Advertisement

அத்தியாயம் 9 
உயிருடன் உயிர் கலக்கும்
அற்புதமான நொடியே
காதல் மலரும் தருணம்!!!
நாட்கள் அதன் போக்கில் நகர நிர்மல் ஊருக்கு வரும் நாளும் வந்தது. அவனை வரவேற்க ஆஷா மட்டுமே சென்றிருந்தாள்.
ஏர்போர்ட்டில் எல்லா பார்மாலிட்டுசும் முடிந்து வெளியே வந்த நிர்மல் ஆஷாவை அணைத்துக் கொண்டான். 
“எப்படி இருக்க ஆஷா?”
“பாத்தா எப்படி தெரியுதாம்? ஆனா நீ படு சூப்பரா ஆகிட்ட டா. இன்னும் காலரா வேற ஆயிட்ட போ”, என்று சிரித்தாள் ஆஷா. 
“ஹா ஹா, சரி என்ன நீ மட்டும் வந்துருக்க? அம்மா அப்பா வரலையா?”, என்ற அவன் குரலில் சிறிது ஏக்கம் வெளிப் படத் தான் செய்தது. 
“அம்மாக்கு ஏதோ வேலை இருக்காம். அப்பாவுக்கு கட்சி மீட்டிங்காம். நான் போறேன்னு சொன்னதுக்கே, அவன் என்ன சின்ன பையனா? தனியா வரமாட்டானா? நீ அவனை கூப்பிட போற சாக்குல வேற எங்க போக பிளான் பண்ணுறன்னு அம்மா கேள்வி கேட்டாங்க. அவங்க என்ன தான் சொன்னாலும் என்னோட பாசமான அண்ணனை நான் வரவேற்காம எப்படி இருக்கவாம்? அதான் ஓடி வந்துட்டேன்”, என்று சிரித்தவளின் தலையைக் கலைத்து சிரித்தான் நிர்மல். 
“வீட்டுக்கு போகலாமா?”
“சரி வா, டிரைவர் தாத்தா காரோட வெயிட் பண்ணுறார்”, என்று சொல்லி அழைத்து சென்றாள்.
வீட்டுக்கு சென்றதும் குளித்து முடித்து ஆஷா கொடுத்த உணவை விழுங்கியவன் படுக்கையில் விழுந்து நன்கு உறங்கினான். 
வீட்டுக்கு வந்த பெற்றோர் எப்படி இருக்க? எத்தனை நாள் லீவ் என்று கேட்டதோடு சரி. வேறு எதுவும் அவனை உக்கார வைத்து பேச வில்லை. ஜெயச்சந்திரன் வீட்டில் இருந்தும் அவனைப் பார்க்க வந்தார்கள். பாரினில் இருந்து அனைவருக்கும் வாங்கி வந்த பொருள்களைக் கொடுத்தான் நிர்மல். 
அதிகம் அவன் வாங்கி வந்தது அவனுடைய தங்கைக்கு தான். அதில் ஆஷாவும் பூரித்து தான் போனாள். 
அடுத்த நாளும் நிர்மல் ஓய்விலே தான் இருந்தான். அவனை சரியான வேலைக்கு உணவு உண்ண வைப்பது ஆஷா தான். அடுத்த நாள் காலை தான் “நான் மனோஜ்ஜை பாக்க போறேன்”, என்று ஆஷாவிடம் சொன்னான் நிர்மல். 
“அண்ணா பிளீஸ் என்னையும் கூட்டிட்டு போயேன்”
“நீ எதுக்கு டி? அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நான் மட்டும் போறேன். அம்மா கேட்டா பிரண்டை பாக்க போனேன்னு சொல்லிரு. உன்னையும் நான் கூட்டிட்டு போனேன், அவ்வளவு தான்”, என்று சொன்னதும் ஆஷா முகம் சோர்ந்து போக அதை தாங்க முடியாத அவள் அண்ணனோ “சரி சரி வா, ஆனா கொஞ்ச நேரத்துல நீ வீட்டுக்கு திரும்பி வந்துரணும்”, என்று சொல்லி அழைத்து சென்றான். 
