“வேண்டாம்னா வேண்டாம் சிவானி. தப்பா எடுத்துக்காத. நாம இன்னும் நேர்ல பாத்துக்கலை. இப்ப கிளம்பி போய்ட்டேன்னா திருப்பி எப்ப வருவேன்னு தெரியலை. உன் கூட உக்காந்து ஒரு டீ குடிக்கலாம்னு தோணுச்சு. உனக்கு பிடிக்கலைன்னா வேண்டாம்”, என்று வாட்டமாக சொன்னதும் அந்த வாட்டத்தை உடனே போக்க வேண்டும் என்று எண்ணியவள் “எங்க மீட் பண்ணலாம்?”, என்று கேட்டாள்.
அதில் முகம் மலர இடத்தைச் சொன்னவன் எத்தனை மணிக்கு வரணும் என்றும் சொல்லி வைத்தான்.
அவர்கள் முடிவெடுத்திருந்த இடம் பீச் தான். தன்னுடைய ஆபீஸ் முடியும் நேரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே வந்து விடுவேன் என்று சொன்ன சிவானி அடுத்த நாள் ஆபீஸ் முடியும் நேரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னே பெர்மிசன் வாங்கிக் கொண்டு அவன் சொன்ன நேரத்துக்கு அங்கே சென்றாள்.
அவள் வருவதற்கு முன்பே அங்கே அவளுக்காக காத்திருந்தான் நிர்மல். அந்த கூட்டத்தில் அவன் எங்கே இருக்கிறான் என்று தெரியாததால் போனில் அழைத்து அவன் எங்கே இருக்கிறான் என்று கேட்டாள். அவன் இடம் சொல்லி அவளை நோக்கி கை அசைத்தான்.
அவன் அருகே செல்ல செல்ல அவள் இதயம் எம்பி குதித்தது. வீட்டுக்கு தெரியாமல் அவள் முதன்முதலாக செய்யும் திருட்டு வேலை, அவனுடனான முதல் சந்திப்பு என்று அனைத்தும் அவளை தடுமாற வைத்தது.
அவனுக்குள்ளும் ஒரு பதட்டம் வந்தது தான். இப்படி பெண்களுடன் அவன் எங்கும் சென்றது இல்லை. எந்த பெண்ணிடம் இந்த அளவுக்கு நெருங்கியதும் இல்லை. அவள் அருகில் வர வர தடுமாற்றம் தாங்க முடியாமல் எழுந்து நின்று கொண்டான்.
போனில் இருவரும் நன்கு பேசி இருந்தாலும் அவள் அருகில் வந்ததும் இருவருக்கும் ஒரு மாதிரியான அவஸ்தை உணர்வு தான் வந்தது.
சம்பர்தாயமாக இருவரும் புன்னகைத்தாலும் அவர்கள் சிரிப்பை எண்ணி “இதுக்கு சிரிக்காமலே இருந்துருக்கலாம்?”, என்று மனதுக்குள் தங்களையே குறை சொல்லிக் கொண்டார்கள்.
“இப்படி உக்காருவோமா சிவானி?”, என்று பேச்சை ஆரம்பித்தான் நிர்மல்.
“சரி, நீங்க அப்பவே வந்துட்டீங்களா? ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டேனா?”, என்று அவளும் சகஜமாக பேச முயன்றாள்.
அதன் பின்னர் சிறிது நேரத்தில் இருவருக்கும் இருந்த தயக்கம் விடை பெற்றுச் சென்றது. ஆனால் இருவருமே மூன்று பேர் இடையில் அமரலாம். அந்த அளவுக்கு இடைவெளியில் அமர்ந்து தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவனுடைய வேலையை பற்றி, எப்படி பாரின் செல்லப் போகிறான் என்பது பற்றி சிறிது நேரம் பேசியவர்கள் ஒரு மணி நேரம் நிமிடத்தில் சென்றதை உணர்ந்தார்கள்.
“நேரம் ஆச்சு, நான் கிளம்பட்டுமா?”, என்று கேட்டாள் சிவானி.
“பேசிட்டே இருந்ததுல உனக்கு ஒண்ணுமே வாங்கித் தரலை சிவானி. ஏதாவது சாப்பிடலாமா?”, என்று அவளிடம் கேட்டவன் “ப்ளீஸ் டி, சரின்னு சொல்லு சரின்னு சொல்லு“, என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டான்.
