“அண்ணா, நீ இப்ப வீட்டுக்கு வரியா?”, என்று கேட்டாள் சிவானி.
“அம்மு, நான் வரேன். அதுக்கு முன்னாடி இப்ப என்ன ஆச்சுன்னு சொல்லு டா. எனக்கு பதட்டமா இருக்கு. யாரும் ஏதாவது சொன்னாங்களா?”, என்று கேட்டான் மனோஜ். அவனுக்கு தெரியும், அவள் தங்கை எப்போதுமே அவனை வீட்டுக்கு அழைக்க மாட்டாள்.
இப்போது அழைக்கவும் அவனுக்கு பயமாக இருந்தது. “அம்மு அழாம என்ன ஆச்சுன்னு சொல்லு டா. அண்ணா இப்ப அங்க வரேன். அம்மா அப்பாக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா?”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. எல்லாருமே நல்லா தான் இருக்காங்க. எனக்கு கல்யாணம் பேசுறாங்கண்ணா. நீ கொஞ்சம் வாயேன்”
“இவ்வளவு தானா? நான் கூட பயந்துட்டேன். அம்மு, கல்யாணம் நினைச்சு பயந்துட்டியா? படிச்சு முடிச்ச உடனே தான் பண்ணி வைப்பாங்க. கவலைப் படாதே டா”
“என்னன்னு சொல்லு மா. சொன்னா தான் நான் ஏதாவது முடிவு பண்ண முடியும்?”
“இந்த திவ்யா சும்மா கிடக்காம அவளோட அண்ணனைக் எனக்கு கட்டி வைக்கணும்னு பேசுறா”
“என்னது அந்த குடிகாரப் பயல் ரமேஷையா?”
“ஆமாண்ணா, அவ அந்த பேச்சை எடுத்ததும் நித்யாக்கா அவளோட கொழுந்தன் சிவாவைக் தான் எனக்கு கட்டி வைக்கணும்னு சண்டை போடுறா?”
“ஐயையோ என்னமா சொல்ற?”
“ஆமாண்ணா, அந்த பஞ்சாயத்து தான் ஓடிட்டு இருக்கு. நேத்து தான் இந்த பிரச்சனை ஆரம்பிச்சது. நானே சாமளிச்சிக்கலாம்னு பாத்தேன். ஆனா ரொம்ப தொல்லையா இருக்கு”
“அம்மா அப்பா என்ன சொன்னாங்க?”
“சொந்தத்துக்குள்ள கட்டி வச்சா நல்லா இருப்பேன்னு அம்மா அப்பா எனக்கு அட்வைஸ் பண்ணுறாங்க. இன்னைக்கு காலைலே அக்கா பஞ்சாயத்தைக் கூட்டிட்டா. அதான் காலேஜ் போகலை. நீ கொஞ்சம் இங்க வரியாண்ணா?”
“பத்து நிமிசத்துல அங்க இருப்பேன் மா. நீ பீல் பண்ணாத. அண்ணன் பாத்துக்குறேன்”, என்று சொல்லி போனை வைத்தவன் அங்கேயே தொப்பென்று அமர்ந்து விட்டான்.
சிவானி எப்போதுமே தைரியமாக இருப்பவள், அவளையே கலங்க வைத்து விட்டார்களே என்னும் போது பிரச்சனையின் தீவிரம் அவனுக்கு புரிந்தது.
“அண்ணா என்ன ஆச்சுண்ணா? போன்ல தங்கச்சியா பேசினது?”, என்று கேட்டான் ராம்.