மனோஜ்க்கு வாங்கிய பொருள்களோடு நிர்மல் கிளம்ப தனக்கு வாங்கி தந்த பொருள்களில் சிலதை சிவானிக்கு என்று எடுத்து வைத்தாள் ஆஷா.  சிறிது நேரத்தில் அந்த மெக்கானிக் கடைக்கு முன்பு போய் நின்றார்கள் அண்ணனும் தங்கையும். 
அவர்களை அந்நேரம் மனோஜ் சுத்தமாக எதிர் பார்க்க வில்லை. முற்றிலும் மாறாக நின்ற நண்பனை ஒரு நொடி பார்த்த மனோஜ் “டேய் நிர்மல், வா வா. எப்படி டா இருக்க?”, என்று ஆவலாக வரவேற்றான்.
பார்த்ததும் அவனை கட்டிப் பிடித்து வரவேற்பு கொடுக்க மனோஜ்க்கு ஆசை தான். ஆனால் அவன் பழைய நண்பனாக இருக்கிறானா என்று தெரியாததால் விசாரிக்க மட்டும் செய்தான்.  
“நான் அதே பழைய நிர்மல் தான் டா. எதுக்கு இந்த தயக்கம்? நீ எபப்டி இருக்க? பாத்து எவ்வளவு நாள் ஆச்சு?”, என்று கேட்டு அவனை அனைத்துக் கொண்டான் நிர்மல். 
நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவ அவர்கள் இருவரையும் வேடிக்கை பார்த்த படி நின்றார்கள் ஆஷா, ஜெகன், ராம் மூவரும். 
“அண்ணி, நீங்க அன்னைக்கு சொன்னது தப்பே இல்லை. பேசாம நம்ம அண்ணனுக்கு உங்க அண்ணனையே கட்டி வச்சிருங்க. வந்ததுல இருந்து என்னமா கொஞ்சிக்கிறாங்க. உங்களை அண்ணன்
கண்டுக்கவே இல்லையே”, என்றான் ஜெகன். 
“அதைத் தான் டா நானும் யோசிச்சிட்டு இருக்கேன். இந்த பாஸ் என் பக்கமா திரும்பவே இல்லை பாரேன். உங்க அண்ணனைக் கட்டிக்கிட்டு நான் என்ன பாடு பாடப் போறேனோ தெரியலையே. ஒரு வேளை உண்மைலே உங்க அண்ணனுக்கு என்னை பிடிக்காம இருக்குமோ?”, என்று சோர்வாக கேட்டாள் ஆஷா. 
“அட நீங்க வேற? நீங்க இருக்கும் போது தான் அண்ணன் உங்களை கண்டுக்காது. ஆனா நீங்க போகும் போது உங்களையே பாத்துட்டு தான் நிக்கும். உங்க போன் வந்தாலே அண்ணன் முகம் அப்படியே மலர்ந்து போகும் தெரியுமா?”, என்று வத்தி வைத்தான் ஜெகன். 
“உண்மையாவா டா சொல்ற?”, என்று கண்கள் மின்னக் கேட்டாள் ஆஷா. 
“நான் பொய் சொல்லலை. வேணும்னா ராம் கிட்ட கேளுங்க”, என்று சொன்னதும் ராமும் ஆமாம் என்று தலையசைத்தான். 
“ஏதாவது அதிரடியான விஷயம் நடந்தா தான் இவன் மனசுல இருக்குற காதலை ஒத்துக்க வைக்க முடியும் போல”, என்று எண்ணிக் கொண்டாள் ஆஷா. 
அந்த அதிரடியான விசயத்தையும் அடுத்த நாளே செய்ய வேண்டியது வரும் என்று ஆஷா கனவா கண்டாள்? ஆனால் நடக்க போவது அது தான். 
வெகு நாட்களுக்கு பிறகு சந்தித்த நண்பர்கள் இருவரும் சுற்றம் மறந்து பல கதைகளை பேசிக் கொண்டிருக்க மற்ற மூவரும் வேடிக்கை தான் பார்த்தார்கள். 
