புஷ்பாவும் அன்னபூரணியும் சேர்ந்து ஒரு பெரிய ஸ்கூலை நிர்வகிக்கிறார்கள். 
முத்துவேலுக்கு பிள்ளைகள் இருவர் என்றால் உயிர். அவர்கள் ஆசைப் பட்டுக் கேட்டதைச் செய்து கொடுப்பார். ஆனால் அவர்கள் தங்கள் கைக்குள் தான் இருக்க வேண்டும் என்று எண்ணுவார். 
முத்துவேலுக்கும் புஷ்பாவுக்கும் ஆசை என்னவென்றால் தங்களுக்கு பிறகு நிர்மல் அரசியல் வாரிசாகவும், ஆஷாவை ஸ்கூல் பொறுப்பையும் எடுக்க சொல்ல வேண்டும் என்பது தான். அது போக ஜெயச்சந்திரனுக்கு ஆஷாவை கட்டி வைக்க வேண்டும் என்பது பெரியவர்களின் ஆசை. 
ஆனால் நிர்மலுக்கு அரசியலில் எந்த ஆர்வமும் கிடையாது. ஆனால் அதை முத்துவேலிடம் தைரியமாக சொல்லி விட முடியாது. 
அதனால் “இப்போதைக்கு நீங்க தான் அப்பா எங்களுக்கு வழிகாட்டி. இப்பவே உங்களுக்கு போட்டியா நான் இருக்க கூடாது. அதனால என்னோட வழில என்னை கொஞ்ச நாள் விடுங்க”, என்று நயமாக பேசி வேலைக்கு செல்ல அனுமதி வாங்கினான். 
முதலில் சென்னையில் வேலை பார்க்க அனுமதி கொடுத்த முத்துவேல், நிர்மல் நயமாக பேசவும் வேறு நாட்டுக்கே செல்ல அனுமதி கொடுத்தார். 
அவருடைய பிடியில், அவருடைய அனுமதியில் தான் நிர்மல் இயங்குகிறான் என்று அவர் நம்பியிருக்க அவனோ அவர் கையை விட்டு தப்பிப்பதற்காக தான் இவ்வாறெல்லாம் செய்தான். 
மகனின் தில்லு முல்லை அறியாத அப்பாவி முத்துவேல் மற்ற எல்லாவற்றிலும் அடப்பாவி தான். 
நிர்மலின் சாகசங்களை அறிந்தவள் ஆஷா மட்டுமே. தன்னுடைய அண்ணன் ஆஸ்த்ரேலியாவிலே குடியுரிமை வாங்க முயற்சி செய்து கொண்டிருப்பது அவளுக்கு மட்டுமே தெரியும். 
அப்பாவுக்கு பிடித்த மகளாக ஆஷா இருந்தாலும் நிர்மலைப் பற்றிய ரகசியங்களை பற்றி அவரிடம் வாயைத் திறக்க மாட்டாள். 
அதனால் நிர்மல் ஆஷாவிடம் உயிரையே வைத்திருந்தான். அதே போல் தான் ஆஷாவும். ஆனால் இருவருமே தங்கள் அன்பை வெளியே சொல்லிக் கொள்ள மாட்டார்கள். 
மனோஜ் சிவானியை அம்மு என்று பாசமாக அழைத்து தங்கை பாசத்தை காண்பித்தால் நிர்மலோ “நீ அடங்கவே மாட்டியா எருமை?”, என்று தான் அவனுடைய பாசத்தைக் காண்பிப்பான். இரண்டு அண்ணன்களும் தங்களின் தங்கை மீது உயிரையே வைத்திருந்தனர். 
புஷ்பாவும் அன்னபூரணியும் நடத்தும் பள்ளியில் தான் நிர்மலும், மனோஜும் படித்தார்கள். மனோஜ் நிர்மல் இருவருமே ஒரே கிளாசில் தான் படித்தார்கள். இருவரும் நெருங்கிய நண்பர்கள். 
ஆஷா தன்னுடைய பாட்டி வீட்டில் இருந்ததால் வேறு பள்ளியில் தான் படித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் ஏழாம் வகுப்பு படிக்கும் போதே அவள் பாட்டி இறந்ததால் தங்கள் பள்ளியிலே அவளை சேர்த்தனர். அப்போது நிர்மல் மற்றும் மனோஜ் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தனர். 
