அத்தியாயம் 6 
உன் மனதில் இருக்கும்
எந்தன் நினைவுகளே போதும்
எந்தன் காதலை புதுப்பிக்க!!!
ஆஷா முழுவதுமாக புஷ்பாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் பட்டாள். நிர்மலுடன் கூட அவளை எங்கேயும் அனுப்பவில்லை. புஷ்பாவே ஆஷாவை பள்ளிக்கு அழைத்து சென்று மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்வாள். 
அப்படி ஒரு நாள் புஷ்பாவுடன் பள்ளிக்கு போகும் போது அவர்கள் போகும் ரோட்டில் எதுவோ வேலை நடக்கிறது என்று கேள்விப் பட்ட டிரைவர் மாற்று வழியில் சென்றார். 
“என்ன ஆச்சு சோமு? எதுக்கு இந்த வழில வறீங்க?”, என்று கேட்டாள் புஷ்பா. 
“அங்க எதுவோ வேலை நடக்குது மா. நம்ம ஐயா காலைலே போன் பண்ணி சொன்னாங்க. இந்த வழில போனா கூட அஞ்சு நிமிஷம் தான் ஆகும்”, என்றார் சோமு. 
“சரி போங்க”, என்று சொல்லி விட்டு ஏதோ பைலை பார்க்க ஆரம்பித்தாள் புஷ்பா. 
புது வழியை வேடிக்கை பார்த்த படி வந்தாள் ஆஷா. அப்படி அந்த வழியில் போகும் போது தான் மனோஜ் மெக்கானிக் ஷெட்டில் வேலை பார்ப்பது ஆஷாவுக்கு தெரிந்தது. ஒரு வண்டியை கழட்டிக் கொண்டிருந்தான் மனோஜ். 
அவனைக் கண்டதும் அவள் கண்கள் மின்னியது. அவனையே பார்த்த படி இருந்தாள். அவனைக் கடந்து கார் செல்லும் போது திரும்பி பார்க்க சொன்ன மனதை புஷ்பா அருகில் அமர்ந்திருப்பதால் அடக்கி கொண்டாள். அவனைப் பார்த்ததால் அன்று முழுவதும் உற்சாகமாகவே இருந்தாள் ஆஷா. அடுத்து அவனிடம் எப்படி பேச என்பதே அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. 
மாலையில் கார் மனோஜ் இருந்த மெக்கானிக் ஷெட் வழியே செல்லும். அவனை இன்னொரு முறை பார்க்கலாம் என்று எதிர் பார்த்தாள் ஆஷா. அவனைக் காண்பதற்காக அவள் காத்திருக்க ஆனால் பழைய வழியிலே கார் சென்றது. அதில் அவள் முகம் தொங்கிப் போனது. அவள் ஆசை பட்டது போல அவனைக் காண முடியவில்லை. 
வீட்டுக்கு சென்றதும் எப்படி அவனைப் பார்க்க என்று எண்ணமே அவளைச் சுற்றி வந்தது. இந்த யோசனையில் எதுவுமே செய்ய முடியாமல் அமர்ந்து விட்டாள். 
நிர்மலிடம் கூட அவளால் உதவி கேட்க முடியாது. அவன் கட்டாயம் மனோஜ் விஷயத்தில் அவளுக்கு உதவ மாட்டான் என்று தெரியும். அப்படியே அவனிடம் கேட்டாலும் அவளுக்கே அட்வைஸ் செய்வான் என்பதால் எப்படி பார்க்க என்று யோசித்தாள். 
எப்படியாவது மனோஜை பார்க்க வேண்டும் என்று உறுதி மட்டும் அவளுக்குள் வந்தது. 
தன்னால் தான் அவனுடைய படிப்பு கெட்டு போனது என்று அவளுக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது. அதற்காக
மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவள் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லும் பரபரத்தது. 
ஆனால் அதற்கான வழி தான் அவளுக்கு தெரிய வில்லை. அவள் அப்படியே அமர்ந்திருக்க புஷ்பா தான் அவளை முகம் கழுவ அனுப்பினாள். உடை மாற்றி கை கால் கழுவி அமர்ந்தாள் ஆஷா, 
“ஆஷா, அம்மா கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன். நீ அண்ணன் வர வரைக்கும் டி‌வி பாத்துட்டு அப்புறம் அவன் கூட சேந்து படிக்கணும் சரியா?”, என்று சொல்லி விட்டு வெளியே சென்றாள் புஷ்பா. 
அவள் சென்றதும் ஆஷா உள்ளம் குதூகலித்தது. இதை விட்டால் மனோஜை பார்ப்பதற்கு வேறு சந்தர்பம் கிடைக்காது என்று அவளுக்கு புரிந்தது. ஆனால் எப்படி வீட்டில் இருந்து செல்ல என்றும் பயமாக இருந்தது. 
