அந்த வீட்டில் மனோஜ் மீது அக்கறையும், பாசமும், தீராத அன்பும், கொண்டது திலீபனுக்கு அடுத்து பிறந்த சிவானி தான். பொறியியல் நான்காம் ஆண்டு படிக்கிறாள்.
பெற்றவர்களால் திலீபனை மன்னிக்க முடிந்தது. நித்யாவால் மன்னிக்க முடிந்தது. ஆனால் சிவானி “என் அண்ணனை கஷ்ட படுத்திட்டல்ல நீ? இனி நீ எனக்கு அண்ணன் கிடையாது. அவ எனக்கு அண்ணியும் கிடையாது”, என்று சொல்லி திலீபன் மற்றும் திவ்யாவை மதிக்கவும் மாட்டாள். அவர்களிடம் பேசவும் மாட்டாள்.
அன்றில் இருந்து மனோஜ் வீட்டுக்கு சிவானி அழைக்காமல் வரவே மாட்டான். தன்னுடைய அண்ணனின் மன நிலையை உணர்ந்தவள் அவனை இங்கே அழைக்க மாட்டாள். இவளாக தான் அவனைக் காண ஷெட்டுக்கு செல்வாள்.
திவ்யா ஒன்றும் லேசு பட்டவள் அல்ல. சுயநலத்தின் மொத்த உருவம் அவள். மனோஜ் பத்தாவது தான் படித்திருக்கிறான் என்பதால் தான் திலீபனை விரும்பினாள். இப்போது “நான் தான் இந்த வீட்டுக்கு மருமகள்”, என்று பீற்றிக் கொள்பவள்.
அவளை சிவானி மதிக்கவே மாட்டாள். இருவருக்கும் ஒரே வயது என்பதால் வா போ என்று தான் சொல்லிக் கொள்வார்கள்.
“என்னங்க, சிவானியை என்னை அண்ணின்னு சொல்ல சொல்லுங்க. பாக்குறவங்க என்ன நினைப்பாங்க? உங்களைத் தானே ஏதாவது சொல்லுவாங்க”, என்று திலீபனிடம் வைத்தி வைத்தாள் திவ்யா.
அதைக் கேட்ட திலீபனும் தங்கையைக் கண்டிக்க கிளம்பினான்.
“சிவானி, திவ்யாவுக்கு உன் வயசுன்னாலும் இப்ப அவ என்னோட மனைவி. அதனால அவளை ஒழுங்கா அண்ணின்னு சொல்லு”, என்று சிவானியிடம் சொன்னான் திலீபன்.
“பெரிய அண்ணனுக்கு பாத்த பொண்ணை நீ இழுத்துட்டு போனதுல இருந்து நான் உன்னை அண்ணனாவே நினைக்கலை. அதுக்கு காரணமா இருந்த அவளையா நான் அண்ணின்னு சொல்ல போறேன்? நிச்சயதார்த்தத்துக்கு சேலை எடுக்க போகும் போது பல்லை காட்டிட்டு வந்தவ தானே அவ? அப்பவே சொல்றதுக்கு என்ன? நீ மட்டும் என்னவாம்? ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லிருந்தா அண்ணனே உங்க கல்யாணத்தை நடத்தி வச்சிருக்குமே. எப்படியோ இந்த சுயநல பிசாசு கிட்ட இருந்து என் அண்ணன் தப்பிச்சிட்டான். என்ன பாக்குற? எனக்கு அண்ணன் அப்படின்னா மனோஜ் அண்ணா மட்டும் தான். மனோஜ் அண்ணனை கட்டிக்கிறவங்க தான் எனக்கு அண்ணி. வேற யாரும் கிடையாது”, என்று முகத்தில் அடித்தது போல பேசி விட்டாள் சிவானி.
துரைபாண்டி மற்றும் பார்வதிக்கு மனோஜ் வீட்டில் இல்லாததற்கு காரணம் திவ்யா தான் என்பதால் அவளை சிவானி திட்டினால் கண்டு கொள்ள மாட்டார்கள்.
அதில் இருந்து சிவானி மேல் ஒரு வன்மம் திவ்யாவுக்கு உண்டு. அது போக திவ்யாவுக்கு நித்யாவையும் பிடிக்காது. நித்யா குடும்பத்தோடு இங்கே வந்து டேரா போடுவது திவ்யாவுக்கு பிடிக்கவே செய்யாது.
மனோஜ் மெக்கானிக் ஷெட்டிலே தங்க ஆரம்பித்தது ராம், ஜெகன், மூர்த்திக்கு அவ்வளவு சந்தோஷம். அவர்களே சமைத்துக் கொள்வார்கள். அங்கே மனோஜ்க்கு ஒரு உயிர்ப்பு உண்டு.
ஒரு வண்டியை சர்வீஸ் செய்து கொண்டிருந்தான் மனோஜ். அப்போது “க்கும் க்கும்”, என்று யாரோ ஒரு பெண் தொண்டையை கணைப்பது கேட்டது.
