“உன்னைத் தான் கேக்குறேன். எங்க போயிட்டு வர? கேக்குறது காதுல விழலையா ஆஷா?”
“அது வந்து மா…. அது….கடைக்கு…. பென் வாங்க…. இல்லை சாக்லேட் வாங்க”, என்று தடுமாறிய படியே சொன்னாள்.
“இப்பவே ரோட்டுக் கடைல பொறக்கி திங்க ஆரம்பிச்சிட்டியா?”, என்று கேட்டு அங்கிருந்த கம்பை எடுத்து அவளுடைய தொடைக்கு கீழே அடி பின்னினாள் புஷ்பா.
“அம்மா வேண்டாம் மா, வலிக்குது மா. அம்மா வேண்டாம் மா”, என்று கதறியவளைக் காப்பாற்ற தான் யாரும் வரவில்லை.
“பொய்யா டி சொல்ற? நீ எங்க போனன்னு எனக்கு நல்லா தெரியும். எவ்வளவு தைரியம் இருந்தா அவனைப் பாக்க போயிருப்ப? இந்த வயசுலே ஒரு பையனைத் தேடி போறியே? உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கும்? இப்பவே இப்படின்னா கொஞ்சம் பெரியவளா ஆனா நீ என்ன எல்லாம் பண்ணுவ? உன்னால நானும் உங்க அப்பாவும் அவமானப் படணுமா? நானும் உங்க அப்பவும் உன்னை நினைச்சு கனவு கண்டா நீ சாக்கடைய தேடி போவியா?”, என்று கேட்டவள் ஆஷாவை அடி பின்னி எடுத்து விட்டாள்.
“நானும் சின்ன பிள்ளை பாவம் பாவம்னு பாத்தா நீ அடங்க மாட்ட. இரு டி வரேன்”, என்று சொல்லி அடுப்படிக்கு சென்றவள் ஒரு இரும்புக் கம்பியை ஆவி பறக்க சூடு செய்து எடுத்து வந்தாள். அதைக் கண்ட ஆஷாவின் கண்கள் பயத்தில் விரிந்தது.
“அம்மா, இனி போக மாட்டேன் மா. வேண்டாம் மா”, என்று அவள் கதற கதற அவள் தொடையில் நீளமாக ஒரு சூட்டைப் போட்டாள் புஷ்பா.
“ஆ, அம்மா, எரியுதே, எரியுதே”, என்று வலியில் துடித்ததை கண்டு “இந்த வலி உனக்கு எப்பவும் நினைவுல இருக்கணும்”, என்று சொல்லி விட்டுச் சென்றாள் புஷ்பா.
தரையில் கிடந்து அழுது துடித்த ஆஷாவை தேற்ற அப்போது ஒருவரும் இல்லை. அழுது அழுது சோர்ந்து போய் கிடந்தவள் அப்படியே தூங்கி விட்டாள். ஸ்போர்ட்ஸ் பிராக்டிஸ் முடிந்து வீட்டுக்கு வந்த நிர்மல் கண்ணில் ஹாலில் தரையில் கிடந்த ஆஷா தான் பட்டாள்.
“இவ என்ன இங்க படுத்துருக்கா”, என்று எண்ணிக் கொண்டே அவளை நெருங்கியவன் “ஆஷா ஆஷா என்ன கீழ படுத்துருக்க?”, என்று கேட்டான்.
அவன் குரலில் கண் விழித்தவள் மீண்டும் அழ ஆரம்பிக்க
“ஆஷா என்ன ஆச்சு? எதுக்கு அழுற? என்ன ஆச்சு? அம்மா அடிச்சாங்களா?”, என்று பதறிக் கொண்டே அவள் அருகே கீழே அமர்ந்தான்.
எப்போதுமே ஏதாவது தவறு செய்தால் புஷ்பா அடிப்பாள் என்பதால் கொஞ்சம் நிதானமாகவே கேட்டான். அவள் எதுவும் சொல்லாமல் அழுது கொண்டே இருக்கவும் “என்ன ஆச்சு ஆஷா? அண்ணன் கிட்ட சொல்லு மா”, என்று கேட்டு அவளை சமாதானப் படுத்த முயன்றான்.