புஷ்பா கட்டுபாடாக அவளை நடத்தினாலும் எந்த கண்டிப்பையும் இது வரை காட்ட வில்லை என்பதால் கொஞ்சம் தைரியத்துடன் சைக்கிளை எடுத்தாள். 
அவள் கிளம்பியதைப் பார்த்ததும் “பாப்பா எங்க போற? அம்மா பாத்தா திட்டுவாங்க”, என்று தடுத்தார் செக்யூரிட்டி. 
“கடைக்கு போய் சாக்லேட் வாங்கிட்டு இப்ப வந்துருவேன் மாமா. பிளீஸ். அம்மா வரதுக்குள்ள வந்துருவேன்”, என்று அவரிடம் கெஞ்சி விட்டு கிளம்பினாள். 
எப்படியாவது அவனை பார்க்க வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே வேக வேகமாக சைக்கிளை அழுத்தி மனோஜ் கடைக்கு சென்று விட்டாள். 
அந்தோ பரிதாபம் அவள் போன போது அவன் அங்கு இல்லை. அவனுடைய அப்பா மட்டுமே அங்கு இருந்தார். தூரத்தில் நின்றே சிறிது நேரம் அவன் வருவான் என்று எண்ணி காத்திருந்தாள். அவன் வரவில்லை என்றதும் வீட்டுக்கு செல்ல திரும்பினாள். 
ஆசை ஆசையாக வந்தவளின் முகம் சோர்ந்து போனது. “இவ்வளவு கஷ்டப் பட்டு வந்தும் அவனைப் பாக்க முடியலையே”, என்று எண்ணிக் கொண்டே “சரி அம்மா வரதுக்குள்ளே வீட்டுக்கு போயிரணும்”, என்று வேகமாக சைக்கிளை அழுத்த ஆரம்பிக்கும் போது சைக்கிள் செயின் அவிழ்ந்து சைக்கிள் நின்று விட்டது. 
“ஐயையோ, இது வேறயா? இன்னைக்கு நான் செத்தேன்”, என்று கடுப்புடன் இறங்கியவள் எரிச்சலுடன் அதை தள்ளிக் கொண்டே நடந்தாள். 
“என்ன ஆச்சு சைக்கிளுக்கு”, என்ற குரலில் திரும்பி பார்த்தவள் அங்கே மனோஜ் நிற்கவும் ஆனந்தமாக அதிர்ந்தாள். அவனைக் கண்டதும் அவள் முகம் மலர்ந்து போனது. 
“மனோஜ் நீங்களா? எப்படி இருக்கீங்க? நான் உங்களைப் பாக்க தான் வந்தேன் தெரியுமா?”, என்று சந்தோசத்துடன் அவசரமாக சொன்னாள் ஆஷா. 
“வீட்டுக்கு போயிருந்தேன் ஆஷா. சைக்கிள் செயின் கழண்டுருச்சா? ரொம்ப நாள் எடுக்கலையா?”
“ஆமா”
“சரி தள்ளு. நான் மாட்டுறேன்”, என்று சொன்னதும் அவனிடம் சைக்கிளை கொடுத்து விட்டு நகர்ந்தவள் “சாரி மனோஜ், என்னால தானே உங்களோட படிப்பு நின்னுருச்சு. சாரி. என்னை மன்னிச்சிருங்க”, என்றாள். 
“ஏய், இது என்ன புதுக் கதை? எனக்கு படிக்க பிடிக்கலை. படிப்பு வரலை. அது மட்டுமில்லாம எங்க அப்பாவால பீஸ் கட்ட முடியலை. அதனால தான் படிக்கலை”
“இந்த காரணமும் இருக்கலாம். ஆனால் கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல கூட படிக்காததற்கு நான் தானே காரணம்?”
“அப்படி எல்லாம் இல்லை. நீ தேவையில்லாம யோசிக்காத ஆஷா”
“இல்லை பொய், அன்னைக்கு உங்களுக்கு ஆக்ஸிடெண்ட் ஆக கூட காரணம் எங்க அம்மா தான். எனக்கு தெரியும்”
“நீ என்ன இப்படி எல்லாம் கதை சொல்ற? உங்க அம்மா எதுக்கு எனக்கு ஆக்ஸிடெண்ட் பண்ண போறாங்க? ரொம்ப படம் பாக்குறியா? அப்படியே நடந்தாலும் உங்க அம்மாவுக்கு என் மேல எதுக்கு கோபம் வரணும்?”
“அது அது… அதை சொல்ல முடியாது. ஆனா நான் தான் காரணம்னு எனக்கு தெரியும். எங்க அம்மா தான் உங்களை படிக்க விடாம பண்ணிட்டாங்க. உண்மை தானே?”
“சைக்கிள் ரெடி பண்ணிட்டேன். நீ கிளம்பு. நிர்மலை கேட்டதா சொல்லு ஆஷா…..சாரி ஆஷா பிரியதர்சினி”, என்று சொல்லி சிரித்தான். 