அது அவளுடைய பள்ளி என்பதால் அவளுடன் படிப்பவர்கள் அனைவரும் அவளுடன் நன்றாகவே பேசினார்கள். அவளுடன் நட்பு கொள்ள அனைவரும் முயன்றார்கள். அதில் உண்மையான நட்பு எது? பொய்யானது எது என்று குழப்பம் வந்ததால் அனைவரையும் ஒரு எல்லையோடு நிறுத்திக் கொண்டாள் ஆஷா. 
தங்கையும் தன்னுடன் படிப்பதால் நிர்மல் அவளை அடிக்கடி சென்று பார்த்துக் கொள்வான். கூடவே மனோஜையும் அழைத்து செல்வதால் தன்னுடைய அண்ணனுடைய நண்பன் என்ற முறையில் தான் முதலில் மனோஜைத் தெரியும். 
எப்போதுமே புஷ்பா தான் அவளை ஸ்கூல் முடிந்ததும் அழைத்துச் செல்வாள். காலையிலும் அவள் தான் அழைத்து வருவாள். 
இன்று புஷ்பாவுக்கு எதுவோ ஒரு மீட்டிங் இருக்கவே அவள் சீக்கிரம் கிளம்ப வேண்டியது இருந்தது. 
அதனால் ஆஷா கிளாசுக்கு வந்தாள் புஷ்பா. திடீரென்று கரஸ்பாண்டண்ட் கிளாசுக்கு வரவும் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் பதற “நான் ஆஷாவைப் பார்க்க வந்தேன். ஆஷா ஒரு நிமிஷம் வெளிய வா”, என்று அழைத்தாள் புஷ்பா. 
வெளியே வந்த ஆஷாவிடம் “அம்மா இப்ப வெளிய கிளம்புறேன் டா. அத்தையும் இன்னைக்கு வரலை. நீ அண்ணா கூட வீட்டுக்கு போயிரு சரியா?”, என்றாள் புஷ்பா. 
“சரிம்மா”, என்று சொல்லி விட்டு கிளாசுக்கு சென்றவளை ஆசிரியர் முதற்கொண்டு அனைவரும் “எதுக்கு கரஸ்பாண்டண்ட் பாக்க வந்தாங்க?”, என்று காரணம் கேட்கவும் அவர்களுக்கு பதில் சொன்னாலும் ஏதோ தனக்கென்று இருக்கும் அடையாளத்தை இழந்ததாகவே அவளுக்கு பட்டது. 
தான் பள்ளிக்கு சொந்தக்காரியாக இருப்பதாலே அனைவரும் தன்னுடன் இயல்பாக பழக வில்லை என்ற வெறுப்பு அவளுக்கு அப்போதே வந்தது. 
அன்று மாலை பள்ளி முடிந்ததும் நிர்மல் கிளாசுக்கு சென்றாள். அங்கே நிர்மல் இல்லை. “ஏய், ஆஷா நிர்மலை தேடி வந்தியா? அவன் கிரவுண்ட்ல இருக்கான். ஒரு நிமிஷம் இரு. நான் கூட்டிட்டு போறேன்”, என்ற மனோஜ் கிளாசுக்கு சென்று தன்னுடைய பேகை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். 
தன்னுடைய நண்பனின் தங்கை, அதனால் அவளிடம் சகஜமாக பேசினான் மனோஜ். 
“உனக்கு ஸ்கூல் பிடிச்சிருக்கா ஆஷா?”, என்று கேட்டான் மனோஜ். 
அவன் சகஜமாக பேசுவதில் வியப்படைந்தவள் “பிடிக்கலை, சுத்தமா பிடிக்கலை”, என்றாள். 
“ஏன் என்ன ஆச்சு? உன் பழைய பிரண்ட்ஸை எல்லாம் மிஸ் பண்ணுறியா?”
“ஹிம் அது கொஞ்சம் தான். ஆனாலும் பிடிக்கலை”
“ஏன், இது உங்க ஸ்கூல் தானே?”
“அதனால் தான் பிடிக்கலை. எல்லாரும் தள்ளிப் போற மாதிரி இருக்கு. எல்லாரும் பேசுறாங்க தான் ஆனா பிடிக்கலை”
“நீ ஏன் அப்படி நினைக்கிற? உன்னோட ஸ்கூல்னு நீ நினைக்கிறதை விடு. உன் அண்ணன் அப்படித் தான் இருப்பான்”
“ஹிம் பழகிக்கணும்”, என்று அவள் சொல்லும் போதே கிரவுண்ட் வந்திருந்தது. 
இவளைக் கண்டு நிர்மல் ஓடி வந்தான். “ஏய் வாயாடி, நீ என்ன இங்க? அம்மா கூட போகலையா?”, என்று கேட்டான் நிர்மல். 
