Advertisement

“ஹாஸ்டல் பாத்துருக்கேன்னு சொன்ன? உன் கிளாஸ் பொண்ணோட அக்கா பாத்து தந்தாங்கன்னு சொன்னீயே டி?”
“அதுக்கப்புறம் அந்த இடம் அண்ணா வேண்டாம்னு சொல்லிருச்சு”
“அப்படியா? ஏனாம்?”
“தெரியலை”
“உன் அண்ணன் ஒரு புரியாத புதிர். சரி என்ன காரணம்னு கேட்டியா? எங்க தான் தங்க போற?”
“கேட்டேன், இப்ப வீட்டுக்கு வறேன்னு சொல்லுச்சு. வந்து சொல்லுமா இருக்கும்”
“சரி வந்து என்ன சொன்னாங்கன்னு சொல்லு ஓகே வா? நான் அப்புறம் போன் பண்ணுறேன்”
“சரி டி”, என்று சொல்லி வைத்த சிவானி அறையை விட்டு வெளியே வந்து நின்றாள். 
“என்ன டி வாசலையே பாத்துட்டு இருக்குற?”, என்று கேட்டாள் பார்வதி. 
“அண்ணா வறேன்னு சொல்லுச்சு மா. அதான்”
“மனோஜா?”
“நான் வேற யாரை அண்ணான்னு சொல்லுவேன்”
“நீ நாளைக்கு தானே கிளம்பனும். இன்னைக்கு ஏனாம்? இப்ப வரானா? இல்லை பிறகா டி?”
“இப்ப தான் மா. எதுக்கு கேக்குற?”
“இல்லை கொஞ்ச நேரம் கழிச்சு வந்தா கோழிக் குழம்பு ஏதாவது வச்சி கொடுத்து விடலாம்னு தான்”
“இல்லை மா இப்ப வறேன்னு சொல்லுச்சு”, என்று சிவானி சொல்லும் போதே வாசலில் பைக் சத்தம் கேட்டது. 
“அண்ணா வந்துருச்சு போலமா”, என்று சொல்லிக் கொண்டே வெளியே சென்றாள் சிவானி. அவள் பின்னேயே பார்வதியும் சென்றாள். 
அங்கே மனோஜ் தான் வந்திருந்தான். கூடவே வயலுக்கு சென்ற துரைப்பாண்டியையும் அழைத்து வந்திருந்தான். 
“வாப்பா”, என்று அவனை வரவேற்ற பார்வதி “நீங்க என்னங்க, இப்பவே வந்துட்டீங்க? அதுவும் மனோஜ் கூட வந்துருக்கீங்க?”, என்று கேட்டாள். 
“தெரியலை பார்வதி, மனோஜ் தான் என்னைக் கூட்டிட்டு வந்தான். சரி வாசல்ல வச்சு என்ன பேச்சு? மனோஜ் உள்ள வா பா”, என்று துரைப்பாண்டி சொன்னதும் அனைவரும் உள்ளே சென்றார்கள். 
ஹாலில் அரவம் கேட்கவுமே மற்ற அனைவரும் வெளியே வந்து விட்டார்கள். நித்யாவும் செந்திலும் கூட அங்கே வந்தார்கள்.
“இந்த நித்யா இன்னும் இங்க தான் இருக்காளா? இருக்கா உனக்கு ஆப்பு வைக்கிறேன்”, என்று நினைத்த மனோஜ் “அம்மா அப்பா உங்க கிட்ட ஒரு முக்கியமான விசயத்தைப் பத்தி பேச தான் வந்தேன்”, என்றான். 
“என்னப்பா? ஏதாவது பிரச்சனையா?”, என்று கேட்டாள் பார்வதி. 
“ஏங்க, இப்ப எதுக்கு இந்த மாநாடு கூட்டிருக்காங்க?”, என்று திலீபனின் காதைக் கடித்தாள் திவ்யா. 
“எனக்கென்னடி தெரியும்? பொறு என்னனு பாப்போம்”, என்று திலீபன் சொன்னதும் திவ்யாவும் அவர்கள் பேசுவதை கவனித்தாள். 
“பிரச்சனை எல்லாம் ஒண்ணும் இல்லை மா. நாளைக்கு அம்மு சென்னை போறா”
“ஆமா, அதுக்கு தான் காலைல இருந்து எல்லாம் எடுத்து வச்சிட்டு இருக்கா”
“பார்வதி, கொஞ்சம் அவனை பேச விடு”, என்று துரைப்பாண்டி சொன்னதும் “அம்மா, நாளைக்கு சிவானி கூட நீங்களும் அப்பாவும் போறீங்க”, என்றான் மனோஜ். 
