Advertisement

“டேய், அண்ணிக்கும் இந்த ஒட்டகச் சிவிங்கிக்கும் கல்யாணமாமே டா? அப்ப நம்ம அண்ணன் நிலைமை என்ன டா?”, என்று அருகில் நின்ற ராமின் காதில் கேட்டான் ஜெகன். 
“அதை தான் டா நானும் யோசிக்கிறேன். அண்ணி முழுக்க அண்ணனைத் தான் பாக்குறாங்க. அண்ணன் தான் அவங்களை கண்டுக்கவே மாட்டிக்காங்க. அது மட்டுமில்லாம இப்ப வண்டி லூசுன்னு சொன்னது கூட அண்ணியைத் தான் டா”, என்றான் ராம். 
இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க ஜெயச்சந்திரன் பணத்தை எடுத்து மனோஜிடம் நீட்டினான். மனோஜும் அதை வாங்க தன் கையைக் கொண்டு வந்தான். 
இவன் கையால் மனோஜ் பணம் வாங்குவதா என்று எண்ணிய ஆஷா “வேண்டாம் அத்தான், என்கிட்ட பணம் இருக்கு. நான் கொடுக்குறேன்”, என்று சொல்லி பணத்தை எடுத்து அவசரமாக மனோஜ் கையை தொட்டு அவன் கையில் திணித்து விட்டாள். 
அவள் அவன் கையை வேண்டும் என்றே பிடித்தாள் என்ற உண்மை ஜெயச்சந்திரனைத் தவிர மற்ற அனைவருக்கும் புரிந்தது. மனோஜ் அவளை முறைத்துப் பார்த்தான்.  
“என்ன ஆஷா இது? நான் கொடுத்தா என்ன? நீ கொடுத்தா என்ன?”, என்று கேட்டான் ஜெயச்சந்திரன்.
“அதெல்லாம் அப்படித் தான் அத்தான். உனக்கு புரியாது”
“சரி சரி, நிர்மல் வந்த அப்புறம் மீட் பண்ணுவோம். நீ கிளம்பு. பாத்து வீட்டுக்கு போ”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான் ஜெயச்சந்திரன்.
வண்டியை ஆராய்ச்சி பண்ணுவது போல பார்த்துக் கொண்டிருந்த ஆஷா ஜெயச்சந்திரன் கார் அங்கிருந்து சென்றதும் நிம்மதியாக மூச்சு விட்டாள். 
“அப்பாடி போய்ட்டன். இவனை வச்சிக்கிட்டு இப்பவே மூச்சு முட்டுதே”, என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்த ஸ்டூலில் அமர்ந்து விட்டாள். 
அவள் தோரணையை மனோஜ் முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்க “அண்ணி இந்தாங்க அண்ணி தண்ணி. குடிங்க அண்ணி”, என்று ரைமிங்காக சொல்லி ஒரு சொம்பில் தண்ணீரை அவளிடம் கொடுத்தான் ஜெகன். 
அவன் அண்ணி என்றதில் அதிர்ச்சியானான் மனோஜ். “ஐயோ, இவ சும்மாவே சாமி ஆடுவா. இவனுங்க வேற அண்ணின்னு சொல்லி வேப்பிலை அடிக்கிறாங்களே”, என்று எண்ணிய மனோஜ் “ஜெகா”, என்று அதட்டினான். 
அவனைக் கண்டு கொள்ளாமல்  “நீ இப்ப என்ன சொன்ன? அண்ணின்னா சொன்ன? நிஜமாவே அண்ணின்னு தான் சொன்னியா?”, என்று ஜெகனிடம் பரவசமாக கேட்டாள் ஆஷா. 
ஜெகன் மனோஜையே பயத்துடன் பார்த்துக் கொண்டு நின்றான். மனோஜ் அவனை முறைத்த படியே இருக்க “அவன் கெடக்குறான். கண்டுக்காத. பாஸ் சரியான காமெடி பீஸ். நீ என்னை என்னன்னு கூப்பிட்டியோ அதே மாதிரி திருப்பிக் கூப்பிடேன்”, என்றாள் ஆஷா. 