“ஆமா டா, அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு வீட்ல பேசுறாங்கலாம். எங்க அத்தை மகனை கல்யாணம் பன்னிக்க சொல்றாங்கலாம். அவன் சரியான அயோக்கியன். எங்க அக்கா அவளோட கொழுந்தனை கட்டிக்கணும்னு சொல்றாளாம். அவ மாப்பிள்ளை ஒருத்தரையை எங்களால கட்டி மேய்க்க முடியலை. அந்த வீட்ல இவளையும் கொடுத்தா மொத்த குடும்பமும் மிளகாய் அறைச்சிரும். என் அம்மு தேவதை டா. அவளோட அருமை புரிஞ்ச ஒருத்தன் கிட்ட தான் அவளை ஒப்படைக்கணும்”
“இப்ப என்னண்ணா செய்ய போற?”, என்று கேட்டான் ஜெகன்.
“போய் வீட்ல பேசி புரிய வைக்கணும் டா. நான் பாத்துக்குறேன். நீங்க வேலையைப் பாருங்க. நான் வீடு வரைக்கும் போயிட்டு வரேன்”, என்று சொல்லி அதே மெக்கானிக் உடையில் கிளம்பி விட்டான்.
சிவானி கவலையில் வேறு உடை அணிய வேண்டும் என்பதைக் கூட மறந்து விட்டான்.
வீட்டுக்கு போவது வரைக்கும் ஒரே யோசனையாக தான் இருந்தது. வீட்டுக்குள் நுழைந்தவனைக் கண்டு சந்தோஷப் பட்ட பார்வதி “கண்ணு, வந்துட்டீயாப்பா? இவ்வளவு பெரிய வீட்டை விட்டு அங்க போய் இருக்கணுமா ராசா?”, என்று வரவேற்றாள்.
அவளுடைய பாசம் மனதை தைத்தாலும் அதை கண்டு கொள்ளாதவன் “ஆமா, அடிக்கடி வந்து போற மாதிரி தானே வீடு இருக்கு”, என்று முகத்தில் அடிப்பது போல பேசி விட்டான்.
அதில் பார்வதி முகம் சுருங்கிப் போனது. “எனக்கு ரெண்டு பேருமே பிள்ளைங்க தான் ராசா. ரெண்டு பேர்ல யாருக்காக நான் பேச முடியும்?”
“இந்த பஞ்சாயத்தை விடு மா. நான் சிவானி பத்தி பேச வந்தேன்”
அப்போது “அண்ணா”, என்று அழைத்த படி வந்தாள் சிவானி. அடுத்து ஒருவர் ஒருவராக வெளியே வந்தார்கள். வெளியே சென்றிருந்த துரைப்பாண்டியும் வந்து விட்டார்.
திவ்யா அவனையும் அவன் உடையையும் இளக்காரமாக பார்த்தாள். அங்கே அவள் ஒருத்தி இருக்கிறாள் என்று கூட அவன் கண்டு கொள்ள வில்லை. அவன் தன்னுடன் பிறந்த திலீபனையே கண்டு கொள்ள வில்லை. பின் அவளையா கண்டு கொள்வான்.
எதுவுமே தெரியாதது போல “என்ன அம்மு? வீட்ல இருக்குற? காலேஜ் போகலையா? இன்னைக்கு உன்னைக் காணுமேன்னு தான் உன்னைப் பாக்க வந்தேன்”, என்று பேச்சை ஆராம்பித்தான் மனோஜ்.
என்ன சொல்ல என்று தெரியாமல் சிவானி மௌனமாக இருக்க தன்னுடைய தாய் தந்தையை பார்த்தான் மனோஜ்.
“அங்க என்ன டா பாக்குற? நல்ல விஷயம் தான் தம்பி. நம்ம சிவானிக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு இருக்குறோம். உங்க மாமா தான் அவரோட தம்பிக்கு கட்டி வைக்கலாம்னு சொன்னார்”, என்றாள் நித்யா.
“ஆமா மாப்ளே, என் தம்பிக்கு நம்ம சிவானியை கட்டி வைச்சிறலாம். அப்புறம் எல்லாரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆகிறலாம் பாரு”, என்றான் செந்தில்.
