ரஞ்சிதத்திற்கு நெஞ்சு வெடிக்கும் போலிருந்தது. பைரவி ‘கிருஷ்ணா இல்லம்…’ என்ற பெயர் பலகையைப் பார்த்து. கண்ணிமைக்கும் நேரத்தில், கடந்த கால கசந்த நிகழ்வுகள் எல்லாம் கண் முன்னே வந்துபோக, சொக்கனின் இந்த நிலைக்கும், தான் வடித்த கண்ணீரும், பிள்ளைகளை இந்த நிலைக்கு கொண்டு வர தாங்கள் பட்ட பாட்டினையும் எண்ணியவருக்கு, இப்போதும் கண்களில் நீர் கோர்க்க,
‘பை.. பைரவி…’ என்று அவரின் இதழ்கள் உச்சரிக்க, நொடியில் புத்தி கணக்கிட்டுவிட்டது. பைரவி பின்னணி பாடகி கிருஷ்ணாவின் மகளாய் இருக்கக் கூடும் என்று. அப்படியொரு யூகம் மனது உணர்ந்ததுமே, நிஜமாய் நெஞ்சு வலிப்பது போலவே இருக்க, அதிர்ந்து நின்றவர், அப்படியே நின்றிருக்க, சிவாவிற்கோ என்ன செய்வது என்றே தெரியவில்லை.
அம்மாவும் இங்கே வருவார் என்று அவன் எண்ணவே இல்லை.
பைரவி, பெயர் பலகையை பார்த்துக்கொண்டு நின்றவள், எதேர்ச்சையாய் பின்னே பார்க்க, அவள் கண்ணில் முதலில் பட்டது சிவா தான். முழுதாய் ஒரு வருடம் கழித்து அவனை நேரில் காண்கிறாள்.
இதயம் ஒருமுறை நின்று துடித்தது. அதுவும் படபடவென அதிவேகமாய் துடிக்க, உடல் முழுவதும் சட்டென்று வியர்ப்பது போலவும் இருக்கத்தான் செய்தது. இது இத்தனை இருந்தாலும், பட்டாம்பூச்சி போல் ஒரு பரவசம் ‘வந்துவிட்டானே…’ என்று.
‘சிவா…’ என்று அகமும் புறமும் விகசிக்க, அவன் பெயரை உச்சரித்துக் கண்டவளுக்கு, கூடவே அவனின் அருகேயே அதிர்ந்த பாவனையில் நிற்கும் ரஞ்சிதமும் கண்ணில் பட, அப்போதுதான் அவளுக்கு நடப்பு சூழல் என்னவென்று புத்தியில் உரைக்க, வேகமாய் தன் முக பாவனைகளை மாற்றிக்கொண்டாள்.
அவர்களை வரவேற்கும் விதமாய், முன்னே வந்தவள் “வா.. வாங்க…” என்று இருவருக்கும் பொதுவாய் சொல்ல,
ரஞ்சிதமோ “நீ.. நீ…” என்று விரல் நீட்டி, கேள்வியை முடிக்க முடியாது திக்கித் திணற, சிவாவோ ‘என்ன செய்துகொண்டு இருக்கிறாய் நீ…’ என்பது போல் அவளை எரித்துவிடும் பார்வை பார்த்துக்கொண்டு இருந்தான்.
இத்தனை நாட்கள் கழித்துப் பார்த்தாலும், அவன் கண்களில் சிறிது கூட அவள்மீதான காதல் தென்படவில்லையே என்று பைரவியின் நெஞ்சம் வருந்தினாலும், அவனை சட்டை செய்யாது “உள்ள வாங்க ஆன்ட்டி…” என்றாள் ரஞ்சிதத்திடம்.
“நீ.. நீ.. கிருஷ்ணா..” என்று அப்போதும் ரஞ்சிதம், அவளிடம் திணறலாய் கேட்க,
“ப்ளீஸ் ஆன்ட்டி. வெளிய நின்னு பேசுற விசயமில்லை இது. உள்ள வாங்க…” என்று பைரவி ரஞ்சிதத்தின் கரத்தினை பற்ற,
பட்டென்று அவளது கரத்தினை தட்டிவிட்டவர், இரண்டடி பின்னே போய் நின்று “சி.. சிவா…” என்று மகனையும் தன்னோடு சேர்த்து இழுக்க,
“ஆ.. ஆன்ட்டி…” என்றாள் குழப்பமாய்.