அவள் மேலும் அழுகவும் “சரி எந்திரி, ரூமுக்கு வா”, என்று அவள் கையைப் பிடிக்க “அண்ணா வலிக்குது. எரியுது”, என்று கதறினாள் ஆஷா.
“என்ன? என்ன ஆச்சு? சொல்லப் போறியா? இல்லையா?”, என்று அவன் கேட்டதும் தன்னுடைய காலை அவனிடம் காட்டினாள். ஒரு இன்ச் அளவில் பொசுங்கிப் போயிருந்த இடத்தைக் கண்டதும் அதிர்ந்து போனான் நிர்மல்.
புஷ்பா போட்ட சூடு அவள் காலில் அழுத்தமாக பதிந்து தீக்காயத்தை உண்டாக்கியிருந்தது.
இதை அவன் எதிர் பார்க்கவே இல்லை. அடுத்த நொடி “அம்மா அம்மா”, என்று அந்த அறையே அதிரும் படி கத்தினான்.
நிதானமாக வெளிய வந்த புஷ்பா “நிர்மல் எதுக்கு இந்த கத்துற? அமைதியா பேசத் தெரியாதா உனக்கு?”, என்று கேட்டாள்.
“என்ன இது? எதுக்கு இவளை இப்படி பண்ணி வச்சிருக்கீங்க?”
“உன் தங்கச்சிக்கு வாக்காலத்தா? அவ என்ன செஞ்சான்னு கேளு. அந்த நாயைப் பாக்க போயிருக்கா”
“என்ன மனோஜையா?”
“ஆமா, எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி செஞ்சிருப்பா? இதுக்கெல்லாம் நீ தான் காரணம். நான் முன்னாடியே உன்கிட்ட சொன்னேன். தராதரம் பாத்து பழகுன்னு. நீ அவன் கூட பேசினதுனால தான் இவளும் இப்படி இருக்கா”, என்று புஷ்பா திட்டிக் கொண்டிருக்கும் போதே முத்துவேலும் வந்து விட்டார்.
“என்ன ஆச்சு? என்ன சத்தமா இருக்கு? என்ன புஷ்பா? பாப்பா ஏன் அழுதுட்டு இருக்கா?”, என்று கேட்டார் முத்துவேல்.
“நான் இவளை இன்னைக்கு வீட்ல விட்டுட்டு அண்ணி வீட்டுக்கு தான் போனேன். அதுக்குள்ள இவ அந்த பையனைத் தேடி அந்த கடைக்கே போயிருக்கா. எவ்வளவு நெஞ்சழுத்தம் பாருங்க இவளுக்கு. அதுக்கு நிர்மல் என்கிட்ட சண்டைக்கு வரான்”
“நிர்மல் என்ன இது? ஆஷா தப்பு பண்ணினா நாம தான சொல்லணும். இப்ப திருத்த முடியலைன்னா கஷ்டம்”
“சொல்றதை ஒழுங்கா சொன்னா அவ புரிஞ்சிப்பா. ஆனா அம்மா என்ன பண்ணிருக்காங்க பாருங்க”, என்று சொன்னவன் “காலைக் காட்டு ஆஷா”, என்று சொல்லி அவளுடைய தீக்காயத்தைக் காட்டினான்.
அதைக் கண்டு முத்துவேலே அதிர்ந்தார். “பாத்தீங்களாப்பா? அம்மா எப்படி அரக்கதனமா நடந்துருக்காங்கன்னு”, என்று கேட்டான் நிர்மல்.
“புஷ்பா, என்ன காரியம் செஞ்சி வச்சிருக்க?”, என்று அதட்டினார் முத்துவேல்.
“இப்படி செஞ்சா தான் இவ அமைதியா இருப்பா. வேற ஏதாவது ஆச்சுன்னா நம்ம மான மரியாதைக்கு என்ன ஆகுறது? முதல்ல அந்த பையனை ஏதாவது செய்யணும். அப்ப தான் இவளும் அடங்குவா”, என்று புஷ்பா சொன்னதும் “நிறுத்துங்க”, என்று கத்தினான் நிர்மல்.