“யாரது?”, என்று எண்ணி தலையை தூக்கிப் பார்த்தான். அங்கே அழகான ஒரு யுவதி நின்றிருந்தாள். அவளைப் பார்த்ததும் மனோஜின் முகம் மலர்ந்தது.
மனோஜையும் அந்த பெண்ணையும் தான் ராம், ஜெகன், மூர்த்தி மூவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“ஆஷா”, என்று சந்தோஸமாக அழைத்தான் மனோஜ். “என்னை நினைவு இருக்கா பாஸ்? நான் கூட நீங்க எங்க என்னை நினைவுல வச்சிருப்பீங்கன்னு நினைச்சேன்?”, என்றாள் ஆஷா பிரியதர்ஷினி.
“ஏய் உன்னை எப்படி மறப்பேன்? எங்க இந்த பக்கம்? எப்படி இருக்க? என்ன படிக்கிற?”, என்று சந்தோஷமாக கேட்டான் மனோஜ்.
“ஆமா ஆமா நினைவு வச்சிட்டாலும். சரி சரி எனக்கு காலேஜ்க்கு நேரம் ஆகுது. நான் என்ன படிக்கிறேன்னு தெரிஞ்சு என்ன செய்ய போறீங்கலாம்? வண்டி பஞ்சர் ஆகிட்டு. சரி பண்ணிக் கொடுங்க”, என்று சொன்னவள் “டேய் பொடியா எந்திரி டா”,என்று சொல்லி மூர்த்தியை அங்கிருந்து எழுப்பி விட்டு மூர்த்தி அமர்ந்திருந்த ஸ்டூலில் அமர்ந்து விட்டாள் ஆஷா.
தங்களின் அண்ணனுடன் இவ்வளவு சாதாரணமாக பேசும் அவளை மூவரும் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். மனோஜோ அவர்கள் மூவரையும் கவனிக்காமல் ஆஷாவிடமே தான் பேசிக் கொண்டிருந்தான்.
அவள் வண்டி அருகில் அமர்ந்த மனோஜ் “ஏய் என்ன இது? தானா பஞ்சர் ஆச்சா? இல்லை நீ பஞ்சர் பண்ணுனியா?”, என்று கேட்டான்.
“பரவால்ல, இன்னும் அதே அறிவாளியா தான் இருக்கீங்க பாஸ். இந்த ரோட்ல எங்க பஞ்சர் ஆகுறது? நானே தான் செஞ்சேன்”
“ஹா ஹா அதானே பாத்தேன்? நீயாவது திருந்துறதாவது? எதுக்கு இந்த வெட்டி வேலை?”
“வேற எப்படி பாஸ் உங்க கிட்ட அப்பாயின்ட்மெண்ட் வாங்குறது? உங்களுக்கே நிறைய வண்டி கியூ கட்டி நிக்கும். என்னை எல்லாம் கண்டுக்குவீங்களோ என்னவோ? அதான் உங்க கிட்ட பேச இந்த ஐடியா?”
“நீ மாறவே இல்லை. அப்படியே தான் இருக்குற. சரி என்ன படிக்கிற?”
அவள் காலேஜ் பெயர் மற்றும் படிப்பை பற்றி சொன்னதும் “சிவானி காலேஜ் தான் இவளுமா?”, என்று எண்ணிக் கொண்டான்.
“ஆமா இப்ப உனக்கு கடைசி வருஷம் தானே? இவ்வளவு நாள் இந்த பக்கம் நீ வரவே இல்லையே?”, என்றான் மனோஜ்.
“ஆமா ஆமா வந்துட்டாலும்… சரி சரி முறைக்காதீங்க. மூணு வருஷம் ஹாஸ்டல்ல இருந்தேன். இப்ப கடைசி வருஷம் அதனால வீட்ல இருந்து தான் போறேன்”
“ஓ, படிப்பு நல்லா போகுதா?”
“அதெல்லாம் நல்லா தான் போகுது. சரி என்னை எப்பவாது நினைச்சு பாப்பீங்களா?”, என்று கேட்டவள் அவன் பதில் சொல்வதற்கு முன்பே “ஆமா நீங்க எங்க என்னை நினைக்க போறீங்க?”, என்று கேட்டாள்.
“ஏய், உன்னை எப்படி மறக்க முடியும்? சரி சரி வண்டி ரெடியாகிருச்சு. காலேஜ்க்கு நேரம் ஆச்சுள்ள? கிளம்பு கிளம்பு”, என்றான்.
“அதானே எப்பவும் என்னை துரத்தி விடுறதுலே குறியா இருப்பீங்களே?”, என்று ஒரு மார்கமாக அவள் சொன்னதும் அவளை முறைத்துப் பார்த்தான் மனோஜ்.
“சரி சரி, முறைக்காதீங்க. நான் கிளம்புறேன்”, என்று சொல்லி வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள். அவள் கண்ணில் இருந்து மறைவது வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் மனோஜ்.
“யார் இந்த பொண்ணு? இந்த பொண்ணைப் பாத்து அண்ணனுக்கு எதுக்கு இவ்வளவு சந்தோஷம்?“, என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள் ராமும் ஜெகனும்.
