அத்தியாயம் 10 
காதலை அளக்க அளவு
கோல் உண்டா என்று ஆராய
நினைப்பவர்கள் முதலில்
காதல் செய்ய வேண்டும்!!!
“நித்யா, உன்னைத் தான் கேக்குறேன். நீ என்ன ஏதோ கனவு கண்டுட்டு இருக்க? ஏதாவது சதி பண்ணி உன்னோட அம்மா அப்பாவை இங்கயே இருக்க வை டி”, என்றான் செந்தில்.  அவன் அப்படிச் சொன்னதும் அவனை முறைத்தாள் நித்யா. 
இது வரை தான் என்ன சொன்னாலும் உடனே சரிங்க என்று சொல்லி அதை அப்படியே செய்து முடிக்கும் மனைவி இன்று முதல் முறையாக முறைக்கவும் திகைத்து போனான் செந்தில். 
“இவ என்ன திடீர்னு முறைக்கிறா. இது சரி கிடையாதே”, என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கும் போதே “இப்ப நீங்க வாயை மூடிட்டு இருக்கலை, நான் இப்பவே மனோஜ் காலுல விழுந்துருவேன்”, என்றாள் நித்யா. 
“உன் தம்பி காலுலையா? எதுக்கு டி?”
“வேற எதுக்கு? எனக்கு இந்த வீட்டுக்காரர் வேண்டாம். இவர் கூட வாழ எனக்கு பிடிக்கலை. எனக்கும் என் பிள்ளைக்கும் ஏதாவது வழி
பண்ணுடா தம்பின்னு அவன் கிட்ட கெஞ்ச ஆரம்பிச்சிருவேன். கண்டிப்பா என் தம்பி எனக்காக செய்வான். அதுக்கு அப்புறம் எங்களை இங்க விட்டுட்டு நீங்க மட்டும் தான் உங்க அம்மா வீட்டுக்கு போக வேண்டியது இருக்கும். எப்படி வசதி?”, என்று முறைப்புடன் கேட்டதும் தனக்கு எதற்கு வம்பு என்று எண்ணி கப்பென்று வாயை மூடிக் கொண்டான் செந்தில். 
மனைவியை பகைத்துக் கொண்டால் அவன் பிழைப்பு எப்படி ஓடும்? 
“சிவானி உன்னோட பொருள் எல்லாம் எடுத்து வச்சிட்டேன்னா அம்மா அப்பாவோடதை எடுத்து வை. டிரஸ் மட்டும் கொஞ்சம் எடுத்து வைங்க. மற்ற தேவையான பொருள் எல்லாம் அங்க வாங்கிக்கலாம்”, என்றான் மனோஜ். 
“சரிண்ணா, நாம டிரைன்லயா போக போறோம்?”, என்று கேட்டாள் சிவானி. 
“இல்லை டா அம்மு. உங்க மூணு பேரோட டிரெஸ்ஸ் எல்லாம் கொண்டு போகனுமே? அதனால கார் ஏற்பாடு பண்ணிட்டேன்”
“காரா? யார் காருப்பா? ரொம்ப செலவாகுமே?”, என்று கேட்டார் துரைப்பாண்டி. 
“நம்ம கடைக்கு ஒரு கார் வந்துச்சுப்பா. காரோட ஓனர் பழைய கார்னு சொல்லி என்கிட்ட விக்க கொடுத்துட்டு போய்ட்டார். நானும் நம்ம பசங்களும் பழைய பொருளை எல்லாம் மாத்தி புதுசா ரெடி பண்ணி வச்சிருக்கோம். இனிமே அது நம்ம தேவைக்கு தான்”, என்று சிரித்த மனோஜ் “அம்மா அப்பா, நாளைக்கு சாயங்கலாம் வரேன். 
நீங்க மூணு பேரும் கிளம்பி இருங்க”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
“இவனை சாதாரணமா நினைச்சோம். ஆனா அதுக்குள்ள ஒரு காருக்கு சொந்தகாரனா ஆகிட்டான். இவன் பெரிய ஆள் தானோ?”, என்று எண்ணினாள் திவ்யா. அவள் எண்ணத்தை திலீபன் அறிந்திருந்தால் அவளை உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பான். அவள் மனதில் எண்ணியது அவனுக்கு தெரியாததால் தப்பித்தாள். 