“அண்ணின்னு…”, என்று ஜெகன் இழுக்க “ஜெகா வேலையைப் பாரு. ஆஷா வெட்டிக் கதை பேசாம, நீ வீட்டுக்கு கிளம்ப பாரு. அடுத்த வாரம் உனக்கு நிச்சயதார்த்தமாமே? என்னோட வாழ்த்துக்கள்”, என்று சொன்னான் மனோஜ். 
“போங்க பாஸ், உங்க வாழ்த்து யாருக்கு வேணும்? எனக்கு அத்தான் கூட நிச்சயதார்த்தம்னு கேள்விப் பட்டவுடனே உங்க முகத்துல ஒரு அதிர்ச்சி மின்னலைப் பாத்தேனே? அது உண்மை தானே? சொல்லுங்க பாஸ் சொல்லுங்க”
“அப்பவே லூசுன்னு சொன்னேன். உனக்கு புரியலை போல? சரியான லூசு டி நீ. நான் ஒண்ணும் உனக்கு நிச்சயம்னு அதிர்ச்சி ஆகலை. நிர்மல் வரான்னு தெரிஞ்சதை நினைச்சு தான் அதிர்ச்சி ஆனேன்”
“பொய் சொல்றீங்க? ஒரு நிமிஷம் அதிர்ச்சி, அப்புறம் ஏதோ யோசனைன்னு பீல் பண்ணதை பாத்தேன். அது எனக்காக தானே?”
“உளராத டி. நான் நிர்மல் என்னைப் பாக்க வருவானா? அவனுக்கு என்னை நினைவு இருக்குமா? இல்லை என்னை கண்டுக்காம போயிருவானான்னு தான் யோசிச்சேன்”
“சத்தியமா?

“சத்தியமா அப்படி தான் யோசிச்சேன் போதுமா?”
“போடா டேய், வீட்ல இருந்து லெக் பீசை பிரிச்சு மேயாம உன்னைப் பாக்க வந்தேன் பாரு. என்னைச் சொல்லணும். நீ பேசாம எங்க அண்ணனையே கல்யாணம் பண்ணிக்கோ. போடா டேய்”, என்றவள் ராம் மற்றும் ஜெகனைப் பார்த்து “பொடியனுங்களா, உங்க அண்ணனுக்கு சுட்டுப் போட்டாலும் லவ் வராது டா”, என்று கண்ட மேனிக்கு கத்தியவள் வண்டியை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள். 
அவள் பேசியதையே அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்த மனோஜைப் பார்த்து சிரிப்பு வந்தது ஜெகன் மற்றும் ராமுக்கு.
“ராம், இங்க நடக்குற கூத்தைப் பாத்தியா டா? ஒருத்தங்களுக்கு அண்ணின்னு நாம சொன்னா கோபம் வருமாம்? ஆனா இவங்க மட்டும் டின்னு சொல்லுவாங்களாம். எங்க ஊர்ல எல்லாம் பொண்டாட்டியை தானே அப்படிச் சொல்லுவாங்க”, என்று கேட்டு மனோஜின் கண்டனப் பார்வைக்கு ஆளானான் ஜெகன். 
மனோஜ் முறைத்துப் பார்க்கவும் “ஹி ஹி உன்னைச் சொல்லலைண்ணே? நேத்து நைட் டிவில ஒரு நாடகம் பாத்தேன் . அதைத் தான் சொன்னேன்”, என்று மழுப்பினான் ஜெகன்.
அவனை முறைத்து விட்டு மனோஜ் உள்ளே சென்று விட்டான். “பாத்தியா டா எப்படி மழுப்பினேன்னு’, என்று சிரித்தான் ஜெகன். 
“உன் தலை? நம்ம ரூம்ல என்ன டிவியா இருக்கு? நேத்து டி‌வி பாத்தேன்னு சொல்ற? சரியான லூசு டா நீ”, என்று சிரித்தான் ராம்.
“விடு டா விடு டா, அண்ணி நிஜமாவே சூப்பர்ல? ஒரு போடு போட்டு அண்ணனையே ஆப் ஆக்கிருச்சு. நாம அண்ணிக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணனும் டா”
“நீ பண்ணுப்பா, என்னை ஆளை விடு. அண்ணா ஏதாவது சொல்லும்”
“போடா தொடை நடுங்கி”, என்று சிரித்தான் ஜெகன். 