அவளுக்கும் அவனுடன் சிறிது நேரம் இருக்க வேண்டும் என்று ஆசை தான். அதனால் சரி என்று சம்மதித்தாள். ஒரு பேக்கரிக்கு அழைத்து சென்றவன் அவளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்தான். அவனுடைய அக்கறை அவளுக்குள்ளும் சில பல ரசாயன மாற்றங்களை உண்டாக்கியிருந்தது.
இருவரும் விடை பெற்றுச் செல்லும் போது இருவருக்குமே கண்ணின் மணியை பிரிவது போல வலி தான் வந்தது. அதை இருவருமே மற்றவர் கண்களில் உணர்ந்தார்கள். சிறிது தூரம் சென்ற சிவானி அவனை திரும்பி பார்க்க அவள் பின்னே தான் அவனும் நடந்து வந்து கொண்டிருந்தான்.
அவனைக் கண்டு அவள் அப்படியே நிற்க அவளை நெருங்கியவன் “உங்க வீடு வரைக்கும் வந்து உன்னை விட்டுட்டு போறேன் சிவானி. தனியே விட மனசில்லை”, என்று சொல்லி அவளுடன் சென்றான்.
அந்த அக்கறை அவள் மனதில் காதல் புயலை மையம் கொள்ள வைத்தது.
அவளை வீட்டில் விட்டுவிட்டு கண்களால் அவளிடம் விடை பெற்றுச் சென்றான். அவள் நினைவிலே அவன் வீட்டுக்கு சென்ற போது அங்கே புஷ்பா, முத்துவேல் வீட்டுக்கு வந்திருந்தார்கள்.
அவர்களைக் கண்டு திகைத்தவன் பொதுவாக சிரிக்க “எங்க டா போன? வீட்ல தானே உன்னை இருக்கச் சொன்னேன்”, என்றாள் புஷ்பா.
“ப்ச் அம்மா வீட்லே அடைஞ்சு கிடக்க ஒரு மாதிரி இருந்துச்சு. அதான் போனேன் போதுமா?”
“பாப்பா எப்ப வருவாப்பா?”, என்று கேட்டார் முத்துவேல்.
“அவ வர அரை மணி நேரம் ஆகும்பா. சரி நான் கிளம்பின உடனே ஆஷாவுக்கு துணைக்கு இங்க யாரு இருப்பா? அம்மா, நீங்க ஸ்கூலை அத்தை பொறுப்புல விட்டுட்டு இங்க வந்து இருங்க”, என்றான் நிர்மல்.
“அதெப்படி என் வேலையை விட்டுட்டு வர முடியும்? ஆஷாவுக்கு செக்யூரிட்டி ஏற்பாடு பண்ணிட்டோம். நாளைக்கு வந்துருவான்”, என்றாள் புஷ்பா.
“அதானே நீங்களாவது, பிள்ளைகளுக்காக பாக்குறதாவது?”, என்று வெறுமையாக மனதில் எண்ணிக் கொண்டான் நிர்மல்.
அடுத்த நாள் முழுவதும் லீவ் போட்டு விட்டு தன்னுடைய அண்ணனுக்கு எல்லாம் எடுத்து வைக்க உதவி செய்த ஆஷா அவன் கிளம்பிய போது கண்ணீர் விட்டு அழுதாள்.
அவன் முதல் முறை பாரின் சென்ற போதும் இது நடந்தது தான். அதே தங்கையாக தான் ஆஷா இருந்தாள். ஆனால் நிர்மல் தான் போன முறை நிர்மலமான மனதுடன் கிளம்பினான்.
இந்த முறையோ சிவானி அவன் மனம் முழுவதும் நிறைந்திருந்தாள். அனைவரிடமும் சொல்லி விட்டு அவன் விமானம் ஏற கிடைத்த கேப்பில் சிவானிக்கும் அழைத்து சொல்லி விட்டான்.
அவனுடைய மெஸ்ஸேஜ்க்காக காத்திருந்த அவளும் “பத்திரமா போயிட்டு வாங்க. அங்க போயிட்டு கூப்பிடுங்க”, என்று மெஸ்ஸேஜ் அனுப்பி வைத்தாள்.
அப்படியே நாட்கள் நகர்ந்தது. அங்கே சென்று சிவானிக்கு நிர்மல் பணம் அனுப்பி வைக்க அதை அப்படியே தன்னுடைய அண்ணனுக்கு அனுப்பி வைத்தாள் சிவானி.