“வேணாம்.. வேண்டவே வேணாம்…” என்று தன் செவிகளை பொத்திக்கொண்டவர் “சிவா வாடா நம்ம போலாம்.. இ.. இவளை இங்க இருந்து போயிட சொல்லு…” என்றவர், இரு கரம் கூப்பி “நீ.. நீ போயிடு…” என்று கெஞ்சுவது போல் பேச, பைரவிக்கு இழுத்துப் பிடித்து வைத்திருந்த தைரியம் எல்லாம் காணமல் போய், கண்கள் கலங்கிவிட,
“ப்ளீஸ் ஆன்ட்டி…” என்று கண்ணீர் வழிய, அவரின் இரு கரத்தையும் இறுக்கிப் பிடித்தவள் “உள்ள வாங்க…” என,
“அம்மாடி..!” என்று வேகமாய் தன்னிரு கைகளையும், விடுவித்துக்கொண்டவர், “போதும்.. உங்கம்மா வந்து எங்க குடியெல்லாம் கெடுத்தது போதும். இப்போ நீ என்ன செய்யலாம்னு வந்திருக்க?” என்று அவர் கத்த,
“ம்மா…” என்றான் சிவா, இத்தனை நேரம் மௌனம் விடுத்து.
“என்னடா? என்ன? இதெல்லாம் உனக்கும் தெரியுமா? என்னன்னு சொல்லுடா…” என்று ரஞ்சிதம் அவனைப் போட்டு உலுக்க,
“நீ வா.. நம்ம வீட்டுக்கு போலாம்…” என்று சிவா அவரை திருப்பி அழைத்துக்கொண்டு போக விளைய “இல்ல.. ஆன்ட்டி நான் உங்களோட பேசனும். நீங்க இங்க உள்ள வரலன்னா, நான் அடுத்து உங்க வீட்டுக்கே வந்து பேசுவேன்…” என்று பைரவி அழுத்தம் திருத்தமாய் சொல்ல, அம்மாவும் மகனும் அவளை உற்று நோக்கினர்.
அவள் முகத்திலும், உடல் மொழியிலும் நொடியில் ஒரு திடம் வந்து இருக்க, அவள் பேசினில் நான் சொன்னதை செய்வேன் என்ற செய்தி அப்பட்டமாய் தெரிய, அவள் சொன்னதைக் கேட்டு, ரஞ்சிதம் அதிர்ந்து நின்றார் மீண்டும்.
‘வீட்டிற்கு வருவாளா?!’ என்று திகைக்க,
சிவாவோ இம்முறை அவளை கூர்ந்துப் பார்த்தவன், கண்களை இடுக்கி “என் பேச்சுக்கு இவ்வளோ தான் மரியாதை இல்லை…” என்று கடிய,
“உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நமக்கு ஒத்து வராதுன்னு சொல்லி, என்னை வம்படியா அனுப்பினவர் நீங்க. அப்படி இருக்கப்போ, நான் ஏன் உங்க பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கனும்…” என்று மனதை கல்லாக்கிக் கொண்டு, சிவாவிடம் இப்படித்தான் பேசவேண்டும் என்று மனதினில் மனப்பாடம் செய்து வைத்திருந்ததை அப்படியே அச்சரம் பிசகாமல் பேச, கண்களை ஆச்சர்யத்தில் விரித்தவனுக்கு அவளின் எண்ணப் போக்கு புரியாதா என்ன?!
இந்த ஓராண்டில், தொழில் பழகி, பலதரப்பட்ட மனிதர்களோடு பழகி ஆட்களை எடை போட்டு, வியாபாரம் செய்கிறான் இல்லையா. பைரவியின் சிறு கண் அசைவிற்கே அர்த்தம் கண்டுகொள்பவன். இன்று அவள் பேசும் பேச்சும், உடனே மாற்றிக் கொள்ளும் முக பாவனைகளையும் கண்டு கொள்ள மாட்டானா?!
“ஓ! பின்ன எதுக்கு எங்கம்மாவோட நீ பேசணும்..” என்றவன் “ம்மா வா போலாம்…” என்று ரஞ்சிதமை இழுக்க,
“நான் பேசுவேன்.. உங்கம்மாவோட மட்டும் இல்ல. எங்கம்மா பண்ண விளம்பரத்தை நம்பி, இந்த ஏரியால யாரெல்லாம் அந்த பைனான்ஸ் கம்பனில பணம் போட்டு ஏமாந்து போனாங்களோ, அவங்க எல்லாரோடவும் நான் பேசுவேன். வீடு வீடா போய் பேசுவேன்…” என்று பைரவி பேச, அம்மா, மகன் இருவருக்குள்ளும் ‘என்னாகப் போகிறதோ…’ என்ற பயம் தொற்றிக்கொண்டது.