“நல்லா மழுப்புறீங்க. நான் கேக்குறதுக்கு பதில் சொல்ல மாட்டீங்க அப்படித் தானே? சரி விடுங்க. இனிமே இங்க தான் வேலைப் பாப்பீங்களா? இது உங்க கடையா?”
“ஆமா, இது எங்க அப்பவோட கடை தான்”
“சரி நேரம் ஆச்சு. நான் கிளம்புறேன். நாளைக்கு உங்களைப் பாக்க வரேன்”, என்று அவள் சொன்னதும் அவன் முகம் கடுத்தது. 
“நீ அடிக்கடி இங்க வர வேண்டாம் ஆஷா. இப்ப கிளம்பு. நாம பாத்துக்குறது நல்லது இல்லை”
“ஏன்? எங்க அம்மா தான் உங்களை எதுவும் செய்யலையே? அப்புறம் எதுக்கு நான் பயப்படணும்? இங்க வரதுக்கு என்னை விட மாட்டாங்க தான். ஆனா நான் எப்படியாவது வருவேன்”
“அவ்வளவு கஷ்டப் பட்டு எதுக்கு வரணும்?”
“என்னன்னு சொல்லத் தெரியலை. எனக்கு உங்களை பாக்கணும் போல இருக்கு. உங்க கூட பேசணும் போல இருக்கு. என்ன பண்ண?”
“நீ அப்படி நினைச்சா நான் உயிரோட இருக்க முடியாது ஆஷா”, என்று இறுக்கமாக ஒலித்தது அவன் குரல். 
“மனோஜ்”
“உண்மை தான். உங்க அம்மா என்னை உன் கூடவும் உன் அண்ணன் கூடவும் பேசக் கூடாதுன்னு மிரட்டினாங்க. நான் முடியாதுன்னு சொன்னதுக்கு தான் எனக்கு ஆக்ஸிடெண்ட் நடந்துச்சு. எனக்கு தெரியும். சும்மா சைக்கிள்ள போகும் போது வேணும்னே ஒரு கார் வந்து மோதுச்சு. அப்புறமும் உங்க அம்மா என்னை மிரட்டினாங்க. என் பிள்ளைங்க கூட நீ பேசினா உனக்கும் உன்னோட வீட்ல உள்ளவங்களும் உயிரோட இருக்க மாட்டீங்கன்னு மிரட்டினாங்க. உடனே நான் வேற ஸ்கூல்க்கு போயிறேன்னு சொன்னேன். சந்தோசம்னு சொல்லி தான் டி‌சி கொடுத்தாங்க”
….
“ஆனா எனக்கு தான் எங்க வீட்ல பேச பயம். என்னை வேற ஸ்கூல்ல சேருங்கன்னு அப்பா கிட்ட சொல்ல யோசனையா இருந்தது. எங்க அப்பா எதுக்குன்னு காரணம் கேப்பார். நான் சரியான காரணம் சொல்லலைன்னா ஸ்கூல்ல வந்து விசாரிப்பார். உங்க அம்மா தான் ஆக்ஸிடெண்ட் பண்ணினாங்கன்னு தெரிஞ்சா கண்டிப்பா வேற ஏதாவது பிரச்சனை வரும். அதனால படிக்க வேண்டாம்னு முடிவு எடுத்துட்டேன். ஸ்கூல்க்கு போக மாட்டேன்னு அடம் பிடிச்சேன். அதனால அப்பா கடைக்கு வரச் சொல்லிட்டாங்க. அதனால இனி நாம பேச வேண்டாம். தேவையில்லாம எதுக்கு பிரச்சனை? நீ கிளம்பு”, என்று சொல்லி விட்டு கடைக்கு நடந்து விட்டான். அவளுடைய தாய் பேசிய வார்த்தைகளை நினைத்து பார்த்தவனின் மனது வலித்தது. 
சோகமான மனதுடன் வீட்டுக்கு சைக்கிளை ஓட்டிச் சென்றாள் ஆஷா. போகும் அவளையே சில நிமிடம் நின்று பார்த்தான் மனோஜ். 
ஆஷா வீட்டுக்கு சென்ற போது அங்கே கோபத்தின் மறு உருவமாக அமர்ந்திருந்தாள் புஷ்பா. புஷ்பாவைக் கண்டதும் நடுங்கினாள் ஆஷா. 
“எங்க போயிட்டு வர?”, என்று புஷ்பா கேட்டது தான் தாமதம் பயத்தில் அழுகை வந்தது ஆஷாவுக்கு. 
அப்போது வீட்டில் நிர்மலும், முத்துவேலும் வேறு இல்லை என்று அவளுக்கு தெரியும். “இன்னைக்கு நான் செத்தேன்”, என்று எண்ணி பயத்துடன் புஷ்பாவைப் பார்த்தாள்.