“ஆஷா பத்தி தான் உனக்கு தெரியுமே? அவளை கண்ட்ரோல் பண்ண முடியாம தான் என்கிட்ட வந்து பேசுவாங்க. நான் சரின்னு கேட்டுக்குவேன். ஆனா என்னால ஆஷாவை அவாய்ட் பண்ண முடியலை. கடைசியா என்ன சொன்னாங்க தெரியுமா டா? முன்னாடியாது உன் தங்கச்சி சின்ன பொண்ணு. அவளை கொல்ல மட்டும் தான் செய்வேன்னு சொன்னேன். ஆனா இப்ப அவ பாக்க நல்ல வாட்ட சாட்டமா இருக்கா. என்னோட ஆட்களை ஏவி விட்டேன்னு வைன்னு தப்பா பேசினாங்க டா. நல்லா யோசிச்சு பாரு. நம்ம நிலைமை என்ன, அவங்க நிலைமை என்ன? ஆஷா அப்பா அரசியல்ல பெரிய இடத்துல இருக்கார். அவங்க நிமிசத்துல நம்மளை ஒண்ணும் இல்லாம பண்ணிறலாம். உயிர் போய்ட்டுன்னா கூட பரவால்ல டா. ஆனா சிவானியை ஏதாவது செஞ்சா, எப்படி டா என்னால தாங்கிக்க முடியும். அவ ஒரு குழந்தை டா. அவளை பாதுகாத்து ஒருத்தன் கைல ஒப்படைக்கணும். ஆனா அதே நேரம் என்னையே சுத்தி வர ஆஷாவை விட முடியலை. அவளைப் பாக்க கூடாது பேசக் கூடாதுன்னு அவங்க அம்மா மிரட்டினாலும் அவ என்னைப் பாக்க வரும் போது அவ்வளவு சந்தோஷமா இருக்கும்”
…..
“என்னை அறியாமலே அவ மேல உரிமை உணர்வு வந்து நிக்கும். அதை அவ புரிஞ்சிக்கிட்டு தான் என்னையே சுத்தி வாராளோன்னு கூட தோணும். என்னால அவளை மறக்க முடியாம தான் திவ்யாவை கட்டிக்கவே சம்மதிச்சேன். திவ்யாவை கல்யாணம் பண்ணினா தான் சிவானி பத்திரமா இருப்பா. ஆஷாவும் என் பின்னாடி வரமாட்டானு தான் அவளை கட்டிக்க சம்மதிச்சேன். ஆனா திலீபனும் அவளும் விரும்பினது தெரியாது. அவங்க கல்யாணம் நடந்தது எனக்கு சந்தோஷம் தான். அவங்க இருக்குற வீட்ல நானும் இருந்தா தேவையில்லாம மனசங்கடம் அவங்களுக்கு வரும்னு தான் நான் வீட்டை விட்டு வந்தேன்”
…..
“அப்புறமும் அம்மா அப்பா நிறைய பொண்ணுங்க பாத்தாங்க தான். ஆனா எனக்கு அப்ப வேற பொண்ணை ஏத்துக்க தோணலை. நான் சிவானிக்காகவும் ஆஷாக்காகவும் நினைச்சு வேற பொண்ணை கட்டிக்கிட்டா அந்த பொண்ணு கூட சந்தோஷமா வாழுவேனான்னு குழப்பம் வந்துச்சு. இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க கூடாதுன்னு கல்யாணமே வேண்டாம்னு முடிவு எடுத்து அமைதியா இருக்கேன். சிவானிக்கு மட்டும் ஒரு நல்ல மாப்பிள்ளையா பாத்து கட்டி வச்சிட்டா நான் நிம்மதியா என் காலத்தை ஓட்டிருவேன் டா”
“அப்ப ஆஷா அண்ணி நிலைமை என்ன ஆகும்ண்ணா?”
“அவங்க வீட்ல அவளை போர்ஸ்‌ பண்ணியாவது மிரட்டியாவது வேற யாருக்காவது கட்டி வச்சிருவாங்க டா. இந்த நிர்மல் ஆஷாவுக்கு சப்போர்ட் பண்ணுறது தான் இடிக்குது. அவனோட பிரண்ட்ஷிப்பை கட் பண்ண தான் அன்னைக்கு அவன் முன்னாடியே ஆஷாவை திட்டிட்டேன். எந்த அண்ணனுக்கும் கோபம் வரத் தானே செய்யும்?”
“பேசாம எல்லாத்தையும் அண்ணி கிட்ட சொன்னா என்னண்ணா? அவங்க அவங்களோட அம்மாவை பாத்துக்க மாட்டாங்களா?”
