Advertisement

                           சிவபைரவி – 10

பைரவி அவளது வேலைகளில் மும்முரமாய் இருந்தாள். ஷூட்டிங் செல்வது, ரிக்கார்டிங் செல்வது, சம்மதித்திருந்த  இசை நிகழ்ச்சிகளுக்குப் போவது என்று அவளது நாட்கள் வழக்கமாய் நகர, இதற்கிடையில் வீட்டில் இருக்கும் நேரமும், பாடல்கள் பாடி வலைத்தளத்தில் பதிவு செய்வது என்று அவளுக்கு வேறு எதுவும் நினைக்க நேரமில்லை.

செல்வியும் வழக்கம் போல் பைரவி வீட்டிற்கு வேலைக்குச் செல்வார், வருவார். கிட்டத்தட்ட பத்து நாட்கள் இப்படித்தான் கழிந்தது.

சிவாவும் கூட, ஷெட்டிற்கு மேலே வீடு கட்டும் பணியில் தீவிரமாய் இறங்கியிருந்தான். ஆரம்பத்தில் மணி கூட சொன்னான் “செல்வியக்காவ கடைய காலி பண்ண சொல்லு மாப்ள. அது கடை போடுற நேரமே கம்மி.. அந்த இடம் இருந்தா, நம்ம வண்டியெல்லாம் அங்கன நிறுத்திக்கலாம்..” என, சிவாவிற்கு அதனை சொல்ல மனது வரவில்லை.

அது எப்படி அவனே தான் இடம் கொடுத்து கடை போட்டு பிழைத்துக்கொள் என்று சொன்னது. இன்று அவனே காலி செய் என்று எப்படி சொல்வது?!

மனம் வரவில்லை..

“அதெல்லாம் வேணாம்… அதுபாட்டுக்கு கடை போடட்டும். நம்ம நல்ல என்ஜினியரா பாப்போம்.. ப்ளான் ரெடி பண்ணுவோம்…” என்றுவிட்டான்.

ஆனால் அந்த நல்ல எஞ்சினியர் தான் அவனுக்கு கிடைத்தப்பாடில்லை..

இவர்கள் ஏரியாவில் வந்து வேலை செய்யவே இரண்டொருவர் யோசிக்க, இந்த பத்துநாட்களாய் சிவாவும் மணியும் அலைந்துகொண்டு தான் இருந்தனர்.

எப்படியோ ஒருவரைப் பிடித்து, அழைத்து வந்துக் காட்ட “இந்த இடத்துல ஒரு பெட்ரூம், ஹால் மட்டும் தான் வரும்… சமையல் ரூமெல்லாம் கட்டனும்னா, கீழ இருந்தே அகலப்படுத்தணும்…” என, அதாவது, செல்வி கடை போடும் இடத்தையும் சேர்த்து சொல்ல, அப்போது செல்வியும் அங்கே தான் இருந்தார்.

செல்விக்குப் புரிந்து போனது..

ஆனால் சிவா அப்போதும் கூட எதுவும் அவரிடம் சொல்லாது “சரிங்க சார் நாங்க யோசிச்சுட்டு சொல்றோம்…” என,

“நல்லது…” என்று அவரும் கிளம்பிவிட்டார்.

மணி அவரை கொண்டு போய் விடப் போக, சிவா சட்டை பொத்தான்களை கழட்டியபடி உள்ளே போக, “கண்ணு…” என்றழைத்து செல்வி அவனை நிறுத்தினார்.

“என்னக்கா…”

“நான் கடைய காலி பண்ணிடுறேன்…” என்று அவர் சொல்கையில், முகத்தில் நிஜமாய் ஒருவித வருத்தம் தெரிய,

சிவாவோ அவரை முறைத்தவன் “இப்போ நான் அப்படி சொன்னேனா…?” என,

“இல்ல எஞ்சினியர் சொல்லிட்டு போனார்ல…” என்று செல்வியும் சொல்ல,

“அவர்தான் இங்க கட்டடம் கட்ட போற எஞ்சினியர்னு நான்தானே முடிவு பண்ணனும்…” என்று சிவாவும் பேச,

“அதுக்கில்ல…” என்றார் செல்வி தயக்கமாய்.

“இங்க பாருக்கா… நீ உன் வேலையை எப்பவும் போல பாரு..” என்றுவிட்டு அவன் தன் வேலையைப் பார்க்கக் கிளம்பிட, செல்விக்கு பைரவியிடம் இருந்து அழைப்பு வந்துவிட்டது.