தன்னுடைய அறைக்கு சென்ற சிவானி உடனே ஆஷாவை அழைத்து நடந்த விஷயத்தைச் சொன்னாள். 
“இந்த பாஸ்க்கு எல்லா விசயத்துலயும் நல்லாவே மூளை வேலை செய்யும். அதுவும் தங்கச்சி, குடும்பம்னா எக்ஸ்ட்ரா வேலையும் செய்யும். என்னோட விசயத்துல தான் பாஸோட மூளை அசமந்தம்”, என்று எண்ணிக் கொண்டு அவளிடம் சாதாரணமாக பேச ஆரம்பித்து விட்டாள் ஆஷா. 
அன்றைய நாள் அப்படியே கடக்க அடுத்த நாள் காலையில் நிர்மல் எழுந்து வரும் போதே அவனுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தியைச் சொன்னாள் புஷ்பா. 
“நிர்மல் இன்னைக்கு சாயங்கலாம் அஞ்சு மணிக்கு மேல ஜெயாவுக்கும் ஆஷாவுக்கும் நிச்சயம் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கோம். நீ வெளிய எங்கயும் போயிறாத”, என்றாள் புஷ்பா. 
அதைக் கேட்டு திகைத்த நிர்மல் “இந்த பிரச்சனை வரும்னு தெரியும். ஆனா இப்பவே வரும்னு தெரியாதே”, என்று எண்ணிக் கொண்டு அமைதியாக நின்றான். 
“என்ன டா அமைதியா இருக்குற? உன்கிட்ட தான் சொல்லிட்டு இருக்கேன்?”
“உங்க பொண்ணுக்கு நீங்க செய்றீங்க. இதுக்கு நான் எதுக்கு?”
“என்ன டா இப்படி சொல்ற? நீ தானே அவளோட அண்ணன். உன்கிட்ட சொல்லாம? இப்படி பொறுப்பில்லாம இருந்தா எப்படி நிர்மல்”
“அம்மா, சும்மா சீன் போடாதீங்க. பொறுப்பை பத்தி நீங்க பேசக் கூடாது. அந்த பொறுப்பு உங்களுக்கு இருந்திருந்தா நீங்க இந்த முடிவை எடுக்கும் போதே என்னையும் பேச கூப்பிட்டுருப்பீங்க. யாரோ போல எனக்கு இன்பர்மேசன் சொன்னா நானும் எப்படி இருக்கணுமோ அப்படி தான் இருப்பேன்”, என்று சொல்லி விட்டு ஆஷா அறைக்குள் சென்றான். 
“என்ன இவன் இப்படி பேசிட்டு போறான்”, என்று புஷ்பா எண்ணினாலும் ஆஷாவிடம் அவனே விஷயத்தை சொல்ல போவதை நினைத்து நிம்மதியாகவும் இருந்தது. 
ஒரு தலையணையை இறுக்கி பிடித்து சிறு குழந்தை போல தூங்கிக் கொண்டிருந்தாள் ஆஷா. தன்னுடைய செல்ல தங்கையை ரசிக்க தோன்றினாலும் அதற்கான நேரம் இது அல்ல என்று புரிந்ததால் அவள் கட்டிப் பிடித்திருந்த தலையணையைப் பிடுங்கினான் நிர்மல். அதில் தூக்கம் கலைந்தவள் “தடி மாடு இப்படியா டா இழுப்ப. நான் பயந்துட்டேன் தெரியுமா?”, என்று கேட்ட படி எழுந்து அமர்ந்தாள். 
“உன் வாழ்க்கைக்கே அங்க ஒரு ஆப்பு ரெடி பண்ணிட்டு இருக்காங்க. நீ நிம்மதியா தூங்கிட்டு இருக்க?”, என்று கேட்டான் நிர்மல். 
“என்ன டா சொல்ற?”
“இன்னைக்கு சாயங்காலம் உனக்கும் ஜெயச்சந்திரனுக்கும் நிச்சயம்னு அம்மா இப்ப தான் சொன்னாங்க டி”
“என்ன? என்ன சொல்ற? நிர்மல் நீ என்ன சொல்ற? இன்னைக்கேவா?”
