“சும்மா கத்தாத மா. எனக்கு உன் கூட சண்டை போட எல்லாம் தெம்பே இல்லை. நான் ஏதாவது வில்லங்கம் பண்ணினா ஒண்ணு என்னை காயப் படுத்துவ. இல்லைன்னா சம்பந்தமே இல்லாத ஆட்களை மிரட்டுவ. எனக்கு இது தேவையா? உன்னைப் பத்தி தெரிஞ்சும் நான் ஏன் உன்கிட்ட போராடப் போறேன்? என் பிரண்ட் இன்னைக்கு சென்னைக்கு வேலைல சேர போறா. அவளை போய் பாத்துட்டு வந்துறேன். நிச்சயதார்த்தம் முடிஞ்ச அப்புறம் கண்டிப்பா நீ என்னை வெளிய விட மாட்டா. என்ன நான் சொல்றது சரி தானே?”
“உனக்கு வர வர வாய் கூடிருச்சு. சரி சரி போயிட்டு சீக்கிரம் வந்துரு. கொஞ்ச நேரத்துல உன்னோட அத்தை மாமா எல்லாரும் வந்துருவாங்க டி”
“சரி”, என்று சொல்லி விட்டு தன்னுடைய வண்டியை எடுத்தவள் அவசரமாக வீட்டை விட்டு கிளம்பி விட்டாள்.
மனோஜ் கடை வழியாக தான் அவளுடைய வண்டி சென்றது. ஆனால் அந்த கடை பக்கம் அவள் பார்வை செல்லவே இல்லை.
அவளைப் பார்த்த ஜெகன் “அண்ணா அண்ணி, இந்த பக்கம் போறாங்க. நம்மளை பாக்காமலே போறாங்க. என்ன ஆச்சு?”, என்று கேட்டான்.
“டேய், சாயங்காலம் அவளுக்கு நிச்சயதார்த்தம் டா. இப்ப தான் நிர்மல் போன் பண்ணி சொன்னான். இனி அவளை அண்ணின்னு கூப்பிடுற வேலை எல்லாம் வச்சிக்காதீங்க. அவளுக்கே வாழ்க்கையோட நிதர்சனம் புரிஞ்சிருக்கும். அதான் நம்மளை பாக்காம போறா. உங்க வேலையை பாருங்க”, என்று சொல்லி விட்டு வேலையில் கவனம் செலுத்தினாலும் மனதில் குழப்பமும் சிறு வலியும் எழத் தான் செய்தது.
“எப்பவும் அவங்க எனக்கு அண்ணி தான். முறைக்காதண்ணா, அவங்களை கல்யாணம் பண்ணுறது யாரா இருந்தாலும் அவர் எங்களுக்கு அண்ணன் தானே? அப்ப அவங்களும் அண்ணி தானே?”, என்று சொல்லி மனோஜின் முறைப்பை பெற்றுக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் ஜெகன்.
மதிய உணவுக்கு அறையை விட்டு வெளியே வந்த நிர்மல் ஆஷாவைத் தேடினான். அவள் வீட்டில் இல்லாததால் “அம்மா ஆஷா எங்க?”, என்று கேட்டான்.
“பிரண்டை பாக்க போறேன்னு சொன்னா. சீக்கிரம் வந்துருன்னு சொல்லி தான் அனுப்புனேன். இன்னும் காணும். உங்க அத்தை வீட்ல இருந்து எல்லாரும் கிளம்பிட்டாங்க டா. உங்க அப்பாவும் வந்துட்டு இருக்கார். அவளை இன்னும் காணும். அவளுக்கு ஒரு போனைப் போட்டு வரச் சொல்லு. நான் பண்ணினா எடுக்க மாட்டிக்கா டா. இவளால எனக்கு எப்பவும் தலை வேதனை தான்”, என்றாள் புஷ்பா.
மனதில் எதுவோ தவறாகப் பட ஆஷா எண்ணுக்கு அழைத்தான் நிர்மல். அதுவோ ஸ்விட்ச் ஆப் என்று வந்தது.
“நிர்மல் என்ன டா சொல்ற? இவ்வளவு நேரம் ரிங் போச்சே டா”
“அம்மா பதறாதீங்க. சார்ஜ் இல்லையோ என்னவோ?”, என்று எண்ணினாலும் அவனுக்கும் திக்கென்று தான் இருந்தது.
“உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகுமோ? ஒரு வேளை அந்த பையனைப் பாக்க போயிருப்பாளோ?”