“என்ன பா சொல்ற? நாங்க எதுக்கு? நீ தான் அவளை விட போறதா சொன்னியே? திடீர்னு ஏதாவது உனக்கு வேலை வந்துருச்சா? சரி நாங்களே அவளை விட்டுட்டு வரோம்”, என்றார் துரைப்பாண்டி. 
“இல்லைப்பா, நானும் உங்க கூட வரேன். ஆனா உங்க மூணு பேரையும் அங்க விட்டுட்டு நான் திரும்பி வந்துருவேன்”
“என்னப்பா சொல்ற?”, என்று கேட்டாள் பார்வதி. 
“அம்மா, நான் சென்னைல சிவானியை ஹாஸ்டல்ல தங்க வைக்கலை. அவளுக்கு ஒரு வீடு பாத்துட்டேன். அவ மட்டும் எப்படி தனியா இருக்க முடியும்? அதனால அவளுக்கு துணைக்கு நீங்க ரெண்டு பேரும் போய் இருங்க“, என்று சொன்னதும் அனைவரும் அதிர்ச்சியாக பார்த்தார்கள். 
“மனோஜ், நாங்களுமா? அப்ப வயல் எல்லாம் என்ன ஆகுறது?”, என்று கேட்டார் துரைப்பாண்டி. 
“ஆமாப்பா, உங்களுக்கும் அம்மாவுக்கும் என்ன வயசு திரும்புதா? நீங்க வேலை செஞ்சது எல்லாம் போதும். வயலை குத்தகைக்கு விட்டுருவேன். இனிமேலாவது நீங்க ரெஸ்ட் எடுங்க. வீட்டு செலவுக்கு நான் பணம் அனுப்புறேன். சிவானியும் வேலைக்கு போக போறா. அவ சம்பளத்தை சேவ் பண்ணிக்கலாம். என்னோடதை செலவுக்கு வச்சிக்கலாம். இங்க இருந்து எல்லாருக்கும் எல்லாம் செஞ்சது போதும்”
“மனோஜ், நீ என்ன பேசுறதுன்னு தெரிஞ்சு தான் பேசுரியா? அம்மா அப்பா எதுக்கு அவ கூட போகணும்? சிவானி ஹாஸ்டல்ல இருக்கட்டும். அம்மா அப்பா இங்க இருக்கட்டும்”, என்று அவசரமாக சொன்னாள் நித்யா. 
“என்னக்கா இப்படி சொல்ற? நீ அம்மா அப்பா மேல உள்ள பாசத்துல தான் இப்படி சொல்றன்னு எடுத்துக்கவா?”
“நீ எப்படி வேணும்னாலும் எடுத்துக்கோ. அம்மா அப்பா இங்க
இருந்து போயிட்டா நான் பிறந்த வீட்ல வந்து எப்படி சீராடுறது?”
“அதானே பாத்தேன்? என்ன டா, அம்மா அப்பாவை பிரிய முடியலைனு நினைச்சு தான் சொல்றேன்னு ஒரு நிமிஷம் நினைச்சிட்டேன். பிறந்த வீடு அப்படிங்குறது ஒரு நல்லது கெட்டதுக்கு வந்து பொண்ணுங்க சீராடுற இடம். ஆனா நீ சீராடுறதுக்கு தானே உன் மாமியார் வீட்டுக்கே போற?”
“நான் எங்கயும் இருப்பேன். அதை நீ கேக்க கூடாது. அம்மா அப்பா இங்க தான் இருக்கணும். எங்கயும் போக கூடாது”
“எதுக்கு அவங்க இங்க இருக்கணும்? உனக்கு பொங்கி ஆக்கி போடவா? இப்பவே அவங்களுக்கு உடம்புக்கு முடியுறது இல்லை. நம்ம பிறக்குறதுக்கு முன்னாடில இருந்து உளைச்சிட்டு இருக்காங்க. இப்ப உனக்கும் மக பொறந்தாச்சு. அவங்களுக்கு ரெஸ்ட் வேண்டாமா?”
“ஏன் அங்க போயும் அம்மா சமையல் செய்ய தானே போறாங்க?”