அதே நேரம் “மாடு மாடு, இவனை எப்படி தான் வழிக்கு கொண்டு வரதுன்னு தெரியலையே. என்னைப் பத்தி பீலிங்கா நினைச்சிருப்பான்னு பாத்தா நிர்மல் பத்தி நினைச்சானாம்? இவனை பாக்க ரிஸ்க் எடுத்து வந்தேன் பாரு? என்னைச் சொல்லணும்? ஐயோ இந்த அத்தான் வேற வீட்ல மெக்கானிக் ஷெட்க்கு போனதை உளறி வச்சிருவானே? மறுபடியும் இந்த புஷ்பா மிரட்டிட்டு இருக்குமே”, என்று பயத்துடன் தான் வீட்டுக்கு சென்றாள். அவள் நினைத்த படியே அவள் வரவையே எதிர் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் புஷ்பா.
ஆஷா உள்ள வந்ததும் “எங்க டி போயிட்டு வர?”, என்று கேட்டாள் புஷ்பா. 
“பொருட்காட்சிக்கு போறேன்னு சொல்லிட்டு தானே மா போனேன்? அதுக்குள்ள மறந்து போச்சா? வயசாகிட்டதுனால உனக்கு மறதி வந்திருச்சு போல?”
“இந்த நக்கல் பேச்செல்லாம் என்கிட்ட வேண்டாம். ஜெயா இப்ப தான் போன் பண்ணான்”
“நினைச்ச மாதிரியே இந்த அத்தான் உளறிட்டானா?”, என்று எண்ணிக் கொண்டு புஷ்பாவைப் பார்த்தாள் ஆஷா. 
“அத்தை அவ வண்டி ரொம்ப பழசாகிருச்சு. அவளுக்கு புது வண்டி வாங்கணும். நான் வாங்கவான்னு கேக்குறான்? நீ மெக்கானிக் ஷெட்க்கு போயிருக்க? நீ எதுக்கு அங்க போன? அவனைப் பாக்க தான் போனியா? இவ்வளவு நாள் கழிச்சு புதுசா ஆரம்பிக்கிறியா? ஜெயா வீட்டுல யாருக்கும் உன்னோட பழைய விஷயம் தெரியாது டி. தேவையில்லாம பிரச்சனையை வளக்காதே”
“அம்மா சும்மா பழைய பாட்டையே பாடாதே. வர வழில வண்டி நின்னுருச்சு. நான் ஒண்ணும் ஷெட்டுக்கு போகலை. உன்  மருமகன் தான் மெக்கானிக் ஷெட்டுக்கே என்னைக் கூட்டிட்டு போனான். இல்லைன்னா நான் எதுக்கு அங்க போக போறேன்? நான்
உனக்கு இல்லைன்னா அப்பாக்கு தான் போன் பண்ணலாம்னு நினைச்சேன். இது உண்மையா பொய்யான்னு அத்தான் கிட்டயே கேட்டுக்கோ. சே சே எதுக்கு தான் காலேஜ் முடிஞ்சதுன்னு இருக்கு. வீடா இது? ஜெயில் மாதிரி இருக்கு. நான் இனி எங்கயும் போகலை போதுமா?”, என்று கத்தி விட்டு அறைக்குள் வந்து “அப்பாடி எஸ்கேப் ஆகிட்டேன்”, என்று நிம்மதியாக மூச்சு விட்டாள் ஆஷா. 
புஷ்பா அதே யோசனையில் இருக்க அப்போது ஜெயச்சந்திரன் அவளை அழைத்தான். 
“சொல்லு ஜெயா?”
“என்ன அத்தை? அவ கிட்ட புது வண்டி வாங்குறதைப் பத்தி கேட்டு சொல்றேன்னு சொன்னீங்க? கேட்டீங்களா? இன்னைக்கே வாங்கட்டுமா? அவ என்ன சொன்ன? நானே ஆஷா கிட்ட கேட்டுக்கவா?”