ஆஷா கண்ணில் இருந்து மறைந்ததும் தலையை திருப்பிய மனோஜ் கண்ணில் தன்னையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்த இருவரும் பட்டார்கள்.
அவர்களின் சந்தேகமான பார்வையை பார்த்தவன் “ஐயையோ, இவனுங்க என்ன இப்படி பாக்குறாங்க?”, என்று எண்ணிக் கொண்டு “தப்பு தப்பா எல்லாம் நினைச்சிராதீங்க டா. சும்மா தெரிஞ்ச பொண்ணு”, என்று அவசரமாக சொன்னான் மனோஜ்.
அவனை பார்த்து சிரித்தவர்கள் “நாங்க தப்பு தப்பா என்ன நினைக்க போறோமாம்? நீயா நினைக்காதீங்கன்னு சொல்றதைப் பாத்தா அப்படி நினைக்கலாமோன்னு தோணுதுண்ணா”, என்று சொல்லி அவனைக் கிண்டல் செய்தார்கள்.
அவர்களை சமாளிக்க அவன் திணறிக் கொண்டிருக்கும் போது “நான் கிளம்பிட்டேன் அண்ணா. போகலாம்”, என்று சொல்லிக் கொண்டே மூர்த்தி பையைத் தூக்கிக் கொண்டு வந்ததும் நிம்மதியாக மூச்சு விட்டான் மனோஜ்.
“வா டா போகலாம்”, என்று சொல்லி மூர்த்தியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான் மனோஜ்.
மூர்த்தியை அவனுடைய பள்ளியின் முன்பு விட்டு விட்டு “ஒழுங்கா படி டா. மதியத்துக்கு ஒழுங்கா சாப்பிட்டுரு. ஸ்கூல்ல எதுவும் வாங்கி சாப்பிடாத. என்ன வேணுமோ சாயங்காலம் என்கிட்ட கேளு. நான் வாங்கித் தரேன்”, என்று சொல்லி விட்டு ஷெட்டுக்கு கிளம்பினான்.
அப்போது அவனுடைய போன் இசைக்க அதை எடுத்து பார்த்தான்.
தெரியாத நம்பரில் இருந்து போன் வரவும் “ஏதாவது கஷ்டமரா இருக்கும்”, என்று எண்ணிக் கொண்டு அதை எடுத்தான்.
“ஹலோ யாருங்க?”, என்று கேட்டான் மனோஜ்.
“ஹலோ பாஸ், நான் ஆஷா பேசுறேன்”
“ஆஷா, என்ன ஆச்சு சொல்லு. இப்ப தானே கிளம்பின? வண்டி ஏதாவது பிராப்ளம் பண்ணுச்சா? அது கொஞ்சம் பழசா இருக்கு. வேற வண்டியை வாங்கிக்கோயேன். எங்க இருக்கன்னு சொல்லு. நான் வந்து சரி பண்ணித் தரேன்”, என்று மூச்சு விடாமல் பேசினான்.
“கொஞ்சம் பொறுமையா பேசுங்க பாஸ். அப்புறம் இது என்னோட செல்ல வண்டி. பழசை மறந்து அதை தூக்கி போட்டுட்டு புதுசா மாத்துற ஆள் நான் கிடையாது. பழசா இருந்தாலும் அது என்னோடது. அதை சரி பண்ண தான் பாப்பேன். அடுத்தவங்களை மாதிரி தூக்கி போட மாட்டேன். அப்புறம் நான் காலேஜ் வந்துட்டேன். இது தான் என்னோட நம்பர், அதை சொல்ல தான் கால் பண்ணுனேன்”, என்று சொல்லி போனை அனைத்து விட்டாள்.
அவள் பேசியதில் சிரித்துக் கொண்டவன் எதை எதையோ எண்ணிக் கொண்டே ஷெட்டுக்கு கிளம்பினான்.
செட்டில் வண்டியை நிறுத்தி விட்டு பழைய உடைய அணியும் போது அவனுடைய போன் அடித்தது.
ஆஷாவா இருக்குமோ என்ற ஆர்வத்தோடு போனை எடுத்து பார்த்தான்.
சிவானி தான் அவனை அழைத்தாள். அழைத்தது தங்கை என்றதும் பரபரப்பு தொற்றியது அவனுக்கு. அதை அவசரமாக எடுத்தவன் “அம்மு, காலேஜ் போகலையா? இந்நேரம் என்ன போன் பண்ணிருக்க? என்ன ஆச்சு டா?”, என்று கேட்டான்.
“அண்ணா….”, என்று அழைத்த சிவானியின் குரல் கரகரத்தது.
“அம்மு, அழுறியா? என்ன ஆச்சு டா?”, என்று பதட்டமாக கேட்டான் மனோஜ். தங்கையின் அழுகுரல் அவனுக்குள் பதட்டத்தை உருவாக்கியிருந்தது.
அவன் பதட்டமாக இருப்பதில் தங்கள் கை வேலையை விட்டுவிட்டு ராமும் ஜெகனும் கூட அவனைப் பார்த்தார்கள்.