“அங்க போனா, அம்மா, அப்பா, சிவானி மூணு பேர் தான். இட்லி அவிச்சா பழைய குழம்பையாவது இல்லைன்னா ஒரு சட்னியாவது வச்சி சாப்பிட்டுக்குவாங்க. இங்க இருக்குறவங்க மாதிரி தக்காளி சட்னி இல்லையா, ஊருகாய் இல்லையான்னு அப்பாவும் சிவானியும் கேக்க மாட்டாங்க. அது மட்டுமில்லாம அம்மாவுக்கு முடியலைன்னா சிவானி பாத்துக்குவா. இங்க அவங்களுக்கு பாக்க யாரு இருக்கா?”
“அப்ப எனக்கு பொறந்த வீடு…..”
“பொறந்த வீடு இல்லையான்னு தானே கேக்க போற? ஏன் இல்லை? இந்த வீடு உனக்கு எப்பவுமே பொறந்த வீடு தான். யார் இல்லைன்னு சொல்ல முடியும்? எப்பவும் போல தாராளமா இங்க இருந்துக்கோ. உனக்கு என்ன வேணுமோ அதை இந்த வீட்ல இருக்குறவங்க கிட்ட கேளு”, என்று சொல்லி திலீபன் மற்றும் திவ்யா தலையில் நித்யா பொறுப்பை ஏற்றினான்.
திவ்யா மற்றும் திலீபனுக்கு திக்கென்று இருந்தது. திலீபன் இது வரை வீட்டுக்கு பணம் கொடுக்கவே மாட்டான். மனோஜ் கொடுக்கும் பணம், துரைப்பாண்டி மூலம் வயலில் வரும் பணத்தை வைத்து தான் அந்த குடும்பம் ஓடியது. 
திலீபன் பணம் முழுவதும் திவ்யாவின் செலவுக்கு தான் சென்றது. இப்போது அம்மாவும் அப்பாவும் சென்னைக்கு சென்றால் திலீபன் கையில் இருக்கும் பணத்தை தான் செல்வு செய்ய வேண்டும். அதனால் அவனுக்கு திக்கென்று இருந்தது. 
திவ்யாவுக்கோ ஒரு சுடுதண்ணி போட கூட பிடிக்காது. சரியான சோம்பேறி. “அத்தை இங்க இருந்து போனா எப்படி வக்கணையா சாப்பிட?”, என்று யோசித்துக் கொண்டிருந்தாள் அவள்.
இருவரும் அவரவர் யோசனையில் இருந்தார்கள். இந்த நிலையில் நித்யாவும் இங்கே டேராப் போட்டால் அவர்களுக்கும் திலீபன் தானே செலவு செய்ய வேண்டும்? அதனால் அதிர்ந்து போன திலீபன் “அம்மா, அப்பா நீங்க எங்கயும் போக கூடாது. எங்க கூட தான் இருக்கணும். அம்மா உங்களுக்கு நாங்களும் பிள்ளைகள் தானே? சிவானிக்காக எங்களை விட்டுட்டு போனா எப்படி?”, என்று அவசரமாக கேட்டான். 
“வாடா என் மகனே? இப்ப தான் எங்க அருமை உனக்கு தெரியுதோ? ஏன் இவ தான் வேணும்னு இவளை இழுத்துட்டு ஓடும் போது உனக்கு அம்மா அப்பா தெரியலையோ? நீ வெளியே போய் அசிங்க படக் கூடாதுன்னு தான் உன்னை வீட்டுக்குள்ள சேத்தோம். அதுக்கு கோப பட்டு மனோஜ் எங்களை விட்டு பிரிஞ்சி தான் இருக்குறான். அடுத்து உன் பொண்டாட்டியும் உன் அக்காவும் போட்ட ஆட்டத்துல சின்னக் குட்டி ஹாஸ்டலுக்கு எங்களை விட்டுட்டு தான் போனா. அப்ப எல்லாம் அவங்களை பிரிஞ்சு தானே நாங்க இருந்தோம். இப்ப உங்களை பிரிய நாங்க ஏன் யோசிக்கணும்? இங்கயே உக்காந்து உன் பொண்டாட்டிக்கு என்னை முறை வாசல் செய்ய சொல்றியா?”, என்று கேட்டாள் பார்வதி. 
“அத்தை என்னை எதுக்கு சொல்றீங்க? நான் என்ன செஞ்சேன்?”, என்று கேட்டாள் திவ்யா. 