ஏனெனில், பல வருடங்கள் முன்பு எனிலும், நடந்த நிகழ்வுகளும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் மிக மிக கொடியது. இதோ இப்போதும் சொக்கனின் உடல்நிலை தெரியாதா இல்லையே?!
அவரேனும் உயிருடனாவது இருக்கிறார். உயிரை விட்டவர்களே எப்படியும் பத்து பேருக்கு மேலிருப்பரே. தகராறு செய்து, சிறைக்கு சென்று வந்தவர்கள் எத்தனை பேர். பணம் சேமித்து எப்படியேனும் ஒருநிலைக்கு வந்துவிடலாம் என்று கனவில் இருந்தவர்கள் எத்தனை பேர்.
பிள்ளைகளின் படிப்பிற்கு, உடன் பிறந்தவளின் திருமணத்திற்கு என்று பணம் போட்டவர்களின் நிலை எல்லாம் அப்போது எப்படி இருந்தது என்று ரஞ்சிதம் அறிவாரே. எத்தனை குடும்பங்கள் அடுத்த வேளை உணவிற்குக் கூட கஷ்டப்பட்டது என்று அவருக்குத் தெரியுமே.
அத்தனை ஏன், சொக்கனின் வைத்தியம், சிவா மற்றும் ஷாலினிக்கு மூன்று வேளை உணவு, படிப்பு என்று ரஞ்சிதமே மீடேறி வர எத்தனை பாடுபட்டார். சிவா குடும்ப சூழல் உணர்ந்து அவருக்கு பக்கபலமாய் சிறுவயதில் இருந்து நின்றதால் சரி.
இல்லையெனில் அவர்களின் குடும்பமும் என்னாகி இருக்கும்.
நினைக்க நினைக்க, அவருக்கு அங்கே நிற்கவே முடியவில்லை. மயக்கம் வருவது போலிருக்க “யம்மா தாயே…” என்று மீண்டும் கை கூப்பியவர்
“நீ இங்க இருக்கவும் வேணாம். யாருக்கும் நல்லதும் செய்ய வேணாம்.. போதும் நீ கிளம்பிடு. எங்க யார் முன்னாடியும் நீ வரவே வேணாம்…” என்றவர்
“வா டா…” என்று மகனையும் அழைத்துக்கொண்டு திரும்பி நடக்க,
“சரி முன்னாடி போங்க.. நான் பின்னாடி உங்க வீட்டுக்கு வர்றேன்…” என்றபடி அவளும் பிடிவாதமாய் நின்றாள். அவளது இந்த பிடிவாதம் அம்மா, மகன் இருவரையும் சடன் ப்ரேக் இட்டது போல் நிற்க வைக்க,
ரஞ்சிதமோ திரும்பி “தயவு செஞ்சு என் புருஷன் முன்னாடி வந்து நிக்காத…” என்றார்.
“அப்போ… நீங்க உள்ள வாங்க.. நான் என்ன சொல்ல வர்றேன்னு கேளுங்க…” என்று இலகுவாய் சொல்வது போல் பைரவி, அபிநயம் காட்டி பேச, சிவாவிற்கு இந்த பைரவி முற்றிலும் புதியவளாய் தெரிந்தாள்.
“பணக்கார திமிர காட்டுறியா டி…” என்று ரஞ்சிதம், இம்முறை கோபமாய் பேச,
இக்காட்ட சூழலில் தனக்கு கடை வைக்க இடம் கொடுத்து, வாழ்வாதாரத்திற்கு வழி செய்து விட்டவன் சிவா தானே. மனதில் அந்த நன்றி கடன் இருக்கத்தானே செய்யும்.
“செல்விம்மா… நீங்க ஏன் இத்தனை டென்சன் ஆகுறீங்க…” என்றவள் “உள்ள வாங்க ஆன்ட்டி…” என்றாள் திரும்ப.
இந்த முறை ரஞ்சிதம் அது இதென்று எதுவும் பேசாமல், முன்னே நடக்க “ம்மா…” என்றான் சிவா.