தன்னுடைய அக்காவுக்கும் மாமாவுக்கும் பதில் சொல்லாமல் “அம்மா, இப்ப அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு என்ன அவசரம்?”, என்று பார்வதியிடம் கேட்டான் மனோஜ்.
“அவ வயசு தானே திவ்யாவுக்கும்? அவளுக்கே கல்யாணம் முடிஞ்சிருச்சு. அப்ப இவளுக்கும் பண்ணி வச்சா என்ன?”, என்று கேட்டாள் நித்யா;
“அக்கா, நம்ம வீட்டு பொண்ணை யார் கூடவும் கம்பர் பண்ணாதே”, என்று மனோஜ் சொன்னதும் “திவ்யாவும் இந்த வீட்டு பொண்ணு தான்”, என்றான் திலீபன்.
“நான் உன் கிட்ட பேசலை. நான் என்னோட தங்கச்சி விஷயமா தான் பேச வந்தேன். நீ கொஞ்சம் வாயை மூடிட்டு இரு திலீபா”, என்று நேரடியாக தன்னுடைய தம்பியிடமே மோதினான்.
“ஏன்? ஏன்? எதுக்கு என் புருஷன் வாயை மூடனும்? அவரும் சிவானிக்கு அண்ணன் தான்”, என்று சண்டைக்கு வந்தாள் திவ்யா.
அவளுடன் பேசப் பிடிக்காமல் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு நின்றான் மனோஜ். “ஏமா, திவ்யா கொஞ்சம் அமைதியா இரு. என் ரெண்டு பையனுங்க குள்ள சண்டை மூட்டி விடாதே”, என்றார் துரைபாண்டி.
“ஏங்க, மாமா சொல்றதை பாத்தீங்களா? நீங்களும் சிவானிக்கு அண்ணன் தானே? அதை சொன்னா நான் சண்டை மூட்டி விடுறேனா?”, என்று கணவனிடம் கோள் மூட்டினாள் திவ்யா.
“அப்பா திவ்யா சொல்றதுல என்ன தப்பு இருக்கு? நானும் அவளுக்கு அண்ணன் தானே? நித்யாக்கா அவளோட கொழுந்தனுக்கு கட்டி வைக்கணும்னு சொல்றா. அந்த சிவா காலேஜ் தான் படிச்சிருக்கான். அதே நம்ம திவ்யாவோட அண்ணன் நம்ம சிவானி மாதிரி இன்ஜினியரிங் படிச்சிருக்கான். அவனுக்கு கட்டி வச்சா என்ன? என் தங்கச்சிக்கு நான் செய்ய கூடாதா?”, என்று சண்டைக்கு வந்தான் திலீபன்.
“ஆஹா உன் தங்கச்சியா? இது எப்ப இருந்து?”, என்று திலீபனிடமே கேட்டான் மனோஜ்.
“எப்பவுமே அவ எனக்கு தங்கச்சி தான். அவ தான் என்னை அண்ணனா நினைக்கலை. நான் அவளுக்கு அண்ணானா தான் இருக்கேன்”
“அப்படியா? திருட்டு தனமா கல்யாணம் பண்ணின உனக்கு நாளைக்கு தங்கச்சி வீட்ல இருக்காளே. அவளுக்கு வரன் பேசும் போது நம்ம கல்யாணம் அவளோட கல்யாணத்துக்கு ஏதாவது கஷ்டத்தைக் கொடுக்கும்னு நீ நினைச்சு பாத்தியா? அப்ப நான் உனக்கு தங்கச்சியா தெரியலையா?”, என்று கேட்டது வேறு யாரும் இல்லை சிவானியே தான்.
திலீபன் கப்பென்று வாயை மூடிக் கொண்டான். அனைவரும் அடுத்து என்ன பேச என்று அமைதியாக இருக்க “அம்மா அப்பா, அவளுக்கு இன்னும் ஒரு வருஷ படிப்பு இருக்கு. அதை முடிச்சு அவ ஒரு நல்ல வேலைக்கு போகட்டும். அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணி வைப்போம்”, என்றான் மனோஜ்.