“பாத்துப்பா தான். ஆனா எனக்கு அவங்க அம்மா மேல இருக்குற பயம் இருந்துட்டே இருக்கு. எந்நேரமும் என்னால சிவானிக்கு காவல் இருக்க முடியுமா? இந்த ஆஷா என்னைத் தேடி வரதால அவங்க அம்மா சிவானியை எதுவும் செஞ்சிருவாங்களோன்னு பயமா இருக்கும். அதுக்கு தான் சிவானியை ஹாஸ்டல்ல விடாம வீடு எடுத்து அம்மா அப்பாவையும இங்க வர வச்சேன். ஆஷாவுக்கும் என்னை விட நல்ல வாழ்க்கை அமையும் டா. அவங்க வீட்ல அமைச்சு கொடுப்பாங்க”
“எல்லாருக்காவும் யோசிச்சு உன்னோட வாழ்க்கை…”
“என்னோட வாழ்க்கைக்கு என்ன? என் தங்கச்சிக்கு சீர் செய்ய வேலை செய்வேன். மாப்பிள்ளை பாத்து ஜாம் ஜாம்னு அவளுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன். அப்புறம் என் மருமகன் பிறப்பான். என் மடில உக்கார வச்சு காது குத்துவாங்க. ஆனா அப்பவும் இந்த திலீபன் நான் தான் மாமான்னு சண்டை போடுவான்னு நினைக்கிறேன். அப்படியே காலம் ஓடிரும் டா, சரி மூர்த்தி தூங்கிட்டானா? அவனை கொஞ்சம் ஹோம் வொர்க் செய்ய வச்சிருங்க டா. பட்னியா கிடக்காம நல்லா சாப்பிடுங்க. கப்போர்ட்ல பணம் இருக்கு. செலவுக்கு எடுத்துக்கோங்க. ஆனா எல்லாத்துக்கும் கணக்கு வேணும் டா. மவனே கவலையா இருக்குனு வேற ஏதாச்சும் செஞ்ச கொன்னுறுவேன் பாத்துக்கோ. ரெண்டு பக்கமும் பூட்டு போட்டுட்டு தூங்குங்க”, என்று சொல்லி போனை வைத்தான். 
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சிவானி வந்த சுவடு தெரியாமல் கீழே தன்னுடைய அறைக்குள் வந்தாள். 
“எல்லாமே என்னால தானா? எனக்காக தான் அண்ணன் கல்யாணமே வேண்டாம் என்கிறானா? என்னோட அண்ணனை அந்த பொம்பளை மிரட்டுவாளா? அவ கண்ணுல விரலை விட்டு ஆட்டலை, நான் சிவானி இல்லை. இதை எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவு பண்ணக் கூடாது. அப்படி நேராப் போய் அந்த பொம்பளையை மிரட்டினா அண்ணன் பயந்ததை எல்லாம் அந்த ராட்சசி பண்ணுவா. அவளே எதிர் பார்க்காத அளவுக்கு அவளை அடிக்கணும். அந்த அடில அந்த பொம்பளை எந்திரிக்கவே  கூடாது. அவளே முன்ன நின்னு எங்க அண்ணன் கல்யாணத்தை நடத்தணும். என் அண்ணனுக்கு அவளே ஆரத்தி எடுத்து வரவேற்கனும். ஆஷா கண்டிப்பா அண்ணனை மறக்க மாட்டா. அவ கூட பிளான் போடலாம்னு பாத்தா போனை எடுக்க மாட்டிக்காளே?”, என்று எண்ணிக் கொண்டு தன்னுடைய அப்பா நம்பரில் இருந்து மீண்டும் அவளை அழைத்தாள். 
இப்போதும் ஆஷா போனை அணைத்து தான் வைத்திருந்தான் நிர்மல். ஆஷா அவளுடைய போனைக் கேட்டதற்கும் அவன் தரவில்லை. 
ஆஷா போன் அணைத்து வைத்திருந்ததால் “என்ன செய்யலாம்?”, என்று யோசித்துக் கொண்டே படுத்த சிவானி அப்படியே தூங்கி விட்டாள்.
மனோஜும் சிறிது நேரம் நடந்து விட்டு கீழே வர நினைக்கும் போது சிவானி போன் அங்கிருப்பதைப் பார்த்து “இந்த அம்மு போனை வச்சிட்டு போய்ட்டா போலயே?”, என்று நினைத்துக் கொண்டே அதை எடுத்துப் பார்த்தான். 
அதில் இருந்த ஆஷா போட்டோக்களை நைசாக தன்னுடைய மொபைலுக்கு மாற்றிக் கொண்டவன் கீழே வந்து ஹாலிலே படுத்து தூங்கி விட்டான். 
அடுத்த நாள் சிவானியை வேலைக்கு விட்டு விட்டு வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவுக்கு வீட்டை ஒதுங்க வைக்க உதவி செய்தவன் அன்று மாலை சிவானியை அழைத்து வந்து வீட்டில் விட்டு விட்டு ஊருக்கு கிளம்பினான். 