“சொல்லு பாப்பா…” என்று அலைபேசியை காதில் வைக்க,

“செல்விம்மா நான் ஒரு ரிக்கார்டிங் போறேன்.. வயிறு கொஞ்சம் லேசா வலி. வந்து எனக்கு தயிர் சாதம் மட்டும் பண்ணித் தர்றீங்களா.. வெளிய சாப்பிடவும் பிடிக்கல…” என,

“அட.. இதுக்கு கேட்கணுமா?! இதோ வர்றேன்…” என்று வேகமாய் செல்வி பைரவி அங்கே சென்றார்.

பைரவி கொஞ்சம் சோர்வாய் தான் இருந்தாள்.

“ஏன் பாப்பா… உடம்பு முடியலன்னா ஏன் போகணும்…” என்று செல்வி கேட்க,

“முன்னவே சரின்னு சொன்னது. அட்வான்ஸ் கூட வாங்கிட்டேன். போகாம இருக்க முடியாது.. என்னன்னு தெரியலை வயிறு வலி காலைல இருந்து. அதான் உங்களை கூப்பிட்டேன்…” என,

“கூட யார் வர்றாங்க பாப்பா…” என்று செல்வி கேட்டபடி, சமையலில் இறங்க,

“நான் தான் போறேன் செல்விம்மா…” என்றாள் பைரவி.

“ஏன் அந்த சான் தம்பி வரலையா?”

அவர் ஜானை சான் என்று சொன்னதில் பைரவிக்கு லேசாய் சிரிப்பு வந்திட “இல்ல அவனுக்கு வேற வேலை இருக்கு. எப்போ பார் என்கூடவே வர முடியுமா. நானே போயிப்பேன்.. கார் கூட புக் பண்ணியாச்சு…”

“அப்படியா… நான் வேணா கூட வரவா…”

“அடடா அதெல்லாம் வேணாம்.. நீங்க போய் கடை போடுற வேலையை பாருங்க…” என,

“கடையை காலி பண்ணலாம்னு இருக்கேன் பாப்பா…” என்றவர் நடந்ததை சொல்ல,

“ஓ! வீடு கட்டப் போறாங்களா.. நல்ல ஐடியாதான்…” என்றவள்,

“பேசாம சைட்ல ஒரு கடையும் கட்டித் தர சொல்லுங்க செல்விம்மா.. அடுத்து நீங்க கொஞ்சம் சேர்த்து வாடகை கொடுத்துப்பீங்கலாம்.. இப்போ தற்காலிகமா கடை வேற இடத்துல போடலாம்…” என

“சொன்னா சிவா சரின்னு தான் சொல்வாப்ள.. ஆனா எனக்கு கேட்க மனசு வரல.. வீடு கட்டி அந்த பையன் கல்யாணம் செஞ்சு குடும்பமா வாழட்டும். இதுவரைக்கும் அவனுக்குன்னு அவன் எதுவுமே செஞ்சதில்ல..” என்ற செல்வியின் பேச்சில் சிவா மீதிருக்கும் கனிவு புரிந்தது.

அடுத்த அரை மணிநேரத்தில் காரும் வந்திட, பைரவி கிளம்பிவிட்டாள் செல்வி செய்து கொடுத்த தயிர் சாதத்தை எடுத்துக்கொண்டு.

செல்வியும் வீடு வந்து சேர்ந்துவிட, மணிதான் சிவாவை திட்டிக்கொண்டு இருந்தான்.

“இப்போ செல்வியக்காவுக்கு வருமானமே இல்லைன்னா பரவால்ல, யோசிக்கலாம். அதான் பைரவி வீட்ல நல்லாவே சம்பளம் வாங்குதுல்ல. கடையே காலைல ரெண்டு மணி நேரம், சாயந்திரம் ரெண்டு மணி நேரம் தான் போடுது..” என,

“பாப்போம்டா.. வேற எஞ்சினியர் பாப்போம்…” என்று சிவா பேச,

“நீ இப்படியே பாரு.. எவனும் வரமாட்டான்…” என்றபடி மணி சிண்டுவை எதற்கோ திட்ட, அடுத்து பேச்சு அவர்கள் இருவருக்குமாய் மாறியது.

சிவாவிற்கு ஒரே யோசனை என்ன செய்வது என்று..

வீடு கட்டவேண்டும் என்று முடிவு செய்தாகிவிட்டது. காலதாமதம் என்பது கூடாதல்லவா?!

ரஞ்சிதம் கூட கேட்டுவிட்டார்..