“நானா டா வாயாடி நீ தான் டெவில். அம்மா உன்னோட தான் போக சொன்னாங்க. அவங்களுக்கு வேலை இருக்காம்”, என்று சண்டைக்கு சென்றாள். 
இருவரும் பேசுவதை வியப்பாக பார்த்தான் மனோஜ். ஆஷாவை விட ஒரு வயது இளையவள் தான் சிவானி. அவள் பார்க்க கொஞ்சம் பெரிய பிள்ளை போன்று தோன்றியதால் சீக்கிரமே ஸ்கூலில் சேர்த்ததால் ஆஷா கிளாஸ் தான் படிக்கிறாள். அவளை அவ்வளவு கொஞ்சுவான் மனோஜ். சிவானியும் அண்ணன் மேல் உயிராக இருப்பாள். 
ஆனால் நிர்மல் மற்றும் ஆஷாவோ சண்டை போடுவதைக் கண்டு அவனுக்கு வியப்பு வந்தது. 
“நான் கிளம்ப நேரம் ஆகும் டி. அவ்வளவு நேரம் வெயிட் பண்ணுவியா?”, என்று கேட்டான் நிர்மல். 
“பண்ணுறேன்”, என்று சொல்லி அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தாள். 
“வா டா நாம போகலாம்”, என்று சொல்லி மனோஜை அழைத்து சென்ற நிர்மல் “பத்திரமா இரு. வேற எங்கயும் போகாத ஆஷா”, என்று சொல்லிச் செல்லவும் மறக்க வில்லை. 
மனோஜ் நிர்மல் இருவருமே கபடி பிளேயர்ஸ். இவர்கள் இருவரும் களத்தில் இறங்கியதும் விளையாட்டு சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதை ஆர்வமாக பார்வையிட ஆரம்பித்தாள் ஆஷா. 
ஆறு மணி போல் தான் விளையாடி முடித்து விட்டு வந்தார்கள் இருவரும். “என்ன உனக்கு சரியான போர் அடிச்சதா? ஒழுங்கா நாலைல இருந்து அம்மா கூடவாது அத்தை கூடவாது போயிரு டி. சும்மா உக்காந்துருந்தா உனக்கு தான் கடுப்பா இருக்கும்”, என்றான் நிர்மல். 
“அதெல்லாம் கடுப்பா இல்லை டா. என்னையும் ஏதாவது கேம்ஸ்ல சேத்து விடேன். அம்மா கூட வீட்டுக்கு போன அப்புறம் ஒரே படி படின்னு டார்ச்சல். இங்க இருந்தா கொஞ்ச நேரம் விளையாடுவேன்ல?”, என்றாள் ஆஷா. 
“இங்க பாரு ஆஷா, நேர போக்குக்கு விளையாடக் கூடாது. உனக்கு உண்மைலே என்ன கேம் பிடிச்சிருக்குன்னு சொல்லு. அதுல உன் அண்ணன் சேத்து விடுவான்”, என்றான் மனோஜ். 
“நான் நாளைக்கு சொல்றேன். சரி, வீட்டுக்கு போவோமா? எனக்கு பசிக்குது”, என்று ஆஷா சொன்னதும் நிர்மல் மனோஜிடம் இருந்து விடை பெற்றான். ஆஷாவும் தலை அசைத்து விடை கொடுத்தாள். 
நிர்மலை எப்போதும் ஆஷா அண்ணா என்று அழைக்க மாட்டாள் என்பதால் அவனுடன் இருக்கும் மனோஜையும் அண்ணா என்று அழைக்க வில்லை. 
அன்று இரவு முழுவதும் யோசித்து யோசித்து பேஸ்கட் பால் விளையாடலாம் என்று முடிவு செய்து நிர்மலிடம் சொன்னாள். அவன் பாராட்ட, விஷயம் புஷ்பாவிடம் சென்றது. 
புஷ்பாவுக்கு மகள் ஸ்போர்ட்ஸில் சேர்வது பிடிக்க வில்லை. பெண் பிள்ளைக்கு எதற்கு இது என்று கேட்பவள் அவள். 
“இங்க பாரு ஆஷா, நாளைக்கு நீ தான் ஸ்கூல் கரஸ்பாண்டண்ட் ஆகப் போற? அப்படி இருக்கும் போது ஒழுங்கா ஏதாவது படிக்கிறதை மட்டும் பாரு. பல லாங்குவேஜ் கத்துக்கோ. ஸ்போர்ட்ஸ் எல்லாம் வேண்டாம்”, என்றாள் புஷ்பா. 