அதன் பின் நாட்கள் சாதாரணமாக நகர ஒரு வாரம் கழித்து ஆஷாவும் அவள் செலக்ட் ஆகியிருந்த கம்பெனியில் வேலையில் சேர்ந்து விட்டாள். 
அவளுக்காக சென்னையில் ஒரு வீட்டையே வாங்கி விட்டார் முத்துவேல். அவளுக்கு துணைக்கு நான் இருக்கேன் என்று சொன்ன நிர்மல் அவளுடனே தங்கிக் கொண்டான்.  
அது மட்டுமில்லாமல் மீண்டும் சென்னை பிராஞ்ச்சில் வேலைக்கு  சேருவதற்கு கம்பெனிக்கு மெயில் அனுப்பி இருந்தான். 
அதை அறிந்து  ஆஷாவுக்கு தான் வருத்தமாக இருந்தது. “உனக்கு ஆஸ்ட்ரேலியால செட்டில் ஆக தானே பிடிக்கும்? எனக்காக அங்க உள்ள வேலையை விட்டுட்டு வரணுமா அண்ணா?”, என்று கேட்டாள் ஆஷா. 
“முதல்ல உன்னோட வாழ்க்கையை சரி பண்ணிட்டு தான் நான் அதை யோசிக்கணும் ஆஷா. ஆனா என்னால உடனே பாரீன்ல இருந்து வர முடியாது. லீவ் முடிஞ்சு நான் கண்டிப்பா பாரின் போய் தான் ஆகணும். ஆனா சீக்கிரம் வரப் பாக்குறேன்”, என்றான். 
ஆஷா வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள். அவளுக்கென்று புது போன் வாங்கிக் கொடுத்தான் நிர்மல். 
அவளுடைய மனநிலையை அறிய “இதுல இருந்து மனோஜ்க்கு பேசப் போறியா?”, என்று கேட்டான் நிர்மல். 
“இல்லைண்ணா, இனி அவனே தேடி வராம நான் அவன் கிட்ட பேசவும் மாட்டேன். அவனைப் பாக்கவும் போக மாட்டேன்”, என்று உறுதியாக சொன்னாள் ஆஷா. 
“அப்படின்னா சிவானி கூட…”
“அவ கூடவும் நான் பேச மாட்டேண்ணா. அவ கிட்ட பேசினா அவளோட அண்ணன் நினைவு தான் வரும். அவன் எப்படி என்னை அப்படி பேசலாம்? தப்பு முழுக்க அம்மா மேல தான் இருக்குன்னு தோணுது. ஆனா என்ன பிரச்சனையா இருந்தாலும் என்கிட்ட இவன் சொல்லலாம்ல? அவன் இஷ்டத்துக்கு என்னை லூசுன்னு சொல்வானா? அப்புறம் ஒரு ஹெல்ப் பண்ணுண்ணா.  என்னோட வண்டியை உன் ஃபிரண்ட் என்ன செஞ்சான்னு மட்டும் ஜெகன் கிட்ட கேட்டு சொல்லு”, என்று சொல்லி விட்டு வேலைக்கு சென்றாள். 
ஆஷா இந்த அளவுக்கு யோசிச்சதே போதும் என்று எண்ணிய நிர்மல் ஜெகனை அழைத்தான். 
முதலில் அதை எடுக்காமல் இருந்த ஜெகன் அதன் பின் சிறிது நேரம் கழித்து அழைத்தான். 
“சாரி சார், அண்ணன் பக்கத்துல இருந்துச்சு, அதான் உங்க போனை எடுக்கலை. அண்ணி எப்படி இருக்காங்க சார்?”, என்று கேட்டான் ஜெகன். 
“நல்லா இருக்கா ஜெகன். சரி உங்க அண்ணன் எப்படி இருக்கான்?”
“முன்னாடி மாதிரி இல்லை சார். எப்பவும் ஏதோ யோசனையாவே இருக்காங்க. கடையை கொஞ்சம் பெரிய அளவுல மாத்த லோனுக்கு கேட்டுட்டு இருக்காங்க போல?”
“பெரிய அளவுன்னா?”
“இப்ப சும்மா கேரேஜ் மாதிரி தானே இருக்கு? கொஞ்சம் ஷோ ரூம் மாதிரி வைக்க தான். பழைய காரை வாங்கி சரி பண்ணி சேல்ஸ் பண்ண நிறைய ஆபர் வருது. ஆனா வசதி பத்தலை, அதான் யோசிக்கிறாங்க”
“சரி, நான் அதை அப்புறம் யோசிக்கிறேன். ஆஷா வண்டியை என்ன செஞ்சான்? யாராவது வாங்க வந்தாங்களா?”