“இன்னும் அமைதியா பேச என்ன இருக்குப்பா? அவ சின்ன பிள்ளை. அவளைப் போய் இப்படி பண்ணி வச்சிருக்காங்க. இப்ப என்னன்னா மனோஜையும் ஏதாவது செய்யணும்னு சொல்றாங்க. என்ன நினைச்சிட்டு இருக்காங்க இவங்க? இவங்க ஏற்கனவே மனோஜ் காலை உடைச்சது எனக்கு தெரியும்”, என்று சொன்னதும் முத்துவேலும் புஷ்பாவும் அதிர்ச்சியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“நிர்மல் நீ என்ன சொல்ற?”, என்று கேட்டார் முத்துவேல்.
“நீங்களும் அம்மாவும் பேசினதை நான் கேட்டேன் பா. ஆஷா அவளோட நோட் புக்ல மனோஜ் மனோஜ்னு எழுதி வச்சதுக்காக அவனை காரை வச்சு தூக்கிருக்கீங்க? நீங்க தான் அவனுக்கு ஆக்ஸிடெண்ட் பண்ணிருக்கீங்க. எனக்கு நீங்க பேசினப்பவே தெரியும். அவன் என்ன தப்பு பண்ணினான்? அவனை எதுக்கு இப்படி செஞ்சீங்க? உங்களால அவனோட வாழ்க்கையே போச்சு.
தப்பு நம்ம பக்கம் இருக்கு. நீங்க என்னையோ ஆஷாவையோ அடிக்கலாம் திட்டலாம். இப்ப போல மனசாட்சியே இல்லாம சூடு போடலாம். ஆனா மனோஜை எதுக்கு கஷ்டப் படுத்தணும்?”, என்று கேட்டான் நிர்மல்.
பெற்றோர்கள் இருவரும் அமைதியாக இருக்க, ஆஷாவோ வேதனை தாங்க முடியாமல் மயங்கி கீழே சரிந்தாள். அவளை யாருமே கவனிக்கவில்லை.
“இங்க பாருங்கப்பா மனோஜ்க்கும் அவன் வீட்டு ஆட்களுக்கும் ஏதாவது நடந்தா இனி நானே சும்மா இருக்க மாட்டேன். இப்ப என்ன ஆஷா அவனை பாக்க கூடாது அவ்வளவு தானே? அதை நான் பாத்துக்குறேன். ஆனா இனி நாங்க இந்த வீட்ல இருக்க மாட்டோம்”
“நிர்மல் நீ என்ன சொல்ற?”, என்று கேட்டார் முத்துவேல்.
“ஆமா பா, நாங்க இனி இந்த வீட்ல இருக்க மாட்டோம். இங்க இருந்தா இவளும் அவனை பாக்க கிளம்புவா. அதனால அவனும் பாதிக்க படுவான். எங்களுக்கு இந்த ஊர் வேண்டாம். எங்களை வேற எங்கயாவது ஸ்கூல்ல சேத்துருங்க. நாங்க ஹாஸ்டல்ல இருந்துக்குறோம்”
“டேய், நீங்க எதுக்கு டா ஹாஸ்டல்க்கு போகணும்? நீங்க என்னோட பிள்ளைகள் டா”
“வேண்டாம் பா. நாங்க போறோம். எங்களை வேற ஏதாவது ஊர்ல சேத்துருங்க. நான் ஆஷாவைப் பாத்துக்குறேன். ஆனா மறுபடியும் சொல்றேன், உங்களால மனோஜ்க்கு இனி எந்த பாதிப்பும் வரக் கூடாது. அப்படி ஏதாவது நடந்தா உங்க ரெண்டு பிள்ளைங்களும் உயிரோட இருக்க மாட்டோம். ஏன்னா ஏற்கனவே எங்களால தான் அவனோட படிப்பு போச்சு. இதுக்கு மேலயும் அவனுக்கு ஏதாவது நடந்தா நானும் ஆஷாவும் உயிரோட இருக்க மாட்டோம். அப்பா, இப்ப டாக்டரை கூப்பிடுங்க”, என்று சொன்னவன் ஆஷா புறம் திரும்பினான்.