“இப்போவே.. இங்கவே என்னன்னு பேசி முடிச்சிட்டு போயிடலாம் டா.. உன் நைனா முன்னாடி இவ வரவே வேணாம்…” என, அவரது மனது சிவாவிற்கு நன்கு புரிய, இம்முறை பைரவியை ஒரு பார்வை பார்த்தான் ‘இதெல்லாம் உனக்குத் தேவையா?!’ என்பது போல்.
அவனது பார்வையை பைரவி நேர்கொண்டு தாங்கி நின்றவள் “நீங்களும் வாங்க…” என்றழைக்க, சிவா வேறு வழியில்லாமல் அவனின் அம்மாவோடு வீட்டினுள் வர, இதே வீட்டினில் எத்தனை எத்தனை அழகான தனிமை பொழுதுகள் எல்லாம் இருவருக்கும் இருந்திருக்கிறது என்பதனை இருவருமே எண்ணாமல் இருக்க முடியவில்லை.
ஒருசேர இருவருமே ஆழ மூச்செடுத்து விட, ரஞ்சிதம் நொடியில் இதனைக் கண்டவருக்கு மனது மீண்டும் அடித்துக்கொண்டது. கிருஷ்ணாவின் குரலுக்கே சொக்கன் அத்தனை ரசிகனாய் இருந்தார்.
ஆனால் மகனோ, பைரவியின் மீது காதல் கொண்டவன் அல்லவா.
எந்நேரம் வேண்டுமானாலும் தான் கொண்ட முடிவு என்பது அடி சறுக்கும் அல்லவா?!
மனது இதைவேறு எண்ணி பயம்கொள்ள, அதை வெளிக்காட்டாமல், தனது திடத்தை மீட்டுக்கொண்டவர், வீட்டினுள்ளே வந்ததுமே “என்ன விஷயம்?” என்றார் கறாராய்.
“உக்காருங்க ஆன்ட்டி…” என்றவள் “செல்விம்மா ஜூஸ் போடுங்க…” என்றும் சொல்ல,
“போதும்.. என்ன விசயம்னு சொல்லு…” என்றார் நின்றபடி.
“ஆன்ட்டி..” என்றபடி அவரின் பக்கம் வர முயல,
“ம்ம்ச் அங்கயே நின்னு பேசு…” என்றார் கண்டிப்பாய்.
“ம்ம்…”என்று ஒரு பெருமூச்சு விட்டவள் “எனக்கு என்ன நடந்ததுன்னு எல்லாம் நிஜமா தெரியாது ஆன்ட்டி. எங்கம்மாவோட நான் இருந்ததே இல்லை. ஸ்கூல், காலேஜ் எல்லாமே ஹாஸ்டல் தான். சொல்லப்போனா நான் இங்கயே இல்லை. அம்மாவோட கடைசி நாட்கள்ல மட்டும் தான் நான் அவங்களோடவே இருந்தேன்…” என்றாள், வந்த அழுகையை விழுங்கி.
ரஞ்சிதம், முகத்தினில் எவ்வித உணர்வையும் காட்டாது சிலையென நிற்க “அம்மாவோட உயிர் பிரியும்னு எல்லாம் நான் நினைக்கல. ஆனா, லாஸ்ட் ஸ்டேஜ்னு டாக்டர் சொல்லவும், எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலை. அப்போ கூட அம்மா எனக்காக எதுவும் பேசல.. நீ அங்க போய் இரு.. முடிஞ்சளவுக்கு அங்க இருக்க மக்களுக்கு உதவி செய்னு தான் சொன்னாங்க.. அப்போவும் கூட எனக்கு எதுவும் புரியலை.
இங்க வீடு இருக்குன்னு கூட எனக்குத் தெரியாது ஆன்ட்டி. நான் இங்க வர்றப்போ, எனக்குமே எல்லாமே புதுசு தான். ஆனா ஒன்னு கண்டிப்பா அப்போ நடந்த பிரச்சனைகள் என் அம்மாவை பாதிச்சது. அது நிஜம்…” என, ரஞ்சிதம் கண்களை இடுக்கிப் பார்த்தார்.