“ஆமா ஆஷா, அம்மா இப்ப தான் கூப்பிட்டு என்கிட்ட சொன்னாங்க. நான் ஊருக்கு போறதுக்குள்ள கல்யாணத்தையும் முடிக்க முடிவு பண்ணிட்டாங்க போல. அதை சொல்ல தான் வந்தேன்”
“அவங்க சொன்னதுக்கு நீ என்ன சொன்ன?”, என்று எரிச்சலாக கேட்டாள் ஆஷா. 
“என்னை என்ன சொல்ற? என்கிட்ட விஷயத்தை சொன்னாங்க. அவ்வளவு தான். என்கிட்ட அவங்க ஒண்ணும் ஒப்பினியன் கேக்கலை. உன்கிட்ட சொல்லிருக்க மாட்டாங்கன்னு தெரியும். அதான் நான் வந்து சொல்றேன்”
“ஒரு அண்ணன் மாதிரியா டா பேசுற? எவ்வளவு பெரிய விஷயத்தை சாதாரணமா சொல்ற? நான் அத்தானை எல்லாம் கட்டிக்க மாட்டேன்”
“ஆஷா, ஒரு அண்ணனா இருக்க போய் தான் உன்கிட்ட வந்து சொல்லிக்கிட்டு இருக்கேன். இல்லைன்னா, உனக்கு நடக்க போறது நல்ல விசயம்னு ஒதுங்கிருப்பேன். அம்மா கிட்டயும் சந்தோஷமா சரின்னு சொல்லிட்டு வந்துருப்பேன். எனக்கு உன் மனசு தெரியும். அதனால தான் உன்கிட்ட பேச வந்தேன். அதே நேரம் மனோஜ் மனசும் தெரியும். இப்ப நீ தான் முடிவு எடுக்கணும்”
“எனக்கு தெரியலைண்ணா. உன் பிரண்டு கிட்ட நான் வெக்கத்தை விட்டு கேட்டுப் பாத்துட்டேன். இதுக்கு மேல என்ன செய்யன்னு தெரியலை. ஒரு வேளை நானா போய் அவன் பின்னாடி அலையுறதுனால தான் அவனுக்கு நான் பெருசா தெரியலையானு தெரியலை. ஆனா எனக்கு என்ன செய்யன்னு சத்தியமா தெரியலை”
“இன்னைக்கு மனோஜ் ஊருக்கு போறான் ஆஷா உனக்கு தெரியும் தானே? அவன் போயிட்டு அவங்க அம்மா அப்பாவுக்கு வீடு எல்லாம் செட் பண்ணிக் கொடுத்துட்டு தான் வருவான். அதுக்குள்ள நம்மளால நிச்சயத்தை நிறுத்த முடியுமான்னு தெரியலை. நீ வேணும்னா அப்பா கிட்ட பேசி பாக்குறியா?”
“கேக்க மாட்டாங்க அண்ணா. என்ன கேட்டாலும் அப்பா வாங்கித் தருவாங்க. ஆனா மனோஜ் விசயத்துல எதுவுமே செய்ய மாட்டாங்க. அம்மா செய்யவும் விட மாட்டாங்க. நிலைமை பெருசா தான் போகும். மறுபடியும் மிரட்டுவாங்க”
“அப்ப இதுக்கு என்ன தான் முடிவு? பேசாம நிச்சயம் நடந்தா நடக்கட்டும். கல்யாணத்தை நிறுத்த பாக்கலாமா?”
“எனக்கு மனோஜை தவிர வேற யார் கூடவும் நிச்சயம் நடக்க கூடாது. யார் முன்னாடியும் போய் என்னால ஜோடியா நிக்க முடியாது”
“பேசாம ஜெயா கிட்ட பேசலாமா?”
“அண்ணா நம்ம வீட்ல யார் கிட்ட பேசினாலும் யாரும் கேக்க மாட்டாங்க. ஒரு வேளை மனோஜ் பெரிய ஆளா இருந்தா உன்னை மாதிரி நல்ல வேலைல இருந்தா கூட யோசிக்கலாம். ஆனா இப்ப எப்படி சம்மதிப்பாங்க?”