“எதுக்கு? எதுக்குன்னு கேக்குறேன்? அவ படிச்சு வேலைக்கு போகணும்னு என்ன இருக்கு? நான் எல்லாம் படிக்கவா செஞ்சேன்? இப்ப சந்தோஷமா இருக்கலையா? அவளுக்கும் சேத்து எங்க சிவா சம்பாதிப்பான்”, என்றாள் நித்யா.
“அப்படி சொல்லு நித்து. நம்ம வீட்டுக்கே உன் தங்கச்சி வந்தா நம்ம குடும்பம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆகிரும்ல?”, என்றான் செந்தில்.
“ஏன், என்னோட மச்சானுக்கு என்ன குறைச்சல்? ரமேஷும் நல்ல வேலைல தான் இருக்கான்”, என்றான் திலீபன்.
“அப்படி சொல்லுங்க. எங்க அண்ணனுக்கு தான் இவளைக் கட்டிக்கிற எல்லாம் உரிமையும் இருக்கு”, என்றாள் திவ்யா.
“எல்லாரும் கொஞ்சம் வாயை மூடுங்க. இப்ப என்ன சிவானிக்கு உங்க விருப்ப பட்ட மாதிரி கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும். அப்படி தானே? சரி உங்க இஷ்டப் படி செய்ங்க. ஆனா ஒரு விஷயம். சிவானி காலேஜ் படிக்கிறதுக்கு ஏழு செமஸ்டர் பீஸ் நான் தான் கட்டிருக்கேன். அதை யாரு திருப்பி தரீங்களோ அவங்க விருப்ப படி மாப்பிள்ளை பாத்து கட்டி வைங்க. அப்புறம் அவளுக்கு நான் மாப்பிள்ளை பாத்தா எல்லா செலவையும் நானே பாத்துக்குவேன். உங்க இஷ்டத்துக்கு பண்ணி வைக்கணும்னு நினைச்சா ஒத்த பைசா தர மாட்டேன்”, என்று சொல்லி ஒரே போடாக போட்டான் மனோஜ்.
“என்ன நீ? தங்கச்சி தங்கச்சின்னு சொல்ற? எல்லாத்துக்கும் கணக்கு பாக்குற?”, என்று கேட்டான் திலீபன்.
“அவளுக்கு நான் மட்டுமா அண்ணன்? நானும் அண்ணன் தான்னு இப்ப தானே நீ சொன்ன? அப்ப நீயே அவ கல்யாணத்தை நடத்து. அவ படிப்புக்கு கட்டின பணத்தையும் திருப்பிக் கொடு. அப்படி இல்லைன்னா அக்கா கொடுக்கட்டும். என்ன அக்கா நீ கொடுக்குறியா? நீ கொடுத்தேன்னா உன்னோட கொழுந்தனுக்கே கட்டி வச்சிக்கோ? என்ன மாமா? நான் கேக்குறது புரியுது தானே? நீங்க நான் செலவு செலவு செஞ்ச பணத்தை திருப்பி தறீங்களா?”
திருப்பிக் கொடுக்க அது என்ன கொஞ்ச தொகையா? செந்தில் சாப்பாட்டுக்கே அடுத்தவர்களை எதிர் பார்க்கும் போது அவன் எப்படி கொடுப்பான்? சட்டையில் இருந்தால் தானே அகப்பையில் வரும். செந்திலுக்கு அடுத்த வார்த்தை பேச முடியவில்லை.
திலீபன் கையிலோ கோடிக் கணக்கில் பணம் இருந்தாலும் அவனுடைய தேவைக்கு பயன்படுத்துவானே தவிர வேறு யாருக்கும் தர மாட்டான். சரியான கஞ்சன். அவனே அப்படி என்றால் திவ்யா ஒத்த ரூபாய் செலவு செய்ய விட மாட்டாள்.