“புஷ்பா, குழந்தையை எதுக்கு அதட்டுற? அவளோட அண்ணன் விளையாடுறான். அதனால அவளுக்கு ஆசை வந்துருக்கு. தடை சொல்லாத”, என்று மகளுக்கு பரிந்து பேசினார் முத்துவேல். 
நிர்மலும் தங்கைக்கு ஆதரவாக இருந்தான். அதனால் அடுத்த நாளே அவள் அதில் சேர்ந்து விட்டாள். விளையாட்டில் அவளுக்கு பல சந்தேகம் வரும். நிர்மலுக்கு பேஸ்கட் பால் விளையாட்டில் ஆர்வம் கிடையாது என்பதால் மனோஜ் தான் அவள் கேள்விக்கு விடை அளிப்பான். 
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது. மனோஜ் படிப்பில் சாராரி என்றாலும் விளையாட்டு என்று வந்து விட்டால் வேங்கை தான். அவன் விளையாடுவது கபடி என்றாலும் கேரம், தடகளம் என்று அவனுக்கு தோன்றிய விளையாட்டில் எல்லாம் கலந்து கொள்வான். அதனால் நிறைய மெடல் வாங்குவான்.
பள்ளியில் அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தான் மனோஜ். கிரவுண்டில் மெடல் வாங்கியிருந்தாலும் அதை பிரேயரில் வைத்து அனைவர் முன்னிலையிலும் அவனுக்கு அணிவிக்கும் போது அவனுக்கு நிறைய விசிறிகள் இருந்தார்கள். 
அவன் மேடைக்கு வரும் போதெல்லாம் அனைவரும் அவனைப் புகழ அவனைப் பற்றிய ஒரு எண்ணம் ஆஷா மனதிலும் உருவானது. 
“இந்த அண்ணா நிறைய மெடல் வாங்குவாங்க டி”, என்று சொன்னாள் அவளுடன் படிக்கும் பெண். 
“என் அண்ணானோட பிரண்ட் தான் இவங்க”, என்று பூரிப்பாக சொன்னாள் ஆஷா. 
“உன் அண்ணானோட பிரண்ட்னாலும் இவங்களைப் பத்தி உனக்கு எப்படி தெரியும்? நீ புதுசா வந்திருக்கல்ல. உனக்கு தெரியாது. நான்
மூணு வருஷமா பாக்குறேன். மெடல் வாங்க ஏறுனா ஏறிட்டே இருப்பாங்க தெரியுமா?”, என்று அந்த பெண் பீற்ற உள்ளுக்குள் அப்போதே புகைந்தது ஆஷாவுக்கு. 
அந்த வயதில் அது என்ன உணர்வு என்று அவளுக்கு தெரியாது. அவன் மீது ஒரு மயக்கம் அவளுக்கு உண்டு. சுற்றி இருந்தவர்கள் அவனைப் பற்றி பேசியே அவளுக்குள் உருவாக்கினார்கள். கூடவே தன்னுடைய அண்ணனும் அவனை புகழ அவள் மனதில் ஒரு ஹீரோவாக தடம் பதித்தான் மனோஜ். 
எல்லாரும் அவனை புகழ்வதாலா? இல்லை அவனுடைய தனித்தன்மையா? அவனுடைய குறும்பான பேச்சா? இவள் ஏதாவது தவறாக சொன்னால் உரிமை எடுத்து அவளை கண்டிக்கும் அவனின் செய்கையா?
எதுவென்று அவளுக்கு தெரியாது. ஆனால் அவன் மீது அவளுக்கு ஒரு ஈடுபாடு. அவனைப் போலவே எல்லாமே செய்ய வேண்டும் என்று எண்ணுவாள். 
அவன் எந்த கலரில் பேக் வைத்திருக்கிறானோ அதே கலரில் தான் அவளும் புதியது வாங்கினாள். 
அவன் நெற்றியில் திருநீறு பூசிக் கொண்டு வந்தால் இவளும் அதையே செய்ய ஆரம்பித்தாள். அவனை எங்காவது பார்க்க நேர்ந்தால் அவனுடைய அசைவுகளை உன்னிப்பாக கவனிப்பாள். அதை ரசிக்கவும் செய்வாள். தன் அண்ணனிடம் அவனுடைய குடும்பத்தைப் பற்றி ஆவலாக கதை கேட்டு தெரிந்து கொண்டாள். அவள் மனதில் ஒரு ஹீரோ போல உயர்ந்து நின்றான் மனோஜ். ஆனால் அவனுக்கு அவள் மனதில் உள்ளது தெரியாது. 
காதல் மலரும்….