“நான் அம்மா அப்பா கிட்ட சண்டை போடவா?”
“வேண்டாம் அண்ணா, இன்னைக்கு சண்டை போட்டு இந்த நிச்சயத்தை நிறுத்தினாலும் திருப்பியும் ஏதாவது ஆரம்பிப்பாங்க. இனிமே இந்த பேச்சே இருக்க கூடாது. அப்படி ஒரு முடிவு எடுக்கணும். நான் இந்த விஷயத்தை பாத்துக்குறேன். என்னை மீறி எனக்கு எப்படி நிச்சயதார்த்தம் பண்ணுறாங்கன்னு பாக்குறேன்”
“என்ன டி வில்லி மாதிரி பேசுற? அவன் கூட ஓடிப் போகப் போறியா?”
“ஆமா ஆமா, உன் பிரண்டை இழுத்து ஓடிட்டாலும்? நான் அவன் கையைப் பிடிச்சு இழுத்தாலும் அவன் என் கூட வருவான்னு நினைக்கிற? வேற ஏதாவது தான் பண்ணனும் டா”
“ஆனா ஆஷா, வேற ஏதாவது செஞ்சு அம்மா அப்பா மனோஜை ஏதாவது செஞ்சிட்டா என்ன செய்ய? அவன் பாவம்”
“அப்படி எல்லாம் நடக்காதுன்னு நம்புவோம்”
“சரி, என்ன வேணும்னாலும் முடிவு எடு. தயவு செஞ்சு தற்கொலை மாதிரி ஏதாவது செஞ்சு தொலைக்காத. என்ன ஹெல்ப்னாலும் என்கிட்ட கேளு. உன்னால முடியலைன்னா கூட நான் சாயங்காலம் நிச்சயத்தை எப்படியாவது நிறுத்துறேன்”, என்று பொறுப்பான அண்ணனாக சொல்லி விட்டு அங்கிருந்து சென்றான்.
ஆனால் தன்னுடைய அண்ணனுக்கு எந்த வேலையையும் வைக்காமல் தன்னுடைய வாழ்க்கைக்கான முடிவை ஆஷாவே எடுத்தாள். 
அடுத்த நொடி குளிக்க சென்றவள் பர்ஸ் மற்றும் போனை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.
அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் புஷ்பா வீட்டில் இருந்தாள். 
இவளைக் கண்டதும் புஷ்பா எதையோ கேட்க வர அவள் கேட்க வருவதை புரிந்த ஆஷா “அம்மா பிளீஸ், போகும் போதே எங்க போறன்னு கேட்டுராத. போற வேலை உருப்படியா நடக்காது”, என்று அவசரமாக சொன்னாள் ஆஷா. 
அவளை முறைத்த புஷ்பா “நான் நீ எங்க போறன்னு எல்லாம் கேக்கவே வரலை. எங்கயும் போக கூடாதுன்னு சொல்ல தான் வந்தேன்”, என்றாள். 
“ஏன் ஏன் ஏனாம்? எதுக்கு நான் போக கூடாது”
“சாயங்கலாம் உனக்கு நிச்சயதார்த்தம் வச்சிருக்கேன். அதனால நீ வீட்டை விட்டு வெளியே போக கூடாது”
“அப்படியா?”
“என்ன டி நக்கலா? உனக்கு நிச்சயதார்த்தம்னு சொல்லிட்டு இருக்கேன். நீ சாதாரணமா அப்படியான்னு கேக்குற? உன் அண்ணன் உன்கிட்ட சொல்லலையா?”
“நிர்மல் என்கிட்ட சொல்லலையே. அப்புறம் என்னை என்ன பண்ண சொல்ற? ஐ எனக்கு கல்யாணம் கல்யாணம்னு குதிக்க சொல்றியா? இல்லைன்னா ஐயோ எனக்கு கல்யாணம்னு அழ சொல்றியா? இல்லை யாரைக் கேட்டு எனக்கு கல்யாணம் பண்ண நினைக்கிறேன்னு உன் கூட என்னை சண்டை போட சொல்றியா?”
“ஆஷா….”