கது பெரிசில்ல.. இதோ இவன் வந்தது ஒழுங்கா வந்திருக்கணும்.. பசங்க மேல கார் இடிக்கிற மாதிரி வந்துட்டு, என்னன்னு கேட்டா அதுக்கு ராங்கா பேசினா இப்படித்தான்… ”

“அதுக்கு அவன் வெளிய வர்ற வரைக்கும் நீ வெய்ட் பண்ணிருக்கணும். இல்ல அவனை வெளிய இழுத்துட்டு போயிருக்கனும். நீ வந்து ஹீரோயிசம் பண்ண என் வீடு இடமில்லை… அது.. அதெல்லாம் விட.. இந்த பொருட்கள் எல்லாம்…” என்று எதுவோ சொல்ல வந்தவளை

“ஏய் நிறுத்து…” என்று சொல்லி அவனின் பேச்சை நிறுத்திய சிவா,

“என்ன சொன்ன என் வீடு இடமில்லையா?! தோடா…! இன்னா செல்விக்கா… கேட்டியா… இந்தம்மாக்கு சாமான் எடுத்து வைக்க, இல்ல வேற எதுன்னா வேணும்னா மட்டும் நம்மக்கிட்ட உதவி கேட்கும். இப்போ ஒரு பிரச்சனை அப்படின்னா எப்படி பேசுது பாத்தியா.. இதான் இவங்களுக்கும் நமக்கும்  இருக்க வித்தியாசம்…” என்றவன்,

“ஏய்…! நீ என்ன வேணா பேசிக்கோ…” என்றுவிட்டு ஜானைப் பார்த்து “நீ எப்படி கார் எடுத்துட்டு ஏரியா தாண்டி போறன்னு நானும் பாக்குறேன்…” என்று சொல்லிவிட்டு வேகமாய் நடந்து வெளியே சென்றுவிட்டான்.

ஜானோ “பைரவி இவனை சும்மா விடக்கூடாது. நான் இப்போவே தினேஷ்க்கு கூப்பிடுறேன்…” என,

“ஜான் லீவ் இட்…” என்றாள் வேகமாய் பைரவி.

“ஏன்?!”

“இல்ல போலீஸ் எல்லாம் வந்தா இது பெரிய பிரச்சனை ஆகும். நான் இங்க, இந்த ஏரியால வாழணும்னு அம்மா ஏன் முடிவு பண்ணாங்க தெரியலை. ஆனா இதுதான் அவங்க விருப்பம்.. அப்படி இருக்கப்போ வந்த கொஞ்ச நாள்லயே போலீஸ் அது இதுன்னா அது நல்லாருக்காது..” என்றவள்

“நீ பேசினதும் தப்புதானே…” என,

“அதுக்காக, அவன் வந்து இப்படி பண்ணலாமா?!” என்றான் ஜான் ஆத்திரம் அடங்காது.

“தப்புதான்.. ஆனா ஆரம்பம் உன்கிட்ட தானே..” என்றவள் செல்வியைப் பார்த்து “நீங்க கிளம்புறதுன்னா கிளம்புங்க செல்விம்மா நான் பாத்துக்கிறேன்…” என்றாள் ஒருவித வலி நிறைந்த குரலில்.

அவள் அம்மா| வாங்கிக்கொடுத்த பரிசுகள் அவை எல்லாம். எத்தனை பத்திரமாய் அவற்றை எல்லாம் உபயோகப்படுத்துவாள் என்று அவளுக்குத் தான் தெரியும். ஆசையாய் அம்மாவைத் தொடுவது போல் தொட்டுத் தொட்டுப் பார்ப்பாளே. கண்ணில் நீர் நிறைந்தது பைரவிக்கு.

“இல்ல பாப்பா அது…” என்று செல்வி ஜானைப் பார்த்து தயங்கி நிற்க,

“இவனை பத்திரமா தாட்டி விடுங்க செல்விம்மா…” என்றவள் “நீ கிளம்பு ஜான்…” என,

“இப்படியேவா…” என்றான் அங்கே கீழே விழுந்து உடைந்திருந்த பொருட்களை எல்லாம் காட்டி.