“ஒருவாரம் போகட்டும் மா…” என்றுமட்டும் சொல்லியிருந்தான்.

ஒருவாரம் பத்து நாட்களாய் மாற, சரி செல்விக்கு மாற்று ஏற்பாடு எதுவும் செய்ய முடியுமா என்று யோசித்தான்.

அதற்கும் அவனுக்கு உடனே வேறு வழி கிடைக்கவில்லை.

இப்படியே பொழுது நகர்ந்துகொண்டு இருக்க, இரண்டு மணி நேரத்தில் செல்வி அரக்கப்பரக்க வந்தார் “கண்ணு… சிவா…” என்று அழைத்தபடி.

“என்னக்கா என்னாச்சு?!”

“பாப்பா… பாப்பா ரெக்காடிங் போச்சு… காலைல இருந்து உடம்பு சரியில்ல அதுக்கு.. இப்போ ஒரே வாந்தியாம்.. ரொம்ப முடியலன்னு, பக்கத்து ஆஸ்பத்திரியில அதுவே போயி சேந்திருக்கு..” என்று சொல்ல,

“லூசா அவ.. முடியலன்னா ஏன் போகணும்…” என்றபடி வேகமாய் சட்டையை போட்டுக்கொண்டவன், கல்லாவில் இருந்த பணத்தை எடுத்து பேன்ட் பக்கெட்டினுள் வைத்துக்கொண்டு “வா போலாம்…” என்று கிளம்பிவிட்டான்.

இதற்கும் செல்வி ‘வா..’ என்று கூப்பிடக் கூட இல்லை.

ஒரு வண்டி ஏற்பாடு செய்துகொடு என்று கேட்கவே வந்தார்.

சிவாவின் வேகத்தைப் பார்த்தவர், எதுவும் கேட்காது அவனோடு நடக்க “அறிவில்ல.. இப்படி தனியா போய் அவளே சேர்ந்துப்பாளா.. எங்க போனான் அந்த ஜான்.. எப்பவும் இவளோடவே தானே இருப்பான்..” என்றவன் பேசியபடி ஒரு கார் எடுத்திட, செல்வி வேகமாய் ஏறி அமர்ந்துகொண்டார்.

செல்வி பதில் சொன்னது எதுவுமே அவனது செவிகளில் விழவில்லை போல. அவன்பாட்டில் பேசிக்கொண்டே காரை செலுத்திக்கொண்டு இருந்தான்.

‘தனியா போய் அவளே சேர்ந்திருக்கா…’

ஏனோ இது அவனை வெகுவாய் வருந்தச் செய்தது.

எப்படி இருந்திருக்கும் அவளுக்கு அப்போது..

‘கடவுளே…’ என்று அவனே தலையில் தட்டிக்கொண்டான்.

செல்விகூட ‘இவனுக்கு என்னாச்சு…’ என்கிற ரீதியில் பார்க்க, சிவா அதெல்லாம் கவனிக்கவே இல்லை.

கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கும் மேலே ஆனது. அங்கே மருத்துவமனைக்குச் செல்ல.

பெரிய மருத்துவமனை தான்.

செல்வி பார்த்ததுமே கொஞ்சம் வாய் பிளந்தார்.

சிவா வேகமாய் முன்னே நடக்க “பைரவி..” பெயரை ரிசப்சனில் சொல்ல, அவர்களும் அவள் இருந்த அறை எண்ணை சொல்ல, அவனுக்குப் பின்னே செல்வி ஓட்டமும் நடையுமாய் தான் வந்தார்.

லிப்டில் ஏறவெல்லாம் அவனுக்கு பொறுமை இல்லை போல.

மாடி படிகளில் வேகமாய் ஏற, செல்விக்கு மூச்சு வாங்கியது.

முதலாம் தலத்தில் தான் இருந்தாள் பைரவி.

உள்ளே நுழைய, கண்களை மூடிப் படுத்திருந்தாள். கையில் ட்ரிப்ஸ் போடப்பட்டு இருக்க, அந்த ஏசி அறையில், யாருமில்லாது, கட்டிலில் அவள் மட்டுமே படுத்திருக்க, ஏனோ அந்த அவளின் தனிமை கோலம், சிவாவிற்கு பைரவியை எண்ணி மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது.

அருமையான பெண்.. இவளுக்கு ஏன் இப்படி ஒரு நிலை என்று.