“ஹலோ, நீங்க ரெண்டு பேரும் கொஞ்சினது போதும். எங்களையும் கொஞ்சம் கவனிங்க முதலாளி”, என்றாள் ஆஷா. 
“உன் தங்கச்சிக்கு நாம பேசுறதை பாத்து பொறாமை டா நிர்மல்”, என்றான் மனோஜ். 
“ஒரு ஆமையும் இல்லைன்னு சொல்ல மாட்டேன். வயிறு எரியுது”, என்று ஒத்துக் கொண்டாள் ஆஷா. 
அவளைத் திரும்பி பார்த்த நிர்மல் “ஆஷா நீ இங்க இருந்தா எங்களுக்கு பிரியா பேச முடியாது. நீ வீட்டுக்கு கிளம்பு. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்”, என்றான். 
“ரெண்டு பேருக்கும் என்னை கழட்டி விடுறதே வேலை. சரி நான் போறேன். இந்தாங்க, இந்த பையை சிவானிக்கு கொடுத்துருங்க. வரேன் பாஸ்”, என்று சொல்லி மனோஜ் கையில் ஒரு பையைக் கொடுத்தாள். 
அதை வாங்கிய மனோஜ் அவளை கண்டு கொள்ளாமல் நிர்மலுடன் பேச ஆரம்பிக்க கடுப்பானவள் “டேய் நான் போயிட்டு வரேன் டா”, என்று ராம் மற்றும் ஜெகனிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு கிளம்பி விட்டாள். 
அன்று மாலை தான் வீட்டுக்கே வந்தான் நிர்மல். அவனுக்கு முன்பு அவன் மெக்கானிக் ஷெட்டுக்கு சென்ற விஷயம் ஜெயச்சந்திரன் மூலம் புஷ்பா காதுக்கு சென்றிருந்தது. 
நிர்மல் மற்றும் மனோஜ் இருவரும் மெக்கானிக் ஷாப்பில் வைத்து பேசிக் கொண்டிருக்க “இவன் என்ன இங்க இருக்கான்? மறுபடியும் ஆஷா வண்டி ரிப்பேர் ஆகிருச்சா? என்னன்னு போய் கேப்போம்”, என்று எண்ணி காரை விட்டு இறங்கப் போன ஜெயச்சந்திரன் இருவரும் அடித்து அடித்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து “ரெண்டு பேரும் தெரிஞ்சவங்க போல? ஆனாலும் நிர்மலுக்கு எப்படி இவனைத் தெரியும்? சரி சாயங்காலம் போய் விசாரிச்சிக்கலாம்”, என்று எண்ணி வண்டியை எடுத்துக் கொண்டு சென்று விட்டான். 
அவன் தன்னுடைய தந்தையைக் காண கட்சி ஆபீஸ் சென்ற போது அவனை புஷ்பா போனில் அழைத்தாள். 
அதை எடுத்த ஜெயச்சந்திரன் “சொல்லுங்க அத்தை”, என்றான். 
“ஜெயா, அண்ணி உன் பக்கத்துல இருக்காங்களா? இப்ப அவங்களுக்கு தலை வலி எப்படி இருக்கு? அவங்க போன் வேற போக மாட்டிக்கு”
“அத்தை நான் கட்சி ஆஃபிஸ்ல இருக்கேன். வீட்ல இருந்து வரப்ப 
அம்மா படுத்துருந்தாங்க. பரவால்லன்னு தான் நினைக்கிறேன். சாயங்காலம் வீட்டுக்கு போய் பேசச் சொல்லவா?”
“ஸ்கூல் முடிஞ்சு நானே வீட்டுக்கு வரேன் ஜெயா. முக்கியமான விஷயம் பேசணும்”
“என்ன விஷயம் அத்தை?”