“நான் எடுத்து வச்சிக்கிறேன்…” என,

“பாப்பா இதெல்லாம் ஒட்ட வைக்க முடியாதா?!” என்றார் செல்வி புரியாது.

“ம்ம்ஹூம்…” என்றவள் மெதுவாய் கீழே விழுந்தவற்றை எடுக்க,

“குடு பாப்பா நானும் எடுக்கிறேன்…” என்று செல்வி வர,

“வேணாம்.. நா… நானே பார்த்துக்கிறேன்…” என்றவளுக்கு அழுகையே வந்துவிட்டது.

அப்படியே அமர்ந்து அழ “அட இன்னா பாப்பா நீ.. இப்படி பட்டது வேற புதுசு வாங்கிக்கலாம்…” என்று செல்வி சொல்ல,

“வாங்கலாம் தான்.. ஆனா இதெல்லாம் எங்கம்மா எனக்குக் கொடுத்தது. திரும்ப வருமா? அம்மாவும் இல்லை.. இப்போ அம்மா கொடுத்ததும் இல்லை…” என, செல்விக்கு அச்சோ என்று பரிதாபமாய் ஆகிப்போனது.

‘இந்த சிவா இருக்கானே…’ என்று கடிந்தவர், அடுத்து என்ன செய்யவென்று தெரியாது “நீ  வா தம்பி.. உன்ன குட்டின்னு போறேன்…” என, ஜான் பைரவியைப் பார்த்தான்.

அவள் இப்போதைக்கு சரியாக மாட்டாள் என்று தெரியும்.

கண்டிப்பாய் இப்போது தனிமையை நாடுவாள் என்பதும் புரியும்.

அதனால் “பைரவி நான் நாளைக்கு வர்றேன்…” என்று சொல்லிவிட்டு கிளம்ப,

செல்வியோ பைரவியிடம் “நான் சூதானமா கூட்டின்னு போறேன்…” என்றுவிட்டு கிளம்பினார்.

சொன்னது போலவே பிரச்சனை இல்லாது ஜானை  அந்த ஏரியாவில் இருந்து வெளியே அனுப்பிய செல்வி, நேராய் போனது சிவாவிடம் தான். இன்னும் அவனுக்கு அந்த கோபம் அடங்கியிருக்கவில்லை. அவனை சுற்றி இன்னமும் கூட சிறுவர்கள் கூட்டம் இருக்க,

“ண்ணா சூப்பர்ண்ணா.. செமையா இருந்துச்சு சீன்னு…” என்று ஒருவன் சொல்லிக்கொண்டு இருக்க,

“இந்தா… ஓடு… இன்னும் இன்னாடா பண்ணிட்டு இருக்கீங்க… கிளம்பு ஓடு…” என்று அவர்களை விரட்டிய செல்வி, அனைவரும் செல்லவும் “இன்னா சிவா…” என்று அவன் காலடியில் அமர,

“ம்ம்ச்…” என்றான் சலிப்புடன்.

“கண்ணு…”

“இப்போ எதுக்கு இங்க வந்த நீ?”

“நீயே இப்படி செய்யலாமா?!”

“இங்கபாரு இப்படி வந்து உக்காந்துன்னு அது இதுன்னு பேசிட்டு இருந்த வை நடக்குறது வேற…”

“என்னவோ நடக்கட்டும் ஆனா நீ இப்படி நடந்தது சரியில்ல கண்ணு..” என்ற செல்வியை கண்கள் இடுக்கிப் பார்த்தான் சிவா.

சிவா சொல்லும் அனைத்திற்கும் தலையாட்டும் செல்வி, இன்று வந்து அவனுக்கே அறிவுரை சொல்ல, அதனை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“அப்படின்னு அவ சொன்னாளா?!” என,

“ம்ம்ச்… உன் குணம் எப்படின்னு எனக்குத் தெரியும். அதுக்காக இந்த பொடி பசங்க ஏத்தி விடுறது எல்லாம் கேட்டு நீ இப்படி நடக்கணுமா?” என்றார் செல்வியும்.