அந்த பணத்தை வைத்து அவன் கடையை விரிவு படுத்த ஆரம்பித்தான். இன்னும் கொஞ்சம் பணம் தேவைப்பட்டது தான். அதை துரைப்பாண்டி அவனுக்கு கொடுத்தார்.
அதன் பின் வேலைகள் துரிதமாக நடக்க முன் பக்கம் ஷோ ரூம் போலவும் பின் பக்கம் மெக்கானிக் ஷெட் போலவும் கடையை விரிவு படுத்தினான். அனைவருக்கும் வாழ்க்கை அதன் போக்கில் நகர்ந்தது.
சிவானியும் ஆஷாவும் வேலைக்கு சேர்ந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆனது. அதன் பின்னர் தான் நிர்மல் சென்னைக்கு வந்தான்.
அவன் வந்ததும் சிவானியே அவனை பார்க்க விரும்ப உடனே அவள் கண் முன் காட்சி தந்தான். அவனைக் கண்டதும் அவன் தலை முதல் கால் வரை அவள் பார்வை அவனை வருடிச் சென்றது.
முதல் முறை பார்த்தது போல இல்லாமல் மிகுந்த ஆவலோடு அவனை எதிர்க் கொண்ட சிவானி “எப்படி இருக்கீங்க?”, என்று ஆசையாக கேட்டாள்.
இருவரும் தினமும் சேட்டில் பேசிக் கொண்டிருந்தாலும் வெகு நாட்கள் கழித்துப் பார்ப்பது ஒரு பூரிப்பை ஏற்படுத்தியது. அவனும் அவளைத் தான் பருகுவது போல பார்த்துக் கொண்டிருந்தான்.
இருவரும் தங்களின் காதலை பரிமாறிக் கொள்ள வில்லை என்றாலும் இருவருமே மற்றவர் மேல் கொண்ட காதலை உணர்ந்தார்கள். அதன் பின்னர் சென்னையில் அவன் வேலை தொடர்ந்தது. சிவானி நிர்மல் காதலும் தான்.
இதற்கிடையில் அதிகம் மனதளவில் துடித்தது ஆஷா தான். அவளால் அவளுடைய சுயமரியாதையை விட்டு விட்டு மனோஜிடம் பேசவும் முடியவில்லை. அதே நேரம் அவனிடம் பேசாமல் அவனைப் பார்க்காமல் மாதக் கணக்கில் இருப்பது எல்லாம் அவளுக்கு வலி மிகுந்ததாகவும் இருந்தது.
தங்கையின் உணர்வுகளை நிர்மலும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். இப்போதெல்லாம் ஆஷா ஏதோ யோசனையிலே இருப்பது படவும் ஒரு நாள் அவளை அழைத்து கேட்டே விட்டான்.
“எனக்கு மனோஜ் நினைவாவே இருக்குண்ணா. அவன் என்னை திட்டினதுக்கு கோபம் வந்தாலும் அவன் கிட்ட பேசணும் போல இருக்கு. அவன் கிட்ட நான் பேசட்டுமா?”, என்று வெட்கத்தை விட்டு கேட்டாள்.
அவளுடைய மனது புரிந்த அவளுடைய அண்ணனோ “எனக்காக கொஞ்ச நாள் அவன் கூட பேசாம இருக்கியா பிளீஸ்?”, என்று கேட்டான்.
“அவன் மனசு மாறுவான்னு நினைக்கிறியா அண்ணா? அவன் மாற மாட்டான். அவன் எப்படியும் இருந்துட்டு போகட்டும். ஆனா நான் நானா இருக்கணும் அண்ணா. அவன் கிட்ட பேசினா தான் நான் நானா இருப்பேன். எனக்கு இந்த கோபம் ரோஷம் எல்லாம் மனோஜ் முன்னால வராதுண்ணா”
“இல்லை நான் இதுக்கு நிரந்தரமா முடிவு கட்டுறேன். என் மேல நம்பிக்கை இருந்தா கொஞ்ச நாள் அவன் கிட்ட பேச வேண்டாம். அவனே உன்னைத் தேடி வருவான்டா”
“நடக்குமாண்ணா?”
“கண்டிப்பா மா”
“சரி”, என்று நம்பாத குரலில் சொல்லி விட்டு செல்லும் தங்கையை பார்த்த படியே அமர்ந்தவன் உடனே சிவானிக்கு தான் மெஸ்ஸேஜ்