“நிர்மல் இங்க இருக்குறப்பவே உங்க கல்யாண விஷயம் பேசலாம்னு யோசிக்கிறேன். அவனுக்கு ரெண்டு மாசம் லீவ் இருக்கு. அதுக்குள்ளே உங்க கல்யாணத்தை முடிக்கலாம்னு தோணுது. உன் மாமாவும் அண்ணனும் கூட இதைப் பத்தி பேசணும்னு சொன்னாங்க”
“சரி அத்தை சாயங்காலம் பேசலாம். இப்பவே அவன் கிட்ட பேசலாம்னு நினைச்சேன். அவன் பிஸி அதான் வந்துட்டேன்”
“என்ன பிஸி? சும்மா தானே வீட்ல இருக்கான்?”
“இல்லை நிர்மலை இப்ப தான் வெளிய பாத்தேன்”
“அப்படியா எங்க பாத்த? கட்சி ஆஃபிஸ்க்கு நிர்மல் வந்தானா?”, என்று ஆச்சர்யமாக கேட்டாள் புஷ்பா. 
“நிர்மல் இங்க எப்படி வருவான்? நான் வர வழில இருக்குற மெக்கானிக் ஷெட்ல பாத்தேன்”
“அப்படியா?”, என்று கேட்ட புஷ்பாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. 
“அந்த பையன் நம்ம நிர்மல் கூட தான் படிச்சான். அதான் பாக்கப் போயிருப்பான். சரி ஜெயா, சாயங்காலம் உங்க வீட்ல வச்சு பேசிக்கலாம்”, என்று சொல்லி போனை வைத்த புஷ்பாவுக்கு தன்னுடைய இரு பிள்ளைகளை நினைத்து எரிச்சல் வந்தது. 
“ஆஷா தான் அவனை பாக்க போறான்னு பாத்தா இவனும் பாக்க போறானே? இது சரியில்லையே”, என்று எண்ணிக் கொண்டு தன்னுடைய வீட்டுக்கு அழைத்தாள். 
வீட்டு வேலை செய்யும் கண்ணகி போனை எடுத்ததும் “கண்ணகி, பாப்பா வீட்ல இருக்காளா?”, என்று கேட்டாள். 
“ஆமாங்க மா. பாப்பா ரூம்ல தான் இருக்கு”
“தம்பி இருக்கானா? என்ன செய்றான்? சாப்பிட்டானா?”
“இல்லைங்கம்மா. காலைல தம்பியும் பாப்பாவும் தான் கிளம்பி போனாங்க. பாப்பா மட்டும் தான் திரும்பி வந்துச்சு. உடனே சாப்பிட்டு தூங்கிட்டாங்க. தம்பி இன்னும் வரலை மா”, என்று சொன்னதும் போனை வைத்த புஷ்பா “இந்த சின்னக் கழுதையும் அவனைப் பாக்க போயிருக்கா. இதுக்கு மேல இதை விட்டு வச்சா ஆபத்து”, என்று எண்ணி தன்னுடைய கணவனை போனில் அழைத்தாள் புஷ்பா. 
அவர் எடுத்ததும் “அண்ணனும் நீங்களும் நேரா அண்ணன் வீட்டுக்கு வந்துருங்க. முக்கியமான விஷயம் பேசணும்”, என்று சொன்னாள் புஷ்பா. 
சொன்னது போலவே ஜெயச்சந்திரன் வீட்டில் ஐவரும் அமர்ந்து கல்யாண விஷயம் பேச, அடுத்த நாளே நல்ல நாளாக இருக்கவும் நிச்சயத்தை வச்சிக்கலாம் என்று முடிவு எடுத்தார்கள். 
இன்னும் ஒரு மாதம் கழித்து திருமண நாளையும் முடிவு செய்தார்கள். மனோஜுடன் அரட்டையை முடித்து விட்டு வீட்டுக்கு வரும் போது ஆஷா மட்டுமே வீட்டில் இருந்தாள். 
அவனைக் கண்டதும் “என்ன டா உன்னோட பிரண்டை கட்டி பிடிச்சு கண்ணீர் வடிச்சிட்டு வந்தாச்சா?”, என்று கேட்டாள் ஆஷா. 
“என்ன நக்கலா? சரி அம்மா அப்பா எங்க? இந்நேரம் வந்துருக்கணுமே?”