“ம்ம்ச்…”

“உனக்கும் வயசு ஆகுது.. அதுக்கு ஏத்தது போல நடந்துக்கப் பாரு..” என,

“ஓ..! இந்த வாய், அந்த பொண்ணு என்னை அடிக்கிறப்போ எங்க போச்சு…” என்று சிவாவும் கேட்க,

“அதுவும் சரின்னு நான் சொல்லமாட்டேன்.. ஆனா பாரு.. அது யாருமில்லாத பொண்ணு.. இப்போ உக்காந்துட்டு அப்படி அழுகுது…” என,

“போ அங்குட்டு…” என்றான் எரிச்சலாய்.

“போவேன் தான்…” என்றவர் “அதெல்லாம் அவங்கம்மா வாங்கிக்கொடுத்த பரிசாம்.. சூதானமா வச்சிட்டு இருக்கும்போல. இப்போ உடைஞ்சு போச்சுன்னு அப்படி அழுகுது.. நானும் சமாதானம் செஞ்சிப் பார்த்தேன்.. ஆனா அம்மாதான் இல்ல.. அம்மா கொடுத்தும் இப்படி ஆகிடுச்சுன்னு ஒரே அழுகை…” என,

என்னவோ இந்த வார்த்தைகள் சிவாவை லேசாய் அசைத்துப் பார்த்தது.

“என்ன?!” என்று கேட்க,

“ஆமா கண்ணு… அதெல்லாம் இனி ஒன்னும் பண்ண முடியாதுபோல.. பல லட்சம் வரும்… புதுசு தான் வாங்கணும்…”  என,

“அதுக்கு.. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்…” என்றான் கோபமாய்.

ஏனோ சிவாவிற்கு ‘யாருமில்லாத பொண்ணு…’ என்ற வார்த்தை தன் மீதே கோபத்தை வரவழைக்க, செல்வியின் பேச்சோ அவனால் தாங்க முடியவில்லை.

“ஒன்னும் பண்ண முடியாதுதான். ஆனா இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு இனி நடக்காத.. என்ன ஏதுன்னு முதல்ல விசாரி.. பேசு.. இப்போ இதெல்லாம் நல்லாத்தான் இருக்கும். நாளைக்கு உனக்குன்னு ஒரு குடும்பம் குழந்தைன்னு ஆகுறப்போ, இப்படியான பிரச்சனை எல்லாம் வேற வேற வம்பை கொண்டு வந்து சேக்கும். உன்மேல இருக்க அக்கறைல சொல்றேன் அவ்வளோதான்…” என்றவர் கிளம்ப,

“அங்க யார் இருக்கா?” என்றான் சிவா.

“எங்க?!”

“அதான்.. அந்த பொண்ணு வீட்ல..”

“யாருமில்ல.. ஏன்..”

“அழுதுட்டு இருக்குன்னு சொன்ன.. தனியாவா விட்டு வந்த?”

“அது தான் போன்னு சொல்லுச்சு…”

“சொன்னா வந்துடுவியா நீ?!” என்றவன் “போ போய் முதல்ல என்னன்னு பாரு..” என்றவன் என்ன நினைத்தானோ “ஏதாவதுன்னா கூப்பிடு…” என,

‘என்னடா இது..?’ என்று வித்தியாசமாய் பார்த்தார் செல்வி அவனை.

இதுதான் சிவா!

கோபம் இருந்தாலும், தன் மீது நியாயமில்லை எனில் உடனே தணிந்துவிடுவான். அதற்காக போய் மன்னிப்பு எல்லாம் கேட்கும் ரகமல்ல. அந்த விசயத்தில் இருந்து உடனே தன்னை விடுவித்துக்கொள்வான்.

இப்போதும் அப்படியே பேச, செல்வியோ “நீ எப்படின்னு எனக்குத் தெரியும். இங்க இருக்கவங்களுக்குத் தெரியும். அந்த பொண்ணு உன்மேல நல்ல மரியாதை வச்சி இருந்துச்சு. இப்போ அது போச்சு.. யாரோ என்னவோ.. நம்ம ஏரியாக்கு வந்திருக்கு.. அது நல்லா இருக்குறது நம்ம பொறுப்பு. நான் வேற உன்ன பத்தி நிறைய சொல்லி வச்சிருந்தேன்.. எல்லாம் போச்சு…” என்று புலம்பியபடி எழுந்துகொள்ள,

“யாரும் என்னை அப்படி நினைச்சாலும் பரவாயில்ல.. அதெல்லாம் நினைச்சு கவலைப்படுற ஆளும் நானில்ல…” என்று சிவா பேச,

“நீ கவலைப்பட மாட்ட.. ஆனா நான் கவலைப்படுவேன்…” என்று செல்வி சொல்லிவிட்டு செல்ல,

‘என்னடா ச்சே…’ என்று கடுப்பாய் இருந்தது அவனுக்கு.