“இப்ப தான் வண்டி சரியாகிருச்சே ஜெயா? கல்யாணம் முடியட்டும் அப்புறம் உனக்கு பிடிச்சதை வாங்கிக் கொடு. ஆமா அவ வண்டி ஏன் நின்னுச்சாம்? கழுதை தனியா மெக்கானிக் கடைக்கு வேற போயிருக்கா. எனக்கு ஒரு போன் பண்ணிருக்கலாம்ல?”, என்று போட்டு வாங்கினாள் புஷ்பா. 
“அவளை திட்டாதீங்க அத்தை. அவ உங்களை கூப்பிடுறேன்னு தான் சொன்னா. நான் தான் அவளை கடைக்கு கூட்டிட்டு போனேன். அவ உங்களுக்கு தான் போன் பண்ணுறதா சொன்னா”, என்று அவன் சொன்னதும் தான் “நான் தான் தப்பா நினைச்சிட்டேன் போல?’, என்று எண்ணிய புஷ்பா “சரிப்பா, நீ நேரம் கிடைச்சா வீட்டுக்கு வா”, என்று சொல்லி போனை வைத்தாள். 
புஷ்பாவின் கவலை புரிந்தாலும் அதை கண்டு கொள்ளாத அவளின் மகளோ “வெரி சாரி”, என்று மனோஜ்க்கு மெஸ்ஸேஜ் அனுப்பி வைத்தாள். 
“சாரியா? பரவால்லயே நீயெல்லாம் சாரி கேக்குற? திருந்திட்டியா ஆஷா? உன் அத்தானைக் கட்டிக்க சம்மதம் சொல்லிட்டியா?’, என்று திருப்பி மெஸ்ஸேஜ் அனுப்பினான் மனோஜ். 
“உன் தலை, உன்னை கோபத்துல வா போன்னு திட்டிட்டோமேன்னு தான் சாரி கேட்டேன். ஆனா உன்னை வா போ ன்னு சொன்னதுல தப்பே இல்லை. போடா”
“அடங்கவே மாட்டியா டி”
“நீங்க தான் அடக்குங்களேன் பாஸ்”
“என் சோலியை முடிக்காம விட மாட்ட போல இருக்கே?”
“என்ன பாஸ் நீங்க? அவன் அவன் காதலுக்காக உயிரையே விடுறான். நீங்க இப்படி பயந்து சாகுறீங்க?”
“நீ காதலிச்சா நீ உயிரை விடு. நான் எதுக்கு விடணும்?”
“நீங்க திருந்தவே மாட்டீங்க சே”
“சரி சரி டென்ஷன் ஆகாத. நிர்மல் எப்ப வரான்?”
“அடுத்த வாரம் வரான். அவனை நான் ஷெட்டுக்கு கூட்டிட்டு வரேன்”
“வேண்டாம் வேண்டாம், அவன் மட்டும் வந்தா போதும். நீ ஒண்ணும் வர வேண்டாம்”
“நான் ஒண்ணும் உங்களைப் பாக்க வரலை. என்னோட கொழுந்தனுகளைப் பாக்க வருவேன்”
“என்னது கொழுந்தனுகளா? நீ யாரைச் சொல்ற?”
“நம்ம கடை பசங்க தான்”
“நம்ம கடையா?”
“என் கடைன்னா சொன்னேன்? அதை விடுங்க. என்னோட கொழுந்தனுங்க என்னை எவ்வளவு பாசமா அண்ணின்னு கூப்பிட்டாங்க. நீங்க தான் அப்படி அவங்களுக்கு சொல்லிக் கொடுத்தீங்களா பாஸ்? என் மேல உங்களுக்கு அவ்வளவு லவ்வா?”
“எம்மா தாயே? நீ மொக்கை போடுறதுக்கு நான் தான் கிடைச்சேனா? 
ஆளை விடு டி. எனக்கு வேலை இருக்கு”, என்று சொல்லி வைத்து விட்டான் மனோஜ். சிரித்துக் கொண்டே கட்டிலில் விழுந்தவள் அவன் நினைப்பிலே கண்ணயர்ந்தாள் ஆஷா. 
பூக்கள் மலரும்….

Advertisement