“எங்கம்மா எத்தனை பேமஸா இருந்தாங்கன்னு உங்களுக்கே தெரியும். திடீர்னு பாடுறதை நிறுத்தினாங்க. எதுக்குன்னு கேட்கக் கூட எனக்குத் தெரியலை. சரி அம்மா என்னோடவே இருப்பாங்கன்னு நினைச்சா, என்னை எப்பவுமே அம்மா அவங்களோட இருக்க விட்டதே இல்லை…” எனும்போதே, அவளுக்கு தொண்டை அடைத்தது.
அதைவிட நெஞ்சு அடைத்தது சிவாவிற்கு.
எத்தனை துன்பம் நேர்ந்தபோதிலும், சிவா இன்றளவும் பெற்றோரோடு தானே இருக்கிறான். ஆனால் பைரவி தந்தை முகத்தை கூட அத்தனை காணவில்லை. சொல்லப்போனால், அவளின் தந்தை அவளை ஒருமுறையேனும் கையில் ஏந்தி இருப்பாரோ என்னவோ?!
இதெல்லாம் நினைக்க நினைக்க, பைரவியை எண்ணி மனது மீண்டும் வருந்தத் தொடங்க, பைரவியோ “இதெல்லாம் உங்கமனசுல என் மேல நல்லெண்ணம் வரணும்னு சொல்லலை ஆன்ட்டி. என் பக்கமும் உங்களுக்குத் தெரியனும்னு சொன்னேன். அம்மா எதுக்காக இங்க என்னை அனுப்பினாங்கன்னு எனக்கு அப்போ தெரியாது. தெரிஞ்சப்புறம்…” என்று இழுத்தவளின் பார்வை சிவாவைத் தொட்டு மீள,
“தெரிஞ்சப்புறம் நான் என்ன பண்றதுன்னு யோசிக்கிறதுக்கு முன்னாடியே, என்னை இவர் இங்க இருந்து அனுப்பிட்டார்…” என, இம்முறை ரஞ்சிதம் மகன் முகத்தினைக் கண்டார்.
சிவா அப்போதும் எதுவும் பேசினான் இல்லை. என்ன பேச முடியும்.
“இப்பவும், நான் இங்க வந்தது உங்க மகனுக்காக இல்லை ஆன்ட்டி. என் அம்மாக்காக. அவங்க மேல இருக்க கலக்கத்தை போக்கணும். வாழ்வாதாரமே இல்லாம இருக்கிறவங்களோட நிலையை உயர்த்தனும்னு நினைக்கிறேன்…” என்று பேசி முடிக்க,
“அவ்வளோ தானா?!” என்றார் ரஞ்சிதம்.
பைரவிக்கு தனது நிலையை எப்படிச் சொல்லி அவருக்கு புரிய வைப்பது என்றே தெரியவில்லை. ஓரளவு வார்த்தைகளை யோசித்து, கோர்த்துத் தான் பேசினாள். ஆனாலும் அதை எத்தனை சரியாய் அவர் புரிந்துகொண்டார் என்பது அவளுக்கு சந்தேகமே.
“ஆன்ட்டி…” என்று அவள் தயங்கிப் பார்க்க,
“நீ சொல்ற மாதிரி உங்கம்மா மேல தப்பே இல்லை. சரி ஒத்துக்கிறேன். இப்போ உன்கிட்ட அளவுக்கு அதிகமா பணமிருக்கு. அதுனால உதவுறேன்னு வந்து நிக்கிற. இப்படி யோசி, ஒருவேளை உன்கிட்ட பணமே இல்லைன்னு வை, அப்போ என்ன செஞ்சிருப்ப நீ?!” என, இதற்கு பைரவி என்ன பதில் சொல்வாள்.
“என்ன பாக்குற? வாழ்க்கைல பணத்தால எல்லாத்தையுமே நடத்திட முடியாது. இப்போ நீ வந்து நிக்கிற நான் உதவி செய்றேன்னு. எல்லாரும் அதை ஏத்துக்குவாங்கன்னு நினைக்கிறியா?” என, பைரவி அசையாமல் நின்றிருந்தாள்.
“பதில் சொல்லும்மா. உன் பக்கம் இருக்க கதை எல்லாம் சரிதான். ஆனா எங்களோட இழப்பு எல்லாம் பணத்தால சரி செய்ய முடியாத இழப்பு…” என்றவர்
“நீ என்னவோ செய். ஆனா உன்னோட உதவி எங்களுக்குத் தேவையில்லை. உதவுறேன் குடுக்குறேன்னு எங்க வீட்டு பக்கம் வந்து நின்னுடாத..” என்றவர்
“வா டா…” என்று மகனை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.