அன்றைய தினம் முழுதும் ஒன்றும் ஓடவில்லை அவனுக்கு. எந்த வேலையும் நடக்கவில்லை.

சிண்டு கூட “ண்ணா என்னண்ணா…” என,

“ஒண்ணுமில்ல நான் வீட்டுக்கு போறேன்…” என்று கிளம்பிவிட்டான்.

“வீட்டுக்கா…?!”

“ஆமா….” என்று சொல்லி சட்டைப்பையில் இருந்து நூறு ரூபாய் எடுத்தவன் “இந்தா சாப்பாடு வாங்கி சாப்பிட்டுக்கோ…” என்று கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டான்.

எப்போதும் இந்த நேரத்தில் எல்லாம் அவன் வீட்டிற்கு செல்லவே மாட்டான். தங்கை கல்லூரி சென்றிருக்க, அவனின் அம்மாவோ சமையல் முடித்துவிட்டு டிவி பார்த்துக்கொண்டு இருக்க, அப்பாவோ படுத்து உறங்கிக்கொண்டு இருந்தார்.

அப்பாவிற்கு பக்கவாதம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அன்றிலிருந்து இன்றுவரைக்கும் சிவா தான் அந்த குடும்பத்தின் பக்கபலம்.

அம்மா – ரஞ்சிதம். நடுதரவர்கத்திற்கும் கீழ் இருந்து இப்போது ஓரளவு வசதி வந்தபின்னும் கூட அவரின் கடுமையோ, எளிமையோ மாறவே இல்லை.

ஆம் கொஞ்சம் கடுமையான பெண்மணி தான்.

தேவையில்லாது யார் விசயத்திலும் தலையிட மாட்டார். அதேபோல் அவர்கள் குடும்ப விஷயம் வெளியே செல்வதும் அவருக்குப் பிடிக்காது. ஒருவேளை திருமணமான புதிதில் இருந்து கொஞ்சம் கஷ்டம் என்பதாலோ என்னவோ இப்படி இறுகிப்போனாரோ என்னவோ.

தன் அம்மா வாய் விட்டு சிரித்து சிவா கண்டது இல்லை. டிவி பார்ப்பார். ஆனால் அவரின் முகத்தினில் எவ்வித உணர்வும் இருக்காது.

தன் கணவர் சொக்கனிடம் கூட பேசுவாரா என்பது தெரியாது. ஏனெனில் சிவா அறிந்து அவனின் அம்மாவும் அப்பாவும் சிரித்து பேசி, அவ்வளவு ஏன் ஒன்றாய் அமர்ந்து பேசி கூட பார்த்தது இல்லை.

தங்கை ஷாலினி. கல்லூரி செல்கிறாள். அவளும் வீட்டினில் இருக்குமிடம் தெரியாது. என்ன இவன் வீடு செல்லாது இருந்தாலோ, இல்லை வேறெதுவும் என்றாலோ அம்மாவும் சரி தங்கையும் சரி இவனிடம் பேசுவர்.

அப்பாவிற்கு இன்னமும் கூட பேச்சு தெளிவில்லை.

அதனால் அவர் பேசுவதே இல்லை. தேவைக்கு மட்டும் ஓரிரு வார்த்தைகள்.

இப்படி வீட்டிற்குள் நுழைந்தாலே அவனுக்கு ஒருவித பாரமும், இறுக்கமும் வந்து சூழ்ந்துகொள்ளும்.

இயல்பில் கொஞ்சம் கலகலப்பான ஆள் தான் சிவா. இப்படியான சூழல் அவனை மாற்றிவிட்டது. அதனால் அவனுக்கு வெளியாட்கள் பழக்கம் நிறைய ஏற்பட்டு போனது.

   

 

           

           

                           

 

Advertisement