“அம்மா சும்மா சும்மா அவனையே இழுக்காதீங்க. அவன் தான் ஒதுங்கிட்டானே”
“ஆனாலும் உன் தங்கச்சி ஒதுங்கலையே டா. அவனுக்கு போன் பண்ணி அவ வந்தாளான்னு கேளு டா. எனக்கு பயமா இருக்கு”
“அது.. அது….நான் அவன் கிட்ட பேசுறதே இல்லையே. அவன் நம்பர் எல்லாம் என்கிட்ட இல்லை”
“சும்மா கதை விடாத நிர்மல். நீ அவன் கிட்ட பேசுறதும் தெரியும். அவனைப் பாக்க போறதும் தெரியும். அவன் கிட்ட கேளு”
“இந்த அம்மா உஷார் தான். இந்த அரை லூசு என்ன செஞ்சு வச்சான்னு தெரியலையே. ஒரு வேளை மனோஜைப் பாக்க தான் போயிருக்காளோ என்னவோ?”, என்று எண்ணியவன் மனோஜ் எண்ணுக்கு அழைத்தான்.
அவன் போனை எடுத்த மனோஜ் “சொல்லு நிர்மல்”, என்றான்.
“மனோஜ் ஆஷா அங்க வந்தாளா?”
“இங்க வரலை டா. ஆனா காலைல இந்த பக்கமா போனா”
“என்ன டா சொல்ற? அந்த பக்கமா போனா உன்னைப் பாக்காம போயிருக்க மாட்டாளே”, வாய் உளறி சொல்லி விட்டு புஷ்பாவின் கண்டன பார்வைக்கு ஆளானான் நிர்மல்.
“எங்க வீட்டுக்கு எல்லாம் அவ போக மாட்டாளே டா. சிவானியைத் தான் வெளியே கூப்பிடுவா. சிவானியும் என்கிட்ட சொல்லிட்டு தான் போய்வா. சரி இரு, நான் சிவானிக் கிட்ட கேக்குறேன்”, என்று சொல்லி சிவானிக்கு அழைத்தான். அவளோ போனை எடுக்கவே இல்லை. இரண்டு முறை அழைத்தும் அவள் எடுக்கவே இல்லை.
மீண்டும் நிர்மலுக்கு அழைத்த மனோஜ் “சிவானியை பாக்க ஆஷா போயிருக்க மாட்டான்னு தான் தோணுது. சிவானி வீட்ல எல்லாம் எடுத்து வச்சிட்டு இருப்பா போல. என்னோட போனை எடுக்கலை. எங்க வீட்டுக்கு ஆஷா போக மாட்டா டா. வேற யார் கிட்டயாவது கேப்போமா?”, என்று கேட்டான்.
“சரி டா நான் பாக்குறேன்”, என்று சொல்லி போனை வைத்த நிர்மல் புஷ்பாவிடம் நடந்ததைச் சொன்னான்.
“இவ கடைசி நேரத்துல இப்படி தான் பண்ணுவான்னு எனக்கு தோணுச்சு. அதான் அவசரமா கல்யாணம் பேசினேன். எனக்குன்னு வந்து பிறந்துருக்கா பாரு. சின்ன வயசுலே இவளைக் கொண்ணுருக்கணும்”, என்று கத்தினாள் புஷ்பா.
“வாயை மூடுங்கம்மா. எல்லாம் உங்களால தான். எப்படி இருந்தவளை இப்படி மாத்தினதே நீங்க தான். அவ தப்பே பண்ணிருந்தாலும் அதை பொறுமையா எடுத்து சொல்லாம அவளை இப்படி ஆக்கினது நீங்க தான். இப்ப அவ கிட்ட கூட ஒரு வார்த்தை கேக்காம நீங்களே கல்யாணம் பேசுறீங்க? பின்ன அவ இப்படி பண்ணாம எப்படி இருப்பா?”
“என்ன டா தங்கச்சிக்கு சப்போர்ட்டா”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நானே அவ ஏதாவது தப்பான முடிவு எடுத்துருப்பாளோன்னு கவலைல இருக்கேன்”
“என்ன டா இப்படி சொல்ற?”
“வேற என்ன சொல்ல சொல்றீங்க? இப்பவே அவளுக்கு கல்யாணம் செய்ய என்ன அவசரம்? நீங்க ஒரு பெரிய பொறுப்புல தானே இருக்கீங்க? இந்த அளவு கூட யோசிக்க மாட்டீங்களா? கொஞ்ச நாள் வேலைக்கு போக விட்டுருக்க வேண்டியது தானே?”