“அறிவிருக்கா உனக்கு. முடியலன்னா வீட்ல இருக்க வேண்டியது தானே.. இல்ல அப்போவே டாக்டர் கிட்ட வந்திருக்க வேண்டியது தானே…” என்று திடீரென சிவாவின் வசை கேட்கவும், திடுக்கிட்டுத் தான் பைரவி கண் திறக்க, செல்வி கைகளைப் பிசைந்துகொண்டு நிற்க, சிவா முறைத்துத் தான் நின்றிருந்தான்.

இவர்களைப் பார்த்ததும் பைரவி எழுந்து அமரப் போக “படு முதல்ல…” என்று சிவா போட்ட சத்தத்தில் பைரவி அசையக்கூட இல்லை.

மிரண்டு போய் அவனைப் பார்க்க “அப்படியே படு.. மரியாதை எல்லாம் இருக்கட்டும்…” என்றவன் செல்வியைப் பார்க்க, செல்வி பைரவி அருகே சென்று “என்ன பாப்பா நீ..” என்றார் அங்கலாய்ப்பாய்.

“புட் பாய்சன் செல்விம்மா.. ரெண்டு நாள்ல சரியாகிடும்…” என

“அப்படின்னா…” என்றார் புரியாது.

“ம்ம்ம் எதையோ ஆர்டர் பண்ணி சாப்பிட்டிருப்பா.. அதான் சேரல…” என்று சிவா நக்கல் பேச,

“ஆர்டர் எல்லாம் பண்ணி சாப்பிடல…” என்றாள் ரோசமாய் பைரவி.

“அப்போ செல்வியக்க சமைச்சது சேரல போல…” என்று அப்போதும் லேசாய் கடிந்தே கேலி பேச,

“அச்சோ..!” என்று செல்வி நெஞ்சில் கை வைக்க,

“ம்ம்ச் அதெல்லாம் இல்ல…” என்றாள் பைரவி சோர்ந்து.

உடலில் பலமே இல்லாது போல் இருந்தது.

பேசக்கூட முடியவில்லை அவளுக்கு.

“நல்லவேள ரிக்கார்டிங் முடிச்சிட்டேன்.. கிளம்பும் போதுதான் ஒரே வாந்தி.. கொஞ்சம் ஒருமாதிரி ஆகவும் நானே வந்து அட்மிட் ஆகிட்டேன்…” என்றாள் புன்னகையை வரவழைத்து.

“அடேங்கப்பா எவ்வளோ பெரிய சாகசம்..” என்று அப்போதும் சிவா கடிய

“ம்மா செல்விம்மா இவரை எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க…” என்றாள் பைரவி.

நிஜமாய் அவன் முன்னே இப்படி சோர்ந்து போய் படுத்திருப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை.

எப்போதும் மிடுக்குடன் இருக்கும் பைரவி தான் அவளுக்குப் பிடிக்கும்.

“நான் எங்க கூப்பிட்டேன்..” என்று செல்வி சொல்ல, பைரவி சிவாவை கேள்வியாய் பார்க்க “இப்போ என்ன நான் வந்திருக்கக் கூடாது அதானே…” என்றவன் திரும்பிப் போகப் பார்க்க

“இந்த கோபம் தானே வேணாம் சொல்றது…” என்று மெதுவாய் பேசிய பைரவியின் வார்த்தைகள் அப்படியே அவனை நிற்க வைத்தது.

சிவா அடுத்து பதில் பேசும் முன்னம், மருத்துவரும், இரண்டு செவிலியர்களும் உள்ளே வந்திட “இப்போ ஓகே வா…” என்று மருத்துவர் பைரவியிடம் கேட்க,

“ம்ம் பரவாயில்ல…” என்று அவளும் சொல்ல,

செல்வியைப் பார்த்து “நீங்க?” என்றார் மருத்துவர் சந்தேகமாய்.

பைரவியைத் தெரியும். செல்வியின் தோற்றமும் உடையும் அவரை கேள்வி கேட்க வைக்க பைரவி “என்னோட எங்க வீட்ல இருக்காங்க…” என்றாள் வேகமாய்.

“ஓ..!” என்றவர் “கண்டிப்பா மூணு நாள் ரெஸ்ட்ல இருக்கணும்.. அதிக காரமில்லாம சாப்பாடு கொடுங்க.. ஜூஸ் நிறைய குடிக்கணும்.. நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும். நைட் வீட்டுக்கு கூட்டிட்டு போங்க…” என்றவர் மீண்டும் ஒருமுறை அவளை பரிசோதனை செய்துவிட்டு செல்ல,

சிவா அப்போதும் முறுக்கிக்கொண்டுத்தான் நின்றான்.