“அட நீங்க வேற சார், வண்டி ஓட்டப் பழகுற பொண்ணுங்க வண்டியை கேட்டுட்டு தான் இருக்காங்க. ஆனா அண்ணன் சென்னைல இருந்து வந்த அன்னைக்கே இது விக்குறதுக்கு இல்லைன்னு சொல்லி பூஜை போடாத குறையா தினமும் துடைச்சு வைக்குது. சிவானி அக்கா கிட்ட எல்லாம் பேசுறதுக்கு அந்த வண்டி கிட்ட போயிரும். வண்டில உக்காந்து தான் எல்லார் கிட்டயும் போனே பேசும்”
“ஹா ஹா இருந்தாலும் உங்க அண்ணன் புரியாத புதிர் தான். சரி நான் அப்புறம் கூப்பிடுறேன்”, என்று சொல்லி போனை வைத்த நிர்மல் ஒரு நொடி யோசித்து விட்டு ஆஷாவை அழைத்தான். 
அவள் எடுத்ததும் “அவன் அதை குறைஞ்ச ரேட்டுக்கு வித்துட்டானாம் ஆஷா”, என்று அவள் கோபத்தை ஏற்றி விட்டான். . 
“அப்படியா? உன் பிரண்டைப் பத்தி உனக்கு தெரியாதுண்ணா. என்னோட கெஸ் உண்மைன்னா கண்டிப்பா அதை வித்துருக்க மாட்டான்”, என்று சாதாரணமாக சொல்லி விட்டு போனை வைத்தாள். 
“இந்த காதல் மேல் தான் இவளுக்கு எவ்வளவு நம்பிக்கை?”, என்று வியப்பாக இருந்தது நிர்மலுக்கு. 
வேலைக்காரி செய்து வைத்து விட்டு சென்ற உணவை எடுத்து டி‌வி பார்த்துக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தான். 
அதே நேரம் ஏதோ யோசனையிலே இருந்தாள் சிவானி. “என்ன ஆச்சு சிவானி? எதையோ யோசிச்சிட்டு இருக்குற?“, என்று கேட்டாள் அவளுக்கு புதிதாக கிடைத்த தோழி எஞ்சல். 
யாரிடமாவது சொன்னால் குழப்பம் குறையும் என்று எண்ணிய சிவானி தன்னுடைய அண்ணனின் கதையை அனைத்தையும் சொன்னாள். 
“அப்படியா? இதை நினைச்சு தான் அப்ப அப்ப யோசனைக்கு போயிறியா?”
“ஆமா ஏஞ்சல். என்னால தான் எல்லாமே. ஏதாவது செய்யணும்னு தோணுது. ஆனா என்ன செய்யன்னு தெரியலை. இந்த ஆஷா போன் வேற போக மாட்டிக்கு”
“வேற எப்படியாவது காண்டேக்ட் பண்ணு டி”
“அட நீ வேற? பேஸ்புக்ல கூட மெஸ்ஸேஜ் பண்ணிட்டேன். பாத்துட்டு ரிப்ளை பண்ண மாட்டிக்கா”
“ஒரு ஐடியா, பேசாம ஆஷாவோட அண்ணன் கிட்ட பேசேன் டி. அவர் தான் தங்கச்சிக்கு சப்போர்ட்னு சொன்னீயே? பேசாம அவர் கிட்டயே என்ன செய்யலாம்னு கேளேன்”
“சூப்பர் ஐடியா? ஆனா அவர் நம்பர் தெரியாது. இரு அவர் பேஸ்புக்ல இருக்குறார்னு பாக்குறேன்”, என்று சொல்லி ஆஷாவின் பிரண்ட் பேஜில் நிர்மல் பெயரை தேடினாள். 
நிர்மல் என்ற பெயர் கண்ணில் படவும் அவனுடைய பக்கத்தை திறந்ததும் அவனுடைய புகைப்படம் பெரியதாக விரிந்தது., 
“வாவ் சூப்பரா இருக்காங்க டி. இவங்க தான் ஆஷாவோட அண்ணனா?”, என்று கேட்டாள் ஏஞ்சல்.
“ஆமா”, என்று சொன்ன சிவானிக்கே அப்போது தான் நிர்மலின் அழகு கண்ணில் பட்டது. 
“ஆமா, அழகா தான் இருக்கான்”, என்று எண்ணிக் கொண்டாள். 
“பேசாம நீ இவங்களையே கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் அண்ணனோட வாழ்க்கையை சரி பண்ணலாம் டி. ஆஷாவோட அம்மா உனக்கு மாமியாராவும் ஆகிருவாங்க. நீ அந்த வீட்டுக்கு மருமகளா ஆகிட்டா உன் மாமியார் கொட்டத்தை ஈஸியா அடக்கி ஒடுக்கிறலாம்”, என்று ஒரு தீப்பொறியை கொழுத்தி போட்டு விட்டு சென்றாள். 
பூக்கள் மலரும்……