அவள் அங்கே மயங்கிக் கிடக்கவும் “ஆஷா, என்ன ஆச்சு மா? அப்பா… இங்க பாருங்க. இவ மயங்கிட்டா. சீக்கிரம் டாக்டரைக் கூப்பிடுங்க”, என்று சொன்னவன் அவளைத் தூக்கிக் கொண்டு அறைக்குச் சென்றான்.
டாக்டர் வந்து பார்த்த போது அவளுக்கு ஜன்னி வந்திருந்தது. ஆஷா நிலையை கண்ட அவர்களின் குடும்ப டாக்டர் உரிமையாக புஷ்பாவைக் கண்டித்து விட்டே சென்றார்.
அவள் சரியாக ஒரு வாரம் போல் ஆனது. அந்த ஒரு வாரமும் மனோஜ் அவள் அருகிலே தான் இருந்தான். அவளுக்கு கொஞ்சம் சரியானதும் “நீ எதுக்கு ஆஷா அவனைப் பாக்க போன? நான் தான் அப்பவே படிச்சு படிச்சு சொன்னேன்ல?”, என்று கேட்டான் நிர்மல்.
“நான் மன்னிப்பு கேக்க தான் அண்ணா போனேன். என்னால தானே அவன் படிப்பு போச்சு…”, என்று பாவமாக சொன்ன தங்கையை அவனால் கடிந்து கொள்ள முடியுமா?
அவளுடைய காயத்துக்கு மருந்து தடவி ஆற வைத்தான். இவர்களின் அன்னை ஒரு ராட்சசியாக மாறியதால் அண்ணன் அன்னையாக மாறினான்.
அவளுக்கு சரியானதும் இருவரும் பள்ளிக்கு செல்வார்கள் என்று முத்துவேலும் புஷ்பாவும் எதிர் பார்க்க நிர்மலோ “வேற ஸ்கூல்க்கு சேத்தா தான் போவேன்”, என்று விடாப் பிடியாக இருந்தான்.
அவன் பிடிவாதம் கண்டு முத்துவேல் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவன் மாறவில்லை. ஆஷாவை பள்ளிக்கு போகச் சொன்னால் அவளோ அண்ணன் முதுகின் பின் ஒழிந்தாள். இருவருமே புஷ்பாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்கள்.
ஆஷாவாது புஷ்பா ஏதாவது கேட்டால் பதில் சொல்வாள். ஆனால் நிர்மலோ புஷ்பா என்ன கேட்டாலும் பதிலே சொல்ல மாட்டான். முத்துவேல் கண்டித்தும் அவன் மாற வில்லை.
வேறு வழியில்லாமல் இருவரையும் ஊட்டி கான்வெண்டில் சேர்த்தார்கள். இடையில் சீட் வாங்குவதற்கு முத்துவேலின் அரசியல் கை கொடுத்தது.
புதுப் பள்ளி, புது இடம் என்று இருவரும் திணறினாலும் போக போக சமாளித்துக் கொண்டார்கள். இருவருக்கும் புது நண்பர்கள் கிடைத்தார்கள். புது சூழ்நிலை அவர்களுக்கு சந்தோசத்தையே தந்தது. நிர்மல் அந்த ஸ்கூலில் படித்த இரண்டு வருடமும் வீட்டுக்கு வரவில்லை. தன்னுடைய தங்கையையும் வீட்டுக்கு அனுப்பவில்லை.
முத்துவேலும் புஷ்பாவும் தான் அவர்களைக் காண செல்வார்கள். மறந்தும் தன்னுடைய தங்கையிடம் மனோஜ் பற்றி நிர்மல் பேசவில்லை.
ஆனால் அவன் பேசவில்லை என்றாலும் மனோஜ் அவள் மனதில் பதிந்து போய் தான் இருந்தான். தன்னுடைய உயிர்த் தோழிகளிடம் மனோஜைப் பற்றி ஏதாவது பேசி சந்தோஷப் படவில்லை என்றால் அவளுடைய நாள் அவளுக்கு அழகாக இருக்காது.
அவனைப் பற்றி அவர்களிடம் பேசி பேசி அவள் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்தான் மனோஜ்.