“அதை தான் நானும் கேக்குறேன். நீ இந்த வீட்டுக்கு என்ன செஞ்ச? நீ சொகுசா மகாராணி மாதிரி வாழுறதுக்கு நான் அடுப்படில நிக்கணுமா? உன் புருஷன் தான் இந்த வீட்டுக்கு என்ன செஞ்சு கிழிச்சிட்டான்? இங்க இருந்து நாங்க வெந்தது போதும். கொஞ்ச நாளாவது நான் என் பொண்ணு கூட நிம்மதியா இருக்க போறேன்? மனோஜ் எங்களுக்கு நீ சொன்னதுல ரொம்ப சந்தோசம்ப்பா. நானும் அப்பாவும் சிவானி கூடவே இருக்குறோம். என்னங்க நான் சொல்றது சரிதானே?”, என்று கேட்டாள் பார்வதி. 
“சரி தான் பார்வதி. நாம அங்கயே போவோம்., எனக்கும் வயலுக்கு அலைய முடியலை”, என்று துரைப்பாண்டி சொன்னதும் “அப்பா, அம்மா, ஐ ஜாலி இனி என்கூட இருப்பீங்க? உங்களை நான் பாத்துக்குவேன்”, என்று சந்தோஷப் பட்டாள் சிவானி. 
“அப்ப எங்க நிலைமை?”, என்று கேட்டாள் நித்யா. 
“உனக்கு என்ன? மனோஜ் சொன்ன மாதிரி நாங்க இது வரை உனக்கு செஞ்சது எல்லாத்தையும் உன்னோட தம்பியும் தம்பி பொண்டாட்டியும் செய்வாங்க“, என்று பார்வதி சொன்னதும் “அம்மா, என்னால அதெல்லாம் முடியாது. நான் வாங்குற சம்பளம் எங்க செலவுக்கே பத்தாது. அக்கா மாசக் கணக்கா இங்கயே டேராப் போட்டா என்னால எல்லாம் முடியாது. திவ்யாவுக்கு சமைக்கவும் தெரியாது”, என்றான் திலீபன்.
அதில் நித்யா கொதித்து போய் திலீபனை முறைத்தாள். ”என்ன அண்ணி முறைக்கிறீங்க? உங்க தம்பி உண்மையை தானே சொன்னார்? நானெல்லாம் என் பிறந்த வீட்டுக்கு ஆடிக்கொரு தடவையும் அமாவாசைக்கு ஒரு தடவையும் தான் போறேன். ஆனா
நீங்க அப்படியா? இது வரை அத்தை மாமா உங்களுக்கு எல்லாம் செஞ்சாங்க. அதே மாதிரி எங்களால எல்லாம் செய்ய முடியாது”, என்று திவ்யா நேரடியாக சொன்னதும் நித்யா ஏதோ சண்டை போட ஆரம்பிக்க போனாள். 
“அதை அக்கா தம்பி நீங்க ரெண்டு பேரும் பேசி முடிவு பண்ணிக்கோங்க. மனோஜ், நாளைக்கு எத்தனை மணிக்குப்பா போகணும். வீடு எப்படி பாத்த? எந்த இடம்? என்ன வாடகையாம்?”, என்று அவனிடம் திரும்பி பேச ஆரம்பித்து விட்டாள் பார்வதி. 
“கடைக்கு வர கஷ்டமரோட வீடு தான் மா அது. அவர் தான் சென்னைல வீடு பூட்டியே இருக்கு. இங்க செட்டில் ஆனதுனால அங்க யாரும் இருக்கலை. தெரியாதவங்களுக்கு வாடகைக்கு விட பயமா இருக்குனு சொன்னார். அந்த வீடு சிவானி ஆபீஸ் பக்கத்துல தான் இருக்கு. அதான் எனக்கு இந்த ஐடியா தோணுச்சு”, என்று கதை பேச ஆரம்பித்து விட்டான் மனோஜ். 
நித்யா திவ்யாவை முறைத்த படி இருக்க “இனி இங்க இருக்க முடியாதா? நாம இப்பவே நம்ம ஊருக்கு போகனுமா டி?”, என்று நித்யாவின் காதில் கேட்டான் செந்தில். 
அதை நினைத்து நித்யாவுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. ஒழுங்கான வேலை வெட்டிக்கு போகாத கணவனை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாததால் தான் பிறந்த வீட்டில் டேராப் போட்டாள். அதற்கும் அவளுடைய உடன் பிறந்தவன் செக் வைக்க அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் கவலையாக இருந்தது அவளுக்கு. 
பூக்கள் மலரும்…..

Advertisement