“செல்விம்மா அப்படி உக்காருங்க…” என்றவளின் பார்வை சிவா மீதிருக்க, சிவாவோ “நான் கிளம்புறேன்…” என்றான்.

ஆனாலும் போக மனதில்லை.

“போலாம்…” என்றவள் “செல்விம்மா எனக்கு பசிக்கிற மாதிரி இருக்கு.. தொண்டை எல்லாம் வறண்டு போச்சு…” என, அவளைப் பார்க்க பாவமாய் தான் இருந்தது.

“எதுவும் குடுக்கலாமான்னு தெரியலையே…” என்று செல்வி சொல்ல

“நான் கேட்டிட்டு வர்றேன்…” என்று சிவா மருத்துவரிடம் போக, அடுத்த ஐந்து நிமிடத்தில் திரும்ப வந்தான்.

“ட்ரிப்ஸ் முடியுற வரைக்கும் எதுவும் கொடுக்கக் கூடாதாம்..” என,

“ம்ம்ச்…” என்று சலிப்புடனே சம்மதித்தாள் பைரவி.

“எங்க உன் கூட்டமெல்லாம்…?” சிவா கேட்க,

“யாரும் இங்க சென்னைல இல்ல. தினேஷ் இருப்பான். அவனுக்கும் டியூட்டி.. யாருக்கும் சொல்லல..” என,

“ஏன்?” என்றார் செல்வி இம்முறை.

“சொன்னா எல்லாம் அவங்கவங்க வேலையை போட்டுட்டு ஓடி வரணும். வந்து அடுத்து அது இதுன்னு பேச்சு வரும். கடைசியில நீ தினேஷை கல்யாணம் பண்ணிக்கோன்னு எல்லாம் சொல்வாங்க…” என்று பேச்சுவாக்கில் பைரவி சொல்லிவிட,  சிவா அவளை பட்டென்று நிமிர்ந்து பார்க்க, பைரவி சட்டென்று பேச்சினை நிறுத்தி இருந்தாள்.

ஏற்கனவே தெரிந்த விஷயம் தானே. அதுவும் சந்தோஷி சொல்லி. இப்போது பைரவி சொல்லவும் சிவாவிற்கு ஒருமாதிரி இருந்தது.

“ஏன் பாப்பா அந்த போலீஸ் தம்பி நல்லாத்தான் இருக்கு.. எனக்கு டக்குன்னு பாக்க நம்ம சிவா போலவே இருந்துச்சு… கல்யாணம் பண்ணிக்கோயேன்.. நல்லாத்தான் இருக்கும் ஜோடி பொறுத்தம்…” என்று செல்வி சொல்ல, அடுத்த நொடி சிவா, பைரவி இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் தொட்டு மீண்டது.

அவளிடம் இருந்து எந்த பதிலும் வராது போக “என்ன பாப்பா…” என்றார் செல்வி.

“அக்கா பைரவி கொஞ்சம் படுக்கட்டும். இந்த பேச்சு அவங்களுக்குப் பிடிக்கலன்னா விடு…” என்றவன், அறையை விட்டு எழுந்து வெளியே வந்துவிட்டான்.

தினேஷ் தன்னைப் போல இருப்பானா?!

அவனுக்கும் பைரவிக்கும் ஜோடிப் பொறுத்தம் நன்றாய் இருக்குமென்றால், அப்போது எனக்கும் பைரவிக்கும் கூட என்று மனது போன போக்கைப் பார்த்து, அதிர்ந்து தான் நின்றான் சிவா.

அங்கே பைரவிக்கோ சிவாவின் பார்வை தான் கண்ணில் நின்றது. மனதிலும் கூட.

ஆண்கள் தன்னை எப்படிப் பார்க்கிறார்கள் என்று அவர்களின் பார்வையை வைத்தே கண்டுவிடுவாள் பைரவி.

சிவாவின் பேச்சில் தான் கோபம் இருந்ததுவே தவிர, அவனது கண்களில் ஒருவித பரிதவிப்பு அப்பட்டமாய் தெரிந்தது.

‘உனக்கு ஒன்றுமில்லையே…’ என்று தவித்த, அவனது பார்வை அவளை தழுவியது அவளுக்கு மட்டுமே தெரியும்.

கண்களை மூடிப் படுத்திருந்தவளுக்கு, மனது ஒருநிலையில் இல்லை.

 

     

 

        

                                   

Advertisement