“சரி அதை விடு. இப்ப அவளை எங்கன்னு கண்டு பிடிப்போம்”
“உடனே என்னோட வாயை மூடுங்க. திடீர்னு அவளை எங்கன்னு போய் கண்டு பிடிக்க? நைட் வரைக்கும் வெயிட் பண்ணி தான் பாக்கணும்”
“அப்படிச் சொல்லாத டா. அவளை உடனே கண்டு பிடிக்கணும்”
“கண்டு பிடிச்சு என்ன செய்ய போறீங்க? அவ ஸ்கூல் படிக்கும் போதே உங்க கிட்ட சொல்லிருக்கேன். அவளை நான் பாத்துக்குவேன்னு. ஆனா என்னை நீங்க ஒரு பொருட்டா கூட மதிக்கலை. இது வரைக்கு எனக்கு எந்த இம்பார்டன்சும் கொடுக்கலை. அவளுக்கும் அதே நிலைமை தான். நீங்களும் அப்பாவும் பெரிய பொறுப்புல இருந்து எதுக்கு? எங்களுக்கு எங்க வாழ்க்கையை தேர்தேடுக்குற உரிமை கூட இல்லை. அவளை தேடி கண்டு பிடிச்சு மறுபடியும் மிரட்டி படிய வைக்க போறீங்களா? உங்களால அவ பட்டது எல்லாம் போதும்”
“நீங்க ரெண்டு பேரும் கூட்டு சதி பண்ணுறீங்களோன்னு எனக்கு தோணுது நிர்மல்”
“உங்க புத்தி இப்படி தான் யோசிக்கும். எனக்கு சத்தியமா அவ எங்க போனான்னு தெரியாது. நம்புனா நம்புங்க நம்பலைன்னா போங்க”, என்று நிர்மல் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனுடைய போன் தான் அடித்தது.
மனோஜ் தான் அவனை அழைத்திருந்தான். அதை எடுத்து காதில் வைத்த நிர்மல் “சொல்லு டா”, என்றான்.
“நீ கிளம்பி உடனே ஷெட்டுக்கு வரியா?”
“என்ன ஆச்சு டா?”
“இல்லை சிவானியும் என்னோட போனை எடுக்கலை. அப்பாக்கு போன் பண்ணுனேன். அவரும் எடுக்கலை. எனக்கு என்னமோ ஆஷா எங்க வீட்டுக்கு தான் போயிருப்பான்னு தோணுது. தனியா அவளை என்னால சமாளிக்க முடியாது டா. வீட்ல என்ன பேசி வச்சிருக்கான்னு கூட தெரியலை. நீயும் கொஞ்சம் வரியா? வீட்ல இல்லைன்னா கூட சிவானி கிட்ட கேட்டு அவ பிரண்ட்ஸ் வீட்ல கேப்போம்”
“சரி இதோ வரேன்”, என்று சொல்லி போனை வைத்த நிர்மல் “ஆஷாவோட வரேன்”, என்றான்.
“டேய், நில்லுடா. எங்க டா அவ? அவ இருக்குற இடம் உனக்கு தெரியும் தானே? அவனைப் பாக்க தானே போயிருக்கா? அவன் தானே இப்ப உன்னைக் கூப்பிட்டான். எல்லாரும் பிளான் பண்ணி என்னை ஏமாத்துறீங்களா?”
“அம்மா நிஜமாவே எனக்கு அவ எங்க இருக்கான்னு தெரியலை. நான் இப்ப அவளை கண்டு பிடிக்க போகட்டுமா? இல்லைன்னா எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும்னு என்னோட வேலையை நான் பாக்கவா?”
“என்ன டா இப்படி சொல்ற? அவ உன் தங்கச்சி. அவளை நீ தான் தேடனும். உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகுறது? நம்ம குடும்ப மானமே போகுமே”
“இப்ப கூட பொண்ணு முக்கியம் இல்லை. குடும்ப மானம் தானே முக்கியம் உங்களுக்கு? நான் ஆஷாவை தேடி கண்டு பிடிப்பேன். ஆனா அவ வாழ்க்கையை நான் தான் முடிவு பண்ணுவேன். இனி உங்க கைல அவளை விட்டு மொத்தமா என்னால அவளை இழக்க முடியாது. நீங்க அவ விசயத்துல இனி தலையிடக் கூடாது. அப்படி ஏதாவது செஞ்சா உங்க பொண்ணோட சேத்து பையனையும் நீங்க மறந்துருங்க”, என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டான்.
அப்படியே திகைத்து போய் அமர்ந்திருந்தாள் புஷ்பா. அடுத்த நொடி முத்துவேலை அழைத்து நடந்த அனைத்தையும் ஒப்பித்தாள்.
அவரும் ஒரு நொடி குழம்பி “பொறுமையா இரு புஷ்பா. வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன். பாப்பா எங்கயும் போயிருக்க மாட்டா. வந்துருவா. அவன் தேட போயிருக்கான்ல? பாப்போம். நான் பத்து நிமிசத்துல வந்துருவேன்”, என்று சொல்லி விட்டு வைத்தார்.
நிர்மல் ஷெட்டுக்கு வந்ததும் இருவரும் அவசரமாக மனோஜ் வீட்டை நோக்கி வண்டியை விட்டனர்.