“அத்தை வீட்டுக்கு போயிருப்பாங்க டா. ஏதோ அத்தை தலை வலின்னு சொன்னாங்கன்னு அம்மா காலைல புலம்பினாங்க. வா இப்படி உக்காரு. மதியம் சாப்பிட்டியா?”
“சாப்பிட்டோம். மனோஜும் பசங்களும் தான் செஞ்சாங்க”
“உன் பிரண்ட் வேற என்ன சொன்னான்?”
“டி, நான் உன் அண்ணன். என்கிட்டயே தைரியாம என் பிரண்டை பத்தி கேக்குற?”
“உன் ஃபிரண்ட் தான் யார் இல்லைன்னு சொன்னா? ஆனா எனக்கு மனோஜ் ஸ்பெஷல்”
“ஆஷா நீ தேவையில்லாம ஆசைப் படுறேன்னு தோணுது. அவன் மனசுல அப்படி எதுவும் இல்லை மா. உன்னை அவன் அதிகம் பாக்குறது கூட கிடையாது”
“அவன் சும்மா பிலிம் காட்டுறான்”
“நீ என்ன சொன்னாலும் எனக்கு இது சரிப்பட்டு வரும்னு தோணலை ஆஷா”
“நீயே இப்படி சொன்னா எப்படிண்ணா? ஏற்கனவே அத்தான் கூட கல்யாணம்னு பேசிட்டு இருக்காங்க. அதுவே மனசு சரியில்லை. அடுத்து எனக்கு என்ன பண்ணன்னே தெரியலை”
“பேசாம ஜெயாவைக் கல்யாணம் பண்ணிக்கோ ஆஷா. அவனும் ரொம்ப நல்லவன்”
“ப்ச் இனி இப்படி பேசாத டா, நல்லவன் அப்படிங்குறது என்னோட பிரச்சனை இல்லை. எனக்கு மனோஜை மட்டும் தான் அந்த இடத்துல வச்சு யோசிக்க முடியுது. அம்மா அப்பா கிட்ட நீ தான் பேசணும்”
“நான் சொன்னா அவங்க கேப்பாங்களா? முதல்ல புரிஞ்சிப்பாங்களா? ஒரு வேளை அம்மா அப்பா ஒத்துக்கலைன்னா என்ன பண்ணுவ ஆஷா?”
“தெரியலை, ஆனா ஏதாவது பண்ணனும்”
“தப்பான முடிவு எதுவும் எடுக்க மாட்ட தானே?”
“அப்படின்னா?”
“சூசைட் எதுவும்……”
“ஐயையோ அந்த அளவுக்கு எல்லாம் எனக்கு தைரியம் கிடையாது. நான் செத்துட்டா மனோஜ் கூட எப்படி வாழுறது”
“நீ இருக்கியே. போ டி. சரி அம்மா அப்பா ஒத்துகிட்டு மனோஜ் உன்னை வேண்டாம்னு சொன்னா என்ன பண்ணுவ?”
“அண்ணா அவனுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். அவனோட தாழ்வு மனப்பான்மைல தான் என்னை பிடிக்காத மாதிரி நடிக்கிறான்”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆஷா போன் அடித்தது.
“யாருன்னு பாருண்ணா”
“சிவானின்னு வருது? யாரு? மனோஜ் தங்கச்சியா?”
“ஆமா டா, நாளைக்கு அவ சென்னை கிளம்புறா சொன்னேன்ல? சரி, நீ டி‌வி பாரு. நான் அவ கிட்ட பேசிட்டு வரேன்”, என்று சொல்லி போனை எடுத்துக் கொண்டு சென்றாள். 
“சொல்லு சிவானி, எல்லாம் பேக் பண்ணிட்டியா?”, என்று கேட்டாள் ஆஷா. 
“பண்ணிட்டே இருக்கேன் டி”
“என்ன டி டல்லா பேசுற? வீட்டை விட்டு போக ஒரு மாதிரி இருக்கா?”
“ப்ச் அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நாளைக்கு வேலைக்கு கிளம்பனும். ஆனா இப்ப வரைக்கும் அங்க எங்க தங்க போறேன்னே முடிவு எடுக்கலை”

Advertisement